Monday, November 22, 2010

Thaipongal - SONG - தைப்பொங்கல்

தைப்பொங்கல்
Harvest Festival

Thanks giving event - Intended to thank the God Sun and farmstead.
குரு அரவிந்த​ன்

தைபிறந்தால் வழிபிறக்கும்
பொங்கலோ பொங்கல்
தமிழர்களின் திருநாளாம்
பொங்கலோ பொங்கல்..     (தைபிறந்தால்..)


கதிரறுத்துப் பொங்கிடுவோம்
பொங்கலோ பொங்கல்
கதிரவனை வணங்கிடுவோம்
பொங்கலோ பொங்கல்..     (தைபிறந்தால்..)


உழைப்பாலே உயர்ந்திடுவோம்
பொங்கலோ பொங்கல்
ஒன்றுபட்டு வாழ்ந்திடுவோம்
பொங்கலோ பொங்கல்..     (தைபிறந்தால்..)

தமிழ்மொழி - SONG - Tamil

தாய்மொழியாம் தமிழ்மொழி

குரு அரவிந்த​ன்

தாய் மொழியாம் தமிழ் மொழி
தாய் மொழியாம் தமிழ் மொழி


அம்மா அப்பா சொன்ன மொழி
அப்பா அன்பாய் அழைத்த மொழி
அண்ணா அக்கா பேசும் மொழி
அதுவே எங்கள் சொந்த மொழி


தாய் மொழியாம் தமிழ் மொழி
தாய் மொழியாம் தமிழ் மொழி


பொதிகையிலே பிறந்த மொழி
சங்கத்திலே வளர்ந்த மொழி
தொன்று தொட்டு வாழ்ந்த மொழி
அதுவே எங்கள் சொந்த மொழி


தாய் மொழியாம் தமிழ் மொழி
தாய் மொழியாம் தமிழ் மொழி


பாட்டா பாட்டி தந்த மொழி
பண்பாய்ப் பழக ஏற்ற மொழி
முன்னோர் போற்றி வளர்த்த மொழி
உலகம் எல்லாம் போற்றும் மொழி.


தாய் மொழியாம் தமிழ் மொழி
தாய் மொழியாம் தமிழ் மொழி

Computer song - கணினி கவசம்

இது சிரிப்பதற்கு!  சிரியுங்கள்... சிரியுங்கள்.

சிரிக்க, சிரிக்க, கணினி சிஸ்டம் கேட்க...

முகம் மலர்ந்தால் அகம் மலரும்.கணினி கவசம்  - By: Anonymous

 
துதிப்போர்க்கு தொங்குதல்போம் வைரஸ்போம்-நெஞ்சில்

பதிப்போர்க்கு பிராட்பேண்ட் களிப்பேற்றும்

கீபோர்டு விரைந்தோடும் அனுதினமும் கணினி சிஸ்ட கவசமதனை
பின்னிப்பெடலெடுத்த பில்கேட்ஸ்தனை

உன்னிப்புடன் நெஞ்சே குறி!


