Tuesday, August 31, 2010

புல்லுக்கு இறைத்த நீர் - சிறுகதை குரு அரவிந்தன்


 புல்லுக்கு இறைத்த நீர் - குரு அரவிந்தன்

நன்றி : ஆனந்தவிகடன்


விர்க்க முடியாமல் போயிருக்கலாம். எப்படியோ அவனை நேருக்கு நேரே சந்திக்க வேண்டிய சந்தர்ப்பம் தற்செயலாக வந்துவிட்டது.
எதிர்பாராமல் இப்படிச் சந்திக்கும் தர்மசங்கட நிலை ஏற்படும்போது சிலர் தெரியாதமாதிரி, கண்டும் காணாததுபோல முகத்தை மறுபக்கம் திருப்பிக் கொண்டு அந்த இடத்தை விட்டு மெல்ல நழுவி விடுவதும் உண்டு. சிலர் வேறு வழியில்லாமல் ''சார் எப்படி இருக்கிறீங்க, சௌக்கியமா..?'' என்று பட்டும் படாமலும் குசலம் விசாரித்து விட்டு விலகிச் செல்வதும் உண்டு. இன்னும் சிலர் உண்மையாகவே குரு பக்தியோடு, நலம் விசாரிப்பதில் அக்கறையோடு நின்று நிதானமாக பேசுவதும் உண்டு.
'இத்தனை வருடங்களுக்குப் பின்னும் என்னுடைய பெயரை ஞாபகம் வைச்சிருக்கிறீங்களே, எப்படி சார்..?' என்று வேறுசிலர் ஆச்சரியப்படுவதும் உண்டு.

'உங்கவீட்டிற்கு குடும்பத்தோடு ஒரு நாளைக்கு வரணும் சார், உங்களைப் பற்றி தினமும் வீட்டிலே சொல்லுவேன், இது நீங்க கொடுத்த வாழ்க்கை.' கைகளைப் பற்றிக் கொண்டு டாக்டர் சுந்தர் சென்றவாரம் கண்கலங்கச் சொன்னபோது எனக்கும் கண்கள் கலங்கிவிட்டன.


வீட்டைவிட்டு வெளியே உலாவந்தால் என்னிடம் படித்த மாணவர்கள் நிறையவே தென்படுவார்கள். இப்படி என்னிடம் படித்த எத்தனையோ மாணவர்கள் இன்று டாக்டகளாகவோ, அல்லது உயர் பதவி வகிப்பவர்களாகவோ இருந்து கொண்டு சென்ற இடமெல்லாம் என்னிடம் நலம் விசாரிக்கும்போது, இந்த சமுதாயத்திற்கு முடிந்த அளவு நல்லதொரு ஆரோக்கியமான சந்ததியை உருவாக்கிக் கொடுத்த எனது கடந்தகால வாழ்க்கையில் ஒரு அர்த்தம் இருப்பதாக எனக்குள் ஒரு பெருமிதம் தோன்றும். என்னுடைய மாணவன் என்று சொல்லிக் கொள்வதில், அறிமுகம் செய்வதில் மனசெல்லாம் பூரித்துப் போகும். இவன் மட்டும் எந்த வகையிலும் சேராமல் வித்தியாசமாய், மரியாதையின் நிமிர்த்தம் சட்டென்று வாயிலே இருந்த சிகரட்டை எடுத்து பின்னால் மறைத்துக் கொண்டு நின்றான். வாய்க்குள் இருந்த புகையைக் கஸ்டப்பட்டு மென்று விழுங்குவது தொண்டைக் குழி அசைவில் தெரிந்தது. பார்ப்பதைத் தவிர்த்திருக்கலாம். தர்மசங்கடமான அந்த நிலையில் தன்னைத்தானே மாட்டிக் கொண்டு விழித்தான். அந்த இறுக்கத்தைத் தணிக்க, எதிர்த்தாற்போல் நின்ற அவனிடம் 'எப்படி இருக்கிறாய்,..?' என்று குசலம் விசாரித்தேன்.

என்னுடைய கல்லூரி வாழக்கையில் வந்துபோன பலரில் இவனும் ஒருத்தனாய் இருந்தான். நல்ல நிறமாய், மிக நேர்த்தியாக உடை அணிந்து இருப்பான். அன்று மாணவனாய் இருக்கும் போது பார்த்த அதே அலட்சிய் பார்வை. உருவம் மட்டும் கொஞ்சம் மாறி இருந்தது. புத்தகமும் கையுமாய் அதே மூக்குக் கண்ணாடியோடும், கீழ்க்கண் பார்வையோடும் காட்சி தந்தான். வெகுநாட்களாகத் தூங்காதவன் போல முகம் களைத்திருந்தது.
'சார் நல்லா இருக்கிறீங்களா..?' என்று ஒரு சொல்லாவது அவன் கேட்டிருக்கலாம். கேட்கவில்லை. எனக்கேன் இந்த ஆசை என்பது எனக்கே புரியவில்லை. எதையுமே நிலையாக உள்வாங்கிக் கொள்ளும் நிலையில் அவன் தற்போது இல்லை என்பது அவனை அருகே பார்த்தபோது புரிந்தது. தள்ளாத வயதில் எதிர்பார்புகள் அதிகமாக இருக்குமோ?

மெளனத்தின் இடைவெளியைத் தவிர்ப்பதற்காக,
'என்ன இந்தப் பக்கம்..?' என்றேன்.

'சும்மா.. லைபிரரிக்கு..!'

அந்த ஒற்றைச் சொல்லுக்கு மேலே அவன் எதுவும் சொல்லவில்லை.
அந்த ஒற்றைச் சொல்லை வைத்துக் கொண்டு இவனைப் பற்றிய முழுவதுமான எந்த ஒரு முடிவிற்கும் என்னால் வர முடியாமல் இருந்தது.
காற்றின் சுழற்சியில் சிகரட் புகை மேலே எழும்பி முதுகைத் தாண்டி தலைக்குமேலால் சுருண்டு போனது. விரல் இடுக்கில் இதுவரை பின்னால் மறைத்து வைத்திருந்த சிகரட் விரலைச் சுட்டிருக்க வேண்டும். அப்படியே கீழே நழுவவிட்டான். விழுந்த இடத்தைப் பார்க்காமலே வெகுலாவகமாக குறி வைத்துச் செருப்புக் காலால் மெல்ல நசித்து விட்டான். அது நசுங்கிய வேகத்தில் வித்தியாசமான ஒருவித மணம் பரப்பி வண்டிச் சக்கரம்பட்ட தேரைபோல இறுதி மூச்சை விட்டுப் பிதுங்கிப் போனது. என் மீது இருந்த பார்வையை எடுக்காமலே தன்னிச்சையாகவே அத்தனையையும் செய்து முடித்தான்.

ஒருவேளை இவனது கடந்தகால வாழ்க்கையும் இப்படித்தான், புரியாத தெரியாத காரணங்களால் அடிபட்டு நசுங்கிப் போயிருக்குமோ..?
எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது, இவன் முதன் முதலாக அட்மிஷன் கேட்டு வந்தபோது அவனது தாயும் கூடவே வந்திருந்தாள். கேட்டதற்கு மட்டும் இவன் தலையசைத்தான், பாரம் நிரப்புவது முதற்கொண்டு மிகுதி யாவற்றையும் தாயே செய்து முடித்தாள். போகும்போது 'என் பையன் டாக்டராகணும், அது உங்க பொறுப்பு என்று வேறு சொல்லிவிட்டுச் சென்றாள். மகனை எப்படியாவது டாக்டர் ஆக்கிவிட வேண்டும் என்ற ஆதங்கம் அவள் பேச்சிலும் செய்கையிலும் தெரிந்தது.

அவனுக்கு கணிதம் நன்றாகவே வந்தது. ஆனால் விஞ்ஞானம் புரியவே மாட்டேன் என்றது. பொறியியல் துறையில் அவனுக்கு இருந்த ஆர்வம் விலங்கியல் துறையில் வரவேயில்லை. ஆனாலும் எப்போதும் புத்தகமும் கையுமாய் படித்துக் கிழிப்பவன் போல் வெறும் பாவனை செய்வான்.
தாயின் கனவுகள் வெறும் பகற்கனவாய்ப் போகப் போகிறது என்பது எனக்குச் சீக்கிரமே புரிந்து போயிற்று. காலத்தை விரயமாக்க வேண்டாம், அவனுக்குப் பிடித்தமான துறையில் அவனைச் செல்ல விடும்படி ஜாடைமாடையாக தாயிடம் சொல்லிப் பார்த்தேன். கேட்பதாக இல்லை. மகனை டாக்டராக்கிப் பார்ப்பதைத் தவிர வேறு லட்சியமே தனக்கு இல்லை என்பது போல, நான் சொன்னது எதையுமே அவள் காதில் போட்டுக் கொள்ளவில்லை. கடைசியில் காலம்தான் பதில் சொன்னது. தாயின் கனவு கலைந்தபோது, அவன் எதுவுமே இல்லாமல் வெறும் பூஜ்யமாய் இருந்தான்.

'உன் அம்மா..?' சட்டென்று தாயின் ஞாபகம் வரவே விசாரித்தேன்.
'அம்மாவிற்கென்ன என்னை தனியே நடுத்தெருவில் விட்டிட்டு மகாராசியாப் போயிட்டா.' சட்டென்று சுதாரித்துக் கொண்டு, கைகளை உயர்த்தி மேலே காட்டிச் சொன்னான். பார்வை எங்கோ வெறித்தது.

'ஐயாம் சொறி..!' அனுதாபப்பட்டு ஆறுதல் கூறினேன்.

கனவுகளை யதார்த்தம் என்று நம்பி ஏமாந்தவள் இவனின் தாய். இப்படி ஒரு பிள்ளையைப் பெற்றவள் மகாராசியாய் எப்படிப் போயிருக்க முடியும், பரிதவித்துத்தான் போயிருப்பாள் என்று, அவனது பதில் என்னை எண்ண வைத்தது.

என்னுடைய கடந்தகால ஆசிரியர் தொழில் அனுபவத்தில், இப்படி எத்தனையோ திறமை மிக்க மாணவர்கள் பெற்றோரின் வீண் பிடிவாதத்தால், தவறான பாதையில் வழிகாட்டப்பட்டு கடைசியில் ஒன்றுமே இல்லாமற் போவதைப் பார்த்திருக்கிறேன். இவன் மட்டும் என்ன விதிவிலக்கா?
கொஞ்சக் காலம் என்னிடம் படித்தவன் என்ற முறையில், அவனது இந்த நிலைக்கு நானும் ஒருவிதத்தில் காரணமோ என்று மனசு சங்கடப்பட்டது.
'நேரம் இருந்தால் எங்க வீட்டுப் பக்கம் ஒரு நடை வாவேன்' என்றேன்.
'எங்கே இருக்கிறீங்க..? முகவரியைக் கொஞ்சம் கொடுங்களேன்' என்றான்.
முகவரியைச் சொன்னேன். பவ்வியமாய் ஒரு துண்டுப் பேப்பரில் குறித்துக் கொண்டு நிமிர்ந்து பார்த்தான்.

'கட்டாயம் வரணும் சரியா?' என்றேன்.

'கட்டாயம் வர்றேன், ஆனால் நீங்க யார் என்று இன்னமும் சொல்லவே இல்லையே..?' என்றான்.

அவனது காலடியில் கிடந்த நசிக்கப்பட்ட சிகரட் துண்டு என் பார்வையில் பட்டது. அந்த சிகரட் புகையின் நாற்றம் என் உடம்பு முழுவதும் சட்டென்று படிந்து விட்டது போல ஏனோ என் உணர்வு சங்கடப்பட்டது.

