Sunday, January 23, 2011

Sandilipay United Society - சண்டிலிப்பாய் ஐக்கிய மன்றம்


Annual Dinner & Cultural Show -

Canada January 22, 2011.


கலைச்சங்கமம் 2011


சண்டிலிப்பாய் ஐக்கிய மன்றம்


தொல்லையற்ற கிராமங்கள் எல்லைகளாய் வாய்த்திருக்க


வயல்வெளிகள் குளங்களால் நிறைந்திருக்க


வழுக்கையாறு நீர் நிலத்தை வளம்படுத்திப் பாய்கிற…


எங்கள் கிராமம் சண்டிலிப்பாய்.. !


Dr.Chitha Thiagarajah & President
N.Jayanathan

மனதுக்கு இதமாக, கண்ணுக்கு விருந்தாக..


Mrs.Yogeswaran

Shiria Esananda


Dr. Varagunan
 
Devaki & Ganesh
Mrs. Thilainathan
ஆடலுடன் பாடல்..
ஆகா.. சண்டிலிப்பாய் ச​மையல் சாதம்
 காய் கறிகளும் பிரமாதம்..!

சுட்ட பழம் போதுமா?
இன்னும் கொஞ்சம் வேணுமா?


Tuesday, January 18, 2011

Kannin Mani Nee Yenakku - கண்ணின் மணி நீயெனக்குஅகிலின் கண்ணின் மணி நீயெனக்கு..! -

நூல் ஆய்வு

குரு அரவிந்தன்        

ண்ணின் மணி நீயெனக்கு… இது அகிலின் இரண்டாவது நாவல். ‘திசைமாறிய தென்றல்’ என்ற முதலாவது நாவலை வெளியிடப்பட்ட
போது அந்த நாவலை அறிமுகம் செய்து வைக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. ஒவ்வொரு ஆசிரிருக்கும் ஒவ்வொருவிதமான எழுத்து நடையிருக்கும். சிறந்த வாசகன் ஆசிரியரின் பெயரைப் பார்க்காமலே நாவலை வாசித்துவிட்டு இது யாருடைய நாவல் என்று சட்டென்று சொல்லிவிடுவான். அந்த வகையிலே நண்பர் அகிலுக்கும் ஒருவிதமான எழுத்து நடையிருக்கிறது என்பதை இந்த நாவலைப் படித்தபோது புரிந்து கொண்டேன். அந்த எழுத்து நடைதான் வாசகர்களை, நாவலை மூடிவைக்காமல் ஆர்வத்தோடு தொடர்ந்து படித்து முடிக்க வைக்கிறது. ஒரு வாசகனாய் இந்த நாவலையும் அப்படியான ஆர்வத்தேடுதான்
படித்து முடித்தேன்.

நண்பர் அகிலேஸ்வரன் கனடாவில் ரொறன்ரோவில் வசிப்பவர். அவர் எழுத்தாளர் மட்டுமல்ல சிறந்த கவிஞருமாவார். அவர் திசைமாறிய தென்றல் நாவலை வெளியிட்டபோது இன்னும் இரண்டு நூல்களை வெளியிட்டார். ஒன்று நமது விரதங்களும் பலன்களும், அடுத்தது இந்துமதம்: மறைபொருள் தத்துவவிளக்கம். திசைமாறிய தென்றல் காதற்கதை சம்பந்தமானது, மற்றைய இரண்டும் பக்தி மார்க்கம் சம்பந்தமானது. புத்தக விமர்சனத்தின்போது எப்படி வெவ்வேறு
நிலையில் நின்று காதலையும், பக்தியையும் எடுத்துச் சொல்லும் இந்த நூல்களை எழுதியிருப்பார் என்று நான் வியப்போடு பார்த்திருக்கிறேன்.

பாரதி மீது கொண்ட பற்றுதல் காரணமாக பாரதி கண்ணம்மாவைப் பார்த்து கண்ணில் மணி போன்றவளே என்று விழித்ததுபோல, அகிலும் பிரியமானவளைப் பார்த்து கண்ணின் மணி நீயெனக்கு… என்கிற நினைவோடு இந்தத் தலைப்பை சூடியிருக்கிறார் என்றே எண்ணத் தோன்றுகிறது. 144 பக்கங்களைக் கொண்ட இந்த நாவலை ஞானம் பதிப்பகத்தார் வெளியிட்டிருக்கிறார்கள். நாவலின் அட்டைப்பட
ஓவியத்தை ஓவியர் கௌதமன் அழகாக வரைந்திருக்கிறார். யுனி
ஆர்ட்ஸ் நிறுவனத்தினர் இந்த நூலை அச்சிட்டிருக்கிறார்கள். தனக்கு உருக்கொடுத்தவர்களுக்கும், தன்னை உருவாக்கியவர்களுக்கும், தன்னோடு சேர்ந்து பயணிப்பவர்களுக்கும் இந்த நாவலை அகில் சமர்ப்பணம் செய்திருக்கின்றார்.

இனி நாவலுக்குள் வருவோம். கதையின் நாயகன் சேகர். அவனது பல்கலைக்கழகக் காதலி கொளரி. வெளிநாட்டு மோகம் காரணமாகக் காதலனைக் கைவிட்டு வேறு ஒருவனைத் திருமணம் செய்து வெளிநாடு செல்கிறாள் காதலி கௌரி. இதனால் சேகர் ஏமாற்றப்படுகிறான். உண்மையான காதலர்களின் நிலையில் நின்றுபார்த்தால் இழப்பு என்பது தாங்கமுடியாத ஒன்றுதான். அதற்காகக் குடித்து வெறிப்பதிலோ, தன்னைத்தானே அழித்துக் கொள்வதிலோ அர்த்தமில்லை. காதல் தோல்வியைத் தாங்கிக் கொண்டு கனடா சென்ற சேகர் திரும்பிவரும் போது அவனுக்குத் திருமணம் பேசப்படுகின்றது. மீண்டும் வெளிநாட்டு மோகம் அங்கே தலைதூக்கி நிற்கிறது. தமிழ் நாட்டிலே நான் நின்றபோது பல இளைஞர்கள், யுவதிகளைச் சந்தித்தபோது அவர்களின் இலட்சியம் என்ன என்று கேட்டபோது அனேகமானவர்கள் அமெரிக்கா செல்வதுதான் தங்கள் லட்சியக்கனவு என்றார்கள். இந்தக் கதையை வாசித்தபோது அவர்கள் சொன்னதுதான் எனக்கு நினைவில் வந்தது. இக்கரை மாட்டிற்கு அக்கரைப் பச்சை என்ற வாக்கியம் எல்லா நாட்டவருக்கும் பொருந்தும் என்றே நினைக்கிறேன். இங்கேயும் ராஜேஸ்வரி என்ற தாய்க்கு வெளிநாட்டு மோகம் ஏற்படுகிறது. தனது கனவை நினைவாக்க மகளான காயத்திரியைப் பலி கொடுக்கிறாள். சேகருக்கே தனது மகளை ஏமாற்றித் திருமணம் செய்து வைக்கிறாள். மகளுக்கு உண்மை தெரிந்தபோது என்ன நடந்தது என்பதுதான் கதையின் திருப்பமாக இருக்கிறது. தாய்மண்ணில் பெற்றோரை இழந்த குழந்தையைத் தத்தெடுப்பது போன்ற சிறந்த சமூகச் சிந்தனைகள் இந்த மண்ணில் வரவேற்கப் படவேண்டியன. முழுக்கதையையும் நானே சொல்லிவிட்டால் வாசகர்களின் வாசிப்புச் சுதந்திரத்தை நானே பறித்தவனாகிவிடுவேன். எனவே நீங்களே வாசித்துக் கதையின் முடிவைத் தெரிந்து கொள்ளுங்கள்.

வெளிநாட்டு மோகம் என்பது எங்கள் சமுதாயத்தை அதிகம் பாதித்திருப்பது யாவரும் அறிந்ததே. அகிலின் படைப்பாளுமையைப் பார்க்கும்போது வெளிநாட்டு மோகத்தால் எப்படி நம்மவர்கள் சீரழிகிறார்கள் என்ற சமூக யதார்த்தத்தை இக்கதை மூலம் உயிர்த்துடிப்புடன் வெளிக்கொண்டு வந்து வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார். சிறந்த ஒரு எழுத்தாளனுக்குரிய சமூக சீர்திருத்தத்தை கருத்தில் கொண்டு திடீர் திருப்பங்களோடு கதையை லாவகமாய் நகர்த்துகின்றார். இங்கே ஆசிரியர் அகிலின் சமூக அக்கறை தெளிவாகப் புலப்படுகின்றது. பல துறைகளிலும் ஈடுபாடு கொண்ட சமூகப் பார்வையுள்ள நண்பர் அகிலின் எழுத்துப்பணி தொடரவேண்டும், இன்னும் பல ஆக்கங்களை வெளிக்கொண்டு வந்து அதன் மூலம் கனடியத் தமிழ் இலக்கியத்தை வளப்படுத்த வேண்டும் என்று வாழ்த்துகின்றேன்.

Tuesday, January 11, 2011

தைப்பொங்கல் தமிழர் திருநாள் - Thai Pongal

தைப்பொங்கல்


குரு அரவிந்தன்

மிழர் திருநாளாம் தைப்பொங்கல் தைமாதம் 14ம் திகதி கொண்டாடப்படும். சில சமயங்களில் 13ம் அல்லது 15ம் திகதிகளிலும் வரலாம். தைபிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கையோடு வாழ்ந்தவர்கள்தான் உழவர்கள். கதிரவனையும், மாடுகளையும் நம்பித்தான் ஆதிகாலத்தில் விவசாயம் நடைபெற்றது. அதனால்தான் கதிரவனுக்கும், தமக்கு உதவி செய்த மாடுகளுக்கும் நன்றி தெரிவிக்கும் நாளாகத் தைப்பொங்கலையும், மறுநாள் மாட்டுப்பொங்கலையும் தமிழர் கொண்டாடுவர். இயந்திர வசதிகள் இல்லாத அந்த நாட்களில் நிலத்தை உழுதல், தண்ணீர் இறைத்தல், வண்டி இழுத்தல், பசளை கொடுத்தல் போன்றவற்றுக்கு மாடுகளே உழவர்களுக்கு அதிகம் உதவி செய்தன. மாடுகளுக்கு நன்றி சொல்லும் நாளான மாட்டுப் பொங்கலைப் பட்டிப்பொங்கல் என்றும் அழைப்பர்.

பொங்கலன்று அதிகாலையில் எழுந்து நீராடி, வயலிலே அறுவடை செய்த புதிய அரிசியைப் பாலுடன் கலந்து பொங்கல் செய்து சூரியனுக்குப் படைப்பர். பொங்கலுடன் பழங்கள், தேங்காய், இளநீர், கரும்பு, போன்றவற்றையும் சேர்த்து வாழையிலையில் படைத்து சூரியனை வணங்குவர். பயிர் வளர்வதற்குத் தேவையான தண்ணீர், வெளிச்சம் போன்றவை கிடைக்கக் கதிரவன் உதவி செய்வது யாவரும் அறிந்ததே.

பொங்கலன்று புத்தாடை உடுத்து, குடும்பத்தோடு கோயிலுக்குச் சென்று வழிபடுவர். பொங்கிப்படைத்த உணவைக் குடும்பத்தினர் உற்றார் உறவினர் நண்பர்களோடு கலந்து உண்டு மகிழ்வர். சிறுவர் பட்டாசு கொளுத்தி மகிழ்வர். சில இடங்களில் விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறுவதுண்டு. தைபிறந்தால் வழிபிறக்கும் என்பது நம் பெரியோர் வாக்கு.

புலம்பெயர்ந்த மண்ணில் எமது மொழியை மட்டுமல்ல, எமது பண்பாடு, கலாச்சாரத்தையும் பேணிப்பாதுகாக்க வேண்டும். மொழி அழிந்தால் நம் இனம் அழிந்துவிடும் என்பதை எப்படி நாம் நினைவில் வைத்திருக்கிறோமோ, அதேபோல எமது பண்பாடு கலாச்சாரத்தையும் அழியாமல் பாதுகாக்க வேண்டும். அவை அழிந்தால் நாம் அடையாளம் அற்றவர்களாகப் போய்விடுவோம். எனவே அடுத்த தலைமுறையினருக்கு இவற்றைச் சொல்லிக் கொடுங்கள். போதிய வசதிகள் இல்லாவிட்டாலும், முடிந்த அளவு பின்பற்றச் சொல்லுங்கள். முடியும் என்ற நம்பிக்கையோடு அடுத்த தலைமுறையினரிடம் பொறுப்பைக் கொடுங்கள். நம்பிக்கையோடு செயற்பட்டால் நாளை நமதே!

Thai Pongal - தைப்பொங்கல்

Thai Pongal

Kuru Aravinthan

Thai Pongal is a harvest festival celebrated by Tamils all over the world. It is traditionally dedicated to the Sun God, Suriyan. Tamils refer to Thai Pongal as Tamizhar Thirunal. It is a thanks giving ceremony to thank the Sun and the farm animals.

Thai Pongal itself falls on the first day of the month Thai (January 14th) of the Tamil Calendar. Generally it is celebrated by boiling rice with milk in a new pot. Pongal, also known as sweet rice is traditionally offered to the Sun God at sunrise. When the pongal is ready family members pray for a few minutes to thank the Sun God. Then the meal is served among the family members, relatives, and friends. People also visit the temple, friends and family and exchange greetings.

The day preceding Thai pongal is called Bhogi Pandigai.

Mattu Pongal (Kanu Pongal) is intended to honour the Farm animals that work hard throughout the year.

Tamils living all over the world follow their cultural values by participating in the festival. The younger generation of Tamils living all over the world also come forward to contribute to the Tamils festival. It gives a feel of their motherland and its culture.

DRAMA - PONGALOO PONGAL... பொங்கலோ பொங்கல்..!

சிறுவர் நாடகம்

(பிரதியாக்கம், இயக்கம் : குரு அரவிந்தன்)

பொங்கலோ பொங்கல்..!

காட்சி – 1   (பாத்திரங்கள்: அப்பா, அம்மா, மகள், மகன்)

(வீட்டின் படுக்கை அறை. அண்ணன் கட்டிலில் படுத்து நித்திரை கொள்ளும் காட்சி. வாசலில் நின்று தங்கை அண்ணாவை நித்திரையால் எழுப்பவேண்டும். வெளிச்சம் வட்டமாக கட்டிலில் விழவேண்டும். சுப்ரபாதம் பாடல் மெதுவாகக் கேட்கவேண்டும்)

தங்கை: அண்ணா எழும்புங்கோ. இண்டைக்குத் தைப்பொங்கல் எல்லே.. எழும்புங்கோ   அண்ணா…

அண்ணா: (குறட்டை ஒலி கிர்… கிர்…. என்று கேட்கவேண்டும்)

தங்கை: அண்ணா எழும்புங்கோ…!

அண்ணா: (மீண்டும் குறட்டை ஒலி)

தங்கை: அம்மா..! அண்ணா எழுபுறாரில்லை..!
                           
(அம்மா உள்ளே வருதல்)

அம்மா : மகன் எழும்புங்கோ, இண்டைக்கு தைப்பொங்கல்எல்லே, எழும்பி  குளிச்சிட்டு     வாங்கோ      
      
(மகன் எழும்பாது பிரண்டு படுத்தல்)

தகப்பன்:  விடியமுந்தி அவனை ஏன் எழுப்பிறியள். இரவிரவாய் படிச்சிட்டுப் படுத்த    பிள்ளையெல்லே, விடுங்கோ கொஞ்சம் பொறுத்து எழுப்பலாம்.

தாய்:  இப்படியே சொல்லிச் சொல்லி அவனைப் பழுதாக்குங்கோ. நல்ல நாளில    எண்டாலும் நேரத்தோட எழும்பினால் என்ன.. எழும்பு ராசா..

தகப்பன்:  இப்ப அவன் எழும்பி என்ன செய்யப்போறான். நாங்கள்      உள்ளுக்குச் சமையலறையிலதானே பொங்கப்போறம். பொங்கினாப்பிறகு    எழுப்புவம்.

தாய்:  ஒவ்வொரு வருஷமும் இப்படி ஏதாவது சாட்டுச் சொல்லி பிள்ளைகளுக்கு  எங்கட  கலாச்சாரம் பண்பாடு எதுவுமே தெரியாமல் வளர்க்கப்போறீங்கள்.

தகப்பன்:  இப்ப என்னை என்ன சொல்லச் சொல்லுறாய்..?

தாய்:  நாளைக்கு எங்கட பிள்ளைகள் ஒண்டும் சொல்லித்தராமல் தங்களை  வளர்த்திட்டம்  எண்டு எங்களைக் குறை சொல்லக்கூடாது.

தகப்பன்: சரி சரி நல்ல நாளும் அதுவுமாய் ஏன் கத்திறாய், அவனை எழும்பிக் குளிக்கச்  சொல்லு..

தாய்:  எழும்புராசா, விடிஞ்சு போச்சு.. எழும்பிக் குளிச்சிட்டுவா..
    
(மகன் எழுந்து கட்டிலில் இருந்தபடி கண்ணைக் கசக்கிக் கொட்டாவி விட்டு  உடம்பை முறிக்க வேண்டும். நித்திரைத் துக்கத்தில்…)

மகன்: என்னம்மா, விடிஞ்சு போச்சோ..? எங்களுக்குத்தான் இன்னும் விடிவு வரயில்லை  எண்டு ஒவ்வொரு நாளும் கதை சொல்லுவிகளே..?

