Monday, February 7, 2011

Valentine - Nee En Kaathaliyaanal..! - நீ என் காதலியானால்....

நீ என் காதலியானால்....

குரு அரவிந்தன்


('மாட்டிக்கிட்டா எல்லோரும்  பொதுவாகச் சொல்லும் எக்ஸ்கியூஸ், அப்படித்தானே இதுவும்?" )

சீ.என் ரவரின் உச்சியில் நின்று ரொரன்ரோவின் மாலைநேர அழகை ரசித்துக் கொண்டிருந்தேன். சின்னஞ் சிறு வண்டுகளாக் கார்கள் நெடும்சாலையில் ஓடிக் கொண்டிருந்தன. மனிதர்கள் எறும்புகளாய் அங்குமிங்கும் திரிந்து கொண்டிருந்தனர்.

மாலை நேரத்து மஞ்சள் வெயிலில் தங்கப் பாளமாய் டவுன்ரவுன் கட்டிடங்கள் மின்னியபடி அழகு காட்டின. அந்தக் காட்சியைப் பார்த்து ரசித்தபடி ஃபோட்டோ எடுத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். எனது முகத்தையும் ஃபிரேமிற்குள் கொண்டு வரக்கூடிய மாதிரி ஓட்டோரைமரில் பழைய‌ கேமிராவை செற்பண்ணி ஸ்ராண்டில் வைத்துவிட்டு எதிரே ஃபோஸ் கொடுத்தபடி ஆயத்தமாக நின்றேன்.


5...4..3..2..1...0...கிளிக்!

கேமிராவின் ஃபிளாஸ்; மின்னலாய் முகத்திலடிக்க 'சீஸ்' சொன்னேன்.

அவள் 'சொறி' என்றாள்.

திகைத்துப் போய் அவளைப் பார்த்தேன்.

நான் ஓட்டோரைமரில் படம் எடுப்பதைக் கவனிக்காமல் தற்செயலாகக் குறுக்கே வந்துவிட்டாள். நிச்சயமாகக் கேமிராவை மறைத்திருப்பாள். என்முகத்திலே ஏமாற்றத்தை அவள் கவனித்திருக்க வேண்டும். மீண்டும் 'சொறி' சொன்னாள். நிஜமாகவே மன்னிப்புக் கேட்கும் பாவனை அவளது முகத்தில் தெரிந்தது.

நான் சமாளித்துக் கொண்டேன்.

'பரவாயில்லை...இதுதான் கடைசி நெகடிவ்.. வீணாய்ப் போயிடிச்சு...இனி எப்போ.....இப்படி ஒரு படம் எடுக்க சந்தர்ப்பம் கிடைக்குமோ தெரியாது!"
கையை விரித்துப் பெருமூச்சு விட்டேன்.

என்னுடைய ஏமாற்றம் அவளுக்குப் புரிந்திருக்க வேண்டும்!

'ஓ..! அந்தக் காலத்துப் பழைய கமெராவா?'

அவள் ஒரு நிமிடம் என்னை நன்றாகப் பார்த்தாள். மனசிலே என்ன கணக்குப் போட்டாளோ தெரியாது, முடிந்தால் எனக்கு ஏதாவது உதவி சொய்யலாம் என்று அவள் நினைத்திருக்கலாம்.

'இவ்யூ டோன்மைன்ட் என்னிடம் கேமரா இருக்கிறது. நான் உங்களை ஒரு ஃபோட்டோ எடுத்துத் தரட்டுமா?" என்றாள்.

நான் அப்படி ஒரு 'சொட்' எப்படியாவது எடுக்க வேண்டும் என்ற ஆவலில் இருந்தேன். இதை விட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைக்காது என்பதால் அவளது அன்பான, சினேகபூர்வமான வேண்டுதலைத் தயங்காது ஏற்றுக் கொண்டேன்.

அவள் தனது கேமராவைச் செற் பண்ணி 'ரெடி' சொன்னாள்.
நான் ஃபோஸ் கொடுத்தேன்.

'ஏன் முகத்தை இப்படி "ஊ...ம்" என்று வைச்சிருக்கிறீங்க...கொஞ்சம் சிரியுங்களேன்!" என்று வேடிக்கையாச் சொல்லி அவளும் சிரித்தாள்.

அந்தச் சிரிப்பில் முத்து உதிர்ந்தது.

சிரித்தேன்! அவளை மீண்டும் ஸ்காபரோசென்ரரில் சந்தித்த போது.

