Tuesday, October 5, 2010

Article - Big Ben - பிக்பென்

பிக்பென்                    குரு அரவிந்தன்
Big Ben Clock

ப்போதெல்லாம்; பிறந்ததினம் கொண்டாடுவது என்பது ஒரு சாதாரண நிகழ்வாய் போய்விட்டது. பொதுவாகக் குழந்தைகள், சிறுவர், சிறுமிகளுக்குத்தான் பிறந்தநாள் கொண்டாட்டம் நடப்பதுண்டு. ஆனாலும் காலப்போக்கில் வயது வித்தியாசம் இல்லாமல் விரும்பிய எல்லோருமே கொண்டாடத் தொடங்கி விட்டார்கள். மனிதர்களுக்கு மட்டுமல்ல நினைவுச் சின்னங்களுக்கும் பிறந்ததினம் கொண்டாடத் தொடங்கி விட்டார்கள். ஏதோ ஒன்றை நினைவுகூர இதைவிட்டால் வேறு சந்தர்பம் கிடைக்கப் போவதில்லை என்று நினைக்கும் போதெல்லாம், நினைவுகளை மீட்டுப்பார்க்க பிறந்ததினம் கொண்டாடுவதில் எந்தவித தவறுமில்லை, அது சரிதான் என்று ஏற்றுக் கொள்ள வேண்டிய கடப்பாடும் எங்கள் சமுதாயத்திற்கு, குறிப்பாக புகலிடம் தேடிவந்த மண்ணில் ஏற்பட்டிருக்கிறது.
தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியின் நூற்றண்டு விழா 2010ல் வருகிறது, அதற்குரிய ஆயத்தங்களை இப்பவே செய்யத் தொடங்க வேண்டும் என்று எனக்கு அழைப்பு வந்தபோதுதான், மகாராஜாவின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ளும்படி ஏற்கனவே எனக்கு வந்திருந்த அழைப்பு ஞாபகம் வந்தது. மகாராஜாவிற்கு 62 வயசாச்சு என்றதும்,  மகாராஜாவா, எந்த நாட்டு மன்னன் இவர் என்று நீங்கள் நினைக்கலாம். இன்றைய காலகட்டத்தில் எங்களுக்கு உடனே நினைவில் வருவது நேபாளத்து அரசபரம்பரைதான். அவரது பதவியைத் தக்கவைப்பதற்கே அவர் பகீரதப்பிரயத்தனம் செய்து கொண்டிருக்கும் போது, பிறந்த நாள் கொண்டாட்டத்தைப் பற்றிய கனவெல்லாம் அவரால் காணமுடியுமா? அரசபரம்பரையை விட்டால், பொதுவாக எயர்இந்திய விமானத்தில் பயணம் செய்த எல்லோருக்கும் சட்டென்று ஞாபகம் வருவது நீண்ட பெரிய முறுக்கு மீசைவிட்ட, சிகப்பும் மஞ்சளும் கலந்த கோட்டும், தலைப்பாவும் அணிந்த கம்பீரமான  மகாராஜாவைத்தான். 1946ம் ஆண்டு உருவமைக்கப்பட்டு 1989ம் ஆண்டு வரை பாவனையில் இருந்த ஏயர்இந்திய விமானச் சேவையின் பிரபலமான சின்னமாக இருந்தவர்தான் இந்த முறுக்கு மீசை மகாராஜா. அவருக்குத்தான் இப்போது 62 வயதாகிறதென்ற மகிழ்ச்சியில் பயணிகளும் ஏற்பாட்டாளர்களும் ஒன்று சேர்ந்து பிறந்த நாள் கொண்டாடினார்கள்.