காக்க காக்க கம்ப்யூட்டர் காக்க

அடியேன் சிஸ்டம்  அழகுவேல் காக்க

வின்டோசைக் காக்க வேலன் வருக

கனெக்ஷன் கொடுத்து கனகவேல் காக்க

இன்டெர்நெட் தன்னை இனியவேல் காக்க

பன்னிருவிழியால் பாஸ்வேர்ட் காக்க

செப்பிய வால்யூம் செவ்வேல் காக்க

வீடியோ ஆடியோ வெற்றி வேல் காக்க

முப்பத்திரு ஃபைல் முனைவேல் காக்க

வைரஸ் வாராமல் வைரவேல் காக்க

சேவிங் தன்னை செந்தில் வேல் காக்க

எக்ஸ்டர்நல் மோடம் எதிர் வேல் காக்க

பில்ட் இன்மோடம் பிரிய வேல் காக்க

ஈமெயில் தன்னை இணையவேல் காக்க
மவுசை மகேசன் மைந்தன் காக்க

எர்ரர் வாராமல் எழில் வேல் காக்க

அடியேன் ப்ரின்டர் அமுதவேல் காக்க

எக்ஸ்ப்ளோரரை ஏரகத்தான் வேல் காக்க

அடியேன் ப்ரௌஸ் செய்கையில் அயில் வேல் காக்க

அல்லல் படுத்தும் அடங்கா எரர்கள்

நில்லாதோட நீ எனக்கருள்வாய்

ஹாங் ப்ராப்ளமும்

ஹார்ட் டிஸ்க் ப்ராபளமும்
என் பெயர் சொல்லவும்

இடி விழுந்தோடிட

ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை
அலறவே வைத்திடும்

ஃப்ளக்சுவேஷன் பவர் சார்ஜுகளும்

வாட்டம் விளைக்கும் வோல்ட்டேஜுகளும்

அடியேனைக் கண்டால் அலறி கலங்கிட

பிரிண்டர் சற்றும் பிழையாதிருக்க

பேப்பர் ஃபீடிங் சூப்பராய்த் திகழ

மை சப்ளை செய்யும் காட்ரிட்ஜ் தன்னை

மைய நடனம் செய்யும் மயில் வாகனனார் காக்க

மூவாகல் மூர்க்கம் செய்யும்
மவுஸ் என்கை பட்டதும் ஸ்மூத்தாக

நகர நீ எனக்கருள்வாய்
கிர்ரு, கிர்ரு, கிரு, கிரு என
டிஸ்கனெக்ட் ஆகும் டெலிபோன்களை

போட்டதும் கனெக்ட் ஆக புனிதவேல் காக்க

கன்னா பின்னாவென்று வரும்

கமான்ட் இன்டட் ரெப்டுகளை
கந்தன் கைவேல் காக்க

அல்லல் படுத்தும் அடங்கா பசங்களும்

பந்துகள் ஆடும்பாலர் பட்டாளமும்

மானிட்டர் பக்கம் வந்து விடாமல்

என் பெயர் சொல்லவும் எகிறியே ஓட

ரேமும், ரோமும் மெமரியோடிருக்க

அனைத்து ஃபோர்டர்ஸீம்
ஆயுளோடு விளங்க

டௌன்லோடு, அப்லோடு டக்கராய்

விளங்கும் சிஸ்டம் பெற்று அடியேன்
சிறப்புடன் வாழ்க.

அலட்சியம் செய்யும் அலசியஸர்வீஸர்

அழைத்ததும் வந்திட அருள் நீ புரிவாய்

ஷட்டௌன் தடங்கல்

சட்டென்று நீங்க
ஷண்முகன் நீயும் சடுதியில் வருக

கணினி சிஸ்டம் கவசம் இதனை

சிந்தை கலங்காது கேட்பவர்கள்
,
படிப்பவர்கள் எந்நாளும் பாடாய்

படுத்தாத கணினியுடன் வேலை செய்வார்.

வாழ்க கணினி. வளர்க மவுஸ்.

சிரிக்க, சிரிக்க, கணினி சிஸ்டம் கேட்க.

  By: Anonymous

Sunday, November 14, 2010

Never Giveup - ஊக்கமது கைவிடேல்

 


