Monday, February 21, 2011

இலக்கியப் பரிசு. - கரையைத் தேடும் கட்டுமரங்கள்

கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரன்

எழுதிய கடலோடிகளின் கதை சொல்லும் நாவலுக்கு - 


My Photo
K.S.Balachandran
 அமுதன் அடிகள் இலக்கியப் பரிசு.

குரு அரவிந்தன்.

ஆண்டுதோறும் பாகுபாடின்றி, தரமான இலக்கியப்படைப்புகளை தேர்ந்தெடுத்து, அவற்றின் படைப்பாளிகளுக்கு ‘அமுதன் அடிகள் வெள்ளிவிழா அறக்கட்டளை இலக்கியப்பரிசு” வழங்கி வரும் அமுதன் அடிகள் அறக்கட்டளை, முதன்முதலாக ஒரு இலங்கைப்படைப்பாளியின் நூலுக்கு இந்த விருதை வழங்கியுள்ளது. கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரன் எழுதிய ‘கரையைத் தேடும் கட்டுமரங்கள்” என்ற நாவலுக்கு 2009ம் ஆண்டுக்கான அமுதன் அடிகள் இலக்கியவிருது கிடைக்கிறது.

இம்மாதம் 26ந்திகதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு தஞ்சாவூரில் பெசன்ட் அரங்கில் நடைபெறும் விழாவில் வணிகவரித்துறை அமைச்சர் எஸ்.என்.எம். உபயதுல்லா அவர்களால் இவ்விருது வழங்கப்படுகின்றது.

இந்திய ரூபா 15,000 உள்ளிட்ட இந்த விருதை இதுவரை புகழ்பெற்ற எழுத்தாளர்கள் பலர் பெற்றிருக்கிறார்கள்.

தஞ்சாவூரில் நடைபெறும் “அமுதன் அடிகள் அறக்கட்டளை” இலக்கிய விருதுவிழாவில்,

2008 ம் ஆண்டுக்கான விருதை நாவலாசிரியர் சோ.தர்மன் அவர்களும்,
2009ம் ஆண்டுக்கான விருதை கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரனும்,
2010ம் ஆண்டுக்கான விருதை நாடகாசிரியர் முத்துவேலழகன்
அவர்களும் பெற்றுக் கொள்கிறார்கள்.

உலகளாவிய ரீதியில் இந்த நாவல் வாசகர்களை சென்றடைந்தால், சிறந்த படைப்புக்களை சீர்தூக்கிப்பார்தது, விருது வழங்கிக் கௌரவிக்கும் ஆய்வாளர்கள் கையில் இந்நூல்  சென்றடைய ஆவன செய்தால், நிச்சயம் இந்த நூல் சிறந்த படைப்பிலக்கிய நாவலுக்கான அங்கீகாரம் பெறும். என்று பி.எச். அப்துல் ஹமீட் ‘கரையைத் தேடும் கட்டுமரங்கள் - நாவலுக்கான முன்னுரையில் குறிப்பிட்டதையும் இங்கே நினைவுகூரலாம். தமிழ்கூறும் நல்லுலகெங்கும் அறிமுகமான ஒரு சிறந்த தமிழ் அறிவிப்பாளரின்  மேற்குறித்த  வார்த்தைகள் இப்போது நிஜமாகியிருக்கின்றன.

தினமும் வாழ்வுக்காக அலைகளோடு ஜீவமரணப்போராட்டம் நடத்தி மீளும் அல்லது தோற்றுப்போகும் ஒரு சமூகத்திடம் எனக்குள்ள நியாயமான மதிப்பும், இரக்கமும் தான் என்னை இந்த நாவலை எழுதத்தூண்டியிருக்கிறது என்று இந்நூல் ஆசிரியர் கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்கள் தனது உரையில் குறிப்பிடுகின்றார்.

தங்களைத் தாங்களே விமர்சகர்களாக ஆக்கிக் கொண்ட ஒருசில நவீன விமர்சகர்கள் ஈழத்து படைப்பிலக்கியத்தில் இந்த நாவலைச் சேர்த்துக் கொள்ளப் பின்நிற்பார்கள் என்பதில் எனக்குச் சந்தேகமேயில்லை. ஏனென்றால் ஏதாவது தகாத வார்த்தைப் பிரயோகங்களையோ, அல்லது பாலியல் உணர்வுகளைத் தூண்டிவிடக் கூடிய சம்பவங்களையோ ஆசிரியர் இந்த நாவலில் எந்த ஒரு இடத்திலும் வலிந்து புகுத்தவில்லை என்பதே அவர்களின் பெரிய குறையாக இருக்கும். ஆசிரியரின் முதல் நாவல் என்பதால் ஆசிரியர் இந்த சூட்சுமத்தை அறிந்திருக்கவில்லையோ, அல்லது மொழி நாகரிகம், பண்பாடு கருதி, சமுதாயம் சீரழிய எழுத்தாளன் காரணமாக இருக்கக்கூடாது என்ற தனது கொள்கை காரணமாக இதைப் புகுத்தவில்லையோ தெரியவில்லை. முப்பத்தைந்து, நாற்பது வருடங்களுக்கு முன் ஈழத்தமிழ் கடலோடிகளின் வாழ்க்கை எப்படி இருந்தது, அவர்கள் எங்கே, எப்படி வாழ்ந்தார்கள் என்பதை அறிந்து கொள்ள நீங்களும் விரும்பினால், இந்த அருமையான நாவலை ஒரு தடவையாவது வாசித்துப் பாருங்கள். நிச்சயமாக ஆவணப்படுத்தப்பட வேண்டிய நாவலிது.

ஈழத்து ஓவியர் ரமணி இந்த நாவலுக்கு அட்டைப்பட ஓவியம் வரைந்திருக்கிறார். பி. எச். அப்துல் ஹமீதின் முன்னுரையோடு, இந்த நாவலை வடலி பதிப்பகத்தினர் சிறப்பாக வடிவமைத்து பிரசுரித்திருக்கிறார்கள்.

No comments:

Post a Comment