ஆனால், நான் இங்கே சொல்ல வந்தது இந்த மகாராஜாவைப் பற்றி அல்ல. இலங்கையின் தலைநகரான கொழும்பிலே டோசன் வீதியில் இருக்கும் தமிழருக்குச் சொந்தமான மிகப்பெரிய நிறுவனமான மகாராஜா நிறுவனத்தைப் பற்றியது. அந்தப் பெரிய நிறுவனம் ஒரு தமிழருக்குச் சொந்தமாக இருக்கிறதே என்பதில் எங்களுக்கும் பெருமையாக இருந்தது. அந்த நிறுவனத்திற்கு ஒருமுறை கணக்குப் பரிசோதனைக்காகச் சென்றபோது, தங்களுடைய நிறுவனத்தில் என்னையும், தங்களுடன் சேர்ந்து பணியாற்ற முடியுமா என்று அதன் நிர்வாகிகள் மறைமுகமாகக் கேட்டார்கள்.அவர்களுடைய அந்த வேண்டுகோளை நானும் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டேன். அந்த மிகப்பெரிய தமிழ் நிறுவனத்தில் எனக்கு வேலைவாய்ப்புக் கிடைத்ததில் எனக்கும் பெருமையாக இருந்தது. மகிழ்ச்சியாக அந்த நாட்கள் கடந்தபோது, தொழில் நிமிர்த்தம் ஒரு மகாநாட்டில் பங்குபற்றுவதற்காக லண்டனுக்குப் போவதற்கும் எனக்கொரு சந்தர்ப்பம் கிடைத்தது. லண்டனுக்கான எனது முதற்பயணம் அது என்பதால் அங்கே உள்ள சுற்றுலா இடங்களைச் சென்று பார்க்கவும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொண்டேன். அப்பொழுதுதான் பிக்பென் மணிக்கூட்டைப் பற்றி அறிந்து கொண்டு அந்தக் கோபுரத்தை நேரில் சென்று பார்த்தேன். 
எயர்இந்தியா மகாராஜாவிற்கு 62வயதானது போல, லண்டனில் வெஸ்ற்மினிஸ்ரரில் உள்ள பிரபலமான பிக்பென் மணிக்கூட்டிற்கும் 150 வயதாகிவிட்டதாம். லண்டனில் நின்றபோது இந்த மணிக்கூட்டைப் பார்க்க எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. நாலு பக்கங்களைக் கொண்ட ஒன்பது அடி குறுக்களவும், ஏழு அடி ஆறு அங்குல உயரமும் கொண்ட, 13.5 தொன் நிறையுள்ள ‘கிறேட் குளக் ஒவ் வெஸ்ட்மினிஸ்டர்’ என்று உத்தியோக பூர்வமாய் அழைக்கப்பட்ட இந்த பிக்பென் மணிக்கூட்டை நேரில் சென்று லண்டனில் பார்த்ததில் எனக்கும் திருப்தியாக இருந்தது. நிமிடத்தைக் காட்டும் முள் 4.2 மீட்டர் நீளமும், மணித்தியாலத்தைக் காட்டும் முள் 2.7 மீட்டர் நீளமும் உடையது. 1934ல், 1956ல், 1990ல் காலநிலை மாற்றங்கள், யந்திரக் கோளாறுகள், பறவைகளின் தொந்தரவு போன்ற தவிர்க்க முடியாத சில காரணங்களால், திருத்தவேலை காரணமாக இந்த மணிக்கூடை அவ்வப்போது நிறுத்தி வைக்கவேண்டி வந்ததாம். 1962ம் ஆண்டு மார்கழிமாதம் ஏற்பட்ட கடும் பனிக்குளிர் காரணமாக இந்த மணிக்கூடு பத்து நிமிடங்கள் தாமதமாக நேரம் காட்டியதாம். 1976ம் ஆண்டு ஆவணி மாதம் இயந்திரக் கோளாறு காரணமாக நின்றுபோன இந்த மணிக்கூடு திருத்தப்பட்டு மீண்டும் 1977ம் ஆண்டு வைகாசி மாதம் ஓட வைக்கப்பட்டது. 1997ம் ஆண்டு சித்திரை மாதம் 30ம் திகதி மீண்டும் இயந்திரக் கோளாறு காரணமாக மீண்டும் ஓடாமல் நின்றது. தொடர்ந்தும் 2005ம் ஆண்டு வைகாசி மாதத்திலும், 2007ம் ஆண்டு ஆவணி மாதத்திலும் சில நாட்கள் ஓடாமல் நின்று போனது. தினமும் பிக்பென்னின் மணியோசையைக் கேட்டுப் பழக்கப்பட்டுப்போன லண்டன் நகரவாசிகள் ஏதாவது காரணத்தால் அவர்களது தினசரி வாழ்க்கையோடு ஒன்றிப்போன மணியோசை கேட்கவில்லை என்றால் மிகவும் பதட்டமடைந்து விடுகிறார்களாம். இதைத் தவிர்ப்பதற்காக பிரபல பிரித்தானிய ஒலிபரப்பு நிறுவனம் பறவைகளின் இனிய கீதத்தை மணியோசைக்குப் பதிலாக அந்த நேரத்தில் ஒலி பரப்பினார்களாம். இந்த மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு 393 படிகள் உள்ளனவாம்.

