Monday, October 4, 2010

ARTICLE - Mysteries of the unknown - Ghost From London Bridge - லண்டன் பாலத்துப் பிசாசுகள்

yz;ld; ghyj;Jg; gprhRfs;.
FU mutpe;jd;


Lake Havasu City - USA
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது என்ற கீதையின் நம்பிக்கையோடு எனது பயணத்திற்கு வேண்டிய எல்லா ஒழுங்குகளையும் செய்து கொண்டிருந்தேன். பயணத்திற்கான ஒழுங்குகள் எல்லாம் நடந்து கொண்டிருந்த போதுதான், மகாராஜா நிறுவனத்தின் செயலாளராக இருந்த பெண்மணி, ‘போறதுதான் போறீங்க, உங்க மனைவியையும் லண்டனுக்கு அழைத்துக் கொண்டு போகலாமே’ என்று அதிரடியாக ஒரு யோசனை சொன்னாள்.


‘முடியுமா...?’ என்ற சந்தேகத்தோடு அவளைப் பார்த்தேன். உத்தியோக பூர்வமாய் போகும் போது இதெல்லாம் சாத்தியப்படுமா என்று நான் நினைத்தும் பார்த்ததில்லை.
‘இந்த நிறுவனத்தின் உயர் பதவியில் இருந்து கொண்டு இப்படி ஒரு கேள்வியை நீங்களே கேட்கலாமா? எங்க நிறுவனத்தாலே செய்ய முடியாதது என்று ஒன்றுமேயில்லை, கவலைப்படாதீங்க விசாதானே, நானே அதற்கும் ஏற்பாடு செய்யிறேன்!’


எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் என்பதுபோல புன்சிரிபோடு நம்பிக்கை ஊட்டினார். சொன்னது மட்டுமல்ல, அவர் சொன்னபடியே செய்து முடித்து, அந்த நிறுவனத்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதையும் நிரூபித்துக் காட்டியிருந்தார்.
‘சரி உங்க கணவர் தொழில் நிமிர்த்தம் லண்டன் போகிறார், நீங்க ஏன் லண்டன் போகிறீங்க?’ பிரித்தானிய தூதராலயத்தில், அறுபதைத் தாண்டினாலும் வாட்டசாட்டமாய் இருந்த அந்த அதிகாரி எனது மனைவியைப் பார்த்துக் கேட்டார். மனைவி ஒரு புன்னகை உதிர்த்தார். என்ன பதில் சொல்;லிச் சமாளிக்கப் போகிறாரோ என்று நான் ஆவலுடன் காத்திருந்தேன்.

‘லண்டன் பிறிச் இஸ் போலிங்டவுண்
போலிங் டவுண், போலிங் டவுண்
லண்டன் பிறிச் இஸ் போ.. லிங்.. ட..வு..ண்…!’

நீதிமன்றத்தில் சாட்சியை விசாரணைக்கு கூவி அழைப்பதுபோல, கீறுபட்ட கிராமபோன் தட்டாய் விக்கி விக்கி நேசறிப்பாடல் ஒன்றைப் பாடமுற்பட்டவர், மேற்கொண்டு பாடி முடிக்க முடியாமல் தடுமாறவே,
‘மை பெ..ய.. லே…டீ…ஈ…ஈ..!’ என்று இரண்டு கைகளையும் அகல உயர்த்தி பியானோ இசையின் பின்னணியில் பாடுவதுபோல, கழுத்து நரம்புகள் புடைத்துப்போக உச்சஸ்தாயியில் அந்த அதிகாரியே மிகுதி வரியையைப் பாடிமுடித்த போது மனைவி திகைத்துப் போனார்.
தனக்குத் தெரிந்த நேசறிறைம் ஒன்று அந்த அதிகாரிக்கும் தெரிந்திருக்கிறதே, பிரித்தானிய ஆளுமைக்குள் உட்பட்டிருந்த நாடுகள் எல்லாவற்றிலும் இந்த நேசறிறைமைத்தான் படிப்பித்திருப்பார்களோ என்ற மகிழ்ச்சியில் மனைவியின் முகம் பிரகாசமானது. அதனால் ஏற்பட்ட சந்தோஷத்தில், அந்த இறுக்கமான சூழ்நிலையைச் சமாளித்துக் கொண்டு ஆச்சரியமாய் அவரைப் பார்த்தார்.

