Wednesday, April 27, 2011

Soladi Un Manam Kaloodi? சொல்லடி உன்மனம் கல்லோடி?

குரு அரவிந்த​ன்


(அத்தியாயம் - 1 - 6 September 2010ல் பார்க்கவும்.)

(அத்தியாயம் - 7 - 12 January 2011ல் பார்க்க‌வும்.)


அத்தியாயம் - 13

‘கண்ணன் ஏன் திடீரென இங்கே வருவதை நிறுத்தினான், நீங்கள் ஏதாவது சொன்னீங்களாப்பா’ என்று மாலதி தகப்பனிடம் விசாரித்தாள்.
‘இங்கே வரவேண்டாம் என்று நான் சொல்லுவேனாம்மா, அத்தைதான் ஏதோ சொல்லியிருக்கிறாள்’. என்றார் சுந்தரம் மாஸ்டர்.
‘அத்தையா, என்ன சொன்னாப்பா?’
'கண்ணன் இங்கே அடிக்கடி வந்து போவது அத்தைக்குப் பிடிக்கவில்லை, அதனாலே..!’ என்றார் மாஸ்டர்.
'அதனாலே..?"
'ஜாடைமாடையாய் கண்ணனுக்கு அத்தை சொல்லியிருக்கணும்"
'ஏனப்பா இப்படிச் செய்தீங்க, அத்தை சொல்லும்போது நீங்களும் கேட்டுக்கொண்டு பேசாமல் இருந்தீங்களாப்பா..?"
'நான் என்னம்மா செய்ய முடியும்? நீ அவங்கவீட்டுப் பெண், என்ன சொன்னாலும் அவங்க சொற்படிதானே நடக்கணும்."
'கண்ணன் பாவமப்பா, ஒரு குழந்தை மனசு அவனுக்கு. அந்த மனசைப் புண்படுத்தி விட்டீங்களே!"
'அதெல்லாம் ஊருக்குத் தெரியுமாம்மா? நாளைக்கு உன்னைப் பற்றி ஊர் பழிக்கக்கூடாது பார்..!" மாஸ்டர் கண்டிப்போடு சொன்னார்.
என்னப்பா சொல்லுறீங்க..?
‘புருஷனைப் பறிகொடுத்திட்டு இருக்கிற உனக்கு நான் என்ன செல்லுறேன் என்று புரியும் என்று நினைக்கிறேன’;. என்றார்.
அதற்குமேல் மாலதி எதுவும் கேட்கவில்லை. பதில் சொல்ல முடியாமல் தொண்டை அடைத்துக் கொண்டது.
கண்ணனின் வருகை திடீரென நின்றுபோனதன் காரணம் அவளுக்குப் புரிந்து போயிற்று. எதையுமே தப்பான கண்ணோட்டத்தோடு பார்த்துப் பழகிப்போன சமுதாயம், இதையும் அப்படித்தான் பார்த்திருக்கும்.
‘உலை வாயை மூடினாலும் ஊர் வயை மூடமுடியாது’ என்பதுபோல, அத்தை சுயநலம் கருதிப் பரப்பிவிட்ட கட்டுக்கதை, வேகமாகப் பரவி கண்ணனின் வீட்டையும் பாதித்தது.
வெறும் புகை நெருப்பாகிவிடுமோ என்று தேவகி பயந்தாள். மகனைவிட மாலதிமேல் அவளுக்கு இருந்த பாசம் அவளைச் சிந்திக்க வைத்தது. இவர்களின் எதிர்;காலம் பாதிக்கப்படக் கூடாது என்பதில் தேவகி கவனமாக இருந்தாள்.
கண்ணனை வெளியே எங்கேயாவது அனுப்பிவிட்டால், இந்தப் புகையெல்லாம் கொஞ்ச நாளில் அடங்கி விடும் என்று தேவகி எதிர்பார்த்தாள். எந்தக் காரணம் கொண்டும் தங்கள் குடும்பத்தால் மாலதிக்குக் கூடாத பெயர் வரக்கூடாது என்பதில் மிகவும் கவனமாகச் செயற்பட்டாள். எனவே கமலினியிடம் சொல்லி அவளின் ஏற்பாட்டின் பேரில் மேற்படிப்பிற்காக கண்ணனை விரைவில் அமெரிக்கா அழைக்கும்படி கேட்டிருந்தாள். கமலினியும் கண்ணன் அங்கே வந்தால் தனக்கும் நல்ல துணையாக இருப்பான் என்று நினைத்தாள். எனவே கண்ணனை அங்கே அழைப்பதற்கு, முடிந்த அளவு விரைவாக எல்லா ஏற்பாடுகளையும் செய்யத் தொடங்கினாள்.
மேற்படிப்பிற்காக கண்ணன் அமெரிக்கா செல்கிறான் என்ற கதை ஊரில் அடிபட்டது. மேற்படிப்பிற்காகக் கண்ணன் அமெரிக்கா செல்கிறான் என்ற போர்வையில், இக்கட்டான அந்தச் சூழ்நிலையில் இருந்து கண்ணன் மீட்டெடுக்கப்பட்டு அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டான்.
ஒன்றை மறப்பதற்குப் பிரிவு எவ்வளவு முக்கியமே, அதேபோல ஒன்றைத் தொடர்ந்தும் நினைப்பதற்கு, அதற்காக ஏங்குவதற்குச் சிலசமயங்களில் பிரிவும் ஒரு காரணமாகிவிடும்.
அந்தச் சூழ்நிலையில் இருந்து கண்ணனைப் பிரித்துவிட வேண்டும் என்று தேவகி நினைத்தாள். தேவகி ஒன்றை நினைக்க, விதி வேறு ஒன்றை நினைத்தது.
வீட்டிற்கு வரக்கூடாது, மாலதியைச் சந்திக்கக்கூடாது என்ற அத்தையின் கடுமையான வார்த்தைகளால் கண்ணன் மனதளவில் மிகவும் பாதிக்கப் பட்டிருந்தான். தனக்கு விருப்பமான ஒருவரைச் சந்திப்பதற்கு, பேசுவதற்குக்கூட இந்த சமுதாயம் தடை விதிக்கிறதே என்றதை நினைத்துப் பெருமூச்சு விட்டான். மாலதி பெண்ணாகவும், தான் ஆணாகவும் இருப்பதால்தான் இப்படியான சமுதாயக் கட்டுப்பாடுகளுக்குள் அடங்கிக் கிடக்க வேண்டி இருக்கிறதே என்றுகூட நினைக்கத் தோன்றியது. பழகிய கொஞ்ச நாட்களிலேயே மாலதியின் குழந்தை ஆரணி, காந்தம் போல இவனை எப்படியோ கவர்ந்து இழுத்து விட்டாள் என்று எண்ணி ஆச்சரியப்பட்டான். எது எப்படி இருந்தாலும், என்ன நடந்தாலும் என்னால் தாங்கிக் கொள்ளமுடியம், மாலதி பாவம், இப்படியான கட்டுக் கதைகளைக் கேள்விப்பட்டால் நிச்சயம் உடைந்து போய்விடுவாள். தெளிந்த மனதோடு, சிரித்த முகத்தோடு, எல்லோரோடும் அன்பாய்ப் பழகும் மாலதியைப் பற்றியா இப்படிக் கதை ஜோடித்தார்கள் என்று நினைத்துத் தனக்குள் வேதனைப்பட்டான்.
இந்தப் பிரச்சனையில் இருந்து வெளியே வரவேண்டுமானால் எங்கேயாவது கண்காணாத இடத்திற்குப் போகவேண்டும். அப்படிச் போனால், கொஞ்ச நாட்களில் எல்லாமே அடங்கிவிடும் என்று தேவகியைப் பேலவே கண்ணனும் நினைத்தான். எனவேதான் கமலினி எல்லா ஏற்பாடுகளைச் செய்ததும் மறுக்காமல் அமெரிக்கா கிளம்பினான். அப்பா, அம்மாவை விட்டுப் பிரிவது மனதிற்குக் கஸ்டமாக இருந்தாலும், எதிர்கால நன்மை கருதி அவர்களிடம் இருந்து விடைபெற்றான்.
கண்ணன் அமெரிக்கா செல்கிறான் என்று மாலதி கேள்விப்பட்டிருந்தாலும், சந்தர்ப்பம் சூழ்நிலை காரணமாக அவள், அவனது பயணத்தைப்பற்றித் தனக்குத் தெரிந்ததாகக் காட்டிக் கொள்ளவில்லை.
விமான நிலையத்திற்குக் கமலினியும், அவளது கணவன் ரவியும் வந்திருந்தார்கள். அமெரிக்காவின் ஏழாவது பிரபல மாகாணமான ஒஹாயோ மாகாணத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான சின்சினாட்டியில் வசதியான மூன்று அறைகள் உள்ள தொடர் மாடிக்கட்டிடத்தில் அவர்கள் குடியிருந்தார்கள்.
கண்ணனுக்கு ஒரு அறை ஒதுக்கிக் கொடுத்தார்கள். அவனுக்கு அந்த இடமும், சூழ்நிலையும் ரொம்பப் பிடித்துக் கொண்டது. வீட்டிற்கு அருகிலேயே ரவியின் வேலைத்தளம், ஐந்து நிமிடங்களில் போகக்கூடியதாக இருந்தது. கமலினியும் வாகனம் ஓட்டுவதற்குரிய அனுமதிப் பத்திரம் பெற்றிருந்ததால், ரவியை வேலைத்தளத்தில் இறக்கிவிட்டு தினமும் வண்டியைக் கொண்டு வருவாள்.
ஒருநாள் ஞாயிற்றுக்கிழமை மாலைநேரம் எல்லோரும் மயாமி ஆற்றங்கரைக்குச் சென்றிருந்தார்கள். ஒஹாயோ, கென்டக்கி, இனடியானா ஆகிய மாகாணங்களின் எல்லைக்கோடுகள் அருகருகே இருந்ததால், சிறிய தூரப் பயணத்தில் மூன்று மாகாணத்தைச் சேர்ந்த இடங்களைப் பார்த்தது மட்டுமல்ல, அந்தந்த மாகாணப் பொலிஸாரையும் அன்று வித்தியாசமான உடையில் பார்க்கக்கூடியதாக இருந்தது.
வேறு ஒரு நாள் அருகே இருந்த 'ஜங்கிள் ஜிம்' என்ற பெரும் சந்தைக்கு கமலினி அவனை மட்டும் அழைத்துச் சென்றாள். மிகப்பிரமாண்டமான பெருஞ்சந்தை, பார்ப்பதற்குப் பிரமிப்பாய் இருந்தது. எல்லா நாட்டு முக்கிய உணவுப் பொருட்களும் அந்தச் சந்தையில் விற்பனைக்கு இருந்தன. இந்திய உணவுப் பொருட்கள் ஒரு பகுதில் இடம் பெற்றிருந்தன. கண்ணன் வேடிக்கையாக கங்காரு இறைச்சி எடுக்கலாமா என்று அங்கே வேலை செய்யும் ஒரு பணிப்பெண்ணிடம் விசாரித்தான். அவள் கண்ணனை மேலும் கீழும் பார்த்துவிட்டு, தன்னுடன் வரும்படி அவனையும் அழைத்துச் சென்று ஒரு பகுதியை அவனுக்குக் காட்டினாள். அவுஸ்திரேலியப் பகுதி என்று எழுதி இருந்து. அங்கிருந்து தகரத்தில் அடைத்துப் பக்குவப்படுத்தப்பட்ட கங்காரு இறைச்சியைத் தேடி எடுத்துக் கொடுத்ததும், கண்ணன் திகைத்துப் போனான்.
ஒரு கூரையின் கீழ் எல்லா உணவுப் பொருட்களும் தேவைக்கேற்றப எடுக்கக்கூடியதாய், இன்றைய நவநாகரிக உலகம் எவ்வளவு சுருங்கிவிட்டது என்று நினைத்துப் பார்த்தான். 
அமெரிக்காவில் கண்ணன் படித்துக் கொண்டிருந்தாலும், ஊரில் என்ன நடக்கிறது என்பதை அவ்வப்போது நண்பர்கள் மூலம் அறிந்து கொண்டே இருந்தான். சுந்தரம் மாஸ்டர், மாலதி, ஆரணி என்று பலரும் அவன் சிந்தனையில் தினமும் வந்து போய்க் கொண்டிருந்தனர்.
அவன் சற்றும் எதிர்பாராமல், ஒருநாள் சுந்தரம் மாஸ்டரிடம் இருந்து அவனுக்கு ஒரு கடிதம் வந்திருந்தது. பொருளாதார ரீதியாக பணக் கஸ்டம் ஏற்பட்டிருப்பதாகவும், முடிந்தால் ஏதாவது உதவி செய்யமுடியுமா என்றும், அது பற்றி மாலதிக்குத் தெரிய வேண்டாம் என்றும் அவர் கேட்டிருந்தார்.
மாலதியின் அப்பாவாக இல்லாவிட்டாலும், தனக்கு அறிவு புகட்டிய ஆசிரியர் என்ற முறையிலாவது அவருக்கு கட்டாயம் உதவி செய்ய வேண்டும் என்று முன்வந்த கண்ணன், பகுதி நேரவேலைகள் செய்து அவருக்கு மாதாமாதம் பணம் அனுப்பலானான்.
நான்கு வருடங்கள் எப்படிப் போனது என்றே தெரியவில்லை. கண்ணன் எம்பிஏ முடித்து, படித்த படிப்பிற்குப் பொருத்தமான வேலை ஒன்றும் பெற்றிருந்தான்.
வேலையை ஏற்றுக் கொள்ள போதிய கால அவகாசம் இருந்ததால் திடீரென ஊருக்குக் கிளம்பி வந்திருந்தான். ஊரிலே பல மாற்றங்கள் நடந்திருந்தன. அங்கே நடந்து முடிந்த சில விடையங்களை ஏற்கனவே கண்ணன் அறிந்திருந்தான்.
ராஜனிடம் குடிப்பழக்கம் இருந்ததனால், பல இடங்களில் கடன் வாங்கியது மட்டுமல்ல, வீட்டையும் அடைமானம் வைத்திருந்தான். இதனால் கடன்காரரின் தொல்லை தாங்கமுடியாமல் இருந்தது. ராஜன் பரம்பரை வீட்டை அடைமானம் வைத்திருக்கிறான் என்று கேள்விப்பட்டதுமே ராஜனின் தாய் உடைந்து போய்விட்டாள். அதுவே அவளைப் படுக்கையில் போட்டுவிட்டது. சொத்துப்பத்தை இழந்த நிலையில் கடன்காரரின் தொல்லை தாங்கமுடியாமல் போகவே, அந்த வேதனையில் அவளும் நோய்வாய்ப்பட்டு சீக்கிரமே இறந்து போயிருந்தாள்.
அடுத்தடுத்து ஏற்பட்ட துயர நிகழ்வுகளால், சுந்தரம் மாஸ்டரும் இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவ்வப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டாலும், அவர் அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை. போதிய வருமானம் இல்லாததால் அந்தக் குடும்பமே கஸ்டப்பட்டு வாழவேண்டி வந்தது. 
மாலதியிடம் திறமை இருந்ததால், மிகவும் கஸ்டப்பட்டு அருகே உள்ள பாடசாலையில் ஆசிரியைத் தொழில் ஒன்றைப் பொற்றிருந்தாள். அருகே உள்ள பாடசாலை என்பதால் அவளுக்குப் போக்கு வரத்தும் இலகுவாக இருந்தது. 
கண்ணன் விடுமுறையில் வந்திருக்கிறான் என்று கேள்விப்பட்டதும், அவர்களின் உறவினர் பலர் கண்ணனுக்குப் பெண் கொடுக்கப் போட்டி போட்டுக்கொண்டு வந்தனர். இங்கே திருமணம் செய்து கொண்டு போவதற்காகத்தான் கண்ணன் வந்திருக்கிறான் என்று ஊரில் கதை அடிபட்டதால், தேவை இல்லாமல் மீண்டும் வீண் பிரச்சனைகளில் மாட்டிக் கொள்ள மாலதி விரும்பவில்லை. தானுண்டு, தன் ஆசிரியைத் தொழில் உண்டு என்று அவள் கண்ணனைவிட்டு ஒதுங்கியே இருந்துவிட்டாள்.
கண்ணனோ தான் இப்போதைக்கு திருமணம் செய்யப் போவதில்லை என்று முற்றாக மறுத்துவிட்டான். கண்ணனின் நிலைமையைப் புரிந்து கொண்ட தேவகியோ, அல்லது கனகேஸ்வரனோ கண்ணனை அதற்குமேலும் வற்புறுத்த விரும்பவில்லை.