ஏப்ரல் மாதம் 10ம் திகதி, 1858ல் உருவாக்கப்பட்ட, 314 அடி உயரமான சென். ஸ்ரீபன்ஸ் கோபுரத்தில் உள்ள இந்த பிக்பென் மணிக்கூடு, 150வது பிறந்ததினத்தைக் 2008 ஏப்ரல் மாதம் 10ம் திகதி கொண்டாடியபோது பலராலும் நினைவு கூரப்பட்டது. 1958ம் ஆண்டு ஐப்பசி மாதந்தான் இந்தப் பெரிய மணி, கோபுரத்தின் மேலே கொண்டுபோய் வைக்கப்பட்டது. 1859ம் ஆண்டு மே மாதம் 31ம் திகதிதான் முதன்முதலாக இந்த மணிக்கூட்டில் இருந்து இனிய மணியோசை எழுந்து லண்டன் மாநகரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியதால், அந்த நாளைத்தான் பிறந்த நாளாகக் கொண்டாட வேண்டும் என்று லண்டன் மாநகர மக்களில், மாறுபட்ட கருத்துடையவர்கள் அந்த நாளுக்காக, அதாவது 2009 மே மாதம் 31ம் திகதிக்காக ஆவலோடு காத்திருக்கிறார்களாம். இந்த மணி உருவாக்கப்பட்ட நாளையா, அல்லது இந்த மணி செயற்படத் தொடங்கி மணியோசை கேட்ட நாளையா கொண்டாடுவது என்பதில் இவர்களுக்கிடையே மாறுபட்ட கருத்து நிலவுகின்றது. 1856ல் இதேபோல செய்யப்பட்ட முதலாவது மணி அதிக காலம் நின்று பிடிக்கவில்லை. 1857ம் ஆண்டு அதில் ஏற்பட்ட பெரிய வெடிப்புக் காரணமாக அந்த மணி பாவனையற்றுப் போய்விட்டது. இப்பொழுது கோபுரத்தின் உச்சியில் இருப்பது 1958ல் இரண்டாவதாகச் செய்யப்பட்ட மணியாகும்.

இந்த பிக்பென் மணிக்கூட்டைப் பற்றி எழுதவேண்டும் என்ற ஆர்வம் காரணமாக தமிழில் எழுத முற்பட்டபோது, இதை எப்படி தமிழில் எழுதுவது என்ற சிக்கல் எனக்குள் எழுந்தது. பிக்பென் என்ற பெயரையே தலையங்கமாகப் போடலாம் என்ற எண்ணத்தில், கரும்பலகையில் எழுதிவிட்டு என்னிடம் தமிழ் படிக்கும் மாணவர்களிடம் அதை வாசிக்கச் சொல்லிக் கேட்டேன். ஒரு மாணவன் பிக்பென் என்று வாசித்தான். அப்படி என்றால் என்ன அர்த்தம் என்று கேட்டேன். அவன் ஒரு கணம் தயங்கி விட்டு பிக் என்றால் பன்றி பென் என்றால் பேனை எனவே ‘பன்றி போன்ற பேனை’ என்று அதை அப்படியே மொழி பெயர்த்தான்;. தமிழில் எழுதப்படும் பொழுது வேறு அர்த்த்தில் அது தொனிக்கிறது என்பதை அவனது பதில் எடுத்துக் காட்டியது. இன்னுமொரு மாணவி பிக்பென் என்று வாசித்தார். அது எதைக் குறிக்கிறது என்று அவரிடம் கேட்டேன். ‘பெரிய பேனை’ என்றார். இவர்களாவது பரவாயில்லை, இன்னுமொருவன் எழுந்து பிக்பெண் என்று வாசித்துவிட்டு ‘பெரியமனுசி’ என்று சொல்லிச் சிரித்தானே பார்க்கலாம். வேடிக்கை என்னவென்றால், இவர்களில் யாருக்கும் பிக்பென் மணிக்கூட்டைப் பற்றித் தெரிந்திருக்கவில்லை.