ஒரு அப்பா ஒரு மகள் ஒரு கடிதம் - சிறுகதை

ஒரு அப்பா ஒரு மகள் ஒரு கடிதம் - குரு அரவிந்தன்


(நன்றி – கல்கி)

ரண்டு கடிதங்கள் வந்திருந்தன. ஒன்று அவர் எதிர் பார்த்துக் கொண்டிருந்த டி.என்.ஏ ரிப்போட், மற்றது அழகாக குண்டு குண்டாக அவருக்கு நன்கு பழக்கப்பட்ட கையெழுத்தில் முகவரி எழுதப்பட்டிருந்தது. ஊட்டி கான்வென்ட் ஹாஸ்டலிலிருந்டது எழுதப்பட்டிருந்த அக்கடிதத்தைத்தான் முதலில் பிரித்துப் படித்தார்.

'அன்புள்ள அப்பா'
பதினைந்து வயது நிரம்பிய மகள் திவ்யாவிடம் இருந்து கடிதம் வந்திருந்தது. ஆர்வத்துடன் தொடர்ந்து வாசித்தார்.

'அப்பா இனிமேல் உங்களை உரிமையோடு 'அப்பா' என்று என்னால் அழைக்க முடியுமோ தெரியாது. ஆனாலும் நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் டி.என்.ஏ ரிப்போர்ட் உங்கள் கையிற்கு வருமுன் எனக்கும் உங்களுக்கும் இடையே இருந்த உறவைப் பற்றி மனம் விட்டுப் பேசவிரும்புகின்றேன்.

அப்பா என்றால் பாசம், அப்பா என்றால் அன்பு, எனக்கு எல்லாமுமாய் நீங்கள் தான் இருந்திருக்கிறீர்கள். அம்மாவின் அலட்சியமும், அசட்டையும், உதாசீனமும் என்னை அம்மாவிடம் இருந்து தூரவிலகிப்போக வைத்ததாலோ என்னவோ, உங்கள் மீது அதிகம் ஈடுபாடு கொள்ள வைத்தது. அன்பையும் பாசத்தையும் என் இதயத்தில் விதைத்து விட்டு உங்கள் இதயத்தை மட்டும் எப்படி அப்பா உங்களால் கல்லாக்கிக் கொள்ள முடிந்தது?

அம்மாவிற்கும் உங்களுக்கும் இடையே ஏற்பட்ட மனஸ்தாபம் பூதாகரமாய் வளர்ந்து இப்படி விவாகரத்தில் முடியுமென்று நான் கனவிலும் நினைத்து பார்க்கவில்லை. 'இவளுக்கு அப்பா நீங்கள் அல்ல' என்று அம்மா ஆவேசமாகக் கத்திக் கூச்சல் போட்ட போது கூட நான் அதைப் பெரிது படுத்தவில்லை. ஆனால் 'நீ என் பெண்தானா?' என்ற கேள்விக் குறியோடு என்னை நீங்கள் நிமிர்ந்து பார்த்தீர்களே அதைத்தான் என்னால் தாங்க முடியவில்லை.
பெற்றோருக்குள் ஏற்படும் பிரச்சனைகளால் பிஞ்சுமனங்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகின்றன என்பதை ஏன்தான் பெற்றவர்கள் உணர்ந்து கொள்ள மறுக்கிறார்களோ தெரியாது. என் எதிர் காலத்தை நினைக்க எனக்கே பயமாக இருக்கிறது. எல்லோர் பார்வையிலும் நான் ஒரு கேள்விக் குறியாய்த் தெரிகிறேன். என்னைப் பொருத்தவரை எனக்கேற்பட்ட இந்தப் பாதிப்பு ஒரு மாறாத ரணமாய் என் மனதில் பதிந்து விட்டது.

அப்பா கடைசியாக உங்களிடம் ஒரு வேண்டுகோள்! விஞ்ஞானம் முன்னேறி விட்டது. அம்மா சொன்னது உண்மை என்றால் டி.என்.ஏ ரிப்போட் வந்ததும் நான் உங்கள் பெண் அல்ல என்பது நிரூபணமாகிவிடும். அந்த நிமிடமே நான் உங்களை விட்டு அன்னியப்பட்டு விடுவேன். அப்படி ஒரு நிலைமை ஏற்படுமுன் கடைசியாக ஒரு முறை உங்களைச் சந்திக்க விரும்புகின்றேன். எனக்கென்னவோ உங்கள் தோளில் முகம் புதைத்து மனதில் இருப்பதை எல்லாம் உங்களிடம் அழுது கொட்டித் தீர்க்க வேண்டும் போல இருக்கிறது! உங்கள் பிடிவாதத்தை கைவிட்டு என்னைப் பார்க்க ஒரே ஒரு முறையாவது வருவீர்களா?'

அந்தக் கடிதத்தை வாசித்ததும் அவர் இடிந்து போய்விட்டார். கணவன் - மனைவி பூசல் காரணமாக ஒன்றுமறியாக் குழந்தை வீணாகத் தண்டிக்கப் படுகிறாளே என்று நினைத்தார். விவாகரத்துக் கோரும் அளவிற்கு அவர் என்ன தான் தப்புச்செய்தார்?

கல்யாணமான புதிதில் அவருக்கு ஏற்றமாதிரி நடந்து கொண்ட மனைவி காலப் போக்கில் தன் சுயரூபத்தைக் காட்டத் தொடங்கினாள். சிறிது சிறிதாக அவர்களுக்குள் தொடங்கிய பிரச்சனை குழந்தை பிறந்த பின்பும் தொடர்ந்து விசுவரூபம் எடுத்தது.

அவரிடம் பணம் இருந்தது, அவளிடம் அழகும் இளமையும் இருந்தன. அவளது விருப்பம் இல்லாமல் அவளது குடும்பத்தின் நிர்ப்பந்தம் காரணமாகத்தான் இந்தக் கல்யாணம் நடந்தது என்பது அவளாகச் சொல்லும் வரை அவருக்குத் தெரியாது. ஆனாலும் தனது குடும்ப சூழ்நிலையை மனதில் கொண்டு அவரிடம் உள்ள வசதிகளை அனுபவிப்பதற்காக அவளும் இவ்வளவு காலமும் மௌனமாய் அவரோடு ஒத்துப் போயிருக்கிறாள்.
'உனக்கு விருப்பம் இல்லாமலா இந்தக் கல்யாணம் நடந்தது?'
'ஆமா! என்னை ஒரு பெண்ணாய் யாருமே மதிக்கலே! உங்களுடைய பணத்தைக் குறிவைத்து என் ஆசைகளை, என் காதலை, கடந்த காலத்தை எல்லாவற்றையுமே எங்க அப்பா அடமானம் வைத்து விட்டாரே!' அவள் விசும்பி விம்மலாய் வெடித்தாள்.

'காதலா.......?'

'ஆமாம் காதல்தான்! என் காதலனைத் திருமணம் செய்யப்போவதாக நினைத்துத் தான் அவனோடு நான் நெருங்கிப் பழகினேன். ஆனால் விதி தான் உங்கள் உருவத்தில் வந்து விளையாடி விட்டதே! இனிமேலாவது எனக்கு விவாகரத்து மூலமா விடுதலை கொடுங்க...'

'அப்போ இத்தனை காலமும் என்னோட வாழ்ந்ததெல்லாம்......?'

'வாழ்ந்தது இந்த மீனாவோட உடம்பு மட்டும் தான், மனசல்ல! இனியும் போலியாய் என்னை நானே ஏமாற்றிக் கொண்டு உங்களோடு வாழ என்னாலே முடியாது. எனக்கு இந்த நரகத்தில் இருந்து விடுதலை வேணும்!'
'பிரிஞ்சு போகத்தான் வேண்டும் என்றால் அதை யாராலும் தடுக்க முடியாது, ஆனால் நம்ம பெண்ணோட கதி?''

'நம்ம பெண்ணா? யார் சொன்னது அவ உங்க பெண் என்று?'

'நீ... என்ன சொல்கிறாய்?'

'ஆமாம்! திவ்யாவிற்கு அப்பா நீங்க இல்லை!'

''இந்தா பார்! நம்ம குடும்ப வாழ்கையோட விளையாடாதே!'

'நான் விளையாடலே, ஆனால் அதுதான் உண்மை!'

இடி ஒன்று தாக்கியது போல அவர் அதிர்ந்து போனார்.
'அப்போ திவ்யா என்னோட பெண் இல்லையா?'

'இல்லை.

'பொய்..! என்னை அவமானப்படுத்த பொய் சொல்றே.. பிரியணும்னா போய்த் தொலை.. எதுக்காக இப்படி சித்திரவதை பண்றே..'

'இப்போ திவ்யா உங்க பெண்ணு இல்லைன்னு நிரூபிக்கணும் இல்லியா..?'

'கடவுளே!...

'நிரூபிச்சுக் காட்டறேன்

மனித மனத்தில் விழும் ஏமாற்றப் பள்ளங்கள் குரூரமாக வக்கிரங்களால் நிரம்பிவிடும் போலும்... அவள் அவனை அவமானப்படுத்தவே சதி தீட்டினாள். லீவுக்கு வந்த திவ்யாவைக் கட்டாயப்படுத்தி பரிசோதனைக்கு உட்படுத்தி...

ஹாஸ்டல் விருந்தினர் அறைவாசலில் எதிர்பாராமல் அவரைக் கண்டதும் ஒரு கணம் திகைத்துப் போய் நின்று விட்டாள் திவ்யா. அப்புறம் சமாளித்துக் கொண்டு, 'நான் உங்களுக்கு ஒரு கடிதம் போட்டேனே கிடைத்ததா?' என்றாள்.

'கிடைச்சதும்மா...'

'டி.என்.ஏ ரிப்போட் இன்னும் வரல்லையா?'

'வந்திடிச்சு!'

'வந்திடிச்சா?'
அவள் முகத்தில் ஏமாற்றமும், அதே நேரத்தில் அதன் முடிவை அறிந்து கொள்ளும் தவிப்பும் தெரிந்தன.

'நினைச்சேன், நீங்க தயங்கி நிற்கும்போதே உங்களுக்கு உண்மை தெரிஞ்சிருக்கும் என்று நினைச்சேன்!'

'தெரியும்!'

'அப்போ அம்மா சொன்னது அத்தனையும் உண்மை தானே?'

'இல்லை, அம்மா சொன்னதில் உண்மையில்லை! அம்மாவிற்கு என்னோடு வாழப்பிடிக்கலை, அதனாலே எனக்குக் கோபமூட்டி என்னிடம் இருந்து விவாகரத்து வாங்கத்தான் அம்மா அப்படிச் சொல்லியிருக்கா!'

'அப்பா! நீங்க என்ன சொல்லுறீங்க?'

'டி.என்.ஏ ரிப்போட்டைப் பார்த்தேன்! நீ என்னோட பெண்தான்!'

'உண்மையாவா...?'

'ஆமாம்! யார் என்ன சொன்னாலும் நீ என்னோட மகள்தான்!'

'அப்......பா!' அந்த ஒரு சொல்லுக்காகவே காத்திருந்தது போல அவள் பாய்ந்து வந்து அவரைக் கட்டி அணைத்து மார்பிலே முகம் புதைத்து விக்கி விக்கி அழுதாள். இன்னும் பெரிதாக நெஞ்சு வெடிக்க ஓலமிட்டு அழவேண்டும் போல அவளுக்கு இருந்தது.

'அழாதே அம்மா!' அவர் பாசத்தோடு கண்ணீரைத் துடைத்து விட்டார். சட்டென்று அழுவதை நிறுத்தி, அவள் அவரை நிமிர்ந்து பார்த்தாள்.

'இனிமேல் நான் அழமாட்டேன், எனக்கும் அப்பா இருக்கிறார்!' அவள் சந்தோஷமிகுதியால் அவர் கைகளுக்குள் முகத்தைப் புதைத்து வாய்விட்டுச் சிரித்தாள்.

