Kuru Aravinthan
இது உங்களுக்கான வலைப்பூ... எல்லை இல்லா வானத்தில் சிட்டுக் குருவிகளாய் சிறகடிப்போம் வாருங்கள், உங்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள்
Saturday, April 23, 2022
International Tamil Short Stories
Wednesday, April 13, 2022
Story - சதிவிரதன் - Sathi Virathan
Tamil New Year - புத்தாண்டு -2022
தமிழர்களின் புத்தாண்டு எப்போது?
குரு அரவிந்தன்
தமிழர்களின் புத்தாண்டு தை மாதத்திலா, அல்லது சித்திரை மாதத்திலா என்ற கேள்வியால் எழுந்த குழப்ப நிலையில் அதிகம் பாதிக்கப்பட்டது இலங்கைத்தமிழ் மக்கள்தான் என்றால் மிகையாகாது.
இலங்கைத் தமிழர்கள் காலாகாலமாய் இந்து மதத்தைப் பின்பற்றிச் சைவசமயத்தவர்களாகவே இருந்தார்கள். சைவமும் தமிழும் ஒன்றாகவே வளர்ந்தன. அதனால்தான் எந்த வேற்றுமையும் பாராட்டாது, தென்னிந்தியாவில் இந்துக்கள் கடைப்பிடித்தது போலவே, சித்திரைத் திருநாளையே தமிழர்களின் புதுவருடமாகக் கொண்டாடினார்கள். தைமாதத்தில் உழவர்களின் திருநாளாகத் தைப்பொங்கலைக் கொண்டாடினார்கள். மக்கள் மனதில் பதிந்திருக்கும் இந்த நடைமுறைகளில் மாற்றங்களைத் திடீரென ஏற்படுத்துவது என்பது இலகுவான காரியமல்ல என்பது நாமறிந்ததே. மேலை நாட்டவரின் வருகையால் இலங்கைத்தமிழ் மக்கள் சிலரிடையே மதமாற்றங்கள் ஆங்காங்கே ஏற்பட்டதால், தமிழர்களில் மதம் மாறிய ஒரு பகுதியினர் சித்திரை வருடப்பிறப்பைக் கொண்டாடுவதைத் தவிர்த்திருந்தனர். ஆனாலும் அவர்களின் நெருங்கிய உறவினர்கள் இந்துக்களாக இருந்ததால், அந்த நிகழ்வுகளில் பாரபட்சம் பார்க்காது அவர்களுடன் கலந்து கொண்டனர்.
இராசிச் சக்கரத்தில் உள்ள 12 இராசிகளில் மேச ராசியின் ஊடாக சூரியன் நகர்ந்து வரும் மாதமான சித்திரை மாதமே வருடத்தின் முதல் மாதமாக பண்டைய தமிழர்கள் கருதியதற்குக் காரணம் அவர்கள் இந்துக்களாக இருந்ததுதான். சித்திரை பற்றி சங்க இலக்கிய நூல்களிலும் கூறப்பட்டுள்ளன. நெடுநல்வாடை, புறநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற நூல்களிலும் சித்திரை பற்றிக் குறிப்பிடப் பட்டிருக்கின்றன. தொல்காப்பியத்தில் கார்காலமே தொடக்கமாகக் குறிப்பிடப் பட்டிருப்பதாக நச்சினார்க்கினியர் உரைநடையில் இருந்து அறிய முடிகின்றது. தமிழ் மாதங்கள் எல்லாம் ‘ஐ’ இலும் ‘இ’ யிலும் முடியும் என்பதையும் தொல்காப்பியரே குறிப்பிட்டிருக்கின்றார். இதேபோல தைமாதத்தையும் புதுவருடம் என்று நேரடியாக இலக்கியங்கள் குறிப்பிடவில்லை. இதனால்தான், வடமொழி ஆதிக்கத்தின் காரணமாகத் தென்னிந்திய இந்துக்களாக இருந்த தமிழர்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளை புத்தாண்டாகக் கொண்டாடி வந்தனர். அந்த வழக்கமே இலங்கைத் தமிழர்களிடமும் இருந்தது. இது ஆங்கில நாட்காட்டியில் பொதுவாக ஏப்ரல் 14 ஆம் திகதியைக் குறிக்கும். சில ஆண்டுகளில் ஆங்கில நாட்காட்டியின்படி ஏப்ரல் மாதம் 13 ஆம் அல்லது 15 ஆம் திகதியிலும் இடம் பெறுவதுண்டு.
