Saturday, March 26, 2011

Writer Prapanchan - பிரபஞ்சன்

உதயன் விருது விருந்தினருடன் ஒரு நாள்.

குரு அரவிந்தன்


Devaraj-R.N.Logendralingam- Kathir Thuraisingam
writer Prapanchan-writer Kuru Aravinthan at Dinner.---------------------------------------------------------------------------------------------------
‘நாயின் மொழி அதன் வாயில் இல்லை வாலில் தான் இருக்கும்’ – எழுத்தாளர் பிரபஞ்சன்.

‘ஈழத்தமிழருக்குப் பிரச்சனை இருக்கிறது என்ற கருத்து கிளிநொச்சி வீழ்ந்ததும் மாறிவிட்டது’ – ஊடகவியலாளர் தேவராஜ்.
----------------------------------------------------------------------------------------------------
உதயன் விழாவிற்கான அழைப்பு வழமைபோல வந்திருந்தது. சென்ற ஞாயிற்றுக் கிழமை இந்தவிழா கனடா ஸ்காபரோவில் உள்ள பீற்றர் அன்ட் போல் பாங்குவிற் மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பாரதி கலைக் கோயில் மாணவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு இசை வழங்கியிருந்தனர். டாக்டர் கதிர் துரைசிங்கம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். உதயன் பிரதம ஆசிரியர் ஆர் என். லோகேந்திரலிங்கம் நன்றியுரை கூறினார். பல்துறை சார்ந்தவர்களும் இந்த விழாவில் கலந்து சிறப்பித்திருந்தனர். கடந்த வருடங்களைப்போலவே இந்த வருடமும் உதயன் வார இதழின் சார்பில் ஆறு துறைகளைச் சேர்ந்த ஏழு பெருமக்களுக்கு விருது வழங்கப்பட்டது.

உதயன் விருது விழா – 2011 ல் விருது பெற்றவர்களின் விபரம்:

உதயன் வேளிர் விருது – திரு. சுப்ரமணியம் இராசரத்தினம்
உதயன் கலை இலக்கிய மேன்மை விருது – திருமதி வசந்தா நடராசன்
உதயன் வணிகத் தொழிலதிபர் விருது – திரு. கேதா நடராசா
உதயன் வணிகத் தொழிலதிபர் விருது – திரு. சாந்தா சாந்தலிங்கம்
உதயன் சமூகநல்லுறவு விருது – ஆர்பீசி வங்கி கனடா
உதயன் சர்வதேச சிறப்பு விருது (தமிழ் நாடு) – எழுத்தாளர் பிரபஞ்சன்
உதயன் சர்வதேச சிறப்பு விருது (இலங்கை) – ஊடகவியலாளர் வடிவேல் தேவராஜ்

இவர்களில் ஊடகவியலாளர் வடிவேல் தேவராஜ் இலங்கையில் இருந்தும், எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் தமிழகத்தில் இருந்தும் வருகை தந்திருந்தனர். மறுநாள் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் சார்பில் வெளிநாட்டில் இருந்து இந்த மண்ணுக்கு வந்திருந்த எழுத்தாளர் பிரபஞ்சனையும், ஊடகவியலாளர் தேவராஜனையும் விருந்து கொடுத்துக் கௌரவிப்பதற்காக ஒன்று கூடியிருந்தோம்.

இலங்கையில் இருந்து வெளிவரும் வீரகேசரி நாட்செய்தி இதழ் ஆசிரியரான தேவராஜன் அவர்கள் இலங்கையின் இன்றைய அரசியல் நிலை பற்றி மிகவும் தெளிவாக உரையாற்றினார். ஆளுக்காள் ஒவ்வொரு கதைகள் சொல்லிக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் ஒரு தமிழ்ப் பத்திரிகை ஆசிரியர் என்ற வகையில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை எடுத்துச் சொன்னார். ஈழத்தமிழருக்குப் பிரச்சனை இருக்கிறது என்ற கருத்து கிளிநொச்சி வீழ்ந்ததும் மாறிவிட்டது. தமிழருக்கு எதுவுமே கொடுக்கத் தேவையில்லை என்ற நிலைப்பாடுதான் இலங்கையில் காணப்படுகின்றது என்று மேலும் குறிப்பிட்டார். அவரது உரையின் மூலம் பல உண்மைகளைச் சபையோரால் புரிந்து கொள்ள முடிந்தது. உரையைத் தொடர்ந்து கலந்துரையாடல் போன்ற நிலையில் அவரிடம் பல கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அவரும் அதற்குச் சளைக்காது பதில் சொன்னார். திரும்பத் திரும்ப புலம் பெயர்ந்த தமிழ் மக்களிடையே ஒற்றுமை வேண்டும் என்பதைத் தனது உரையில் வலியுறுத்தினார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பட்டத்தையும், மைசூர் பல்கலைக் கழகத்தில் எம்.ஏ. பட்டத்தையும் பெற்ற தேவராஜா அவர்கள் ஏற்கனவே இரண்டு தடவைகள் கனடாவிற்கு வந்திருக்கிறார். 2005ம் ஆண்டு வீரகேசரியின் பிரதம ஆசிரியராகப் பதவி உயர்வு பெற்ற இவர் மித்திரன் வாரமலர், மாநகரச் செய்தி இதழ் போன்ற இதழ்களின் ஆசிரியராகவும் இருக்கின்றார்.