மகளைத் திருப்திப் படுத்திய சந்தோஷத்தோடு அவர் வீடு திரும்பினார். வீடு வந்ததும் முதல் வேலையாக பிரித்துப் படிக்கப்படாத அந்த டி.என்.ஏ ரிப்போட்டை அப்படியே கவரோடு சேர்த்துக் கிழித்துக் குப்பைத் தொட்டியில் போட்டார். மனம் அமைதியாக இருந்தது. இந்த அமைதிக்காக அவர் கொடுத்த விலைகூட அதிகமாகத் தோன்றவில்லை. மீனா கோரிய விவாகரத்தில் பரஸ்பர சம்மதம் என்று மறுபேச்சின்றி கையெழுத்து போட்டுக் கொடுத்திருந்தார்.

பதிலுக்கு அவளும் டி.என்.ஏ அறிக்கை முடிவை திவ்யாவிடம் வெளியிடுவதில்லை என்று வாக்குறுதி அளித்திருந்தாள். விவாகரத்து வழக்கு முடிய சிறிது காலம் ஆகலாம்... ஆனால் திவ்யாவின் நிம்மதி ஆயுட்காலத்திற்கும் நீடிக்கும்.

- குரு அரவிந்தன் -
   (நன்றி – கல்கி)

Kuru Aravinthan's Profile

Kuru Aravinthan - Writer, Teacher, Accountant

Kuru Aravinthan was born in the town of Mavidapuram, Kankesanturai in Jaffna, Srilanka. He is a Srilankan Tamil Author, Essayist and Movie play writer.

Kuru Aravinthan has been one of the pioneers of Tamil fiction in Canada, and has received praise and recognition world –wide for his work. He has been writing short stories for the last decade and more for popular Tamil Naadu magazines. Some of his stories were translated into other South Indian languages for publication in those language journals.

One of Aravinthan’s most popular story appeared in Anandavikatan filling 24 pages in the Pavalavilla year magazine and has to its credit that five artists drew pictures for the story titled “Submarine,” which is something unique and never before done. That story gained the admiration of more than 1,000,000 readers and profuse compliments poured from the readers.

Subsequently when Anandavikatan editorial board in a Quiz asked the readers later on as to who wrote that story, 45,261 correctly said that author was Kuru Aravinthan which shows how much he has captivated the minds of Tamil Naadu readers. His short stories and article also have appeared in Vikatan Deepavali Malar and Pavalavilla Malar.

Kuru Aravinthan’s short stories also have appeared in other popular weekly magazines of the Newspapers of Kalki, Kumudam and Kalaimagal in Tamil Nadu, Veerakesari and Thinakkural in Sri Lanka, Villinam in Malaysia,Uthayan, Veedu and Thural in Toronto, Irusu and Shangamam in Montreal. Puthinam in the United Kingdom, Vettimaiy in Germany, Uyir Nilal in France and Yugamayini in Tamilnadu. His stories also appear regularly in the electronic media like Pathivukal, Neithal, Thinnai, Tamil Authers and Kumutham.com.

In a short story contest organized by the Uthayan Newspaper, Kuru Aravinthan’s short story was adjudged to be the best and was awarded a gold Medal In 2007 Kuru Aravinthan’s short story won the first place in the short story contest organized by the Canadian CTR radio to commemorate its 10th year of founding and won the best award in writer Gandarvan short story contest – 2008. The popular Sri Lankan Tamil Newspaper Veerakesari at its Millenium issue credited Kuru Aravinthan’s short story as the best story of the year.

His Kurunovel ‘Ammavin Pillaikal’ also won the Yugamayini Best Kurunovel award -2009 in Tamilnadu. Also His Kurunaval won the Kalaimagal International award - 2011 for his 'Thayumanaver' Kurunaval from Tamilnadu, India,

Kuru Aravinthan’s contribution (Tamil Aaram) towards children education and literature are noteworthy. He has been one of the pioneers of Tamil children Literature in Canada and involved himself in stage plays (Drama), Tamil Cinema as well. He has written the script for the films ‘Sugam Sugame’, Veali and Sivaranjani. He is actively involved in the social fabric of society as well. Kuru Aravinthan also awarded 10th year Volunteer Service Award from Premier of Ontario. Canada.

There in lay Kuru Aravinthan’s true talent, his ability and talent to blend and merge fact and fiction to create a world where one becomes conscious of intricacies and the importance of remembered history. In addition, his ability to vividly retell events, as to make the reader feel immersed in the events, further set Kuru Aravinthan apart from his peers. His ability to situate readers into the retold events, and engross, previously ignorant people into the life and trials of the Tamil population have made Kuru Aravinthan’s work that much more powerful, as it becomes a tool in helping the world understand and sympathize the plight of the Tamil people.

Mr. P. Kanagasabapathy
Ex-Principal, (Mahajana College.)
TDSB - Consultant
Canada.

சுமை - குரு அரவிந்தன்

Awarded 1st Prize

சுமை

(குரு அரவிந்தன்)

இரும்புக் கதவுகள் கிறீச்சிட்ட சத்தத்தில் நடேசுவிற்கு விழிப்பு வந்திருக்க வேண்டும். இருட்டுக்குள் பழகிப்போன குழிவிழுந்த கண்களுக்குள் வெளிச்சம் பாய்ச்சப்பட்டதும், கூச்சம் தாங்காமல் அவை தானாகவே இறுக மூடிக்கொண்டன. இமைகள் மூடிக் கொண்டாலும் காது மடல்கள் விரிந்து நெருங்கி வரும் கனமான பூட்ஸின் அதிர்வுகளை மௌனமாக உள்வாங்கிக் கொண்டன. ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போவதற்கான எதிர்பார்ப்பில், இதயம் ஏனோ வேகமாகப் படபடவென்று அடித்துக் கொண்டது. மிக அருகே அதிர்வுகள் நிசப்தமாகிப் போனதால், பயத்தில் இதயம் இன்னும் வேகமாக அடித்துக் கொள்ள, தூங்குவது போலப் பாசாங்கு செய்ய முனைந்தான்.
'எழுந்திருடா" பூட்ஸ் கால் ஒன்று விலாவில் பட்டுத் தெறித்தது.
துடித்துப் பதைத்துக் கைகளை ஊன்றி எழுந்திருக்க முயற்சி செய்தான். 'சுள்' என்று முழங்கால் மூட்டு வலித்தது. அடிக்கு மேல் அடிவாங்கிய அந்த உடம்பிற்கு, எங்கே வலிக்கிறது என்பதைக்கூட உணர முடியாமல் இருந்தது. வீங்கிப்போன கால்கள் எழுந்து நிற்கமுடியாமல் துவண்டு சரிந்தன. வந்தது யாராய் இருக்கும் என்று ஊகித்ததில் நிமிர்ந்து பார்க்கவே பயமாக இருந்தது.

