Friday, October 29, 2010

Interview with Mr.P. Kanagasabapathy - நேர்காணல்

நேர்காணப்பட்டவர்:  மகாஜனாக் கல்லூரி முன்னாள் அதிபர்
                                          
                                  திரு. பொ. கனகசபாபதி.
                                    அகவை - 75
                  75 என்பது முதுமை அல்ல வாழ்வின் கனிவு‍
                                    கவிப்பேரரசு வைரமுத்து         


    
75th Birthday
    

                                                 
நேர்கண்டவர்:  எழுத்தாளர்
      குரு அரவிந்தன்.     


'மகாஜனக் கல்லூரியின் பொன்விழா, வைரவிழா, மட்டுமல்ல, நூற்றாண்டு விழாவினையும் கண்டவர் எங்கள்‍‍ அதிபர்.'

வணக்கம்,

எழுபத்தைந்தாவது (75) அகவையில் காலடி எடுத்து வைக்கும் தங்களுக்கு முதற்கண் எனது பணிவன்பான வணக்கம். ‘நடமாடும் பல்கலைக்கழகம்’ என்று கற்றறிந்தோரால் அன்போடு அழைக்கப்படும் தங்களின் கடந்தகால அனுபவங்களைத் தினக்குரல் பத்திரிகை வாசகர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். தொடக்கத்தில் இருந்தே ஆரம்பிக்கலாம் என நினைக்கிறேன்…

1-கேள்வி: ‘எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே’ என்று பாரதி பாடியது போல, நீங்கள் பிறந்து வளர்ந்த மண்ணான சண்டிலிப்பாய் பற்றியும், புகுந்த மண்ணான காங்கேசன்துறை பற்றியும் குறிப்பிட முடியுமா? அந்த மண்ணால் நீங்கள் பெருமை அடைந்தீர்களா, அல்லது உங்களால் அந்த மண் பெருமை அடைந்ததா?

பதில்: ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என எழுதிய கணியன் பூங்குன்றனுக்கே தனது ஊர் அபிமானம் விட்டபாடில்லை எனக் கலைஞர் கருணாநிதி ஒரு சமயம் வேடிக்கையாகச் சொன்னார்கள். கணியன் பூங்குன்றனுடைய இயற்பெயர் தெரியாது
ஆனால் இன்றும் நிலைத்து நிற்பது அவரது ஊர்ப் பெயரும் அவர் செய்த தொழில் பெயருமே.  ஆகவே எவருக்கும் நிலைத்து நிற்பவை ஒருவரது பிறந்த ஊரும் செய்த தொழிலுமே.
ஆகவே  நான் பிறந்து வளர்ந்த மண் என்றுமே என் வணக்கத்துக்குரியது. சண்டிலிப்பாய் போன்ற ஒரு தன்னிறைவான கிராமம் யாழ்ப்பாணத்தில் வேறு இடங்களில் காண்பது அரிது.
காங்கேசந்துறை நான் புகுந்த மண். என்னைத் தன் உயிரினும் மேலாக நேசித்த என் அன்பு மனைவியின் ஊர். அதை மறப்பேனா.. ?
கனடா வாழ் தமிழர் யாபேருக்கும்  அதிபர் என்றால் யாரைச் சுட்டும் என்பது தெரிந்த விசயம்..

2-கேள்வி: நான் பிறந்து வளர்ந்த ஊர்களும் அவைதான் என்பதில் எனக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இலங்கை, இந்தியா, நைஜீரியா, கனடா என்று உங்கள் கடந்தகால வாழ்க்கை அமைந்துவிட்டதே, இது எந்த வகையிலாவது உங்கள் இலட்சியக் கனவுகளைப் பாதித்ததா?

பதில்: உண்மையைச் சொல்வதானால் இலங்கையை விட்டு வெளியேறியது எனது இலட்சியக் கனவினைப் பாதித்து விட்டது என்றே கூறுவேன். எனக்குக் கல்வி அளித்து உயர்த்தியது இந்தியா. மாகாணத்தில் முதல் மாணவனாகத் தேறி தங்கப் பதக்கம் பெற்றது இந்தியாவில். இலங்கையில் எனது இளமைக் காலத்தில் இலக்கியத் தாகம் ஏற்படச் செய்தவை இந்திய சஞ்சிகைகளும் நாவல்களும். இந்தியாவில் போய் வாழ்ந்த ஐந்து வருடங்கள் எனது இலக்கிய தாகத்துக்கு தீனி போட்டது மாத்திரமல்லாமல் திராவிட  முன்னேற்க் கழகத்து பேச்சாளர்கள், பொதுவுடமைக்ககட்சிப் பேச்சாளர்கள் பலரின் உரைகளைக் கேட்டு எனது அரசியல் ஞானத்தையும் வளர்க்க முடிந்தது. தமிழ் அறிவையும் விரிவாக்க முடிந்தது.

Flower Garden at home
எனக்கு சமூகத்தில் ஒரு அங்கீகாரம் கிடைக்க வைத்தது இலங்கை. ஒரு சிறந்த விலங்கியல் ஆசிரியர் என்று மாணவர் சமூகத்திலே பெயர் பெற வைத்தது மகாஜனா. ஒரு சிறந்த அதிபர் என பெயர் பெறவைத்தது புத்தூர் ஸ்ரீசோமாஸ்கந்தக் கல்லூரியும் மகாஜனாவும்.
நைஜீரியா வாழ்க்கை வசதியான வாழ்க்கை. எனது தேடல்களுக்கு எந்த விதமான அனுகூலமும் கிட்டாதபோதும் எனது மகளின் மருத்துவ  உதவிக்கு வேண்டிய பொருளாதாரத்தைப் பெற உதவியது அந்த வாழ்க்கை. மேலும்  எனக்கு கல்வியியலில் ஏனைய துறைகளில் அனுபவம் பெறுவதற்கு நைஜீரியா வாழ்க்கை உதவியது எனலாம். சிலகாலம் ஆசிரிய பயிற்சிக் கல்லூரியில் விரிவுரையாளராகக் கடமையாற்றியமையால் வயதானோருக்கு கல்வி புகட்டுவது பற்றி அனுபவ இரீதியாக அறிய முடிந்தது.

நான் உயிரியல் பட்டப்படிப்பு படித்திருந்தாலும் அங்கே என்னை விவசாய கல்வி அதிகாரியாக நியமித்தனர். அப்போது பல முற்போக்கான திட்டங்களை நான் செயற்படுத்தியதால்  சொக்கற்றோ மாநிலத்தில் விவசாயக் கல்வியில் என்பெயர் நிலைத்து நிற்கும். அதே போன்று மரம் நடுதலிலும் நான் எடுத்த அக்கறை காரணமாக நான் வசித்த கிராமத்தில் நிறையவே மரங்கள் என் பெயரைச் சொல்லி நிற்கும். எல்லாவற்றுக்கும் மேலாக நைஜீரியாவில் வாழ்ந்தமையால் தான் சுலபமாகக் கனடா வரமுடிந்தது எனவும் கூறலாம.

கனடா வாழ்க்கை எனது வாழ்வில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியது எனலாம். எனது மனைவியையும் மகனையும் இழந்தேன். தாயாகவும் தந்தையாகவும் இருந்து பிள்ளைகளை எப்படி வளர்ப்பது என்பதை அறிந்தேன். எனது தனிப்பட்ட வாழ்க்கையில் சோகங்களைச் சந்தித்த போதும் என்னால் சமூகத்துக்கு நிறையவே சேவை ஆற்ற முடிந்ததால் நிம்மதி பெற்றேன்.

Kanex with Family Members
நான் முதலில் வசித்த தமிழர் கூட்டுறவு இல்லத்தில் பாரிய தமிழ் நூல் நிலையம் ஒன்றினை ஸ்தாபித்து வாசிப்புப் பழக்கத்தினை ஊக்குவித்தேன்.
ரொறன்ரோ பாடசாலைச் சபையினிலே பல்கலாசார ஆலோசகர் பதவி கிடைத்தமையால் புலம் பெயர்ந்து வந்த தமிழ்ப் பிள்ளகைளுக்கு தனிப்பட்ட ஆசிரியர்கள் மூலம் பிரத்தியேக போதனை செய்ய வழிவகுத்தேன். அவர்களுககு எவ்விதமாகப் பாடசாலையும் ஆசிரியர்களும் உதவ முடியும் என்பதை எடுத்துக் கூறிச் செயற்படுத்த வைத்தேன்.
இரண்டாம் நிலைப் பாடசாலைகளின் தமிழ்துறைத் தலைமைப் பதவி பெற்றமையால் தமிழினை பல்கலைக்கழகம் புகுவதற்கான பாடமாக அங்கீகாரம் பெற்று அதனைக் கற்பிப்பதற்கான பாடத்திட்டத்தனை திருமதி நடராசா மற்றம் திருமதி கணபதிப்பிளை ஆகியோரின் உதவியுடன் தயாரித்துக் கொடுத்தேன்.
வடக்கு யோர்க்கில் மாத்திரம் ஏறக்குறைய 20 பாடசாலைகளில் தமிழை வார இறுதி நாட்களிலோ, வாரநாட்களில் மாலை வேளைகளிலோ கற்பிப்பதற்கான வகுப்புக்களை 1-8ஆம் தரம்  வரை தமிழ் பாடத்திற்கு செயல்முறை நூல்களை  சில ஆசிரியர்கள்pன் உதவியுடன் தயாரித்தேன்.
மகாஜனாவில் அதிபர் பதவியை விட வேறு எதுவும் எனக்குப் பெரிதாக இல்லை. நான் ஆசிரியராக இருந்த ஒரு ஆண்டிலும், அதிபராக இருந்த இன்னொரு ஆண்டிலும் பெரும் தொகையான மாணவர்களை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பியதில் முதலிடத்தில் மகாஜனா நின்றது. நாட்டை விட்டு நான் வெளியேற வேண்டி வந்து விட்டது அதனால் பல சமயங்களில் அதற்காக மனதில் குமைந்துள்ளேன். 

3-கேள்விதாய் என்பவள் பொறுமையின் பிறப்பிடம் என்பார்கள். குடும்பம் என்று எடுத்துக் கொண்டால், நீங்கள் ஒரு தந்தையாக மட்டுமல்ல, தாயாகவும் இருக்கிறீர்கள். உங்கள் உணர்வுகளை எப்போதாவது அது பாதித்திருக்கிறதா?

பதில்: எனது மனைவி கௌரி இறக்கும் பொழுது எனது பெண்குழந்தைகள் சிறுவர். முதல் மகள் மணிமொழிக்கு 11 வயது இளையவள் மணிவிழிக்கு 9 வயது. மனைவி உயிருடன் இருந்த போது எனக்கு காப்பியே தயாரிக்கத் தெரியாது. அவர் மறைவினால் திக்கு முக்காடிவிட்டேன். அவர் வைத்தியசாலையில் இருக்கும் பொழுது எனது நண்பர்கள் சிலர் எமக்கு உணவு கொண்டு வந்து தர முன்வந்தார்கள். எனது மனைவி அதனை விரும்பவில்லை.  நான் சொல்லித் தருகிறேன் நீங்கள் சமையுங்கள் எனத் தொலைபேசி மூலம் சொல்வார்கள். பழகிவிட்டேன். அவர் இறந்ததும் எனது இரு ஆண்பிள்ளைக‌ளும் மணிவண்ணனும் மணிமாறனும் எம்முடன் வந்து சேர்ந்தமையால் சமாளித்தோம். நண்பர்களினதும் சில  உறவினர்களினதும் உதவி இருந்து கொண்டேயிருந்தது. எனது காலம் சென்ற இரண்டாவது மகன் நணா மிக நன்றாய்ச் சமைப்பார். அவரது உதவி பெரிதாக இருந்தாலும் ஆண்பிள்ளைகள் இருவரும் தமது படிப்பையும் கவனிக்க வேண்டும். அத்துடன் அவர்கள் வார இறுதி நாட்களில் வேலைக்குப் போவார்கள். பெண்குழந்தைகள் வளர்ந்த பின்னர் வீடு நடத்தும் பொறுப்பினை அவர்கள் ஏற்றார்கள்.

Kuru and Guru
மனைவி இருந்திருந்தால் எனது பிள்ளைகளின் வாழ்வு மேலும் சிறந்திருக்கும் என்பதை உணர்கிறேன். அதே சமயம் நான் இன்னும் கூடுதலாக எனது சமூகத்திற்கு உதவியிருக்க முடியும் என்பதையும் உணராமலில்லை.

4-கேள்விநீங்கள் விலங்கியல் ஆசிரியராக இருந்தபோது பல வைத்திய கலாநிதிகளை உருவாக்குவதில் உங்கள் பங்களிப்பும் கணிசமான அளவு இருந்திருக்கிறது. சென்ற இடமெல்லாம் உங்களிடம் பயின்ற மாணவ, மாணவிகளைச் சந்திக்கும்போது எப்படியான உணர்வு உங்களை ஆட்கொள்கிறது?

பதில்: எனது மாணவன்  சண்முகலிங்கம் யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர். அவரை நான் தான் முதல் முதலாக நடிகனாக்கினேன். எனது இன்னொரு மாணவன் வைத்திய கலாநிதி  சிவபாலன் யாழ்; மருத்துவக் கல்லூரியின் மருத்துவ பீடத்தின் தலைவர். எனது இன்னொரு மாணவன் வைத்தியதிய கலாநிதி அருள்குமார் இராணியின் பிறந்தநாள் கௌரவமாக சேர் பட்டம் கிடைத்துள்ளது. பேராசிரியர் சிவயோகநாதன், பேராசிரியர் சிவகணேசன் பேராதனைப் பல்கலைக்கழகத்தில். இப்படி எத்தனையோ பேரைக்கூறமுடியும். சொல்லவே வாய் இனிக்கிறதே. நேரில் காணும் போது எப்படி இருக்கும். எனது மாணவர் குறைந்தது 100 பேர்களாவது இங்கிலாந்தில் மாத்திரம் வைத்திய கலாநிதிகளாக உள்ளனரே. கோகிலா மகேந்திரன் ஸ்ரீலங்காவில், ஆசி கந்தராசா ஆஸ்திரேலியாவில், கருணாகரமூர்த்தி ஜெர்மனியில் சேரன், சாந்திநாதன் கனடாவில் இப்படி இலக்கியத் துறையில் ஈடுபட்டிருக்கும் பலர் என்னிடம் படித்த மாணவர்கள்.  எல்லோரையும் தனித்தனியே குறிப்பிட முடியவில்லை. ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் என வள்ளுவன் எனக்காகத்தான் சொல்லிப் போனானோ?

5-கேள்விமகாஜனாவில் படித்தாலும் உங்களிடம் விலங்கியல் படிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லை. ஆனாலும் மகாஜனாவின் ஐந்து அதிபர்களிடம் படிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அதிபர்களைப் பற்றி எழுதவேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு ஏன் ஏற்பட்டது? அந்தத் துறையில் நீங்களும் இருந்தபடியால் அதை எப்படியாவது ஆவணப்படுத்திவிட வேண்டும் என்று நினைத்தீர்களா?

பதில்: நான் மாணவராயிருந்த காலத்திலும் ஆசிரியராக இருந்த காலத்திலும், அதாவது அரசாங்கம் பாடசாலைகளைப் பொறுப்பேற்பதற்கு முன்னர் பல அதிபர்கள் பாடசாலைகளுக்காக உழைத்த உழைப்பினைக் கண்டு வியந்துள்ளேன். அவர்களுடைய தன்னலமற்ற சேவையால்த் தான் யாழப்பாணத்து மாணவர்களின் கல்வித்தரத்தினை இந்த உயரத்துக்குக் கொண்டு வர முடிந்தது. அவர்கள் ஆற்றிய சேவை  என்றுமே எமது நாட்டின் சரித்திரத்தில்  பதியப்பட வேண்டியது. ஈழத்துத் தமிழ் அறிஞர்கள் பற்றித் திரு. செபரத்தினம் அவர்களும், பண்டிதர் அப்புத்துரை அவர்களும் நூல்கள் எழுதியுள்ளனர். ஆனால் யாழ்ப்பாணத்து அதிபர்கள் பற்றி எவருமே எழுதவில்லை. எனவே தான் எனது மனதில் இடம் பிடித்த அதிபர்கள் பற்றி எழுதலாம் என எண்ணினேன். இங்கு ஈழநாடு பத்திரிகை ஆசிரியர் பரமேஸ்வரன் அதற்கான ஊக்கம் கொடுத்தார். அதே போன்று தினக்குரலிலும் பதிப்பதற்கு பாரதி இசைந்தார். தான் அதனை நூல் வடிவு கொடுக்க விரும்புவதாக சேமமடு பிரசுலாயத்தின் அதிபர் கேட்டுள்ளார். விரைவில் அது கைகூடும் என எண்ணுகிறேன்.