தாய்:  அந்த விடிவு வேற மகன், அது எங்கட இனத்தின்ர விடிவு. இண்டைக்குத்  தைப்பொங்கல். இது தமிழருடைய திருநாள். கெதியாய் குளிச்சிட்டு வா..  பொங்கிச் சூரிய நமஸ்காரம் செய்யவேணும்..

மகன்:  சூரிய நமஸ்காரமோ..? என்னம்மா சொல்லுறிங்கள்..? இது கனடாவில  தைமாதமெல்லே..? வெளியில பனி கொட்டுது. என்னண்டு சூரியனைப் பாக்கிறது..?

தாய்:  சூரிய பகவானைத் தெரிஞ்சால்தான் கும்பிட வேணுமே?  பாக்காமல் கும்பிட  ஏலாதே..? தாய் மண்ணைவிட்டு நாங்கள் இங்கே வந்தாலும் எங்கடை பண்பாடு,  கலாச்சாரத்தை மறக்கக்கூடாதெல்லே..

மகன்: நீங்கள் சொல்லுறதும் சரிதான்.. எங்கட பண்பாடு கலாச்சாரத்தை நாங்கள்தானே  காப்பாற்ற வேண்டும்..

மகள்:  ஏனம்மா தைப்பொங்கல் எண்டு சொல்லுறது..?

தாய்:  தைமாதத்தில் வாறபடியால் தைப்பொங்கல் எண்டு சொல்லுவினம்.

மகள்:  ஏனப்பா நாங்கள் தைப்பொங்கலைக் கொண்டாடுகிறனாங்கள்

தகப்பன்: விவசாயத்திற்கு உதவி செய்த சூரியனுக்கு நன்றி சொல்லுற நாள்தான்   தைப்பொங்கல். அதாவது தாங்ஸ்கிவ்விங்டே, மறுநாள் மாடுகளுக்கு   நன்றி  சொல்லுற நாள்.

மகன்:  மாடுகளுக்கா, ஏனப்பா மாடுகளுக்கு..?

தகப்பன்: அந்த நாட்களில் விவசாய இயந்திரங்கள் இருக்கவில்லை. மாடுகள்தான்     மனிதருக்கு விவசாயத்தில் உதவியாக இருந்தன. அதனால்தான்      மாடுகளுக்கு மறுநாள் நன்றி சொல்வார்கள்.

மகன்: அதை என்னண்டு சொல்லுறது?

தகப்பன்: அதை மாட்டுப்பொங்கல் அல்லது பட்டிப்பொங்கல் எண்டு சொல்லுவினம்.

மகள்: அப்ப இண்டைக்குத் தைப்பொங்கல், நாளைக்கு மாட்டுப் பொங்கல் அப்படித்தானே,  வாங்கம்மா, நாங்கள் பொங்குவம்.

தாய்: சரி, நாங்க பொங்கலுக்கு ஆயத்தப்படுத்துவம், குளிச்சிட்டு ஓடிவா ராசா..

மகன்: சரியம்மா, நான் குளிச்சிட்டு வாறன்..

 (தாய் சமையலறை நோக்கிச் செல்ல, மகன் துவாயை எடுத்துக் கொண்டு  மறுபக்கம் செல்ல வேண்டும்)Kuru Aravinthan's Pongal Drama.
 காட்சி – 2

(தாய், தகப்பன், மகன், மகள் சமையலறையில் பொங்கும் காட்சி.)

(மறுபக்கத்தில் சுவாமி அறையில் பழத்தட்டு, குத்துவிளக்கு, சிற்றுண்டிகள், பொங்கலைப் படைக்கும் காட்சி)

மகன்: அம்மா, ஊரிலை எண்டால் பொங்கேக்கை வெடிஎல்லாம் கொழுத்துவமெல்லே

தகப்பன்: அது ஊரிலை ராசா, இங்கை வீடுகளில வெடி கொளுத்த விடமாட்டினம்.     அப்படி கொழுத்துவதெண்டால் அனுமதி எடுக்க வேணும்.

மகள்: அண்ணா வெடி கொழுத்தேக்க உங்களுக்குப் பயமில்லையே..?

மகன்: பயமோ.. எனக்கென்ன பயம், இப்படி சின்ன வயசில் பயமில்லாமல் வெடி  கொழுத்திப் பழகினபடியால்தானே எங்கடை அண்ணா, அக்காமாரெல்லாம் பெரிசா  வளர்ந்தபிறகும் ஊரில எந்த வெடிச்சத்தத்திற்கும் பயப்பிடாமல் திரிஞ்சவை..!

மகள்: இங்கை எங்கடை ஆக்கள் எல்லாரும் பொங்குவினமே அம்மா?

தாய்: ஓம், அனேகமாய் எல்லாரும் பொங்குவினம்..

மகன்: அம்மா அங்கை எண்டால் பொங்கலண்டு அயலவை எல்லாம்    வீட்டை  வருவினமெல்லே..

தகப்பன்: இஞ்சையும் சொந்தக்காரர், நண்பர்கள் எண்டு வருவினம்தானே..
           
 (வாசல் அழைப்பு மணி அடித்துக் கேட்கிறது.)

அம்மா: யாரோ பெல் அடிக்கினம் யாரெண்டு பாருங்கோம்மா.
              
(மகள் சென்று வாசல் கதவைத் திறக்கிறாள்.)

மகள்: அம்மா இங்கை பாருங்கோ, எங்கடை சினேகிதர் எல்லாம் வந்திருக்கினம்.

சினேகிதர் 1: பொங்கல் வாழ்த்துக்கள்.


மகள்: பொங்கல் வாழ்த்துக்கள்

மகன்: பொங்கல் வாழ்த்துக்கள்.

சினேகிதர் 4: பெண்கள் வாழ்த்துக்கள்.


மகன்: என்னது..?

சினேகிதர் 4 : பெண்கள் வாழ்த்துக்கள்.

மகன்: கடவுளே.. அது பெண்கள் வாழ்த்துக்கள் இல்லை, பொங்கல்  வாழ்த்துக்கள்,   தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.

சினேகிதர் 4 : (திருத்திச் சொல்லுதல்) பொங்கல் வாழ்த்துக்கள்.

தாய்: வாங்கோ பிள்ளைகள், இருங்கோ..

(சினேகிதர்களை இருக்கச் சொல்லி பலகாரம், சிற்றுண்டி பரிமாறவேண்டும்.)

காட்சி – 3  (பலகாரம் சாப்பிட்டு முடிந்ததும்)

சினேகிதி 1: நாங்கள் இப்ப என்ன செய்வம்..?

சினேகிதி 2: ஏதாவது கேம் விளையாடுவமா?

சினேகிதி 1: வேண்டாம் நாங்கள் ஒரு பாட்டுப் பாடிக்காட்டுவமே..

சினேகிதி 2: பாட்டுப்படுறதா..?

சினேகிதி 1:  ஏன் உனக்குப் பிடிக்காதா?

சினேகிதி 2 :  பாடிக்காட்டுறது என்ன நாங்கள் ஆடியே காட்டுவம்..

தகப்பன்:   என்ன பாட்டு, எந்திரனில ஐஸ் ஆடுற குத்துப்பாட்டே?

சினேகிதி 4:  இல்லை அங்கிள், இது தமிழ்ப்பாட்டு..!

தகப்பன்:  அப்ப எங்கட பொங்கலைப்பற்றின பாட்டே..?

சினேகிதி 1:  ஓம் அங்கிள், எங்களுக்குத் தமிழ் வகுப்பில பொங்கலைப் பற்றின பாட்டு       படிப்பிச்சவை, எங்கட ரீச்சர் அந்தப் பாட்டிற்கு நடனமும் சொல்லித் தந்தவா..

தகப்பன்:  டான்ஸோ..?Pongalo Pongal Dance
  சினேகிதன்:  ஓம், நாங்கள் இப்ப பாடி, ஆடிக்காட்டப் போறம் பாருங்கோ..

தகப்பன்:  என்ன திரையிசை நடனம் மாதிரியே..?

சினேகிதி 2:  இல்லை, இங்கை பாருங்கோ நிறையப்பேர் வந்திருக்கினம்.

நாங்கள்     ஆடுறதை இவையும் பார்த்து ரசிக்கட்டுமன்..

(பாடல் ஒலிக்கிறது – பிள்ளைகள் எல்லோரும் பாடி ஆடுகிறார்கள்.)

தைபிறந்தால் வழிபிறக்கும்
பொங்கலோ பொங்கல்
தமிழர்களின் திருநாளாம்
பொங்கலோ பொங்கல்..     (RE - தைபிறந்தால்..)


கதிரறுத்துப் பொங்கிடுவோம்
பொங்கலோ பொங்கல்
கதிரவனை வணங்கிடுவோம்
பொங்கலோ பொங்கல்..     (RE - தைபிறந்தால்..)


உழைப்பாலே உயர்ந்திடுவோம்
பொங்கலோ பொங்கல்
ஒன்றுபட்டு வாழ்ந்திடுவோம்
பொங்கலோ பொங்கல்..     (RE - தைபிறந்தால்..)

பாடல் ஒலிக்கப் பிள்ளைகள் ஆடிக் காட்டவேண்டும். பாடல் முடிவில் எல்லோரும் ஒன்றாக வந்து பார்வையாளர்களைப் பார்த்து  வணங்கவேண்டும்.

பார்வையாளர்களில் இருந்து முதியவர் ஒருவர் மேடையில் வந்து,

‘பிள்ளைகளே புலம் பெயர்ந்த மண்ணிலும் எங்கள் மொழி பண்பாடு கலாச்சாரம் அழிந்து போகாமல் காப்பாற்றும் அடுத்த தலைமுறையினரான உங்களுக்கு எங்கள் இனிய வணக்கங்கள். உங்களை நினைத்து நாங்கள் பெருமைப்படுகின்றோம். நீங்கள் நீடூழி வாழவேண்டும்!’

பெரியவர் வாழ்த்தி விடைபெறவேண்டும்.

(திரை மூடுதல்.)

கனடா ரொறன்ரோவில் ஜனவரி 7ம் திகதி 2011ல்  SCREEN OF PEEL COMMUNITY   யால் மேடையேற்றப்பட்ட தைப்பொங்கல் நாடகம்.

Sunday, January 9, 2011

SCREEN OF PEEL

SCREEN OF PEEL -  Malini Aravinthan

மாலினி அரவிந்தன்                              

சென்ற சனிக்கிழமை தைமாதம் 8ம்திகதி மாலை மிஸஸாகா Square One ல் உள்ள உள்ளரங்கத்தில் பீல்சமூக மன்றத்தின் (SCREEN OF PEEL Community Association) தீபாவளி, நத்தார், புதுவருட, தைப்பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்றது. மாலை 6:00 மணிக்கு மங்கள விளக்கேற்றி வைத்ததைத் தொடர்ந்து தேசிய கீதமும், தமிழ் வாழ்த்தும் இசைக்கப்பட்டன. தொடர்ந்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அடுத்து யாழினி விஜயகுமாரின் வரவேற்பு நடனமும், சிந்துஜா ஜெயராஜின் மாணவிகளின் மலர்நடனமும் இடம் பெற்றன. தீபாவளியைப்பற்றிய தாரணி தயாபரனின் உரையைத் தொடர்ந்து ஜெனனி குமாரின் மாணவிகளின் தீபாவளி நாட்டிய நாடகமும் இடம் பெற்றன. அடுத்து சவுண்ட் ஆவ் மியூசிக் பாடல்களைச் சங்கீதா பாடினார்.

நத்தார் தினத்தைப்பற்றி ஐந்து வயது பாலகி திரிஷா ஜேசுதாசன் மழலை மொழியில் அழகாக எடுத்துச் சொன்னார். நத்தார் தினத்தை நினைவு கூரும் முகமாக நத்தார் கரோல் பாடல்கள் இடம் பெற்றன. பாடல்களைத் தொடர்ந்து மங்கை குலசேகரத்தின் பிரதியாக்கம், நெறியாள்கையில் இதுதான் கிறிஸ்மஸ் என்ற நாடகம் இடம் பெற்றது. நத்தார் பரிசுகளைப் பயனுள்ளதாக்க வேண்டும், இருப்பவர்கள் இல்லாதவர்களுக்குக் கொடுத்து உதவவேண்டும் என்ற கருவை மையமாகக் கொண்டு இந்த நாடகம் அமைந்திருந்தது. இதில் பங்குபற்றிய எல்லோருமே மிகவும் சிறப்பாகச் செய்திருந்தனர்.

தொடர்ந்து சங்கத் தலைவர் பொன் குலேந்திரனின் வரவேற்பு உரையும், மன்றத்தின் நடவடிக்கை பற்றி உபதலைவர் ஜேசுதாசனின் உரையும் இடம் பெற்றன.  தொடர்ந்து மிஸஸாகா 10ம் வட்டார அங்கத்தவரான சூ மக்பெடன் (Sue McFadden) உரையாற்றினார். அடுத்து அபிராம் சந்திரமோகன், சாயிகிஷன் இராசி, அனித்தா ரங்கநாதன் ஆகியோரின் பழைய புதிய சினிமாப் பாடல்கள் இடம் பெற்றன. பாடியவர்கள் எதிர்காலத்தில் சிறந்த பாடகர்களாக வருவார்கள் என்பதை அவர்களது குரல் வளம் எடுத்துக் காட்டியது. பாடல்களைத் தொடர்ந்து ஜெயந்தி சண்முகலிங்கத்தின் மாணவிகளான சஞ்சனா, சந்தியா சகோதரிகளின் நடனம் இடம் பெற்றது.

Mankai's Christmas Drama
தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற கூற்றை உறுதி செய்வதுபோல கிருத்திகா தயாபரனின் தைப்பொங்கள் பற்றிய உரை இருந்தது. அடுத்து குரு அரவிந்தனின் பிரதியாக்கம், நெறியாள்கையில் பொங்கலோ பொங்கல் என்ற நாடகம் இடம் பெற்றது. தமிழர் திருநாளாம் பொங்கலை புலம்பெயர்ந்த மண்ணில் ஏன் கொண்டாட வேண்டும் என்பதை அடுத்த
தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் நாடகமாக இது அமைந்திருந்தது. சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த இந்த நாடகத்தில் பங்கு பற்றிய அனைவருமே தங்கள் பாத்திரங்களை நன்கு உணர்ந்து தமது நடிப்பாற்றலை வெளிக் கொண்டு வந்திருந்தனர்.
Kuru Aravinthan's 'Pongalo Pongal'

அடுத்து நான் ஆணையிட்டால் என்ற சினிமாப் பாடலை செர்வின் ராஜ்குமார் பாடி நடித்துக் காட்டினார். தொடர்ந்து பவன்குமாரின் Dance Forever என்ற பாடலும், திரையிசை நடனமும் இடம் பெற்றன.  இறுதியாக மன்றத்தின் செயலாளர் டேவிட் இராஜரட்ணத்தின் நன்றியுரையைத் தொடர்ந்து இரவு விருந்துபசாரத்துடன் விழா இனிதே முடிவுற்றது.

'Pongalo Pongal Drama
செல்வி பிரியங்கா  சந்திரகுப்தன், ராகுலா சிவயோகநாதன் ஆகிய இருவரும் இந்த நிகழ்ச்சியைச் சிறப்பாகக் கொண்டு நடத்தினர். கின்னஸ் புகழ் சாதனையாளர் திரு திருமதி சுரேஸ் ஜோக்கின் தம்பதியினர் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தனர். குறுகிய காலத்தில் வளர்ச்சியடைந்த இந்த மன்றத்தின் விழாவிற்கு அரங்கம் நிறைந்த ஆர்வலர்கள் வருகை தந்து ஆதரவு கொடுத்தது மன்றத்தின் செயற்பாடுகளை மேலும் ஊக்குவிப்பதாக இருந்தது. அங்கத்தவர்களும் அவர்களது பிள்ளைகளுமே எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கு பற்றி நிகழ்ச்சியை சிறப்படைய வைத்தது பாராட்டப்பட வேண்டியது. சங்கத்தின் நோக்கத்திற்கு அமைய பாலர் முதல் முதியோர்வரை ஒன்றுகூடி குடும்பஙகளின் கூட்டு நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி அமைந்தது மிகவும் சிறப்பாக இருந்தது. அதிகமான அடுத்த தலைமுறையினர்

மனமுவர்ந்து பங்குபற்றிய, இந்த மண்ணில் எமது பண்பாடு கலாச்சாரத்தை எடுத்துச் சொல்லும் இது போன்ற நிகழ்ச்சிகள் வரவேற்கப் படவேண்டும். இனி வரும் காலங்களிலும் மன்றத்தின் நிகழ்ச்சிகள் சிறப்பாக அமைய வாழ்த்துகின்றோம்.

A Homeless Man Ted Williams - ரெட் வில்லியம்ஸ்

தங்கக்குரல் மன்னன் ரெட் வில்லியம்ஸ்

குரு அரவிந்தன்                                              

அழுக்குச் சட்டையும், ஒட்டிய முகமும், நீண்ட தலை முடியும் கொண்ட இவரை யாருமே திரும்பிப் பார்க்கவில்லை. அதற்காக அவர் மனம் தளர்ந்து போகவில்லை. என்றோ ஒருநாள் ஆண்டவன் வழிகாட்டுவான் என்ற நம்பிக்கையோடு இருந்தார். அவரது நம்பிக்கைபோலவே இவரது அதிஸ்டம் வாகன ஓட்டி ஒருவர் மூலம் அவரைத் தேடிவந்தது....

