Monday, December 13, 2010

Mahajana College - மகாஜனக் கல்லூரியின் சர்வதேச நூற்றாண்டு மலர் வெளியீட்டு விழா

மகாஜனக் கல்லூரியின் சர்வதேச
நூற்றாண்டு மலர் வெளியீட்டு  விழா

மணிமாலா
சென்ற சனிக்கிழமை (11-12-2010) ஸ்காபரோ சிவிக்சென்ரர் பார்வையாளர் மண்டபத்தில் கனடா பழைய மாணவர் சங்கத்தின் சார்பில் மகாஜனக் கல்லூரியின் சர்வதேச நூற்றாண்டு மலர் வெளியீட்டு விழா கனடாவில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
கனடாவில் உள்ள மகாஜனக் கல்லூரியின் மூத்த பழைய மாணவரான திரு தர்மலிங்கம் திருமதி தர்மலிங்கம் ஆகியோர் மங்கள விளக்கேற்றி வைத்து விழாவை ஆரம்பித்து வைத்தனர். கல்லூரிக் கீதமும், அதைத் தொடர்ந்து செல்வி அனுஷ்கா முரளிதரனால் கனடா தேசிய கீதமும் இசைக்கப்பட்டன. தொடர்ந்து பொருளாளர்  கே. ஜெயேந்திரன் ஆரம்ப உரை நிகழ்த்தினார். அடுத்து மன்றச் செயலாளர் க. முத்துலிங்கம் வரவேற்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து இ. இரவீந்திரனின் தலைவர் உரை இடம் பெற்றது. ஆசிரியர் எம். சிவலிங்கம், உபதலைவர் நா. சாந்திநாதன் ஆகியோரும் வாழ்த்துரை நிகழ்த்தினர். தொடர்ந்து மலர்க் குழுவின் ஒருங்கிணைப்பாளர் வே. நந்தீஸ்வரரின் உரை இடம் பெற்றது. அவர் தனது உரையில் மலரைச் சிறப்பாக  வெளிக் கொண்டு வருவதற்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். அடுத்து பழைய மாணவியான கலாநிதி திருமதி கௌசல்யா சுப்பிரமணியன் அவர்கள் மகாஜனாவின் ஆரம்பகால அதிபர்களைப் பற்றி உரையாற்றினார்.

Mr&Mrs Tharmalingam
R.Ravindran,K.Jeyandran,K.Muthulingam
அடுத்ததாக மகாஜனக் கல்லூரி பழைய மாணவரும் எழுத்தாளருமான
குரு அரவிந்தன் தாயின் மடியில் என்ற தலைப்பில்… நூற்றாண்டு மலரைப் பற்றிய அறிமுகவுரையை நிகழ்த்தினார். அவர் ஆற்றிய உரையில் இருந்து ஒரு பகுதியைத் தருகிறோம்.

‘கேடில் விழுச்செல்வங் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.’

கல்வி ஒன்றே அழிவற்ற செல்வம் என்று வள்ளுவப் பெருந்தகை குறிப்பிட்டதுபோல எங்களுக்கெல்லாம் அந்தச் செல்வத்தை அள்ளியள்ளித் தந்த, நூறாவது அகவையை நிறைவு செய்யும் எங்கள் மகாஜன அன்னையே..! உங்களை முதற்கண் வணங்கி, இந்த சர்வதேச நூற்றண்டு மலரை உங்கள் மடியில் வளர்ந்த குழந்தைகளாகிய நாங்கள் உங்கள் காலடியில் பெருமையுடன் சமர்ப்பிக்கின்றோம்.