6-கேள்வி: இலக்கியத்துறையில் ஆர்வம் எப்படி ஏற்பட்டது? புலம் பெயர் இலக்கியத்தில் கனடிய தமிழ் இலக்கிய வளர்ச்சி பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இதில் உங்கள் பங்களிப்பு என்ன?

பதில்: நான் எப்பொழுதுமே ஒரு வாசகனாகவே இருந்தேன். இந்தியாவில் நான் கற்கின்ற சமயம் எனது அறை நிறைய வாரஏடுகளும் சஞ்சிகைகளும் நிரம்பியிருக்கும்  எங்கள் குடும்பமே வாசிப்பில் பைத்தியமானவர்கள் எனலாம். இங்கே கூட என மகள்மார் ஆங்கில நூல்களைக் கொண்ட பெரிய நூல் நிலையமும் மகன் தமிழ் நூல்களைக் கொண்ட ஒரு  நூல் நிலையமும் வைத்துள்ளார்கள். நாம் இந்தியா போனால் ஒரு 50 நூல்களாவது வாங்காமல் வருவதற்கு மகன் விடமாட்டான்.


Kaviperarasu Vairamuthu with Family Members
 நான் வாசகனே அன்றி எழுத்தாளனாகும் முயற்சி என்றுமே ஏற்பட்டதில்லை. இலங்கையில் வாழ்ந்த போது ஒரு விஞ்ஞானக் கட்டுரையை எழுதி வீரகேசரிக்கு அனுப்பி வைத்தேன். அவர்களோ அதனை முற்றாகப் பிரசுரிக்காமல் முகவுரையை மாத்திரம் பிரசுரித்தார்கள். ஆசை போய்விட்டது.
கனடா வந்ததும் ஆரம்பத்தில் மூன்று வேலைகள் செய்தேன். சனிக்கிழமைகளில் இராக்காலங்களில் பாதுகாப்பு அலுவலர் வேலை. அந்தப் பணியில் உள்ள போது  நித்திரை கொள்ளப்படாது. ஏதாவது வாசிக்க எடுத்துச் செல்வேன்.  சில வாரப்பத்திரிகைகள் பிரசுரமாயின. பாரதிதாசன் நூற்றாண்டு வந்தது. ஆகவே அவர் பற்றி ஒரு  கட்டுரை எழுதி ‘தாயகம்’ என்ற சஞ்சிகைக்கு அனுப்பினேன். பிரசுரமானது. இதுவே எனது முதல் முயற்சி. நான் வசித்த அடுக்குமாடித் தொடரில் “ஈழநாடு” எனும் பத்திரிகை ஆசிரியர் பரமேஸ்வரன் வசித்தார். அவரது வேண்டு கோளுக்கு அமைய சுவாமி விபுலானந்தர் பற்றி அவருக்காக எழுதினேன். அவர் வற்புறுத்தியதன் விளைவாக அவருக்கு இந்திய அரசியல், மற்றும் அரங்கேற்ற விமர்சனங்கள் எழுதி வந்தேன். “தமிழர் தகவல்” ஆசிரியர் திருச்செல்வத்தின் வேண்டுகோளுக்காக எமது பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் உதவக் கூடிய விதத்தில் பாடசாலை நடைமுறைகள் பெற்றோரியம் சம்பந்தமாக எழுதினேன். ஏறக்குறைய 20 வருடங்களாக மாதாமாதம் அவருக்கு எழுதி வந்துள்ளேன்.
எனது 60 வது பிறந்தநாள் விழாவினுக்கு  எனது முதல் நூலாக ‘ஒரு அதிபரின் கூரிய பார்வையில்” என்ற நூல் அகிலன் அசோசியேற்ஸ் வெளியீடாக வந்தது. எனது மனைவியின் மறைவின் 10 ஆண்டு நிறைவாக “ பெற்றோர் பிள்ளை உளவியல்” என்ற நூலும் அகிலன் அசோசியேற்ஸ் வெளியீடாக வெளிவந்தது. அந்த வெளியீட்டின் போது கிடைத்த நன்கொடை அத்தனையும் கனடா புற்று நோய் மையத்துக்கு வழங்கப்பட்டது.
Family Members - on the Eve of his 75th Birthday
 சு. சிவகுமார் ஜெர்மனியில் வசிப்பவர். எனது பாடசாலையின் பழைய மாணவர். தனது தந்தையால் நடத்தப்பட்ட “வெற்றிமணி’ப் பத்திரிகையைத் தொடர்ந்து நடத்தி வருகிறார். அத்துடன் மூன்று மாதத்துக்கொரு முறையாக “சிவத் தமிழ்” எனும் சஞ்சிகையையும் நடத்தி வருகிறார். அவர் கோட்டதற்கிணங்க சிறுவர்களுக்கான கதைகளையும் விஞ்ஞானக் கட்டுரைகள் மற்றும் ஆன்மீகத்துக்கு விஞ்ஞான இரீதியான விளக்கக் கட்டுரைகள் எழுதினேன். அவை  “மாறன் மணிக்கதைகள் -1” மற்றும் “திறவுகோல்” என வெற்றிமணி வெளியீடாக ஜெர்மனியிலும் கோகிலா மகேந்திரனின் முயற்சியால் அம்பனை கலைக்கழகத்தின் வெளியீடாக “மாறன் மணிக்கதைகள்-2” மற்றும் “திறவு கோல்” இரண்டாம் பதிப்புடன் மனம் ‘எங்கே போகிறது’ என உளவியல் கட்டுரைகளும் பிரசுரமாகி உள்ளன. எனது கதைகளில் சில  தீராநதியிலும் தினகரனிலும் வீரகேசரியிலும் பிரசுரமாகி உள்ளன. கனடாவில் வெளியாகும் உதயன் பத்திரிகையில் ‘உலகம் போகிற போக்கு’ எனவும் விளையாட்டுக்கள் பற்றியும் பத்தி எழுத்து வாராவாரம் எழுதுகிறேன். தாய் வீடு, விளம்பரம், தூறல், ஆகிய பத்திரிகைகளிலும் வெவ்வேறு  துறைகளில் எழுதுகிறேன். செம்மொழி மகாநாட்டினில் கனடாவின் தமிழக் கல்வி பற்றி ஆய்வுக் கட்டுரை வாசித்துள்ளேன்.

7-கேள்வி: புலம்பெயர்ந்த எழுத்தாளர்களின் ஆக்கங்களைச் சில பத்திரிகைகள் வேண்டுமென்றே இருட்டடிப்புச் செய்வதாகப் பரவலான குற்றச்சாட்டு இங்கே முன்வைக்கப்படுகிறதே, அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? நீங்கள் எந்தவகையிலாவது பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா?.

பதில்: இலங்கைச் சஞ்சிகைகளை அந்த விதமான குற்றச் சாட்டுக்கு ஆளாக்கினால் அது அபத்தம். அவை அயல் நாடுகளிலே வாழ்கின்ற ஈழத்து எழுத்தாளர்களின் ஆக்கங்களைப் பிரசுரிப்பதில் மிக்க ஆர்வம் காட்டுகின்றன.
இந்தியச் சஞ்சிகைகளை அப்படி ஓரளவுக்குச் சொல்லலாம். அவை கூட வியாபார நோக்கம் கருதி புலம் பெயர்ந்த எழுத்தாளர்களின் ஆக்கங்களை ஓரளவுக்கேனும் பிரசுரிக்கின்றன. ஈழத்து எழுத்தாளர்கள் யதார்த்தமாய் எழுதுபவர்கள். அவர்களின் இத்தகைய எழுத்தக்களை தமிழகத்தின் ஜனரஞ்சகப் பத்திரிகைகள் அவ்வளவு தூரம் ஊக்கப் படுத்துவதில்லை. ஆனால் ஓரளவுக்கு அ. முத்துலிங்கம், குரு அரவிந்தன் போன்றவர்களின் ஆக்கங்கள் தமிழக ஜனரஞ்சக சஞ்சிகைகளில் இப்பொழுதும் பிரசுரமாகின்றன. ஜெயபாலன், சேரன் கவிதைகளும், வரவேற்கப்படுகின்றன.

8-கேள்வி: கனடிய மண்ணில் தமிழ் மொழி வளர்ச்சியில் ஆரம்பகாலத்தில் நீங்கள் அதிக அக்கறை காட்டினீர்கள். இப்போ தமிழ் மொழி வளர்ச்சியில் திடீரென ஒரு மந்த நிலை ஏற்பட்டிருக்கிறதே அதற்குக் காரணம் என்ன? எனது பாடல் ஒன்றில் ‘மொழி அழிந்தால் நம் இனம் அழிந்து விடும்’ என்ற பாடல் வரிகளை முன்பு குறிப்பிட்டிருந்தேன், மொழி அழிந்தால் எங்கள் இனம் அழிந்து விடும் என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?

பதில்:  மொழி அழிந்தால் இனம் அழியும் என்பது உண்மைதான். ஆரம்ப காலத்தில் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களின் வீட்டு மொழி தமிழாக இருந்தது.தாயகத்தில் இருந்து புலம் பெயர்ந்து வந்தகாலம். பெற்றோர்களுக்கும் தமிழ் உணர்வு மிகையாகவே இருந்தது. தம் பிள்ளைகளுக்குத் தமிழ் கற்பிக்க வேண்டும் என்ற உணர்வு இருந்தது. ஆகவே பிள்ளைகள் தமிழ் கற்பனை ஊக்குவித்தனர். ஆண்டுகள் கடந்தன. புலம் பெயர்ந்தவர்கள் இந்நாட்டின் பிரஜைகள் ஆயினர். மெல்ல வீட்டு மொழியும் தமிழில் இருந்து ஆங்கிலமாக மாறிற்று. பிள்ளைகள் தமிழ் கற்பதால் ஏதாவது பிரயோசனம் உள்ளதா என வினவினர். அவர்களை வேறு கலைகள், தற்காப்புக் கலைகள், விளையாட்டுக்கள், எனப் பல்வேறு துறைகளில் திறமை பெறுதற்கான பயிற்சிகளைப் பெற்றோர்கள் வழங்கினர். தமிழின் தேவை பின் தள்ளப்பட்டது.

தென் ஆபிரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகளில் உள்ள தமிழர்களை வெறும் பெயரினை வைத்துக் கொண்டே தமிழர்கள் என இனம் காண முடிகிறது அவர்களுக்கு மொழி தெரியாமையால் பெயர்கள் வெவ்வேறு ரூபத்தில் காட்சி தருகின்றன. இந்த நூற்றாண்டில் அழியப் போகும் மொழிகள் 200 வரை உள்ளன என்கிறார்கள். அதில் பெரும்பாலானவை ஆசிய ஆபிரிக்க மொழிகளாக அமையலாம் என்பது மொழியியல் அறிஞர் கருத்து. தமிழ் மெழியும் அதில் ஒன்றாக இருக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது.
கனடா, இங்கிலாந்து ஆஸ்திரேலியா போலல்லாது பிரான்ஸ், ஜெர்மனி, சுவிஸ்லாந்து போன்ற நாடுகளில் வாழும் தமிழ்க் குடும்பங்களில் கூட இப்போது வீட்டு மொழியாக அந்த அந்த நாட்டு மொழிகள் வந்து விட்டதைக் காண முடிகிறது.
அது மாத்திரமல்லாமல் நமது தமிழ்ப் பிள்ளைகள் வேற்று மொழி பேசுவோரினைக் கலப்புத் திருமணமும் செய்வது இப்போது அதிகரித்துக் கொண்டு வருகிறது. மொத்தத்தில் தமிழ் இனம் பற்றி ஒரு பயம் இருக்கவே செய்கிறது.

9-கேள்வி: நூறாவது ஆண்டு விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் மகாஜனக் கல்லூரியில் பல ஆண்டுகள் ஆசிரியராகவும், அதிபராகவும் இருந்திருக்கிறீர்கள். அந்த இரண்டு வெவ்வேறு பாத்திரங்களின் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ள முடியுமா?

பதில்: இப்போது அதிபர்களாக இருப்பவர்கள் ஓரளவுக்குப் பாக்கியம் செய்தவர்களாகவே கருதுவேன். அதிகமாக எல்லாப் பாடசாலைகளுக்கும் வெளிநாடுகளில் பழைய மாணவர் சங்கங்கள் உள்ளன. பாடசாலைகளின் தேவைகளை உணர்ந்து அதற்கான உதவிகளைச் செய்து வருகிறார்கள். அரசாங்கம் தமிழ்ப் பாடசாலைகளுக்குப் பாரபட்சம் காட்டினாலும் கூட பாடசாலைகள் சுமுகமாக இயங்குவதற்குப் பழைய மாணவர் சங்கங்களின் அனுசரணை மிக்க உதவிகள் கிடைத்த வண்ணம் இருந்தன.

At Mahajana College - 100 Years
 நாம் அதிபர்களாக இருந்த பொழுது ஒவ்வொரு சதத்தினையும் திட்டமிட்டே செலவு செய் வேண்டி இருந்தது. மகாஜனா போன்ற பாடசாலைகளுக்கு விசுவாசமிக்க பழைய மாணவர்களினதும் பெற்றோர்களினதும் உதவி தாராளமாகக் கிடைத்தது. என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் வெளி நாட்டு உதவியுடன் ஒப்பிட்டால் அது எம்மாத்திரம். மகாஜனக் கல்லூரியின் வெள்ளி விழாவினை நான் காணவில்லை. ஆனால் அதன் பொன்விழா, வைரவிழா, ஆகியவற்றினை நேரடியாகக் கண்டவன் இப்போது நூற்றாண்டு விழாவினையும் காணப் போகிறேன். இந்தனை பாக்கியம் எத்தனை பேருக்குக் கிடைத்திருக்கும்.
நான் அப்பாடசாலையில் போய்ச் சேர்ந்த ஆண்டு ஒரு மாணவன் மாத்திரமே மருத்துவக் கல்லூரி புகுந்தான். நான் விட்டு விலகிய ஆண்டில் 9 மாணவர்கள் மருத்துவக் கல்லூரிக்குள் புகுந்தார்கள்.


Mahajana Dinner - 2010 - Committee Members
 ஆசிரியராக இருக்கின்ற பொழுது மாணவர்களுடன் தோழமையுடன் பழகினேன் அதிபராக வந்த பொழுது நிர்வாகத்தை ஒழுங்காக நடத்த வேண்டும் என்பதால் சற்றுக கறாராக இருந்தாலும் மாணவர்களுடைய நலம் பேணி அதற்கானவை அத்தனையையும் செய்தேன். ஆகவே அவர்களுடைய அபிமானத்துக்கு ஆளானேன்.
அதிபரான பின்னரும் எனது பாடவேளைகளில் வகுப்பிற்கும் போகாமல் இருந்ததில்லை. என்னை நம்பி வந்த மாணவர்களுக்கு என்னால் இயன்றதைச் செய்ய வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்து கடமையாற்றியமையால் மாணவர் என்னை மதித்தனர்.
காலையில் எட்டு மணிக்கு முன்னரேயே பாடசாலை சென்று எல்லோருக்கும் முன்னதாக ஆசிரியர் இடாப்பினில் ஒப்பமிடுவேன். மாலை விளையாட்டுப் பயிற்சி நடைபெறும். நான் அலுவகத்தில் இருப்பேன், மாலை விடுதிச்சாலை  மேற்பார்வை பார்த்து 7:00 மணி வரையில் வீடேகுவேன் அதனால் பாடசாலையில் நடைபெறுவது அத்தனையையும் தெரிந்து வைத்திருக்க முடிந்தது.

10-கேள்வி:  புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரியில் அதிபராக இருந்தபோது உங்கள் அனுபவம் வேறுபட்டதாக இருந்ததா? அதேபோல நைஜீரியவில், கனடாவில் கற்பித்தல் முறை வேறுபட்டிருந்ததா? அவ்வாறாயின் எப்படி என்று கூறமுடியுமா?