Ted Williams
ன்று பத்திரிகைகள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள், மற்றும் தொடர்பு சாதனங்கள் எல்லாம் தலைப்புச் செய்தியாகப் பேசப்படுபவர் எந்த நாட்டு ஜனாதிபதியுமல்ல, அவர் ஒரு தெருப்பிச்சைக்காரர். திடீரென அதிஸ்டலாபச் சீட்டில் உங்களுக்குப் பரிசு கிடைத்தால் என்ன செய்வீர்கள். அப்படி ஒரு அதிஸ்டம் அமெரிக்காவில் உள்ள கொலம்பஸ், ஒஹியோவைச் சேர்ந்த ரெட் வில்லியம் என்ற ஒரு தெருப்பிச்சைக்காரருக்குக் கிடைத்திருக்கிறது. இவருக்குக் கிடைத்தது அதிஸ்டம் என்றாலும் அது அதிஸ்டலாபச் சீட்டால் அல்ல, அவரது குரல் வளம்தான் அவருக்கு இந்த அதிஸ்டத்தைத் தேடித்தந்திருக்கிறது. ஒரே இரவில் அவரது குரலைக் கேட்க நான்கு கோடி மக்களுக்குமேல் ஆர்வம் காட்டியிருந்தனர்.
வீடுவாசல் அற்ற ஏழைகளை மேலைநாடுகளில் ஹோம்லெஸ் என்று சொல்வார்கள். பொதுவாக இப்படியானவர்கள் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்களாக இருப்பார்கள். ரெட் வில்லியமும் அப்படித்தான் மது, போதைவஸ்து போன்றவற்றுக்கு அடிமையாகி படிப்படியாகத் தனது வேலையை இழந்து பின் வீடுவாசலை இழந்து வருமானம் இல்லாமல் தெருப்பிச்சைக்காரனாக ஆகிவிட்டார். இப்படியானவர்கள் வீதிகளில் உள்ள போக்குவரத்து விளக்குக் கம்பங்களுக்கு அருகே நின்று பிச்சை எடுப்பார்கள். சிகப்பு விளக்கு எரியும்போது ஒரு அட்டையில் தங்களுக்கு உதவி செய்யும்படி எழுதி அதை வாகன ஓட்டிகளுக்குக் காட்டுவார்கள். இளகிய மனம் படைத்தவர்கள் யன்னலைத் திறந்து அவர்களுக்குப் பணம் கொடுப்பார்கள்.
ரெட்வில்லியமும் அதைத்தான் இத்தனை நாட்களாகச் செய்து கொண்டிருந்தார். திடீரென மதுப்பழக்கத்தைவிட்டுத் திருந்தி வாழவேண்டும் என்ற ஆசை அவருக்கு வந்தது. எனவே வேலை தேடத் தொடங்கினார். ஒரு அட்டை எடுத்து அதிலே

‘நான் முன்னாள் வானொலி அறிவிப்பாளர். கடவுள் கொடுத்த சிறப்பான குரல் வளம் என்னிடம் இருக்கிறது. கஸ்டகாலத்தால் என்னுடைய வேலையை இழந்துவிட்டேன். எனக்கு உதவி செய்வீர்களா?

என்று எழுதி வாகனத்தில் வருபவர்களுக்குக் காட்டினார். அழுக்குச் சட்டையும், ஒட்டிய முகமும், நீண்ட தலை முடியும் கொண்ட இவரை யாருமே திரும்பிப் பார்க்கவில்லை. அதற்காக அவர் மனம் தளர்ந்து போகவில்லை. என்றோ ஒருநாள் ஆண்டவன் வழிகாட்டுவான் என்ற நம்பிக்கையோடு இருந்தார். அவரது நம்பிக்கைபோலவே இவரது அதிஸ்டம் வாகன ஓட்டி ஒருவர் மூலம் அவரைத் தேடிவந்தது. அவர் எழுதி வைத்திருந்த அட்டையைப் பார்த்துவிட்டு, அந்த வாகன ஓட்டி தனது வண்டியின் யன்னலைத் திறந்து அவரிடம் பேச்சுக் கொடுத்துப் பார்த்தார். ரெட் வில்லியத்தின் குரலில் இருந்த கவர்ச்சியைப் பார்த்து தனது கமெராபோனில் அவர் பேசியதைப் பதிவு செய்தார். திரும்பத்திரும்ப ரெட் வில்லியத்தின் குரல் இவரது மனதில் ஆழமாகப் பதிந்து விட்டிருந்தது. எனவே யூரியூப்பில் (YouTube Video) அதைப் பதிவு செய்திருந்தார். அவரது குரல் வளத்தைக் கேட்ட உள்ளுர் வானொலிகள் பல அவருக்கு அழைப்பு விடுத்தன. தொலைக்காட்சி நிறுவனங்களும் போட்டி போட்டு அவருக்கு வேலை தருவதாக அழைத்தன. பல வானொலிகள், தொலைக்காட்சிகள் அவரை நேரடியாகவே நேர்காணல் செய்தன. அதனால் அவர் திடீரெனப் பிரபலமாகி விட்டார்.

அவரைத் தொலைக்காட்சியில் பேட்டி கண்டபோது, மதுப்பழக்கத்தைத் தான் கைவிட்டு விட்டதாகவும், நியுயோர்க்கில் இருக்கும் 92 வயதான தனது தாயாருக்குத் தான் சிறப்பாக வாழ்ந்து காட்டவேண்டும் என்ற இலட்சியத்தோடு உழைக்கப்போவதாகவும் குறிப்பிட்டார். 20 வருடங்களுக்குப்பின் தாயாரைச் சந்தித்திருந்தார். சென்ற புதன்கிழமை கிளிவ்லன்டைச் சேர்ந்த காவ்ஸ் என்றழைக்கப்படும் கூடைப்பந்தாட்டக் கழகம் ((NBA's Cleveland Cavaliers) அவருக்குத் தங்கள் கூடைப்பந்தாட்டப் போட்டிகளின் போது அவரது குரலில் ஒலிபரப்புச் செய்வதற்கு ஏற்கனவே சந்தர்ப்பம் கொடுத்திருக்கிறார்கள்.

கடந்த மூன்று நாட்களாக இணையத்தளத்தில் அதிகம் தேடப்பட்ட ஐவரில் ரெட் வில்லியமும் ஒருவராவார். சூசன் போய்லி என்பவரும் இப்படித்தான் ஒருநாள் திடீரென இணையத்தளத்தின் மூலம் பிரபலமாகியிருந்தார். ஏனையவர்கள்:     
Susan Boyle, Lindsay Lohan, Kim Kardashian and Sarah Palin.

Tuesday, January 4, 2011

Soladi Un Manam Kaloodi? சொல்லடி உன்மனம் கல்லோடி?


குரு அரவிந்த​ன்

(அத்தியாயம் 1 - 6 September 2010ல் பார்க்கவும்.)

அத்தியாயம் - 7

மலியின் பிரிவால் வாடிய தேவகிக்கு மாலதியின் அருகாமை ஓரளவு ஆறுதல் கொடுத்தது. மாலதியும் பேச்சுத் துணைக்கு ஒருவரும் இல்லாததால் தேவகி வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றாள். கமலினி இல்லாததால் கண்ணனுக்கு மட்டும் பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டிவந்ததால், கண்ணனோடு அதிகம் பழகவேண்டியும் வந்தது. மாலதியின் கற்பித்தல் திறனால், கண்ணன் திறமையாகப் படித்து பல்கலைக்கழக அனுமதி கிடைத்துப் போயிருந்தான். கண்ணனுக்கு அதிக கூட்டுத்தொகையோடு பல்கலைக்கழக அனுமதி கிடைப்பதற்கு, மாலதியின் பங்களிப்பும் நிறையவே இருந்தது. கமலினியும், அதைத் தொடர்ந்து கண்ணனும் ஒவ்வொருவராக வீட்டைவிட்டுப் பிரிந்ததால், அவர்களின் பிரிவு தேவகியை வாட்டத் தொடங்கவே, அவள் தனிமையை உணர்ந்தாள்.
கமலினியின் பிரிவால் வெறிச்சிட்டிருந்த வீடு அவ்வப்போது மாலதியின் வருகையால் ஓரளவு கலகலப்பாய் இருந்தது. கமலினியின் திருமணம் சுமுகமாக முடிந்ததால், அவளின் தோழியான மாலதிக்கு வரன் பார்க்க வேண்டும் என்ற கவலை சுந்தரம் மாஸ்டரைப் பிடித்துக் கொள்ளவே வரன் தேட ஆரம்பித்ததார்.
என்றும் இல்லாத அதிசயமாய் அன்று அத்தை வந்திருந்தாள். அந்த ஊரிலேயே இருந்தாலும் காணி பூமி சொத்துப்பத்து இருந்ததால் ஏழைத் தம்பியின் வீட்டிற்கு வருவதை, இதுவரை முடிந்த மட்டும் தவிர்த்துக் கொண்டிருந்தாள்.
அத்தை இப்ப திடீர்னு எதுக்கு இங்கே வரணும்..?
அத்தையின் இந்த திடீர் விஜயம் மாலதிக்குப் பலத்த சந்தேகத்தைக் கிளப்பியிருந்தது. ஆனாலும், வீடுதேடி வந்த அத்தையை முகம் மலர வரவேற்றாள்.
'நல்லாயிருக்கிறியாம்மா..?" என்றாள் அத்தை.
'நல்லாயிருக்கேன், உட்காருங்க" என்று பவ்வியமாய் சொல்லிவிட்டு 'அப்பா" என்று உள்ளே குரல் கொடுத்தாள்.
சுந்தரம் வந்து அத்தையை நலம் விசாரித்துவிட்டு, ‘அம்மா மாலதி அத்தைக்குக் காப்பி கொண்டவாம்மா’ என்றார்.
காப்பி கலந்து கொண்டு வருவதற்காக மாலதி சமையல் அறைக்குச் சென்றாள்.
அப்பாவும் அத்தையும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். அடிக்கடி அவளது பெயர் அடிபடுவது அவளுக்குச் சமையல் அறைவரை கேட்டது. ஒவ்வொரு தடவையும் அவளது பெயர் அடிபடும்போது அவளுக்குக் கலக்கமாய் இருந்தது. அத்தை காரியம் இல்லாமல் வரமாட்டாள் என்பதும், பாசம் என்கிற அப்பாவின் பலவீனத்தைத் தனக்குச் சாதகமாய் எடுத்து, சாதுர்யமாய் எதையும் சாதிக்கக் கூடியவள் என்பதும் மாலதிக்குத் தெரியும்.
காப்பியும் பலகாரமும் கொண்டு வந்து கொடுத்தாள். அத்தை பேசுவதை நிறுத்திவிட்டு அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அத்தை அதிசயமாய்த் தன்னையே கவனிக்கிறாள் என்பதை உணர்ந்ததும் மாலதிக்குச் சங்கடமாய் இருந்தது. சிற்றுண்டியைச் சுவைத்துக் கொண்டே, ரொம்ப நல்லாயிருக்கு என்று புகழ்ந்தாள் அத்தை.
அப்பாவும் பெண்ணின் சமையல் திறமையை ஆமோதிப்பதுபோல தலையசைத்துவிட்டு, அத்தையுடன் சிரித்துச் சிரித்து பேசினார். இரண்டுபேரும் ரொம்ப நேரமாய் பழைய கதைகள் எல்லாம் பேசினார்கள்.
அத்தை ரொம்ப நாளைக்குப்பின் வீட்டிற்கு வந்திருக்கிறீங்க, இருந்து எங்களோட சாப்பிட்டுப் போங்களேன் என்று உபசரித்தாள் மாலதி.
மாலதியின் உபசரிப்பில் அத்தை நெகிழ்ந்து போனாள்.
இல்லையம்மா, நான் போகணும். இனிமேல் அடிக்கடி வரத்தானே போறேன். இனி என்ன உன்னோட கையாலே தானே சாப்பிடப்போறேன் என்றாள் அத்தை.
அத்தையின் பாராட்டில் முகம் சிவந்த மாலதி மறுபடியம் சமையல் அறைக்குச் சென்று சமையலில் ஈடுபட்டாள். அத்தை சென்றதும் அப்பா சமையல் அறைக்கு வந்து அவளிடம் பேச்சுக் கொடுத்தார்.
'என்னம்மா பசிக்குது, சாப்பிடலாமா..?" என்றுமில்லாதவாறு அப்பா கேட்டார்.
'கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கப்பா, இன்னும் இரண்டு நிமிடத்தில சாப்பாடு தயாராகிவிடும்.." சொல்லிவிட்டு அவசரமாக சமையலில் ஈடுபட்டாள். எதற்காகவோ தற்செயலாகத் திரும்பியவள் நிழல் தட்டுப்படவே நிமிர்ந்து பார்த்தாள்.
அப்பா அங்கேயே நின்று கொண்டிருந்தார்.
'என்னப்பா..? பசிக்குதா, வாங்க சாப்பிடலாம்!"
தட்டைக் கழுவி அவருக்கு முன்னால் வைத்து உணவைப் பரிமாறினாள். இட்லி வைத்து சாம்பாறு ஊற்றினாள். தொட்டுக் கொள்ள சட்ணி கொஞ்சம் வைத்தாள்.
நீயும் உட்கார்ந்து சாப்பிடம்மா என்று அவளையும் தன்னோடு உட்கார்ந்து சாப்பிடச் சொன்னார். அவளும் எதிரே உட்காhந்து தனக்குத்தானே பரிமாறினாள்.
உணவு அருந்தும் போது அவர் கேட்டார்.
'உன்னோட படிப்பெல்லாம் முடிஞ்சுதாம்மா..?"
'ஆமா, அரங்கேற்றம் முடிச்சு, ஒருபடியாக பட்டதாரி பட்டமும் எடுத்தாசுதப்பா. இனி அக்கம்பக்கம் உள்ள பிள்ளைகள் கிடைத்தால் நடனவகுப்பு நடத்தலாம், இல்லாவிட்டால் மத்பாடத்தில் ரியூசன் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். பொழுதும் போகும், அதே நேரம் கொஞ்சப் பணமும் சம்பாதிக்கலாம்."
'அதுவும் நல்ல யோசனைதான், ஆனால் உனக்கும் வயசாகுதேம்மா..!
என்னப்பா வயசு, இப்பதானே படிச்சு முடிச்சிருக்கிறேன். கொஞ்ச நாளைக்கு நானே உழசை;சுப் பணம் சம்பாதிக்கணும்.
உன்னுடைய தோழியும் கலியாணம் கட்டி அமெரிக்கா போயிட்டா, வயசுவந்த பெண்ணை வீட்டில் வைத்திருக்கிறேனே என்று ஊர் பழிக்குமேயம்மா.
ஏனப்பா, உங்களுக்குப் பாரமாய் நான் இருக்கிறேனா?
என்னம்மா அப்படிச் சொல்லிட்டாய்..! நீ ஒன்றும் எனக்குப் பாரமாய் இல்லை!
அப்போ, மனசில இருப்பதை மறைக்காமல் சொல்லுங்கப்பா!
அப்படி ஒன்றுமில்லை! அத்தை ஏன் வந்திருந்தா தெரியுமா..?"
'என்னவாம்..?" ஆர்வ மிகுதியால் கேட்டாள் மாலதி.
'அத்தை உன்னைப் பார்க்கத்தான் வந்திருந்தா.."
'என்னைப் பார்க்கவா, இதுவரை இல்லாத உறவு இப்ப மட்டும் புதிதாய் ஏனப்பா?"
'பழசை எல்லாம் மறந்திடம்மா, கடந்த காலத்தையே நினைச்சிட்டிருந்தால் இங்கே எதுவுமே நடக்காது. உன்னோட அரங்கேற்றத்திற்கு அத்தையும் வந்திருந்து உன்னோட ஆட்டத்தைப் பார்த்துப் பாராட்டினாவே ஞாபகமிருக்கா.?"
'அதுக்கென்னப்பா இப்போ..?"
'உன்னை ரொம்பப் பிடிச்சிருக்காம். அதனாலே..! சொல்லத் தயங்குவது புரிந்தது.
அதனாலே..? பார்வை கேள்விக் குறியாய் நின்றது.
உன்னைத் தங்க வீட்டு மருமகளாக்க அத்தை விரும்புவதாகக் கேட்டாங்க."
'என்னையா..? நீங்க என்ன சொன்னீங்கப்பா..?'
'என்னம்மா சொல்லியிருப்பேன். கரும்பு தின்னக் கூலியா? சம்மதம் என்று அத்தைக்கு வாக்குக் கொடுத்திட்டேன்!"
மாலதி அதிர்ந்துபோய் பார்த்தாள். அந்த வீட்டு மருமகளாக நான் போவதா..?
'இப்படி ஒரு சம்பந்தம் கிடைக்க நாங்க கொடுத்து வைச்சிருக்கணும்."
'ஏனப்பா அவசரப்பட்டு வாக்குக் கொடுத்தீங்க?" மாலதியின் குரல் நடுங்கியது.
நீ தாயில்லாப் பெண்ணு. கொஞ்ச நாளாய் ஒரு தகப்பனுக்குரிய கடமையை நான் செய்யாமல் போயிடுவேனோ என்ற பயத்தில் நெஞ்சு படபட என்று அடிச்சிட்டே இருக்கு. வலிய வந்த வரனை ஏன் விடுவான்..?
உங்களுக்கு ஒன்றுமே நடக்காதப்பா, அதற்காக அவசரப்படாதீங்க..!
உன்னைக் கரை சேர்க்காவிட்டால் நிம்மதியாய் சீவன் போகாதம்மா
இப்பதானே படிப்பை முடிச்சிருக்கிறேன். எனக்குக் கொஞ்சம் அவகாசம் தாங்கப்பா.
'காலம் கடத்தினால் அத்தை மனசு மாறிவிடுவாளோ என்ற பயத்தில் சம்மதம் சொல்லிவிட்டேன். அப்புறம் வருத்தப்படக் கூடாதுபார்! உங்கம்மா இருந்திருந்தால் கட்டாயம் சந்தோசப்பட்டிருப்பாள்."
அவளை மேற்கொண்டு பேசவிடாமல், 'நீ சாப்பிட்டுவிட்டு படுத்துத் தூங்கம்மா" என்று சொல்லிவிட்டு, கை அலம்பிவிட்டுப் படுக்கையை விரித்துப் படுத்துக் கொண்டார்.
இடி விழுந்தது போல மாலதி செய்வதறியாது, தூக்கமின்றி இரவெல்லாம் அவஸ்தைப்பட்டாள். இரவு தூங்கும் போது இவள் மட்டும் விழித்திருந்தாள்.
காலையில் எழுந்து எப்படியாவது தேவகி ஆன்டியிடமாவது சொல்லி ஆலோசனை கேட்கலாம், மனதில் உள்ள பாரத்தைக் கொஞ்சமாவது தீர்க்கலாம் என்ற எண்ணத்தோடு தேவகியின் வீடுதேடி வந்தாள். ஒருபோதும் இல்லாமல் மாலதியின் முகம் வாடியிருப்பதைக் கண்டதும் என்னவோ ஏதோ என்று பயந்துபோனாள் தேவகி.
'என்னம்மா மாலதி முகத்தில சிரிப்பையே காணோம், அப்பா ஏதாவது ஏசினாரா?"
'இல்லை ஆன்டி, சும்மா தான் வந்தேன். கமலியாவது இருந்திருந்தால், அவளோடு கொஞ்ச நேரமாவது பேசிக் கொண்டிருந்திருக்கலாம். மனசுக்குக் கொஞ்மாவது ஆறுதலாய் இருக்குமே என்று நினைச்சேன்."
'அதைத்தான் கேட்கிறேன், மனசு கஸ்டப்படும் அளவிற்கு உனக்கு அப்படி என்ன நடந்திச்சு..?"
'ஒன்றுமில்லை, அப்பா எனக்கு ஒரு கலியாணம் பேசிக் கொண்டுவந்தார், அதுதான் அதைப்பற்றி உங்களோடு கலந்து பேசலாமே என்று நினைச்சு வந்தேன்." என்றாள்.
'என்னம்மா, நீ இன்னமும் சின்னப்பெண்ணுதானே. அப்பா எதைச் செய்தாலும் உன்னுடைய நன்மைக்குத்தான் செய்வார். இப்ப கலியாணம் என்ற பேச்சை எடுத்தாலே உனக்குப் பயமாய்த்தான் இருக்கும், போகப்போகக் கொஞ்ச நாளில் எல்லாம் சரியாய்ப் போய்விடும்"
'எனக்கு இப்ப கலியாணம் செய்ய விருப்பமில்லை ஆன்டி..!"
'அப்படிச் சொல்லாதேம்மா, அவரும் ஒரு இருதயநோயாளி. உயிரோட இருக்கும்போது எப்படியாவது கரை சேர்த்திடணும் என்று ஆசைப்படுவதில் தப்பில்லையேம்மா."
'புரியுது ஆன்டி, ஆனால் அப்பா சொல்லுறவரைத்தான் நான் கட்டணும் என்று கட்டாயப்படுத்திறாரே."
'பேசிச் செய்கிற கலியாணம் என்றால் இப்படித்தான். நாங்க எல்லாம் முன்பின் தெரியாத ஒருவரைக் கட்டிக்கிட்டு சந்தோசமாய் வாழவில்லையா?"
எனக்கு என்னமோ பயமாய் இருக்கு ஆன்டீ..! இப்போதைக்கு எனக்கு கலியாணம் வேண்டாம் என்று அப்பாகிட்ட கொஞ்சம் எடுத்துச் சொல்லி விடுங்களேன்.. மாலதி கெஞ்சாக் குறையாய்க் கேட்டுப் பார்த்தாள்.
கமலினிகூட இப்படித்தான் முதல்ல கலியாணமே வேண்டாம் என்று அடம் பிடிச்சாம்மா, இப்ப என்னடா என்றால் டெலிபோன்ல பேசக்கூடத் தனக்கு நேரமில்லையாம். என்னதான் இந்தக் காலத்துப்  பெண்ணுங்களோ.. என்னாலே புரிஞ்சுக்கவே முடியலை..! என்ன நோக்கத்தோடு மாலதி அங்கு வந்தாளோ, அதற்கு எதிர்மாறாய் ஆன்டியின் புத்திமதியிருந்தது.
இவர்கள் எல்லோரும் புகுந்த இடத்தில் பெண்; சந்தோசமாய் வாழவேண்டும் என்பதை விட, பெண்ணை எப்படியாவது யாருடைய தலையிலாவது கட்டிவிட்டால் போதும் என்று கவலைப்படுபவர்கள். பெண்ணைப் பெற்றவர்கள் எல்லோரும், பெண்ணின் மனசைப் புரிந்து கொள்ளாமல் இப்படித்தான் புத்திமதி சொல்வார்களோ என்று கலங்கிய மனதோடு வீடு வந்து சேர்ந்தாள் மாலதி.