சித்திரை வருடப்பிறப்பு இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் தமிழர்கள் புலம் பெயர்ந்த நாடுகளிலும் கொண்டாடப் படுகின்றது. வருடப் பிறப்பு அன்று காலையில் எழுந்து, மருத்துநீர் வைத்து நீராடிப் புத்தாடை அணிந்து குடும்பத்தினருடன் கோயிலுக்குச் சென்று மகிழ்ச்சியோடு வழிபட்டு வருவர். உறவினர், நண்பர்களுக்கு இனிப்பு பலகாரங்களைப் பரிமாறி உபசரிப்பர். கிராமங்களில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுவதுண்டு. சில இடங்களில் மாட்டு வண்டில் சவாரியும் இடம் பெறுவதுண்டு. போர்த்தேங்கய் அடிப்பது, முட்டி உடைப்பது, கிளித்தட்டு விளையாடுவது, மரதன் ஓட்டப் போட்டி, துவிச்சக்கர வண்டி ஓட்டப் போட்டி, நீச்சல் போட்டி போன்றவையும் சில இடங்களில் இடம் பெறும். சிறுவயதினர் ஊஞ்சல் கட்டி ஆடுவார்கள். ஒற்றை ஊஞ்சல், இரட்டை ஊஞ்சல், அன்ன ஊஞ்சல் என்று வசதிக்கு ஏற்ப மரத்திலே கட்டி ஆடுவார்கள். வருடப்பிறப்பன்று நல்ல நேரம் பார்த்துப் பெரியவர்களிடம் இருந்து ‘கைவிசேடம்’ வாங்குவார்கள். நல்ல காரியங்களையும் அன்று தொடக்கி வைப்பார்கள்.
தமிழ்நாட்டில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 1921 ஆம் ஆண்டு பல தமிழ் அறிஞர்கள் ஒன்று கூடி, மிகவும் கவனமாக ஆராய்ந்து தகுந்த ஆதாரங்களோடு தைமாதம்தான் தமிழர்களின் புத்தாண்டு, சித்திரை மாதமல்ல என்று முடிவெடுத்தனர். 1939 ஆம் ஆண்டு திருச்சியிலும் கூடி அதை உறுதி செய்தார்கள். அதனால் திருவள்ளுவர் பிறந்த ஆண்டைத் தமிழர்களின் ஆண்டாகக் கணித்தார்கள். அதாவது கிறீஸ்து பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன்பாகத் திருவள்ளுவர் பிறந்ததாகக் கணித்திருந்தார்கள். பல காரணங்களால் அதை அப்போது நடைமுறைப்படுத்த முடியாமல் போய்விட்டது. 1981 ஆம் அண்டு முதல் தமிழக அரசு தைமாதம் தான் புதுவருடம் என்பதைக் கடைப்பிடித்து வருகின்றது. ஆனால் இடையே அரசியல் இலாபம் கருதி மீண்டும் வருடப்பிறப்பைச் சித்திரை மாதத்திற்கு மாற்றினார்கள். தமிழ் சான்றோர் ஒன்றுகூடி எடுத்த முடிவுக்கான ஆதாரங்கள் எதுவும் ஆவணமாக இல்லை என்று ஒரு சாரார் அதை ஏற்றுக் கொள்ள வில்லை. சென்னையில் கணிசமான அளவு வேற்று இனத்தவர்கள் வாழ்வதாலும், அவர்களின் கைகளில் சில ஆட்சி அதிகாரங்கள் இருப்பதாலும், இந்த இழுபறி நிலை ஏற்பட்டிருக்கின்றது. இதனால் தமிழகத் தமிழரும், வருடப்பிறப்பு எது என்று தெரியாமல் இப்போது குழம்பிப் போயிருக்கிறார்கள்.