பதில்: புத்தூர் கொஞ்சம் பின் தங்கிய கிராமம். பிள்ளைகள் விவசாயக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள். பாடசாலை வரவு பாதிக்கப் படும். ஆகவே தண்டனை முறை கொஞ்சம் தீவிரமாகவே இருக்க வேண்டி வந்தது. ஆனால் பெற்றோர்கள் மிகவும் பண்புடையவர்கள். அதிபர் மேல் அத்தனை அபிமானம் உடையவர்களாக இருந்தனர்.
அங்கே ஒரு பிரச்சினை ஏற்பட்டது. புத்தூர் சாதிப் பாகுபாடு காட்டும் ஒரு கிராமம். நான் அங்கு 1971 டிசம்பர் மாதம் அதிபராகினேன். 1972 ஜனவரி மாதத்தில்  சமுதாயத்தில் சற்றுப்பின் தங்கிய இனப்பையன் ஒருவனைப் பாடசாலையில் சேர்த்து விட்டேன். சில நாட்களின் பின்னர் பாடசாலையின் தருமகர்த்தாக்கள் சபையின் பொறுப்பாளர் பாடசாலை வந்தார். இனிமேல் சோமாஸ்கந்தர் விக்கிரகத்தினைப் பாடசாலைக்கு எடுத்து வரமாட்டோம் என்றார்.

பாடசாலையின் அத்திவாரமிட்டதினத்திலே அருகேயுள்ள சோமாஸ்கந்தர் ஆலயத்தின் திரு உருவத்தினைப் பாடசாலைக்குக் கொண்டு வருவார்கள். அன்று முழு நாளும் அங்கே திரு உருவம் இருக்கும் மாணவர்கள் யாபேருக்கும் மதிய போசனமும் வழங்குவார்கள்..
ஏன் அப்படி வரமாட்டார் என வினவினேன். பாடசாலை தீட்டுப் பட்டு விட்டது. நீங்கள் ஒரு மாணவனைப் பாடசாலையில் அனுமதித்து விட்டீர்கள் என்றார். அதுதான் உங்கள் தீர்மானம் என்றால் நான் சொல்வதற்கு ஒன்றம் இல்லை. நான் மணவனை எடுத்தது எடுத்தது தான் என்றேன். அவர் போய்விட்டார் அதன் பின்னரே சேமாஸ்கந்தாக் கல்லூரியில் நான் நிறுவியர் நாளினை ஆரம்பித்தேன்.
அப்பேது கோப்பாய் தொகுதி பாராளுமன்ற  உறுப்பினராக இருந்தவர் திரு. கதிரைவேற்பிள்ளை அவர்கள். மிகவும் அனுசரணையாக இருந்தார். இந்த சாதிய உணர்வினை உடைக்க வேண்டும் எனக் கூறி அந்த இன ஆசிரியர்கள் இருவரைப் பாடசாலையில் ஆசிரியப் பணிக்கு அமர்த்துமாறு கேட்டார். செய்தேன். அங்கேயும் பிரச்சினை வந்தது. மக்கள் என்மேல் வைத்த அன்பின் காரணமாக அவை எல்லாம் மிகவும் சுலபமாகத் தீர்ந்தன.
நைஜீரியாவில் நான் வடபகுதியில் வேலை பார்த்தேன். அங்கும் மாணவர்களும்  ஊர்வாசிகளும் மிகவும் பண்பானவர்கள்; மாணவர்களுக்குக் கல்வியில் அக்கறை இல்லை பாடசாலைக்கு வராமல் விட்டு விடுவார்கள் என்பதால் அரசாங்கம் விடுதிச் சாலைகள் உடைய பாடசாலைகளையே பெரும் பாலும் ஸ்தாபித்தன. ஒரு கிராமத்துப் பிள்ளைகளை வேறோர் கிராமத்து விடுதிச் சாலையில் வசிக்கக் செய்து பாடசாலைக்கு அனுப்பினார்கள் உணவு, உடை  புத்தகம், போக்கு வரத்துச் செலவு என அத்தனையுமே அரசாங்கத்தின் பொறுப்பில். மாணவர்கள் படித்தால் தானே? என்னால் இயன்றதைச் செய்தேன்.  விவசாயத்துக்கு பாடத்திட்டம் இலங்கையின் விஞ்ஞான பாடத்திட்டம் போன்று செய்து கொடுத்தேன். 10 ஆண்டுக்கான  10ந்தரப் பரீட்சை வினாக்களுக்கு விடை எழுதி எல்லாப் பாடசாலைகளுக்கும் வழங்கினேன்.

கனடாவின் கல்வி முறை மாணவர் மையமானது. ஆசிரியர் வெறும் அணித்தலைவர் மாதிரியே மாணவர்களை வழி நடத்திச் செல்கிறார்
இலங்கையில் 12 ம் தரத்துக்கும் பல்கலைக் கழகத்தின் முதல் ஆண்டுக்குமிடையே பெரிய இடைவெளி இல்லை. சுமுகமாக செல்ல முடியும் ஆனால் கனடாவிலே இரண்டுக்கும் இடையே பெரிய இடை வெளி உள்ளது. இரண்டாம் நிலைப் பாடசாலைகள் தம்மை பல்கலைக்கழகக் கல்விக்குத் தயார்ப்படுத்தவில்லை என்ற குற்றச் சாட்டும் உள்ளது. எமது நாட்டினைப் போன்று இங்கே பொதுப் பரிட்சை 10ந் தரத்திலோ 12ந் தரத்திலோ நடப்பதில்லை. பாடசாலையில் ஆசிரியர்களின் மதிப்பீட்டின் படியே மாணவர்கள் சித்தி தீர்மானிக்கப் படுகிறது.
முன்னேனற்றம் அடைந்த நாடு என்பதால் மாணவர்களுக்குப் பாடத்தேர்வுக்கான பட்டியல் மிகப் பெரிது தனது விருபத் துறையினைத் தேர்வு செய்வது சுலபம்.

11-கேள்வி: உங்களுக்குப் பிடித்தது பிடிக்காதது என்று விருப்பு வெறுப்பு ஏதாவது இருக்கிறதா? ஒருவருடைய குணாதியத்தை இதிலிருந்து ஓரளவு ஊகிக்கமுடியுமாகையால் சிலவற்றைப் பட்டியலிடமுடியுமா?

பதில்: எனது விருப்பு என்று பார்த்தால்…

1. வாசிப்பது மிகவும் விருப்பமானது. அதிலும் தனிமனிதர் பற்றிய செய்திகள், கதைகள், நாவல்கள் விருப்பம்

2. விளையாட்டு:
அ) கிறிக்கட் மிக விருப்பமானது. இந்திய அணி என் அபிமானத்துக்குரியது. கிறிக்கட் போட்டிகள் அத்தனையையும் தொலைக்காட்சியில் பார்ப்பேன்.
ஆ) ரென்னிஸ் ஆட்டம். நான்கு கிறாண்ட ஸ்லாம் போட்டிகளும் தொலைக் காட்சியில் பார்ப்பேன்
இ)  பேஸ்போல் ரொறன்ரோ அணியான Blue Jays என் அபிமானத்துக்குரிய அணி. அவர்கள் விளையாடும்  162 போட்டிகளில் ஒரு சிலவற்றினைத் தவிர ஏனையவை யாவும் பார்ப்பேன்.
ஈ) கூடைப் பந்து:  நேரம் இருந்தால் பார்ப்பேன்.

3. அரங்கக்கலைகள் நடனம், வாய்ப்பாட்டு மற்றும் வாத்தியக் கலைகள் யாவும் இங்கே நடைபெற்றால் தவற விடுவதில்லை
 முன்னர் திரைப்படம் பார்ப்பதுண்டு இப்போ குறைத்துக் கொண்டேன்

4. தோட்ட வேலை: பூக்கன்றுகள் எல்லாவகையும் தேடித் தேடி வாங்கி வளர்ப்பேன்.  காய்கறித் தோட்டமும் செய்வேன்.
 
It’s the rose that reminds me of you.

முன்பு பெரும் தொகையினில் மீன் வளர்த்தேன். இப்போ விட்டு விட்டேன்.
காங்கேசந்துறை குருவீதியில் வாழ்ந்த போது வீட்டின் முன்னே 12 அடி வரையில் விட்டமுள்ள தொட்டி ஒன்று கட்டிப் பெரும் தொகையில் வண்ண வண்ண மீன்கள் வளர்த்தேன்.
வெறுப்பு என்று ஒன்றும் இல்லை கடவுள் பெயரைச் சொல்லி ஏமாற்றுபவர்களை வெறுக்கும். எனக்குப் பெரிதான கடவுள் நம்பிக்கை இல்லை ஆனால் நான்  நம்பிக்கை உடையவர்களின் மனத்தினைப் புண்படுத்துமாறு பேசுவதில்லை.


12. கேள்வி : 75வது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நீங்கள் பல பாடசாலைகளில் ஆசிரியராகவும், அதிபராகவும் இருந்து மாணவர்களை நல்வழிப் படுத்தியிருக்கிறீர்கள். உங்கள் கடந்தகால அனுபவத்தைக் கொண்டு எமது இளம் சமுதாயத்திற்கு என்ன அறிவுரை சொல்ல விரும்புகிறீர்கள்?

பதில்:  இளைஞர்கள் நம்மிலும் பார்க்கப் புத்தி ஜீவிகளகாக உள்ளனர். எதனையும் ஏன், எதற்கு, எப்படி என்ற கண்ணோட்டத்தில தான் பார்க்கிறார்கள். கணினி அவர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம். எதனையும் அதன் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அனுபவம் என்பது பட்டுத் தெளிந்தால் தான் வரும். ஆகவே முதியவர்களுடைய அனுபவத்தினைத் தயங்காது பெற்று தமது அறிவின் மூலம் வாழ்வில் வெற்றி பெற எல்லா இளைஞர்களும் முயலவேண்டும்.

         'நல்ல பெயரை வாங்க வேண்டும், நாடு போற்ற வாழவேண்டும்'

Principal Mr.P.Kanagasabapathy with Canada Old Students


Halloween - கலோவீன்

கலோவீன் தினம்         

குரு அரவிந்தன்


மேலை நாடுகளில் சிறப்பாகக் கொண்டாடப்படும் தினங்களில் கலோவீன் தினமும் (Halloween) ஒன்றாகும். ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் 31ம் திகதி கலோவின் தினம் அயர்லாந்து, இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா போன்ற மேலை நாடுகளிலும் இதர நாடுகளில் கொண்டாப் படுகின்றது. பெரியவர்களும் குழந்தைகளும் மிகவும்வேடிக்கையாக இத்தினத்தை இங்கே கொண்டாடுவர். ஊரிலே பிள்ளைகள் இரவிலே வெளியே திரிவதைத் தடுப்பதற்காகப் பெரியவர்கள் பேய்பிடிக்கும், பிசாசு அடிக்கும், கொள்ளிவால் பிசாசு தொடரும், முனி அடித்தால் வாயால் இரத்தம் கக்கும், என்றெல்லாம் சொல்லிப் பயமுறுத்துவதுண்டு. இப்படித்தான் எங்கள் வீட்டிற்கு சற்றுத் தள்ளியிருந்த புளிய மரத்தில் முனி இருக்கிறது என்றெல்லாம் சொல்லி இரவிலே வெளியே திரியாமல் எங்களுக்குப் பயம் காட்டிப் பெற்றோர் மிரட்டி வைத்திருந்ததை இத்தினங்களில் மீண்டும் நான் நினைவுபடுத்திப் பார்ப்பதுண்டு. இரவிலே வெளிக்கிட்டுத் திரிவதற்குப் பயந்து பயந்தே வாழ்ந்ததொரு காலமது.
பிரித்தானியாவில்தான் முதன்முதலாகக் கலோவீன்தினம் 2000 ஆண்டுகளுக்கு முன்பாகக் கொண்டாடப்பட்டது. அறுவடைக்காலம் முடிந்து குளிர்காலம் ஆரம்பிப்பதையும், வெளிச்சகாலம் முடிந்து இருட்டுக்காலம் தொடங்குவதையும் இந்தக் கொண்டாட்டம்  குறிக்கும். பழைய ஆங்கிலச் சொல்லான கலோவீன் என்றால் தெய்வீகத்தன்மை பெறச்செய்தல் என்ற கருத்துப்படும். பொதுவாக இத்தினத்தில் ஆரேஞ்ச் நிறமும் கறுப்பு நிறமும் அதிகமாகப் பாவிக்கப்படும். அரேஞ்ச் நிறம் அறுவடைக் காலத்தையும், கறுப்பு நிறம் இறப்பையும் குறிக்கும். அத்தினத்தில் பேய்கள் பிசாசுகள் போலப் பெரியவர்களும், சிறியவர்களும் வேடமிட்டு ஒவ்வொரு வீடுவீடாகச் சென்று வேடிக்கையாக விருந்து தரும்படி கேட்பார்கள். பெரியவர்கள் தெருவிலே நின்று கொள்ள, சிறுவர், சிறுமிகள் பேய் பிசாசுபோல வேடமிட்டு வாசலில் வந்து வேடிக்கையாக ஏமாற்றுவார்கள். சில சமயங்களில் வீட்டில இருப்பவர்களும் பயங்கரமான வேடமணிந்து விருந்து கேட்டு வந்த பிள்ளைகளுக்குப் பயம் காட்டுவார்கள். அதன்பின் பிள்ளைகள் கொண்டுவந்த தட்டிலே இனிப்பு, சொக்லட் போன்றவற்றைப் போடுவார்கள். மாலை 5மணியில் இருந்து இரவு ஒன்பது, பத்து மணிவரை அயலில் உள்ள வீடுகளுக்குச் சென்று (Tricks or Treats)  இனிப்பு வகைகளைச் சேகரிப்பார்கள். இப்படிச் சேகரித்துக் கொண்டு வந்தவற்றைத் தரம் பிரித்து பிடித்தவற்றைத் தாங்கள் எடுத்துக் கொண்டு வேண்டாத மிகுதியைப் பெற்றோரிடம் தள்ளி விடுவார்கள்.

கலோவின் தினத்திலன்று சூனியக்காரி, கறுப்புப் பூனை, வெளவால், ஆந்தை, சிலந்தி, சிலந்திவலை, எலும்புக்கூடு, மண்டை ஓடு, பூசணிக்காய், விளக்குமாறு, சூலம் போன்ற விளையாட்டுப் பொருட்களால் வீட்டின் வாசலை அலங்கோலம் செய்து வைத்திருப்பர். பெரிய பூசணிக்காயை (Jack-o-Lantern) எடுத்து அவற்றைப் பயங்கர முகங்களைப் போலச் செதுக்கி அதன் வடிவைமாற்றி வாசலில் வைத்திருப்பர். இருட்டில் இருக்கும் அவற்றில் மெழுகு திரிகளைக் கொளுத்தி மெல்லிய வெளிச்சத்தை ஏற்படுத்தியிருப்பர். பயங்கரமான இடத்தை நோக்கிப் போவது போன்ற ஒரு சூழலை இங்கே ஏற்படுத்தியிருப்பர். இந்த வாரத்தில் பெரியவர்கள் குழந்தைகளுக்குப் போய் பிசாசு கதைகள் சொல்வதிலும், அப்படியான பயங்கரப் படங்களைக் குடும்பமாகச் சென்று  பார்ப்பதிலும் அதிக நேரத்தைச் செலவிடுவர். நகரப் பகுதிகளில் இரவு நேரங்களில் கலோவீன் கேளிக்கை விருந்துகளுக்கு கலோவீன் ஆடைகள் அணிந்து முகத்திற்கு மைபூசிச் செல்வர்.

இந்த மாதத்தில் அனேகமான கடைகளில் கலோவின் தினத்திற்கான பொருட்களே முக்கிய வியாபாரப் பொருட்களாக இருக்கும். கலோவீன் ஆடைகள், முகமூடிகள் போன்ற பொருட்கள் அதிகமாக விற்பனையாகும். கலோவீன் கதைகள் அடங்கிய புத்தகங்கள், கலோவீன் புகைப்படங்கள், கலோவீன் ஒளிப்பட குறுந்தட்டுக்கள் போன்றவையும் அதிகம் விற்பனையாகும். அங்காடிகளில் பெரிய, சிறிய பூசணிக்காய்கள், ஆப்பிள் பழங்கள் விற்பனைக்காகக் குவிக்கப்பட்டிருக்கும். வேலைத்தலங்களில் மட்டுமல்ல, பாடசாலைகளிலும் ஆசிரியர்களும் மாணவர்களும் விதம் விதமான ஆடைகள் அணிந்து, முகத்திற்கு மைபூசி வருவார்கள். பெண்கள் தேவதைகள், மந்திரக்காரி, சூனியக்காரி போன்று ஆடைகள் அணிந்திருப்பர். காலோவீன் வாழ்த்து மடல்கள் வரைந்து ஒருவருக் கொருவர் பரிமாறிக் கொள்வர். பத்திரிகைகள் சிறுவர்களுக்கான கலோவீன் சித்திரம் வரையும் போட்டி, கலோவீன் நிறம் தீட்டும் போட்டி போன்றவற்றை இந்த வாரங்களில் நடத்துவர். பெரிய அங்காடிகளிலும் சிறுவர், சிறுமிகளை ஊக்குவிப்பதற்காக இப்படியான நிறம் தீட்டும் போட்டிகளை நடத்திப் பிள்ளைகளுக்குப் பரிசுகள் கொடுப்பர்.
இத்தினத்தில் அனேகமானவர்கள் முகமூடி போட்டும் உருமாற்றம் செய்தும் இருப்பதால் மாலை நேரத்தில் நகர் காவல் அதிகரிக்கப்பட்டிருக்கும். சிறுவர், சிறுமிகளின் பாதுகாப்புக் கருதி, மாலைநேரத்தில் குழந்தைகள் தனியே செல்லக்கூடாது என்ற அறிவுறுத்தலும் வழங்கப்பட்டிருக்கும். 1978ம் ஆண்டு கலோவீன் என்ற பெயரில் ஜோன் காப்பென்ரரின் நெறியாள்கையில் ஆங்கிலப் படம் ஒன்றும் வெளிவந்திருந்தது. 2007ம் ஆண்டு மீண்டும் கலோவீன் படம் ஒன்று இதே பெயரில் றொப் சோம்பியால் (Rob Zombie) படமாக்கப்பட்டது.