  அத்தியாயம் - 8

லங்கிய மனதோடு வீடு வந்து சேர்ந்த மாலதிக்கு அழுகையழுகையாய் வந்தது.
முழங்காலில் தலை சாய்த்தபடி அழுது கொண்டிருந்தவள், காலடிச் சத்தம் கேட்டதும் அவசரமாய்க் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.
'அம்மா.. மாலதி;;..!" அப்பாவின் குரல் அருகே கேட்டதும் நிமிர்ந்து பார்த்தாள்.
அவள் கன்னம் வீங்கி, கண்கள் கலங்கியிருப்பதை அவர் கவனித்தார்.
அழுதிருப்பாள், இரவு முழுவதும் அழுதிருப்பாள் என்று ஊகித்தார்.
'என்னம்மா, இரவிரவாய் அழுமளவிற்குத் தப்பாய் ஏதாவது கேட்டு விட்டேனா..?" அவளுக்கருகே மண்டியிட்டு அமர்ந்து அவளது தலையைகோதிவிட்டபடி கேட்டார்.
அவள் வெடித்து விம்மினாள். அப்பாவிடம் இப்போ சொல்லாவிட்டால் எப்பவுமே சொல்ல முடியாமற் போய்விடுமோ என்று நினைத்தாள்.
'இப்ப ஏன் அழுகிறாய்? கலியாணம் செய்யப் பிடிக்கலையா?"
'எனக்கு இந்தக் கலியாணம் வேண்டாமப்..பா"
'அப்படிச் சொல்லாதேம்மா.. எனக்கும் வயசு போயிடிச்சு, நான் ஒரு இருதயநோயாளி. எனக்கு எப்ப.. என்ன நடக்கும் என்று எனக்கே சொல்லத் தெரியாது. இதைவிட்டா வேறு வரன் கிடைப்பதே கஸ்டமம்மா..!"
'எனக்கு அவரைப் பிடிகலைப்பா.’
‘ஏன் பிடிக்கலை?’
‘அவர் நல்லவர் இல்லையப்பா!."
"நல்லவன், கெட்டவன் என்று யாருமே பிறப்பதில்லையம்மா. எல்லாவற்றுக்கும் அவரவர் வளரும் சூழ்நிலைதான் காரணம். ஒரு கால்கட்டு போட்டால் எல்லாம் சரி வந்திடும்."
'எனக்குப் பிடிக்காதவரோட எப்படியப்பா வாழமுடியும்?"
'இதிலே பிடிக்க என்ன இருக்கு? விட்டுக் கொடுத்து நடந்தா எல்லாம் சரியாய்ப் போயிடும். என்னுடைய அக்கா மகன்தானே! உன்னுடைய முறை மாப்பிள்ளை. பெண்ணை மட்டும் கொடுத்தாப் போதும் வேறு ஒன்றுமே வேண்டாம் என்று வலிய வந்து கேட்டாங்க, அதனாலேதான் அக்காவிற்கு சம்மதம் சொல்லி விட்டேன்."
'எனக்கு இப்ப கலியாணம் வேண்டாமப்பா, பிளீஸ்" அவள் தகப்பனின் கன்னத்தைத் தடவிக்கொண்டு, கெஞ்சியபடி திரும்பவும் வற்புறுத்தினாள்.
'என்னை வாக்கு மாறச் சொல்லுறியா? ஊரார் பழிச்சா நான் உயிரோட இருப்பேன் என்று நினைக்கிறியா?"
அவள் எதைச் சொன்னாலும் சுந்தரம் மாஸ்டர் விட்டுக் கொடுக்காமல் பிடிவாதமாய் அவளோடு முரண்படவே, இதுவரை அமைதியாய் யாசித்தவள் வெகுண்டெழுந்தாள்.
‘அப்போ உங்க சுயநலத்திற்காக என்னைத் தள்ளிவிடப் போறீங்களாப்பா..?’
‘என்னம்மா சொல்லுறாய், சுயநலமா, எனக்கா? அம்மா இல்லையேன்னு உன்னை செல்லமாய் வளர்த்ததுதான் தப்பாய்ப் போச்சு’
‘எனக்கு இந்தக் கலியாணம் வேண்டாமப்பா, கடைசிவரை உங்க மகளாகவே நான் இருந்திட்டுப்போறேனே, பிளீஸ்..!’
‘நான் வாக்குக் கொடுத்திட்டேன். உனக்கு விருப்பமோ விருப்பமில்லையோ, இந்தக் கலியாணம் கட்டாயம் நடக்கும்."
உறுதியாகச் சொல்லிவிட்டு அவர் எழுந்தார். அப்பாவின் பிடிவாதம் அவளுக்குத் தெரியும். ஆனாலும் கடைசி முயற்சியாய் விரக்தியில் அவள் முணுமுணுத்தாள்.
'என்னைக் கட்டாயப் படுத்தினால் நான் செத்துப் போயிடுவேன்!"
அவள் சொன்ன அந்த வார்த்தைகள் அவரை அதிரவைக்கவே ஒருகணம் செயலிழந்து நின்றார்.
‘செத்துப்போயிடுவியா..?’
இதுவரை நாளும் தன்னை எதிர்த்து ஒன்றுமே பேசாதவள் இன்று செத்துப் போயிடுவேன் என்று மிரட்டியதும் சுந்தரம் மாஸ்டர் ஆவேசம் கொண்டார்.
'தாயைத்தின்னி, பெத்த அப்பாவையே மிரட்டிப் பாக்கிறியா? உன்னை வளர்த்தெடுக்க நான்பட்ட கஸ்;டம் உனக்குத் தெரியுமாடி? செத்துப் போறதுக்காகவாடி இப்படி வளர்த்தெடுத்தேன். நான் இருந்தால் தானே உனக்குத் தொல்லை. நானே போயிடுறேன், தனிய இருந்து அனுபவிச்சுப்பார்..!'
திட்டிக் கொண்டே ஆத்திரம்தீர அவளது முதுகில் இரண்டு கைகளாலும் ஓங்கிக் குத்துகுத்தென்று குத்திவிட்டு அறைக்குள் சென்று கதவை அடித்துப் பூட்டினார்.
என்றுமே தொடாத அப்பாவா என்னைத் தொட்டு இந்த அடிஅடித்தார்? மாலதியால் அதைத் தாங்கமுடியாமல் அழுகை வந்தது. உடம்பு நோவைவிட, அவளின் மனசு கனத்து வலித்தது.
‘நீங்களாவது என்னைப் புரிஞ்சு கொள்ளுங்களேன் அம்மா..!’ என்று ஆற்றாமையால் ஓடிச் சென்று சுவரில் தொங்கிய தாயின் படத்தைப் பார்த்துப் புலம்பினாள்.
திடீரென அசாதாரண மௌனம் நிலவவே, விம்மி விம்மி அழுது கொண்டிருந்த மாலதி பயந்துபோய் எழுந்து சென்று அறைக் கதவைத் தட்டினாள்.
‘அப்பா கதவைத் திறவுங்கப்பா!’
எந்தப் பதிலும் வராமல் போகவே, ஓடிச் சென்று யன்னன் வழியாக எட்டிப் பார்த்தாள்.
அங்கே அவள் கண்ட காட்சி அவளை அதிரவைத்தது. ஒரு கணம் செயல் இழந்து நின்றவள், மறுகணம்..
‘அப்பா..!’ என்று வீறிட்டாள். அவளது குரல் எல்லா சுவர்களிலும் முட்டி மோதிப் பயங்கரமாய் எதிரொலித்தது.
சால்வைத் துண்டில் முடிச்சுப் போட்டுக்கொண்டு, ஸ்டூலை வைத்து அதிலே தற்கொலை செய்யும் நோக்கத்தோடு; சுந்தரம் மாஸ்டர் ஏறி நின்றார். அந்தக் காட்சியைக் கண்டதும் மாலதி பதறிப்போனாள். இந்தனை காலமும் தகப்பனாய், தாயாய் தன்னை வளர்த்தெடுத்த அப்பாவா இப்படிச் செய்கிறார்? கேவலம் என்னுடைய சுயநலனுக்காக அப்பாவை நான் பலி கொடுப்பதா? எதுவிதியோ அதன்படி நடக்கட்டும்..!
'அப்பா, நீங்க என்ன சொன்னாலும் கேட்கிறேனப்பா, இப்ப கதவைத் திறவுங்கப்பா" உடைந்துபோன குரலில் யாசித்தாள்.
ஸ்டூலில் நின்றபடியே அவர் திரும்பி அவளைப் பார்த்தார்.
‘பிளீஸப்பா..!’ என்று கைகூப்பிக் கெஞ்சினாள்.
'கதவைத் திறக்கிறேன். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவியா?"
'சரியப்பா, கதவைத் திறவுங்க."
'நீ வாக்கு மாறமாட்டியே?" சந்தேகத்தோடு கேட்டார்.
'இல்லையப்பா, நீங்க என்ன சொன்னாலும் கேட்கிறேன். வெளியே வாங்கப்h..!" விம்மி விம்மிக் கெஞ்சினாள்.
'அப்போ இந்தக் கலியாணத்திற்குச் சம்மதமா?"
'உங்க விருப்பம் எதுவோ அதன்படி நடக்கிறேனப்பா" அவர் தற்கொலை முயற்ச்சியைக் கைவிட்டு வெளியே வந்தால் போதும் என்ற மனநிலையில் அவர் என்ன கேட்டாலும் சம்மதம் சொல்லத் தயாராக இருந்தாள்.
அவர் கிழே இறங்கிக் கதவைத் திறந்து வெளியே வந்தார். தன்னுடைய பிடிவாதத்தால் அப்பா இப்படி ஒரு முடிவை எடுக்கவேண்டி வந்து விட்டதே என்று தனக்குள் பயந்துபோன அவள், பாய்ந்து சென்று ஆற்றாமையால் தகப்பனைக் கட்டிப்பிடித்து ஓவென்று அழுதாள்.
ஒரு பெண்ணாய்ப் பிறந்தால், பிறந்தது முதல் இறக்கும்வரை அவளைப்பற்றிய ஒவ்வொரு முடிவும் மற்றவர் கையில்தான் தங்கியிருக்கிறது. இங்கேகூட கட்டாயத்தின் பெயரில், பெற்ற தகப்பனின் முடிவைத்தான் அவள் கடைசியில் ஏற்றுக் கொள்ள வேண்டிவந்தது. ஆண் ஆதிக்கத்தின் முன்னால் ஒன்றுமே செய்ய முடியாதவளாய் பெண் இருப்பதால்தான், ஆண்கள் தாங்கள் நினைத்ததை இலகுவில் சாதித்து விடுகிறார்களோ தெரியவில்லை?
அத்தைக்கு எப்படியோ இங்கே நடந்த விசயம் தெரிந்திருக்க வேண்டும். மறுநாள் வீடுதேடி வந்திருந்தாள்.
'எல்லாப் பெண்களும் இப்படித்தானம்மா, கலியாணம் என்றால் வேண்டாம் என்றுதான் எடுத்ததும் சொல்லுவாங்க. அப்புறம் கட்டிக் கொடுத்தா பிறந்த வீட்டுப் பக்கமே வரமாட்டாங்க. எல்லாம் போகப் போகச் சரியாயிடும். என்னுடைய மகனுக்கு என்ன குறை? பொறாமை பிடிச்சவங்க ஏதேதோ சொல்லுவாங்க, அதை எல்லாம் கணக்கில எடுக்காதையம்மா. இப்படி ஒரு வரன் அமைய நீதான் கொடுத்து வைச்சிருக்கணும். எந்தக் காரணம் கொண்டும் அப்பா மனசை மட்டும் புண்படுத்திடாதேயம்மா!" அத்தை ஆறுதலாக இருந்து மாலதிக்குப் புத்திமதி சொல்லிவிட்டுப் போனாள்.
அப்பா மனசு புண்படக்கூடாதாம்! இதுவரை காலமும் இல்லாத பாசம் தம்பிமேல், அத்தைக்கு ஏன் வந்தது? ராஜனுக்குப் பெண் கொடுக்க யாருமே முன்வராததாலா..?
சுந்தரம் மாஸ்டரின் விருப்பப்படியே, ராஜன் - மாலதி திருமணம் ஆடம்பரமில்லாமல் இனசனத்திற்கு மட்டும் சொல்லி கோயிலில் நடந்து முடிந்தது. தாலி கட்டும் போதும்கூட, மாலதி தாலியைத் தூக்கி எறிந்து விடுவாளோ என்ற பயத்தோடுதான் ராஜன் பல்லைக் கடித்துக் கொண்டு தாலியைக் கட்டினான். மகாலட்சுமி மாதிரி வீட்டிற்கு விளக்கேற்ற இப்படி ஒரு மருமகள் வந்ததில் ஏற்பட்ட அளவிட முடியாத சந்தோசத்தில் அத்தை ஒரேயடியாகப் பூரித்துப்போனாள்.
முதலிரவின் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமற்தான் அவள் அந்த அறைக்குள் நுழைந்தாள். நுழைந்தாள் என்பதைவிட குள்ளநரியின் குகைக்குள் தள்ளப்பட்ட புள்ளிமான்போல, உறவுகளால் பலவந்தமாக உள்ளே தள்ளிவிடப்பட்டாள். கலியாணத்திற்கு வந்திருந்த இனசனங்களின் பார்வையும், பேச்சும் தன்னைச் சுற்றியே இருந்ததால் நடப்பது நடக்கட்டும் என்று அவளும் மௌனமாய், பொறுமையாய் எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டாள். எந்தக் காரணம் கொண்டும், தாயை இழந்த தன்னைக் கஸ்டப்பட்டு வளர்த்தெடுத்த அப்பாவின் மனது புண்படக்கூடாது என்பதில் அவள் கவனமாக இருந்தாள்.
பட்டுவேட்டி, சட்டையோடு கட்டிலில் உட்கார்ந்திருந்த ராஜன், அவளைக் கண்டதும் எழுந்து சட்டைப்பையுள் இருந்த சிகரட்பெட்டியை எடுத்து, சிகரட் ஒன்றை லாவக மாகப் பற்றவைத்தான். புகையை உள்ளே இழுத்து வாயைமூடி, மூக்குக்குள்ளால் வெளியே தள்ளினான். குப்பென்று முகத்திலடித்த சிகரட் புகையின் நாற்றம் தாங்க முடியாமல், மாலதி முகத்தைச் சுழித்துக் கொண்டு மறுபக்கம் திருப்பினாள்.
'ஏன்.. என்னைப் பிடிக்கலையா உனக்கு..?' என்று அருகே வந்த ராஜன் கேட்டான்.
அவள் ஏதும் பேசாமல் தரையைப் பார்த்தபடி மௌனமாய் இருந்தாள்.
'சொல்லேன், உனக்கு என்னைப் பிடிக்கலையா?'
'இல்லை, எனக்குச் சிகரட் புகை பிடிக்கலை.'
'அதுதானே பார்த்தேன் என்னையே பிடிக்கலை என்று சொல்லி விடுவியோ என்று நினைச்சேன்'. என்றான் அசட்டுச் சிரிப்போடு.
'அப்படிச் சொல்ல வைச்சிடாதீங்க..!' என்று சொல்ல வாய் உன்னியது. ஆனாலும் அவனிடம் சொல்லாமல் மனசுக்குள் அடக்கிக்கொண்டாள்.
'ஏன் எதையோ பறிகொடுத்தமாதிரி முகத்தை வைத்திருக்கிறாய்..? உனக்கு இந்தக் கல்யாணத்தில விருப்பமில்லையா..?'
இதுவரை நடந்தது எதுவுமே தனக்குத் தெரியாதது போலவும், அவளும் விரும்பித்தான் இந்தக் கலியாணம் நடந்தது போலவும் அவன் கேட்டான்.
நல்ல நடிகனாய் இருப்பானோ..? என்று இவள் மனசுக்குள் வியந்தாள்.
'இல்லையே, நான் நானாகத்தான் இருக்கிறேன்." என்று பதில் சொன்னாள்.
இன்னும் எவ்வளவு நேரம்தான் அவள் அவளாக இருக்க முடியும் என்பதில் அவளுக்குள் சந்தேகம் இருந்தது.


