Tuesday, December 7, 2010

Royal Wedding - கல்யாண வைபோகமே..!

Next year is an exciting year in Britain! They have the Royal Wedding (which I'm sure you've heard all about), the one year to go countdown to the London 2012 Olympics and the Royal Shakespeare Company celebrates its 50th anniversary. So there are sure to be plenty of reasons to visit Britain in 2011.

குரு அரவிந்தன்               
கேற் மிடில்ரனின் கணையாழியில் இருக்கும் இந்த நீலசபையர் இலங்கையில் தமிழர் அதிகம் வாழும் மலையக இரத்தினபுரி பகுதியில் நிலத்திற்கடியில் இருந்து எடுக்கப்பட்டது என்பது பலருக்குத் தெரியாது. 

பிரித்தானியாவின் முடிக்குரிய இளவரசர் வில்லியத்தின் திருமணம் பற்றிய அறிவித்தல் திடீரென வெளிவந்து பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்திருக்கிறது. பிரித்தானிய அரச குடும்பத்துத் திருமணங்கள் எல்லாம் இப்பொழுது ஆச்சரியப்படக் கூடியனவாக இருக்கின்றன. ஏனென்றால் பழமைவாய்ந்த அரசபாரம்பரியத்தை உடைத்தெறிவனவாக அவை இருப்பதுதான் இதற்குக் காரணம். முன்பு ஒருமுறை மன்னராக முடிசூடிய எட்டாவது எட்வேட் தனது காதலுக்காக டிசம்பர் மாதம் 11ம் திகதி 1936ல் முடிதுறந்த சம்பவம் அனேகமானோரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருந்தது. இவர் வலிஸ் சிம்ஸன் என்ற பெண்மணியை விரும்பியதால், பதவியா காதலியா என்ற இக்கட்டான நிலை வந்தபோது காதலுக்கே முதலிடம் கொடுத்து தனது முடியைத் துறந்தார். 1937ம் ஆண்டு யூன் மாதம் 3ம் திகதி இவர்களின் திருமணம் நடந்தேறியது. இவர் காதலுக்காக முடிதுறந்ததால் அரசாளும் பரம்பரையிலும் மாற்றம் ஏற்பட்டது.
Prince William and Kate Middleton
பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் நினைவுகளைப் பேணும் வகையில் இன்றும் மன்னராட்சிக்கு அந்த நாட்டுமக்கள் மதிப்புக் கொடுக்கிறார்கள். பிரித்தானியா ஒரு ஜனநாயகநாடாக மாறினாலும், பழமை பேணுவதில் அங்கேயுள்ள அனேகமான மக்கள் ஈடுபாடு கொண்டவர்களாக இருக்கின்றார்கள். மத்திய கிழக்குப் போன்ற ஒரு சில நாடுகளைத் தவிர ஏனைய நாடுகளில் மன்னராட்சி முற்றாக ஒழிக்கப்பட்டு ஜனநாயக ஆட்சி நடைபெறுவதை இன்று எங்களால் அவதானிக்க முடிகிறது. ஒரு காலத்தில் உலகின் பல நாடுகள் பிரித்தானியாவின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தன. முடிக்குரிய இரண்டாவது எலிசபெத் மகாராணியின் ஆட்சியின் கீழ் இருந்தாலும், காலப்போக்கில் அவை சுதந்திரமடைந்து பொதுநலவாய நாடுகள் என்ற அமைப்பின்கீழ் ஒன்றாகச் செயற்பட்டன. முடிக்குரிய எலிசபெத் மகாராணியாருக்கு அடுத்தபடியாக அவரது மகன் இளவரசர் சாள்ஸ்ஸே பதவிக்கு வரவேண்டும். ஆனால் நவம்பர் மாதம் 14ம் திகதி 1948ம் ஆண்டு இளவரசர் பிலிப்புக்கும், இரண்டாவது எலிசபெத் மகாராணியாருக்கும் மகனாகப் பிறந்த சாள்ஸ_க்கு அரசியல் காரணங்களுக்காக அந்தப் பதவி கிடைக்கப் போவதில்லை என்பது இப்போது தெளிவாகத் தெரிகின்றது. இவர் 6வது ஜோர்ச் மன்னரினதும், முதலாவது எலிசபெத் மகாராணியினதும் பேரனாவார். இளவரசர் சாள்ஸ_க்குப் பதவி கிடைக்காத பட்சத்தில் அடுத்து வரிசையில் நிற்பவர் இளவரசர் சாள்ஸ_க்கும் இளவரசி டயனாவுக்கும் மகனாகப் பிறந்த இளவரசர் வில்லியமாகும்.
ஒரு ஆணின் வெற்றிக்கு ஒரு பெண் பின்னின்று உழைக்கிறாள் என்று பொதுவாகச் சொல்வார்கள். அதனால்தான் இங்கேயும் இளவரசர் வில்லியத்தின் எதிர்காலம் எப்படி அமையப்போகிறது என்பதை மனதில் கொண்டு அவரது வருங்காலத் துணைவியைப் பற்றிய விவரங்களை அறிவதில் பிரித்தானிய மக்கள் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள். இதற்கு இளவரசர் சாள்ஸின் மணவாழ்க்கையில் ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களும் இன்னுமொரு முக்கிய காரணமாகும். இளவரசர் சாள்ஸ் 1981ம் ஆண்டு யூலை மாதம் 29ம் திகதி டயனா ஸ்பென்சரை, அதாவது இளவரசர் வில்லியத்தின் தாயாரைத் திருமணம் செய்து கொண்டபோது பிரித்தானிய குடிமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள். அவர்களது திருமண வைபவம் நேரடியாகத் தொலைக்காட்சியில்