Kuru Aravinthan
மகாஜனக்கல்லூரியின் நுற்றாண்டு வரலாற்றைக் குறிக்கும் இந்த மலரை வெளிக்கொண்டு வருவதற்குப் பல சிரமங்களை நாங்கள் எதிர்கொள்ள வேண்டிவந்தது. தகுந்த முறையில் ஆவணப்பதிவு செய்வதற்கு எங்களுக்குப் போதிய தகவல்கள் கிடைக்கவில்லை. இருந்தபோதிலும் எங்களுக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அவற்றை இங்கே தந்திருக்கிறோம். உள்நாட்டுப் போர்ச்சூழல் காரணமாக ஏற்பட்ட மகாஜனாவின் இடப்பெயர்வு காரணமாகவும், தேவையான முழுமையான தகவல்களை எம்மால் பெறமுடியாது போய்விட்டது. ஆனாலும் மனம் தளராது எடுத்த முயற்சியை செவ்வனே செய்து முடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தோடு எம்மால் இயன்றளவு தகவல்களைத் திரட்டித் தந்திருக்கிறோம். ஏதாவது தகவல்கள் தவறவிடப்பட்டிருந்தால், இந்தமலரில் இடம் பெறாதிருந்தால் அதற்காக மலர்க்குழுவின் சார்பில் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம்.
Mr.N.Santhinathan

 இந்த மலரில் பத்து இதழ்கள் விரிந்திருக்கின்றன. முதலாவது இதழில் தெல்லிப்பழை மகாஜனக்கல்லூரியின் வரலாறு இடம் பெறுகின்றது. இரண்டாவது இதழில் மகாஜனக்கல்லூரியின் ஸ்தாபகர், அதிபர்கள், உப அதிபர்கள் பற்றிய தகவல்கள் இடம் பெறுகின்றன. மூன்றாவது இதழில் மகாஜனக் கல்லூரி ஆசிரியர்கள், அலுவலர்கள் பற்றிய விபரங்கள் அடங்கியிருக்கின்றன. நான்காவது இதழில் பல்வேறு துறைகளில் சேவையும், சாதனையும் படைத்த எமக்குக் கிடைத்த கல்லூரி பழையமாணவர்கள் சிலரைப் பற்றிய விபரங்களை வெளியிட்டிருக்கிறோம். ஐந்தாவது இதழில் உள்நாட்டு போர்ச்சூழல் காரணமாக மகாஜனாவின் இடப்பெயர்வு பற்றியும், அதனால் ஏற்பட்ட இழப்புக்கள் பற்றிய விபரங்களும் அடங்குகின்றன. ஆறாவது இதழில் தற்போதைய மகாஜனா பற்றிய விபரங்கள் அடங்கியிருக்கின்றன. ஏழாவது இதழில் மகாஜனன்களின் கலைத்துறை, விளையாட்டுத் துறை முயற்சிகள்
Dr.Gowsalia Subramaniam

பற்றிய விபரங்கள் இடம் பெறுகின்றன. எட்டாவது இதழில் மகாஜனக் கல்லூரி பற்றிய பல அறிஞர்களின் மலரும் நினைவுகளும், பதிவுகளும் இடம் பெறுகின்றன. ஒன்பதாவது இதழில் கல்லூரியோடு தொடர்புடைய முக்கியமான ஆய்வுக்கட்டுரைகள் இடம் பெறுகின்றன. பத்தாவது இதழில் மகாஜனக் கல்லூரியின் பழையமாணவர் சங்கங்களின் செயற்பாடுகள் பற்றிய குறிப்புக்கள் அடங்குகின்றன.


Mr.N. Ganeshapillai
சுருங்கச் சொன்னால் இந்த அழகிய தேன்சிந்தும் மலரின் ஒவ்வொரு இதழ்களும் நறுமணங் கமழ்ந்த வண்ணம், சுவைப்பதற்காய் இருக்கின்றன. ஒவ்வொரு இதழிலும் இணைக்கப்பட்ட அரிய புகைப்படங்கள் இந்த மலரின் அழகிற்கு அழகு சேர்த்து, மகாஜனக் கல்லூரியின் நூற்றாண்டு வரலாற்றை சொல்லாமல் சொல்லிப் பதிவு செய்கின்றன. இறுதியாக மகாஜனாவின் பெருமையை எட்டுத்திக்கும் பரப்பி நிற்கும் எம்முடன் பிறப்புக்களுக்கும், அதற்குக் காரணமாக இருந்த அதிபர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் நன்றிகூறக் கடமைப்பட்டிருக்கிறோம்.