'வெளியே வாடா நா..!' தொண்டை கிழிய அவன் கூச்சல் போட்டபோது அவனது குரலை இவனால் இனம் காணமுடிந்தது. அவனது கண்களில் இவன் படும் போதெல்லாம் இப்படித்தான் கொச்சைத் தமிழில் கூச்சல் போட்டுக் கத்துவான். ஒரு போதும் அவனது வாயிலிருந்து நல்ல சொற்கள் உதிர்ந்ததை இவன் கேட்டதில்லை.
தள்ளாடியபடியே வெளியே வந்து, அச்சத்துடன் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு சப்பாத்துக் கால்களைப் பின் தொடர்ந்தான். இரும்புக் கதவுகள் பல திறந்து, மூடப்பட்டு இறுதியில் ஒரு அறைக்குள் இருந்த அதிகாரி முன் நிறுத்தப்பட்டான். இந்தச் சிறைக்கு மாற்றப்பட்ட நாளில் இருந்து யாரையுமே நிமிர்ந்து பார்க்க அவனுக்குப் பயமாக இருந்தது.
'நீ நடேசுதானே..?'
எப்போவோ மறந்துபோன அவனது பெயர் நினைவுவர மெல்ல தலை நிமிர்த்திக் குரல் வந்த திசை நோக்கிப் பார்வையைச் செலுத்தினான். அவனைப்பற்றிய குறிப்புகள் அடங்கிய ஆவணமாய் இருக்கலாம், அந்த அதிகாரிக்கு முன்னால் மேசையில் விரித்து வைக்கப்பட்டிருந்தது. அதுவும் இவனது கடந்த கால நிலையற்ற வாழ்க்கைபோல, மின்விசிறிக் காற்றில் அடிபட்டுத் துடித்துக் கொண்டிருந்தது.
எதுவும் பேசாது தலையாட்டிக் காளைபோல, இவன் தன்னிச்சையாய் தலை அசைத்தான்.
'உனக்கு விடுதலை, கையொப்பம் போட்டு விட்டு நீ போகலாம்..!'
அவனுக்குத் திக்கென்றது. விடுதலையா? எனக்கா?
அவன் ஒருபோதும் விடுதலை வேண்டும் என்று கேட்கவே இல்லையே..?
விடுதலை என்று கையொப்பம் போட்ட பல தமிழ் இளைஞர்கள் வீடுபோய்ச் சேரவில்லை என்பது இவனுக்குத் தெரியும். இவனைக் கொண்டே அப்படிப் பலரின் சடலங்களைப் புதைத்தால் என்றாவது தெரியவருமென்று, அடையாளம் தெரியாமல் எரிக்கப் பண்ணியிருக்கிறார்கள்.
கையிலே ஒரு பையைக் கொண்டு வந்து கொடுத்தார்கள். கையெழுத்துப் போட்டுவிட்டு பிரித்துப் பார்த்தான். இருபத்திரண்டு வருடங்களுக்கு முன் இவன் கைதானபோது அணிந்திருந்த வேட்டியும், சேட்டும் இவன் நினைவுகளைப் போலவே அவையும் கசங்கி மங்கிப்போய்க் கிடந்தன. சேட்டை உதறி மாட்டிப் பார்த்தான். தொளதொளத்துப் போயிருந்தது. தாடியும், பரட்டைத் தலையும் தெருப் பிச்சைக்காரனை அவனுக்கு ஞாபகமூட்டியது.
பலியாடு போலப் பின்தொடர, இராணுவ தடை முகாமிற்கு வெளியே உள்ள வீதியில் அவனைக் கொண்டு வந்து விட்டார்கள். இவனது இளமைக் காலத்தை முற்றாகக் கொள்ளையடித்த அந்த இராணுவ முகாமை வெறுப்போடு திரும்பிப் பார்த்துக் கொண்டே உயிர் வாழும் ஆசையில் அந்த இடத்தை விட்டு வேகமாய் நடந்தான்.
இனி எங்கே போவது? யாரிடம் போவது?
உள்ளே இருக்கும்வரை இல்லாத பிரச்சனை இப்போ பூதாகரமாய் தலை தூக்கி நின்றது. காலையில் இருந்து பட்டினி கிடந்ததால் பசி வயிற்றைக் கிண்டியது. உள்ளே இருந்திருந்தால் ஒருவேளை கஞ்சியாவது கிடைத்திருக்கும். உடலும் உள்ளமும் சோர்ந்து போக அப்படியே தெருவோர மரத்தடியில் உட்கார்ந்தான்.
மழை வரும்போல, ஆங்காங்கே வானம் கறுத்திருக்க குளிர் காற்று சில்லிட்டது. சூடாக ஏதாவது குடித்தால் இதமாக இருக்கும்போல் தோன்றிற்று. யாரோ பாதி குடித்துவிட்டுக் கீழே போட்டு நசுக்கிவிட்ட பீடித்துண்டு ஒன்று குழி விழுந்த தெருவில் அரை உயிரோடு இழுப்பு வந்ததுபோல இழுத்துக் கொண்டு கிடந்தது. அதை எடுத்து அதில் ஒட்டியிருந்த மண் துகள்களை ஊதித் தள்ளிவிட்டு வாயில் வைத்து உதட்டைக் குவித்து ஒரு இழுப்பு இழுத்தான். இழுத்த இழுப்பில் இதமான சூடு உள்ளே உடம்பெல்லாம் பரவ, நரம்புகள் புடைத்து நிற்பதை இவன் உணர்ந்தான். அந்த பீடித்துண்டு கொடுத்த உட்சாகத்தோடு மீண்டும் எழுந்து தள்ளாடியபடி நடந்தான்.
எங்கே போவது என்று தெரியாமல் கால்போன திசையில் விச்ராந்தியாக நடந்தான். கனமான பூட்ஸ் கால்கள் பதிந்த இடமெல்லாம் திட்டுத் திட்டாய் வீங்கிப் போயிருந்தன. ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் வேதனை தாங்காது 'விண் விண்' என்று மூட்டுக்கள் வலித்தன. காலாகாலமாய் முடிவின்றி நடந்ததுபோல கால்கள் துவண்டு போயின. இன்னும் எவ்வளவு தூரம்..?
எப்படியோ யாரையோ எல்லாம் கெஞ்சி மன்றாடி, மாடுகள் சோடைபிடித்துப் போவதுபோல கடைசியில் இவனும் தான் பிறந்த மண்ணுக்கு வந்து சேர்ந்தான். இருபத்திரண்டு வருடங்களுக்குமுன் இருந்த கிராமம் எப்படியோ எல்லாம் மாறிப்போயிருந்தது. பெட்டிக்கடை மளிகைக் கடையாய் மாறி இருப்பதை அதிசயமாய்ப் பார்த்தான். குழந்தை பசியிலே வீரிட்டதைத் தாங்கமுடியாமல் ஊரடங்குச் சட்டத்தையும் பொருட்படுத்தாமல் தெருவைக் கடந்து பின்பக்கத்தில் இருந்த பெட்டிக் கடைக்குப் பால்மா வாங்கச் சென்ற பொழுதுதான் இவன் இராணுவத்தால் பிடிக்கப்பட்டான். அப்புறம் வேண்டாத குற்றமெல்லாம் இவன்மீது சாட்டி இவனையும் கும்பலோடு கும்பலாகக் கொண்டு போனார்கள். ஒவ்வொரு முகாமாக இவனைக் கொண்டு திரிந்து, அலைக்கழித்து இவனது குடும்பத்திற்கு கண்ணாமூச்சி காட்டினார்கள். பணவசதியோ செல்வாக்கோ இல்லாததால் இவனை வெளியே கொண்டுவர இத்தனை காலமாகியும் இவனது குடும்பத்தால் எதுவுமே செய்ய முடியாமல் போய்விட்டது.
யார்யாரையோ எல்லாம் விசாரிக்க, கடைசியில் கடைக்கு முன்னால் உள்ள மரத்தடியில் கண்ணாடியோடு உட்கார்ந்து பத்திரிகை படித்துக் கொண்டிருந்த வயோதிபர்தான் அவனை யார் என்று அடையாளம் கண்டு கொண்டார். 'தன் கணவன் உயிரோடு இருக்கிறான்' என்ற ஒரு நல்ல வார்த்தையைக் கேட்பதற்காக ஒவ்வொரு முகாமாக இவன் மனைவி அலைந்து திரிந்து உயிர் உருக அரசிடம் யாசித்தது அவர் மனக்கண்முன் நிழலாய் வந்தது.
நடேசு தனது குடும்பத்தைப் பற்றி அவரிடம் விசாரித்தான். அவர் கொடுத்த தகவலின்படி அவனது மனைவி இறந்து போனதும், மகள் பாட்டியோடு வளர்ந்து வந்ததும், இப்போ திருமணமாகி அந்த ஊரிலேயே தங்கி இருப்பதும் தெரியவந்தது.
‘’நீ திரும்பி வருவாய் என்று நாங்கள் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை நடேசு!’’ அவனது மகள் குடியிருக்கும் ஒதுக்குப் புறமான ஒரு குடிசைக்கு அவனை அவர் அழைத்துச் செல்லும் போது அவர் ஆச்சரியமாய்ச் சொன்னார்.
வாசலில் சொறி நாய் ஒன்று கண்மூடிப் படுத்திருந்தது. நாயைச் சுற்றி ஈக்கள் வட்டமிட்டு மொய்த்துக் கொண்டிருக்க, மெல்லிய உறுமலோடு தலை நிமிர்த்திப் பார்த்துவிட்டு மீண்டும் சுருண்டு படுத்துக் கொண்டது. அறிமுகம் இல்லாத இவனைப் பார்த்துக் குரைக்காமல் விட்டதே இவனுக்கு மிகப்பொரிய ஆறுதலாக இருந்தது.
'சரசு..!' என்று பெரியவர் வெளியே நின்றபடி குரல் கொடுத்தார்.
இருபத்திமூன்று, அல்லது இருபத்திநாலு வயது மதிக்கத்தக்க பெண்ணொருத்தி வெளியே வந்தாள். அவளின் முந்தானையைப் பிடித்தபடி நாலு, ஐந்து வயது மதிக்கத்தக்க குழந்தை ஒன்றும் தொடர்ந்து வந்தது.
நடேசு ஆச்சரியத்தோடு வெயியே வந்த அந்தப் பெண்ணைப் பார்த்தான். இருபத்திரண்டு வருடங்களுக்குமுன் மனைவியைப் பார்த்த ஞாபகம் சட்டென்று வந்தது.
'சரசு, இது யார் என்று தெரியுதா..?'
அவள் நடேசுவைச் சலனமற்ற ஒரு பார்வை பார்த்துவிட்டு 'தெரியாது' என்பது போலத் தலையசைத்தாள்.
'இதுதான் உன்னோட அப்பா, நடேசு..!'
அவள் அந்த வார்த்தைகளை உள்வாங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை. அவளது முகபாவத்தில் இருந்து அதை ஏற்றுக் கொள்ளும் நிலையில் அவள் இல்லை என்பது இவனுக்குப் புரிந்து போயிற்று. அவளோ வேண்டாத சந்தேகத்தோடு நடேசுவைப் பார்த்தாள்.
'அவர்தான் செத்துப் போயிட்டாரே..?' புதிதாக ஒருவனை ஏற்கமுடியாத நிலையில் வார்த்தைகள் இழுபட்டன.
'இல்லை சரசு, தொலைந்து போனவன், செத்துப் போயிட்டான் என்றுதான் நாங்க எல்லோரும் நினைச்சு கருமாதி எல்லாம் செய்திட்டோம். ஆனால் இத்தனை வருடமாய் மாறிமாறி ஒவ்வொரு தடைமுகாமிலையும் இருந்திருக்கிறான். இப்பதான் நாட்டிலே சமாதானம் என்று சொல்லி இவனை விடுதலை செய்தார்களாம்.'
அவள் இடையிலே வந்த இந்தப் புதிய உறவை ஏற்றுக் கொள்ள முடியாதவளாய், இந்தக் கதை எல்லாம் எனக்கு வேண்டாம் என்பது போலப் பிடிவாதமாய், அவரது கூற்றை மறுப்பதுபோலத் தலையசைத்தாள்.
'அப்பா என்கிற உறவே என்ன என்று தெரியாமல் நான் இத்தனை வருசமாய் வளர்ந்திட்டேன்;. பாட்டி போனதுக்கப்புறம் வேளாவேளைக்குச் சாப்பிடக்கூட வழியில்லை. கூலி வேலை செய்து இந்தக் குழந்தையை வளர்த்து எடுக்கவே என்பாடு சங்கடமாய் இருக்கு. இப்போ புதிதாய் இந்த வயதிலே அப்பா என்று இவர் உறவு முறை சொல்லிக் கொண்டு வந்தால் நான் என்ன செய்ய..? இருக்கிற சுமையே எனக்குப் போதும் சாமி, இனி என்னாலே புதிதாய் வேறு ஒரு சுமையையும் தாங்கமுடியாது!'
இது போலக் கௌரவமாக வாழ்ந்த இப்படி எத்தனை ஆயிரம் குடும்பங்கள் அந்த மண்ணிலே சிதைக்கப்பட்டு அவர்களின் எதிர்காலக் கனவுகள் எல்லாம் பெரும்பான்மை இனத்தவர்களால் கொள்ளை அடிக்கப் பட்டிருக்கின்றன என்பதை நினைத்துப் பார்க்க நடேசுவுக்கு ஓவென்று அழவேண்டும் போலிருந்தது. ஆழமாக நினைவுமுள் கிழித்த வேதனையில் காலில் இருந்த வலி மறந்துபோக, தன் எதிர்காலம் குறித்த கவலை இப்போது அவனைப் பிடித்துக் கொண்டது.
'பாட்டிக்கு என்னாச்சு..?' பெரியவர் கேட்டார்.
'பாட்டி போனவருடம் செத்துப் போயிட்டா.' என்றாள் சரசு.
'அப்போ உன் புருசன்..?'
'மூன்று வருடமாச்சு, இவனுக்கு சாப்பிட ஏதாவது கடையிலே வாங்கிக் கொண்டு வர்றேன் என்று சொல்லிவிட்டு கடைப்பக்கம் போனவர்தான் அப்புறம் திரும்பி வரவே இல்லை..!' என்றாள்.
எங்கே போயிருப்பான் என்பதுதான் எப்போதுமே விடை தெரியாக் கேள்வியாய்த் தொக்கி நிற்கிறது. தன்னைப் போலவே தொலைந்து போனவர்களின் பட்டியலில் அவனது பெயரும் எங்கேயாவது எழுதப்பட்டிருக்கலாம் என இவன் நினைத்தான். இன்று நாட்டில் இருக்கும் சூழ்நிலையில் அவன் உயிரோடு இருப்பானோ என்பதுகூட இவனுக்குச் சந்தேகமாய் இருந்தது.
'ஏதோ பெற்றெடுத்த கடமைக்காக என்றாலும் காய்ச்சிற கஞ்சியோ, கூழோ மிச்சம் இருக்கிறதைக் கொடுத்தால் போதும் சரசு, உனக்கு ஒருகாலும் நடேசு பாரமாய் இருக்கமாட்டான்.' வேலி ஓலையில் பிய்த்து எடுத்த ஈக்குச்சியால் பல்லைக் குடைந்து கொண்டிருந்த நடேசுவிற்காகப் பெரியவர் பரிந்துரைத்தார்.
கனவு கண்டுகொண்டு வாசலில் படுத்திருந்த நாய் திடீரென எழுந்து தன் இருப்பை உறுதி செய்ய ஒரு உசுப்பல் உசுப்பி சோம்பல் முறித்தது. நடேசுவைக் கண்டு கொள்ளாமல், ஒரு பாய்ச்சல் பாய்ந்து எதிர் வீட்டுக் கோழியை விரட்டிக் கொண்டு ஓடியது. வாசலின் வெறுமையில் கலைந்துபோன ஈக்கள் எல்லாம் இப்போ நடேசுவைச் சுற்றி மொய்க்கத் தொடங்கின.