ஒளிபரப்பப்பட்டபோது, அதிக மக்கள் (750 கோடி) பார்த்து ரசித்த ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியாகவும் அது அமைந்திருந்தது. 1982ம் ஆண்டு யூன் மாதம் 21ம் திகதி இளவரசர் வில்லியமும், 1984ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 15ம் திகதி இளவரசர் ஹென்றியும் பிறந்தனர். டயனா ஒரு அழகான இளவரசி மட்டுமல்ல, நாகரிகமாக ஆடை அணிகளை அணியத் தெரிந்தவரும்கூட. பொது நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ள வரும்போது அவரை ஆவலோடு எதிர்பார்ப்பது சம்பிரதாயத்தை மீறிய ஒரு வழக்கமாக இருந்தது. முடிக்குரிய எலிசபெத் மகாராணியாரைப்போல் அல்லாது, 1961ம் ஆண்டு யூலை மாதம் 1ம் திகதி பிறந்த டயனா மிகவும் கவர்ச்சியாகவும், ஆடம்பரமாகவும் ஆடை அணிகளை அணிந்து பொதுநிகழ்ச்சிகளுக்கு வரத்தொடங்கினார். இதுவே பலரின் பார்வையில் அவர் படுவதற்கும், பலர் அவர்மீது அன்பு செலுத்துவதற்கும் காரணமாயிற்று. எயிட்ஸ் நோயையும், நிலக்கண்ணி வெடியையும் ஒழிப்பதில் டயனா அதிக அக்கறை செலுத்தியதால் அவரைக் குடிமக்களின் இளவரசி என்று உலகம் போற்றியது. ஒரே சமயத்தில் ஒரு மனைவியாய், தாயாய், இளவரசியாய் இருப்பதில் உள்ள சிக்கல் காரணமாக, அத்தகைய பொறுபப்பைத் தாங்கமுடியாமல்  டயனா மிகவும் கஷ்டப்பட்டார். அவர் மனநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் சில தகவல் தொடர்பு சாதனங்கள் குறிப்பிட்டிருந்தன. அவர்களது குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட விரிசல் காரணமாக 1992ம் ஆண்டிலிருந்து அவர்கள் பிரிந்து வாழத் தொடங்கினார்கள். இளவரசர் சாள்ஸ_க்கு கமிலா பாக்கர் என்பவரோடு தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டிய இரண்டு பிள்ளைகளுக்குத் தாயான இளவரசி டயனா, இளவரசர் சாள்ஸிடம் இருந்து 1996ல் விவாகரத்துப் பெற்றுக் கொண்டார். நீதிமன்றத் தீர்ப்பின்படி பிள்ளைகள் தகப்பனான இளவரசர் சாள்ஸ_டனேயே வளர்ந்தார்கள். பரிஸ் நகரத்தில் தனது நண்பனோடு பயணம் செய்யும் போது ஏற்பட்ட ஒரு கார் விபத்தில் 31ம் திகதி ஆகஸ்ட் மாதம் 1997ல் டயனா தனது 36வது வயதில் மரணமானார். 2005ம் ஆண்டு இளவரசர் சாள்ஸ் தனது சினேகிதியான கமிலா பாக்கரை முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.