கொழும்பிலே ‘கேவ் அன்ட் கொம்பனி’ என்று மிகப்பழைய புத்தகவிற்பனை நிலையம் இருந்தது. அவர்களிடம் அச்சகமும் இருந்ததால் நாட்காட்டிகளையும் அச்சடித்தார்கள். கணக்குப் பரிசோதனைக்காகச் அங்கு சென்றபோது, நிலவறையில் மிகப் பழைய நாட்காட்டிகளைச் சுவரிலே தொங்கவிடப்பட்டிருந்ததை அவதானித்தேன். 1940 களில் அச்சாகிய நாட்காட்டிகளில் தமிழ் வருடப்பிறப்பு என்று மட்டும் போடப்பட்டிருந்தது. நாடு சுதந்திரமடைந்தபின் 1950 களில் வெளிவந்த நாட்காட்டிகளில் தமிழ் – சிங்கள வருடப்பிறப்பு என்று இடம் பெற்றிருந்தது. 1960 களில் வெளிவந்த நாட்காட்டிகளில் சிங்கள – தமிழ் வருடப்பிறப்பு என்று மாற்றப்பட்டிருந்தது. 1970 களில் வெளிவந்த நாட்காட்டியில் சிங்கள வருடப் பிறப்பு என்று மட்டுமே போடப்பட்டிருந்தது. 1971 ஆம் ஆண்டு தமிழ் நாட்டு நாட்காட்டிகளில் தை மாதந்தான் தமிழர்களின் புதுவருடம் என்று அறிவிக்கப்பட்டதால், சிங்கள பதிப்பகத்தினர் அதைத் தமக்குச் சாதகமாக எடுத்து தமிழ் வருடப்பிறப்பு என்பதை நீக்கிவிட்டு இந்து – சிங்கள வருடப்பிறப்பு என்று மாற்றியிருந்தனர். 1980 களில் சில நாட்காட்டிகளில் ‘இந்து’ என்ற சொல்லையும் எடுத்து விட்டனர். 1972 ஆம் ஆண்டு தமிழகத்தில் தைமாதம்தான் தமிழர்களின் வருடப்பிறப்பு என்று அதிகாரபூர்வமாகவும் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து வரும் 60 சித்திரைப் புத்தாண்டுகளில் ஒரு பெயர்கூடத் தமிழ்ப் பெயர் இல்லை, எல்லாமே வடமொழிப் பெயர்கள்தான், எனவே சித்திரை எமது புதுவருடமல்ல என்பதும், நாயக்கர் ஆட்சிக் காலத்தில்தான் இந்த மாற்றங்கள் இடம் பெற்றதாகவும் ஒரு பக்கத்தினரின் வாதமாக இருக்கின்றது.
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பதற்கிணங்க, புலம் பெயர்ந்து வந்து பல்கலாச்சார நாட்டில் வாழும் நாங்கள் மற்றவர்களது கலாச்சாரத்திற்கு எப்படி மதிப்புக் கொடுக்கிறோமோ, அதே போல ஒவ்வொருவருடைய நம்பிக்கைக்கும் மதிப்புக் கொடுத்து நட்போடு பழகுவோம். இலங்கைத் தமிழர்கள் முக்கியமாக மூன்று பண்டிகைகளைக் கொண்டாடி வந்தார்கள். தீபாவளி, தைப்பொங்கல், சித்திரை வருடப்பிறப்பு. இவற்றில் தீபாவளி தமிழர்களின் பண்டிகை அல்ல என்ற காரணம் சொல்லி, அதைக் கொண்டாடுவதை நிறுத்திவிட்டார்கள். இப்பொழுது சித்திரை வருடப்பிறப்பையும் நிறுத்த வேண்டிய சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறார்கள். அடுத்தது தைப்பொங்கல்தான் எஞ்சி இருக்கிறது. இதற்கும் ஏதாவது ஒரு காரணம் கண்டுபிடித்து நிறுத்தி விட்டால் என்ன நடக்கும். அதன் பின் பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியம் இல்லாத இனமாக தமிழர்களை இனம் காண்பார்கள். ஒரு இனம் தன்னை அடையாளப்படுத்த மொழி, பண்பாடு, நாகரிகம் போன்றவற்றைப் பேணிக் காக்க வேண்டும். இவை இல்லாவிட்டால் முகமற்றவர்களாகி விடுவோம். எதையுமே ஆராய்ந்து முடிவெடுக்கக் கூடிய சிறந்ததொரு தலைமைத்துவம் எமக்காக இல்லாததால் இழுபறிப்பட வேண்டிய நிலையில், உலகெங்குமுள்ள தமிழ் இனம் இன்று இருக்கிறது.