அத்தியாயம்  9

து பெரியவர்கள் பேசிச் செய்த கலியாணம், தனக்கும் இதற்கும் எந்தத் தொடர்புமே இல்லை என்பது போல முதலிரவிலன்று ராஜன் நடந்து கொள்ள முற்பட்டான். அதனால் அவனது வருங்கால மனைவி  என்ன நினைக்கிறாள் என்பதை அறிவதில் மிகவும் முனைப்பாக இருந்தான்.
'நீயும் விரும்பித்தானே சம்மதம் சொன்னாய்..?'
'என்னுடைய சம்மதம் கேட்டா இந்தக் கல்யாணம் நடந்திச்சு..?" அவள் ஆவேசமாய் நிமிர்ந்து கேட்க, அவன் பெரிதாகச் சிரித்தான். முதலிரவிலன்றே அவளைச் சீண்டி வேடிக்கை பார்த்தான்.
'அப்போ உன்னுடைய சம்மதம் இல்லாமலா இந்தக் கல்யாணம் நடந்திச்சு..?'
அவள் எதுவும் பேசாது அடிபட்ட மான்போல மிரட்சியோடு அவனைப் பார்த்தாள்.
'உனக்குத் தெரியுமா.. பெண்ணோட சம்மதம் கேட்கப்போனால் இந்த நாட்டில் நிறையக் கலியாணம் நடக்காமலே நின்று போயிருக்கும். அதனாலேதான் அனேகமான பெற்றோர்கள் பெண்ணிடம் சம்மதமே கேட்பதில்லை’ ஆணாதிக்கத்தின் பிரதிநிதியாய் அவன் வாயிலிருந்து வார்த்தைகள் கொட்டியது மட்டுமல்ல, பெண் என்பவள் அடிமைதான் என்ற பாவனையோடும் அந்த வார்த்தைகள் வெளிவந்தன.
'தெரியுமே.. அதுதான் என்னை விலை கொடுத்து வாங்கிட்டீங்களே..!'
'எனக்கு உன்னைப் பிடிச்சுதோ இல்லையோ. என்னுடைய முறைப் பெண்ணை யாருக்கும் விட்டுக் கொடுக்கமாட்டேன்?'
முறைப்பெண் என்று அவன் குத்திக் காட்டியதும் அவள் முகத்தைச் சுழித்தாள்.
'பாரு, நீ முகத்தை சுழிக்கும்போது எவ்வளவு அழகாய் இருக்கிறாய், அழகிற்கு அழகுசேர்க்கும் இந்த சொண்டு.. இந்த மூக்கு..!' வேண்டுமென்றே அருகே வந்து அவளது மூக்கை இரண்டு விரல்களாலும் இறுகப் பிடித்து ஆட்டினான்.
மூச்சுத் திணறவே அவள் திமிறி அவனது கையைத் தள்ளிவிட்டாள்.
அவனது பேச்சு மட்டுமல்ல, செய்கையும் காட்டுமிராண்டித்தனமாய் இருந்தது. இப்படிப்பட்ட ஒருவனிடமா தன் எதிர்கால வாழ்க்கையை ஒப்படைத்திருக்கிறோம் என்று நினைத்ததும் மாலதிக்குப் பயம் பிடித்துக் கொண்டது.
'நீ முறைப் பெண்ணாய் இருந்தாலும் எனக்கு உன்மேல நாட்டம் இருக்கவில்லை. ஆனால் உன்னுடைய நடன அரங்கேற்றத்தில் உன்னைப் பார்த்தேனா, அப்படியே மயங்கிப் போனேன். மேடையில என்னமாதிரி நீ ஜொலிச்சாய். ஒவ்வொரு முறையும் மேடையில் நீ குனிந்து நிமிர்ந்த போது எனக்கு என்ன ஞாபகம் வந்திச்சு தெரியுமா? சொன்னால் உனக்குப் புரியாது, அந்தப் பழைய காலத்துச் சிற்பங்கள்தான் ஞாபகம் வந்திச்சு. அப்பவே முடிவு செய்திட்டேன், உன்னை, இந்த அழகை வேறுயாரும் அனுபவிக்க விடக்கூடாது என்று...!"
அவன் விசமத்தனமாய் சொன்ன வார்த்தைகளைக் கேட்க முடியாமல் காது கூசிற்று. திருமணபந்தம் என்பது உடலோடு மட்டும் சம்பந்தப்பட்டது என்று இவன் நினைக்கிறானா? பெண்மையை மதிக்கத் தெரியாதவனுக்கு முன்னால் இப்படிக் கூனிக்குறுகி நிற்கவேண்டி வந்துவிட்டதே என்று மனம் வருந்திக், காதைப் பொத்திக் கொண்டாள்.
'காதைப் பொத்தினால் விட்டிடுவேனாடி? உன்னுடைய இந்த அழகை வேறு ஒருத்தன் அனுபவிக்க விடுவனா..? அதனாலதான் நீதான் எனக்கு வேணும் என்று அம்மாவிடம் அடம் பிடித்தேன். கசக்கிப்போட்டால் அடங்கித்தானேயாகவேணும்.. புரியுதா..?'
தழும்பாகிப்போன பழைய காயத்ததைத் தடவிப் பார்த்தவன் போலக் கதை சொல்லிக் கொண்டே போனவன், படுக்கைஅறையில் உள்ள அலுமாரிக் கதவைத்திறந்து உள்ளே இருந்து ஒரு பாட்டிலை எடுத்தான்.
அவள் மெல்ல நிமிர்ந்து அது என்னவென்று பார்த்தாள். வெளிநாட்டு மதுபானம் என்பது அவளுக்குப் புரிந்தது.
'என்ன பார்க்கிறாய், நான் உள்ளுர் சரக்குத்தான் பொதுவாய் அடிப்பேன். இன்னைக்கு நம்ம முதலிரவாச்சே, அதுதான் கொஞ்சம் நல்ல சரக்காய் கொண்டு வந்து வைச்சிருக்கிறேன்.'
முதலிரவன்று இவன் இதைப்பற்றியா பேசவேண்டும்? கட்டியமனைவியை வேண்டும் என்றே அலட்சியப் படுத்துவது போல இப்படி ஏன் இவன் நடந்து கொள்கிறான்? இவனுக்கு என்மேல் என்ன கோபம்? என்னை ஏன் வெறுக்கிறான்? நான் அழகாய்ப் பிறந்தது என்னுடைய தவறா?
அவனது நடத்தை அவளை ஆச்சரியப் படவைத்தது. நன்கு பழக்கப்பட்டவன்போல பாட்டிலைத் திறந்து எதுவுமே கலக்காமல் கிளாசில் மதுவை ஊற்றிக் குடித்தான்.
மாலதி என்ன சொல்வது என்று தெரியாமல் மிரள மிரள விழித்தாள்.
‘என்ன பார்க்கிறாய்?’
அவன் இப்படி ஊத்திக் குடிப்பதைப் பார்த்ததும் அவள் அதிர்ச்சியடைந்தாள்.
'நீங்க குடிப்பீங்களா..?' நம்ப முடியாமல் வாய்விட்டுக் கேட்டாள்.
'குடிப்பீங்களாவா..? என்னைப்பாத்தா கேட்கிறாய்? ஏன்டி உனக்குத் தெரியாதா? அதுதான் ஊர் அறிந்த விசயமாச்சே..!" என்றான் ராஜன்.
மதுவாடை காற்றில் கலந்து சுவாசத்தில் புகுந்தது. எல்லாவற்றையும் உதறிவிட்டுக் கதவைத் திறந்து கொண்டு வெளியே ஓடிப்போய் விடலாமோ என்றுகூட ஒரு கணம் யோசித்தாள்.
‘ஓரடி கணவர்க்காக..!’ அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, அக்கினி சுற்றி வலம் வந்தபோது, அவள் எடுத்து வைத்த ஒவ்வொரு அடிக்கும் அர்த்தம் இல்லாமல் போய்விடுமோ என்று பயந்தாள். சமய, சமுதாய சாத்திரங்களை அவசரப்பட்டு மீறி விடுவோமோ என்ற பயமும் அவளைத் தடுத்தது.
யோசிப்பதற்குக்கூட அவளுக்கு நேரம் கொடுக்காமல் அவன் விளக்கை அணைத்துவிட்டு, தாலிகட்டிய கணவன் என்ற உரிமையோடு அவளைக் கட்டிலுக்கு இழுத்தான். சிகரட் நாற்றத்தோடு சேர்ந்த மதுவாடை குப்பென்று அவள் முகத்திற்கருகே வேகமாகப் பரவியது. மூச்சு முட்டி, மயக்கம் வருவது போல.. கனதியாக ஏதோ மேலே படர்ந்து.. என்ன நடக்கிறது என்று அவள் நிதானிக்க முன்பே, பூசைக்கு வைக்கப்பட வேண்டிய அனிச்சமலர் ஒன்று, அந்த நான்கு சுவர்களுக்கு நடுவே பலவந்தமாய்ப் பறிக்கப்பட்டு ஒரு நொடியில் கசக்கிப் போடப்பட்டது.
எல்லோருக்கும் விடிந்த அந்தக் காலை அவளுக்கு மட்டும் விடியாமற் போனது. அன்று மட்டுமல்ல தினம் தினம் இந்தக் கண்ணீர்க்கதைதான் தொடரப் போகிறது என்பதுபோல அவளோடு சேர்ந்து அதிகாலை வானமும் விம்மி விம்மி அழுதது. தப்பான ஒருவன் வாழ்க்கைத் துணையாக வந்தால் என்ன நடக்கும் என்பதற்குச் சான்றாய் அவளது முகத்தில் நிரந்தரமாய் மலர்ந்திருந்த புன்னகை என்ற இனியமலர் அவளிடம் இருந்து பறித்தெடுக்கப்பட்டது.
பல்கலைக்கழக விடுமுறைக்கு கண்ணன் வீட்டிற்கு வந்திருந்தான். மாலதியின் திடீர் திருமணத்தால் அவன் அதிர்ச்சியடைந்திருந்தாலும், அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை. இந்தத் திருமணத்தைப்பற்றி அவள் ஏன் தன்னோடு கலந்துரையாடவில்லை, தன்னிடம் ஏன் அதை மறைத்தாள் என்பதில் அவன் மனம் நொந்து போயிருந்தான். இவ்வளவு தூரம், சின்ன வயதில் இருந்தே தன்னோடு நெருங்கிப் பழகிவிட்டு, சொந்தத்தில், பணக்கார மாப்பிள்ளை கிடைத்ததும் தனது திருமணத்தைப்பற்றி ஒரு சொல்கூடச் சொல்லாமல் திடீரென அவள் ஒதுங்கிவிட்ட ஆத்திரத்தில் அவன் இருந்தான். அதனால் ஏற்பட்ட கோபத்தில், மாலதியை நேருக்கு நேர் சந்திப்பதைத் தவிர்க்கவே விரும்பினான்.
மாலதியின் திடீர் திருமணத்தைப்பற்றி அமெரிக்காவில் இருந்து கமலினி அறிவித்துத்தான் அவனுக்கு அதுபற்றித் தெரியவந்தது. பரீட்சை நடந்து கொண்டிருந்தபடியால், பரீட்சைதான் முக்கியம், திருமணத்திற்கு அவசரப்பட்டு உடனே வரவேண்டியதில்லை என்று தேவகியும் தொலைபேசி மூலம் அறிவித்திருந்தாள். திருமணம் பற்றித் திடீரெனக் கேள்விப்பட்டதில் குழம்பிப்போன அவனால், பரீட்சை காரணமாக திருமணத்திற்கு உடனே வந்து கலந்து கொள்ள முடியவில்லை. தனிப்பட்ட முறையில் மாலதி ஏன் தன்னை அழைக்கவில்லை என்ற மனக்குறையும் அவனிடம் இருந்தது. அவன் வராமல் விட்டதற்கு அதுவும் ஒரு காரணமாக இருந்தது. எனவே தான் விடுமுறைக்கு வந்திருந்தும் பிடிவாதம் காரணமாக அவன் மாலதியை போய்ப் பார்க்க வேண்டும் என்று  நினைக்வில்லை. 
கண்ணன் விடுமுறையில் வந்திருக்கிறான் என்பதைக் கேள்விப்பட்டு, மாலதி கண்ணனின் வீடு தேடி வந்திருந்தாள். தேவகி மாலதியை வரவேற்றபோது அறைக்குள் இருந்த கண்ணன் மாலதி வந்திருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டான். மாலதியைச் சந்திக்கும் சந்தர்ப்பத்தைத் தவிர்க்க நினைத்தவன் சத்தம் போடாது சைக்கிளை எடுத்துக் கொண்டு வெளியே சென்றான்.
அவசரமாக வீதியைக் கடக்கும் போது சின்ன வயதில் அவனுக்கு மாலதி சைக்கிள் பழக்கிவிட்டதும், தான் சயிக்கிளோடு விழுந்து எழுந்த ஞாபகமும் வந்தது. அன்று ரத்தத்தைக் கண்டு துடித்துப்போன, என்னிடம் இவ்வளவு அன்பாய் இருந்த மாலதியா எனக்குத் திருமணத்திற்கு அறிவிக்காமல் விட்டாள் என்பதை நினைக்க அவன் மனதில் வேதனையும், விரக்தியும்தான் மிஞ்சியது.
இரவு சாப்பிடும்போது பேச்சுவாக்கில் தாய்தான் கதையைத் தொடக்கினாள். எப்படிப்பட்ட சூழ்நிலையில் மாலதியின் திருமணம் நடந்தது என்பதை கண்ணனுக்கு எடுத்துச் சொன்னாள்.
'அப்போ அவளுக்கு விருப்பம் இல்லாமலா இந்த கலியாணம் நடந்தது?" என்றான் கண்ணன் அதிர்ச்சி அடைந்தவனாய்.
'சுந்தரம் மாமா தனது அக்காவிற்கு வாக்குக் கொடுத்து விட்டேன் என்று கட்டாயப் படுத்தித்தான் அவளைக் கட்டிவைச்சார். அது அவளுக்கே விருப்பமில்லாத ஒரு கட்டாயக் கல்லயாணம்"
'அப்போ, மாட்டேன் என்று மாலதி மறுத்திருக்கலாமே" என்றான்.
'எல்லா விதமாயும் இந்தக் கலியணத்தை நிறுத்துவதற்கு அவள் முயற்ற்சி செய்து பார்த்திருக்கிறாள். மாஸ்டர் தற்கொலை செய்யப்போவதாக அவளை மிரட்டி, தற்கொலை செய்யவும் முயற்ச்சி செய்திருக்;கிறார்"
கண்ணன் சிறிது நேரம் மௌனமாக இருந்தான். மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல், எப்படிப்பட்ட சூழ்நிலையில் மாலதி அகப்பட்டுப் போயிருந்திருக்கிறாள் என்று நினைக்க அவள்மீது அவனுக்கு இரக்கம் வந்தது.
'இப்ப எப்படி மாலதி சந்தோசமாய் இருக்கிறாளா..?" முதன் முறையாக மாலதியைப் பற்றி, மனம்விட்டு கண்ணன் விசாரித்தான்.
'சந்தோசமா..? அவனோடையா? எப்ப அவள் கழுத்திலே மூன்று முடிச்சு போட்டானோ அப்பவே எல்லாவற்றையும் அவள் இழந்திட்டாள்"
'என்னம்மா சொல்லுறீங்க ..?"  என்றான் அதிர்ச்சியோடு.
'ஆமா கண்ணா, மாலதி முன்பு மாதிரி கலகலப்பாய் இல்லையப்பா. சிரிப்பையே முழுமையாத் தொலைச்சிட்டு நிக்கிறா!."
'உனக்குத் தெரியும்தானே அந்தக் கேடுகெட்ட ராஜனைப்பற்றி. தினமும் குடிச்சிட்டு வந்தாலும் பொறுத்துக்கொள்லாம், ஆனால் இவனைப்போல ஒரு சந்தேகப் பிராணியோட வாழ்வதென்பது எவ்வளவு கஸ்டம் என்று அவளைப் பார்த்த பின்புதான் எனக்கே தெரிகிறது." மௌனமாய் சாப்பிட்டுக் கொண்டிருந்த அப்பா வாய் திறந்தார்.
'அப்போ அவளுடைய வாழ்க்கையே நரகமாய் போச்சு, அப்படித்தானே!"
'தப்பான கணவன் கிடைத்தால் வாழ்க்கையே நரகமாய் போயிடும். அவளுக்கு மட்டுமல்ல அவளோடு இருக்கிறவர்களுக்கும் நிம்மதி இல்லாமல் போயிடும். நாங்க என்ன செய்யலாம், அவளுக்கு ஆறுதல் மட்டும்தான் சொல்லலாம்!" என்றாள் தேவகி.
'அதைக்கூடச் சொல்ல சிலருக்கு மனசில்லையேயம்மா..!" கண்ணனைப் பர்த்துக் கொண்டு சொன்னார் அப்பா.
தன்னைத்தான் அப்பா குத்திக் காட்டுகிறார் என்பது அவனுக்குப் புரிந்தபோது அவன் சங்கடப்பட்டான்.