குரு அரவிந்தன்


எந்த ஒரு நல்ல முயற்சியை நாங்கள் செய்யத் தொடங்கினாலும் முதலில் எதிர்பாராத சிக்கல்கள் ஏற்படத்தான் செய்யும். அதற்காக மனமுடைந்து போய்விடாதீர்கள். நீங்கள் எடுத்த முயற்சியை, கொண்ட லட்சியத்தை நிறைவேற்றுவதில் எப்பொழுதும் கண்ணும் கருத்துமாக இருங்கள். உடனடியாகப் பலன் கிடைக்காவிட்டாலும் என்றாவது ஒருநாள் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள் என்ற மனத்திடத்தோடு செயற்படுங்கள். உடனே பலன் கிடைக்காவிட்டாலும், குறைந்த பட்சம் நல்லதைச் செய்தோம் என்ற மனத் திருப்தியாவது உங்களுக்கு ஏற்படும்.
என் மனதில் பதிந்த ஒரு கதையை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன். ஒருநாள் இரண்டு தவளைக் குஞ்சுகள் துள்ளி விளையாடிக் கொண்டிருந்த போது தவறிப்போய் அருகே இருந்த ஒரு பாற்குடத்தில் இரண்டும் விழுந்து விட்டன. பாலுக்குள் விழுந்து விட்டோமே, எப்படித் தப்புவது, எனக்கு நீந்தத் தெரியாதே என்று ஒரு தவளைக் குஞ்சு கையும் காலும் ஓடாமல் ஏங்கிப் போனது. அந்த ஏக்கத்தில் சோர்ந்துபோய் அப்படியே பாற்குடத்தில் தாண்டு போயிற்று. மற்றத் தவளைக் குஞ்சோ தவறி விழுந்து விட்டோமே எப்படியாவது இங்கிருந்து தப்புவதற்கு முயற்சி செய்து பார்ப்போம் என்று கால்களைப்போட்டு அடியடியென்று அடித்துப் பார்த்தது. கால்களை வேகமாக அடிக்கவே, பாலில் இருந்து வெண்ணெய் திரண்டு கட்டியாக மேலே வந்து மிதந்தது. தவளைக் குஞ்சு அதற்கு மேலே ஏறி உட்கார்ந்து மீண்டும் கால்களை உதைத்து வெளியே பாய்ந்து தப்பிக் கொண்டது. கடைசிவரை தனது முயற்சியைக் கைவிடாமல் போராடியதால் மற்றத் தவளைக் குஞ்சு உயிர் தப்பிக் கொண்டது. விடா முயற்சிக்கு இந்தக் கதை நல்லதொரு உதாரணமாக இருக்கிறது.

கனடாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டி – 2010ஐ நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். குளிர்கால விளையாட்டுப் போட்டி மட்டுமல்ல, அதைத் தொடர்ந்து நடைபெற்ற பராலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளும் பலரின் கவனத்தை கவர்ந்திருக்கின்றன. கண் பார்வை குறைந்தவர்களுக்கும், உடல் உறுப்புக்களால் பாதிக்கப் பட்டவர்களுக்குமாகவே இந்த பராலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. கனடாவைச் சேர்ந்த மைக் கீவர் (ஆஉ முநநஎநச டீசயைn) என்பவர் கடுமையான பயிற்சி காரணமாக குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்குபற்றத் தெரிவு செய்யப்பட்டார். மருத்துவப் பரிசோதனையின்போது அவரது கண் பார்வை 10 வீதம் மட்டுமே இருப்பதாக் கூறிவிட்டார்கள். கடைசி நேரத்தில் ஏதோ சில காரணங்களால் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் அவரைப் பங்குபற்ற விடவில்லை. ஆனாலும் அவரது லட்சியக் கனவுகள் கலைந்து போனாலும், அவர் மனம் உடைந்து போகவில்லை. பராலிம்பிக் போட்டியில் துணிச்சலோடு பங்கு பற்றினார். அவரது கடின உழைப்பும், மன உறுதியும், எதையாவது சாதிக்க வேண்டும் என்ற துடிப்பும் அவருக்கு ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று தங்கப் பதக்கங்களைப் பெற்றுக் கொடுத்தன. இன்று அவரை ஒரு சாதனையாளர் என்று எல்லோரும் பாராட்டுகிறார்கள். விளையாட்டு வீரர்களுக்கே அவர் ஒரு முன் உதாரணமாகத் திகழ்கின்றார்.