அமெரிக்காவில் படித்தவன், அங்கேயே ஒரு பெண்ணைப் பிடித்திருப்பான் என்று கண்ணனைப் பற்றி ஊருக்குள் கதை அடிபட்டது.

அன்று அவள் பாடசாலையில் இருந்து வீடு வந்தபோது, ஆரணி கையிலே வைத்து இருந்த சாக்லெட்டைச் சாப்பிட்டுக்; கொண்டு, பாபி பொம்மை வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள்.
ஏது பொம்மை..? என்று விசாரித்தபோதுதான் கண்ணன் வந்து சென்றதாக சுந்தரம் மாஸ்டர் தெரிவித்தார்.
கண்ணன்மீது அவள் வைத்திருந்த பாசத்தால், கண்ணனைப் பார்க்க அவள் மனசு துடித்தாலும், ஊர் வம்பு பேசும் என்பதால்  அந்த எண்ணத்தைத் தவிர்த்துக் கொண்டாள். ஆனாலும் இன்னும் சிறுது நேரம் என்றாலும் தாமதித்து நின்று தன்னைச் சந்தித்திருக்கலாமே என்று அவள் உள்மனம் ஏங்கியது.
கண்ணன் அமெரிக்காவில் படித்து வந்ததால் மிகவும் தெளிவாக இருந்தான். முன்பெல்லாம் ஊர் வம்பு பேசும் என்பதால் மாலதி வீட்டிற்குச் செல்வதைத் தவிர்த்தவன், இப்போ எது வந்தாலும் வருவதை எதிர் கொள்ளத் தயார் என்பது போலத் துணிந்து மாலதி வீட்டிற்குச் சென்று வந்தான்.
எவ்வளவு காலத்திற்குத்தான் ஊருக்குப் பயந்து வாழ்வது. தப்பு எதுவும் செய்யவில்லை, அப்புறம் ஏன் பயப்படணும் என்கிற வைராக்கியம் அவன் மனதில் உறுதியாய் இருந்தது. மாலதியின் அத்தையும் இறந்து போனதால் அங்கே போய் வருவதில் அவனுக்கு எந்தத் தடையும் இருக்கவில்லை. அதைவிட சுந்தரம் மாஸ்டரும் ஏதோ சில காரணங்களால் அவனுக்குக் கடமைப் பட்டிருந்தார். சின்ன வயதில் மாலதி எப்படி இருந்தாளோ, அதே போலவே உருவத்தில் ஆரணி இருந்ததும், ஆரணி மீது அளவு கடந்த பாசத்தை இவன் வைத்திருந்ததும், அங்கு அவன் அடிக்கடி போய்வருவதற்கு ஒரு காரணமாயுமிருந்தது. 

அன்று காலையில் ஆரணியைப் பார்க்க மாலதி வீட்டிற்குப் போயிருந்தான் கண்ணன். மாலதி பாடசாலைக்குக் கிளம்பிப் போயிருந்தாள். மாஸ்டரும், ஆரணியும் மட்டுமே வீட்டில் தனியே இருந்தார்கள்.