நீங்கள் இதை எப்படி வாசித்தீர்களோ தெரியவில்லை. ஆங்கிலத்தில் உள்ள சில எழுத்துக்களை, உதாரணமான  B F P  போன்ற எழுத்துக்களில் தொடங்கும் சில செற்களைத் தமிழில் எழுதும்போது, அவற்றைச் சரியான முறையில் தமிழில் உச்சரிக் முடியாமல் இருப்பதால் அதுவே மற்றவர்களின் கேலிக்குரியதாகி விடுகிறது. தொழில் நுட்பம் வளர்ச்சியடைந்துள்ள இந்தக் நவீன காலத்திற்கேற்ப தமிழ்; அறிஞர்கள் இதைக் கருத்திற் கொண்டு தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக எதையாவது ஆக்கபூர்வமாகச் செய்ய வேண்டும், மற்ற மொழிகளின் நவீனகால முன்னேற்றத்தோடு நாங்களும் போட்டி போட்டு முன்னேற வேண்டும். கட்டாயம் ஆவன செய்வார்கள் என்ற எதிர்பார்ப்போடு காத்திருக்கும் இந்த நேரத்தில், எதற்கும் இந்தத் தலைப்பை மீண்டும் ஒருமுறை நீங்களும் வாசித்து, அதன் அர்த்தம் புரிகிறதா என்று பாருங்களேன்! தமிழ் மொழி வளர்ச்சிக்காக உங்களால் ஏதாவது ஆக்கபூர்வமான கருத்துச் சொல்ல முடியுமா என்று சிந்தித்துப் பாருங்கள்.!
லண்டனில் உள்ள மிகப்பெரிய பிக்பென் மணிக்கூடடுக் கோபுரம் போலவே, இலங்கையின் தலைநகரான கொழும்பிலும், யாழ்ப்பாணம், மட்டக்கிளப்பு, காலி போன்ற நகரங்களிலும் சிறிய மணிக்கூட்டுக் கோபுரங்கள் இருக்கின்றன. மணிக்கூடு என்று ஒரு சின்னத்திரை நாடகம்கூட இருக்கிறது. கொழும்பில் உள்ள மணிக்கூட்டுக் கோபுரம் தொடக்கத்தில் கலங்கரை விளக்கமாகவும், மணிக்கூட்டுக் கோபுரமாகவும் பாவனையில் இருந்தது. காலப்போக்கில் பெரிய கட்டிடங்கள் எழுந்ததனால் கலங்கரை விளக்கத்தின் பாவனை நிறுத்தப்பட்டு, மணிக்கூட்டுக் கோபுரமாக மட்டும் பாவிக்கப்பட்டது. அதில் உள்ள கடிகாரம் பழுதடைந்து போகவே, அதைத் திருத்திக் கொடுக்கமுடியமா என்று அப்போது பதவியில் இருந்த இலங்கைப் பிரதமரின் செயலாளர், கொழும்பில் இருந்த மகாராஜா நிறுவனத்திடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார். யப்பானில் உள்ள பிரபல கடிகார உற்பத்தியாளர்களின் விற்பனைப் பிரதிநிதிகளாக மகாராஜா நிறுவனம் இருந்ததால், அவர்களின் உதவியோடு மகாராஜா நிறுவனத்தினர் அந்தக் கடிகாரத்தை திருத்திக் கொடுத்தார்கள். எந்தவித தடங்கலும் இல்லாமல் அந்தக் கடிகாரம் இப்பொழுதும் ஓடிக் கொண்டேயிருக்கிறது.