அத்தியாயம் - 10

மாலதியின் பரிதாபநிலையைக் கேள்விப்பட்ட கண்ணன் அவளுக்காக இரக்கப்பட்டான். அவள் அடைந்த துன்பங்களைத் தகப்பன் சொல்லிக் காட்டிய போது, தான் அப்படி நடந்து கொண்டது தவறுதான்  என்பதை உணர்ந்து கொண்டான்.
'என்னைத்தான் நீங்கள் குத்திக்காட்டுகிறீங்க என்று எனக்குத் தெரியுமப்பா. இவ்வளவு நெருக்கமாய் எங்களோடு பழகிவிட்டு, தன்னுடைய கலியாணத்திற்கு உங்களுக்குச் சொல்லாமல் விட்டிருந்தால் உங்களுடைய மனநிலை எப்படி இருந்திருக்கும்..?"
'உனக்கு அதுவா கோபம்? ஏன்தான் உம்மென்று முகத்தை வைச்சுக் கொண்டு இருக்கிறியோ என்று பார்த்தேன். தன்னுடைய கலியாணத்திற்கு உனக்குச் சொல்லக்கூடிய நிலையிலா அவள் இருந்தாள். பாவமடா, அந்த நேரம் நீ இங்கே இருந்திருந்தால் அவள் ஒரு பைத்தியம் போல நடந்து கொண்டதை நீயும் பார்த்திருந்தால்  உனக்குக்கூடப் புரிஞ்சிருக்கும்." என்றாள் தேவகி.
'அவள் என்ன தப்புப்பண்ணினா? நீ ஏன் தேவையில்லாமல் அவளைக் கோவிக்கிறாய்? உனக்குக் கலியாணத்திற்குச் சொல்லியிருந்தால் இந்தக் கலியாணத்தை நீ நிறுத்தியிருப்பியா கண்ணா..?’ அப்பா ஆவேசமாய்க் கேட்டார்.
அவன் என்ன அவளுக்கு அண்ணனா, தம்பியா, கலியாணத்தை நிறுத்த? கண்ணன் பதில் சொல்லத் தெரியாமல் முழித்தான்.
‘எங்கவீட்டுப் பெண்ணாய் எங்களோட எவ்வளவு அன்பாய்ப் பழகினாளே, அதை மறந்திட்டியா கண்ணா?’ என்று அப்பா சொன்னார்.
மாலதியின் எதிர்கால வாழ்க்கை இப்படியாய்ப் போய்விட்டதே என்று நினைத்து இரவு முழுவதும் கண்ணன் கவலைப்பட்டான். சுதந்திரமாய் யாருக்கும் தீங்கு நினைக்காமல் சிறகடித்துப் பறந்த பறவை ஒன்றின் சிறகை உடைத்துப் போட்டது போன்ற நிலையில் மாலதியின் நிலை இருப்பதை அவன் உணர்ந்தான். நித்திரை இன்றி யோசனையில் இருந்தவன் விடியும்போது அயர்ந்து தூங்கிவிட்டான்.
காலையில் அம்மா போட்ட சத்தத்தில் கண்ணன் கண்விழித்துப் பார்த்தான்.
'படிக்கிறபிள்ளைக்குப் விடிய விடிய என்ன தூக்கம்..?" இனிமேல் தூக்கம்போட அம்மா விடமாட்டா என்பதால் கண்ணன் கட்டிலில் எழுந்திருந்து சோம்பல் முறித்தான்.
'எழும்பி முகத்தைக் கழுவீட்டுவா,  மாலதி வந்திருக்கிறாள்." என்றாள் அம்மா.
மாலதி அவனைப் பார்க்க வந்திருக்கிறாள் என்றதும் கோபமெல்லாம் பறந்தோட அவசரமாக முகம் கழுவி, முகத்தைத் துடைத்தபடி மாலதியிடம் வந்தான்.
'கண்ணா பரீட்சை எல்லாம் எப்படி? நல்லாய்ச் செய்தியா..?" மாலதி சிரித்துக் கொண்டே கேட்டாள். அவள் சிரித்தாலும் முகம் சட்டென்று காட்டிக் கொடுத்தது. பழைய மாலதி அல்ல இவள் என்பது இவனுக்குப் புரிந்து போயிற்று.
'நல்லாய்தான் செய்தேன், ஆனால்..?" சொல்லி முடிக்காமல் நிறுத்தினான்.
'அதுவே போதும், கண்ணா பரீட்சைதான் உனக்கு முக்கியம். உன்னுடைய கவனம் எந்தவிதத்திலும் திரும்பிவிடக்கூடாது என்பதால்தான் நான் என்னுடைய கலியாணத் திற்குக்கூட உன்னை அழைக்கவில்லை." சொல்லிவிட்டு அவனைப் பார்த்தாள். 
அவனது தலை அசைவிலிருந்து அவன் அவளது நொண்டிச் சமாதானத்தை ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை.
'சரி, தப்பு என்மேல்த்தான், மன்னிச்சிடு!" சொல்லும் போது கண்கள் கலங்கின. அவனுக்கு முன்னால் அழவேண்டி வந்திடுமோ என்று அவள் பயந்தாள். 'உன்னை மன்னிக்கிற அளவிற்கு நான் என்னும் பெரியவனாகலையே மாலதி, நீ என்ன சமாதானம் சொன்னாலும் சரி " என்று குத்திக் காட்டினான். 'என்னைக்காவது ஒரு நாளைக்கு என்ன நடந்தது என்ற உண்மை உனக்குத் தெரியவந்தால், என்மேல தப்பில்லை என்று நீ நினைத்தால், அப்பொழுதாவது என்னைப் புரிந்து கொண்டால் போதும்.
“வேண்டாம் மாலதி, எனக்கு எந்த விளக்கமும் வேண்டாம்" கண்ணன் எந்த விளக்கமும் கேட்கத் தயாராக இல்லை என்பதுபோலப் பதிலளித்தான்.
'என்னோட கண்ணன் என்னை மன்னிப்பான் என்று எனக்குத் தெரியும்!" சொல்லிவிட்டு, பதிலுக்குக்கூடக் காத்திராமல் தேவகியைத் தேடிக் கொல்லைப்புறம் சென்றாள்.
கலங்கிய கண்களோடு, 'என்னோட கண்ணன்’ என்று அவள் உரிமையோடு சொல்லி விட்டுச் சென்றதும் கண்ணன் நெகிழ்ந்து போனான். அவள் சென்றதும், தனிமையில் விடப்பட்ட கண்ணன் சிந்தனையில் ஆழ்ந்தான். மாலதியின் குடும்ப வாழ்க்கையில் என்ன பிரச்சனை என்பதைக் கண்டறிந்து அதை நிவர்த்தி செய்ய வேண்டும், அவள் எங்கிருந்தாலும் சந்தோசமாக வாழ்வதற்குத் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும் என்றெல்லாம் எண்ணிக் கொண்டு அவளைத் தொடர்ந்து அவனும் கொல்லைப்புறம் சென்றான். கிணற்றடியில் நின்ற தாயாரிடம் மாலதி எதையோ சொல்லி விம்மி விம்மி அழும் சத்தம் கேட்டு திகைப்படைந்தவனாய் அங்கேயே நின்றுவிட்டான்.
மாலதி ஏன் அழுகிறாள் என்று கேட்க நினைத்தவன் பெண்களுடைய தனிமையில் தான் குறுக்கிடக்கூடாது என்ற எண்ணத்தோடு, கேட்கவந்ததைக் கேட்காமல் தனது அறைக்குத் திரும்பிச் சென்றான்.
மாலதி ஏன் அழுதாள்? அம்மாவிடம் சொல்லி அழுமளவிற்கு அவளுக்கு என்ன குறை? ஏற்கனவே நொந்து போயிருக்கும் அவளது மனதை தேவையில்லாமல் மேலும் நோகடித்து விட்டேனோ என்று தனக்குத் தானே கவலைப்பட்டான் கண்ணன்.
என்ன நடந்தது, ஏன் அழுதாள் என்பதை எப்டியாவது அறிந்துவிட வேண்டும் என்ற ஆவலில் இரவு உணவு முடிந்ததும், தேவகியிடம் மாலதியைப் பற்றி மெல்ல விசாரித்தான்.
'மாலதி பின்கட்டில் அழுதது உனக்கு எப்படித் தெரியும்..?" சந்தேகத்தோடு கண்ணனிடம் கேட்டாள் தேவகி.
'நான் அவளைத் தொடர்ந்து அங்கே வந்தேன். அவள் அழுதசத்தம் கேட்டதால் அங்கேயே நின்றுவிட்டேன்." என்றான்.
'அப்போ அவள் சொன்னதெல்லாம் நீயும் கேட்டுக் கொண்டிருந்தியா..?"
அவன் ஆர்வமிகுதியால் தலையசைத்தான்.
'அவள் எல்லாவற்றையும் இதுநாள்வரை பொறுத்துக் கொண்டுதான் இருந்தாள். ஆனால் ராஜன் உன்னைப் பற்றித் தேவையில்லாமல் தப்பாய் சொன்னபோதுதான் அவளுக்குக் கோபம் பொத்திக் கொண்டு வந்தது." 
'என்னைப் பற்றி ராஜன் தப்பாய்ச் சொன்னானா..? என்ன சொன்னான்?"
'வேண்டாம், நான் சொல்லமாட்டேன். மாலதி இதைப்பற்றி யார்கிட்டையும் சொல்லவேண்டாம் என்று சொன்னாள்" என்றாள் தேவகி.
'பரவாயில்லை, சொல்லுங்கம்மா" என்று வற்புறுத்தினான் கண்ணன்.
‘சொன்னால் இப்ப தேவையில்லாமல் நீ கோபப்படுவாய்..?’
‘இல்லை, நான் கோபப்படமாட்டேன், சொல்லுங்கம்மா..!’
'நேற்று இங்கே வந்திட்டுப் போனாளே, பிரச்சனையே அதுதான்." என்றாள் தேவகி.
'ஏன்..?" கேள்விக் குறியோடு தாயைப்யைப் பார்த்தான் கண்ணன்.
'அங்கே போகவேண்டாம் என்று சொன்னேனே, ஏன்டி கள்ளக் காதலனைச் சந்திக்கப் போனியா..?" என்று கேட்டுத் திரும்பத் திரும்ப அடித்திருக்கிறான்.
தேவகி என்ன சொல்கிறாள் என்பது புரியாமல் கண்ணன் விழித்தான். அவள் சொன்னதில் இருந்து, அவனுக்கு ஏதோ புரிந்தும் புரியாதது போல இருந்தது.
'இவளும் ராஜனுடைய கொடுமை தாங்கமுடியாமல் ஆத்திரத்தில் ‘ஆமா’ என்று திருப்பிச் சத்தம் போட்டுக் கத்தியிருக்கிறாள். அந்த வார்த்தை ஒன்றே போதுமே அவனுக்கு! கோபாவேசம் கொண்டவன்போல அவளுடைய தலைமுடியைப் பிடித்து இழுத்து அடித்து, கையிலே இருந்த சிகரட்டால் அவளுக்குச் சூடு போட்டிருக்கிறான். முதலில் சொல்ல தயங்கினாலும், வற்புறுத்திக் கேட்கவே நடந்ததைச் சொல்லிச் சொல்லி அழுதாள். நெருப்புச் சுட்ட வலியையும் வெளியே சொல்லாமல், பாவம் அதைத் தாங்கிக் கொண்டு அவள் படும்பாடு! ஏன்தான் ஆண்டவன் இப்படி ஒரு வாழ்க்கை அவளுக்குக் கொடுத்தானோ."
ஆண்டவன், ஆண்டவன்.. ஏன்தான் எதற்கெடுத்தாலும் ஆண்டவன்மேல் பழியைப் போடுறீங்களோ தெரியாது, செய்யிறதெல்லாம் நீங்க, அப்புறம் பழி மட்டும் ஆண்டவன் மேல..? கண்ணன் தாயின்மேல் எரிந்து விழுந்தான். அவனுடைய கனவுக்கன்னியாக இருந்த மாலதிக்கு இப்படி ஒரு வாழ்க்கையா? ஆசையாசையாய் அவன் வளர்த்த செடியில் புத்தம்புதிதாய்ப் பூத்த மலரைப் பறித்து, கசக்கி அவன் முன்னால் யாரோ அலட்சியமாய் வீசி எறிந்து விட்டுப் போனது போன்றதோர் உணர்வு அவனுக்குள் ஏற்பட்டது.
மாலதிக்கு விருப்பமே இல்லாத இந்தத் திருமணத்தை கட்டாயப்படுத்திச் செய்து வைத்த மாலதியின் அப்பாவை நோவதா, இல்லை சமூகக்கட்டுப்பாடுகளை விதித்த இந்த சமுதாயத்தை நோவதா, அல்லது இந்தத் திருமணத்திற்கு வேறு வழியே இல்லாமல் தியாகம் செய்வதாக நினைத்துச் சம்மதம் சொன்ன மாலதியை நோவதா? யார்மீது பழிபோடுவது என்று தெரியாமல் அவனது மனசு நெருப்பாய் வெந்தது.
காலம் மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது. கண்ணனோ பாடத்தில் அதிக கவனம் செலுத்த முடியாமல் தேவையில்லாமல் ;கவலைப்பட்டுக் கொண்டிருந்தான். பல்கலைக்கழகத்தில் விடுமுறை விட்டபடியால் அவன் மீண்டும் வீட்டிற்கு வந்திருந்தான். மாலதியின் எதிர்காலம் பாழாய்ப் போய்விட்டதில் இவன் உடைந்து போயிருந்தான். ஏனோ தெரியவில்லை, இவற்றை எல்லாம்விட ஏதோ புரியாத காரணத்தினால் மாலதியின் கணவன் ராஜனின் மீது முதன்முதலாக கண்ணனுக்கு வெறுப்பு வந்தது. அந்த வெறுப்பே நாளடைவில் அவனைப் பழி வாங்கும் உணர்வாய் அவனுக்குள் உருவெடுத்தது.
விடுமுறையில் வந்திருந்த கண்ணன் ஊர் உலாத்துவதிலும், கிரிக்கெட் விளையாடுவதிலும் தனது நேரத்தை நண்பர்களுடன் செலவிட்டான். ஒருநாள் வீதியில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது ராஜன் ஸ்கூட்டரில் அவர்களைக் கடந்து சென்றபோது, ஏதோ பேச்சு வாக்கில் சுற்றவர நின்ற நண்பர்கள் ராஜனைப் பற்றித் தப்பான கருத்துக்களையே சொன்னார்கள். அவனைப்பற்றி அங்கிருந்த ஒருவருக்குமே நல்ல அபிப்பிராயம் இருக்கவில்லை. ஏற்கனவே ராஜன்மீது கண்ணனுக்கும் வெறுப்பு ஏற்பட்டு இருந்தது.
'கட்டின மனைவியை சரியாக வைத்துக் காப்பாற்றத் தெரியாத இவங்களுக்கெல்லாம் ஏன் தான் ஒரு கலியாணமோ?" என்று முணுமுணுத்தான் கண்ணன்.
'ஏன் அப்படிச் சொல்கிறாய் கண்ணா..?" என்று அருகே நின்ற காந்தன் கேட்டான்.
'அவன் நல்லவன் இல்லை!" என்றான் கண்ணன்.
'ஏன்..?" காந்தன் ஆர்வத்தோடு கேட்டான்.
‘மாலதி கொஞ்சங்கூட மகிழ்ச்சியாய் இல்லை!’
‘புருஷன் குடிகாரன் என்பதாலா?’
'இருக்கலாம், அவளைப்போட்டு தினமும் இவன் சித்திரவதை செய்யிறான்" என்றான் கண்ணன்.
'தினமும் குடிச்சிட்டு மாலதியை அடிக்கிறானா..?" நம்பமுடியாதவனாய் கேட்டான் காந்தன்.
'பச்சைக் கிளியை வளர்த்துப் பூனையின் கையில் பத்திரமாய்க் கொடுத்த கதை போலத்தான் இங்கேயும் நடந்திருக்கு!"
'ஏன் அவள்மேல இவன் சந்தேகப்படுகிறானா..?"
'ஆமா, தினமும் சந்தேகப்படுகிறான். மாலதியின் அழகே அவளுக்கு நிரந்தர எதிரியாய்ப் போய் விட்டது!"
'அந்த அளவிற்குக் கேவலமாக மாறிவிட்டானா ராஜன்..?"
'சொன்னால் நம்பமாட்டாய், அதைவிடக் கேவலமாய்ப் போய்விட்டான்"
'ஏன்..? என்ன நடந்தது..?" கண்ணன் என்ன சொல்லப்போகிறான் என்று சுற்றிவர நின்ற நண்பர்கள் ஆர்வத்தோடு கண்ணனைப் பார்த்தார்கள்.