Sunday, October 24, 2010

Niruththa Niraignar - நிருத்த நிறைஞர்

நிருத்த நிறைஞர் பட்டமளிப்பு விழா - 2010

        மாலினி
ரு சிறிய அசைவையும் நாம் லயத்தோடும் நயத்தோடும் முழுமனத்தோடும் செயற்படுத்துகின்றபோது அது நாட்டியம் எனப்படுகின்றது. தொன்மை வாய்ந்த எமது பரதக்கலை திராவிட கலாச்சாரத்தின் சின்னமாக விளங்குவது மட்டுமல்ல, அது தனித்துவம் வாய்ந்ததுமாகும். அத்தகைய பரதநாட்டியக் கலையில் ஸ்ரீமதி நிறைஞ்சனா சந்துருவை அதிபராகக் கொண்ட கனடா கலைமன்றத்தின் நிருத்த நிறைஞர் 2010ம் ஆண்டு பட்டமளிப்புவிழா 10-10-2010;ம் ஆண்டு ஞாயிற்றுக்கிழமை யோக்வூட் நூலக மண்டபத்தில் காலை 10:30 மணிக்கு ஆரம்பமாகி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இது 1992ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கலைமன்றத்தின் ஆறாவது பட்டமளிப்பு விழாவாகும்.
இந்த விழாவிற்கு தமிழர் தகவல் முதன்மை ஆசிரியர் திரு எஸ். திருச்செல்வம் தலைமை தாங்கினார். கலாநிதி இ. பாலசுந்தரம் அவர்களும் நடனக் கலைஞர் ஜனக் கே. ஹென்றி அவர்களும் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர். தமிழ் வாழ்த்து, கனடிய தேசியகீதம் ஆகியவற்றைத் தொடர்ந்து வரவேற்புரை நிகழ்ந்தது.

அடுத்து கலைமன்றத்தின் அதிபர் குரு. நிறைஞ்சனா சந்துரு ‘கலைகள் மனித வாழ்க்கையைப் பண்படுத்துகின்றன. எனவே கலைகளைக் கற்போம், கற்றதைப் பேணிக்காப்போம். கலைகளின் மகிமை நேர்த்தி என்பன குன்றாது புதியன புகுத்தி அடுத்த சந்ததியினருக்குக் கற்பிப்போம்’ என்று தனது ஆரம்ப உரையில் குறிப்பிட்டு, நிகழ்வில் பங்குபற்றிய விருந்தினர், பெற்றோர் ஆசிரியர், மாணவர்கள் அனைவரையும் பாராட்டினார்.

Teachers Grade
2010ம் ஆண்டுக்கான நிருத்த நிறைஞர் பட்டத்தை (Niruththaniraignar) செல்வி அனுஷா ஜெயன், செல்வி விக்னேஸ்வரி சிவாஸ்கர், செல்வி ஜெனித்தா ரூபரஞ்சன், செல்வி மஜின்டா மகேந்திரதாஜன், செல்வி கௌதமி இராமநாதன் ஆகிய ஐந்து மாணவிகளும் பெற்றுக் கொண்டனர். ஆசிரியர்தர டிப்ளோமா பட்டத்தை (Teachers Grade) செல்வி ஹரின்யா ராஜசேகரன், செல்வி கவினா சத்தியசோதி, செல்வி ஸ்ரெவ்னி அன்ரன் ஜெயபாலன், செல்வி லிஸானா தர்மபாலன், செல்வி மதுமிதா சண்முகநாதன் ஆகிய ஐந்து மாணவிகளும் பெற்றுக் கொண்டனர்.

நிருத்த நிறைஞர் பட்டம் பெற்றவர்களான செல்வி. அனுஷா ஜெயன் அவர்களை ரொறொன்ரோ கல்விச்சபையின் ஓய்வுபெற்ற பல்கலாச்சார ஆலோசகர் திரு.பொ.கனகசபாபதியின் சார்பில் கவிஞர் வி. கந்தவனம் அவர்களும், செல்வி விக்னேஸ்வரி சிவாஸ்கர் அவர்களை அரசியல் ஆய்வாளர் திரு குயின்ரஸ் துரைசிங்கம் அவர்களும், செல்வி ஜெனித்தா ரூபரஞ்சன் அவர்களை கவிஞர் வி. கந்தவனம் அவர்களும், செல்வி மஜின்டா மகேந்திரதாஜன் அவர்களை எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களும், செல்வி கௌதமி இராமநாதன் அவர்களை கவிஞர் மா. சித்திவினாயகம் அவர்களும் சபையோருக்கு அறிமுகம் செய்து அவர்களது திறமைகளைப் பாராட்டினார்கள்.

Niruththaniraignar
மதிய இடைவேளையின் பின் கலைமன்றத்தின்; தரம் ஒன்று தொடக்கம் தரம் ஐந்து வரையிலான பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலாநிதி திரு. திருமதி பாலசுந்தரம், திரு. திருமதி கந்தவனம், திரு. திருமதி சித்திவினாயகம், எழுத்தாளர் குரு அரவிந்தன், குயின்ரஸ் துரைசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். தரம் ஒன்றில் 30 மாணவர்களும், தரம் இரண்டில் 26 மாணவர்களும், தரம் மூன்றில் 30 மாணவர்களும், தரம் நான்கில் 12 மாணவர்களும், தரம் ஐந்தில் 31 மாணவர்களும் சித்தியடைந்திருந்தனர்.
இந்த நிகழ்வில் ஸ்ரீமதி நிறைஞ்சனா சந்துருவின் கலைமன்றம், ஸ்ரீமதி லலிதாஞ்சனா கதிர்காமனின் அமிர்தாலயா, வனிதா குகேந்திரனின் கலைக்கோயில், சிந்துஜா ஜெயராஜின் சிந்து கலைமன்றம், ஜலனி தயாபரனின் யாழ் நாட்டிய கலைமன்றம், கார்மிளா விக்னேஸ்வரமூர்த்தியின் கலை கார்மிளாலயம், அனுசியா  ஜெயனின் சந்திரசேகரா நாட்டியக் கல்லூரி, நிந்துஜா நடேசனின் பரத கலைமன்றம் ஆகியவற்றின் மாணவ, மாணவிகள் பங்குபற்றிச் சிறப்பித்தனர். இதுவரை 26 நிருத்த நிறைஞர்களும், 8 ஆசிரியர்தர டிப்ளோமா பட்டதாரிகளும் கலைமன்றத்தின் பரீட்சையில் சித்தியடைந்திருக்கிறார்கள்.
பரீட்சையில் சித்திபெற்ற நாட்டிய தாரகைகளான நிருத்தநிறைஞர்களுக்கும், பரதக்கலையைக் கற்பிக்கும் நடன ஆசிரியர்களுக்கும், கலைமன்றத்து அதிபர் ஸ்ரீமதி நிறைஞ்சனா சந்துருவிற்கும், ஆக்கமும் ஊக்கமும் தரும் பெற்றோருக்கும் இச்சந்தர்ப்பத்தில் எமது நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக.

Tuesday, October 19, 2010

Kaathal Enpathu... காதல் என்பது…

  காதல் என்பது…

குரு அரவிந்தன்    

நன்றி : ஆனந்த​விகடன்

'ஒருவரை ஒருவர் முழுமையாகப் புரிந்து கொள்ளுதல்தான் உன்மையான
காதலா?'நாளை உஷாவைப் பெண் பார்க்க வருகிறார்கள்.
அவள் பெற்றோர்களுக்கு விருப்பம் இல்லாத அரங்கேற்றம் அது. ஜானகியால் பொறுக்கமுடிய வில்லை.
‘உஷா அப்பாவிற்கு இதிலே கொஞ்சம் கூட சம்மதம் இல்லை. வேறு மதம்,
வேறு கலாச்சாரம் நமக்கு அதெல்லாம் சரிப்பட்டு வருமா? உன்னுடைய எதிர் காலத்தைப் பற்றிக் கொஞ்சமாவது யோசித்துப் பார்த்தாயா?’ என்றாள்.
இனியும் பொறுக்க முடியாது உஷா வாயைத் திறந்தாள்.              
‘அம்மா எல்லாம் தெரிந்து தான் இந்த முடிவிற்கு வந்தேன். நான் மனோவைத் தான்
விரும்புகின்றேன். அவரும் என்னை விரும்புகின்றார். படித்து நல்ல உத்தியோகம்
பார்க்கின்றார்;. அவருடைய நல்ல குணங்கள் எனக்குப் பிடித்திருக்கின்றது. நன்றாகப் பழகுகின்றார். இதை விட வேறு என்ன வேண்டும்’
‘ஹ_ ம்… செல்லம் கொடுத்து வளர்த்துவிட்டோம். படித்து நல்ல உத்தியோகமும்
தேடிக்கொண்டுவிட்டாய். அங்கேயே ஒருத்தனை பிடித்தும்விட்டாய். நாங்கள் என்ன சொன்னாலும் நீ கேட்கவா போகின்றாய்? சொல்ல வேண்டியது என் கடமை. அப்புறம் உன் இஷ்டம்!"
அதற்குமேல் இவளிடம் பேசிப் பயனில்லை என்பது போல ஜானகி நகர்ந்து விட்டாள்.
நிச்சயதார்த்தம் முடிந்து, அடுத்த வாரத்தில் ஒரு நாள் காலையில் சார்ச்சில் மோதிரம் மாற்றி, மாலையில் கலியாண மண்டபத்தில் அம்மி மிதிக்காமல், அருந்ததி பார்க்காமல், தாலி மட்டும் கட்டிக் கொண்டு உஷா, திருமதி உஷா மனோவானாள்.
கல்யாணம் முடிந்து ஒரு வாரம் கணவனுடன் தன் அம்மா வீட்டில் தங்குவதற்கு விரும்பினாள் உஷா. முதல் நாள் ஜானகி தடபுடலாக விருந்துச் சமையல் செய்தாள்.
சாப்பாடு அருமையாக இருந்தது. ஆனாலும் மனோ வேண்டா வெறுப்பாகத்தான் சாப்பிட்டான்.
‘எப்படித்தான் இந்த வெஜிட்டேரியன் சாப்பாட்டைச் சாப்பிட்டு உயிரோட
இருக்கிறீங்களோ" என்று அலுத்துக் கொண்டான்.
அடுத்த நாளே ஊருக்குக் கிளம்பவேண்டும் என்று அடம் பிடிக்க ஆரம்பித்து விட்டான் மனோ.
‘ஏன் மனோ… ஒரு வாரம் தங்கலாம்னு சொன்னீங்களே?’ என்றாள் உஷா.
‘இல்லை… நாளைக்கே நம்ம ஊருக்கப் போகிறோம். எனக்கு அம்மாவைப் பார்க்கணும் போல இருக்கு’
உஷா மௌனமானாள். மனோவிடம் ஏதோ மாற்றம் தெரிந்தது.
இரண்டு நாட்கள் பயணம் செய்து புகுந்த வீட்டிற்குள் வலது காலை எடுத்து வைத்து நுழைந்தாள் உஷா.
மாலையில் "ரிசப்சன்" நடந்தது.. நண்பர்களும் உறவினர்களும் வந்து வாழ்த்திப் போனார்கள்.
மனோ சொந்த ஊருக்கே வேலை மாற்றம் வாங்கிக் கொண்டு வந்து தாயின் வீட்டிலேயே குடித்தனம் போட்டான். புகுந்த வீட்டிற்காக உஷா தனது வேலையை இராஜினாமா செய்தாள்.
காலையிலே எழுந்து குளித்து தலைவாரி பொட்டு வைத்து கையிலே காப்பியுடன் படுக்கை அறைக்குள் நுழைந்தவள், தூங்கிக் கொண்டிருந்த மனோவை எழுப்பினாள்.
கண் விழித்தவன் காப்பியை வாங்கி அருகே டீப்பாய் மீது வைத்து விட்டு அவளைத் தன்னருகே இழுத்து இறுக அணைத்துக் கொண்டான்.
"உஷா இன்னிக்கு நீ ரொம்ப அழகாய் இருக்கே! என்றான். அவள் கண்களை ஆழமாக ஊடுருவிப் பார்த்தான்.
அவள் வெட்கத்தால் முகம் சிவந்து, தலையைக் குனிந்து கொண்டாள்.
அவள் முகவாய்க்கட்டையை விரலால் பற்றி நிமிர்த்தி, 
‘உஷாக் கண்ணு....நான் ஒன்று சொல்வேன் கேட்பியா?’ என்றான்.
‘என்ன?’ என்பது போலப் பார்த்தாள்.
‘வந்து... எனக்கு  எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை...
பொட்டு வைத்தால் அம்மாவுக்குப் பிடிக்காது... அதுதான்  அதை எடுத்து விடேன் பிளீஸ்.’
உஷா ஆச்சரியத்தோடு அவனைப் பார்த்தாள். ‘அம்மா அப்படிச் சொன்னாளா?’
என்று கேட்க நினைத்தாள். கேட்கவில்லை.
‘உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் வேண்டாம்.’ கண்களை
மூடி, தன் நெற்றிப் பொட்டை அழித்துக் கொண்டாள்.
‘என்மேலே கோபமா உஷா?’
அவள் அசட்டுச் சிரிப்புச் சிரித்தாள். கண்கள் கலங்கினாலும் காட்டிக்
கொள்ளவில்லை.
அன்று வெள்ளிக்கிழமை. மாலை இருவரும் கடை வீதிகுச் சென்றார்கள்.
திரும்பி வரும் போது அம்மன் கோயில் வாசலில் அவள் ஒரு நிமிடம்
நின்று கும்பிட்டாள்.
‘உஷா கோயிலுக்குப் போகணுமா?’ என்று கேட்டான் மனோ.
அவள் அவனைத் திரும்பிப் பார்த்தாள். அவளால் நம்ப முடியவில்லை.
‘நீங்க...’ என்று இழுத்தாள்.
‘நீ உள்ளே போய்க் கும்பிட்டு விட்டு வா,  அதுவரைக்கும் நான் இங்கேயே நிற்கிறேன்.’ என்றான்
தனியே உள்ளே போக அவளுக்கு மனசு என்னவோ செய்தது.
‘நானும் உன்கூட உள்ளே வரட்டுமா உஷா?’ என்று
அவன் கேட்பான் என்று எதிர்பார்த்தாள். அப்படி அவன் சொல்லாதது அவளுக்கு ஏமாற்றமாக இருந்தது.
கோயிலில் பிராகாரம் சுற்றிக் கும்பிடும் போது மனம் விட்டு அழுது தீர்த்தாள்.
அதன் பின், வீடு வரும்வரை மௌனமாகவே வந்தார்கள். வாசலில் மனோ
மௌனத்தைக் கலைத்தான்.
‘உஷா ஒரு நிமிடம்... வந்து... இந்தப்... பொட்டு....’
அவன் முடிப்பதற்குள் அவள் அதை அழித்திருந்தாள்.
‘அப்புறம்… தலையிலே பூ அது வந்து அம்மாவிற்கு...’
‘அம்மாவுக்கு, அம்மாவுக்கு, அம்மாவுக்கு........
உங்களுக்கு இதை விட்டால் வேறு ஒன்றுமே சொல்லத் தெரியாதா?’ கேட்க நினைத்தவள் அவன் முகத்தைப் பார்த்து விட்டு மொளனமானாள். தன் தலையில் இருந்த பூச்சரத்தை எடுத்தாள்.
‘தாங்யூ.. உஷா... யூ.. ஆர்.. ஸோ....அண்டர்ஸ்டாண்டிங்.’
அவளது மௌனத்தை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.
உஷா புரண்டு புரண்டு படுத்துப் பார்த்தாள். தூக்கம் வரவில்லை. மனதை ஏதோ குடைந்தது. சின்ன விஷயங்களைப் பெரிது படுத்த வேண்டாம் என்று நினைத்துக் கொண்டாள். விடிந்தால் ஞாயிற்றுக் கிழமை. காலையில் மனோ எழுந்திருப்பதற்கு முன் விழித்துத் தயாராக இருக்க வேண்டும். அவனோடு சேர்ந்து சார்ச்சுக்குப் போய் அவனை ஆச்சரியத்தில் மூழ்கடிக்க வேண்டும் என்று நினைத்தபடி தூங்கிப் போனாள்.
ஆனால், ‘உஷா நான் சார்ச்சுக்குப் போய்விட்டு வாருகிறேன்’ என்று மனோ அவளைத் தட்டி எழுப்பிச் சொல்லிக் கொண்டு புறப்படப் போகும் போதுதான் திடுக்கிட்டுக் கண் விழித்தாள் உஷா.
பரபரப்பாக எழுந்து, ‘நானும் வாருகிறேனே.......ஒரு நிமிடம் நில்லுங்களேன்’ என்று சொல்ல வாய்திறப்பதற்குமுன், ‘மனோ நேரமாச்சு சீக்கிரம் வா போகலாம்.’ என்று அவன் தாயின் குரல் கேட்டது.
அடுத்த சில விநாடிகளில் தாய் பின்னால் உட்கார, மனோவின் ஸ்கூட்டர் உறுமிக்கொண்டு போனது.
அன்று மனோவின் பிறந்தநாள். காலையிலே காப்பியுடன் வந்து ‘பிறந்தநாள்’
வாழ்த்துக்கள் கூறி அவனை எழுப்பினாள் உஷா.