Mr.T.Vijayakumar
இந்த மலருக்கு ஆக்கங்களையும், புகைப்படங்களையும்  கொடுத்து உதவியவர்களுக்கும், தட்டச்சு செய்தவர்களுக்கும், இந்த அழகிய மலரை வடிவமைத்துப் புத்தக உருவில்  கொண்டு வந்தவர்களுக்கும், ஆலோசனை தந்தவர்களுக்கும், குறிப்பாக கலாநிதிகளான திரு. திருமதி சுப்பிரமணியன் ஐயா அவர்களுக்கும், பழைய மாணவர் சங்க நிர்வாகசபை உறுப்பினர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


Mr.V.Nanthieswarar
 குறிப்பாக கனடா சங்கத்தின் தலைவர் இ.இரவீந்திரன் அவர்களுக்கும், இந்த மலரை வெளிக் கொண்டு வருவதில் முனைப்பாக நின்று ஆக்கமும் ஊக்கமும் தந்த, தவிர்க்க முடியாத காரணத்தால் வருகைதர முடியாதுபோன முன்னாள் அதிபர் திரு. பொ. கனகசபாபதி அவர்களுக்கும், கனடாவிற்கு வருகை தந்து மலருக்குரிய ஆரம்ப முயற்சிகளை மேற்கொண்டு எம்மை ஊக்குவித்த கலாநிதி இரகுபதி அவர்களுக்கும், மலருக்குத் தேவையான ஆவணங்களைக் கொடுத்து உதவிய தற்போதைய அதிபர் திருமதி அனந்தசயனன் அவர்களுக்கும், மலர்க்குழுவினருக்கும், மலர்க்குழுவின் இணைப்பாளராக இருந்து இந்த
மலரை மலரவைத்த எமது போஷகர் திரு. நந்தீஸ்வரன் அவர்களுக்கும் இச்சந்தர்ப்பத்தில் மலர்க்குழுவின் சார்பில் நன்றி கூறக் கடமைப் பட்டிருக்கிறோம்.
Dr.N.Subramanian
நூற்றாண்டு மலர்க்குழுவினர் சார்பில் குரு அரவிந்தனின் நூல் அறிமுக உரையைத் தொடர்ந்து வெளியீட்டுரையைக் கலாநிதி நா. சுப்பிரமணியன் அவர்கள் நிகழ்த்தினார். அவர் தனது உரையில் மகாஜனாவிற்கு என்றொரு பாரம்பரியம் இருக்கிறது, வெளியே நின்று பார்க்கும் எங்களுக்கு அது தெளிவாகப் புரிகிறது, எமது ஆவணங்கள் எல்லாம் அழிக்கப்படுகின்ற நிலையில், நாளைய தலை முறைக்கு இந்த மலர் ஒரு பண்பாட்டுக் களஞ்சியமாக இருக்கும் என்று கூறி மலர்க்குழுவின் கடின உழைப்பைப் பாராட்டினார்.
Mr. Kathir Thuraisingham
முன்னாள் அதிபர் சின்னப்பாவின் மகனான திருவருட்செல்வனினால் நூற்றாண்டு மலரின் முதற் பிரதி வெளியிடப்பட்டது. முதற் பிரதியை போஷகர் கதிர் துரைசிங்கம் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து மகாஜனக் கல்லூரியின் நலன்விரும்பிகள் பலர் விசேட பிரதிகளைப் பெற்றுக் கொண்டனர். அதைத் தொடர்ந்து உப செயலாளர் ரி. விஜயகுமாரின் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுபெற்றது.
This souvenir consists of 456 pages includes ten chapters namely
 