ஆரணி மட்டும் ஓடிவந்து கண்ணனைக் கட்டியணைத்து உள்ளே வாங்க என்று அழைத்துச் சென்றாள். சாய்மனைக் கதிரை வெறுமையாக இருந்தது. வழமையாக அந்த நேரம் சாய்மனைக் கதிரையில் படுத்துப் பத்திரிகை படித்துக் கொண்டிருக்கும் மாஸ்டர் எங்கே என்று விழிகளால் தேடினான் கண்ணன். விழிகளின் தேடலில் மாஸ்டர் அகப்படவில்லை.
மாஸ்டர் எங்கே..?
தாத்தா எங்கே ஆரணி..? என்று ஆரணியிடம் விசாரித்தான்.
தாத்தா உள்ளே கட்டிலில் படுத்திருக்கிறார் என்றாள் ஆரணி பொம்மையோடு விளையாடிக் கொண்டே.
உள்ளே எட்டிப் பார்த்த கண்ணன் ஒரு கணம் அதிர்ந்தான்.
நெஞ்சைப் பிடித்துக் கொண்டு கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்திருந்த மாஸ்டரின்
முகம் வேதனையில் களையிழந்து, வியர்த்துப் போயிருந்தது.அத்தியாயம் - 14

 என்ன மாஸ்டர்.. என்னாச்சு..? என்று கேட்டான் கண்ணன்.
ஒன்றுமில்லை..! என்று சொல்லிச் சமாளித்தார் மாஸ்டர்.
அருகே சென்று பார்த்தான். அவர் மூச்சுவிடச் சிரமப்படுவது புரிந்தது.
வெளியே விளையாடிக் கொண்டிருந்த ஆரணி அறைக்குள் ஓடிவந்தாள்.
என்னம்மா..? என்றான் கண்ணன்.

தாத்தாவிற்கு காலையில இருந்து ஒரே நெஞ்சுவலி என்றாள் ஆரணி.
தாத்தாவிற்கு நெஞ்சு வலியா? அவர் உன்கிட்ட சொன்னாரா?
ஆமா, தாத்தா மூச்சுவிட சிரமமாய் இருக்கு என்று சொல்லி, நெஞ்சைப் பிடிச்சிட்டு இவ்வளவு நேரமும் சாய்மனைக் கதிரையில உட்கார்ந்திருந்தார். என்றாள் ஆரணி.

கண்ணனுக்கு உடனே புரிஞ்சு போச்சு. அவசரமாய் ஒரு ஆட்டோவைப் பிடிச்சு அருகே இருந்த ஆஸ்பத்திரிக்குக் கொண்டு வந்து சேர்த்துவிட்டு, உடனே மாலதியின் பாடசாலைக்குச் செய்தியை அறிவித்தான்.
வகுப்பறையில் கணிதபாடம் நடத்திக் கொண்டிருந்த மாலதிக்கு அதிபரிடம் இருந்து, உடனே வரும்படி ஒரு செய்தி வந்திருந்தது. வேறு ஒரு ஆசிரியரைத் தனது வகுப்பைப் கவனிக்கும்படி சொல்லிவிட்டு என்னவோ ஏதோ என்ற பயத்தோடு மாலதி அதிபரின் அறைக்குச் சென்றாள். அதிபர் அவளை ஆசுவாசப்படுத்தி, சுந்தரம் மாஸ்டர் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டிருப்பதாகவும், உடனடியாக அவளை அங்கு போகும்படியும் வேண்டினார்.

'அப்பாவை ஆஸ்பத்திரியில் அனுமதித்திருக்கிறார்களா..?" நடக்கக்கூடாதது ஏதாவது நடந்திருக்குமோ?  எல்லாமே கண்முன்னால் சுழல்வதுபோல, தலை விறுவிறுத்தது.

பயம் பிடித்துக் கொள்ளவே, மாலதி ஆட்டோ ஒன்றை எடுத்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றாள். ரிசப்ஷனில் விசாரித்தபோது இன்சென்ரிவ் கெயரில் சுந்தரம் மாஸ்டர் அனுமதிக்கப் பட்டிருப்பதாகச் சொன்னார்கள்.

இன்சென்ரிவ் கெயர் பகுதியை நோக்கி ஓடினாள்.
கண்ணன்தான் வெளியே காத்திருந்தான்.
அவனைக் கண்டதும் அவளது பதட்டம் இன்னும் அதிகரித்தது.
'என்ன கண்ணா என்னாச்சு அப்பாவிற்கு..?"
'மைல்ட் ஹாட் அட்டாக்! என்றன் கண்ணன். அவனது முகமும் வாடிப்போயிருந்தது.
ஹாட் அட்டாக்கா..? அப்பாவிற்கா?  அதிர்ந்தாள் மாலதி.
கேள்விப்பட்ட அதிர்ச்சியில் தலைசுற்ற, கண்கள் இருட்ட, அந்த இடத்திலேயே மாலதி மயங்கி விழுந்து விடப்போவது போன்ற உணர்வைப் பெற்றாள்.

அதிர்ச்சி அடைந்த மாலதி மயங்கி விழுந்து விடுவோமோ என்ற பயத்தில், அருகே நின்ற கண்ணனின் தோள்களை எட்டிப் பிடித்துக் கொண்டாள்.
பயப்படாதே மாலதி, அப்பாவிற்கு இப்போ பரவாயில்லை, கொஞ்சம் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறார். அதிர்ச்சி ஒன்றும் வேண்டாம் என்று டாக்டர் சொல்லியிருக்கிறார்" என்றான் கண்ணன்.
கண்ணன் காட்டிய திசையில் உள்ள கண்ணாடிக் கதவுக்குள்ளால் உள்ளே எட்டிப் பார்த்தாள் மாலதி.
கட்டிலில் மாஸ்டர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது.
மூக்கிலே பிராணவாயுக் குழாய் பொருத்தப்பட்டு, கையிலே ஊசி ஏற்றி சலாயின் செலுத்தப்பட்டுக் கொண்டிருந்தது. தகப்பன் அசைவின்றிக் கட்டிலில் படுத்திருந்த நிலை கண்டு மாலதி வேதனையால் துடித்தாள்.
ஒரே ஒரு துணையாக இருந்த, கடைசிவரை இருப்பார் என்று எதிர்பார்த்த, அப்பாவிற்கும் இந்தக் கதியா?

அவளுடைய வாழ்க்கையோடு மாறிமாறி விதி விளையாடுவது புரிந்தது.
துயரத்தை மறந்து, 'தாங்யூ கண்ணா..!" என்றாள்.
கண்ணன் தனக்கு உதவிக்கு, பக்கப்பலமாய் இருக்கிறான் என்ற மன ஆறுதலில் அவனுக்கு நன்றி சொன்னபோது அவளது கண்கள் மீண்டும் கலங்கின.
உனக்கு எப்படி நன்றி சொல்றது என்றே எனக்குத் தெரியலை..! அவனது கைகளைப் பற்றிக்கொண்டு மாலதி உணர்ச்சி வசப்பட்டு விம்மினாள்.
'இப்போ ஏன் அழுகிறாய்..? அப்பாவிற்கு ஒன்றுமில்லை. கீ இஸ் ஓகே!"
'எப்பவுமே நீ எனக்கு ஏதாவது நல்லது செய்து கொண்டே இருக்கிறாய் கண்ணா, கைமாறாய் என்னால் எதுவும் செய்ய முடியலையே..!" அழுதழுது கண்கள் சிவந்து போயிருந்ததால், அவளது அழகிய முகம் களையிழந்து போயிருந்தது.

அவள் சொன்னதைக் கேட்ட கண்ணனோ, விரக்தியாச் சிரித்தான்.
'உதவி செய்வதும் செய்யாததும் அவரவர் மனசைப் பொறுத்தது மாலதி. நான் எதையும் எதிர் பார்த்து இந்த உதவியை உனக்குச் செய்யவில்லை, நீ எப்பொழுதும் சந்தோசமாய் இருந்தால் அதுவே எனக்குப் போதும்"
அவளுடைய நலத்தில் அவன் எப்பொழுதும் அக்கறை கொண்டிருப்பது அவளுக்கு ஒருவிதத்தில் ஆறுதலாய் இருந்தாலும், ஒரு பெண் என்ற வகையில் கொஞ்சம் சங்கடமாயும் இருந்தது.

கண்ணன் ஆஸ்பத்திரிக்கு வரும்போது, ஆரணியையும் கையோடு அழைத்து வந்திருந்தான். ஆரணி அங்கேயே அடுத்த அறையில் ஒரு சினேகிதியைத் தேடிப்பிடித்து அவளோடு விளையாடிக் கொண்டிருந்தாள். மாலதியைக் கண்டதும் கண்ணன் ஓடிப்போய் அவளை அழைத்து வந்தான்.
தாயைக் கண்டதும் ஆரணி ஓடிவந்து கட்டியணைத்து அவளுக்கு ஒரு முத்தம் கொடுத்தாள்.
'தாத்தாவிற்கு எப்படி அம்மா இருக்கு..?'
'இப்போ பரவாயில்லையம்மா..!" ஆரணியின் தலையை வருடியபடி சொன்னாள் மாலதி.
'தாத்தா சீக்கிரம் குணமாகிடணும் என்று நான் சுவாமிகிட்ட கும்பிட்டு வேண்டிக் கொண்டேன்" என்றாள் ஆரணி.
கண்ணன் தான் இரவு அங்கே நிற்பதாகவும், குழந்தையை அழைத்துக் கொண்டு மாலதியை வீட்டிற்குப் போகும்படியும் கேட்டுக்கொண்டான். தகப்பனுடன் தான் நிற்பதாகச் சொல்லி மாலதியோ, கண்ணனின் வேண்டுகோளை மறுத்து விட்டாள்.

குழந்தையை வைத்துக்கொண்டு அங்கே நிற்பது நல்லதல்ல என்பதால் கண்ணன், மாலதியின் அனுமதியுடன் ஆரணியைத் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.
ஆரணி சமத்தாய் சாப்பிட்டு, ஓடிவந்து 'குட்நைட்தாத்தா" என்று தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த கனகேஸ்வரனின் மடியில் ஏறி அவருக்கு ஒரு முத்தம் கொடுத்தாள். ஆரணியின் மழலைச் சொல்லில் மகிழ்ந்துபோன கனகேஸ்வரனோ அவளைக் கட்டியணைத்து உச்சி முகர்ந்துவிட்டார். சின்ன வயதிலே கமலினி அவரது மடியிலே ஏறி உட்கார்ந்து, அவரைக் கட்டியணைத்து இப்படி முத்தம் கொடுத்த பழைய ஞாபகம் அவருக்குச் சட்டென்று வந்தது.