அத்தியாயம் - 11


ரு பெண்ணுடைய அந்தரங்கத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் கண்ணனுக்குச் சம்மதம் இருக்கவில்லை. ஆனால் மாலதியை அந்த அசிங்கத்தில் இருந்து வெளியே மீட்டு வரவேண்டுமானால் அவனுக்கு இந்த நண்பர்களின் உதவி கட்டாயம் தேவை என்பதை உணர்ந்து கொண்டான்.
மாலதிக்கு என்ன நடந்தது என்று நண்பர்கள் ஆர்வத்தோடு கேட்டபோது, ஒரு கணம் தயங்கிவிட்டுச் சொன்னான்.
'இந்த அழகுதானேடி மற்ற ஆம்பிளைங்களைத் திரும்பிப் பார்க்க வைக்கிறது என்று சொல்லி சிகரட்டாலே சுட்டிருக்கிறான். உடல் ரீதியாக மட்டுமல்ல உளரீதியாகவும் அவளைப் போட்டு தினமும் சித்திரவதை செய்கிறான். பாவம் ரொம்ப நாளாய் மாலதி இதை எல்லாம் பொறுத்திட்டே இருந்திருக்கிறாள். வாய்விட்டு தன்னுடைய சோகக் கதையைச் சொல்ல கமலினியும் இங்கே இல்லை. ஒரு நாள் பொறுக்க முடியாமல் எங்க வீட்டிற்கு வந்து இதை எல்லாம் அம்மாவிடம் சொல்லி அழுதாள்."
காந்தன் சகோதரிகளோடு கூடப்பிறந்ததால், மாலதி படும் கஷ்டத்தைப்பற்றிக் கண்ணன் இப்படிச் சொன்னதும் காந்தனுக்கு ராஜன்மீது கோபம் பொத்திக் கொண்டு வந்தது. தனது கோபத்தை வார்த்தைகளில் காட்டினான்.
'இவங்களைச் சும்மா விடக்கூடாது மச்சி, எப்பவாவது இவன் எங்க கையில மாட்டினால் மவனே கையைக், காலை உடைச்சு விடணும். கொஞ்ச நாளைக்கெண்டாலும் படுக்கையில கிடந்து கஸ்டப்பட்டால்தான் இவங்களுக்குப் புத்திவரும்." என்றான் காந்தன்.
சகோதரிகளோடு கூடப்பிறந்ததாலோ என்னவோ, ஆத்திரம் தாங்க முடியாமல் வார்த்தைகளில் கொட்டினான். சொல்லும்போதே அவனது வார்த்தைகளில் தீவிரம் இருந்ததைக் கண்ணன் கவனித்தான். அநீதியைக் கண்டால் இளரத்தம் இப்படித் துடிக்கத்தான் செய்யும். சிலர் வெறும் வாய்வார்த்தையோடு விட்டுவிடுவார்கள், வேறுசிலர் சொன்னதைச் செய்கையிலும் காட்டுவார்கள்.
'இவன் சொல்லுவதைப் பார்த்தால் செய்தாலும் செய்திடுவான் போல இருக்கு." என்று சிவம், காந்தனைக்  கேலிசெய்தான்.
முன்பொருநாள் ராஜன் காந்தனின் தங்கையை பாடசாலை வாசலில் வைத்துக் கேலி செய்ததால், சின்ன வயதில் இருந்தே ராஜன் மீது காந்தனுக்குத் தீராதபகை இருந்தது. ராஜன் கொஞ்சம் பணவசதி படைத்தவனாகையால் சிறுவர்களாக இருந்தபோது அவனை இவர்களால் ஒன்றும் செய்ய முடியாமல் இருந்தது. ஆனாலும் மனசுக்குள் ராஜனைப்பற்றிய வெறுப்பு அரித்துக் கொண்டே இருந்தது.
எல்லாக் காரியங்களுக்கும் ராஜனின் தாயே ராஜனுக்கத் துணையிருப்பாள். சில நாட்களாக ராஜனின் தாய் சுகவீனமுற்றிருந்தாள். ஓடியாடித் திரிந்த தாயார் திடீரெனப் படுக்கையில் விழுந்த போது, அதன் தாக்கம் ராஜனை நிறையவே பாதித்திருந்தது. அதனல் தனிமைப் படுத்தப்பட்ட அவன் மேலும் மேலும் கட்டுப்பாடற்றுக் குடிக்க ஆரம்பித்தான். மாலையானதும் ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு மதுத்சாலை நோக்கிச் செல்வதும், பின் நேரம் கழித்து நடுநிசியில் வீடு திரும்புவதும் அவனது தினசரி வேலையாய்ப் போய்விட்டது.
அன்று காலையில் இருந்தே மழை சிணுங்கிக் கொண்டிருந்தது. காலையில் புறப்பட்டுச் சென்ற ராஜன் இரவு நெடுநேரமாகியும் வீட்டிற்கு வரவில்லையே என்று தேடிச்சென்ற சுந்தரம் மாஸ்டர், ரோட்டின் எதிர்ப்பக்கம் அலங்கோலமாய் மல்லாந்தபடி விழுந்து கிடந்த அவனைக் கண்டார். சட்டைப் பித்தான்கள் கழன்று, பான்ஸ் சேற்றில் தோய்ந்து அழுக்காகியிருந்தது. ஸ்கூட்டர் சற்றுத் தள்ளி சுவரோடு சரிந்து கிடந்தது. குடித்து விட்டு கண்மண் தெரியாமல் ஸ்கூட்டரில் வந்திருக்கலாம். மழை இருட்டில் பாதை தெரியாமல் எதன்மீதோ மோதியிருக்கிறான் என்றே நினைத்தார். குடி குடியைக் கெடுக்கும் என்று முணுமுணுத்தபடி, அருகே சென்று அவனைப் பிரட்டிப் பார்த்தார். பிடரியில் அடிபட்டு ரத்தம் கசிந்து மழை நீரோடு கலந்திருந்தது. மார்பு ஏறியிறங்க, மூச்சு மெதுவாக வந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் பதறிப் போனார் சுந்தரம் மாஸ்டர். இப்படிச் சில தடவைகள் அவன் குடித்துவிட்டு தெருவில் விழுந்து கிடந்தபோதெல்லாம் தேடி வந்து அவனைத் தூக்கி வீடு கொண்டு போய்ச் சேர்த்திருக்கிறார். அப்போதெல்லாம் சிறிய சிராய்ப்புக் காயங்களோடு அவன் தப்பியிருக்கிறான். ஆனால் இப்படி ரத்தம் வருமளவிற்கு ஒரு போதும் அவன் அடிபட்டதில்லை.
அக்கம் பக்கத்தவரின் உதவியோடு அவசரமாக ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். இரத்தம் நிறையவே சேதமாகியிருந்தது. மயக்க நிலையில் மட்டுமல்ல, நிறையவே குடித்திருந்ததால் உடனடியாகச் சத்திர சிகிட்சை செய்யமுடியவில்லை என்று டாக்டர் கைவிரித்துவிட்டார்.
மாற்று மருந்துகள் கொடுத்து அவனைக் காப்பாற்றவே முடிந்த அளவு முயன்றார்கள். இரவு முழுவதும் மயக்க நிலையிலேயே இருந்தவன் மறுநாள் காலையில் மயக்கம் தெளியாமலே இறந்துவிட்டான். ராஜனின் மரணச் செய்தி வந்ததும் சுந்தரம் மாஸ்டர் ஒரேயடியாய் இடிந்து போய்விட்டார். எந்த மதுபானத்திற்கு ராஜன் அடிமையானானோ அதுவே அவனுக்கு ஆபத்தைத் தேடித்தரும் என்று சுந்தரம் மாஸ்டர் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை.
 ராஜனின் திடீர் மரணச்செய்தி மாலதிக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், அவளது மனநிலை எந்த அளவிற்குப் பாதிக்கப் பட்டிருக்கிறது என்பதை எந்தவிதத்திலும் சுந்தரம் மாஸ்டரால் அறிந்து கொள்ள முடியவில்லை. தலையில் அடிபட்டிருந்ததால், சாதாரண விசாரணைகள் எல்லாம் முடித்து ராஜனின் உடலை வீட்டிற்குக் கொண்டு வந்து விறாந்தையில் வாங்குபோட்டு வெள்ளைத் துணிவிரித்து, பெட்டியில் கிடத்தியிருந்தார்கள். தலைமாட்டில் குத்துவிளக்கு ஒன்று எரிந்து கொண்டிருக்க, ஊதுபத்தி வாசம் வீடெல்லாம் சுற்றி வந்து கொண்டிருந்தது. ராஜனின் கழுத்தில் சிகப்பும் வெள்ளையும் கலந்த மாலை ஒன்று போட்டிருந்தார்கள். அக்கம் பக்கம், உறவுகள் எல்லாம் சுற்றிவர உட்கார்ந்திருக்க, வேறு சில பெண்களோடு, மாலதியும் கால்மாட்டில் அமர்ந்திருந்தாள். ராஜனின் வயதுபோன தூரத்து உறவுக்காரி ஒருத்தி ராஜனின் தாயைக் கட்டிப்பிடித்து, தலையிலும், மார்பிலும் அடித்தடித்து ஒப்பாரி சொல்லிக் கொண்டிருந்தாள். என்ன சொல்லி ஒப்பாரி வைக்கிறாள் என்று ஒருவருக்குமே புரியவில்லை. வீட்டிற்கு விளக்கேற்ற வந்தவள் விளக்கையே அணைத்து விட்டாளே என்றுகூட அவள் புறணி சொல்லியிருக்கலாம்.
ஏனோ மாலதிக்கு அழவேண்டும்போல இருக்கவில்லை, ஆனாலும் மற்றவர்கள் அழும்போது சில சமயங்களில் அவளை அறியாமலே அவளுக்கும் கண்ணீர் வந்தது. கன்னத்தில் வழிந்த கண்ணீரை அழுத்தித் துடைத்தபோது கன்னம் வலித்தது. ஸ்கூட்டரைத் துடைத்து வைக்கவில்லை என்று நேற்றுக் காலை இதே இடத்தில் வைத்துத்தான் கன்னத்தில் பளார் என்று அவன் அறைந்த ஞாபகம் சட்டென்று வந்தது. பிள்ளைகள் இல்லாததால் மாமனார் சுந்தரமே, மருமகனின் இறுதிக் கடன்களைச் செய்து முடிக்க வேண்டிய நிலையில் இருந்தார்.
சிலமாதங்கள் அவனோடு அவள் வாழ்ந்த வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்தது போல அன்று இரவு படுக்கையில் மாலதி தனித்துப்போயிருந்தாள். படுக்கையில் பலவந்தமின்றி, எந்த வகைச் சித்திரவதையும் இன்றி, சிகரட்புகையின் அருவருப்போ, மதுவாடையோ இல்லாமல் தனிமையில் நிம்மதியாகப் படுத்தாள் மாலதி. வாழ்க்கையே வெறிச்சோடிப் போனதுபோல வெறுமையான நெற்றியோடு இருந்த, சிரிப்பிழந்த மாலதியின் முகத்தைப் பார்க்கும் போதெல்லாம், தான் எடுத்திருந்த தப்பான முடிவினால் மகளின் வாழ்க்கை இப்படிப் பாழாய்ப் போய்விட்டதே என்று சுந்தரம் மாஸ்டர் மனதளவில் கூனிக் குறுகிப்போனார்.
இந்த சம்பவத்தின்பின், தான்விட்ட தவறை எப்படியாவது நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற ஒரே ஆதங்கத்தோடு நடமாடினார் சுந்தரம். அதனால், நடந்ததை எல்லாம் கனவுபோல நினைத்துக் கொள், முடிந்தால் எல்லாவற்றையும் மறந்திடு என்று மாலதிக்கு அடிக்கடி சொல்லிக் கொண்டே இருந்தார்.
ராஜனின் கையைக் காலை உடைக்கணும் என்று நண்பர்கள் சேர்ந்து வேடிக்கையாகச் சொன்னது இப்படி இவ்வளவு சீக்கிரம் நடக்கும் என்று கண்ணன் எதிர்பார்க்கவில்லை. சும்மா ஒரு தட்டுத் தட்டினால் படுக்கையில் கிடப்பான் என்று எதிர்பார்த்த அவர்களுக்கு அவன் மரணமடைந்து விட்டான் என்ற செய்தி நம்பமுடியாத அதிர்ச்சியாக இருந்தது. மாலதியின் கணவன் மரணமடைந்து விட்டான் என்ற செய்தியைக் கேட்டதும், அதிர்ச்சியடைந்த கண்ணனுக்கு அடுத்து என்ன செய்வது என்றே புரியவில்லை. நேற்றுத்தான் அவளின் திருமணம் நடந்ததுபோல எல்லா நினைவுகளும் மனக்கண்முன் வந்து போயின.
மாலதி விதவையாகி விட்டாளா? பூவும் பொட்டும் இழந்து விட்டாளா? வெள்ளைச் சேலைக்குள் முடங்கிவிடுவாளா? விதவைக் கோலத்தில் மாலதியை இம்மியளவும் அவனால் கற்பனை செய்துகூடப் பார்க்கமுடியவில்லை. இரண்டு நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு, வாரஇறுதியில் கண்ணன் மாலதியைப் பார்க்க வந்தபோது, ராஜனின் தகப்பனின் படத்திற்குப் பக்கத்தில் ராஜனின் படமும் மாலை போட்டு மாட்டப்பட்டிருந்தது. ஊதுபத்தி ஒன்று அருகே புகைந்து கொண்டிருந்தது. சுந்தரம் மாஸ்டர்தான் கண்ணனைக் கண்டதும் வரவேற்று உட்காரச் சொன்னார். திடீரென முதுமை அடைந்தவர் போலச் சுந்தரம் மாஸ்டர் களையிழந்து காணப்பட்டார். கண்ணன் அவரிடம் துக்கம் விசாரித்தான்.
விதி யாரைவிட்டது, என்னோட பெண்ணுடைய தலைவிதி அவ்வளவுதான், சொந்த, பந்தம் பார்க்கப்போய் நான் தான் பெரிய தப்புப் பண்ணிவிட்டேன். அவள் வேண்டாம் என்று மறுத்தபோதுகூடப் பிடிவாதமாய் இருந்திட்டேன் என்று சொல்லி நடந்ததை நினைத்துக்  கொஞ்சநேரம் சிணுங்கினார்.
சிறிது நேரம் கழித்து சோகமே உருவான சித்திரப்பாவை போல, அழுது வீங்கிய முகத்தோடு மாலதி அங்கே வந்தாள்.
‘எப்படி கண்ணா இருக்கிறாய்?’ என்று உயிர்த் துடிப்பில்லாமல் கண்ணனை நலம் விசாரித்தாள்.
ஏதோ இருக்கேன் என்று கண்ணன் பதில் சொன்னான்.
மேற்கொண்டு என்ன பேசுவது என்று தெரியாமல் இருவரும் மௌனம் சாதித்தனர். உட்காரம்மா..! என்று சுந்தரம் மாஸ்டர் மாலதியைப் பார்த்துச் சொல்ல மாலதி கண்ணனுக்கு எதிரே இருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்தாள்.
ஏதாவது கேட்டால் மாலதி உடைந்து விடுவாளோ என்று கண்ணன் பயந்தான். அங்கே நிலவிய மௌனத்தை உடைப்பதற்கு யாராவது வாய்திறந்து பேசினால் சூழ்நிலையின் இறுக்கம் கொஞ்சமாவது குறையும் என்று சுந்தரம் நினைத்தார். என்ன பேசுவது என்று தெரியாமல் மாலதியோ குழம்பிப் போயிருந்தாள்.
சுந்தரம் மாஸ்டர் மாலதியைப் பார்த்து காபி கொண்டு வந்து கொடுக்கும்படி சைகை செய்யவே,
‘இரு கண்ணா காபி கொண்டு வர்றேன்’ என்று சொல்லிவிட்டு மாலதி எழுந்து சமையலறைக்குச் சென்றாள்.
நம்ம மாலதியின் பாடுதான் ரொம்ப கஸ்டமாய் இருக்கிறது, என்ன செய்யப் போகிறாளோ தெரியாது! என்று கண்ணனைப் பார்த்துக் கதை சொல்லத் தொடக்கினார் சுந்தரம் மாஸ்டர்.
ஒன்றும் புரியாமல் கண்ணன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தான்..
சிறிது நேர மௌனத்தைத் தொடர்ந்து,
தெரியும்தானே, மாலதி.. ..!  என்று வார்த்தைகளை இழுத்தார்.
தெரியுமா? எனக்கா? என்ன தெரியும்? ஆவர் எதைச் சொல்ல வருகிறார் என்று புரியாமல் கண்ணன் தவித்தான்.