-       History of Mahajana 1910 to 2010
-       Past Managers, Principals & Vice Principals
-       Past Teachers
-       Past Students
-       Displaced Mahajana
-       Present Mahajana
-       Mahajana & Arts, Sports
-       Memories from old students
-       Research articles and
-        OSAS

 The Souvenir also contains 70 to 80 pages of photos of our Past Principals, Vice Principals, Past teachers,  Past students, Past soccer champions, Drama first place in all Islands Schools, memories all OSA 's committee, Past Presidents and their events. Photos are in colour and black. There are no single advertisements on this souvenir.


மகாஜனாவே இவரது மூச்சாக…

1957ம் ஆண்டு மே மாதம் தமிழ்நாட்டில் Madras Presidency  தங்கப்பதக்கத்தைத் தனதாக்கிக் கொண்டு பட்டதாரியாக வெளியேறுகின்றார் திரு. பொ. கனகசபாபதி அவர்கள். ஆசிரியர் தொழிலில் ஆர்வம் காட்டிய அவர் மகாஜனக் கல்லூரி அதிபர் திரு. து. ஜெயரத்தினத்தின் அழைப்பை ஏற்று தற்காலிக ஆசிரியராக மகாஜனக் கல்லூரியில் நுழைந்தார். உயர் வகுப்பிற்கான விலங்கியலைக் கடமை உணர்வோடு கற்பித்தார். அவரது கற்பித்தல் திறனைக் கண்டு வியந்த அதிபர் திரு. து. ஜெயரத்தினம் அவர்கள் அவரை நிரந்தர ஆசிரியராக நியமனம் செய்தார். ஆசிரியராக இருந்தாலும் மணவர்களுடன் தோழமையோடு பழகி மேலதிக வகுப்புக்களை நடத்தி, பல மாணவர்களை விசேட சித்தியடையச் செய்தார். அதனால் இலங்கையின் பல திசைகளிலும் இருந்தும் மாணவர்கள் மகாஜனாவை நோக்கி வரத் தொடங்கினர். விலங்கியல் என்றால் கனெக்ஸ் என்று மாணவர்கள் மட்டுமல்ல பெற்றோரும் பாராட்டும் வண்ணம் தன் பெயரை நிலைக்கச் செய்தார். மகாஜனா சுப்பகிரேட் தரத்திற்கு உயர்வதற்கு இவரது கடின உழைப்பும் ஒரு ஊன்றுகோலாக இருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. அவரது உள்ளம் போலவே உயர்ந்த தோற்றமும், வெள்ளை ஆடையின் வசீகரமும் ஆசிரியர் தொழிலுக்கு மேலும் அழகு சேர்த்தன.