இவரைப்போலவே எம்மவர்கள் பலர் இன்று பல்வேறு விளையாட்டுத் துறைகளிலும் சிறந்த விளையாட்டு வீரர்களாக விளங்குகிறார்கள். ஆனால் ஒரு குறிப்பிட்ட அளவோடு தங்கள் திறமைகளை நிறுத்திக்கொண்டு விடுகிறார்கள். இந்த நாட்டில் எல்லா வசதிகளும் இருப்பதால், உங்கள் கடின உழைப்பையும் திறமைகளையும் கொண்டு விளையாட்டுத் துறையில் உங்களால் உயர உயரச் செல்ல முடியும். உங்களாலும் சாதனை படைக்க முடியும் என்ற நம்பிக்கையோடு பாடுபடுங்கள். உங்களால் முடியும் என்ற தன்நம்பிக்கை இருந்தால் நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள். மன உறுதியோடு பாடுபடுங்கள், விளையாட்டுத் துறையில் மட்டுமல்ல, வேறு எத்தனையோ துறைகளிலும் சாதனை படைக்கலாம்.

Mannankatty Enna Seiyum? - மண்ணாங்கட்டி என்ன செய்யும்?

மண்ணாங்கட்டி என்ன செய்யும்?

குரு அரவிந்தன்

'திராட்சைப் ப‌ழம் சாப்பிட‌லாம் என்றால்
ஏன் வைன் குடிக்க‌க்கூடாது?'


சாது பெரிதாக எதுவும் சாப்பிடுவதாகத் தெரியவில்லை. அனேகமாகப் பழங்களைத்தான் சாப்பிடுவது வழக்கம். அன்று புதிதாக ஆச்சிரமத்திற்குச் சேவை செய்ய வந்த சீடன்தான் பழத்தட்டுடன் அவரிடம் வந்தான்.  அவர் பழங்களைச் சாப்பிடும்போது அதை வியப்போடு பார்த்துக் கொண்டு நின்றான். சாது சாப்பிடுவதை நிறுத்திவிட்டு அவனை நிமிர்ந்து பார்த்தார்.
‘என்னப்பா அப்படிப் பார்க்கிறாய், நீ இன்னும் சாப்பிடவில்லையா?’ என்றார்.
‘உங்களிடம் ஒரு சந்தேகம் கேட்கலாமா?’ என்றான் சீடன்.