புதிதாக ஒன்றை அறிமுகப் படுத்துவதென்றால் அதை ஆதாரங்களோடு ஆணித்தரமாக அறிமுகப் படுத்த வேண்டும், அதைத் தொடர்ந்தும் நடைமுறைப் படுத்த வேண்டும். அப்போதுதான் அது காலத்தால் நிலைத்து நிற்கும். புதுமை என்ற பெயரில் எமது அடையாளங்களை ஒவ்வொன்றாக இழந்து கொண்டிருக்கும் இனமாகத் தமிழ் இனத்தை இன்று மாற்றி விட்டார்கள். இத்தகைய பண்டிகைகள் கொண்டாடப் படுவதற்கு முக்கிய காரணம், ‘மக்கள் மகிழ்வோடு இருக்க வேண்டும்’ என்பதுதான். எனவே எப்போதும் சோகத்திற்குள் மூழ்கிக் கிடக்காமல், இந்த பல்கலாச்சார நாட்டின் முக்கியமான நிகழ்வுகள் எல்லாவற்றிலும் முடிந்தளவு பங்கு பற்றி, அவர்களுடன் சேர்ந்து, மொழி மதம் எல்லாவற்றையும் கடந்து நாமும் திருநாட்களைக் கொண்டாடி மகிழ்வோம். காரணம், யார்மனதும் நோகாமல் இந்த வாழ்க்கை வாழ்வதற்கே!
Tuesday, March 22, 2022
Saturday, March 12, 2022
Story Book - Sathi Virathan
By: Kuru Aravinthan
Friday, March 11, 2022
Story- வாய்மையின் இடத்தில்...
Story - Vaimaiyen Idathil... by: Kuru aravinthan
வாய்மையின் இடத்தில்..
நன்றி: விகடன்
குரு அரவிந்தன்
தொலைபேசி கொஞ்சநேரமாக அலறிக்கொண்டிருந்தது. சாதாரணமாகக் கிணுகிணுக்கும் தொலைபேசி கூட இப்போதெல்லாம் அலறுவது போலத்தான் இந்த வீட்டில் கேட்கிறது.
கொஞ்ச நாட்களாக யாராவது துக்கம் விசாரித்துக் கொண்டே இருக்கிறார்கள். புரொபஸர் சிவராமன் மெல்ல எழுந்து வேண்டாவெறுப்பாகத் தொலைபேசியை எடுத்தார்.
யாராய் இருக்கும்? என்ன செய்தியாய் இருக்கும்?
இப்படித்தான் அன்றும் தொலைபேசி அலறியது.
அவரது மகன் சாலைவிபத்தில் இறந்து போன செய்தி தொலைபேசியில் இடியாய் வந்து விழுந்தது. அன்று அந்த அதிர்ச்சி தரும் செய்தியைக் கேட்டு உடைந்துபோனவர் அந்தத் துயரத்தில் இருந்து இன்னமும் மீளவில்லை. அவரால் மீளவும் முடியவில்லை. அவரது குடும்பத்திற்குத் தெரிந்த பலர் நேரே வந்து துக்கம் விசாரித்தார்கள். சிலர் தொலைபேசியில் விசாரித்தார்கள். அவன் பிரிந்து விட்டான் என்பதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
ஒரு கனவுபோல எல்லாமே முடிந்து விட்டது. தூண்போல இருந்தவனே போய்விட்டான் இனி யார் துக்கம் விசாரித்தென்ன விட்டென்ன என்ற விரக்தியில் தான் அவர் இருந்தார்.
‘ஹலோ!’
‘மே ஐ ஸ்பீக் ரு புரொபஸர் சிவராமன்?’
‘ஸ்பீக்கிங்..’
‘சார்... நான்தான் ரமேஷ்’
‘ரமேஷா? எந்த.......?’
‘உங்ககிட்ட படிச்சேனே.... ஞாபகமிருக்கா?’
‘எந்த ரமேஷ்.... ம்....... இரண்டு ரமேஷ் படித்ததாக ஞாபகம்’
‘கிரிக்கெட் டீமிலேகூட இருந்தேனே.... ஞாபகமிருக்கா?’
‘ஆமா......இப்போ ஞாபகம் வருது. உயரமா.....கொஞ்சம்....நிறமாய்.... ஃபாஸ்ட்பௌலர் ரமேஷ்தானே?’
‘ஆமா ஸார், ஸ்டேஷன் மாஸ்டரோட மகன்.’
‘இப்போ புரியுது! சிவசங்கரோட மகன்தானே?’