அன்றிரவு தேவகியோடு கட்டிலில் படுத்துத் தூங்கினாள் ஆரணி. தேவகியோ ஆசையோடு அவளைக் கட்டி அணைத்துக் கொண்டுபடுத்தாள். பாட்டியம்மா எனக்கு ஒரு கதை சொல்லுவீங்களா என்று தேவகியிடம் கதை கேட்டாள். தேவகி கதை சொல்லி முடித்தபோது, தேவகியின் சேலைத் தலைப்பை சுட்டு விரலிலே சுற்றி இறுகப் பிடித்தபடி  ஆரணி தூங்கிப் போயிருந்தாள். பால்வடியும் அந்த முகத்தைப் பார்த்ததும், தனக்கு இன்னமும் பேரப்பிள்ளை இல்லையே என்ற ஏக்கம் வரவே, அமெரிக்காவில் உள்ள மகள் கமலினியைப் பற்றிய யோசனை தேவகியைப் பிடித்துக் கொண்டது.

ஆரணி ரொம்பவும் பழக்கமான தனது சொந்த வீடுபோல எல்லா இடமும் ஓடித்திரிந்தாள். காலையில் கனகேஸ்வரன் செடிகளுக்குத் தண்ணீர் விட்டபோது அவளும் சேர்ந்து உதவி செய்தாள். ஒரு சின்னக் குழந்தையின் சின்னஞ்சிறு பாதம் அந்தத் தரை எல்லாம் பதிந்தபோது சோபை இழந்திருந்த அந்த வீட்டில் மீண்டும் கலகலப்புக் குடிகொண்டது.
பத்து மணியளவில் நடனவகுப்பு நடந்தபோது, தேவகியோடு நன்றாக ஒட்டிக் கொண்டதால் ஆரணியும் தேவகிக்கு அருகே உட்கார்ந்து அங்கே நடப்பது எல்லாவற்றையும் அவதானித்துக் கொண்டிருந்தாள்.
அவளை அறியாமலே ஆரணியின் கைகள் தாளம் போடுவதை தேவகி அதிசயமாய்ப் பார்த்தாள். அந்தக் குழந்தையிடம் கலைமகள் குடியிருப்பதை தேவகி சீக்கிரமே புரிந்து கொண்டாள்.

வகுப்பு முடிந்ததும் மாணவிகள் வணங்கிவிட்டுச் சென்றார்கள்.
நான் பாடுறேன் நீ ஆடுறியாம்மா..? என்று ஆரணியைப் பார்த்து வேடிக்கையாகக் கேட்டாள் தேவகி.
ஆரணியோ எந்தவித தயக்கமும் இல்லாமல் உடனே தலையை அசைத்துவிட்டு, எழுந்து தேவகிக்கு எதிரே வந்து நின்றாள்.
ஏனைய மாணவிகள் செய்ததைப் பார்த்துப் பழக்கப்பட்டதால், குரு வணக்கம் செய்வது போல பாதம் பணிந்து எழுந்தாள்.

'தெய்யும் தக்க, தெய்யும்..!"
அரைமண்டி போட்ட ஆரணியின் சிறிய பாதங்கள் தாளத்திற்கு ஏற்ப அசைந்தன. விழிகள் அங்குமிங்கும் சுற்றிச் சுழன்றன. தேவகியால் நம்பமுடியாமலிருந்தது.

மாலதியைப்போலவே தெய்வக்கலை இவளிடமும் குடியிருந்தது. மீன் குட்டிக்கே நீந்தக் கற்றுக்கொடுப்பதா..? என்று எண்ணியவள், ஆவலோடு எழுந்து வந்து ஆரணியை அள்ளி எடுத்துச் 'என்னோட செல்லக்குட்டி" என்று வாஞ்சையோடு அணைத்து மாறிமாறி முத்தம் கொடுத்தாள். 
இல்லாத ஒன்றுக்காக ஏங்குவதுபோல, தனக்கும் இப்படி ஒரு பேரப்பிள்ளை இருந்திருந்தால் எவ்வளவு சந்தோசமாய் இருக்கும் என்று ஏங்கத் தொடங்கினாள் தேவகி. கமலினியிடம் இருந்த நல்ல செய்தி ஏதாவது வராவிட்டால், அவளிடம் எனக்கொரு பேத்தியைப் பெற்றுக்கொடு என்று வாய்விட்டுக் கேட்டுவிட வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆவலாய் காத்திருந்தாள்.

சுந்தரம் மாஸ்டரின் நிலைமை திடீரென கவலைக்கிடமாக இருந்தது. மாலதி அன்று இரவு அவரோடு ஆஸ்பத்திரியில் தங்கியிருந்தபோது அறிவு தெளிவதும் போவதுமாய் இருந்தது. எதையோ யோசித்து வேதனைப் படுவதுபோல, அவர் கண்களில் கண்ணீர் சொரிந்தபடியே இருந்தது.

முகம் காய்ந்துபோய், களைத்துப்போய் இருப்பது போல இருந்தது. இரவு முழவதும் வேதனையால் துடித்துக் கொண்டிருந்தவர், காலையில் கொஞ்ச நேரம் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்.

பல நாட்களாகப் படுக்கையில் படுத்துக் கிடந்தது போன்ற தகப்பனின் கோலத்தைப் பார்த்ததும் மாலதியால் அதைத் தாங்கமுடியாமல் இருந்தது.
'அழாதீங்கப்பா, இப்ப என்ன நடந்து போச்சு என்று அழுகிறீங்க..?" என்று தகப்பனுக்கு ஆறதல் சொன்னாள்.

'உன்னை நான் ரொம்ப கஸ்டப்படுத்தி விட்டனம்மா, என்னுடைய பிடிவாதத்தாலே, உன்னுடைய எதிர் காலத்தைப் பாழாக்கிவிட்டேன்."
'பேசாம இருங்கப்பா, இதைப்பற்றி எல்லாம் பேச இதுவா நேரம்? டாக்டர் சொல்லியிருக்கிறார் நீங்க உணர்ச்சி வசப்படக்கூடாது என்று. அதனாலே நடந்ததை நினைச்சு வருத்தப்பட்டுக் கொண்டிருக்காதீங்க! இரவும் நல்ல தூக்கமில்லை. கொஞ்ச நேரமாவது நிம்மதியாய் தூங்குங்கப்பா."
'நிம்மதியாய் தூங்கத்தான் வேண்டும். ஆனால் என்னுடைய குற்ற உணர்வு தூங்க முடியாமல் என் மனசை அரிச்சிட்டு இருக்கே, அதற்குப் பிராயச்சித்தமாய் உங்கிட்ட ஒன்று கேட்பேன் செய்வியா..?"
'சொல்லுங்கப்பா, நான் என்ன செய்யணும்..!" என்றாள் மாலதி.
'நிச்சயமாய் சம்மதிப்பியா? மாட்டேன் என்று சொல்ல மாட்டியே..?"
'மனசில இருக்கிறதைச் வாய்விட்டுச் சொல்லுங்கப்பா..!"
'உனக்கு ஒரு தகப்பனாக இருந்து நான் நல்லது எதையுமே இதுவரை உனக்குச் செய்யவில்லை. தெரிந்தோ தெரியாமலோ தப்பான கலியாணத்தைச் செய்து வைத்து உன்வாழ்க்கையையே நான் பாழாக்கிவிட்டேன். பூவிழந்து, பொட்டிழந்து நிற்கிற உன்னை, முகம் கொண்டு என்னாலே பார்க்க முடியலை. இப்போ உன்கிட்ட நான் கேட்கிறதெல்லாம் ஒன்றுதான்.
சொல்லுங்கப்பா..!
நீ மறுமணத்திற்குச் சம்மதிக்கணும்."
'என்னப்பா சொல்லுறீங்க, நீங்க துணையாய் இருக்கும்போது எனக்கேனப்பா மறுமணம். இந்த ஆசிரியத் தொழிலே எனக்குப் போதும், இந்த வருமானத்தோடு எப்படியும் ஆரணியை வளர்த்து எடுத்திடுவேன்." என்றாள் மாலதி.

'நான் ரொம்ப நாளைக்கு உயிரோடு இருக்கமாட்டேன். அதனாலேதான் சொல்கிறேன், என் சொல்லையும் கொஞ்சம் கேளம்மா."
'ஒரு தடவை நான் பட்டது போதுமப்பா. ஒரு பெண் குழந்தையோடு ஊர் பெயர் தெரியாத யாருக்கோ வாழ்க்கைப்பட்டு, இன்னும் ஒரு தடவை நான் கஸ்டப்படணுமாப்பா..?"

'அப்படிச் சொல்லாதேம்மா, அந்தப் பையன் ரொம்ப நல்லவன். அவனாகத்தான் வந்து கௌரவமாக உன்னைப் பெண் கேட்டான். முதல்ல நான் மறுத்திட்டேன். இப்போ மனசு கேட்கலை. எனக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று பயமாயிருக்கு.

உங்களுக்கு ஒன்றுமே ஆகாதப்பா. ஆறுதல் கூறினாள்.
தொடக்கத்திலே உனக்கும் வேலை இல்லை, எங்களுக்கும் பணக்கஸ்டம். அப்போதெல்லாம் அவன்தான் எந்தப் பலனும் எதிர்பார்க்காமல் பணம் கொடுத்து உதவி செய்தான். அதனாலேதான் மானத்தோட எங்களாலே வாழமுடிஞ்சுது.

என்னப்பா சொல்லுறீங்க, யார்கிட்டேயோ கடன் பட்டீங்களா?
ஆமாம்மா, உனக்கு இதெல்லாம் பிடிக்காது என்கிறதாலே நான் இதை உன்கிட்ட சொல்லலை.
தேவையில்லாமல் கடன் பட்டிட்டீங்களே, ஏன்..?
இப்போ தேவையில்லாமல் இருக்கலாம், அப்போ தேவைப்பட்டுதே!
உங்களுக்குத் தேவையில்லாத வேலை இது!
உன்னைப் பாதுகாப்பாய் யாரிடமாவது ஒப்படைக்கணும். அவன்தான் உனக்கு ஏற்றவன் என்ற நம்பிக்கை எனக்கு இப்போ இருக்கு. அதற்கு உன்னோட சம்மதம் தேவை!"
எப்பொழுதோ, யாரிடமோ அப்பா வாங்கிய கடனுக்காக என்னை, அவனுக்கு அடமானம் வைக்கப் பார்க்கிறாரா?