(நன்றி : கனடிய தமிழ் வானொலி (சீரிஆர்) நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை)

அப்பாவின் கண்ணம்மா - சிறுகதை - குரு அரவிந்தன்

அப்பாவின் கண்ணம்மா
(குரு அரவிந்தன்)

அம்மா ஸ்டூல் ஒன்றை இழுத்துப் போட்டுக் கொண்டு அதன்மேல் ஏறி நின்று எதையோ பரணில் தேடிக்கொண்டிருந்தாள். நான் இதையெல்லாம் கவனிக்காதது போல பாடத்தில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தேன். கடந்த ஒரு வாரமாய் இந்த வீட்டில் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. அப்பா எழுதிய துண்டுக் காகிதங்கள், பேப்பர்கள் எல்லாவற்றையும் அம்மா கவனமாகச் சேகரித்து கட்டுக்கட்டாக பரண்மேல் குவித்து வைத்திருந்தாள். அதில்தான் எதையோ தேடிக் கொண்டிருக்கிறாள் என்பது புரிந்தது. இப்படித்தான் புதையல் காக்கும் பூதம்போல அவ்வப்போது ஸ்டூல் வைத்து ஏறி நின்று எதையாவது கிண்டி எடுப்பதும் அதைப் படித்துவிட்டு மீண்டும் பத்திரப்படுத்தி கவனமாக வைப்பதும் இப்போது அம்மாவின் தினசரி வேலையாய்ப் போய்விட்டது.