'ஐ யாம் சொறி ....உங்க ரெலிபோன் நம்பரைத் தொலைத்து விட்டேன். அதனாலே உங்களைக் கோல் பண்ண முடியவில்லை!" என்றாள்.

'மாட்டிக்கிட்டா எல்லோரும்  பொதுவாகச் சொல்லும் எக்ஸ்கியூஸ், அப்படித்தானே இதுவும்?" என்றேன்.

'இல்லை ரமேஷ் என்னை நம்புங்க! உண்மையாய்த் தான் சொல்லுறேன்" என்றாள் இயல்பாக.

ரமேஷ்! என்பெயரை ஞாபகம் வைத்திருக்கிறாளே. எனக்கு வியப்பாகவும் அதே சமயம் மனதிற்கு சந்தோஷமாகவும் இருந்தது.
'ரெலிபோன் டிரக்ரியில் கூடத் தேடிப்பார்த்தேன். ரமேஷ், ரமேஷ்கன்னா, ரமேஷ்குமார்.....பட்டியல் நீண்டு கொண்டே போச்சு....,ஆமாம் இதிலே நீங்க எந்த ரமேஷ்?"
'ரமேஷ்குமார்"
'ரமேஷ்குமார்" புருவம் உயர்த்தி அழுத்தம் கொடுத்துச் சொன்னாள்.
'சரி என்னுடைய பெயரைச் சொல்லீட்டிங்க, ஆனால் நீங்க உங்க பெயரைச் சொல்லலையே?"
'என்னுடைய பெயரா? நான் சொல்ல மாட்டேன்! விருப்பமென்றால் யாரையாவது கேட்டுத் தெரிந்து கொள்ளுங்க!"
சொல்லி விட்டு அவள் கலகலவென்று சிரித்தாள்.
எனக்கு அவளுடைய பெயரை எப்படியாவது உடனே தெரிந்து கொள்ள வேண்டும் போல ஆவலாய் இருந்தது.

'ஹலோ! என்ன நீங்க திடீரென மௌனமாயிட்டீங்க, ப்ளீஸ் உங்க பெயரைச் சொல்லுங்களேன்!"
'வித்யா" என்றாள்.
'வித்யா...ஸ்வீட் நேம்" என்றேன்.
'என்ன ஐஸ்ஸா?" என்றாள்.'
'இல்லை...  மனசிலே பட்டதைச் சொன்னேன். எனக்குப் பிடித்த பெயர்!"
'ஆமாம் நாளைக்கு இந்தப் பக்கம் வருவீங்களா?" அவள் பேச்சை மாற்றினாள்.
'ஏன்? என்ன விசேஷம்?"' என்று ஆவலாய்க் கேட்டேன்.
'இல்லை நீங்க வருவீங்கள் என்றால் நாளைக்கு உங்க ஃபோட்டோவைக் கொண்டு வந்து தர்றேன்"
'எத்தனை மணிக்கு வருவீங்க? உங்களை எங்கே சந்திக்க?"
'ஃபூட்கோட்லை ஆறு மணி போல சந்திப்போம்"" என்றாள்.
'கட்டாயம் வருவேன்...ஏன்னா.....உங்க ஃபோடடோ என்கிட்ட இருக்கே அதை உங்க கிட்ட தரணும்"
'என்னோட ஃபோட்டோவா? எப்படி உங்களிட்ட வந்தது?"

அவள் ஆச்சரியத்தில் உறைந்து போய் நிற்க நான் "பாய்" சொல்லிவிட்டுப் போனேன்.

மறுநாள் சரியாக ஆறு மணிக்குப் பத்து நிமிடம் இருக்கும் போதே  அங்கு வந்து அவளுக்காகக் காத்திருந்தேன்.
நண்பர்கள் "நல்ல செலக்ஷன்" என்று சொன்ன நேம்பிரான்ட் பான்ட்;டும் சேட்டும் போட்டிருந்தேன்.

ஒரு வித 'ஸ்மாட்நெஸ்' என்னில் புகுந்திருப்பது போன்ற உணர்வு எனக்குள் இருந்தது. முன் நெற்றியிலே வழிந்த முடியை அடிக்கடி விரல்களால் கோதிவிட்டுக் கொண்டேன். காதலியைச் சந்திக்கக் காத்திருப்பது போலக் கொஞ்சம் "நெர்வஸ்ஸாகவும்" இருந்தது. அவளை நேற்று சந்தித்த பின் ஏனோ என்னால் தூங்க முடியவில்லை. அவளது சிரித்த முகம்தான் அடிக்கடி நினைவில் வந்துபோனது.