வீரகேசரியில் வெளிவந்த சிறந்த ஆக்கங்கள் அடங்கிய 240 பக்கங்களைக் கொண்ட ஆண்டுமலர் ஒன்று 2002ம் ஆண்டு வெளியிடப்பட்டது. வீரகேசரியில் வெளிவந்த எனது கதையான ‘பெண் ஒன்று கண்டேன்’ அவ்வருடத்திற்கான சிறந்த கதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்த மலரில் வெளியிடப் பட்டிருந்தது. அப்போது அந்த மலரின் தொகுப்பாசிரியராக திரு. வி. தேவராஜ் அவர்களே இருந்தார். அதனால்தான் வீரகேசரி மூலமாக அவருடனான இலக்கியத் தொடர்பு எனக்கு ஏற்பட்டிருந்தது. அன்பும், பண்பும் மிக்க நல்ல இதயம் கொண்ட நண்பர் தேவராஜ் அவர்களுக்கு உதயன் சர்வதேச சிறப்பு விருது (இலங்கை) – 2011 கிடைத்ததைப் பெருமையாக நினைத்து நாங்களும் அவரைப் பாராட்டி வாழ்த்துகின்றோம்.

தமிழகத்தில் இருந்து வருகை தந்திருந்த எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் சிறுகதையின் வளர்ச்சி பற்றியும், தமிழில் சிறுகதை எப்போது தோன்றிய என்பது பற்றியும்  உரையாற்றினார். புதுவையில் இருந்த வா.வே.சுவும், சுப்ரமணியபாரதியாரும்தான் தமிழில் சிறுகதை இலக்கியத்தின் முன்னோடிகள் என்பதை எடுத்துக் கூறினார். ரவீந்திரநாத் தாகூரின் கதைகளை முதன் முதலாகத் தமிழுக்குக் கொண்டு வந்த பெருமை பாரதியைத்தான் சேரும் என்றும் குறிப்பிட்டார். புதுமைப்பித்தன் ஒரு உணவகத்தில் காப்பி அருந்தும் போது நடந்த சம்பவத்தையும் அழகாக எடுத்துச் சொன்னார். அப்போது, தமிழ் மொழி ‘பூனூல் அணிந்திருக்கிறது’ ஏனென்றால் ‘சர்வர் வருகிறார்’ (பேரர்) என்றுதான் அன்று புதுமைப்பித்தன் குறிப்பிட்டார். ஆனால் இப்போதெல்லாம் நாங்கள் ‘சர்வர் வருகிறான்’ என்று தான் குறிப்பிடுகிறோம். இந்த மாற்றம் யாரால், எதனால் வந்தது? என்று கேள்வி எழுப்பினார்.

பிரபஞ்சன் அவர்கள் அன்ரன் செகோவ் (1860-1904) பற்றிக் குறிப்பிட்டு இரண்டு பிறமொழிக் கதைகள் பற்றியும் (The Death Of A Government Clerk) விபரமாகக் குறிப்பிட்டார். மராட்டிய எழுத்தாளரின் நாயைத் திருமணம் செய்த பெண்ணைப் பற்றிய கதையைக் குறிப்பிடும் போது, நாயின் மொழி அதன் வாயில் இல்லை அதன் வாலில்தான் இருக்கிறது என்று குறிப்பிட்டார். எழுத்தாளர் இணையத் தலைவர் த. சிவபாலு அவர்கள் இதைப்பற்றிச் சொல்லும் போது பிரபஞ்சன் சிறந்த ஒரு எழுத்தாளர் மட்டுமல்ல சிறந்த ஒரு கதை சொல்லியும்கூட என்று குறிப்பிட்டார். அவர் அப்படிக் குறிப்பிட்டதில் எந்த ஒரு மாறுபட்ட கருத்தும் சபையோருக்கு இருக்கவில்லை. ஏனென்றால் அவ்வளவு சுவாரஸ்யமாக பார்வையாளர்களைக் கவரக்கூடிய விதமாக அவர் கதை சொன்னார்.