அப்பா எப்போதும் போல சிரித்துக் கொண்டேயிருந்தார். எங்களை விட்டுப் பிரிந்து இரண்டு மாதங்கள் விரைவாக ஓடிவிட்டாலும், சுவரில் தொங்கிய அப்பாவின் படம், அப்பா கண்முன்னால் இருப்பது போன்றதொரு பிரமையை எங்களுக்கு ஏற்படுத்தியிருந்தது. திடீரென ஒருநாள் நெஞ்சு வலிப்பதாகச் சொன்னவரை அவசரமாக வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போது, பாதி வழியிலேயே எங்களைத் தவிக்க விட்டுப் போய்விட்டார். சொந்த பந்தம் என்று சொல்லிக் கொண்டு வந்தவர்கள் எல்லாம் தாமரை இலையில் தெறித்து விழுந்த நீர்த்துளி போல ஒவ்வொருவராக விடைபெற்றுச் சென்றுவிட நானும் அம்மாவும் தான் வீட்டிலே எஞ்சி நின்றோம். அப்பா இருந்தவரை நினைத்தும் பார்க்காத தனிமையும், எதிர்காலம் பற்றிய பயமும் திடீரென எங்கள் இருவரையும் பிடித்துக் கொண்டது. நாளைய பொழுது என்ன என்ற கேள்வி எங்கள் முன் விருட்சமாய்ப் பரந்து நின்றதில் வியப்பேதுமில்லை!
‘எங்களுக்கென்று எதுவும் சேர்த்து வைக்காமல் நிம்மதியாய்ப் போய்விட்டாரேடி பாரதீ..தீ..!’ அம்மா என்னைக் கட்டிப் பிடித்து கதறியபோது, ஆண்களையே நம்பியிருக்கும் எங்கள் சமுதாய அமைப்பை நினைக்க எனக்குள்ளும் அந்தப் பயம் சட்டென்று பிடித்துக் கொண்டது. பெண்ணாய் பிறந்து விட்டால் எப்பொழுதும் பாரம்தானோ என்று அந்தக் கணத்தில் எண்ணத் தோன்றியது.
பாரதியின் எழுத்துக்களால் கவரப்பட்ட அப்பா, நான் பிறந்தபோது அந்தப் பெயரையே எனக்குச் சூடி ’பாரதீ, பாரதீ’ என்று ஆசை தீர அடிக்கொரு தடவை அழைத்து, திருப்திப்பட்டுக் கொண்டிருந்தார். அம்மாவின் நிஜப்பெயர் கண்ணம்மா. அம்மா உயர்வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது அவர்களின் பாடசாலையில் நடந்த பாரதி விழா ஒன்றுக்கு இளம் ஆசிரியராக இருந்த அப்பாவையும் சிறப்புச் சொற்பொழிவாற்ற அழைத்திருந்தார்களாம். அங்கே அப்பாவின் பேச்சு வன்மையைக் கண்டு அம்மா வியந்திருக்கிறாள். அது மட்டுமல்ல, அப்பாவிற்கு கணிரென்ற நல்ல குரல் வளமும் இருந்தது. அவர் சொற்பொழிவிற்கிடையே ‘சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா’ என்ற பாரதியின் பாடலை சபையோர் மயங்கும் வண்ணம் மிக அழகாகப்பாடி அதற்கு விலாவாரியாக விளக்கமும் கொடுத்திருக்கிறார். சபையோர் மயங்கினார்களோ இல்லையோ அந்தப் பாடலைச் சபையிலே கேட்டுக் கொண்டிருந்த அம்மா தன்னையே கண்ணம்மாவாக நினைத்து ஒரேயடியாய் மெய்மறந்து உருகிப் போய்விட்டாள். அப்பா மீது அவளுக்கு ஒரு வகை ஈர்ப்பு ஏற்பட்டு இருந்ததால் அப்புறம் அடிக்கடி அவர்களின் சந்திப்பும் நிகழ்ந்தது. அவளே விரும்பி பெரியவர்களின் சம்மதத்தோடு அப்பாவை திருமணம் செய்து கொண்டாள். உதடு மெல்ல விரியும் புன்சிரிப்பு, பட்டென்று கவர்ந்திழுக்கும் அந்தக் காந்தக் கண்கள், கணீரென்ற குரல், இவையெல்லாம் அப்பாவின் பிளஸ் பாயின்ட்ஸாக இருந்ததால் அவை எல்லாம் ஒட்டுமொத்தமாக அம்மாவைக் கவர்ந்து இழுத்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லைத்தான்!
கற்பனை வேறு யதார்த்தம் வேறு என்பதைக் காலப் போக்கில் அம்மா புரிந்து கொண்டாள். குடும்ப பொருளாதார நிலையைக் கவனிக்காமல் கற்பனையில் வாழ்வது, சிந்திப்பது, எழுதுவது, சொற்பொழிவாற்றப் போவது, பொதுச்சேவை என்று இப்படியே அவரது வாழ்கை வாத்தியார் தொழிலில் வரும் சொற்ப வருமானத்தை மட்டும் நம்பி தினமும் ஓடிக்கொண்டிருந்தது. அம்மாவிற்கு என்னை எப்படிக் கரைசேர்ப்பது என்ற பயம், அதனாலே தினமும் அப்பாவைத் திட்டித் தீர்த்துக் கொண்டேயிருந்தாள்.
அப்பாவிற்கு ரோஷம் வருமோ என்னவோ தெரியாது, ஆனால் அதற்குப் பதிலாகக் கோபம் மட்டும் வரும். அம்மா திட்டத் தொடங்கியதும் அப்பா கதவை அடித்துச் சாத்திவிட்டு உள்ளே இருந்து கோபம் தீரும்வரை ஏதாவது எழுதிக் கொண்டேயிருப்பார். அப்புறம் அம்மா காப்பி கொண்டுபோய்க் கொடுத்தோ, அல்லது சாப்பிட வரும்படியோ சமாதானப்படுத்துவாள். திட்டுவதும், அப்புறம் சமாதானப் படுத்துவதும் தினமும் நடந்து கொண்டிருந்ததால் எங்க வீட்டிலே அது ஒரு சாதாரண நிகழ்ச்சியாகவே போய்விட்டது. அம்மாவின் ஊடலும் அதைத் தொடர்ந்து அப்பா அம்மாவைச் சமாதானப் படுத்துவதும் தொடரும். அம்மாவின் பலவீனம் என்ன என்பதை அப்பா நன்கு அறிந்து வைத்திருந்தார்.
‘வாலைக் குமரியடி - கண்ணம்மா மருவக் காதல் கொண்டேன்..!’
சமையல் செய்து கொண்டிருக்கும் அம்மாவின் முதுகுப் பக்கம் சென்று அவளது தோள்பட்டையில் நாடிபுதைத்து காதுக்குள் மெதுவாக அப்பா கிசுகிசுக்க, தேன் குடித்த வண்டு போல அம்மா சமையலையும் மறந்து அப்படியே உறைந்து போவாள். இப்படிப் பல தடவைகள் அப்பாவின் பாடலைக் கேட்டுத் மெய்மறந்து அவள் உறைந்து போய் நின்றதை நான் பார்த்து எனக்குள் வியந்திருக்கிறேன். அப்பாவைப்போல அம்மாவிற்குத் தனது அன்பை வெளிப்படையாகக் காட்டத் தெரியாதோ என்றும் சில சமயங்களில் நான் நினைப்பதுண்டு. ஆனால் இறுதியில் தணிந்து, பணிந்து போவது எப்பொழுதும் பெண்மையாகத் தானிருக்கும்.
‘ஏனம்மா எப்ப பார்த்தாலும் அப்பாவைத் திட்டிக் கொண்டே இருக்கிறாய்?’
‘அது என்னோட சுபாவமடி, உன்னையும்தான் தினமும் திட்டிறேன், அதற்காக உன்மேல எனக்கு பாசமில்லை என்று அர்த்தமா?’
அம்மாவின் அப்பாவித்தனமான இந்தப் பதில் என்னைச் சிந்திக்க வைத்தது. எங்கேயாவது இருவரும் வெளியே சென்றால் அம்மாவைப் பார்த்து என்னுடைய அக்காவா என்றுகூட சிலர் கேட்டிருக்கிறார்கள். தோளுக்கு மேல் வளர்ந்தால் தோழி என்பதுபோல அம்மா ஒரு நெருங்கிய தோழி போலத்தான் என்னோடு பழகினாள். அம்மாவின் பாசம் ஆழமானது, வெளியே காட்டிக் கொள்ளாமல் மனசுக்குள் பூட்டிவைக்கும் அன்பு! பொசுக்கென்று வெடித்துவிடும் பலூன் போல, கண்களில் நீர் துளிர்க்கும் போது பளீச்சென்று மின்னலாய்த் தெறிக்கும் அந்த அன்பு!
அப்பா மேல் அம்மாவிற்கு மதிப்பும், மரியாதையும், பாசமும் இருந்தது மட்டுமல்ல அவர்மீது ஒருவித மயக்கமும் இருந்தது. அப்பா என்ன சொன்னாலும், அவர் தான் தனது உலகமென்று தலையாட்டும் பொம்மை போல சரியோ பிழையோ அவர் சொல்லைத்தட்டாது நடந்து கொள்வாள். 'அப்பாவின் கண்ணம்மா' என்றுதான் நான் அம்மாவை எப்பொழுதும் செல்லமாக அழைப்பேன். அப்பாவுக்கு ஏதாவது நடந்தால் அதை அம்மாவால் தாங்கிக் கொள்ள முடியுமா என்றுகூட நான் சிலசமயங்களில் நினைத்துப் பார்த்திருக்கிறேன்.
எதிர்பாராத விதமாக நடக்கக் கூடாத சோகசம்பவம் அன்று நடந்து விட்டது. பற்றிப் படர்ந்த மரமே பட்டுப்போனால் பாவம் அந்தக் கொடி என்ன செய்யும்? முதல் ஒரு வாரம் அப்பாவின் படத்திற்கு முன்னால் சுவரோடு சாய்ந்து உட்கார்ந்து கொண்டு துக்கம் தாளமுடியாமல் அம்மா அழுது புலம்பிக் கொண்டிருந்தாள். அப்புறம் தன்னைத் தானே கட்டுப் படுத்திக் கொண்டாள். பிரிவு என்பது உடலுக்குத்தான், ஆத்மாவிற்கு அல்ல என்ற ஆத்மீகத் தத்துவத்தை அப்பாவிடம் இருந்து அம்மா கற்றுக் கொண்டிருக்கலாம். ஏனோ தெரியாது அதன் பிறகு அம்மா மனதுக்குள் அழுதாளோ, அல்லது இரவு நேரங்களில் எனக்குத் தெரியாமல் தலையணைகளை நனைத்தாளோ தெரியாது, ஆனால் பெரிதாகக் கத்திக் குழறி அழவுமில்லை, எனக்கு முன்னால் தன் சோகத்தைக் காட்டிக் கொள்ளவுமில்லை.
குட்டிபோட்ட பூனைபோல அம்மா என்னைச் சுற்றிச் சுற்றி வரும்போது எதையோ மனதுக்குள் வைத்துக் குமைந்து கொண்டு வெளியே சொல்லமுடியாமல் சங்கடப்படுவதும், எதையோ என்னிடம் சொல்லத் துடிப்பதும் எனக்குப் புரிந்தது. அவளே சொல்லட்டும் என்று காத்திருந்து பொறுக்க முடியாமல் போகவே அம்மாவிடம் கேட்டேன்.
‘ஏனம்மா கொஞ்ச நாளாய் ஒரு மாதிரியாய் இருக்கிறாய்?’
‘என்னுடைய மனசுக்குள்ளே அந்தக் குற்ற உணர்வு குடைஞ்சு கொண்டே இருக்குடி பாரதி!’
;ஏனம்மா, அப்படி மனம் வருந்துமளவிற்கு என்ன பெரிதாய் தப்புச் செய்திட்டாய், என்னவென்று என்னிடமாவது சொல்லேன்?’
‘எப்படி உன்கிட்ட சொல்றது என்றுதான் எனக்குத் தயக்கமாய் இருக்கு!’
‘பரவாயில்லை, வேறுயார்கிட்ட சொல்ல முடியும்? என் கிட்டதானே, சொன்னா உனக்கு கொஞ்சம் மனசுக்கு ஆறுதலாய் இருக்குமேம்மா’
அம்மா கொஞ்ச நேரம் தயங்கினாள். எப்படித் தொடங்குவது என்றோ அல்லது தனது அந்தரங்கத்தை மகளுடன் எப்படிப் பகிர்ந்து கொள்ளவது என்றோ நினைத்திருக்கலாம்.
‘வந்து.., அன்று அப்பா எங்களை விட்டுப் பிரிவதற்கு முதல் நாள் இரவு நான் ஒரு தப்புப்பண்ணிட்டேன்!’
‘தப்பா? என்னம்மா சொல்லுறீங்க?’