ஃபூட்கோட்டில் உள்ள நாற்காலி ஒன்றில் உக்கார்ந்து கொண்டு அவளோடு பேசிய ஒவ்வோர் வார்த்தைகளையும் எனக்குள் அசை போட்டுப் பார்த்தேன்.

'சந்திப்போமா?"' என்று அவள் கேட்கவில்லை 'சந்திப்போம்!" என்றுதானே சொன்னாள். அந்த வார்த்தைகளில் ஒரு வித உரிமையோடு சேர்ந்த அன்புக் கட்டளை இருப்பதாக எனக்குள் நினைத்துக் கொண்டேன்.
"ஹாய்" என்றாள் வித்யா மிக அருகில்.

சிந்தனை கலைந்து நிமிர்ந்து பார்த்தேன். ஆரேஞ்ச்; நிற சுடிதாரில் வித்யா ரொம்ப அழகாயிருந்தாள். சினேகமாய் என்னைப் பார்த்துச் சிரித்தாள். இந்த நாட்டிலே சிரித்த முகத்தோடு பெண்களைக் காண்பதே அபூர்வம் என்று நினைத்துக் கொண்டிருந்த எனக்கு அந்தப் புன்னகை இன்பத் தென்றலாய் இருந்தது. எப்படித்தான் இவளால் இப்படி மலர்ந்த முகத்தோடு சிரித்துக் கொண்டிருக்க முடிகிறதோ?

'யூ லுக் நைஸ்"" என்று சொல்ல வேண்டுமென்று வாயெடுத்தேன், ஆனால் அவளுக்குப் பிடிக்குமோ என்னவோ என்பதால் மௌனமாயிருந்தேன்.
அவள் எதிரே உள்ள நாற்காலியில் உட்கார்ந்தாள்.
'ஆமா என்னோட ஃபோட்டோ என்று சொன்னீங்களே, அதைக் கொண்டு வந்தீங்களா?"
அவளது குரலில் ஆர்வமும் உடனே அதைப் பார்க்க வேண்டும் என்ற அவசரமும் தெரிந்தன.
"ஆமாம்" என்று சொல்லி ஃபோட்டோவையும் நெகடிவையும் அவளிடம் கொடுத்தேன்.

என்வலப்பில் இருந்து ஃபோட்டோவை வெளியே எடுத்துப் பார்த்தவள் நம்பமுடியாமல்,

"இது நானா? எப்படி? இது எப்படி வந்தது? என்றாள் ஆச்சரியமாய்.
அவள் முகம் நாணத்தால் மெல்லச் சிவக்க வார்த்தைகள் தடுமாறின.

எனது முகத்திற்கருகே அவளது முகம் ஃபிரேமிற்குள் அகப்பட்டிருந்தது. முத்தம் கொடுக்க எனக்கருகே அருகே வருவது போலக் குளோசப்பில் இருந்தது அந்தக் காட்சி. தற்செயலாக எடுக்கப்பட்ட படமென்றாலும் இயற்கையாக மிகவும் தெளிவாக இருந்தது.

நம்பமுடியாமல் அவள் படத்தையும் நெகடிவையும் திருப்பித் திருப்பிப் பார்த்தாள். இப்படி ஒரு காட்சியை அவள் எதிர்பார்த்து இருக்கவில்லை.
'தாங்க்யூ வெரிமச்... யூ ஆர் ஏ ஜென்ரில்மென்" என்னைப் பார்த்து வியப்புடன் சொன்னாள்.

'ஏன் அப்படிச் சொல்றீங்க?"" நான் புரியாமல் கேட்டேன்.
'இல்லை...! எந்த ஒரு ஆணும் இப்படி ஒரு படத்தைத் திருப்பித் தர நினைக்க மாட்டான். ஆனால் நீங்க படத்தை மட்டுமல்ல நெகடிவையும் திருப்பித் தந்திட்டிங்க. அதனாலேதான் அப்படிச் சொன்னேன்"
'ஓ! அதற்காகவா அப்படிச் சொன்னீங்க? நான் ஏன் இதை உங்களிடம் திருப்பித் தந்தேன் தெரியுமா' என்றேன்.
'தெரியாது" என்று அவள் தலையசைத்தாள்.
ஆனாலும் '"ஏன்?" என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இப்போ அவளது முகத்தில் தெரிந்தது.