‘அவ்வளவுதானா, லண்டனில் வேறு என்ன எல்லாம் பாரக்கணும்?’ என்றார்.
மனைவியிடம் பெரிய பட்டியல் ஒன்றே தயாராக இருந்தது.
‘தேம்ஸ் நதி, டவர்பிறிச், பிக்பென் கோபுரம், வெஸ்ட்மினிஸ்டர் மாளிகை, மெழுகுப் பொம்மைகள் உள்ள காட்சியகம் அப்புறம்…..!’ பட்டியல் நீண்டு கொண்டே போனது. மனைவி போட்ட பட்டியலைப் பார்த்ததும் பயந்துபோன அவர் ‘போதும் போதும்’ என்பது போலக் கையமர்த்தினார்.
தொழில் நிமிர்த்தம் லண்டன் போகிறோமா அல்லது உல்லாசப் பணயம் போகிறோமா என்ற சந்தேகம் எனக்குள் எழுந்தது. ஆனாலும் எந்தத் தடையுமில்லாமல் இருவருக்கும் விசா கிடைத்துவிடவே, மனைவியின் சாதுர்யத்தை மெச்சிக் கொண்டே மகிழ்ச்சியோடு வீடு வந்து சேர்ந்தேன்.
மனைவியின் விருப்பப்படியே ஓய்வு நேரங்களில் லண்டனில் பார்க்கவேண்டிய இடங்களுக்குச் சென்றோம். வெஸ்ட்மினிஸ்டர் மாளிகை, லண்டன் பிறிச், டவர்பிறிச் பிக்பென் கோபுரம், அதிலே உள்ள பிரமாண்டமான மணிக்கூடு, தேம்ஸ்நதியில் படகுச் சவாரி, மெழுகுப் பொம்மைகள் இப்படியாகப் பார்ப்பதற்கு நிறை இடங்கள் லண்டனில் இருந்தன.

சின்ன வயதில் பாடிய குழந்தைப் பாடல்களில் இடம்பெற்ற, லண்டன் பிறிச்சை நிஜமாகவே பார்த்ததில் மனைவிக்கு ஒரே மகிழ்ச்சி. அந்த இடத்தைவிட்டு அகலும்வரை மனசுக்குள் அந்த நேசறிறைமை முணுமுணுத்துக் கொண்டிருந்ததை என்னால் அவதானிக்க முடிந்தது. அது மட்டுமல்ல, லண்டன் பிறிச் கீழேவிழுந்து விடுமோ என்ற பயத்தில் அதிலே நடக்கும்போது மிகவும் அவதானமாக நடந்து வந்ததும் இப்போ ஞாபகம் வருகிறது. 


தேம்ஸ் நதியின் மேலாகக் கட்டப்பட்ட லண்டன் பாலம், 2000 ஆண்டுகளுக்கு மேலாக இதே இடத்தில்தான் அமைந்திருக்கிறதாம். முதலாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் ரோமனியரின் ஆதிக்கத்தில் இருந்த காலத்தில் இந்தப் பாலம் மரத்தால் கட்டப்பட்டிருந்ததாம்;. அதன் பின் அதிக போக்குவரத்துக் காரணமாக இந்தப் பாலம் திருத்தப்பட்டு செங்கட்டிகளால் கட்டி எழுப்பப்பட்டதாம். 1300ல் பாலத்தோடு சேர்ந்தபடி அதன் அருகே 140 அங்காடிகளும் கட்டப்பட்டனவாம். 1666ல் ஏற்பட்ட தீ விபத்தால் இந்தப் பாலம் பெரிதும் பாதிக்கப்பட்டு பலவீனமடைந்ததாகச் சொல்கிறார்கள். 1824ல் பழைய பாலத்திற்கு வடக்குப் பக்கத்தில் புதிய பாலமொன்று கட்டப்பட்டு, போக்குவரத்திற்காக 1831ல் திறந்து வைக்கப்பட்டது. லண்டனுக்கும் சவுத்வாக் என்ற நகரத்திற்குமிடையே போக்குவரத்திற்காகக் பயன் படுத்தப்படும் இந்தப் பாலம் 860 அடி நீளமும், 107 அடி அகலமும் கொண்டது. கனன் வீதியில் உள்ள ரெயில்வே பாலத்திற்கும், டவர் பிறிச்சிற்கும் இடையே இது உள்ளது. 1750ம் ஆண்டு வெஸ்ற்மினிஸ்டர் பாலம் அமைக்கப்படும்வரை தேம்ஸ் நதிக்கு மேலால் போக்குவரத்து செய்வதற்கு இந்த ஒரேயொரு பாலம் மட்டும்தான் பாவனையில் இருந்தது.