ஆசை ஆசையாக அவனுக்குப் பிடித்தமான உணவு சமைத்தாள். ஐஸ்சிங் கேக் செய்தாள். மாலையில் மனோ வந்ததும் ‘ஹாப்பி பர்த்டே’ பாடிக் கேக் வெட்டவேண்டும், அப்புறம் இருவரும் சினிமா பீச் எங்கேயாவது வெளியே சந்தோசமாய்ப் போய்வர வேண்டும் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.
வாசலில் ஸ்கூட்டர் சத்தம் கேட்டது. உஷா ஆசையோடு வாசலை நோக்கி
ஓடி வந்தாள்.
‘அம்மா... ரெடியா? சீக்கிரம் வாங்கோ... நேரமாச்சு.’ வாசலில் இருந்தபடி குரல் கொடுத்தான் மனோ.
‘நான் அப்பவே ரெடி’. என்றபடி மனோவின் அம்மா கிளம்பினாள்.
‘உஷா நாங்க சார்ச்சுக்குப் போய்விட்டு வாறோம், கதவைச் சாத்திக்க’
என்றபடி அவள் பதிலுக்கும் காத்திராமல் அவசரமாகக் கிளம்பிப் போனார்கள்.
தாயும் பிள்ளையும் இரவு பத்து மணிக்கு வந்தார்கள். உஷா ஒன்றுமே
பேசவில்லை. சாப்பாட்டு மேசையில் உணவை எடுத்து வைத்தாள்.
‘சாப்பாடு வேண்டாம். நாங்கள் சாப்பிட்டாச்சு. இதோ உனக்கும் வாங்கிக் கொண்டு வந்திருக்கிறோம். சாப்பிடு’ மனோ சாப்பாட்டைப் பிரித்து வைத்தான்.
‘வேண்டாம் எனக்குப் பசிக்கவில்லை. காலையிலே இருந்து ஆசையாய்
செய்து வைத்ததெல்லாம் அப்படியே இருக்கிறது. கேக் கூட செய்து
வைத்தேன். ஏன் என்றுகூடக் கேட்க மாட்டீங்களா?’
‘நான் தான் சாப்பிட்டு விட்டேன் என்று சொன்னேனே. அதைப் பிறிஜ்ஜில்
எடுத்து வை. இந்தா இதைச் சாப்பிடு.’
‘பிறிஜ்ஜிலே எடுத்து வைக்கவா இவ்வளவு கஷ்டப்பட்டுச் சமைச்சேன்?’ பொருமினாள் உஷா..
‘இப்ப என்ன செய்யணும்ங்கிறே? வைக்க விருப்பமில்லாவிட்டால் எங்கேயாவது கொட்டு’
அவனது பதில் அவளுக்கு முகத்தில் அறைந்தது போல இருந்தது. இனியும் பொறுமையாய் இருக்க அவளால் முடியவில்லை.
‘இந்த வீட்டிலே எனக்கென்று விருப்பு வெறுப்பு ஒன்றுமே இல்லையா?’
குரலைச் சற்று உயர்த்திக் கேட்டாள்.
‘அது தான் உனக்கும் சாப்பாடு கொண்டு வந்து கொடுத்தேனே’ என்றான் மனோ.
‘இந்த வீட்டு நாய்க்கும் தான் சாப்பாடு போடுறீங்க’.
‘இப்ப என்ன ஆச்சுது, ஏன் கத்திப் பேசுறே? கொஞ்சம் மெள்ளத் தான் பேசேன்! அம்மாவிற்குக் கேட்டால் என்ன நினைப்பாங்க?’
சே… எதற்கெடுத்தாலும் அம்மா..!.அம்மா..! இதைத் தவிர வேறு
ஒன்றுமே தெரியாதா உங்களுக்கு? உங்களுக்குப் பிடித்தமான சமையல் செய்து, நீங்கள் வந்ததும் ‘ஹப்பி பார்த்டே’ பாடி, கேக் வெட்டிக் கொண்டாடலாம்னு நெனைச்சிருந்தேன். வெளியே போகும் போது என்னையும் அழைச்சுக்கிட்டுப் போவீங்க என்று கற்பனைக் கோட்டை கட்டிக்கிட்டிருந்தேன். எல்லாத்தையும் ஒரு நிமிஷத்துல உடைச்சு எறிஞசுட்டீங்களே!’
‘இதோ பாரு நீ என்னவோ சார்ச்சுக்கு வரப்போறதில்லை. ஸ்கூட்டரில் ஒருத்தரைத்தான்
என்னால் கூட்டிப் போக முடியும். அதனாலே தான் வழக்கம்போல அம்மாவைக் கூட்டிக்
கொண்டு போனேன். திரும்ப லேட்டாயிட்டதனால அப்படியே சாப்பிட்டு விட்டு வந்தோம், அவ்வளவுதான்.’
‘நான் ஒருத்தி... உங்க மனைவி... இங்கே காத்திருக்கிறேன் என்பது கூட
உங்களுக்கு நினைவுக்கு வரவில்லையா? நான் என்ன இந்த வீட்டு வேலைக்காரியா?
‘அப்படி நீ நினைச்சா நினைச்சுக்கோ"" அவன் படுக்கை அறையில்
நுழைந்து கதவை அடித்துச் சாத்தினான். காலையில் எல்லாம் சரியாய்ப் போய் விடும் என்று நினைத்தபடி தூங்கிப் போனான்.
காலையில் ‘குட்மார்னிங்’ இல்லாமல் காப்பி மட்டும் காத்திருந்தது.
காப்பி வாசனையில் மனோ தூக்கம் கலைந்து எழுந்தான். உஷாவுக்குக் கோபம் இன்னமும் தணியவில்லையோ என நினைத்தபடி, குளித்து டிரஸ் மாற்றி, அமைதியாகச் சாப்பிட்டு அவளிடம் ஒன்றுமே சொல்லிக் கொள்ளாமல்  வேலைக்குக் கிளம்பிப் போனான்.
மனைவி என்ற உரிமைகூட இல்லாமல், பிரார்த்னை செய்யமுடியாமல், பூச்சூடமுடியாமல், பொட்டு வைக்க முடியாமல், இது என்ன அடிமை வாழ்க்கை?  ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, விட்டுக் கொடுத்து  நடக்கமுடியும் என்று நினைத்தது எல்லாம் இப்போது அவளுக்கு வெறும் கனவாய்த் தெரிந்தது.    
காதல் என்பது வெறும் கற்பனையோ? காதற் திருமணங்கள் எல்லாம் இப்படித்
தான் தோல்வியில் முடியுமோ? கண்கள் கலங்க குலுங்கிக் குலுங்கி அழுதாள்.
ஒரு பேப்பரும் பேனாவும் எடுத்துக் கடிதம் எழுதத் தொடங்கினாள்.
‘மனோ என்னை, எனது அன்பை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று தான்
நான் இதுவரை காலமும் காத்திருந்தேன். சொந்தம் பந்தம் எல்லாம் துறந்து
உங்களை மட்டுமே நம்பி வந்த எனக்கு நீங்கள் எந்த ஆதரவும் தரவில்லை.
உங்கள் அலட்சியம் என்னை வதைக்கிறது. என்றாவது ஒருநாள் என்னை, எனது அன்பை, உங்களாற் புரிந்து கொள்ள முடிந்தால் எனக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் விடுங்கள். நான் போகிறேன். என்னைத் தேடவேண்டாம்.’
கடிதத்தை மடிக்கும் போது வாசலில் அழைப்புமணி கேட்டது.         
‘யாராக இருக்கும் இந்த நேரத்தில்?’ கதவைத் திறந்தவள் திகைத்துப் போனாள். மனோ!
‘நீங்கள்... நீங்களா... இங்கே... இந்த... நேரத்தில்..?’ அவள் விக்கி விழுங்க...
உள்ளே நுழைந்தான் மனோ.
‘ஒரு முக்கியமான பைலைக் கொண்டு போக மறந்து விட்டேன், அது
தான் எடுத்துப் போக வந்தேன். ஆமா அது என்ன கடிதம்? ஊரிலே
இருந்தா?’
உஷா தன்னைச் சுதாரிக்க முன்பே அவசரமாகக் கடிதத்தை பறித்து
வாசித்தான். அவனுக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை. அமைதியாக
உட்கார்ந்து திரும்பவும் வாசித்தான்.
‘என்ன இது?’ என்பது போல அவளை நிமிர்ந்து பார்த்தான்.
 உஷா கண்களில் நீர் முட்ட தேம்பித் தேம்பி அழத் தொடங்கினாள்.
அவன் மெதுவாக எழுந்து வந்து அவள் கையைப் பிடித்து அருகே
உள்ள நாற்காலியில் உட்கார வைத்தான்.
‘இந்தா பார்.... மனசைப் போட்டு வீணாக அலட்டிக்காதே. ஒருவரை ஒருவர் விரும்பித்தான் நாம் திருமணம் செய்து கொண்டோம். நமக்குள் ஒரு புரிந்துணர்வு இருக்க வேண்டும். உனக்கு நான், எனக்கு நீ. இதை யாராலும் மாற்றவோ, மறுக்கவோ முடியாது. ஆனால் அம்மாவிற்கு நம்மை விட்டால் வேறு துணையில்லை. இந்த வயோதிப வயதில் அவருக்கு நாம்தான் துணையிருக்க வேண்டும். இது ஒரு மகன் தாய்க்குச் செய்யும் கடமையும் கூட. நாளைக்கு நீயும் ஒரு தாயாகும் போது தான் உனக்கு இதன் அர்த்தம் புரியும். வாழ்க்கை என்பது வெறும் கற்பனை அல்ல. இது முற்றிலும் நிஜம். பிரச்சனைகளை விட்டு ஓடிப் போவதால் அவை தீரப்போவதில்லை.’

அவன் பேசப்பேச அவள் அமைதியாக இருந்தாள்.
‘உன்னை மட்டும் சொல்லிப் பயனில்லை. தப்பு என்னிடமும் உண்டு. உன்னுடைய குறைகளை நான் பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை. உன்னுடைய கோணத்தில் இருந்து நான் யோசித்துப் பார்ததிருந்தால், இந்த அளவு போயிருக்காது. நாம் ஒருவரை ஒருவர் பரிபூரணமாகப் புரிந்து கொண்டுவிட்டோம் என்று நம்பிவிட்டேன். அதனால்தான் இப்படி ஒரு சங்கடம் நேர்ந்துவிட்டது.’
அவள் நம்ப முடியாமல் மனோவையே வைத்த கண் மூடாமல் பார்த்துக்  கொண்டு இருந்தாள்.
‘உஷா அழாதேம்மா...!’ உஷாவின் கண்ணீரைத் துடைத்தபடி,. ‘ஒரு நிமிடம் இருக்கிறாயா?.....நான் சீக்கிரம் போய் இந்த பைலைக் கொடுத்து விட்டு ஆபீசுக்கு அரை நாள் மட்டம் போட்டுவிட்டு வந்துவிடுகின்றேன். சரியா..?’ என்று கண்சிமிட்டிச் சிரித்தான்.
ஒரு விதமாக ஆபீஸ் வேலையை முடித்துக் கொண்டு வரும்போது மாலை மூன்று மணி ஆகிவிட்டது.
வரும் வழியிலே புடவைக் கடைக்குள் நுழைந்தான். உஷாவிற்குப் பிடித்தமான மெஜன்தா நிறத்திலே ஒரு புடவையும் மாச்சிங் நிறத்தில் பிளவுஸ_ம் எடுத்தான். தனக்கு ஒரு பட்டு வேட்டி சால்வையும் எடுத்தான். இனிமேல் உஷா கோயிலுக்குப் போகும் போது தானும் பட்டு வேட்டி கட்டிக்கொண்டு அவள் கூடவே போக வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். உஷாவுக்குப் பிடித்த மல்லிகைப்பூ வாங்கிக் கொண்டான்.
தான் செய்த தவறுகளுக்கு பிராயச்சித்தம் செய்வது போன்ற திருப்தி
யோடு வீட்டுக்கு வந்தான் மனோ. வீடு பூட்டியிருந்தது. அம்மா நேற்றைக்கு மாமா வீட்டுப் புதுமனை புகுவிழாவுக்குப் போயிருக்கிறார். நாளைதான் வருவார். ஆனால் உஷா? 
‘சிரித்த முகத்தோடு ஆவலாய் ஓடிவந்து கதவைத் திறப்பாளே, என்ன
ஆச்சு உஷாவிற்கு?’ நினைவில் ஏதோ உறுத்த பதட்ட மடைந்தான்.
நான் அவ்வளவு சொல்லியும் பழையபடி ஏதோ நினைத்துக் கொண்டு…
பக்கத்து வீட்டு மீனுக்குட்டி எட்டிப் பார்த்தாள்.
‘அங்கிள்.. இந்தாங்க சாவி... ஆன்ட்டி வெளியே போய்ட்டாங்க....
நீங்க வந்தா, இந்தச் சாவியைக் கொடுக்கச் சொன்னாங்க.’
நெஞ்சம் படபடக்க கதவைத் திறந்து உள்ளே போனான். சோபாவில் பொத்தென்று அமர்ந்தான். உஷா இல்லாத வீடு வெறுமையைத்தர, அவன் கண்களில் நீர் தளும்பியது.

ஒரே விநாடிதான். வாசற்கதவு திறக்கப்படும் சத்தம். சுட்டென்று திரும்பிப் பார்த்தான். உஷா அவசர அவசரமாக உள்ளே வந்து கொண்டிருந்தாள். 
‘உஷா வந்துவிட்டாயா? என்றபடி ஆனந்தக் கண்ணீர் மல்க ஓடிப்போய் அவளை
அணைத்துக் கொண்டான்.
மனோ அழுவதைப் பார்த்த உஷாவிற்கு அவளை அறியாமலே கண்கலங்கியது.
‘மனோ... என்ன இது... சின்னக் குழந்தை மாதிரி...’ அவள் அவனை அணைத்து தேற்றி உள்ளே கூட்டி வந்தாள்.
‘உங்களுக்கு ‘நான்-வெஜ்’ பிடிக்குமே என்று தான் ஓடிப்போய் சிக்கின்
வாங்கி வந்தேன். இப்படி அழுகின்ற அளவிற்கு என்ன நடந்தது?’
‘அழுகையா.. சேச்சே.. இது ஆனந்தக் கண்ணீர்மா! சரி, சரி.. சட்டுனு சாப்பிட்டுட்டுக் கிளம்பறே.. ஜாலியா சினிமா போயிட்டு, அப்படியே வெளியே டிரைவ் - இன்ல சாப்பிட்டுத் திரும்புவோம். நீ ஆசையா வாங்கிட்டு வந்ததால, இப்ப இந்த சிக்கனை நான் சாப்பிடுறேன். இதுதான் லாஸ்ட்! இத்தோட நான் - வெஜ்ஜூக்கு குட்பை!’ என்றான் மனோ.
ஒருவரை ஒருவர் முழுமையாகப் புரிந்து கொள்ளுதலே உன்மையான காதல் என்பதும், அப்படிப்பட்ட காதல் என்றும் தோற்பதில்லை என்பதும் புரிய, மனோவின் கைகளை அழுத்தமாகப் பற்றிக்கொண்டாள் உஷா.