‘நிச்சயமாக, சந்தேகம் பொல்லாதது, அதை உடனேயே நிவர்த்தி செய்துவிடவேண்டும், இல்லாவிட்டால் அது மனிதரையே அழித்துவிடும், கேள் மகனே’ என்றார் சாது.
‘நீங்கள் இந்த திராட்சைப் பழங்களைச் சாப்பிடுகிறீர்களே, அது மனிதருக்குத் தீங்கு விளைவிக்குமல்லவா?’ என்றான் சீடன்.
‘பழங்கள் சாப்பிடுவது எனக்குத் தவறாகத் தெரியவில்லையே’ என்றார் சாது.
‘அப்படி என்றால் திராட்சைப் பழத்தில் இருந்து வடித்தெடுக்கும் சாறுதானே வைன் என்னும் பானம், அதை அருந்தக்கூடாது என்று ஏன் எல்லோரும் உபதேசம் செய்கிறார்கள். அதை அருந்தினால் மட்டும் ஏன் தீங்கு விளைவிக்கும் என்கிறார்கள்?’ என்றான் சீடன்.
‘உண்மைதான், எதுவுமே வேறு உருவம் பெறும்போது, அல்லது அதன் தன்மை மாறும்போது அதனால் ஏற்படும் பலாபலனும் மாறிவிடும். திராட்சைப் பழத்தின் சாற்றைப் புளிப்படைய வைத்து அதன் தன்மையை மாற்றுவதால் அது மனிதரை வெறிக்கச் செய்து நிலை தடுமாற வைத்துவிடுகிறது. அதனால்தான் மதுபானம் தீமை விளைவிக்கும் என்கிறார்கள்’ என்றார் சாது.
‘அதெப்படி, பழம் சாப்பிடலாம் என்றால் அதன் சாற்றைக் குடிப்பதும் தவறில்லை என்றல்லவா எடுக்க வேண்டும். சாற்றைக்குடித்தால் வெறிக்கும் என்பதெல்லாம் வெறும் கட்டுக்கதை, அப்படி ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது.’ என்று வாதாடினான் அந்த சீடன்.
சாது அருகே நின்ற மற்றைய சீடர்களைப் பார்த்தார். ஒரு சிலர் அந்தச் சீடன் சொல்வது சரியாய் இருக்குமோ என்பது போன்ற சந்தேகத்தோடு குருவைப் பார்த்தார்கள்.
நெருப்பு சுடும் என்பதைத் தெரிந்து கொள்வதற்காக நெருப்பைத் தொட்டுத்தான் பார்க்கவேண்டுமா?
ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷமே போதுமே என்பதை உணர்ந்து கொண்ட சாது அவர்களை வெளியே அழைத்துச் சென்று ஒரு தண்ணீர் தொட்டியருகே அந்தச் சீடனை உட்காரச் சொன்னார். ஏனைய சீடர்களைப் பார்த்து அவனது தலையிலே ஒரு பிடி மண்ணை அள்ளி ஒவ்வொருவராகப் போடச் சொன்னார். அவர்கள் மண்ணைப் போடும்போது நோகிறதா என்று சாது கேட்டார். சீடனோ அலட்சியமாய் இல்லை என்று பதிலளித்தான். அதன் பின் அருகே இருந்த தண்ணீர் தொட்டியில் இருந்து தண்ணீரைக் கிண்ணத்தில் எடுத்து ஒவ்வொருவராக அவனது தலையிலே ஊற்றச் சொன்னார். அதற்கும் அந்தச் சீடன் நோகவில்லை என்றே அலட்சியமாகப் பதிலளித்தான்.
‘அடுத்து என்ன செய்வது?’ என்று சீடர்கள் குருவிடம் கேட்டார்கள்.
அருகே இருந்த செங்கட்டிகளை ஒவ்வொன்றாக எடுத்து அவனது தலையிலே போடச் சொன்னார். சீடர்கள் செங்கட்டிகளை ஒவ்வொன்றாகத் தூக்கிக் கொண்டு அந்தச் சீடனுக்கு அருகே வந்தபோது அந்தச் சீடன் தலையிலே கையை வைத்துத் தடுத்தபடி பயந்துபோய் துடித்துப் பதைத்து எழுந்து ஓடிவந்து சாதுவிடம் ‘குருவே புரிந்து கொண்டேன்’ என்று மன்னிப்புக் கேட்டான்.
சாது சிரித்துவிட்டுச் சொன்னார், ‘மண்ணைத் தனியே போட்போது நோகவில்லை என்றாய் தண்ணீரைத் தனியே ஊற்றிய போதும் நோகவில்லை என்றாய், ஆனால் அந்த இரண்டையும் ஒன்றாய்க் கலந்த கலவைதானே செங்கட்டி, அதை உன்தலையிலை போட்டால் மட்டும் எப்படி நோகும் என்கிறாய்?’ என்றார்.
‘குருவே உண்மைத் தத்துவத்தைப் புரிந்து கொண்டேன், விதண்டா வாதத்திற்காக நான் அப்படி நடந்து கொண்டது தப்புத்தான், என்னை மன்னித்து விடுங்கள்’ என்றான் சீடன்.
‘நல்லது மகனே, தீயதைக் கண்டால் விலத்திக் கொள்வதும், நல்லதைத் தெரிந்து கொண்டு வாழப்பழகிக் கொள்வதும் உன்னைப் பொறுத்தது. ஏனென்றால் உன்னுடைய எதிர்காலம் உன்னில்தான் தங்கியிருக்கிறது’ என்று சீடனுக்குப் புத்திமதி சொன்னார் சாது. இதனால் தானோ என்னவோ, குடி குடியைக் கெடுக்கும் என்று ஊரிலே பெரியோர் சொல்வர். இங்கே எப்படியோ?

Sunday, November 7, 2010

Movie Review - URAVU - உறவு - படவிமர்சனம்

gltpku;rdk; - Moive Review

குரு அரவிந்த​ன்


(தமிழ் படமே பார்ப்பதில்லை என்று விமர்சித்தவர்களை எல்லாம் இரண்டாவது தடவையும் தியேட்டர் வாசலுக்கு இழுத்துவந்த அற்புதமான கலைப்படைப்பு உறவு – குரு அரவிந்தன்.)