தொடர்ந்து 14 வருடங்கள் மகாஜனாவில் ஆசிரியராகக் கடமையாற்றிய அவர், திறமை அடிப்படையில் பதவி உயர்வு பெற்று புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரியின் அதிபராக நியமனம் பெற்றுச் சென்றார். அங்கு அவர் அதிபராக இருந்த 5 வருடங்களில் கல்லூரி அடைந்த துரித வளர்ச்சி கண்டு ஊரே வியக்கும் வேளையில், 1976ம் ஆண்டு மகாஜனாவிற்கு அதிபராகும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவரது நிர்வாகத் திறமை காரணமாக அவரது காலப் பகுதியில் கல்லூரி பல துறைகளிலும் மிளிரத் தொடங்கியது. கல்லூரிக் கட்டிடங்கள் துரித வளர்ச்சி கண்டன. கலைக்கென்று ஒரு களம் அமைக்கப்பட்டது. விளையாட்டுத்துறை விசாலமாக்கப்பட்டது. கல்வித்துறையில் பல்கலைக்கழக நுழைவுகள் அதிகரித்தன. இத்தகைய பாரிய வளர்ச்சிக்கு அவரது அடிமனதில் வேரூன்றி இருந்த விசுவாசமான கடமை உணர்வே காரணமாயிருந்தது.
சொந்த விருப்பத்தின் பெயரில் இலங்கையில் இருந்து நைஜீரியா சென்று கற்பித்தல் துறையில் கடமையாற்றிய அவர் 1987ம் ஆண்டு கனடாவிற்கு வருகின்றார். என்றும் மகாஜனாவின் நினைவுகளுடனேயே வாழ்ந்து கொண்டிருக்கும் அவர் 1989ம் ஆண்டு கனடாவில் பழைய மாணவர் சிலரின் ஒத்துழைப்போடு மகாஜனா பழைய மாணவர் சங்கத்தைத் தொடக்கிவைத்தார். தொடர்ந்து 6 ஆண்டுதள் தலைமைப் பொறுப்பேற்று அதன் வளர்ச்சிக்குப் பாடுபட்டார். இன்றுவரை சங்கத்தின் வளர்ச்சிக்கு அவ்வப்போது ஆலோசனைகள் வழங்கி அயராது உதவி வருகின்றார். கனடாவில் மட்டுமல்ல பலவேறு நாடுகளிலும் மகாஜனாவின் பழைய மாணவர் சங்கங்களை அமைப்பதற்கு வழிவகுத்து அவற்றிற்கு ஆலோசனையும் வழங்கி வருகின்றார்.

மகாஜனா மாதாவின் நூற்றண்டு அமைந்திருக்கும் இந்த ஆண்டே அவரது 75வது ஆண்டு பூர்த்தியும் அமைந்திருக்கிறது. மூன்று மாத இடைவெளியில் கனடா, லண்டன், இலங்கை, (தெல்லிப்பழை, கொழும்பு) ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் கொண்டாடப்பட்ட நூற்றாண்டு விழாக்களில் இவர் நேரில் கலந்து விழாவைச் சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது. அவ்வேளை அச்சங்கங்கள் இவரது 75வது அகவையையும் கௌரவிக்கத் தவறவில்லை. பழைய மாணவர் சங்கங்களின் சர்வதேச ஒருங்கிணைப்பாளராக இருக்கும் இவர் இந்நூல் வெளியாவதற்கும் அர்ப்பணிப்போடு உழைத்தார். வாரம் தோறும் இவர் ஏறும் பொதுமேடைகளோ ஏராளம். அத்தனை மேடைகளிலும் ஏதோ ஒரு விதத்தில் மகாஜனாவின் பெயரும் ஒலிக்கும். மகாஜனாவில் வாழ்ந்த காலத்தைவிட அதன் பின்பும் 30 ஆண்டுகளாக பேச்சும், மூச்சும் மகாஜனாவாகவே வாழ்ந்து கொண்டிருக்கும் எங்கள் அதிபர், மகாஜனர்கள் ஒவ்வொருவரின் இதயத்திலும் இடம் பிடித்திருக்கிறார் என்றால் அது மிகையாகாது. ரொறன்ரோ கல்விச்சபை, பல்கலாச்சார ஆலோசகராக இவரை நியமித்தது, மகாஜனர்கள் மட்டுமல்ல, கனடா வாழ் தமிழர்கள் அனைவருமே பெருமைப்படக்கூடியது. ஆதிபர் அவர்கள் கனடாவில் எங்களுடன் வாழ்ந்து கொண்டிருப்பது நாம் செய்த பாக்கியமே. அவர் எங்கள் பொக்கிஷம், எங்கள் சொத்து, அவர் நீடூழி காலம் வாழ்ந்து எங்களை வழி நடத்த வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திப்போமாக.

நா.சாந்திநாதன்.
 நாடக நெறியாளர்

No comments:

Post a Comment