மாலதி அதற்குப் பதில் சொல்லாமல் மௌனமாக இருந்தாள்.
அப்பா இப்படித்தான் எனக்கு நல்லது செய்வதாக நினைத்து ஒவ்வொரு தடவையும் ஏதாவது பிரச்சனையில் மாட்டிவிடுவார். அவர் சுகமாகி வரும்வரைக்கும் இதை ஏதாவது சாக்குப் போக்குச் சொல்லித் தட்டிக் கழித்தால் போதும் என்று நினைத்தாள்.
'நீங்க கேட்டதை அப்புறம் பார்ப்போமப்பா, முதல்ல நீங்க சுகமாகி வீட்டிற்கு வந்தாலே போதும்."
'உண்மையாம்மா, இப்பதான் மனசுக்கு மகிழ்ச்சியாய் இருக்கு" அவர் அவளது கைகளைத் திருப்தியோடு பிடித்தபடி அயர்ந்துகொண்டு போனார்.
அறைக்கதவு தட்டும் சத்தம் மெல்லக் கேட்டது. திக்கென்றது மாலதிக்கு. இந்த நேரத்தில் யாராய் இருக்கும்..? அப்பாவின் கடன்காரனாய் இருக்குமோ?
கடன்பட்டார் நெஞ்சம் போல், ஒரு கணம் கலங்கினாள் மாலதி.

   
     


அத்தியாயம் - 15
     
                     
கதவு தட்டும் சத்தம் கேட்டு, மாலதி யாராய் இருக்கும் என்ற திரும்பிப் பார்த்தாள்.
கதவை மெதுவாகத் தள்ளிக் கொண்டு உள்ளே வந்தான் கண்ணன்.
அந்த சத்தத்தில் மாஸ்டர் விழித்துக் கொண்டார்.
'அங்கிள், இப்போ எப்படி இருக்கு..?" சுகம் விசாரித்தான்.
'இப்போ பரவாயில்லை. தெம்பாய் இருக்கு! ரொம்ப தாங்ஸப்பா!"
எதுக்கு..? என்றான் கண்ணன்.
நீ எங்களுக்குச் செய்த உதவிக்கு..!
என்ன அங்கிள், மாறிமாறி நீங்களும், மாலதியும் நன்றி சொல்லிக் கொண்டே இருக்கிறீங்க. என்னை ஏன் அன்னியனாய்ப் பார்க்கிறீங்க..?" என்றான் கண்ணன்.
'அப்படி ஒன்றுமில்லையப்பா, எங்க குடும்பத்திற்கு தகுந்த நேரத்தில் நீ செய்த பண உதவிக்கு நாங்க நன்றி சொல்லனும்.
எங்களுக்கு உதவியா..? என்னப்பா.? என்றாள் மாலதி.
ஆமா, நாங்க கஸ்டப்பட்டபோது எங்களுக்குப் பணஉதவி செய்தது என்று சொன்னேனே, அது வேறுயாருமல்ல, நம்ம கண்ணன்தான்!
கண்ணனா..? ஆச்சரியம் கலந்த கேள்விக் குறியோடு கண்ணனைப் பார்த்தாள். கண்ணன்தான் தங்களுக்குப் பண உதவி செய்திருப்பான் என்று அவள் ஒருபோதும் நினைத்துக்கூடப் பார்த்தில்லை.
ஆரணி எங்கே? வரல்லையா?"  சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு மாஸ்டர் கேட்டார்.
'இல்லை அங்கிள். அப்பா, அம்மாவோட ரொம்ப ஒட்டிக்கிட்டா. அவங்க அவளை எங்கேயும் போகவிடமாட்டோம் என்று இறுக்கிப் பிடிச்சு வைச்சிருக்கிறாங்க. மாலதி வந்து கேட்டாலும் விடமாட்டோம் என்று சொல்லச் சொன்னாங்க."
சுந்தரம் மாஸ்டர் வேதனையிலும் சிரித்தார்.
'எல்லாம் எங்க நன்மைக்குத்தான். என்ன இருந்தாலும் அவள் அந்த வீட்டுப் பேத்திதானே! அங்கேயே இருக்கட்டும்..?" என்றார்.
'என்னப்பா சொல்லுறிங்க..?" மாலதி ஒன்றும் புரியாமல் கேட்டாள்.
'உண்மைதானம்மா, நீ மட்டும் சரி என்று சம்மதித்தால் அவள் அந்த வீட்டுப் பேத்தியாகிவிடுவாள்"
மாலதி ஒன்றும் புரியாமல் கண்ணனை நிமிர்ந்து பார்த்தாள்.
கண்ணனின் கண்களில் ஏதோ ஆவலுடன் கூடிய, அவள் அதற்கு என்ன பதில் சொல்லப் போகிறாள் என்ற எதிர்பார்ப்புத் தெரிந்தது.

'இந்தக் கையைத்தாம்மா" என்று அவளது கையை எடுத்து, 'இங்கே வாப்பா" என்று கண்ணனின் கைகளில் அவள் கையை வைத்து,
'இதற்குத்தான் உன்னிடம் சம்மதம் கேட்டேனம்மா, இப்போ சொல்லு சம்மதமா..?' என்றவரின் மூச்சு இரைத்தது. மூச்சுவிடச் சிரமப்படுகிறார் என்பது அவரது முகபாவனையில் தெரிந்தது.

எங்க கண்ணனா..? என்ன இது? இவனையா அப்பா குறிப்பிட்டார்? அவள் ஒன்றும் புரியாமல் மலைத்துப் போய் இருவரையும் மாறிமாறிப் பார்த்தாள்.

'என்னப்பா இது, இது எப்படி சாத்திமாகும்? என்றாள் மறுகணம்.
ஏன் அப்படிச் சொல்கிறாய்? நீ மனசு வெச்சா முடியுமம்மா! என்றார் ஏக்கத்தோடு.

போதும், இப்ப நீங்க துங்குங்கப்பா, உங்களுக்கு நிறைய ஓய்வு தேவை. இதை எல்லாம் அப்புறம் சகவாசமாய் பேசிக்கலாம்"
அப்பா திடீரென இப்படி எல்லாம் கேட்பார் என்று மாலதி சற்றும் எதிர் பார்க்காததால் அதிர்ச்சியோடு பதில் சொன்னாள்.

'நான் நிம்மதியாத் தூங்கணும். அதற்குத்தான் கேட்கிறேனம்மா. நான் கேட்டதற்கு இப்ப பதில் சொல்லு. என்றார்.
ஏனப்பா இப்படி பைத்தியம் மாதிரி நடக்கிறீங்க..? என்னையும் கொஞ்சம் புரிஞ்சு கொள்ளுங்களேன்!
தேவையில்லாமல் அப்பா மீண்டும் தன்னை மறுமணம் செய்ய வற்புறத்துவதாக மாலதி நினைத்தாள். அவர்மேல் கோபம் பொத்திக் கொண்டு வந்தாலும், அவர் இருக்கும் இந்த நிலமையில் தனது கோபத்தையோ, வெறுப்பையோ வெளிக்காட்டக் கூடாது என்று தனக்குள்ளே அடக்கிக் கொண்டாள்.

சொல்லம்மா, உனக்குச் சம்மதமா..?" விடாப்பிடியாய் கைகளைப் பற்றிக் கொண்டு, திரும்பத் திரும்பக் கேட்டவரின் விழிகள் உள்ளே செருக, பற்றியிருந்த கைகள் நடுங்கத் தொடங்கின.
அப்பாவிற்கு ஏதாவது நடந்து விடுமோ என்று பயந்து போனாள் மாலதி.

'நீங்க என்ன சொன்னாலும் சம்மதமப்பா, இப்ப நிம்மதியாய்த் தூங்குங்க..ப்..பா..!" அவரது தலையை மறுகையால் வருடிக் கொண்டே, அவசரமாக அவரது கேள்விக்குப் பதில் சொன்னாள்.
சம்மதம் என்ற அவளது வார்த்தையைக் கேட்ட மறுகணமே அவர் உதட்டில் மகிழ்ச்சிப் புன்னகை ஒன்று விரிந்தது. மூடிய கண்கள் மூடியபடியிருக்க, விரிந்த உதடுகள் நிலைத்து நிற்க, இறுகிய கைப்பிடி குளிர்ந்து மெல்லத் தளர்ந்தபோது மாலதி எதையே  உணர்ந்தாள்.
மறுகணம் 'அப்..பா..!" என்று கதறிக் கூச்சலிட்டாள்.

சுந்தரம் மாஸ்டர் நடமாடித் திரிந்த வீடு, கருமாதிக்கு வந்து தங்கியிருந்த உறவினர் ஒவ்வொருவராகக் கிளம்பிவிட, வெறிச்சிட்டுக் கிடந்தது. இன்னும் அங்கே தங்கியிருந்தால் மாலதிமட்டுமல்ல, குழந்தையின் எதிர்காலப் பொறுப்பும் தங்களிடம் வந்து சேர்ந்து விடுமோ என்ற பயமும், அவர்களை அங்கிருந்து சீக்கிரம் கிளம்பிப் போகவைத்தது.
சுவரிலே மாட்டப்பட்டிருந்த மாஸ்டரின் படத்திற்கு மாலை போட்டு, ஊதுபத்தி கொழுத்தி, விளக்கேற்றி மாலதியும், ஆரணியும் தேவாரம் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர்.
உள்ளே வந்த கண்ணன் அருகே வந்து மௌனமாக நின்று அங்கே நடப்பதைக் கவனித்துக் கொண்டிருந்தான். மாஸ்டர் மரணமான நாளில் இருந்து அந்த வீட்டின் எல்லாப் பொறுப்புக்களையும் தானே எடுத்துச் செய்து கொண்டிருந்தான். தேவையில்லாமல் கண்ணனுக்குக் கடமைப் படுகிறோமே என்பதில் மாலதிக்குப் பெரிய சங்கடமாயிருந்தது. ஆனாலும் வேறுயாருமே உதவிக்கு வரப்போவதில்லை என்ற உண்மை தெரியவந்தபோது கண்ணன் மேல் அவளுக்கிருந்த மதிப்பு ஒரு படி மேலே உயர்ந்து நின்றது.