நன்றி; ஆனந்தவிகடன்

Monday, October 18, 2010

Thodaathey..! - தொடாதே..!

தொடாதே..!    குரு அரவிந்தன்

'பணத்தால் எதையும் வாங்கலாம் என்று ஆணவத்தோடு சொன்னாயே… இப்போ…  உன்னால் முடியுமா என்று பார்…!'

நன்றி: ஆனந்த​விகடன்


வெற்றிக் களிப்போடு முகத்தைத் துடைத்துக் கொண்டு அந்த டவலை பெண்கள் கூட்டத்தை நோக்கி எறிந்தான் பிரதாப்.. அந்த டவலை எடுப்பதற்கு இளம் ரசிகைகள் போட்டி போட, அவன் டென்னிஸ் கோட்டை விட்டு அவர்களை நோக்கி மெல்ல நகர்ந்தான். இளமையின் துடிப்பும், ஆண்மையின் அகங்காரமும் அவன் நடையில் தெரிந்தன. அவன் தனது ரசிகைகளுக்கு மிக அருகே வந்து அவர்கள் நீட்டிய ஆட்டோகிராப்பில் கையேழுத்துப் போட்டான். அவனது பரந்த மார்பும், விரிந்த தோள்களும், முகத்தின் வசீகரமும் நிச்சயமாக எந்த ஒரு பெண்ணையும் ஒருமுறை நிமிர்ந்து பார்க்க வைக்கும்.
அவன் தன் அருகே வரும் வரையும் காத்திருந்தாள் ஜாஸ்மின். ரொம்ப நாகரிகமாக  அவள் உடை அணிந்து இருந்தாள். தனது ஆட்டோகிராப் நோட்டை அவனிடம் நீட்டினாள். அவன் அதை வாங்கி விரித்துப் பக்கங்களில் பார்வையை ஓடவிட்டான்.
‘யுவர் நேம் ப்ளீஸ்!’
‘ஜாஸ்மின்’ என்றாள் சலங்கை ஒலியில்.
‘ஸ்வீட் நேம்... ஐ லைக் இட்’ என்றவன், அவளின் கண்ணுக்குள் எதையோ தேடிப் பார்த்தான். கண்ணோடு கண்கலக்க…
நாணத்தால் அவள் முகம் குப்பென்று சிவக்க, அவனது காந்த விழிகளைத் தவிர்த்து எங்கேயோ தொலைவில் பார்வையை ஓடவிட்டாள். அவளது மௌனம் அவனை மேலும் பேச வைத்தது.
"ஜாஸ்மின்! வெள்ளையாய், மென்மையாய், சுகந்தமாய் நறு மணம் வீசுமே! அந்த மலர் தானே? அந்த மலர் எனக்கு மிகவும் பிடிக்கும்..!"
"பூவை மட்டும் தானா?" என்றாள் ஜாஸ்மின் ஒரு ரசிகையின் ஏக்கத்தோடு.
அவன் எதுவுமே பேசாமல் புன்னகைத்துக் கொண்டே ஆட்டோகிராப்பில் கையெழுத்தைப் பதித்து அவளிடம் திரும்பவும் நீட்டினான்.
‘இன்று உங்க ஆட்டம் ரொம்ப நன்றாக இருந்தது.’
‘தாங்யூ ஜாஸ்மின்.. நீங்க தினமும் இங்கே வருவீங்களா?’
"ஆமா! உங்க ஆட்டமென்றால் எனக்கு உயிர். நீங்க விளையாடும் டெனிஸ் மாட்ச் எதையுமே மிஸ் பண்ண மாட்டேன்."
"அப்போ நீங்கள் எனது ‘நம்பர் ஒன்’ ரசிகை! அப்படித்தானே? ஆமா.. நீங்க தனியாவா  வந்திருக்கீங்க?’
‘ஆமா’
‘எப்படிப் போவீங்க?’
‘பஸ்ல’ ஒற்றைச் சொல்லில் பதில் சொன்னாள்.
‘நான் வேணும்னா டிராப் பண்ணட்டுமா?’
‘வேண்டாம்! உங்களுக்கு ஏன் வீண்சிரமம்.’
‘இதிலே என்ன சிரமம்? என்னுடைய ரசிகைக்கு நான் இந்த சின்ன உதவி கூடச் செய்யக்கூடாதா என்ன?’
‘இருங்க ஒரு நிமிடம், வந்திர்றேன்’ என்றபடி சேஞ்சிங் ரூமுக்குள் அவசரமாய்ப் போனான்.
அடுத்த பத்தாவது நிமிடம்… காரின் முன்ஸீட்டில் அவனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து போவது அவளுக்குப் பெருமையாக இருந்தது. அவனது ரசிகைகள் எல்லாம் பொறாமையோடு அவளைப் பார்ப்பதாக உள்ளுணர்வு சொல்லிற்று. ஃபைவ் ஸ்டார் ஓட்டல் ஒன்றுக்குள் கார் நுழைந்த போது அவன், அவளைப் பார்த்துக் கேட்டான்,
"இந்த ஹோட்டலில் தான் டோர்ணமெண்ட் முடியும் வரை தங்கியிருக்கப் போகிறேன். உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் ரூமுக்குப் போய் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வரட்டுமா?"
அவள் வேறு வழியில்லாமல் தலையசைத்தாள்.
காரை வாசலிலே நிறுத்தி விட்டு,
"காருக்குள்ளே எவ்வளவு நேரம் தனியா உட்காந்திருப்பீங்க.. வாங்க மேலே ரூமிலே இருக்கலாம்!"
காரிலிருந்து இறங்கி அவனோடு நடந்தாள்.
அறையைத் திறந்தவன், இன்டர்காமில் ரூம் சர்வீசைக் கூப்பிட்டு இரண்டு ஐஸ்கிறீம் கொண்டு வரச்சொன்னான்.
அவன் வாஷ் எடுத்து விட்டு பாத்டவலை இடுப்பில் கட்டிக் கொண்டு வெளியே வந்த போது அவள் ஐஸ்கிறீமைச் சுவைத்துக் கொண்டிருந்தாள். அவன், அவளுக்கு அருகே வந்து,
‘எனக்கு ஒரு ஸ்பூண்’ என்றான் வாயைத் திறந்தபடி.
‘நோ...இது..நான் சாப்பிட்டது...எச்சல்...’ என்று பதறினாள் ஜாஸ்மின்;.
‘பரவாயில்லே...’ அவள் கையைப் பிடித்து ஸ்பூனோடு தனது வாய்க்குள் வைத்தான்.
‘ஹெள ஸ்வீட்.......!"
பேசாமல் காரிலேயே இருந்திருக்கலாம், என்று அவள் சங்கடப்பட்டாள்.
நிமிர்ந்து அவனைப் பார்க்கக் கூச்சப்பட்டுத் தலை குனிந்த படி அவசரமாக ஐஸ்கிறீமைச் சாப்பிட்டாள். அவள் உதட்டிலே ஐஸ்கிறீம் உருகி வழிய, அவன் திடீரெனக் குனிந்து அவள் கன்னங்களைக் கையிலேந்தி, தன் உதடுகளால் அவள் உதடுகளில் வழிந்த ஐஸ்கிறீமைச் சுவைத்தான். எதிர் பாராத அவனது இந்தச் செய்கையால் அவள் நிலை குலைந்து குழம்பிப் போய் அவனிடம் இருந்து தன்னை விடுவிக்க முயற்சி செய்தாள்,
‘விடுங்க!.....ப்ளீஸ்’
‘ஐ வாண்ட் திஸ்’ என்றான் உதட்டைக் கவ்வியபடி.
‘வேண்டாம்....ம்....ம்’
‘ஐ லைக் தீஸ் லிப்ஸ்’
‘இருங்க… உங்ககிட்ட நான் கொஞ்சம் பேசணும்!’
‘பேசலாமே... அப்புறம்! ஜாஸ்மின் இந்த உதடுகள் பேசுவதற்கல்ல, சுவைப்பதற்கே!" அவன் அவளது உணர்ச்சிகளைப் பொருட்படுத்தாமல் தன் காரியத்தில் இறங்கினான். அந்த ஆண்மையின் வேகத்தில், சுழியில் அகப்பட்ட துரும்பாக, எதிர்நீச்சல் போட முடியாமல் அவள், அவனுக்குள் அடங்கிப் போனாள்.

அவன் கண் விழித்த போது அவள் விசும்பிக் கொண்டிருந்தாள். அவனிடம் குற்ற உணர்வு இருக்கும் என்று அவள் எதிர்பார்த்தாள். ஆனால் அவனோ கசக்கிப் போட்ட ஒரு மலரைப் பார்ப்பது போல அவளைப் பார்த்தான். ‘இப்படி எத்தனை பெண்களை நான் அனுபவித் திருக்கிறேன்’ என்கிற அகம்பாவம் அவன் பார்வையில் தெரிந்தது.

அடி வயிற்றில் குமட்டிக் கொண்டு வர, மெல்ல எழுந்து உடைகளைச் சரி செய்தபடி யன்னலுக்கு அருகே சென்று வெளியே எட்டிப் பார்த்தாள்.
அவன் எழுந்து அருகே வந்து இயல்பாக அவளின் தோளில் கையைப் போட்டான். அவள் சட்டென்று தன்னிச்சையாக அவனிடமிருந்து விலகிப் போனாள்.
;உன்னை மறுபடியும் சந்திக்கணும்…’ என்றான் தாபத்தோடு.
எதுவும் பேசாமல் வெளியே வெறித்துப் பார்த்தவள்,
‘கட்டாயம் சந்திக்கணுமா?’ என்றாள்.
‘ஆமாம்! உனது விலாசத்தைச் சொன்னால் நானே வந்து சந்திப்பேன்’
அவள் சொன்னாள். அவன் ஒரு கணம் திகைத்துப் போய் அவளை அதிர்ச்சியோடு பார்த்தான்.
‘அது நான் பிறந்த ஊராச்சே!’
‘ஆமா.....ஊராவது ஞாபகமிருக்கிறதே! உங்க வீட்டிற்கு அடுத்த வீட்டிலே இருந்த மலர்விழியை ஞாபகமிருக்கா?
அவன் சிறிது நேரம் சிந்தனையை ஓடவிட்டான்.
‘ஓ… அந்த மலரா நீ?’
‘ஆமாம்! அதே மலர் தான்! பட்டிக்காட்டு மலர் எப்படி ஜாஸ்மீனாய் மாறினாள் என்று பார்க்கிறாயா? பன்னிரண்டு வருஷம் உனக்காகத் தான் காத்திருந்தேன். அறியாப் பருவத்தில் இருந்த என்னை ஆசை வார்த்தைகள் பேசி ஏமாற்றி உன் வலைக்குள் சிக்கவைத்து… உன் பசியைத் தீர்த்துக் கொண்டாய். நியாயம் கேட்ட போது ஊரை விட்டு ஓடிவிட்டாய். எங்கெல்லாமோ தேடினேன். நீ அகப்படவில்லை. என்றாவது ஒரு நாள் உன்னைச் சந்திப்பேன் என்ற நம்பிக்கையில் தான் இத்தனை காலமும் உயிரோடு இருந்தேன். சென்ற மாதம்  பத்திரிகைகளில் எல்லாம் உனது படத்தைப் போட்டு டென்னிஸ் போட்டிக்கு அமெரிக்காவில் இருந்து வரப்போவதாக எழுதி இருந்ததைப் பார்த்தேன். எப்படியாவது உன்னைச் சந்திக்க வேண்டும் என்று தான் இவ்வளவு தூரம் உன்னைத் தேடி வந்தேன். எப்படியோ இன்று என் வலையில் நீ சிக்கிக் கொண்டாய்!’
‘ஹா… ஹா… யார் வலையில் யார் சிக்கியது? கூனிக் குறுகி நிற்கும் அவளைப் பார்க்கப் பாரக்க அவனுக்குச் சிரிப்புத்தான் வந்தது.
‘ஸ்போட்ஸில் உள்ள ஆர்வம் காரணமாய் உன்னைத் தேடி வந்த எத்தனையோ அப்பாவிப் பெண்களை நீ ஏமாற்றி இருக்கிறாய் என்று அறிந்தேன். தயவு செய்து இனி மேலும் தப்பான வழியில் போகாதே, ஆசை காட்டி அவர்களை மோசம் செய்யாதே என்று சொல்லத்தான் உன்னை தேடி இங்கு வந்தேன்.’
‘இப்ப உனக்கு என்ன வேணும்? என்னை பிளாக் மெயில் பண்ணப் போறியா? உனக்குப் பணம் தேவையா?’
அவன் தேவையில்லாமல் பதட்டப் படுவதைப் பார்த்து அவள் மனதுக்குள் சிரித்துக் கொண்டாள்.
‘பெயர், புகழ், பணம் இவையெல்லாம் என்ன செய்யும்? எவ்வளவு காலத்திற்கு இவை உன்னோடு நிலைச்சு நிற்கும்?’
‘ஏன்? என்னாலே பணத்தைக் கொண்டு எதையும் சாதிக்க முடியும்!’
‘அப்படித்தான் நானும் நினைத்தேன். ஆனால் சில வருடங்களுக்கு முன் நடந்த ஒரு கார் விபத்தில் பலமாக அடிபட்டு ஆபத்தான நிலையில் நானிருந்தேன். எனக்கு இரத்தம் அதிகம் சேதமாகிவிட்டது. அப்போது அவசரத்திற்கு யாரோ இரத்தம் கொடுத்து என்னைக் காப்பாற்றினார்கள். அப்புறம் தான் தெரிய வந்தது அந்த இரத்தத்தில் எயிட்ஸ் கிருமியும் கலந்திருந்தது என்று. காலம் கடந்தபின் எதுவுமே என்னால் செய்ய முடியவில்லை! உன்னை எச்சரிப்பதற்காகத்தான் என்னைத் தொடாதே! என்று சொல்ல வாயைத் திறந்தேன். ஆனால் நீயோ என்னைப் பேசவே விடவில்லை. பணத்தால் எதையும் வாங்கலாம் என்று ஆணவத்தோடு சொன்னாயே… இப்போ… நீயே தேடிக் கொண்ட எயிட்சுக்கு மாற்று மருந்து உன்னால் வாங்க முடியுமா என்று பார்…!’
அவன்  என்ன செய்வது என்று தெரியாமல், அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போய் நிற்க, அவள்  கண்களைத் துடைத்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறினாள்.

நன்றி: ஆனந்த​விகடன்

K.S. Balachandran - Puthiya Pakkam - கே. எஸ். பாலச்சந்திரன்


Sunday, October 17, 2010


குரு அரவிந்தன் தென்னிந்திய சஞ்சிகைகளில் பரந்த விநியோகமுள்ள ஆனந்தவிகடன், குமுதம், கல்கி போன்ற இதழ்களில் நிறைய எழுதியவர். எழுதிக்கொண்டிருப்பவர்.

தாங்கள் எழுதிய "ஒரு துணுக்கு" இச்சஞ்சிகைகளில் பிரசுரிக்கப்பட்டு விட்டாலே எவ்வளவு பரபரப்பு காட்டுபவர்களை நான் நேராகவும், இணையத்திலும் சந்தித்திருக்கிறேன். வாழ்த்து சொல்வோர் எத்தனை..

'அசத்திட்டே மாப்பிளை.. கை கொடுங்க..இத்யாதி.. இத்யாதி..'