உறவு மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடத்தே ஒரு பாலமமைத்து கனடிய தமிழ் திரைப்பட வரலாற்றில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியிருக்கிறார் திரைப்படக் கலைஞர் திவ்வியராஜன் என்றால் அது மிகையாகாது.
Thiviyarajan, Suthakaran
அல்பியன் சினிமாவில் பிற்பகல் 3:00 மணி காட்சியைப் பார்த்துவிட்டு ஈழத்து மூத்த நாடக, சினிமாக் கலைஞர் நண்பர் கே.எஸ். பாலச்சந்திரனுடன் காரிலே திரும்பி வரும்போது எங்கள் உரையாடல் உறவு படம் பற்றியதாகவே இருந்தது. அடிக்கடி செல்பேசியில் அவருக்கு அழைப்பு வருவதும் அவர் அற்புதம், அபாரம், எங்கடை கனடிய தமிழ்ப்படத்திற்கு இது ஒரு திருப்புமுனை, நல்ல எதிர்காலம் இருக்கு என்றெல்லாம் சொல்லிக் கொண்டு வரும்போது எனது கவனம் நெடுஞ்சாலையில் இருந்தாலும் அவரது வார்த்தைகளைக் கிரகித்துக் கொண்டேயிருந்தது. அகஸ்தியர் கையால் குட்டு வாங்கும் அதிஸ்டம் கிடைத்தது போல, கனடிய தமிழ் திரைப்பட உலகின் ஒரு மூத்த கலைஞரின் பாராட்டைப் பெறுவதற்கு ஏற்ற படம்தான் திவ்வியராஜனின் உறவு என்பதை என் மனமும் ஏற்றுக் கொண்டது.
K.Navam
கனடிய தமிழ் திரைப்படத்துறையில் திடீரென ஒரு மந்தநிலை ஏற்பட்டபோது, ஈழத்து தமிழ் திரைப்படத்துறை போல கனடிய தமிழ் திரைப்படத்துறையும் முகவரியற்றுப் போய்விடுமோ என்ற பயம் இங்கே உள்ள தமிழ் சினிமாக் கலைஞர்களிடையே ஏற்பட்டதென்னவோ உண்மைதான். அதிஸ்டவசமாக சமீபத்தில் வெளிவந்து பல பரிசுகளைப் பெற்ற லெனின் எம். சிவத்தின் 1999 என்ற தமிழ்ப்படம் கனடிய தமிழ் சினிமா சோடை போய்விடவில்லை என்பதை நிரூபித்துக் காட்டியிருந்தது. அடுத்து, இப்போது  வெளி வந்திருக்கும் உறவு படமும் சாதனை படைக்கக் காத்திருக்கிறது. 
K.Navam, Chithra, Suthakaran
கனடிய தமிழ் திரைப்பட வரலாற்றை எடுத்துப் பார்த்தால் முதல் முயற்சியாக ‘அன்பூற்று, ஏமாற்றம்’ போன்ற படங்கள் ஏ. முருகு என்பவரால் சாதாரண வீடியோ கமெராவால் தயாரிக்கப்பட்டாலும் தொழில்நுட்பக் குறைபாடுகாரணமாக அவை மக்களிடம் தகுந்த முறையில் சென்றடையவில்லை. 1996ல் ரவிஅச்சுதனின் நெறியாள்கையில் ஸ்ரீமுருகனால் தயாரிக்கப்பட்ட ‘உயிரே உயிரே’ என்ற தமிழ் படம் அரங்கம் நிறைந்த காட்சியாகக் காண்பிக்கப்பட்டதையும் இங்கே நினைவுகூரலாம்.
Kathir Thuraisingam