தனது தாயாரான டயனாவின் மரணத்தைத் தொடர்ந்து 13 வருடங்கள் காத்திருந்த இளவரசர் வில்லியம் 28வது வயதில் தனது திருமணம் பற்றிய செய்தியை 2010ம் ஆண்டு நவம்பர் மாதம் 16ம் திகதி அறிவித்திருந்தார். எட்டு வருடங்களாக நட்போடு பழகிய கதறீன் எலிசபெத் கேற் மிடில்ரென் என்னும் பெண்மணியை அடுத்த வருடம் 29ம் திகதி ஏப்ரல் மாதம் 2011ல் திருமணம் செய்ய இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 2000 விருந்தினர்களோடு இந்தத் திருமணம் நடக்கவிருப்பதாக அறிவிக்கப் பட்டிருக்கிறது. கேற் மிடில்ரென் 1982ம் ஆண்டு ஜனவரி மாதம் 9ம் திதி பிறந்தவர். இருவரும் ஒரே வருடத்தில் பிறந்தாலும் கேற் 5 மாதங்கள் வில்லியத்தைவிட வயதிற்கூடியவர். பேக்ஷெயரில் வளர்ந்த கேற் மிடில்ரன் தனது கல்வியை மல்பறோ கல்லூரியிலும், தொடர்ந்து பட்டப்படிப்பை சென். அன்றூ பல்கலைக்கழகத்திலும் முடித்தார். அதே பல்கலைக் கழகத்தில் கல்விகற்ற இளவரசர் வில்லியத்தை 2001ம் ஆண்டு அங்கு நடந்த ஒரு நிகழ்ச்சியின்போது சந்தித்தார். அதைத் தொடர்ந்து இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டதில் அவர்களுக்கு இடையே நட்பு மெல்ல மெல்ல வளர்ந்தது. 2007ம் ஆண்டு அவர்களுக்கிடையேயான நட்பு முறிந்து விட்டதாகச் சில தொடர்பு சாதனங்கள் மூலம் ஒரு வதந்தி பரவியிருந்தது. ஆனாலும் அவர்களின் நட்பு தொடர்ந்து கொண்டேயிருந்தது. கெனியா நாட்டிற்கு விடுமுறைக்குச் சென்றபோது திருமண உடன்பாடு அவர்களுக்குள் ஏற்பட்டதாகத் தெரியவருகின்றது. தனது 28வது வயதில் திருமணம் செய்ய இருப்பதாகக் கூறிய இளவரசர் வில்லியம் திடீரெனத் திருமண உடன்பாடு பற்;றி அறிவித்தல் ஒன்றைக் கொடுத்தார். பாட்டியான இரண்டாவது எலிசபெத் மகாராணியாரும், தகப்பனான சாள்ஸ_ம் இந்தத் திருமணத்திற்குச் சம்மதம் கொடுத்திருந்தனர். வில்லியம் கொடுத்த திருமண உடன்பாட்டுக் கணையாழி 18 கரட் நீள்வட்ட நீல சபையரில் அமைந்திருந்தது. இந்த நீலசபையர் இலங்கையில் தமிழர் அதிகம் வாழும் மலையக இரத்தினபுரி பகுதியில் நிலத்திற்கடியில் இருந்து எடுக்கப்பட்டது என்பது பலருக்குத் தெரியாது.  அதைச் சுற்றி 14 சிறிய வைரக்கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. அந்த வைரமோதிரத்தின் நீல நிறத்திற்கு எடுப்பாக நீல நிறத்திலேயே கேற் மிடில்ரன் ஆடை அணிந்திருந்தார். சாள்ஸ் தனது திருமண உடன்பாட்டின்போது டயனாவிற்குக் கொடுத்த கணையாழியையே வில்லியம் தனது திருமண உடன்பாட்டின்போது கேற் மிடில்ரனுக்கு அணிவித்தார். 1981ல் இந்தக் கணையாழி 65,000 டொலர் பெறுமதியாக இருந்தது. டயனாவைப்போல கேற் மிடில்ரனும் திருமணத்தின்பின் நவநாகரிக நங்கையாக மாறலாம் என்று பலரும் ஆருடம் கூறகிறார்கள். ஏனெனில் கேற் மிடில்ரன் மிகவும் நேர்த்தியாக உடை அணிவதில் விருப்பம் கொண்டவர்.
அடுத்த வருடம் 2011 ஏப்ரல் மாதம் 29ம் திகதி நடக்க இருக்கும் இந்தத் திருமணத்தை முன்னிட்டு ஏற்கனவே வங்கி விடுமுறையை அறிவித்திருக்கிறார்கள். வியாபாரிகள் வில்லியம் - கேற்ரின் படங்களோடு கூடிய திருமண ஞாபகார்த்த தட்டுக்கள், கோப்பைகள் எல்லாம் உடனடியாகவே தயாரிக்கத் தொடங்கி விட்டனர். விமானப்பயணம், தங்கும் விடுதிகள், வாடகை வண்டிகள் போன்றவை மூலம் சுமார் 620 மில்லியன் பவுண்ஸ் பெறுமதியான வியாபாரம் பிரித்தானியாவில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கிறார்கள்.

No comments:

Post a Comment