ஆனால் இவ்வளவு எழுதிய குரு அரவிந்தனை அவர் அடக்கத்துக்காக பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

ஒரு பக்கக்கதை, இரண்டு பக்கக்கதை போடுவதற்கே (இடம் இன்மையால்) சிரமப்படும் ஆனந்த விகடன் போன்ற சஞ்சிகையில் இவர் எழுதிய முழு நீள நாவலே ("நீர் மூழ்கி..நீரில் மூழ்கி")ஒரே இதழில் புகழ்பெற்ற ஓவியர்கள் நாலைந்து பேரின் சித்திரங்களுடன் வெளியானது நம்மவரில் எத்தனை பேருக்குத் தெரியும்? ஆனால் தென்னிந்திய வாசகர்கள் பல ஆயிரம் பேருக்குத் தெரியும்

ஆனந்தவிகடன், குமுதம் சஞ்சிகைகளில் எழுதினால் தாழ்வான காரியமா?. ஜெயகாந்தன், ஜெயந்தன், கல்கி, சாண்டில்யன், அகிலன் எல்லோரும் இந்தப்பத்திரிகைகளில் எழுதித்தானே வாசகர்களிடம் அபிமானம் பெற்றார்கள்.


நாலே நாலு இதழ்கள் வெளிவந்து சொல்லாமல் கொள்ளாமல் நின்று போய்விடும் "இலக்கியச் சிற்றிதழ்களில்" எழுதினால் தான் எழுத்தா? எழுத்து யாருக்காக எழுதப்படுகிறது?

அண்மையில் ஒரு கலை இலக்கிய நண்பர் ஒருவர் சொன்ன கதை ஞாபகத்திற்கு வருகிறது. இலங்கையின் ஒரு பிரபல கவிஞர் தனது கவிதையை யாராவது " என்னய்யா.. உங்கள் கவிதை ஒன்றுமே புரியவிலையே" என்றவுடன், ஒரு மமதை சிரிப்பு சிரிப்பாராம்.

"அப்படித்தான்.. என் கவிதை உங்களுக்கு எல்லாம் புரியாது" என்பதுபோல.. அவர் யாருக்காக எழுதுகிறார் எனபது கடவுளுக்குத் தான் வெளிச்சம்.

குரு அரவிந்தனின் இணையப் பக்கம் அவரது வெளிவந்த கட்டுரைகள், சிறுகதைகள் உடன் இணையத்திற்காகவே எழுதப்பட்ட படைப்புகளுடன் சிறப்பாக இருக்கின்றது. தொடர்ந்து இணையத்திலும் நிறைய எழுதுங்கள் குரு.


கே. எஸ். பாலச்சந்திரன்

Sunday, October 17, 2010

Saturday, October 9, 2010

K.S.Balachandran's - கரையைத்தேடும் கட்டுமரங்கள்

கே. எஸ். பாலச்சந்திரனின் கரையைத்தேடும் கட்டுமரங்கள்.

குரு அரவிந்தன்

தாகம் வந்தால் நீரைத்தேடுவது, பசிக்கும்போது உணவைத்தேடுவது, காதல் உணர்வின்போது இணையைத் தேடுவது, பக்தி உணர்வின்போது இறைவனைத் தேடுவது இப்படியே ஒவ்வொரு உணர்விற்கும் ஒவ்வொரு வகையான தேடல் இருக்கும் போது, இந்த நாவலில் வரும் கட்டுமரங்களுக்கும் ஒருவித தேடல் இருந்திருக்கிறது. கட்டுமரங்கள் கரையைத் தேடுவதாகச் சித்தரிக்கப்பட்டிருந்தாலும், உண்மையில் தமது உயிரைச் துச்சமாக மதித்து ஆழ்கடலுக்குச் செல்லும் தொழிலாளர்களின் மனவோட்டத்தை, அவர்களின் வாழ்க்கை என்ற ஓடம் தத்தளிக்கும் போது கரைசேர்வதற்கான தேடல்களைச் சொல்லாமல் சொல்லி நிற்கிறது இந்த கரையைத்தேடும் கட்டுமரங்கள் என்ற நாவல்.

ஈழத்து மூத்த கலைஞர்களில் ஒருவரான கே. எஸ். பாலச்சந்திரன் அவர்கள் அருமையான ஒரு படைப்பைத் தமிழ் இலக்கிய உலகிற்குத் தந்திருக்கிறார். ஈழத்து வடபகுதியில் உள்ள, கடலும் கடல் சார்ந்த நெய்தல் நிலத்து மக்களையும், அவர்களின் வாழ்க்கை நெறிகளைப் பற்றியதுமான இந்த நாவல் ஒவ்வொரு இலக்கிய ஆர்வலர்களும் வாசிக்க வேண்டிய நூலாகும். நெய்தல் நிலச் சூழலில் எழுதப்பட்ட நாவல்கள் தமிழில் மிகக் குறைவாகவே இருக்கின்றன என்றே சொல்லலாம். சின்ன வயதிலே தமிழில் வாசித்த தகழி சிவசங்கரபிள்ளையின் செம்மீன், அதன்பின் ஆங்கிலத்தில் வாசித்த ஏணஸ்ட் ஹோமிங்வேயின் (Ernest Hemingway) ஓல்ட் மான் அன் த சீ (The Old Man and the Sea) போன்ற நாவல்களில் வரும் அனேகமான பாத்திரங்கள் இன்றும் மனதைவிட்டகலாது நிற்கின்றன. தமிழில் இவ்வாறான சூழ்ல் சார்ந்த சில படைப்புக்கள் வெளிவந்தாலும், இலக்கிய ஆர்வலர்களால் அவை பற்றி அதிகம் பேசப்படவில்லை. ஈழத்திரைப்படமான வாடைக்காற்று என்ற படத்தின் மூலம் ஏற்பட்ட அனுபவங்களையும், மீனவநண்பன் என்ற நிகழ்ச்சிக்காக் கிடைத்த தேடல்களையும் ஆசிரியர் தனது நினைவில் கொண்டுவந்து இந்த நாவலில் பயன்படுத்தியிருக்கிறார்.

நெய்தல் நிலச்சூழலில், ஈழத்து மீனவக் குடும்பங்களைப் பற்றிய கருவைக் கொண்டு எழுதப்பட்ட இந்த நாவல் பல உண்மைச் சம்பவங்களை எடுத்துச் சொல்வது மட்டுமல்ல, இன்றைய காலகட்டத்தில் ஈழத்தமிழர்களின் இருப்பைக் குறிக்கும் ஒரு ஆவணமாகவும் இருப்பதற்குரிய தகுதியை இந்த நாவல் கொண்டிருக்கிறது என்பதே முக்கியமாகக் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய விடையமாகும். முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பாக எழுதப்பட்ட இந்த நாவலில் வரும் பாத்திரங்கள், அவர்கள் வாழ்ந்த இடங்கள் எல்லாமே நிஜமானவை. இந்த நாவலில் அவர்களது வாழ்க்கைமுறை, பண்பாடு, கலாச்சாரம் போன்றவற்றை எடுத்துச் சொல்லப்படுகிறது. இன்று நாடு இருக்கும் சூழ்நிலையில், இவற்றை எல்லாம் ஆவணப்படுத்த வேண்டிய தேவைகள் இருப்பதால் இவற்றைக் கட்டாயம் குறிப்பிட்டே ஆகவேண்டும். ஏனென்றால் 1970ல் இந்த நாவலுக்குரிய களம் அமைதியான சூழ்நிலையில் இயற்கையோடு ஒன்றிப் போயிருந்தது. இந்தப் பகுதிகளில், குறிப்பாக இலங்கையின் வடக்குக், கிழக்கு மாகாணங்களில் எல்லாம் மக்களின் சகஜமான வாழ்க்கை தங்குதடையின்றித் தொடர்ந்து கொண்டே இருந்தது. இந்த நாவலில் வரும் அனேக பாத்திரங்கள் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். போத்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆகியோர் எமது மண்ணை ஆக்கிரமித்தபோது அந்த மண்ணில் வாழ்ந்த இந்துக்கள் மதமாற்றம் செய்யப்பட்டார்கள். விரும்பியோ விரும்பாமலோ இந்த மதமாற்றங்கள் இடம் பெற்றன. இப்படியான சூழ்நிலையிலும் காங்கேயன்துறை, மயிலிட்டி போன்ற கரையோரத்தில் வாழ்ந்த மீனவர்களில் அனேகமானவர்கள் இந்துக்களாகவே தொடர்ந்தும் இருந்தனர். அவர்களின் குலதெய்வமான செல்வச் சந்நிதி முருகனையே அவர்கள் வழிபட்டு வந்தார்கள் என்பதையும் ஒரு வரலாற்றுச் சான்றாக இங்கே குறிப்பிட விரும்புகின்றேன். மதங்களிடையே எந்த வேற்றுமையும் இன்றி இந்தப் பகுதிகளில் வாழ்ந்த தமிழ் மக்கள் ஒனற்றுமையாகவே வாழ்ந்து வந்தார்கள். இன்று இந்த மண்ணில் பெரும்பான்மை இனமான சிங்கள பொளத்த ஆக்கிரமிப்பு நடந்திருப்பதால் இனி வருங்காலங்களில் அவர்களின் மொழியும், மதமும் இந்த மண்ணில் திணிக்கப்படலாம், மதமாற்றங்கள் இடம் பெறலாம், இன்று புத்தளம், நீர்கொழும்பு போன்ற பகுதிகளில் தமிழ் மொழியின் பாவனை வலுவிழந்தது போல இந்த மண்ணிலும் நடக்கலாம். வலுக்கட்டாயமாகச் சரித்திரம் கூட மாற்றப் படலாம் என்பதாலேயே இந்த நூல் ஒரு சிறந்த ஆவணமாக ஈழத்தமிழருக்கு இருக்கவேண்டும், எதிர்கால சந்ததியினரிடம் இந்தத் தகவல் சென்றடைய வேண்டும் என்பதையே நான் விரும்புகின்றேன்.

இனி நாங்கள் நாவலுக்குள் செல்வோம். யாழ்பாணக் குடாநாட்டில் வடக்குத்திசையின் கடற்கரையோரத்தில் மேற்கேயிருந்து கிழக்காக மாதகல், கீரிமலை, காங்கேயன்துறை, மயிலிட்டி, பலாலி, மான்பாய்ஞ்சவெளி, தொண்டமானாறு, வளளாய், வல்வெட்டித்துறை, அல்வாய், பருத்தித்துறை போன்ற முக்கியமான கடற்கரையோர நகரங்கள் இருக்கின்றன. இவற்றில் ஒரு மீனவ குக்கிராமமான மான்பாய்ஞ்சவெளி தான் கதைக்களமாக இந்த நாவலில் வருகின்றது.பலாலி, தொண்டமானாறு இராணுவ முகாங்களின் ஆக்கிரமிப்பு காரணமாக இந்தக் குக்கிராமம் இன்று காணாமல் போய்விட்டது. ஸ்ரெல்லா, அந்தோனி, சில்வியா, மரியாம்பிள்ளை, மதலேனாள், எலிசபெத், மேரி என்று இதில் வரும் பாத்திரங்கள் அப்படியே மனதில் பதிந்து விடுகிறார்கள். நாவலை வாசிக்கும்போது நீங்களும் அவர்களுடன் சேர்ந்து வாழ்வது போன்ற உணர்வை ஆசிரியர் தனது எழுத்து வன்மையால் ஏற்படுத்துகின்றார். அவர்களையும் யுத்தம் தின்றுவிட்டதோ தெரியவில்லை. ‘முற்றத்தில் நின்ற  செவ்விளநீர் மரத்தில் சாய்ந்து, காலை மடித்து தென்னையில் ஊன்றி நின்று கொண்டு…’ எவ்வளவு அவதானமான கவனிப்பின் வெளிப்பாடு, ‘விடிந்தால் பொழுதுபட்டால் அடுப்புக்குள் நெருப்புத் தின்று…! என்பது போன்ற வார்த்தைப் பிரயோகம், செழியனின் அருமையான கவிதை வரிகள், ஆட்காட்டிக் குருவியின் வேதனைப் புலம்பல், இப்படியே ஒவ்வொரு அத்தியாயமும் தொடருகிறது. ஒரு சில இடங்களில் நாவலில் தொய்வு ஏற்பட்டாலும், மீனவர்களின் பாவனையில் இன்றும் இருக்கும் சொற்களையே பாவித்து மிகவும் சுவாரஸ்யமாக கதையை நகர்த்திச் செல்கிறார் கதை ஆசிரியர். புங்குடுதீவைப்பற்றி நிறைய விடையங்களை இந்த நாவல் மூலம் அறியமுடிகிறது. ஒருகாலத்தில் கடல் மார்க்கமாகவே செல்லக் கூடியதாக இருந்த புங்குடு தீவிற்கு, தரைப்பாதை போடப் பட்டதால் போக்குவரத்து இலகுவாக்கப்பட்டது. மீனவர்கள் தரைப்பாதை வழியாகவும் அங்கு சென்று வாடி அமைப்பதற்கு பெரும் உதவியாக இருந்தது. மொத்தத்தில் அருமையான ஒரு நாவலை ரசிச்சு வாசிச்சுப் பல விடையங்களைப் புரிந்து கொள்ளச் சந்தர்ப்பம் கொடுத்த கே. எஸ். பாலச்சந்திரனுக்கு எனது மனமார்ந்த நன்றி.

இந்த நூல் சிறந்த படைப்பிலக்கிய  நாவலுக்கான அங்கீகாரம் பெறவேண்டும் என்று தனது ஆதங்கத்தை நண்பர் பி.எச். அப்துல் ஹமீத் தனது முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். தங்களைத் தாங்களே விமர்சகர்களாக ஆக்கிக் கொண்ட ஒருசில நவீன விமர்சகர்கள் ஈழத்து படைப்பிலக்கியத்தில் இந்த நாவலைச் சேர்த்துக் கொள்ளப் பின்நிற்பார்கள் என்பதில் எனக்குச் சந்தேகமேயில்லை. தங்கள் விமர்சனத்தில் இருந்து இந்த நாவலை வேண்டுமென்றே தவிர்த்து விடுவார்கள். ஏனென்றால் ஏதாவது தகாத வார்த்தைப் பிரயோகங்களையோ, அல்லது பாலியல் உணர்வுகளைத் தூண்டிவிடக் கூடிய சம்பவங்களையோ ஆசிரியர் இந்த நாவலில் எந்த ஒரு இடத்திலும் வலிந்து புகுத்தவில்லை என்பதே அவர்களின் பெரிய குறையாக இருக்கும். அதுவும் கதை நாயகி தனது உணர்ச்சிகளை இத்தகைய வார்த்தைகள் மூலம் வெளிக் கொட்டுவது போல ஆசிரியர் கதையை நகர்த்திச் சென்றிருந்தால் எப்பொழுதோ இந்த நாவலுக்கு மகுடம் சூட்டப்பட்டிருக்கும். அப்படி வெளிக்காட்டக் கூடிய பல சந்தரப்பங்கள் இருந்தும் ஆசிரியர் அதைப் பயன்படுத்தவில்லை. ஆசிரியரின் முதல் நாவல் என்பதால் ஆசிரியர் இந்த சூட்சுமத்தை அறிந்திருக்கவில்லையோ, அல்லது மொழி நாகரிகம், பண்பாடு கருதி, சமுதாயம் சீரழிய எழுத்தாளன் காரணமாக இருக்கக்கூடாது என்ற தனது கொள்கை காரணமாக இதைப் புகுத்தவில்லையோ தெரியவில்லை. முப்பத்தைந்து, நாற்பது வருடங்களுக்கு முன் ஈழத்தமிழ் மீனவரின்; வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை அறிந்து கொள்ள நீங்களும் விரும்பினால், இந்த அருமையான நாவலை ஒரு தடவையாவது வாசித்துப் பாருங்கள். ஈழத்து ஓவியர் ரமணி இந்த நாவலுக்கு அட்டைப்பட ஓவியம் வரைந்திருக்கிறார். பி. எச். அப்துல் ஹமீதின் முன்னுரையோடு, இந்த நாவலை வடலி பதிப்பகத்தினர் சிறப்பாக வடிவமைத்து பிரசுரித்திருக்கிறார்கள்.