‘ஆமா..!, படுக்கையிலே என்னை அவர் ஆசையோடு அணைக்க வந்தார், நான் கொஞ்சம் பிகு பண்ணிவிட்டேன். ‘வயசுப் பெண்ணை வைத்துக் கொண்டு இப்போ இதெல்லாம் தேவையா?’ என்று நான் வீம்போடு விலகிப் போய்விட்டேன். அவருக்கு ஏமாற்றமாய்ப் போய்விட்டது. அதன்பிறகு அவர் மறுபக்கம் திரும்பிப் படுத்திட்டார், என்கூடப் பேசவுமில்லை, ஊடல்தானே காலையில் சரியாப்போயிடும் என்று நினைச்சு நானும் பேசாமல் இருந்திட்டேன். திடீரென்று இப்படியாகுமென்று எனக்குத் தெரியுமா? அதை நினைச்சா எனக்கு இப்பவும் ஒரே குற்ற உணர்வாய் இருக்கு. மனைவியாய் இருந்தும் அவருடைய கடைசி ஆசையைக் கூட நிறைவேற்ற முடியாத பாவியாய்ப் போய்விட்டேனடி நான்..!’ ஒரு தோழியிடம் தன் குறையைச் சொல்வது போல என்னிடம் சொல்லி விம்மத் தொடங்கினாள் அம்மா.
‘என்னம்மா வேண்டும் என்றா இப்படிச்செய்தாய், யார் எதிர்பார்த்தா இப்படி எல்லாம் நடக்குமென்று, தற்செயலாக நடந்ததுதானே, உன்மேல தப்பேயில்லையம்மா, அதுதான் விதி என்றால் மாற்றமுடியுமா!’
‘நான் பாவியடி..! அவர் என்கிட்ட தானே கேட்டார். புருஷன் என்ற உரிமையோடுதானே என்னிடம் கேட்டார், நான் அப்படி எல்லாம் பிடிவாதம் பிடித்திருக்கக் கூடாதோ..!’ தலையில் அடித்துக் கொண்டே ஒரு குழந்தைபோல என்தோளில் முகம் புதைத்துத் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள்.
‘இப்படி எல்லாம் நடக்கும் என்று நீ நினைச்சியா அம்மா? நம்ம விதி அவ்வளவுதான், வேறு என்ன செய்ய முடியம்?’ அம்மாவை அணைத்துக் கொண்டு சமாதானம் சொன்னேன்.
அவருடைய படத்தைப் பார்க்கும் போதெல்லாம் அவர் என்னுடைய காதுக்குள்ளே ‘வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா..!’ என்று குற்றம் சாட்டுவது போல எனக்குள் ஒரே பிரமையாய் இருக்குதடி பாரதீ, அவரைக் கைபிடிக்கும்போது அக்கினி சாட்சியாய் இன்பத்திலும் துன்பத்திலும் அவருக்குத் துணையாய் இருப்பேன் என்றுதானே கைப்பிடித்தேன், நானொரு பைத்தியம், அவரை அப்படி அலட்சியப் படுத்தி நிவர்த்தி செய்முடியாத தப்புப் பண்ணிட்டேனே என்று என்னுடைய மனச்சாட்சி எப்பொழுதும் என்னைக் குத்திக் காட்டிக் கொண்டிருக்குதே, நான் என்ன செய்ய..?’ விசும்பல் விம்மலாக மாற அம்மா கத்தி அழத்தொடங்கினாள்.
‘அழட்டும்! நெஞ்சில் உள்ள பாரத்தைக் கொட்டித் தீர்க்கும்வரை அழட்டும்!’ என்று சிறிது நேரம் அம்மாவின் தலையை மெல்ல வருடி விட்டபடி காத்திருந்தேன். முடிந்தவரை அம்மாவிற்கு ஆறுதல் சொல்லிச் சமாதானப் படுத்தினேன். ஒரு மனநோயாளிபோல, பெற்ற மகளிடமே தன் அந்தரங்கத்தைச் சொல்லி அழுது தீர்க்கும் அளவிற்கு அம்மாவின் நிலை தாழ்ந்து விட்டதே என்பதை நினைத்த போது என்னையும் மீறி என் கண்கள் பனித்தன.
குடும்ப பொருளாதார நிலையை உத்தேசித்து நான் படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குப் போகத் தீர்மானித்தேன். அம்மாவிடம் எனது முடிவைச் சொன்ன போது அம்மா அதை முற்றாக மறுத்துவிட்டாள்.
'வேலைக்குப் போனால் என்ன? வேண்டாம் என்று ஏன் தடுக்கிறீங்க?'
'வேலைக்கு அப்புறம் போகலாம், அதற்கு முன் படிப்பை முடிக்கணும், அப்பாவோட விருப்பமும் அதுதான்!'
'அப்பாவின் விருப்பமா? அவர் உங்ககிட்ட சொன்னாராம்மா?'
'இல்லை, எழுதியேவெச்சிருக்கிறார்.'
'எழுதியா..? எங்கே?'
'இந்தா இதைப் படித்துப் பார்!'
அம்மா கொடுத்த கட்டுப் பேப்பரைப் படித்துப் பார்த்தேன். அது பரணில் இருந்து எடுத்த அப்பா எழுதிய சிறுகதை ஒன்று. அதிலே வரும் கதாநாயகி நிறையப் படித்தவளாகவும், கிணற்றுத் தவளைபோல இருக்காமல் வெளியுலக அனுபவங்களை நிறையப் பெறற்றவளாகவும் இருந்தாள், பாரதியின் புதுமைப் பெண்ணைப் போல பெண்கள் இருக்க வேண்டும் என்பதை அப்பா அதிலே வலியுறுத்தியிருந்தார். அதனால் தான் அம்மா என்னை தற்சமயம் வேலைக்குப் போக வேண்டாம் என்றும், தொடர்ந்து படிக்கச் சொல்லியும் என்னை வற்புறுத்துகிறாள் என்பதையும் புரிந்து கொண்டேன்.
அப்பாவின் எழுத்துக்களைத் தாரக மந்திரமாக ஏற்று அதையே அம்மா பின்பற்றுகிறாள் என்பதை இன்னுமொரு சந்தர்ப்பத்திலும் என்னால் உணரமுடிந்தது.
திடீரென ஒரு நாள் அம்மா நெற்றியிலே பொட்டு வைத்து, பூ வைத்து, வண்ணச் சேலை கட்டியிருந்தாள். அம்மாவிற்கு என்ன நடந்தது என்று தெரியாமல் நான் மலைத்துப் போய்விட்டேன். அவளுடைய கடந்த கால நடவடிக்கைகளைப் பார்க்க ஒருவேளை மனநோயால் பாதிக்கப் பட்டிருக்கிறாளோ என்று கூட எண்ணத் தோன்றியது.
என்னுடைய மனதைப் படித்தவள்போல அவளே வேறு ஒரு கட்டுப் பேப்பரைக் கொண்டுவந்து படித்துப் பார் என்று கொடுத்தாள். அப்பாவின் கையெழுத்துப் பிரதி. இதுவும் பரணில் இருந்து அம்மாவால் கிண்டி எடுக்கப் பட்டதாய்த்தான் இருக்கவேண்டும். அதை ஆர்வத்தோடு படித்துப் பார்த்தேன். அதிலே ஓரிடத்தில் 'மனைவி இறந்தால் கணவன் எதையும் துறப்பதில்லை, கணவன் இறந்தால் மட்டும் ஏன் மனைவி மட்டும் எல்லாவற்றையும் துறக்கணும்? ஏன் இந்தப் பாரபட்சம், வேண்டாம் இந்த அநீதி!' என்று அப்பா எழுதியிருந்தார்.
திடீரென அப்பாவின் எழுத்துக்கள் ஒவ்வொன்றாக அம்மாவின் உருவத்தில் உயிர் பெற்று நிற்பதைப் பார்க்க எனக்கே வியப்பாக இருந்தது. ஒருவேளை அப்பா எதிர்பார்த்த புதுமைப் பெண்ணாக அம்மா மாறிக் கொண்டிருக்கிறாளோ?
அப்பாவை ஒரு ஆசிரியராகத்தான் இதுவரை நான் தெரிந்து வைத்திருந்தேன். அவரை ஒரு சிறந்த எழுத்தாளனாக நான் கற்பனை செய்துகூடப் பார்த்ததில்லை! அப்பாவிடம் இவ்வளவு திறமையும் கெட்டித்தனமும் இருந்ததா என்பதை நினைத்துப் பார்க்க எனக்கே புல்லரித்தது. நடமாடும் பல்கலைக் கழகம் என்று அவரது நண்பர்கள் மேடையில் அடிக்கடி அவரைப் புகழ்ந்ததன் அர்த்தம் இப்போது தான் எனக்குப் புரிந்தது.
காலமும் நேரமும் வந்தால் எல்லாம் கனிந்து வரும் என்பது போல, இதுவரை காலமும் திரும்பியே பார்க்காமல் அசட்டை செய்த பிரசுரதாரர்கள் எல்லாம், அப்பாவின் நாவல் ஒன்றுக்கு அரசவிருது கிடைத்ததும் வீடு தேடி வரத்தொடங்கினார்கள். அப்பாவின் ஆக்கங்களுக்கு அவர்கள் போட்டி போட்டு கொண்டு முற்பணம் கொடுக்க முன் வந்தார்கள். அம்மா தினமும் அவர்களுக்காகத்தான் ஸ்டூல் வைத்து ஏறிநின்று பரணில் புதையல் தேடுகிறாளோ என்று நான் முதலில் நம்பினேன். ஆனால் உண்மையிலேயே அப்பாவின் எழுத்துக்களில் அம்மாவிற்கு இருந்த ஆர்வமிகுதியாலும், ஈடுபாட்டாலும் தான் அம்மா அவற்றைத் தேடித்தேடி படிக்கிறாள் என்பதை விரைவில் நான் புரிந்து கொண்டேன். அப்பா விட்டுச் சென்ற நினைவுச் சின்னங்கள் ஒவ்வொன்றிலும் அவள் தன்னையும் ஐக்கியமாக்கி அதன் மூலம் தன்னைத்தானே மானசீகமாய் திருப்திப் படுத்திக் கொண்டிருந்தாள்.
அப்பாவின் எழுத்துக்களை எப்படியாவது காசாக்கி விடவேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் மெல்லத் தலை தூக்கியிருந்தது. காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டுமென்பதால், அம்மா வெளியே செல்லும் சமயங்களில் நானும் ஸ்டூலை வைத்துப் பரனில் புதையல் தேடத் தொடங்கினேன். அப்படிக் கிண்டிய பொழுதுதான் அப்பா எழுதிய அந்தக் கதை எனக்குக் கிடைத்தது. அதிலே கணவனை இழந்த ஒரு இளம் பெண், மறுமணம் செய்து புதுவாழ்வை ஆரம்பிப்பதாக அப்பா எழுதியிருந்தார்.
அந்தக் கதையைப் படித்து விட்டு என்ன செய்வது என்று நான் சிறிது நேரம் யோசித்துப் பார்த்தேன். அப்பாவின் எழுத்துக்கள் எல்லாம் இப்போ அம்மாவிற்கு வேதவாக்குகளாய்த் தெரிகின்றன. குழம்பிய மனநிலையில் இருக்கும் அம்மாவின் கையில் அப்பாவின் இந்தக் கதை கிடைத்தால் என்ன நடக்கும் என்பதையும் நினைத்துப் பார்த்தேன். வேண்டாம், அப்பாவின் இந்தக் கதையை அம்மா படிக்கக் கூடாது. புது வாழ்வு என்ற போர்வைக்குள் அவளுடைய கனவுகள், சந்தோஷங்கள் எல்லாம் கலைந்து நிர்மூலமாகக் கூடாது.
‘அம்மா இது ஊருக்கு உபதேசமாய் இருக்கலாம் ஆனால் உனக்கு மட்டும் இந்த உபதேசம் வேண்டாம். ஏனென்றால் அப்பாதான் உலகம் என்று ஒரு குழந்தை மனதோடு இதுவரை நீ வாழ்ந்து விட்டாய், இன்றும் அப்பாவின் அந்தப் பசுமையான இனிய நினைவுகளோடு தான் நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய், உன்னை வேறு யாராயும் என்னால் நினைத்துக் கூடப்பார்க்க முடியாது. அதனாலே அப்பாவின் கண்ணம்மா வாகவே நீ என்றென்றும் இருந்துவிடு!’
அம்மாவைப் பற்றி நான் எடுத்த முடிவு சுயநலமானதா, சரியானதா என்ற கவலை அவ்வப்போது என்னை வாட்டிக் கொண்டே இருக்கிறது. ஏன் அந்த முடிவை எடுத்தேன் என்று எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. எனக்கு மட்டுமே அவள் தாயாக இருக்கவேண்டும் என்ற சுயநல எண்ணம் ஒருவேளை என் அடிமனதில் இருந்ததோ தெரியவில்லை!