தேம்ஸ் நதிக்கு மேலால் செல்லும் டவர்பிறிச்சைக்கூட சிலசமயங்களில் தவறுதலாக லண்டன்பிறிச் என்று சிலர் சொல்வதுண்டு. 2006ம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க மியூசிக் வீடியோவில் பிரபல பாடகி ஃபெர்ஜி பாடிய லண்டன்பிறிச் பற்றிய பாடலில்கூட டவர்பிறிச்சின் பின்னனியிலேயே உல்லாசப் படகில் செல்வது போன்ற காட்சி படமாக்கப் பட்டிருந்தது. 1886ல் கட்டத் தொடங்கிய, 800 அடி நீளமான டவர்பிறிச்சைக் கட்டி முடிக்க அவர்களுக்கு எட்டு வருடங்கள் எடுத்;திருந்தன. கப்பல்கள் போவதற்கு வசதியாக, 213அடி உயரமாக, இரண்டு பக்கமும் கோபுரம் அமைக்கப்ப்ட்டு இந்தப்பாலம் கட்டப்பட்டது. 1894ம் ஆண்டு, யூன் மாதம் 30ம் திகதிதான்; பாவனைக்குத் திறந்து வைக்கப்பட்டது. சுமார் 40,000 மேற்பட்ட மக்கள் தினமும் இந்தப் பாலத்தைப் பாவித்து தேம்ஸ் நதியைக்கடந்து செல்கிறார்கள் என்று சமீபத்தில் எடுத்த கணிப்பு சொல்கிறது.

தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தபோது, எனது மனைவி திடீரென ஒரு பழைய செய்திப் பத்திரிகையோடு ஓடி வந்தாள்.