கே. எஸ். பாலச்சந்திரனின்

சொல் புதிது...சுவை புதிது

Kulanthai Kavithaikal - குழந்தைக் கவிதைகள்

மகாஜனாவின் குழந்தைக் கவிதைகளின் பாரம்பரியம்.
குரு அரவிந்தன்

Kulanthai Kavithaikal

இன்று புலம் பெயர்ந்த தமிழர்களின் முக்கிய பிரச்சனையாக இருப்பது தங்கள் தாய் மொழியை, எப்படித் தாங்கள் புலம் பெயர்ந்த நாடுகளில் தக்கவைப்பது என்பதே. தமிழர்களின் தாய் மண்ணில் இருந்து தமிழர்களுக்கு எந்த ஒரு வகையான அரச உதவியும் கிடைக்காத இப்படியான ஒரு சூழ்நிலையில், தாய் மொழியைக் காப்பாற்றி அடுத்த தலைமுறையினரிடம் கொடுக்க வேண்டிய கடமையும் புலம் பெயர் தமிழர்களின் கையில்தான் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. தமிழ் இனத்திற்குப் புலம் பெயர்ந்த மண்ணில்  இது ஒரு சவாலாகவும் இருக்கிறது. இதை எப்படிச் சாத்தியமாக்கலாம், எந்த வகையில் இந்த மண்ணில் தமிழ் மொழி அழியாமல் காப்பாற்றுவதற்குத் துணை புரியலாம் என்று சிந்தித்தால் அதற்கான பலவழிகள் புலப்படும். முதலில் அவற்றைச் செயற் படுத்துவதற்கு முயற்சி எடுக்க வேண்டும். முக்கியமாக குழந்தைகள் தமிழ் மொழியைக் கற்பதற்கான சாத்தியமான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். தொட்டதற்கெல்லாம் யாரையாவது குறை கூறிக் கொண்டே இருக்காது, இருப்பதை வைத்துக் கொண்டு இலட்சியத்தை அடைய முயற்சிக்க வேண்டும். குழந்தைகளின் மொழி விருத்தியில் கவனம் செலுத்தும்போது, குழந்தைகள் மொழியை எப்படி இலகுவில் கற்றுக் கொள்கிறார்கள் என்று ஆராய்ந்து பார்த்தால், குழந்தைகளின் உளவியற்படி ஓசை வடிவத்தில் வெளிவரும் பாடல்கள் மூலமே அவர்கள் மொழியை இலகுவில் கற்றுக் கொள்கிறார்கள் என்பது தெரியவந்திருக்கிறது. ஆங்கிலத்தில் கூட நேசறிறைம் (Nursery rhyme) என்ற பாடல்கள் புகழ் பெற்றதற்கு இதுதான் காரணம். பொதுவாகச் சிறுவர் என்று கூறும்போது அவர்களை மூன்று பிரிவாகப் பிரிக்கலாம். 1-6 வயதுவரை(Basic), 7-8 வயதுவரை(Primary), 9-11 வயதுவரை(Elementary) என்று இவர்களைத் தரம் பிரிக்க முடியும். இதை மனதில் கொண்டு, அப்படியானதொரு முயற்சி மூலம் இத்தகைய வயதினருக்கு ஏற்றமாதிரி சிறுவர், சிறுமிகளுக்குக் கிடைத்த அருமையான சிறுவர் பாடல்கள் அடங்கிய தொகுப்புத்தான் மகாஜனன் தந்த குழந்தைகளுக்கான இந்தக் கவிதைத் தொகுப்பாகும்.

ஈழத்து இலக்கியப்பரப்பிலே மகாஜனக் கல்லூரி மாணாக்கர் பரம்பரையினர் நாவல், சிறுகதை, கவிதை, நாடகம், கட்டுரை, சினிமா போன்ற துறைகளிலே ஆழமான தடத்தினைப் பதித்துள்ளனர். அந்த வகையிலே தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி சிறுவர் இலக்கியத்திற்காக மிகப்பெரியதொரு சேவையை ஆற்றியிருக்கிறது. அன்று தொட்டு இன்றுவரை இலக்கியப் பாரம்பரியத்தில் புகழ் பெற்றது மகாஜனாக் கல்லூரி. இவர்களின் நூற்றாண்டை (2010) முன்னிட்டு குழந்தைக் கவிதைகள் என்ற தொகுப்பைத் தற்போது வெளியிட்டிருக்கிறார்கள். ஆனாலும் சில பழைய மாணவர்களான கவிஞர்களின் ஆக்கங்கள் இத்தொகுப்பில் இடம் பெறவில்லை என்பதை அவதானிக்க முடிகிறது. குழந்தைகளுக்கான கவிதைகளை அவர்கள் எழுதாமல் இருந்திருக்கலாம் அல்லது தவிர்க்க முடியாத காரணங்களால் அவர்களின் ஆக்கங்கள் விடுபட்டுப் போயிருக்கலாம். இருந்தாலும் பல சிரமங்களுக்கு மத்தியில், பாவலர் துரையப்பாபிள்ளையின் கவிதைப் பாரம்பரியத்தில் வளர்ந்த, கல்லூரியில் கல்வி கற்ற மாணவர்களினதும், கற்பித்த ஆசிரியர்களினதும் குழந்தைப் பாடல்கள் சிலவற்றை ஒன்றாகச் சேகரித்து இத்தொகுப்பில் இடம் பெறச்செய்திருக்கிறார்கள். இந்த முயற்சிக்குப் பாரபட்சம் காட்டாது முன்னின்று உழைத்த மயிலங்கூடலூர் பி. நடராசன், எழுத்தாளர் திருமதி கோகிலா மகேந்திரன், ம.பா. மகாலிங்கசிவம் போன்றோரும், தற்போதைய அதிபர் திருமதி சிவமலர் அனந்தசயனன், முன்னாள் அதிபர் திரு. பொ. சுந்தரலிங்கம், இதற்கான நிதி உதவி புரிந்த முன்னாள் ஆசிரியர் திரு. க. செல்வகுணச்சந்திரன் ஆகியோரும் பாராட்டப்பட வேண்டியவர்கள். ஈழத்து ஓவியர் ரமணி அவர்கள் குழந்தைக் கவிதைகளுக்கு ஏற்றவாறு அழகான அட்டைப்படம் வரைந்திருக்கிறார்.

‘ஈழத்து தமிழ்க்கவிதை வரலாற்றிலே குழந்தைப்பாடல்களுக்கு தனித்துவமான சிறப்பம்சம் எப்பொழுதும் உண்டு’ என்று இந்நூலுக்கு அணிந்துரை எழுதிய யாழ். பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் எஸ். சிவலிங்கராசா தனது அணிந்துரையில் குறிப்பிடுகின்றார். 1918ம் ஆண்டு குழந்தைகளுக்காக ச. வைத்திநாதர் என்பவர் குழந்தைப் பாடல் தொகுதி ஒன்றை வெளியிட்டிருந்ததாகவும், 1935ம் ஆண்டு நவாலியூர் சோமசுந்தரப் புலவர் உள்ளிட்ட பலரின் பாடல்கள் அடங்கிய ‘பிள்ளைப்பாட்டு’ என்ற தொகுதி அப்போதைய வித்தியாதரிசியாக இருந்த க. ச. அருணந்தியின் பெருமுயற்சியால் ஈழத்தில் வெளிவந்ததாகவும் தெரிவிக்கின்றார். குழந்தைகள் வாய்விட்டுப் பாடக்கூடியதாகவும், இனிய ஓசையோடு அபிநயக்கத் தக்கதாகவும் பாடல்கள் அமைய வேண்டும் என்றும், இத்தொகுப்பில் பெரும்பாலான பாடல்கள் இயற்கை, சுற்றுச்சூழல், உறவுமுறைகளை மனதில் கொண்டு எழுந்தவையாகவும், அனேகமாக குழந்தைகளுக்கு உபதேசம் அல்லது புத்திமதி சொல்வதாய் இருப்பதாகவும், குழந்தைப் பாடல்கள் பற்றி ஆய்வினைச் செய்பவர்களுக்கு சிறந்ததொரு களஞ்சியாமாக இத்தொகுப்பு அமையும் என்றும் மேலும் குறிப்பிடுகின்றார்.

இத் தொகுப்பில் நாற்பத்தி நாலு கவிஞர்களின் நூற்றிப் பதின்நான்கு குழந்தைக்  கவிதைகள் இடம் பெற்றிருக்கின்றன. முதற் கவிதையாக இடம் பெற்றிருப்பது கவிஞரும், கல்லூரி ஆசிரியருமான அமரர் செ. கதிரேசன்பிள்ளையின் வண்ணத்துப் பூச்சி, பாசம், விடிவெள்ளி போன்ற பாடல்களும், அடுத்து மஹாகவி. து. உருத்திரமூர்த்தியின் கோடை வெய்யில் கொதிக்கிறதே, விந்தை அறிந்திடு, சின்னக் குருவி பறக்கிறது போன்ற பாடல்களும், அடுத்து வருவது பன்மொழிப் புலவர் மயிலங்கூடலூர் த. கனகரத்தினத்தின் எங்கள் வீடு நல்ல வீடு, ஆனை வந்தது, சூழல் மாசுபடுமோ போன்ற பாடல்களும் தெடர்ந்து பண்டிதர் சி. அப்புத்துரையின் பனை மரம் பற்றிய பூலோக கற்பகதரு, அப்பா சொல்லே மந்திரம், அன்னை எங்கள் உயிராவாள் என்ற பாடல்களும், அடுத்து கல்லூரிக் கீதம், கொடிக் கீதம் போன்றவற்றைத் தந்த புலவர் நா. சிவபாதசுந்தரனாரின் மின்மினி, செ. சிவசுப்பிரமணியத்தின் பட்டம் பறக்குது, தேரில் வாறார், எங்கள் வீட்டு நாய், புலவர் ம. பார்வதிநாதசிவத்தின் பள்ளிக்கூடம் செல்கிறோம், அழகிய முயல், அம்புலிமாமா,  கவிஞர் மயிலங்கூடல் நடராசனின் நல்ல வாத்தியார், நாட்டைக்காத்த பாலன், ஆற்றில் வீழ்ந்த ஆடுகள், பத்திரிகை ஆசிரியர் ஆ. சிவநேசச்செல்வனின் பஸ்வண்டி, தொழில் புரிவோமே, காக்காய் ஏனோ கரைகிறது, பேராசிரியர் சபா. ஜெயராசாவின் காவடி வந்தது, வா வா மழையே, பாடுக பாட்டு, எழுத்தாளர் திருமதி கோகிலா மகேந்திரனின் குரும்பைத் தேர், கோழிச்சேவல், அவை காட்டும் வழி,  யாழ். பல்கலைக்கழகப் பேராசிரியர் என். சண்முகலிங்கனின் பாப்பாவும் பாட்டியும், அன்னை தந்த கவிதை, சின்னக் கண்ணம்மா, வாகீச கலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரனின் பாலர் நாங்கள் ஆடுவோம், கல்வியெனும் செல்வம், புத்தகம், திருமதி மரகதவல்லி சர்வானந்தராசாவின் நிலா, மயில், கிளி தெல்லியூர் நா. ஆறுமுகத்தின் கொழும்பு மாம்பழம், சுற்றி வந்து கூவுதே, சைவப்புலவர் சு. செல்லத்துரையின் கோயிலுக்குச் செல்வோம், பூமித்தாய், தெய்வப்பசு, திருமதி சௌ. பத்மநாதனின் தாளம் போடு, மலரடி பணிவோமே, கும்மிப்பாட்டு, திருமதி பகீரதி கணேசதுரையின் எழுக சிறுவர் இதயமே,  அன்னை மொழி, இயற்கைத் தேவன், இ. ஞானேஸ்வரனின் அம்புலிமாமா, நாட்டுக்குள் போகலாமா, பாப்பாக்கூட்டம் பாருங்கள், திருமதி ஜெயரஞ்சனி மயில்வாகனனின் நிலாவில், ஆசானைத் தொழுவாய், நான் ஒரு சுகதேகி, செல்வி இராஜேஸ்வரி செனகரத்தினத்தின் பாலர், மழை, குருவிப்பாட்டு, திருமதி சிவனேஸ்வரி பரமசிவத்தின் அன்னை, பாடசாலை, எறும்பு, க. வாணி முகுந்தனின் முத்தம், பூக்கள், பா. பாலமுரளியின் அறிவை வளர்க்கும் கடவுள், கதிரோன் வந்தான், விமானப்பறவை, திருமதி சாமினி பிரதீபனின் சிலை, க. ஆதவனின் கனவுக்காட்சி, சொல்லம்மா,  கவிஞர் உ. சேரனின் உழைப்பு, திருமதி பாரதி. சேந்தனாரின் மூடப்பூனை, காகம், வட்டநிலா, ம. பா. மகாலிங்கசிவத்தின் சுட்டித் தங்கை,  எல்லோர்க்கும் உதவுவேன், வண்ணத்துப்பூச்சி, எழுத்தாளர் குரு அரவிந்தனின் வாத்து, சிரிக்கும் மலர்கள், ஈசன் பாதம் பணிவோமே, கவிமணி க. ஆனந்தராசாவின் சொல்லிலல்ல செயலில் காட்டு, அம்மா எம் தெய்வம், இரா. ஜெயக்குமாரின் காலையில் காணுபவை, எங்கள் அப்பா, நல்லவராய் வாழுவோம், சி. சிவசிவாவின் பெரியபள்ளி,  ரோஜாப்பூ, ஒரு நாள் பொழுது, பூ. நகுலனின் அன்னையின் துணைகள், தமிழைக் கற்றுயர்வோம், பட்டங்கள் பெற்றிடுவோம், வே. செவ்வேள்குமரனின் கண்ணா ஓடிவா, எனது உறவினர், அம்மா மிகவும் நல்லவர், மா. பிரவீணனின் தாரகை, சுதந்திரப்பயிர், உழைப்பின் அருமை, செல்வி ஜே. கவிதாவின் வண்ணமான நிறங்கள், சூழல் என்றொரு புத்தகம், செல்வி க. சுபாஜினியின் இனிய பிறந்தநாள், செல்வி சஜீதா சண்முகரத்தினத்தின் நாய்க்குட்டி, செல்வி புராதனி ஏழூர்நாயகத்தின் ரோஜாப்பூ, பள்ளிக்குச் செல்வோம், இ. தனஞ்சயனின் சமாதானம், உத்தமராய் உயர்வோம், வானமழை, செல்வி கோபிகா குமாரவேலுவின் பாலர் விளையாட்டு, நாளும் கற்றல் செய்திடுவோம், மழை, செல்வி ஸ்ரீபுராதனி இராஜகோபாலனின் உயிர் எழுத்து, ரோஜாப்பூ, ஆசிரியர், சு. சர்மிகாவின் கேளாய் மகனே போன்ற பல்வேறு தலைப்பிலான பாடல்களும் இத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன.

இன்றைய சூழ்நிலையில் இத்தகைய அருமையான குழந்தைக் கவிதைகள் இசையோடு கூடிய ஒலி வடிவமைப்பிலோ, அல்லது காட்சிகளோடு கூடிய ஒளி அமைப்பிலோ குறுந்தட்டுக்களாக வெளிவந்தால் இன்னும் சிறப்பாக, குழந்தைகளை அதிகம் கவரக்கூடியதாக இருந்திருக்கும். மகாஜனாக்கல்லூரி பழைய மாணவர்களான அவுஸ்ரேலியாவில் வசிக்கும் மாவை நித்தியானந்தனின் பாப்பாபாரதி, கனடாவைச் சேர்ந்த குரு அரவிந்தனின் தமிழ் ஆரம் போன்றன இத்தகைய குழந்தைப்பாடல்கள் அடங்கிய குறுந்தட்டுக்களாக ஒலி, ஒளிவடிவில் ஏற்கனவே வெளிவந்திருக்கின்றன. குரு அரவிந்தனின் தமிழ் ஆரம் குழந்தைப் பாடல்கள் குழந்தைகளை மிகவும்  கவர்ந்திருப்பதை, மூன்று குருட்டு எலி என்ற தனது படைப்பில் எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்களே எடுத்துக்காட்டிப் பாராட்டியிருப்பதையும் இங்கே குறிப்பிடத்தக்கது. பல தலைப்புக்களில் பலவிதமான சிறுவர் பாடல்களும் இத்தொகுப்பில் அடங்கியிருப்பதால், சிறுவர் இலக்கியத்தில் ஆர்வமுள்ள யாராவது பொறுப்பெடுத்து இதில் உள்ள பாடல்களுக்கு ஒலி, ஒளி வடிவம் கொடுக்கும்  முயற்ச்சியில் ஈடுபடுவார்கள் எனப் புலம் பெயர் தமிழர்களான நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம். தாய் மொழியாம் தமிழ் மொழியைப் புலம் பெயர்ந்த மண்ணில்  தக்கவைப்பதற்கு நீங்கள் செய்யும் பேருதவியாக இது என்றென்றும் நிலைத்து நிற்கும். தமிழ்தானே என்று அலட்சியப்படுத்தினால் மொழி அழிந்தால் நம் இனமும் அழிந்துவிடும் என்பதை நாம் நினைவில் கொண்டு மனப்பூர்வமாய் செயற்படவேண்டும், ஏனென்றால் நாமும் ஒருகாலத்தில் முகவரி அற்றவர்களாக ஆகிவிட நேரிடலாமல்லவா?