Sunday, November 14, 2010

Never Giveup - ஊக்கமது கைவிடேல்

 


குரு அரவிந்தன்


எந்த ஒரு நல்ல முயற்சியை நாங்கள் செய்யத் தொடங்கினாலும் முதலில் எதிர்பாராத சிக்கல்கள் ஏற்படத்தான் செய்யும். அதற்காக மனமுடைந்து போய்விடாதீர்கள். நீங்கள் எடுத்த முயற்சியை, கொண்ட லட்சியத்தை நிறைவேற்றுவதில் எப்பொழுதும் கண்ணும் கருத்துமாக இருங்கள். உடனடியாகப் பலன் கிடைக்காவிட்டாலும் என்றாவது ஒருநாள் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள் என்ற மனத்திடத்தோடு செயற்படுங்கள். உடனே பலன் கிடைக்காவிட்டாலும், குறைந்த பட்சம் நல்லதைச் செய்தோம் என்ற மனத் திருப்தியாவது உங்களுக்கு ஏற்படும்.
என் மனதில் பதிந்த ஒரு கதையை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன். ஒருநாள் இரண்டு தவளைக் குஞ்சுகள் துள்ளி விளையாடிக் கொண்டிருந்த போது தவறிப்போய் அருகே இருந்த ஒரு பாற்குடத்தில் இரண்டும் விழுந்து விட்டன. பாலுக்குள் விழுந்து விட்டோமே, எப்படித் தப்புவது, எனக்கு நீந்தத் தெரியாதே என்று ஒரு தவளைக் குஞ்சு கையும் காலும் ஓடாமல் ஏங்கிப் போனது. அந்த ஏக்கத்தில் சோர்ந்துபோய் அப்படியே பாற்குடத்தில் தாண்டு போயிற்று. மற்றத் தவளைக் குஞ்சோ தவறி விழுந்து விட்டோமே எப்படியாவது இங்கிருந்து தப்புவதற்கு முயற்சி செய்து பார்ப்போம் என்று கால்களைப்போட்டு அடியடியென்று அடித்துப் பார்த்தது. கால்களை வேகமாக அடிக்கவே, பாலில் இருந்து வெண்ணெய் திரண்டு கட்டியாக மேலே வந்து மிதந்தது. தவளைக் குஞ்சு அதற்கு மேலே ஏறி உட்கார்ந்து மீண்டும் கால்களை உதைத்து வெளியே பாய்ந்து தப்பிக் கொண்டது. கடைசிவரை தனது முயற்சியைக் கைவிடாமல் போராடியதால் மற்றத் தவளைக் குஞ்சு உயிர் தப்பிக் கொண்டது. விடா முயற்சிக்கு இந்தக் கதை நல்லதொரு உதாரணமாக இருக்கிறது.

கனடாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டி – 2010ஐ நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். குளிர்கால விளையாட்டுப் போட்டி மட்டுமல்ல, அதைத் தொடர்ந்து நடைபெற்ற பராலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளும் பலரின் கவனத்தை கவர்ந்திருக்கின்றன. கண் பார்வை குறைந்தவர்களுக்கும், உடல் உறுப்புக்களால் பாதிக்கப் பட்டவர்களுக்குமாகவே இந்த பராலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. கனடாவைச் சேர்ந்த மைக் கீவர் (ஆஉ முநநஎநச டீசயைn) என்பவர் கடுமையான பயிற்சி காரணமாக குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்குபற்றத் தெரிவு செய்யப்பட்டார். மருத்துவப் பரிசோதனையின்போது அவரது கண் பார்வை 10 வீதம் மட்டுமே இருப்பதாக் கூறிவிட்டார்கள். கடைசி நேரத்தில் ஏதோ சில காரணங்களால் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் அவரைப் பங்குபற்ற விடவில்லை. ஆனாலும் அவரது லட்சியக் கனவுகள் கலைந்து போனாலும், அவர் மனம் உடைந்து போகவில்லை. பராலிம்பிக் போட்டியில் துணிச்சலோடு பங்கு பற்றினார். அவரது கடின உழைப்பும், மன உறுதியும், எதையாவது சாதிக்க வேண்டும் என்ற துடிப்பும் அவருக்கு ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று தங்கப் பதக்கங்களைப் பெற்றுக் கொடுத்தன. இன்று அவரை ஒரு சாதனையாளர் என்று எல்லோரும் பாராட்டுகிறார்கள். விளையாட்டு வீரர்களுக்கே அவர் ஒரு முன் உதாரணமாகத் திகழ்கின்றார்.

இவரைப்போலவே எம்மவர்கள் பலர் இன்று பல்வேறு விளையாட்டுத் துறைகளிலும் சிறந்த விளையாட்டு வீரர்களாக விளங்குகிறார்கள். ஆனால் ஒரு குறிப்பிட்ட அளவோடு தங்கள் திறமைகளை நிறுத்திக்கொண்டு விடுகிறார்கள். இந்த நாட்டில் எல்லா வசதிகளும் இருப்பதால், உங்கள் கடின உழைப்பையும் திறமைகளையும் கொண்டு விளையாட்டுத் துறையில் உங்களால் உயர உயரச் செல்ல முடியும். உங்களாலும் சாதனை படைக்க முடியும் என்ற நம்பிக்கையோடு பாடுபடுங்கள். உங்களால் முடியும் என்ற தன்நம்பிக்கை இருந்தால் நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள். மன உறுதியோடு பாடுபடுங்கள், விளையாட்டுத் துறையில் மட்டுமல்ல, வேறு எத்தனையோ துறைகளிலும் சாதனை படைக்கலாம்.

No comments:

Post a Comment