கணவன், மனைவி என்றால் தனியே ஒருவர் அல்ல, இருவரும் ஒருவரை ஒருவர் மனதாரப் புரிந்து கொள்வதும், விட்டுக் கொடுத்து அனுசரித்துப் போவதும் தான் திருமண பந்தத்தின் முதலாவது விதி என்பதை உணர்ந்து கொள்ளாவிட்டால் அந்தக் குடும்பமே சந்தேகத்தில் அழிந்து போய்விடும் என்பது மட்டுமல்ல, குடும்பப்பிரச்சனையில் தேவையற்ற மூன்றாம் மனிதரின் தலையீடும் ஒரு குடும்பத்தை அழித்துவிடும் என்பதை எடுத்துக்காட்டுவதே இந்தப்படத்தின் மூலக் கருவாகும். இலங்கையில் பிறந்ததால்தான் கதாநாயகன் அப்படி நடந்து கொள்கிறான் என்ற மனப்பான்மையோடு படம் பார்த்துவிட்டு விமர்சனம் எழுதினால் அது அபத்தம். மேலை நாட்டில் பிறந்தவர்கள்கூட இதைவிட மோசமாக நடந்து கொள்ளலாம். ஆணோ பெண்ணோ புரிந்துணர்வுதான் குடும்பவாழ்க்கையில் முக்கியம் என்பதைப் புரிந்து கொண்டால்சரி. கதை வசனம் நெறியாள்கை மூன்றையும் கலைஞர் திவ்வியராஜனே செய்திருப்பதால் ஒவ்வொரு அசைவிலும் அதை மானசீகமாக உணர்ந்து செய்திருப்பது தெளிவாகத் தெரிகின்றது. இந்தப் படத்தின் மூலம் தான் சிறந்ததொரு நெறியாளர் என்பதை நிரூபித்திருக்கின்றார்.


Sri Murugan
நடிகர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பாத்திரங்களை உணர்ந்து செய்திருக்கிறார்கள். சுதாகரனுடனான உரையாடலில் திவ்வியராஜனின் குறும்புப் பேச்சு பார்வையாளர்களைச் சிரிக்க வைக்கிறது. கதாநாயகன் சுதாகரன் பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். வீரம், பாசம், காதல், சோகம், என்று எல்லா உணர்வுகளையும் திறமையாக வெளிக் கொண்டுவந்திருக்கிறார். கதாநாயகி சங்கீதா பற்றிச் சொல்லவே தேவையில்லை, அவர் ஒரு நடனதாரகை என்பதால் முகபாவனை மூலமே அத்தனை உணர்வுகளையும் அள்ளிக் கொட்டுகின்றார். அவரது விழிகள் பல கதைகள் சொல்லாமல் சொல்கின்றன. எந்த சபையிலும் பாரதிபாடல்கள் ரசிகர்களை இலகுவில் கவர்ந்துவிடுவதுண்டு. அந்தப் பாரதிபாடலை வைத்தே அப்பா க.நவமும் மகள் சங்கீதாவும் ரசிகர்களை படம் தொடங்கிய உடனேயே  தங்கள் பக்கம் இழுத்துவிடுகிறார்கள். திவ்வியராஜனின் முதற்படமான சகா படத்தில் அப்பாவாக க. நவம் நடித்தபோதே இவர் சிறந்ததொரு குணசித்திர நடிகர் என்பதை இனம் கண்டு கொண்டேன். அதை இந்தப் படத்திலும் அவர் நிரூபித்து அப்பா பாத்திரத்திற்கு இயல்பாகவே உயிரூட்டியிருக்கிறார். பாரதி கவிதை படிக்கும் போது எல்லோர் மனதையும் தொடுகின்றார். நாங்களும் அவருடன் சேர்ந்து வாய்க்குள் அந்தக் கவிதையை முணுமுணுக்கிறோம். இவர்களுக்கு எந்த விதத்திலும் தான் குறையவில்லை என்பதை நிரூபிப்பதுபோல சித்திரா பிலீக்ஸ் தனது நடிப்புத் திறமையை ஒவ்வொரு அசைவிலும் இயல்பாக வெளிக்காட்டுகின்றார். மகள் தன்னிடம்கூடச் சொல்லமுடியாமல் தவிப்பதைப் பார்த்துப் பெற்றதாய் துடிக்கும் இடம் அபாரம். கதாநாயகனின் பெற்றோராக நடித்தவர்களும் தங்கள் நடிப்பாற்றலைத் திறமையாக வெளிக்காட்டியிருக்கிறார்கள். பண்பட்ட நடிகர்களான கதிர் துரைசிங்கம் சிறிமுருகன் ஏன் வெள்ளைவானில் வந்தவர்கள்கூட நிஜமான பாத்திரங்களாய் மாறியிருந்தார்கள்.