'ஒரு பெண்ணோட விருப்பமில்லாமல் அவளோட ஃபோட்டோவை வைத்திருப்பதில் எனக்கு இஷ்டமில்லை. அதனாலேதான்.....!"" நான் வார்த்தைகளை முடிக்காமல் அவளைப் பார்த்தேன்.
"அதனாலே என்ன?""அவள் மிகுதியை அறிந்து கொள்ள அவசரப்பட்டாள். "உங்க பர்மிசனோட இந்தஃபோட்டோவை நான் வைத்திருக்கலாமா?""
மனம் திறந்து கேட்டேன்.

அவளது கண்களில் சட்டென்று ஒரு வித பயம் தெரிந்தது. என்ன பதில் சொல்வதென்று தெரியாமற் சிறிது நேரம் தடுமாறினாள்.
'அய்யய்யோ...... இந்த வம்பெல்லாம் நமக்கு வேணாமப்பா!""

ஏதோ புரிந்தது போல் முகமெல்லாம் குப்பென்று சிவக்க அவசரமாக மறுத்தாள்.

'ஏன் நான் கேட்டது தப்பா?"" என்றேன்.
'ம்ஹ_ம்"" என்று தலையாட்டினாள்.
ஆமென்கிறாளா? இல்லையென்கிறாளா? ஒன்றுமே விளங்காமல் நான் எனக்குள் தவித்தேன்.
'நான் போகணும்... வரட்டுமா?" அவசரமாகக் கதையை மாற்றியவள் போவதற்காக நாற்காலியை விட்டு எழுந்தாள்.

"என்ன அவசரம்... கொஞ்ச நேரம் இருங்களேன்! ஏதாவது சாப்பிடுறீங்களா?"
அவள் மறுக்க முடியாமல் மீண்டும் உட்கார்ந்து என்னைப் பார்த்தாள்.
"ஐஸ்கிறீம்" என்றேன்.

அவள் விழி உயர்த்தி என்னை ஆச்சரியமாய்ப் பார்த்தாள்.

"ஐஸ்கிறீம் எனக்குப் பிடிக்கும் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?"
"தெரியும்... உங்களுக்கு என்னென்ன பிடிக்குமென்று எனக்கு நல்லாத் தெரியும்!"" என்றேன்.
""அது எப்படி?"" என்றாள்.
"ஏன்னா உங்க மனசு.... என் கிட்ட...!"" வார்த்தைகளை முடிக்காமல் அவளை ஏக்கத்தோடு பார்த்தேன்.

"இருக்கு அப்பிடின்னு சொல்லப்போறீங்க! அப்படித்தானே? இப்படி எல்லாம் லொள்ளு விட்டிங்கன்னா நான் இப்பவே எழுந்து போயிடுவேன்"'
பொய்யாக் கோபம் காட்டினாள்.

"சரி நான் ஒன்றும் சொல்லலை! இருங்க நான் ஐஸ்கிறீம் வாங்கிட்டு வர்றேன். உங்களுக்கு எது பிடிக்கும் வனிலாவா? சொக்லற்ரா?"'
""சொக்லற் வித் நட்ஸ்""
'லோறாசீக்கோ' வரிசையில் ஐஸ்கிறீம் வாங்குவதற்காக நிற்கும் போது ஒரு பெண்ணுக்காக இப்படி வரிசையில் காத்திருக்கிறேனே,
 "நேற்றுவரை இல்லாத இந்த மாற்றம் என்னது" என்று நினைத்துப் பார்த்தேன்.

அவளுக்காகக் காத்திருப்பதிலும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்தது.

இரண்டு சொக்லற் வித் நட்ஸ் ஐஸ்கிறீம் வாங்கிக் கொண்டு வந்தேன்.
அவள் தலை குனிந்து ஏதோ எழுதிக் கொண்டிருந்தாள்.
'சாப்பிடுங்க" என்று சொல்லி ஒன்றை அவளிடம் நீட்டினேன்.
'தாங்க்யூ!" என்று சொல்லிவிட்டு ஐஸ்கிறீமை வாங்கி ரொம்ப சுவைத்துச் சாப்பிட்டாள்.

நான் என்னை மறந்து அவள் சாப்பிடுவதை ரசித்துப் பார்த்துக்  கொண்டிருந்தேன்.
'ஹலோ...! உங்களைத்தான்!' இடது கையை எனது முகத்திற்கு முன்னாள் அசைத்தாள்.

நான் கனவிலிருந்து கலைந்து அவளைப் பார்த்தேன்.
'உருகிடுச்சு"" என்றாள் சிரித்துக் கொண்டே.
'எ..ன்ன மனசா?'' என்றேன் பட்டென்று.
'இல்லை..ஐஸ்கிறீமைச் சொன்னேன்"" என்றாள்.
இப்போ அவள் எனது வார்த்தைகளில் கோபப்படவில்லை.