மாலதி கொடுத்த பட்டியலில் இருந்த, வீட்டிற்குத் தேவையான மளிகைப் பொருட்களைக் கண்ணன் வாங்கி வந்திருந்தான். மாலதி அதற்குரிய பணத்தைக் கொடுக்க முற்பட்டபோது கண்ணன் அதை வாங்க மறுத்து விட்டான்.

'ஏன் கண்ணா என்கிட்ட எதுமே வாங்கக்கூடாது என்று முடிவு செய்திட்டியா?"
ஈரத்தலைமுடியில் அநாயசமாய் ஒரு துண்டைச் சுற்றி முடிந்திருந்த மாலதி கேட்டாள். முடிச்சை மீறிய சில கூந்தல்கள் சொல்வழி கேட்காமல் வெளியே எட்டிப்பார்த்து அவளது அழகிய பஞ்சுக் கன்னத்தை முத்தமிட்டுக் கொண்டிருந்தன.
'வாங்க மாட்டேன் என்று சொன்னேனா, விட்டிடுவேனா? எல்லாம் சேர்த்து மொத்தமாய் ஒருநாள் கேட்பேன், அப்போ கொடுத்தால் போதும்" என்றான் கண்ணன்.
'ஏன் காத்திருக்கணும், இப்பவே கேளு" என்பதுபோல அவள் கண்கள் அபிநயத்தன.
'மாலதி, அப்பா இறந்த துக்கத்திலே நீ இருக்கிறாய். கேட்கக்கூடாது என்றுதான் இருந்தேன். ஆனால் நான் திரும்பிப் போகவேண்டிய நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. என் மனதில் இருப்பதைக் கேட்டுத்தான் ஆகவேண்டும். எனக்கு இதைவிட்டால் வேறுவழியில்லை!"
'எதுசரி சொல்லு, நான் கேட்கிறேன்"
'ஒரு நாள் உங்க வீட்டிற்கு நான் வந்திருந்த போது அப்பா கேட்டார். என் மனதிலே நீ மட்டும் இருந்ததால், நான் ஏன் என்றுகூடக் கேட்காமல் உடனேயே சம்மதம் சொல்லிவிட்டேன். அப்புறம்தான் யோசித்தேன், இதில் என்னைவிட, உன் முடிவுதான் முக்கியம். எந்த ஒரு காரணம் கொண்டும் உன் மனம் எந்த விதத்திலும் பாதிக்கவோ, நோகவோ கூடாது. எனக்கு உன் உணர்வுகள் தான் முக்கியம் என்று யோசித்தேன். என்னுடைய ஆசை எல்லாம் உன்னைப் பழைய மாலதியாய் நான் மீண்டும் பார்க்கவேண்டும் என்பதுதான். எந்தக் காரணம் கொண்டும் நீ கற்ற கலையைக் கைவிட்டு விடாமல் நீ தொடரவேண்டும்! அது தெய்வம் உனக்குக் கொடுத்த வரம். என்னுடைய அற்ப ஆசையை எந்தவிதத்திலாவது நிறைவேற்றுவியா மாலதி..?" அவன் குரல் உடைந்து வந்தது.

மாலதி கண்கள் கலங்க அவனைப் பார்த்தாள்.
என்ன இது..? என்மேலே இவன் ஆசை வைத்திருக்கிறானா? அப்படி என்றால் என்னைக் காதலிக்கிறானா..? மாலதி பதில் சொல்லாமல் ஒரு கணம் தயங்கினாள்.

'கண்ணா, உன்னுடைய மனநிலை எனக்குப்புரிகிறது. கணவனை இழந்து, பூவிழந்து, பொட்டிழந்து நிற்கும் ஒரு விதவை எப்படி பழைய மாலதியாய் மாறமுடியும்?
ஏன் முடியாது மாலதி..?
கொஞ்சம் யோசித்துப் பார், இந்தக் கோலத்தில் மேடையில் ஏறி நான் நடனம் ஆடவேண்டும் என்று நீ எதிர் பார்க்கிறாயா?

இது காலம் செய்த கோலம் மாலதி. நாம் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்றை நினைத்து விட்டது. அதற்காக நீ மனம் உடைந்து போகலாமா?
இதுதான் விதி என்றால், விதியை யாரால் மாற்ற முடியும் கண்ணா?"
'ஏன் முடியாது? விதி என்று சொல்லி, பழியை விதி மேல் போட்டுவிட்டுத் தப்பிக் கொள்வது கோழைகளின் வேலை! சின்ன வயசிலே இருந்தே உன்னோடு பழகியிருக்கிறேன் மாலதி, நீ அப்படிப் பட்டவளல்ல, விதியைக் கண்டு பயந்து ஒதுங்கிப் போகிறவள் அல்ல!"

'நீ பழகிய அந்த மாலதியை, கழுத்தில தாலி கட்டிய அன்றே கொன்று போட்டாங்க கண்ணா..! அவள் கண்களை மூடிக்கொண்டு பதில் சொன்னாள்.

'இல்லை, இல்லை,! அப்படி எல்லாம் சொல்லித் தப்பிக்கப் பார்க்காதே! நீ சாதனை படைக்க என்றே பிறந்தவள். உன்னால் முடியும் மாலதி" கண்ணன் கையைச் ஷோபாவின் கைப்பிடியில் ஓங்கி அடித்தபடி கத்திச் சொன்னான்.
'ஏன் கோபப் படுகிறாய் கண்ணா? யதார்த்தத்தை யதார்த்தமாய் எடுத்துக் கொள்ளணும்!"

'இந்தா பார் மாலதி, நீ வாழ்ந்ததெல்லாம் எல்லாம் ஒரு வாழ்க்கையில்லை. கனவு போல நடந்தை மறந்திடு. யார் யாரோ எல்லாமோ உன்னுடைய கடந்த காலத்திற்கு, நீ விரும்பாத வாழ்க்கைக்கு முடிவெடுத்தார்கள். இனிமேல் உனக்கு எந்தத் தடையுமில்லை. உன் எதிர்காலத்தைப் பற்றி நீதான் நல்லதொரு முடிவெடுக்கவேணும். நீ எப்பொழுதும் சிரித்துக் கொண்டே சந்தோசமாய் வாழ்வதை நான் பார்க்கணும். நான் சொல்வதைக் கொஞ்சம் புரிஞ்சுக்க மாலதி!"

'இப்போ சுற்றிச் சுற்றி எதைச் சொல்லவர்ரே..?"
'நான் சொல்ல வந்ததை நேரடியாகவே சொல்லிர்றேன். உன்னைவிட வயதிலே நான் குறைந்தவன் என்பதைத் தவிர என்னிடம் வேறுஏதாவது குறையிருக்கா..?"
அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த மாலதி, அவளை அறியாமலே 'இல்லை" என்ற தலை அசைத்தாள்.
'அப்போ என்ன தயக்கம், என்னை உனக்குப் பிடிக்கலையா?"
அவள் 'இல்லை" என்று தலை அசைத்தாள்.
கண்ணன் அதிர்ந்து போய் எழுந்து நின்று 'என்னை உனக்குப் பிடிக்கலை.. யா..?" என்று ஏக்கத்தோடு கேட்டான்.
'இல்லை" என்று மாலதி மீண்டும் உறுதியாகத் தலை அசைத்தாள்.
இப்படி அவனைப் பிடிக்கவில்லை என்று முகத்தில் அடித்தது போல மாலதி சொல்வாள் என்று கண்ணன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. பெரியதொரு அடி நெஞ்சில் விழுந்தது போன்ற வலியை உணர்ந்தான்.
'அப்போ ஏன் அப்பாவிற்கு வாக்குக் கொடுத்தாய்..?' ஏமாற்றத்தில் குரல் உடைந்து வந்தது.

'அப்பா என்னைப் பேசவிட்டாரா..?" மாலதி குரலை உயர்த்திக் கேட்டாள்.
கண்ணன் ஒன்றும் சொல்ல முடியாமல் வாயடைத்துப் போனான்.
'இப்பதானே கண்ணா சொன்னே, இனியாவது என்னைப்பற்றி முடிவெடுக்கிற உரிமை எனக்கு இருக்கென்று! அப்புறம் ஏன் என்னுடைய விஷயத்திலே நீங்களே முடிவெடுக்கிறீங்க?' குரலைக் கொஞ்சம் தாழ்த்திச் சொன்னாள்.
'ஐ யாம் ஸாறி!" தலை குனிந்தபடி மன்னிப்புக் கேட்டவன், மாலதி தன்னை அவமானப்படுத்தி விட்டாளே என்ற ஆத்திரத்தில், திரும்பிப் பாராமலே வெளியேறினான்.


அத்தியாயம் - 16

'திடீர்னு மாலதிக்கு என்னை ஏன் பிடிக்காம போச்சு?" யோசனையோடு வெளியேறினான் கண்ணன்.
'இனியாவது சிறுபிள்ளைத் தனமாய் நடக்காதே கண்ணா, நீ வளர்ந்திட்டாய்! கொஞ்சம் மச்சுவேட்டாய் நடக்கப் பழகிக்கொள்!" தொடர்ந்து வாசல்வரை வந்த மாலதி சொன்ன வார்த்தைகள் திரும்பத் திரும்ப அவனது காதுகளில் ஒலித்தன.
கண்ணன் சென்றதும் ஸோபாவில் இருந்தபடி நெடுநேரம் யோசனையில் ஆழ்ந்தாள் மாலதி. தியாகம் என்ற போர்வையில் கண்ணன்  என்னை மறுமணம் செய்து தனது வாழ்க்கையையே பாழாக்கப் பார்க்கிறான். என்னைவிட வயதில் மிகவும் குறைந்த ஒருவனைக் கணவனாக எப்படி என்னால் ஏற்றுக் கொள்ள முடியம்.
எந்தத் தடையுமின்றி வயதில் மிகவும் குறைந்த பெண்ணை ஆணுக்குத் திருமணம் செய்து வைக்கும் எங்கள் சமுதாயம், வயதில் குறைந்த ஆணை, என்னைப் போன்ற விதவைகள் திருமணம் செய்ய முன்வந்தால் அதை ஏற்றுக் கொள்ளுமா?
படிப்பு, பணம், இளமை, புத்திசாலித்தனம், நல்லகுணம் எல்லாமே கண்ணனிடம் இருப்பதால் தனக்கு ஏற்ற ஒரு பெண்ணைத் திருமணம் செய்து சந்தோசமாக வாழவேண்டும். என்னிடம் அவனுக்கு ஏற்பட்டிருப்பது வெறும் கவர்ச்சிதான். என்னை விட்டு அவன் விலகிச் செல்ல வேண்டுமானால் அவனை வெறுப்பது போல நான் நடிக்க வேண்டும் என்று முடிவு எடுத்தவள்,  கண்ணன் மட்டும்தான் தியாகம் செய்ய வேண்டும் என்றில்லை, இதை மறுப்பதன் மூலம் தானும் தியாகம் செய்யலாம் என்றும் நினைத்தாள்.