‘இதைக் கொஞ்சம் பாருங்களேன், நாங்க ஏமாந்திட்டமோ தெரியாது!’ என்றாள்.
‘ஏன், என்ன நடந்தது?’
‘நாங்கள் லண்டனில் பார்த்தது ஒறியினல் லண்டன் பிறிச் இல்லையாம்!’ என்று பெரிய குண்டைத் தூக்கிப் போட்டாள். முகத்தில் ஏமாற்றப் பட்டுவிட்டதின் கோபம் தெரிந்தது.
‘தெரியும்தானே, ‘லண்டன்பிறிச் இஸ் போலிங்டவுன்’ என்ற சம்பவம் உண்மையாகவே ஒருநாள் நடந்துவிட்டது தெரியாதா?’ என்றேன்.
‘என்ன…? பாலம் உடைஞ்சு விழுந்திட்டுதா?’
‘அந்தப் பாலம் உடைஞ்சு விழுந்துவிடும் நிலையில் இருக்கவே, போக்குவரத்துப் பாவனைக்கு உகந்தது அல்ல என்று தீர்மானித்து, அந்தப் பழைய பாலத்தை 1968ம் ஆண்டே விற்று விட்டார்கள்.’
‘என்ன சொல்லுறீங்க, லண்டன் பிறிச்சை வித்திட்டாங்களா? யாருக்கு?’
‘அமெரிக்காவிற்கு!’ என்றேன்.
‘அதை இங்கே அமெரிக்காவிற்குக் கொண்டு வந்திட்டாங்களா?’
‘ஆமா, அரிசோனாவில் உள்ள லேக் ஹவாசு என்ற நகரத்திலே அந்தப் பாலத்தை இப்போ கட்டி எழுப்பியிருக்கிறாங்க.’
‘அப்போ நாங்க லண்டனில் பார்த்தது..?’
‘அது பழைய பாலத்திற்குப் பதிலாகக் கட்டிய புதிய பாலம், 1973ம் ஆண்டு போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டது. அதைப்பற்றி இன்னும் நேசறிறைம் ஒன்றும் வரவில்லை’
‘அப்போ லண்டன் பிறிச் லண்டனில் இல்லையா?’ என்றாள்.
‘இல்லை!’ என்றேன் அமைதியாக.
‘அப்படி என்றால் லண்டன் பிறிச் இப்போ அமெரிக்காவில் இருக்கு, அப்படித்தானே?
‘ஆமா, அமெரிக்காவில்தான் இருக்கு, இதை வாங்கியவர்கூட டவர்பிறிச்சைதான் விற்பனைக்குப் போட்டிருக்கிர்கள் என்று நினைத்துத்தானாம் வாங்கினார். அப்புறம்தான் தெரிய வந்ததாம் டவர்பிறிச் அல்ல, லண்டன் பிறிச்சைத்தான் விற்றார்கள் என்று!’
‘அப்போ, எங்களைப்போல அந்த கோடீஸ்வரரும் ஏமாந்திட்டாரா?’
‘ஆமா, யானைக்கும் ஒரு நாள் அடி சறுக்கும்!’ என்றேன்.

மனைவியின் முகத்தில் இன்னமும் ஏமாந்துவிட்ட பாவனை தெரிந்தது. ஏதோ ஒன்றுக்கு அடி போடும் பாவனையும் அதுதான் என்பதை அவளுடனான எனது வாழ்க்கை அனுபவம் சொல்லிக்காட்டியது. லண்டன் பிறிச் இப்போ அமெரிக்காவில்தான் இருக்கிறது என்பதை அவளால் நம்பமுடியாமல் இருந்தது.

‘சரி, அப்படின்னா அடுத்த விடுமுறைக்கு நாங்க அரிசோனாவிற்குப் போவோமா?’ என்றாள்.
‘போகலாமே..!’ என்றேன்.

‘போகலாமே’, என்று உடனே சொல்லி விட்டேனே தவிர, அங்கே போவதற்கு எனக்குக் கொஞ்சம் தயக்கமாக இருந்தது. காரணம் என்ன என்றால், லண்டனில் இருந்து அரிசோனாவுக்குக் கொண்டு வந்த இந்த லண்டன் பிறிச்சைப் பற்றிச் சில வதந்திகள் ஏற்கனவே நான் கேள்விப்பட்டிருந்தேன். இந்தப் பாலத்தை லண்டனில் இருந்து அரிசோனாவிற்குக் கொண்டு வந்தபோது அதனுடன் சேர்ந்து அந்தப் பாலத்திற்கு அருகே இருந்த பழமைவாய்த பாரம்பரிய பிரித்தானியகடைகள், இரட்டைத்தட்டு சிகப்பு நிறப் பேருந்து, பழைய காலத்து சிகப்புநிறப் பிரித்தானிய தபால் பெட்டிகள் என்று எல்லாவற்றையும் விலைபேசி அள்ளிக் கட்டிக்கொண்டு வந்துவிட்டார்கள். இப்படி அள்ளிக் கொண்டு வந்தபோது, விலைபேசாமலே அந்தப் பாலத்தில் வசித்து வந்த சில பிசாசுகளும் அரிசோனாவிற்கு கிளம்பி வந்துவிட்டதாக அரிசோனாவில் சிலர் பேசிக் கொண்டார்கள். பூனையைக் கொண்டு போய் எங்கே விட்டாலும் திரும்பவும் பழகிய இடத்திற்கு திரும்பி வந்துவிடுமாம், அதுபோல இந்தப் பிசாசுகளும் பழகிப்போன பாலத்திற்குக் குடிவந்திருக்கலாமோ என்று சந்தேகிக்கிறார்கள். பாலத்தின் திறப்பு விழா அன்றே பழைய பிரித்தானிய பாரம்பரிய ஆடைகள் அணிந்தவாறு சில பிசாசுகள் பாலத்தைக் கடந்து சென்றதை ஒரு பெண் பாரத்தாகக் கூறி, அங்கே பரபரப்பை ஏற்படுத்தி விட்டார். இப்பொழுதும் பாரம்பரிய ஆடைகளணிந்த ஒரு வயதுபோன பெண்ணும் ஆணும் பாலத்தைக் கடந்து செல்வதைச் சிலநேரங்களில் தாங்கள் காண்பதாக அங்கே சிலர் கதை சொல்கிறார்கள்.