எதையுமே ஏற்றுக் கொள்ளக் கூடிய கலகலப்பான இயல்பான நிலையில் இருந்தாள்.

'வித்யா உங்களுக்கு லேட்டாகுதா?"" அவளைப் பார்த்துக் கேட்டேன்.
'பரவாயில்லை. நீங்க சாப்பிடுங்க, அதுவரை நான் காத்திருக்கிறேன்"".
'எது வரை?"' என்று கேட்க நினைத்த பொல்லாத மனதை அடக்கிக் கொண்டேன்.

நான் ஐஸ்கிறீமைச் சாப்பிட்டு முடிக்கும் வரையும் அவள் காத்திருந்தாள்.
'வீட்லே தேடுவாங்க நான் போகட்டா?"" விடை கேட்பது போல என்னைப் பார்த்தாள்.

'இன்னும் கொஞ்ச நேரம் இருங்களேன்"" என்று சொல்ல வேண்டும் போல இருந்தது.
ஆனாலும் 'சரி' என்று நான் தலை அசைத்தேன்.
நாற்காலியை விட்டு எழுந்தவள்,
'தாங்க்யூ ஃபோ.........."" என்று சொல்லி நிறுத்தினாள்.
'ஃபோ.......வட்?"" என்றேன் அவசரமாய்.

பிரிந்து போகுமுன் மனதுக்கு ஆறுதலாய் ஏதாவது நல்ல பதில் சொல்வாள் என்று எதிர் பார்த்தேன்.
'ஐஸ்கிறீம்" என்றாள் மொட்டையாக.
விடை பெற்றவள் ஏதோ நினைவிற்கு வந்தவளாய்,
'வந்த விஷயத்தையே மறந்திட்டேனே! உங்க ஃபோட்டோவைக் கொடுக்க மறந்திட்டேன்...இந்தாங்க உங்க ஃபோட்டோ!"

என் கையிலே கவரைக் கொடுத்து விட்டு அவள் மறைந்தாள்.
திடீரென இருட்டுக்குள் என்னைப் பிடித்து விட்டது போலவும், எதையோ இழந்து விட்டது போன்ற தனிமையையும் உணர்ந்தேன்.

ஒன்றுமே சொல்லாமல் அவள் எழுந்து போனதை என்னால் தாங்க முடிய வில்லை. அவளது மனதைக் கவரக்கூடிய பக்குவம் ஏன் என்னிடம் இல்லாமற் போயிற்று? என்னிடம் என்ன குறை? அழகில்லையா? ஆண்மை யில்லையா? படிப்பில்லையா? ஏன் இந்த ஏமாற்றம்?

என்னோட இந்த ஃபோட்டோவை அவள் கட்டாயம் பார்த்திருப்பாள்.
'இந்த முகத்திற்கு காதல் ஒரு கேடா?" என்று கூட நினைத்திருக்கலாம்.

அவள் எடுத்த ஃபோட்டோவில் நான் எப்படி இருக்கிறேன் என்று பார்க்கும் ஆவலில் கவரைப் பிரித்துப் பார்த்தேன்.

அங்கே எனக்கு ஆச்சரியம் காத்திருந்தது!

'எனது முகத்திற்கருகே அவளது முகம்!

எப்படி இந்தப் படம் திரும்பவும் என்னிடம்? தவறுதலாகப் படத்தை மாறிக் கொடுத்து விட்டாளோ?"

நம்பமுடியாமல் அந்தப் படத்தைத் திருப்பிப் பின் பக்கத்தைப் பார்த்தேன். முத்துமுத்தான கையெழுத்தில்,

'நிஜம் உனக்காகும் வரை இந்த நிழல் உனக்காக!'
-அன்புடன் வித்யா விஜயகுமார்.'

என்று அழகாக எழுதி அதில் தனது தொலைபேசி இலக்கத்தையும் குறிப்பிட்டிருந்தாள்.

மீண்டும் அந்தப் படத்தைத் திருப்பிப் பார்த்தேன். இப்போ அந்தப் படத்தில் புதிதாக ஏதோ ஒரு அர்த்தம் தெரிந்தது!

'நான் உனக்கே உனக்காய்' என்று
அவள் என் காதுக்குள் மெதுவாகச் சொல்வது போலிருந்தது!

No comments:

Post a Comment