வாசலில் மோபாட் சத்தம் கேட்டது. யாரென்று எட்டிப் பார்த்தாள் மாலதி. வெள்ளை பனியனும், இடுப்புப் பட்டிகட்டிய காக்கிப் பான்ஸ்சும், முறுக்கு மீசையும் பொலீஸ்காரர் என்று காட்டிக் கொடுத்தது.
'என்னைத் தெரியுதாம்மா..?' என்றபடி உள்ளே வந்தார்.
மாலதி 'தெரியாது" என்று தலையசைத்தாள்.
'நான்தான் இன்ஸ்பெக்டர் கோபால். சொல்லியிருப்பானே..? ராஜனோட நெருங்கி கூட்டாளி. என்னைக் கேட்காமல் எதுவுமே செய்யமாட்டான். விதி யாரை விட்டுது. அனியாயமாய் உன்னை தவிக்க விட்டிட்டுப் போயிட்டானே. இந்த வழியாலே போனேனா, மனசுகேட்கலை, அதுதான் விசாரிச்சுட்டுப் போகலாம் என்று வந்தேன்."
அவர் குடித்திருப்பது பேச்சில் தெரிந்தது. வேண்டாத விருந்தாளியை வரவேற்க மாலதி விரும்பவில்லை. வாங்க, உட்காருங்க என்றுகூட மாலதி சொல்லவில்லை. தானாகவே உள்ளே வந்து உட்கார்ந்தவர், இருண்டு நெடுநேரமாகியும் பேச்சுக் கொடுத்துக் கொண்டே இருந்தார். மாலதியின் மடியில் உட்கார்ந்திருந்த ஆரணியும் தூங்கிப் போயிருந்தாள். அவரை எப்படி வெளியே அனுப்புவது என்று தெரியாமல் மாலதி தவித்தாள்.
'குழந்தை தூங்கிடிச்சு, நீங்க...!" மாலதி மரியாதை கருதி, புரிந்து கொள்வார் என்ற நினைப்பில் வார்த்தைகளை மென்று விழுங்கினாள்.

'குழந்தை தூங்கிடிச்சா? கொண்டு போய் கட்டில்ல கிடத்திவிடம்மா" என்றார்.
அவர் பார்வையும், சொன்ன விதமும் மாலதிக்கு நல்லதாகப் படவில்லை.
'இருண்டு போச்சு. மழையும் ஒரேயடியாய் தூறிட்டு இருக்கு.." மாலதி இந்த மனுஷன் கிளம்பினால் போதும் என்ற எதிர்பார்ப்போடு மீண்டும் சொன்னாள்.

'இனி எங்கே போகப்பேறேன். ஒரு பாய் இருந்தால் கொடம்மா, இங்கேயே ஓரமாய் படுத்துக்கிறேன்" என்றபடி எழுந்து கொட்டாவி விட்டு சோம்பல் முறித்தார்.
என்ன செய்வது என்று தெரியாமல் மாலதி திகைத்துப் போய் நிற்க, அவளின் தனிமையைத் தப்புக் கணக்குப் போட்டது அந்தப் பொலீஸ்காரன் புத்தி.
'இங்கே ஆண்துணை இல்லே, தயவு செய்து நீங்க போயிடுங்க" என்றாள் மாலதி.

'பயப்படாதேம்மா, உன்னைப்பற்றி நிறையவே சொல்லியிருக்கிறான் ராஜன். என்னோட சேர்ந்து அவனும் குடிப்பான். அவனுக்கு அளவு தெரியாது. நான் அளவோட எதையுமே நிறுத்திக் கொள்வேன். அதனாலே அவன் சொல்வது எல்லாவற்றையும் நிதானமாய்க் கேட்டுக் கொள்வேன்."
'நீங்க போயிட்டு இன்னொரு நாளைக்குப் பகல்ல வாங்களேன்" அவரின் முகத்தை முறிக்க முடியாமல் மாலதி சொன்னாள்.
'வர்றேன், அவன் உன்னைப்பற்றி என்ன சொன்னான் என்று சொல்லிர்றேனே..!'
என்னைப்பற்றியா..?
'ஆமா, படுக்கையில நீ பொம்மை மாதிரி இருப்பியாமே?"

ஆடையை ஊடுருவிய அவரது பார்வையின் உக்கிரத்தில் புழுவாய்த் துடித்தாள் மாலதி.
'அப்பவே ஓடிவந்து வந்து உன்னைப் பார்க்கணும் என்று நினைச்சேன், நேரம் கிடைக்கலை. ஆமா ஒரு நாள் உனக்கு சிகரட்டால் சூடுகூடப் போட்டதாக சொன்னானே..! அவனும் ஒரு மனுஷனா? இப்படிப்பட்ட ஒரு அழகான பெண்டாட்டியைப் பூப்போல வைச்சுக்கத் தெரியாதவன்."
அவரின் பேச்சில் இருந்து அவரது வக்கிரபுத்தி தெரிந்தது. இனியும் மௌனம் சாதித்தால் பெண்மைக்கே ஆபத்து என்று உள்மனம் எச்சரித்தது.

மெதுவாகத் திரும்பிப் பார்த்தாள். வாசற்கதவு திறந்தபடியே கிடந்தது. மழையையும் பொருட்படுத்தாமல் ஆரணியையும் அள்ளி எடுத்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாய் அடுத்த வீட்டிற்கு விரைந்தாள்.

அடுத்த வீட்டுக்கார அங்கிளிடம் விஷயத்தைச் சொன்னபோது அவரும் மனைவியும் வந்து ஒரு விதமாய் பொலீஸ்காரரைச் சமாதானப்படுத்த, மது போதையில் இருந்த அவரோ முதலில் அங்கிருந்து போகமாட்டேன் என்று கலாட்டா செய்துவிட்டு, இன்னொரு நாள் திரும்பி வருவதாகச் சொல்லி மொபாட்டில் ஏறிச் சென்றார்.

'அம்மாடி, இது ஆரம்பம்தான்! ஆண்துணை இல்லாவிட்டால் கண்ட கண்ட நாய்கள் எல்லாம் திறந்த வீட்டில புகுந்தமாதிரி உள்ளே வரத் தொடங்கி விடுவாங்க. இதைப் புரிஞ்சுக்கம்மா" அடுத்த வீட்டு மாமி மாலதிக்குப் புத்திமதி சொல்லி விட்டுப் போனாள்.

அந்தச் சம்பவம் மாலதியை நிறையவே பாதித்தது. முதன் முதலாக துணையில்லாத ஒரு பெண்ணின் தனிமையை உணர்ந்தாள். கதவை இறுகச் சாத்தி பாதுகாப்பாய் படுத்தாலும் தூக்கம் வரமறுத்தது.
எப்படியோ முதல்நாள் இரவு நடந்த சம்பவத்தைக் கேள்விப்பட்டு தேவகியும், கணவரும் மறுநாள் மாலதியின் வீடு தேடி வந்திருந்தனர்.
'மாலதி, பெற்ற மகள் கமலினியைவிட உன்மேலதான் நிறையப் பாசம் வைத்திருக்கிறேனம்மா. அதனாலேதான் சொல்லுறேன், இங்கே இருப்பது எப்பவுமே உனக்கு ஆபத்து, அதனாலே எங்ககூட வந்து தங்கிவிடேன்.'
'வேண்டாமம்மா, உங்களுக்கு என்னாலே வீண்சிரமம். நான் எப்படியும் சமாளித்துக் கொள்வேன்"

'இப்பவும் நீ எங்களை பிரித்துத்தானே பார்க்கிறாயம்மா, தேவையில்லாமல் இங்கே தனியாய் இருந்தால் இவங்க உன்னுடைய பெயரையே கெடுத்து விடுவாங்கம்மா. அப்புறம் என்ன பாடுபட்டாலும் போனபெயர் திரும்பிவராது."

'ஊர் பழிச்சாலும், என்னுடைய பெயர்தானே கெட்டுப்போகும். நான் அங்கே வந்தால் உங்க மகனின் பெயருமல்லவா கெட்டுப்போகும்" என்றாள் மாலதி.

'ஓ..! அதுவா காரணம். இப்போ புரியுது. கண்ணன் ஒன்றும் சின்னக் குழந்தையில்லை. முதல்ல இந்த விடயத்தைக் கமலினி கிட்டத்தான் சொன்னான், அப்புறம் எங்க கிட்ட சொன்னான். பார்க்கப்போனால் விருப்மில்லாத உன்னுடைய முதற் கல்யாணம் நடப்பதற்கு நானும் ஒருவிதத்தில் காரணமாய் இருந்திருக்கிறேன். நீ கஸ்டப்பட்ட போதெல்லாம் நானும் கண்ணீர் வடிச்சிருக்கிறேன். என்றைக்காவது உனக்கு விடிவு கிடைக்காதா என்றெல்லாம் ஏங்கியிருக்கிறேன். இப்போ கண்ணனே வலிய வந்து சம்மதம் கேட்டபோது தயங்காமல் பூரண சம்மதம் என்றேன். பிராயச்சித்தம் கிடைத்தது போல எனக்கு மகிழ்ச்சியாய் இருக்கு. மாட்டேன் என்று மட்டும் சொல்லிடாதயம்மா."

மாலதி என்ன சொல்வது என்று தெரியாமல் மௌனமாய் இருந்தாள். தேவகி சொல்லாமல் விட்டதைக் கனகேஸ்வரன் தொடர்ந்தார்.
'அம்மா மாலதி, அவன் உயிருக்குயிராய் உன்னை நேசிக்கிறான். இருவருக்கும் உள்ள வயசு வித்தியாசம்தான் இதுவரை அவனை உன்னிடம் மனம்விட்டுப் பேசாமல் தயங்க வைத்தது. மேலை நாட்டிலே, அமெரிக்காவிலே, ஏன் பட்டனத்திலே இது எல்லாம் சகஜம். அதனாலேதான் உன்னைத் திருமணம் செய்ய விரும்புவதாக எங்களிடம் துணிந்து கேட்டான். எங்களுக்கும் பூரண சம்மதம்."