(தமிழகத்து எழுத்தாளர் கந்தர்வன் நினைவுச் சிறுகதைப் போட்டியில் சிறப்புப் பரிசு பெற்ற சிறுகதை. – ஆசிரியர்.)

காவி அணியாத புத்தன். - - குரு அரவிந்தன்

காவி அணியாத புத்தன். (குரு அரவிந்தன்)

Kaavi Aniyatha Puthan

கடந்த இரண்டு நாட்களாக அவன் என் பார்வையில் பட்டுக்கொண்டே இருக்கிறான். எதேச்சையாக யன்னலுக்கால் பார்வையைப் படரவிட்டபோது, அவன் வாசலில் உட்கார்ந்திருப்பது தெரிந்தது. கலைந்த முடியும், நாலுமுழ வேட்டியும் சட்டையுமாய் ஏதோ ஒன்றுக்கான எதிர்பார்ப்போடு இருக்கிறான் என்பது மட்டும் புரிந்தது.
‘யாரப்பா அது தினமும் வந்து வாசல்ல உட்கார்ந்திருக்கிறது.?’ உதவியாளனிடம் வினாவினேன்.
‘உங்களைச் சந்திக்கணும் என்று அடம் பிடிக்கிறான் சார்’ என்றான்.
‘என்னையா, ஏனாம்;?’
‘தெரியல்லை, லட்சுமி, லட்சுமி என்று சொல்லி ஒரேயடியாய் ஒப்பாரி வேறு வைக்கிறான்’
‘என்ன நடந்ததாம்..?’ ஆர்வ மிகுதியால் அவனிடமே விசாரித்தேன்.
‘என்கிட்ட சொல்ல மாட்டேன் என்கிறான். என்ர கால் போனாலும் பரவாயில்லை உன்ர கால் போயிடிச்சே லட்சுமி என்று முனகிக்கொண்டு தலையில் அடிச்சுக்கிறான்.’
‘ஓ குடும்ப விவகாரமா?’
‘வீடு பார்க்கப்போறேன், காணி பார்க்கப்போறேன் என்று போய்த் தெரியாமல் கண்ணி வெடியில எங்கேயாவது காலை வைச்சிருப்பா, அதிலை அகப்பட்டு கால் போச்சுதோ தெரியலை..!’ தனது சந்தேகத்தை அவன் வெளியிட்டான்.
மனசு வேதனைப்பட்டது, எவ்வளவு சாதாரணமாய் சொல்லிவிட்டான். அமைதியாய் இருந்த இந்தமண், யுத்த பூமியாய்மாறியதேன்? தினந்தினம் இப்படியான சம்பவங்கள் நடந்ததால் அப்பாவி மக்களின் இழப்புக்கள் எல்லாம் இவர்களுக்கு சாதாரணமாய் போய்விட்டனவோ? மழைவிட்டும் தூவானம் விடவில்லை என்பதுபோல, உயிர் இழப்புக்கள்கூட கவனத்தில் கொள்ளப்படாமல், மனித உயிர்கள் மதிப்பற்றுப் போய்விடுமோ? மனிதநேயம் என்பதன் அர்த்தமே இவ்வுலகில் யாருக்குமே புரியாமல் போய்விடுமோ?
தினமும் இப்படிக் கண்ணி வெடியில் அகப்பட்டுக் காலை இழப்பவர்களில்;, அதிகமானவர்கள் குழந்தைகளாயும், பெண்களாயும்தான் இருக்கிறார்கள். கணக்கிட முடியாத அளவிற்கு இப்படிப் பலர் ஊனமடைந்திருக்கிறார்கள். ஒரு பெண் ஒற்றைக் காலோடு, தடி ஊன்றி, இடுப்பிலே ஒரு கைக்குழந்தையைச் சுமக்க முடியாமல் சுமந்து கொண்டு..! பார்த்ததும் பதறிப்போனேன்! செல் வந்து இவர்கள் வீட்டு முற்றத்திலே நின்ற பனைமரத்தில் பட்டு வெடித்துச் சிதறியபோது அங்கே நின்ற கணவன் அந்த இடத்திலேயே இறந்துபோனானாம். இவள் ஒற்றைக் காலை இழந்து, குழந்தைக்காக உயிரைக் கையிலே பிடித்துக் கொண்டு வாழவேண்டிய பரிதாபநிலை! எந்த ஒரு வருமானமும் இல்லாத, நாதியற்ற அவளது கண்ணீர்க் கதையைக் கேட்டதும் என்னை அறியாமலே எனது கண்கள் பனித்தன.
பாவம் இந்தப் பெண்யாய்ப்; பிறந்தவர்கள்! குடும்பத்தில் யாருக்கு என்ன நடந்தாலும் இறுதியில் பாசம் என்ற வலையில் சிக்கி, உளரீதியாகவும், உடல்ரீதியாகவும், தாயாய், மனைவியாய், மகளாய், தோழியாய் எங்கேயும், எப்போதும் அனேகமாய் பாதிக்கப்படுவர்கள் இந்தப் பெண்களாய்த்தானே இருக்கிறார்கள்!
கால் இழந்தவர்களுக்கு பொய்க்கால் கட்டும் இந்த ஜெயப்பூர் கிளை நிறுவனத்தின் பொறுப்பதிகாரியாக சென்ற வருடம்தான்; நான் பொறுப்பை ஏற்றிருந்தேன். நான் பொறுப்பெடுத்த நேரமோ, அல்லது யுத்தத்தின் அகோரமோ, கொஞ்ச நாட்களாக பொய்க்கால் கட்ட வந்தவர்களாலும், அதற்குரிய பயிற்சி எடுக்க வந்தவர்களாலும் ஒரு வைத்தியசாலைபோல் இந்த இடம் நிரம்பி வழியத் தொடங்கிவிட்டது.
இராணுவம் ஆக்கிரமிப்பு செய்த பிரதேசங்களில் தமிழ்மக்கள் மீளக் குடியேறியபோது இராணுவத்தால் தங்கள் பாதுகாப்பிற்காகப் புதைத்து வைக்கப்பட்ட பீ4 அன்ரி பார்ஷனல் கண்ணி வெடிகளும், முகாங்களில் இருந்து அவ்வப்போது மக்கள் குடியிருப்புகள் மீது ஏவப்பட்ட செல்களும்தான் இதற்கெல்லாம் காரணம் என்று எல்லோருக்கும் தெரியும். கண்ணி வெடிகள் எங்கே எந்த மூலையில் புதைத்து வைத்திருக்கிறார்கள் என்று தெரியாமல் அப்பாவி மக்கள், நடந்து போகும்போது தவறுதலாக அதன்மேல் கால்வைக்க, அவை வெடித்துச் சிதறி அவர்களைத் தினமும் பலி எடுத்துக் கொண்டே இருந்தன. இராணுவம் வெளியேறிய பகுதிகளில் புதைக்கப் பட்டிருந்த இந்தக் கண்ணி வெடிகள் இன, மத வேறுபாடின்றி அப்பாவி மக்களின் உயிரைத் தினமும் பலி எடுத்துக் கொண்டே இருந்தன. நாகரிகமடைந்த எந்த ஒரு நாடும் இதுபோன்ற அநாகரிகமான, மனிதாபிமானமற்ற செயல்களில் ஈடுபட்டு, இதுபோன்ற கண்ணிவெடிப் பிசாசுகளை நிலத்தில் புதைத்து வைத்து அப்பாவி பொதுமக்களின் உயிரைப் பலி எடுப்பதில்லை.
விவசாயிகள் தங்கள் சொந்த நிலத்தில் மீளக் குடியேறியபோது பச்சைப் பசேலென்று கதிர்விளைந்திருந்த நிலங்கள் எல்லாம் உயிர் குடிக்கும் கண்ணி வெடிகளாய் விளைந்திருந்ததைப் பார்த்ததும் பயந்து போனார்கள். அதைப் பயிரிட்ட இராணுவமோ ஆக்கிரமிப்பு நிலத்தில் இருந்து, அப்பகுதியில் காலாகாலமாய் வாழ்ந்த பொதுமக்களின் ஜனநாயகரீதியான தொடர் போராட்டத்தால், அவர்களின் எதிர்ப்பைத் தாங்கமுடியாமல் பின் வாங்கிப் போயிருந்தது.
கண்ணி வெடிகளில் அகப்பட்டு காலை இழந்தவர்களுக்கு இந்த நிறுவனம் அவர்களுக்குத் தேவையான பொய்க் கால்களைத் தயாரித்து அவர்கள் அந்தப் பொய்கால்களின் உதவியுடன் நடப்பதற்கு வேண்டிய எல்லாப் பயிற்சிகளையும் கொடுத்து வந்தது. இதை எப்படியோ கேள்விப்பட்ட கந்தசாமியும் தினமும் அங்கே வந்து அதற்குப் பொறுப்பானவர்களைச் சந்திப்தற்காகக் காத்திருந்தான்.
அவனை உள்ளே அழைத்து வரும்படி உதவியாளனிடம் செல்லவே, அவன் வெளியே சென்று கந்தசாமியை அழைத்து வந்தான்.
எனக்கு எதிரே வந்து நிற்பது, சூதுவாது அற்ற ஒரு அப்பாவி கிராமத்து விவசாயி என்பது அவனது நடையுடை பாவனையிலிருந்து என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அவனது முகத்தில் மட்டும் எதையோ இழந்துவிட்ட சோகம் குடியிருந்தது.
‘என்னப்பா, இங்கே எதுக்கு வந்தே..?’ அவனிடம் மெல்ல வினாவினேன்.
‘இங்கே வந்தால் பொய்க்கால் பொருத்தலாம் என்று சொன்னாங்க, அதுதான் உங்ககிட்ட உதவிகேட்டு வந்தேனுங்க.’ பெரிய எதிர்பார்ப்போடு வந்திருக்கிறான் என்பது அவனது பேச்சிலிருந்து புரிந்தது.
‘யார் இதைப்பற்றிச் சொன்னாங்க..?’
‘நம்ம கிராமத்துப் பையன் சின்னராசுதான் சொன்னான். இப்படித்தான் ஒருநாள், செல் வந்து எங்க கிராமத்திலே விழுந்து வெடிச்சபோது அவனுக்கும் ஒருகால் போயிடிச்சுதுங்க. இங்கே வந்து பொய்க்கால் பெருத்தி இப்போ மெல்ல மெல்ல நடக்கிறானுங்க, சீக்கிரம் சைக்கிள்கூட ஓட்டப்போறேன்னு ரொம்ப உஷாராய்ச் சொன்னானுங்க!’
‘அப்படியா? முயற்சி செய்தால் முடியாதென்று ஒன்றுமே இல்லையப்பா! ஒவ்வொருவருடைய பயிற்சியையும், மனோபலத்தையும் பொறுத்தது. ஆமா,இதற்கு நிறைய செலவாகுமே..?’
‘பரவாயில்லைங்க, பணத்தைவிட எனக்கு இது..?’
‘உன்னோட ஆதங்கம் புரியுதப்பா!. பணம் பெரிசில்லையா?’
‘அன்னிக்கு லட்சுமி காலை வைக்காட்டி, பின்னாலே வந்த என்னுடைய கால் அல்லவா போயிருக்கும். மற்றவங்க லட்சுமியைப் பார்த்து ‘நொண்டி’ என்று பழிக்கும்போது என்னையே பார்த்துப் பழிப்பதுபோல எனக்குள்ளே ஒருவித காழ்ப்புணர்வு ஏற்படுதுங்க. என்ன செலவானாலும் இந்தக் குறையை எப்படியாவது நீங்கதான் நிவர்த்தி செய்யணும். மற்றவங்க துணையில்லாமல் மெல்ல மெல்ல நடந்தாலே போதுமுங்க.’ பவ்வியமாய் என்னிடம் சொன்னான்.
‘உன்னோட மனநிலை எனக்குப் புரியுது கந்தசாமி. அப்படின்னா வேலையை உடனே தொடங்க வேண்டியதுதான்!’ என்றேன்.
‘வந்து.. பணம்..?’
‘பணத்திற்கு இப்ப ஒண்னும் அவசரமில்லை. பொய்க்கால் பொருந்துமா இல்லையா என்று காலைப் பரிசோதித்து பார்த்துத்தான் சொல்லமுடியும். எங்கே லட்சுமி? உள்ளே அழைச்சிட்டுவாப்பா!’ என்றேன்.
கந்தசாமி தயங்கினான்.
‘நீங்கதான் மனசு வைச்சு கொஞ்சம் வெளியே வந்து பார்க்கணும்!’
நடக்கவே முடியாத அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டிருக்குமோ?
‘சரி, நானே வந்து பார்க்கிறேன்.’ என்று சொல்லி அவனுடன் வெளியே சென்றேன்.
‘வண்டி என்றானே, ஆட்டோவில் வந்திருப்பானோ?’ என்று என் கண்கள் ஆட்டோவைத் தேடின. ஓரு ராக்ரர் வண்டியும் அதனோடு இணைக்கப்பட்ட ரெயிலர்பெட்டியையும் தவிர வேறு எந்த வண்டியும் வெளியே இல்லை.
‘எங்கேப்பா வண்டி?’
கந்தசாமி என்னை அழைத்துச் சென்று ரெயிலர் பெட்டியைக் காண்பித்தான். உள்ளே பசுமாடு ஒன்று தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு படுத்திருந்தது.
‘ல..ட்சு..மி…?’ ஏமாற்த்தோடு கேட்டேன்.
‘இதுதாங்க லட்சுமி, இதுக்குத்தாங்க கால் போயிடிச்சு’ என்று சொல்லி லட்சுமியை அன்போடு தடவிக் கொடுத்தான்.
லட்சுமி மூன்று காலில் எழுந்து நிற்க முயற்ச்சி செய்து, முடியாமல் போகவே வேதனையோடு முனகிக் கொண்டு மீண்டும் படுத்துக் கொண்டது.
எனக்கு எல்லாமே புரிந்துபோயிற்று. பணச்செலவை நினைத்து மனிதருக்கே பொய்க்கால் கட்டத் தயங்கும் இந்தக் காலத்தில,; தான் வளர்த்த பசுவிற்குப் பொய்க்கால் கட்டி அதை நடமாடச் செய்வதில் அவனுக்கு உள்ள அக்கறையை நினைத்து வியப்படைந்தேன். மனிதர்களால் இங்கே வந்து தங்கள் குறைகளைச் சொல்லி அழமுடியும், ஆனால் இந்த வாயில்லா ஜீவன்களால் சொல்லி அழமுடியுமா?
ஜீவகாருண்ய சிந்தனை உள்ள இவர்களைப் போன்றவர்களுக்குக் கட்டாயம் உதவி செய்ய வேண்டும் என்று உடனேயே எனக்குள் முடிவெடுத்துக் கொண்டேன். ஊனமடைந்த ஆடு மாடுகளைக் கசாப்புக் கடைக்குத் தள்ளிவிடுபவர்களைப் போலல்லாது வித்தியாசமானவனாய், அவைகளையும் வாழவைக்க வேண்டுமென்ற இரக்கமுள்ளவனாய் இவனிருந்தான்.
என் உதவியாளனை உடனேயே அழைத்து லட்சுமியின் கால்களை அளவெடுக்கச் சொன்னேன். இதுவரை காலமும் மனிதரின் கால்களையே அளவெடுத்துப் பழக்கப்பட்ட அவன், என்னை ஒரு கணம் வினோதமாகப் பார்த்துவிட்டு, தயக்கத்தோடு ஏதோ முணுமுணுத்தபடி லட்சுமியின் காலின் அளவுகளை எடுத்தான்.
‘இந்தாளுக்கு என்ன பைத்தியமா?’ என்று அவன் மனதுக்குள் என்னைத் திட்டியிருக்கலாம். யார் என்ன சொன்னாலும் லட்சுமிக்குப் பொய்க்கால் கட்டியே தீருவது என்று உடனேயே நான் முடிவும் எடுத்துக் கொண்டேன்.
‘பணம்..?’ என்று கந்தசாமி மீண்டும் தயங்கினான்.
‘வேண்டாமப்பா, பணம் வேண்டாம். அன்பு, பாசம், நேசம், கருணை இவை எல்லாவற்றுக்கும் முன்னால் பணத்திற்குப் பெறுமதியே இல்லையப்பா. எப்படியும் லட்சுமியை நடக்க வைத்துக் காட்டுவது என்னுடைய பொறுப்பு!’ என்று சொல்லிப் பெருமிதம் பொங்க அவன் தோளில் தட்டிக் கொடுத்தேன்.
‘லட்சுமிக்கு நல்ல மனசுங்க, மனிசனுக்கு மனிசன் வெச்ச பொறியில தானே லட்சுமி அகப்பட்டுதுங்க, பாவம் வாயில்லாத ஜீவனே தவிர என்ன சொன்னாலும் புரியுமுங்க, மனிசனைவிட ரொம்ப உசத்தி!’
லட்சுமியைப் புகழ்ந்து பெருமைப்பட்டுக் கொண்டே அதன் கன்னத்தை இரண்டு கைகளாலும் ஆசையோடு தடவி நெற்றியில் முத்தம் கொடுக்க, லட்சுமி செவிகளை விரித்து கண்களை மூடி உடம்பு சிலிர்க்க வெட்கப்பட்டது.
அன்பு, பாசம், மனிதநேயம், ஜீவகாருண்யம், இவையெல்லாம் இன்னும் இந்த மண்ணில் அழிந்து விடவில்லை, எங்கேயோ, எப்படியோ ஏதோ உருவத்தில் நிலைத்திருக்கிறது என்ற நல்ல செய்தி அந்த அப்பாவிக் கிராமத்தவனின் கண்களிலும், செய்கையிலும் பளீச்சென்று தெரிந்தது!

Sunday, August 29, 2010

Poem: To My Child

TO MY CHILD
Just for this morning, I am going to
smile when I see your face and laugh
when I feel like crying.

Just for this morning, I will let you
choose what you want to wear,
and smile and say how perfect it is.
Just for this morning, I am going to step
over the laundry and pick you up and take you to
the park to play.

Just for this morning, I will leave the
dishes in the sink, and let you teach me how to put
that puzzle of yours together.

Just for this afternoon, I will unplug
the telephone and keep the computer off, and sit with
you in the backyard and blow bubbles.
Just for this afternoon, I will not yell
once, not even a tiny grumble when you scream and
whine for the ice cream truck, and I will buy you one
if he comes by.

Just for this afternoon, I won't worry
about what you are going to be when you grow up, or
second guess every decision I have made where you are
concerned.

Just for this afternoon, I will let you
help me bake cookies, and I won't stand over you
trying to fix them.
Just for this afternoon, I will take us
to McDonald's and buy us both a Happy Meal so you can
have both toys.....

Just for this evening, I will hold you in
my arms and tell you a story about how you were
born and how much I love you.
Just for this evening, I will let you
splash in the tub and not get angry.
Just for this evening, I will let you
stay up late while we sit on the porch and count all the stars.
Just for this evening, I will snuggle
beside you for hours, and miss my favorite TV shows.
Just for this evening when I run my
finger through your hair as you pray, I will simply be
grateful that God has given me the greatest gift ever given.
I will think about the mothers and
fathers who are searching for their missing children, the
mothers and fathers who are visiting their children's
graves instead of their bedrooms. The mothers
and fathers who are in hospital rooms
watching their children suffer senselessly and screaming
inside that little body
And when I kiss you goodnight I will hold
you a little tighter, a little longer. It is then,
that I will thank God for you, and ask him for
nothing, except one more day......... ......

By: Anonymous

எழுத்தாளர் குரு அரவிந்த​ன் பக்கம்

வணக்கம்,


என் இனிய வாசகர்களே,

உங்கள் தன்நலம் அற்ற அன்புதான்
என்னைக் கலை இலக்கிய உலகில்
உயரப் பறக்கவைக்கிறது என்பதை
நினைக்க மகிழ்ச்சியாக‌ இருக்கிறது.

இன்றைய நாள் நன்நாளாக அமையட்டும்.


மீண்டும் ச​ந்திப்போம்அன்புடன்,


குரு அரவிந்த​ன்

'Coming together is a beginning
keeping together is progress
working together is success'

Kuru Aravinthan