‘ஆமா ஸார்! அந்த ரமேஷ்தான்! உங்கவீட்ல நடந்த துக்கமான செய்தி கேள்விப்பட்டேன்! அதுதான் போன் பண்ணினேன். உங்க மகன் சுரேஷ் என்னோட கிளாஸ்மேட் தான். எவ்வளவு நல்ல பையன். அவனுக்கு இப்படி ஒரு பரிதாபச் சாவு வந்திருக்கக் கூடாது ஸார். விதி யாரை விட்டது? என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்!’
‘என்ன செய்ய? யாரை நோக? எல்லாம் ஒரேயடியாய் முடிஞ்சுபோச்சுப்பா!’
‘ஐயாம் ஸாரி... இது உங்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு!’
‘அவன்தான் போயிட்டானே, இனி அவனைப் பற்றிப் பேசி என்ன செய்ய? என்னை அழைத்து துக்கம் விசாரித்ததற்கு தாங்ஸப்பா! ஆமா.. நீ எப்படி இருக்கிறே? என்ன பண்றே?
‘நல்லா இருக்கேன் சார்! ஒரு பெரிய கம்பனியில கம்ப்யூட்டர் இஞ்ஜினீயராக இருக்கேன்.’
‘கல்யாணமாச்சா?’
‘இன்னும் இல்லை சார்!’ வெட்கப்பட்டு மறுபக்கத்தில் வார்த்தைகள் வந்தன.
‘ஏன்? என்ன தாமதம்? என்னோட மகனுடைய வயதுதானே.... நேரகாலத்தோட நல்ல பெண்ணாய்ப் பார்த்துக் கட்டிக்க வேண்டியது தானே!’
‘அதில்லை சார்... அதில் ஒரு சிக்கல்!’
‘சிக்கலா? ஏன்.. காதல் கீதலா? அதனால வீட்ல எதிர்ப்பா?’
‘இல்லை சார்.. அரேஞ்டு மாரேஜ்தான்...! பெண் பார்த்தாச்சு, எல்லாமே நல்லாய்ப் பொருந்தியிருக்கு. எங்க வீட்லயும் எல்லாருக்கும் பெண்ணைப் பிடிச்சிருக்கு!’
‘அப்படியா சந்தோஷம்! அப்புறம் ஏன் தாமதம்? உனக்கும் பெண்ணைப் பிடிச்சிருக்கில்லையா?’
‘எனக்கும் பிடிச்சிருக்கு சார்! நல்ல நிறமாக.. ரொம்ப அழகா, என்னுடைய தோற்றத்திற்கு ஏற்ற மாதிரி பொருத்தமா இருக்கா.’
‘அப்புறம் என்ன.. ஜாம் ஜாம்னு கல்யாணத்தை நடத்தி முடிக்க வேண்டியது தானேப்பா!’
‘அங்கதான் சார் ஒரு சின்ன சிக்கல்!’
‘என்ன சிக்கல்..?’
‘நீங்களே மகனை இழந்த துயரத்தில் இருக்கிறீங்க. உங்க கிட்ட எப்படி..?’
‘பரவாயில்லை, சொல்லுப்பா! பெண்ணு யார்? எனக்குத் தெரிஞ்சவளா?’
‘உங்களுக்கு நல்லாத் தெரிஞ்ச பெண்தான்!’
‘யாரப்பா அது?’ அவர் ஆவலோடு கேட்டார்.
‘சுற்றி வளைச்சுப் பேசாம நேரடியாகவே சொல்லிடறேனே.. பெண்ணு வேறு யாருமல்ல உங்க வீட்டிற்கு மருமகளாய் வர இருந்தவதான்..’
‘யாரு நம்ம சுரேஷ_க்குப் பார்த்த பெண்ணா? சுமதியா? அந்தப் பெண்ணையா கட்டிக்கப்போறே?
‘ஆமா சார்.. அதுதான் அந்தப் பெண்ணைப் பற்றி உங்க கருத்தைக் கேட்டதுக்கு அப்புறம்தான் அவங்களுக்குச் சம்மதம் சொல்லாம்னு இருக்கேன்’
‘ரொம்ப நல்ல பெண்ணுப்பா... நல்ல குடும்பம், நல்ல குணம், குடும்பத்திற்கு ஏற்ற பெண்ணு... என்ன செய்ய அவளை மருமகளாய் அடைய எனக்குத்தான் கொடுத்து வைக்கலையே! ஏக்கப் பெருமூச்ச விட்டார்.