Sangeetha
மொத்தத்தில் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட படம் என்றாலும் எந்தவிதத்திலும் ரசிகர்களுக்குக் குறை வைக்கவில்லை என்பதைப் படம் முழுவதும் காணமுடிகின்றது. சினிமாத்துறையில் நானும் ஈடுபாடு கொண்டவன் என்பதால், திவ்வியராஜனின் கடின உழைப்பிற்கு இந்தப் படத்தின் மூலம் பலன் கிடைத்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். திரைக்குப்பின்னால் திருமதி திவ்வியராஜனின் உழைப்பும் நிறைய இருப்பது நன்கு தெரிகின்றது. எதற்கெல்லாமோ அள்ளிக்  கொடுக்கும் ரசிகர்களே கனடிய தமிழ் சினிமாவையும் வாழவையுங்கள். சாதனை படைக்க வைப்பதும் விடுவதும் இனி உங்கள் கையிலேயே தங்கியிருக்கிறது. குடும்பத்தோடு சென்று பார்க்கக்கூடிய படம் என்பதால் தயங்காது குடும்பத்தோடு சென்று பாருங்கள். பதினைந்தே வருட அனுபவம் கொண்ட கனடிய தமிழ் திரைப்படத்துறையைத் தயவு செய்து 100 வருடங்களுக்கு மேல் அனுபவம் வாய்ந்த தமிழகத் திரைப்படங்களுடனேயோ அல்லது கோடிக்கணக்கில் செலவு செய்து எடுத்த எந்திரன் போன்ற படங்களுடனோ ஒப்பிட்டுப் பார்த்துக் கணிப்புச் சொல்லாதீர்கள். இது எம்மவர் எடுத்த படம் என்பதால் ஆதரவு தரவேண்டியதும் எங்கள் கடமை என்பதை மறந்து விடாதீர்கள். குழந்தை ஒன்று காலடி எடுத்து வைத்து நடக்கத் தொடங்குகின்றது. அதன் கைகளை ஆதரவேடு பற்றி அணைத்துச் செல்வதே ரசிகர்களாகிய எங்கள் தார்மீகக் கடமையாகும்.


Sangeetha, Suthakaran
இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ஜீவன்ராம் ஜெயம் பாராட்டப்பட வேண்டியவர்.குறைந்த வசதிகளோடு மிகவும் அற்புதமாகக் கமெராவைக் கையாண்டிருக்கிறார். கமெராக் கோணங்கள் மிகவும் அற்புதம். பாராட்டுக்கள். சில குறைகள் ஆங்காங்கே இருந்தாலும், இசையமைப்பு ஒலியமைப்பு, எடிற்ரிங் போன்றவை தரமாக இருக்கின்றன. எந்த ஒரு இடத்திலும் சோர்ந்து போகாமல் படம் இயல்பாக நகர்கிறது. இதுபோன்ற படங்கள் மேலும் வெளிவரவேண்டும். கனடியதமிழ் சினிமாவுலகை உலகறியச் செய்ய வேண்டும். ரசிகர்களாகிய உங்களால் முடியும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

கனடிய தமிழ் சினிமா வரிசையிலே அடுத்து கனடாவில், குரு அரவிந்தனின் கதை வசனத்தில், மதிவாசனின் இயக்கத்தில் வெளிவர இருக்கும் பாரதி கலைக்கோயிலின் வேலி படமும் சாதனை படைக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.