Clock Tower Jaffna
இதுபோல யாழ்ப்பாணத்திலும் ஒரு மணிக்கூட்டுக் கோபுரம் இருக்கிறது. மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்திற்கும், கோட்டை மைதானத்திற்கும் அருகே இருந்த இந்த மணிக்கூட்டுக் கோபுரத்தை யாருமே மறந்திருக்க மாட்டார்கள். அரச கட்டிடக் கலைஞர் சிமித்தரின் கைவண்ணத்தில் உருவான அழகான இந்த மணிக்கூட்டுக் கோபுரம் 133 வருடங்கள் பழமை வாய்ந்தது. 1875ம் அண்டு ஏழாம் எட்வேட் மன்னர் யாழ்பாணத்திற்கு விஜயம் செய்தபோது, அதன் ஞாபகார்த்தமாக இந்தக் மணிக்கூட்டுக் கோபுரம் கட்டப்பட்டதாம். அப்போது பிரித்தானிய ஆளுணராக இருந்த சேர் ஜேம்ஸ் லோங்டன் அந்தக் கோபுரத்தின் உச்சியில் உள்ள மணிக்கூட்டை அன்பளிப்புச் செய்திருந்தார். அந்த நாட்களில் கைக்கடிகாரம் கட்டுபவர்கள் மிகக் குறைவாகவே இருந்ததால், நேரம் பார்ப்பதற்கு அனேகமாவர்கள் இந்த மணிக்கூட்டுக் கேபுரத்தில் உள்ள மணிக்கூட்டையே நம்பியிருந்தனர். 1983ம் ஆண்டின்பின் அடிக்கடி ஏற்பட்ட இராணுவ ஆக்கிரமிப்புக் காரணமாக இந்தக் கோபுரம் துப்பாக்கிச் சன்னங்களால் துளைக்கப்பட்டு சேதமடைந்தது. மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகே அமைந்திருந்த கோட்டையிலே இராணுவம் தங்கியிருந்த போது அவர்கள் கோட்டையை விட்டு வெளியேற முற்பட்டாலோ அல்லது அங்கிருந்து செல் அடிக்க முற்பட்டாலே அதைக் கண்காணிப்தற்கு இந்த மணிக்கூட்டுக் கோபுரம் மிகவும் உதவியாக இருந்தது. அப்போது ஒளிப்பதிவு செய்வதற்கு கமெரா வசதிகள் போராளிகளிடம் இல்லாதபடியால், எந்த நேரமும் சுழற்சி முறையில் ஒரு போராளி மணிக்கூட்டுக் கோபுரத்தின் உச்சியிலே மறைந்து நின்று கொண்டு இராணுவத்தின் நடவடிக்கைகளைக் கண்காணித்துக் கொண்டிருந்தார். அவர் கொடுக்கும் சமிகைகளில் இருந்து, நகரத்தில் எச்சரிக்கை ஒலி எழுப்பபட்டதால் பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளக்கூடியதாக இருந்தது. யாழ்ப்பாண குடா நாட்டில் ஆக்கிரமிப்பு இராணுவத்தின் செல்லடியில் இருந்து மக்களை அவ்வப்போது கற்பக விருட்சமான பனை மரங்கள் காப்பாற்றியபோல, அந்த காலகட்டத்தில் ஏதோ ஒரு விதத்தில் தனது பங்களிப்பு மூலம் மக்களின் பாதுகாவலனாகவும் தன்னை நிலை நிறுத்திக் கொண்டது இந்த மணிக்கூட்டுக் கோபுரம். யாழ்ப்பாணத்தில் நிமிர்ந்து நின்று அப்பாவி மக்களைக் காப்பாற்றத் தம்மைத்தாமே களப்பலி கொடுத்த மொட்டைப் பனை மரங்களை இப்பொழுதும் ஆங்காங்கே காணக்கூடியதாக இருக்கிறது. 2002ம் ஆண்டு ஏற்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தம் காரணமாக மீண்டும் இந்தக் கோபுரம் புணருத்தாரணம் செய்யப்பட்டது. இதற்குரிய நிதி உதவியைப் பிரித்தானிய தூதராலயம் கொடுத்து உதவியிருந்தது. ஆனால் இந்த மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு உயிர் கொடுத்தவர்களுக்கு அங்கேயிருந்த மொட்டைப் பனைமரங்களுக்கு உயிர் கொடுக்கவோ, அல்லது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிசெய்யவோ முடியாமல் போனதும் கவலைக்குரியதே!

No comments:

Post a Comment