பழைய நினைவுகளில் அப்படியே சிறிது நேரம் மௌனமாகிப் போய்விட்டார்.
‘ஹலோ.. ஹலோ.. சார் லைன்ல இருக்கிறீங்களா?’
‘இருக்கேனப்பா! இந்த வீட்டிற்கு விளக்கேற்ற வேண்டியவா, எத்தனை கனவுகளோடு இருந்தோம். எல்லாமே முடிஞ்சு போச்சப்பா!’ அழுது விடுவார் போல இருந்தது.
‘ஆமா சிக்கல்னு சொன்னியே.. அந்தப் பெண் பேர்ல தோஷம், ராசி அது இதுன்னு..’
‘நீங்க சொல்றது புரியுது சார்! அவங்களைப் பத்தி கொஞ்சம் சொன்னீங்கன்னா... பழகறதிற்கு அவங்க எப்படியிருப்பாங்கன்ணு?
‘ரொம்ப முற்போக்கான, தைரியமான பெண்ணுப்பா....! மனசிலே எதையும் வெச்சுக்கமாட்டா, பட்டுன்னு கேட்டுடுவா...!’
‘அப்படியா சார்! அப்போ அவங்க அடிக்கடி உங்க வீட்டுக்கு வருவாங்களா?’
‘ஆமாப்பா வருவா.. நிச்சயதார்த்தம் முடிஞ்சதும் கல்யாணத்திற்குத் தேதிகூடக் குறிச்சிருந்தோம். வருஷப்பிறப்பன்னிக்கு எல்லோருமா சேர்ந்து கோயிலுக்குப் போய் வந்தோம். அப்புறம் எங்க வீட்டிற்கு வந்து அவகையாலே விளக்கேற்றி, பால்காய்ச்சி காபி கலந்து எல்லோருக்கும் கொடுத்தா, அப்புறம் சுரேஷ் பிறந்ததினத்திலன்று பார்த்டே பார்ட்டிக்கும் அழைத்திருந்தோம், அவா வந்து எங்களோட கலந்து கிட்டா.. இரண்டு மாசங்கூட முடியலை.. எல்லாமே கனவாகக் கலைஞ்சுபோச்சு!’
‘அப்போ அடிக்கடி வீட்டிற்கு வந்திருக்கிறா போல....!’ ரமேஷ் ஆர்வமாய்க் கேட்டான்.
‘இல்லப்பா..... மூணே மூணு தடவைதான் வந்திருந்தா.. ஆனா முப்பது வருஷபந்தம் போல எங்களோட பழகினா!’
‘சுமதி உங்க வீட்டில உள்ளவங்களோட பழகினது இருக்கட்டும் சார்.. உங்க பையனோட எப்படிப் பழகினான்னு மட்டும் தெரிஞ்சாப் போதும்..’
‘புரியலையே..?’
‘இல்ல ரொம்ப நெருக்கமாப் பழகினாளா? ரெண்டு பேரும் ஒண்ணா வெளியே போய் வருவாங்களா?’
அவன் என்ன தெரிந்து கொள்ள விரும்புகிறான் என்பது சட்டென்று அவருக்குப் புரிந்தது. நிதானமாகச் சிந்தித்தார்.
‘அவங்க ஒண்ணாப் படுத்தாங்களா?’ என்று தன்னிடம் கேட்கமுடியாமல் இப்படிச் சுற்றி வளைக்கிறான் என்றுதான் அவருக்கு நினைக்கத் தோன்றியது.
‘சே.. இவன் ஒரு சந்தேகப்பிராணி. கல்யாணத்திற்கு முன்பே இப்படித் துருவித் துருவி விசாரிப்பவன் வாழ்நாள் முழுவதும் அவளை என்ன பாடுபடுத்துவானோ?’
பாவம் சுமதி! இந்தக் கிராதகனையா அவள் மணந்து கொள்ளவேண்டும்?
வேண்டாம். அந்தத் தங்கமான பெண்ணுக்கு வேறு உத்தமமான வரன் கிடைக்காமல் போகாது.
‘நீ கேட்க வர்றது புரியுதுப்பா, ஆமாம்! போதுமா?’
பட்டென்று ரிஸீவரை வைத்தார் சிவராமன்.
….