984ல் லண்டன் பாலத்தில் இருந்து தள்ளிவிடப்பட்டு அகால மரணமான சூனியக்காரியும், அவரது மகனுமாக இருக்கலாமோ, அல்லது பாலத்தைக் கட்டத் தொடங்கும்போது நரபலி கொடுக்கப்பட்ட கன்னிப்பெண்களாகவோ, குழந்தைகளாகவோ இருக்கலாம் என்றும் அங்கே கதைகதையாச் சொல்லிப் பயம் காட்டுகிறார்கள். எனக்கு உள்ளுர சந்தேகமிருந்தாலும் எது எப்படியோ, போவதாக முடிவெடுத்து விட்டோம், எதற்கும் முன் எச்சரிக்கையாக இருக்கட்டுமே என்று மனைவி மறுநாளே மாந்திரித்து தாயத்தும் தனது கையிலே கட்டிக் கொண்டு வந்து ஆயத்தமாக இருக்கிறார். பேய் பிசாசுக்குப் பயந்த மாதிரி; நான் காட்டிக் கொள்ளாவிட்டாலும், இரும்புத் துண்டைக் கண்டால் பேய் பிசாசு கிட்டவும் வராதாம் என்பதால் மனைவிக்குத் தெரியாமல் நானும் ஒரு சின்ன இரும்புத் துண்டை எனது பையில் இரகசியமாக எடுத்து வைத்திருக்கிறேன். சின்ன வயதில் எங்கள் ஊரில் புளியடி முனியடித்து ஒரு இளைஞன் வாயாலும் மூக்காலும் இரத்தம் கக்கி இறந்ததாகப் பாட்டி சொன்ன கதையும் அடிக்கடி ஞபகம் வந்தது. அதே நேரம் கேரள டாக்டர் கோவூர் பேய், பிசாசு என்பதெல்லாம் வெறும் ஏமாற்று, அப்படி எதுவுமே இல்லை என்று ஆதார பூர்வமாய் எழுதிய கட்டுரைகளும் நினைவிற்கு வந்தன. எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் செல்லும் என்னை வேறுவிதமான பேயோ, பிசாசோ பிடிக்காமல் விட்டால் சரி!


மீண்டும் பழைய லண்டன் பாலத்தைத் நோக்கிய பயணத்தில் மனைவி இன்னுமொரு முறை ஏமாந்து விடக்கூடாது என்பதால், இணையத்தளத்தில் பழைய லண்டன் பிறிச் இப்போ எங்கே இருக்கிறது என்று தேடிப் பார்த்தேன். லண்டனில் இருந்து கொண்டு வரப்பட்ட அந்தப் பாலம் இப்பொழுதும் அரிசோனாவில்தான் இருக்கிறதா இல்லை, அமெரிக்காவில் அடிக்கடி பிரபலமான விளையாட்டு வீரர்களை விற்று வாங்குவது போல, வேறு யாருக்காவது அந்தப் பாலத்தை அவர்கள் விற்றுவிட்டார்களா என்று தெரிந்து கொள்வதற்காகவே தேடிப் பார்த்தேன்! 

No comments:

Post a Comment