பிரபஞ்சனின் இயற்பெயர் சாரங்கபாணி வைத்திலிங்கம். பாண்டிச்சேரி என்று அழைக்கப்படும் புதுச்சேரியில் பிறந்தவர். தஞ்சை கரந்தை தமிழ்ச் சங்கத்தில் தமிழ் இலக்கியம் பயின்றவர். இவரது ‘என்ன உலகம்’ என்ற முதற் சிறுகதை 1961ம் ஆண்டு பரணி இதழில் வெளிவந்தது. இவரது சுமார் 350 சிறுகதைகள் 16 தொகுதிகளாக வெளிவந்திருக்கின்றன. இவர் இதுவரை எட்டு நாவல்களும், பதினாறு நெடுங்கதைகளும்  எழுதியுள்ளார். இவற்றில் ‘வானம் வசப்படும்,’ ‘மானுடம் வெல்லும்’ ஆகிய நாவல்களை இவரது மிகச் சிறந்த நாவல்களாகக் குறிப்பிடலாம். தமிழக அரசின் பரிசு, புதுச்சேரி அரசின் பரிசு, மற்றும் சாகித்திய அக்கடமிப் பரிசு போன்றவற்றை இவர் பெற்றிருக்கின்றார். சுமார் 300 கட்டுரைகளுக்கும் மேலாக எழுதியுள்ள இவருக்குப் புதுச்சேரி அரசினால் 1988ம் ஆண்டு ‘கலைமாமணி’ விருதும், 2004ம் ஆண்டு ‘தமிழ்மாமணி’ விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. தற்போது முழுநேர எழுத்தாளராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் இவரது,
55 நூல்கள்வரை இதுவரை வெளியிடப்பட்டிருக்கின்றன.

தமிழகத்தில் இருந்து வெளிவரும் யுகமாயினி இதழ் நடத்திய குறுநாவல் போட்டியில் நான் பங்கு பற்றிய போது, பரிசுக்குரிய குறுநாவலாக எனது குறுநாவல் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தது. அந்தக் குறுநாவல் போட்டிக்கு பிரபஞ்சன் அவர்கள்தான் நடுவராக இருந்ததாக யுகமாயினி ஆசிரியர் சித்தன் அவர்கள் அப்போது குறிப்பிட்டிருந்தார். ஏற்கனவே சிறந்த எழுத்தாளரான பிரபஞ்சனைப் பற்றி அறிந்திருந்தாலும் அவரை இந்த மண்ணில் சந்திப்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தேன். அவரோடு உரையாடிய போது எனது பெயரைச் சொன்னதும் அவருக்கு உடனே அந்தக் குறுநாவல் போட்டியின் ஞாபகம் வந்தது. எங்கள் தாய் மண்ணின் அவலத்தைச் சொல்லும் ‘அம்மாவின் பிள்ளைகள்’ என்ற அந்தக் குறுநாவல் தன்னை மிகவும் தொட்டதாக அப்போது அவர் குறிப்பிட்டார். அவரோடு உரையாடும் போதுதான் அவர் எங்கள் மொழி மீதும் இனத்தின் மீதும் கொண்டுள்ள பற்றைப் புரிந்து கொள்ள முடிந்தது. அப்போது ஈழத்தமிழரின் அவல நிலையை எடுத்துச் சொல்ல நல்ல தொரு ஊடகத்துறை தமிழ்நாட்டில் இல்லாதது பெரியதொரு குறையாக இருப்பதாகவும் எடுத்துச் சொன்னார். சிறந்த ஒரு முழுநேர எழுத்தாளரான பிரபஞ்சன் அவர்களுக்கு உதயன் சிறப்பு விருது (தமிழ்நாடு) – 2011 கிடைத்ததைப் பெருமையாக நினைத்து நாங்களும் அவரை நீடூழி வாழ்க என வாழ்த்திப் பாராட்டுகின்றோம்.

இவ்விருவரையும் சந்தித்து உரையாடச் சந்தர்ப்பம் ஏற்படுத்தித் தந்த உதயன் பிரதம ஆசிரியர் ஆர். என். லோகேந்திரலிங்கத்திற்கு எழுத்தாளர் இணையத்தின் சார்பில் எமது மனமார்ந்த பாராட்டுக்கள்.

No comments:

Post a Comment