அத்தியாயம் - 12


தெரியும்தானே, மாலதி..! என்று வார்த்தைகளை சுந்தரம் மாஸ்டர் இழுத்தபோதே நடக்கக்கூடாதது ஏதோ நடந்து விட்டது என்பதைக் கண்ணன் புரிந்து கொண்டான்.
மாலதிக்கு என்ன..? கண்ணன் பரபரப்பாக கேட்டான்.
‘ஒன்றுமில்லை, நேரகாலம் தெரியாமல் இந்த நேரத்தில.. இப்படியாப் போச்சு..!’
‘என்ன எண்டு சொல்லுங்கோவன்?’ கண்ணன் அவசரப்படுத்தினான்.
‘என்னெண்டு சொல்ல, அவள் இப்ப…!’
‘இப்ப என்ன..?’ கண்ணன் அவசரப்பட்டான்.
‘தாயாகப் போகிறாள்..!’
பெரியதொரு குண்டைத் தூக்கித் தலையிலே போட்டதுபோலக் கண்ணன் அதிர்ந்தான்.
மாலதி தாயாகப் போகிறாளா..?
‘என்ன சொன்னீங்க..?’ என்று நம்பமுடியாமல் திரும்பவும் சுந்தரம் மாஸ்டரிடம் கேட்டவனின் உட்சாகம் வடிந்து போயிருந்தது.
மாலதி காபி கொண்டு வந்தபோது கண்ணன் நம்பமுடியாமல் அவளைத் தலையிலிருந்து கால்வரை அதிசயமாய்ப் பார்த்தான்.
அவன் அப்படிப் பார்த்ததும், மாலதிக்கு என்னவோ போல இருந்தது. அவன் பார்க்கிறான் என்று தெரிந்தாலும் அதை உடனே காட்டிக் கொள்ளாமல் காபியை அவனுக்குப் பரிமாறிவிட்டு எதிரே இருந்த ஸோபாவில் அமர்ந்தாள். சிரிப்பிழந்த அவளது முகத்தை நேருக்குநேர் பார்க்கவே கண்ணனால் முடியாமலிருந்தது.
'என்ன மாலதி அப்பா சொல்வதெல்லாம் உண்மையா..?" என்று எங்கேயோ பார்வையைச் செலுத்தியபடி கேட்டான்.
காபி போடச்சென்ற அந்த சொற்ப நேரத்தில் அப்பா என்ன சொல்லியிருப்பார் என்பது அவளுக்குப் புரிந்து போயிற்று. ஆனாலும் அதை உறுதி செய்ய,
'அப்பா சொன்னாரா.. என்ன..?" என்று அவனிடம் கேட்டாள்.
'உனக்கு இது நல்ல செய்தியா, இல்லையா என்று எனக்குத் தெரியாது. இந்த நிலமை உனக்கு வந்திருக்கவும் கூடாது, நீ தாயாகப் போகிறாயாமே, உண்மையா..?" என்று நேரடியாகவே கேட்டான் கண்ணன்.
மாலதி ஒன்றுமே சொல்லவில்லை. அவளது முகபாவனையில் இருந்து அவளது எந்த உணர்வையும் அவனால் ஊகிக்க முடியவில்லை.
இதை நல்ல செய்தி என்று எப்படி அவளால் ஏற்றுக் கொள்ள முடியும்? தாய்மை என்பது ஒரு தவம்தான், ஆனால் இப்படி ஒரு தாய்மையா?
அவளின் மனது சம்மதிக்காமல், கொஞ்சம்கூட விருப்பமின்றிக் கட்டாயத்தின் சாட்சியாய், பலவந்தமாக அவளுக்குக் கிடைத்த தாய்மை இது. உடம்பு ஏற்றாலும், மனசு ஏற்க மறுத்தது. வெறுப்பை வெளிக்காட்ட வார்த்தைகள் கட்டாயம் தேவை என்றில்லை என்பதால், உதட்டைக் கடித்துக் கொண்டு மௌனமாய் தலையை மட்டும் மேலும்கீழும் மெல்ல அசைத்தாள்.
யாரோ விளையாடிய சதுரங்கத்தில் தான் பலியாடாய்ப் போய்விட்டோமே என்ற இயலாமையால், முடிந்தவரை கண்ணனின் பார்வையைத் தவிர்க்கவே முற்பட்டாள்.
அவளது தலை அசைவில் இருந்து, தன்னையே இழந்து வேண்டாத இந்தத் தாய்மையை வாங்கி இருக்கிறாள் என்பதைக் கண்ணன் புரிந்து கொண்டான்.
தலை குனிந்திருந்த அவளை அவன் நிமிர்ந்து பார்த்தான். அவளது கண்கள் கலங்கி விழியோரம் நனைந்திருந்தது. எதுவும் பேசத் தோன்றாமல் சிறிது நேரம் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.
நடந்தது எல்லாவற்றையும் மறந்திடத்தான் மாலதியும் முயற்ச்சி செய்தாள். ஆனால் அன்று காலையில் எழுந்திருந்தபோது தலை கனத்து, உடம்பு அசதியாக இருந்ததை மாலதி உணர்ந்தாள். முகம் கழுவப் போனவள் வயிற்றைக் குமட்டிக் கொண்டு வரவே ஓவென்று சத்தம் போட்டு வாந்தி எடுத்தாள். வாந்தி எடுக்கும் சத்தம் கேட்டு எட்டிப் பார்த்த சுந்தரம் மாஸ்டர் திகைத்துப் போய் அப்படியே நின்றுவிட்டார். சொற்பகால நரகவாழ்க்கைதான் என்றாலும், தாலி கட்டிய கணவன் அவன்தான் என்பதை காலமெல்லாம் அவள் மறக்காமலிருக்க ராஜன், அவளிடம் ஒரு சின்னத்தை விட்டுச் சென்றிருக்கிறான் என்பதை அவள் எடுத்த வாந்தி நினைவுபடுத்தியது.
கணவனை இழந்து தனித்துப்போய் தவித்துக் கொண்டிருக்கும் மாலதியின் வாழ்க்கை முழுமை பெறாமல் போய்விட்டதை நினைத்து கண்ணன் வேதனைப்பட்டான். இப்படியான ஒரு சூழ்நிலையில் இவள் தாய்மை அடையவேண்டுமா? இது அவசியமா?" என்று எண்ணியவன், இதைத் தடுத்து நிறுத்த ஏதாவது முயற்சி செய்ய முற்பட்டால் மாலதி அதற்கு இணங்குவாளா என்று நினைத்துப் பார்த்தான்.
அவனது மனநிலையைப் படித்துப் பார்த்தது போலவே, சுந்தரம் மாஸ்டரின் மனநிலையும் இருந்தது.
'சின்ன வயசு மட்டுமல்ல, தாலியையும் இழந்திட்டு வெறுமனே நிற்கும் இவளுக்கு இப்படி ஒரு வேதனையான வாழ்க்கை வேண்டுமா? அவளுடைய எதிர்காலம் கருதி வேண்டாத கருவை அழித்தால் என்ன என்றுகூட சுந்தரம் மாஸ்டரும் நினைத்தார்.
ஆனாலும் தனது அக்காவிற்குப் பயந்து, அபார்சன் பண்ணிக்கிறது இலகுவில் நடக்கக்கூடிய காரியமா என்ற எண்ணத்தில் அதைபற்றி யாரிடமும் வாய் திறந்தே சொல்லவில்லை.
இவர்கள் எல்லோரின் மனநிலையையும் படம் பிடித்துப் பார்த்து விட்டு வந்தது போல அத்தை திடீரென உள்ளே வந்தாள்.
'நான் என்ன செய்ய, என் மகன் என்னை விட்டுப் போயிட்ட துக்கம் எனக்குள் இருந்தாலும், எனக்கு ஒரு வாரிசை அவன் தந்துவிட்டுத் தான் போயிருக்கிறான். அதுதான் மனசுக்கு கொஞ்சம் என்றாலும் எனக்கு ஆறுதலாய் இருக்கு. இப்ப பேரனை வளர்த்தெடுக்கு மட்டுமாவது நான் உயிரைப் பிடித்துக் கொண்டிருக்க வேண்டும் என்றுதான் ஆண்டவனைத் தினமும் வேண்டுகிறேன். மாலதியம்மா, ஒரேயடியாய் இப்படி வேதனையில், அழுதுகொண்டே இருக்க வேண்டாம். உனக்கு வேண்டாம் என்று குழந்தையை மட்டும் அழிச்சிடாதேம்மா.. என்னுடைய பேரனை கவனமாய் பெற்று என்கிட்ட கொடுத்திடம்மா!" என்றாள் அத்தை.
மாலதி அங்கே எப்படிப்பட்ட மனநிலையில் இருக்கிறாள் என்பது பற்றி யாருமே கவலைப் படவில்லை. தாலி அறுத்தவள் தானே என்பதால் எல்லோரும் தங்கள், தங்கள் தேவைக்கு ஏற்ப, எடுபிடி போல அவளை ஆட்டிப்படைப்பதில் கவனமாக இருந்தார்கள். பெண்ணாய்ப் பிறந்ததால் எதுவும் தன் விருப்பத்திற்குச் செய்ய முடியாதவளாய், சமுதாயத்தின் விருப்பு வெறுப்புகளுக்கு முகம் கொடுக்க வேண்டியவளாய், அவர்களால் மாலதி மாற்றப்பட்டிருந்தாள்.
மாலதிமேல் இரக்கம் கொண்ட கண்ணன் விடுமுறையில் வரும் போதெல்லாம் அங்கே சென்று, அவளுக்கு வேண்டிய முக்கியமான உதவிகளைச் செய்து கொடுத்துக் கொண்டேயிருந்தான்.
திடீரென ஒருநாள் வீட்டிற்கு வந்து மாலதி கிளம்பு என்றான்.
‘எங்கே..?’ என்றாள் மாலதி ஒன்றும் புரியாமல்.
‘செக்கப்புக்கு உன்னைக் கூட்டிக் கொண்டு வருவதாக டாக்டரிடம் சொல்லி இருக்கிறேன’ கிளம்பு என்றான்.
‘கர்ப்பம் என்றால் இப்படித்தான் சில பெண்களுக்கு அடிக்கடி வாந்தி வரும். எல்லாம் சாதாரணமாக இருக்கு, பயப்படத் தேவையில்லை, இரண்டு நாள் ஓய்வு எடுத்தால் எல்லாம் சரியாயிடும்’ என்று சொல்லி டாக்டர் அவளுக்குத் தேவையான வைட்டமின் மாத்திரைகளைக் கொடுத்து அவளை அனுப்பிவிட்டார்.
டாக்டர் குறிப்பிட்ட தினத்திற்கு இரண்டு நாட்களின் முன்பே மாலதிக்கு பிரசவ வலி ஏற்படவே மாஸ்டரும், அத்தையும் தாமதிக்காமல் வண்டி ஒன்றைப்பிடித்து கொண்டு அருகே உள்ள மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆண் வாரிசு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த அத்தைக்கு பெண் குழந்தை பிறந்தது ஏமாற்றத்தைக் கொடுத்தது. மகனைப் போலாவது குழந்தை இருக்கும் என்று நினைத்தாள், அதிலும் அவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. குழந்தையோ நல்ல நிறமாய் அப்படியே மாலதியை உரித்து வைத்துப் பிறந்திருந்தது.
ஆஸ்பத்திரியில் மாலதியின் கையிலே இருந்த குழந்தையை கண்ணன் ஆவலோடு கைநீட்டி வாங்கினான். தாய்மைக் கோலத்தில் ஒருக்களித்துப் படுத்திருந்த மாலதியைப் பார்த்ததும், கண்ணனுக்கு அவள்மேல் இருந்த விருப்பம் இன்னும் கூடிக்கொண்டே போனது.
கையிலே ஏந்திய குழந்தையின் முகத்தைப் பார்த்ததும் அவனது முகம் பூவாய் மலர, நம்பமுடியாமல் ஆச்சரியத்தில் கண்கள் விரிந்தன. மாலதி கட்டிலில் சரிந்து படுத்திருந்தபடியே கண்ணனின் முகமாற்றத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
'என்ன கண்ணா, குழந்தையை அப்படி ஆச்சரியமாய்ப் பார்க்கிறாய்..?"
'நீதான், நீயேதான் மாலதி.. அப்படியே உன்னை உரிச்சு வைத்துப் பிறந்திருக்கிறாள். மாலதிக்குட்டி.." என்று குழந்தையை ஆசையோடு அணைத்து கன்னத்தில் நோகாமல் மெதுவாய் ஒரு ஆழ்ந்த முத்தம் கொடுத்தான்.
தாய்மையின் பூரிப்பில் இருந்த மாலதிக்கு, உடம்பெல்லாம் புல்லரித்தது.
அன்றொருநாள் குட்டிக்கண்ணன் தனது பிறந்த தினத்திலன்று மிகவும் வெட்கப்பட்டு அவளுக்குக் கொடுத்த அந்த முத்தம் சட்டென்று ஞாபகம் வரவே, வேதனை கலந்த முகத்தில் ஒரு லேசானபுன்னகையைத் தவழவிட்டபடி, வாஞ்சையோடு கண்ணனைப் பார்த்தாள்.
சுகப்பிரவசமாகையால் டாக்டரின் அனுமதியோடு மூன்றாம் நாள் ஆஸ்பத்திரியில் இருந்து மாலதியும் குழந்தையும் வீட்டிற்கு வந்திருந்தார்கள்.
கண்ணன் அவ்வப்போது மாலதியின் வீட்டிற்கு வந்து, தன்னால் முடிந்த அளவு அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்து கொடுத்துக் கொண்டே இருந்தான். உதவி செய்ய வருவதைவிட குழந்தையோடு விளையாடத்தான் அவன் அடிக்கடி அங்கே வந்தான். அதனால் அவனை அறியாமலே அப்படியே குழந்தையோடு ஐக்கியமாகிவிட்டான் என்றுதான் சொல்ல வேண்டும். தகப்பனை இழந்த குழந்தையிடம் கண்ணன் எவ்வளவு பாசமாய் இருக்கிறான் என்பதைப் பார்க்கும் போதெல்லாம் மாலதிக்கு கண்கள் கலங்கின.
நாவூறு பட்டதுபோல, ஏனோ திடீரென கண்ணனின் வருகை தடைப்பட்டது. கண்ணன் ஊரிலே இல்லையோ, அல்லது அவனுக்கு ஏதாவது சுகவீனமாய் இருக்குமோ என்றுதான் மாலதி முதலில் நினைத்தாள்.
ஒருநாள் மாலை முற்றத்தில் குழந்தையை வைத்துக் கொண்டு நின்றபோது தற்செயலாக கண்ணன் திரும்பிகூடப் பார்க்காமல் சயிக்கிளில் அவர்களின் வீட்டைக்கடந்து செல்வதை அவதானித்ததும் அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
கண்ணனா? ஏன் திரும்பிக்கூடப் பார்க்காமல் போகிறான்? அவனுக்கு என்ன கோபம்?  நான் அவன் மனது நோகும்படியாய் எதுவும் பேசவில்லையை!
கண்ணன் இங்கே வராமல் இருப்பதற்கு ஏதாவது காரணம் இருக்குமோ? மனசு சஞ்சலப்பட, உள்ளே ஓடிப் போனாள்.
'அப்பா..!"
'என்னம்மா..?"
'ஏனப்பா இப்போ கண்ணன் இங்கே வருவதில்லை..?"
கண்ணனின் மனம் நோகக்கூடியதாக ஏதோ நடந்திருக்கிறது என்பதை மட்டும் மாலதி ஊகித்தாள்.
சுந்தரம் மாஸ்டர் மனசுக்குள் எதையோ வைத்துக் கொண்டு சொல்ல முடியாமற் தயங்குவது அவளுக்குப் புரிந்தது.