'என்னை வற்புறுத்தாதீங்க, எனக்கு எதிலுமே நாட்டமில்லை." என்றாள் மாலதி.
'மாலதி, நீ நம்ம பெண்ணு, உனக்கு இஷ்டம் இல்லை என்றால் நாங்க இந்தத் திருமணத்திற்கு உன்னை வற்புறுத்த மாட்டோம்." என்றார் கனகேஸ்வரன்.
மாலதி நம்பிக்கையோடு அவரை நிமிர்ந்து பார்த்தாள்.
'கண்ணன் சீக்கிரமே போய்விடுவான். நீ தயங்காமல் எங்க வீட்டிலே எங்களோடு வந்து தங்கலாம்." என்றாள் தேவகி.
மாலதி சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்தாள். இந்த வீட்டிலே தனிமையில் இனியும் தங்கி இருப்பது ஆபத்தானது என்பது நேற்றைய செய்கை அவளுக்குப் புரியவைத்தது. தினமும் அயலவர்கள் அவளின் உதவிக்கு ஓடி வரப்போவ தில்லை. தற்சமயம் பெண்மைக்குப் பாதுகாப்புத் தேவை என்பதை உணர்ந்து கொண்டாள். அதுமட்டுமல்ல, தாத்தா இல்லாத குறை ஆரணிக்குத் தெரியக் கூடாது, தாத்தா, பாட்டி போன்ற பெரியவர்களின் பாசம் வளரும் குழந்தை களுக்குக் கட்டாயம் தேவை என்பதாலும், அங்கே செல்வதற்குச் சம்மதித்தாள்.

'சரி ஆன்டி, எனக்காக இல்லாவிட்டாலும், ஆரணிக்காக நான் உங்களோடு வந்து தங்கிக்கிறேன்" என்றாள் மாலதி.

'நல்ல பெண்ணும்மா, எனக்கு ரொம்ப சந்தோசம்." தேவதி விடை பெற்றாள்.
சொன்னபடியே வீட்டைக் காலி பண்ணி தேவகி வீட்டிற்கு மாலதி குடிவந்தாள். அந்த வீட்டின் செல்லப் பிள்ளை போல ஆரணி அங்கே வலம் வந்தாள். மெல்ல மெல்ல ஆரணியும் நடனம் கற்றுக் கொள்ள ஆரம்பித்தாள். தேவகி ஆன்டியோடு சேர்ந்து மாலதியும் நடன வகுப்புகளுக்கு உதவி செய்தாள்.

கடந்தகால சோகங்களை மறக்கவும், மனச் சுமைகளைக் குறைக்கவும் மாலதிக்கு நடன வகுப்புக்கள் மிகவும் உதவியாக இருந்தன. தங்கள் சொந்தப் பெண்ணைப்போல மாலதியை கணகேஸ்வரனும், தேவகியும் கவனித்து வந்தனர். ஆரணியைப் பேத்தி என்றே தெரிந்தவர்கள் எல்லோருக்கும் அறிமுகப்படுத்தினர்.

இரவு சாப்பிடும் நேரம் தவிர மற்றைய நேரங்களில் மாலதியைச் சந்திப்பதைக் கண்ணன் தவிர்த்தான். உணவருந்தும்போது மாலதி மறைமுகமாய் ஏதாவது கேட்டால்கூட அவன் அதற்குப் பதில் சொல்வதைத் தவிர்த்தான்.

அன்று மாலதி முகத்தில் அறைந்தது போல அவனுக்குச் சொன்ன பதில் அவனை நேரடியாகவே அவள் அவமானப் படுத்தியது போலவும், தன்னை விட வயதில் கூடியவள் என்பதால், தான் அனுபவம் மிக்கவள் என்று சொல்லாமல் சொல்லிக் காட்டுகிறாள் என்றும் கண்ணன் நினைத்தான். இப்படி அவள் நடந்து கொண்டது அலட்சியமா, அல்லது திமிரா என்று நினைத்து மனம் நொந்து போயிருந்தான் கண்ணன்.

கண்ணன் தன்னை அலட்சியப் படுத்துவதாக மாலதி நினைத்தாள். ஒரு நாள் பொறுக்க முடியாமல் கண்ணனிடமே கேட்டாள்.
'கண்ணா ஏன் என்னைக் கண்டா இப்போ ஒதுங்கிக் கொள்கிறாய்?"
பதில் சொல்லக் கண்ணன் ஒரு விநாடி தயங்கினான்.
'நான் என்ன செய்ய..? உனக்குப் பிடிக்காத ஒருத்தன் உன் பார்வையில் படாமல் இருப்பது உனக்கு நல்லதுதானே..?'
'ஏன் கண்ணா என்னை இப்படிப் போட்டு வதைக்கிறாய்..? என்னை நீ வெறுக்குமளவிற்கு நான் என்ன தப்புச் செய்தேன்..?'
'என்னை என்ன செய்யச் சொல்கிறாய்..?"
'உன்னைக் கல்யாணம் செய்ய மாட்டேன் என்றுதானே சொன்னேன். உன்னோடு பேச மாட்டேன் என்று சொன்னேனா?"
'என்னையே உனக்குப் பிடிக்கலை, அப்புறம் என்ன பேச்சு வேண்டியிருக்கு..?'
'என்னைப் புரிஞ்சு கொள் கண்ணா, உன்னைவிட வயசு குறைந்த பெண்ணாய்ப் பார்த்து நீ திருமணம் செய்யணும். என்னைப் போன்ற வாழ்வு இழந்தவள் மட்டுமல்ல, உன்னைவிட வயதிலும் கூடிய, ஒரு குழந்தைக்குத் தாயான விதவை ஒருத்திக்காகப் பரிதாபப்பட்டு, உன் எதிர்காலத்தை வீணடித்து விடாதே!"

'உன்னை நீ ஏன் தாழ்த்திக் கொள்கிறாய் மாலதி? பழசை எல்லாம் அவ்வளவு சீக்கிரம் உன்னாலே மறக்க முடியுதா மாலதி. என்றைக்காவது உன்னை நான் அக்கா என்று கூப்பிட்டிருக்கிறேனா? நினைவு தெரிந்த நாளில் இருந்து நீதான் எனக்கு எல்லாமாய் இருந்திருக்கிறாய். உன்னை எப்படி என்னால் மறக்கமுடியும்? தேவைப்படும் போதெல்லாம் நல்ல சினேகிதியாய், மந்திரியாய் புத்திமதி சொல்லியிருக்கிறாய், உணவு பரிமாறும்போது நல்ல தாயாய், பாடம் சொல்லித்தரும்போது நல்ல குருவாய், தெருவிலே பேசிக் கொண்டு செல்லும்போது மனசளவில் ஒரு குழந்தையாய், ஒன்றே ஒன்றைத்தவிர, எல்லாமாய் எனக்கு நீ இருந்திருக்கிறாய். அந்த ஒன்றைத்தான் இப்போ கேட்டேன். நீ மறுத்துவிட்டாய்! இப்பகூட எனக்கு உன்மேல கோபமில்லை. என் வாழ்க்கையிலே நீ குறுக்கிடாமல் இருந்திருந்தால், தினம் தினம் நான் படும் இந்த அவஸ்தைகளைத் தவிர்த்திருக்கலாம்!

மாலதி, முகத்தில் எந்த உணர்வும் காட்டாது தலை குனிந்தபடி அவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

ஒன்று மட்டும் ஞாபகம் வைச்சுக்கோ மாலதி, உன்னைத் தவிர வேறு யாருக்கும் என் வாழ்க்கையில் இடமில்லை! வாழ்ந்தால் உன்னோடுதான் வாழ்வேன், இல்லை என்றால்..!

இல்லை என்றால்..? ஏதாவது ஏடாகூடமாய் செய்து விடுவானோ என்று பயந்துபோன மாலதி பதட்டப்பட்டாள்.

    

அத்தியாயம் - 17

               கண்ணன் சொன்னதைக் கேட்டு பதட்டப்பட்ட மாலதி,
என்ன கண்ணா, ஏன் இப்படி எல்லாம் பேசுகிறாய்..? என்றாள்.
நான் உன் கனவுகளோடு இப்படியே கடைசிவரையும் வாழ்ந்து மடிந்துவிடுவேன்." ஏக்கப் பெருமூச்சோடு கண்ணன் சொல்லி முடித்தான்.
கண்ணன் பிடிவாதக்காரன். சொன்னால் அதைக் கடைசிவரையும் கடைப்பிடிப்பான் என்பது மாலதிக்குத் தெரியும். அவனுக்குத் தன்னுடைய பரிதாப நிலையை எப்படிச் சொல்லி விளங்க வைப்பது என்று தெரியாமல் மாலதி தவித்தாள்.
'தப்பு என்மேலும் இருக்குக் கண்ணா. என்னுடைய நிலையில் நின்று உன்னைப் பார்த்தேனே தவிர, உன்னுடைய நிலையில் நின்று, உன்னுடைய ஏக்கங்களைப் புரிஞ்சுகொள்ள நான் நினைத்ததில்லை. நான் பாசம் என்று நினைத்து உன்னோடு நெருங்கிப் பழகியதை நீ தப்பாய் எடுத்துவிட்டாய். எப்போ அப்படி ஒரு எண்ணம் உனக்கு ஏற்பட்டதோ எனக்குத் தெரியவில்லை. என்னை மன்னிச்சிடு..!

கண்ணனின் மௌனம் அவளுக்கு எரிசலூட்டியது.
ஏதாவது சொல்லித் தொலையேண்டா! எத்தனை தடவை உன்னைத் தொட்டிருக்கிறேன். உன்னைவிட வயதில்கூடியவள் என்பதால், உன் அக்காவைப்போல நானும் அதைத் தப்பாக எடுக்கவில்லை. ஆனால் என்னுடைய செய்கை ஒவ்வொன்றையும் நீ வேற அர்த்தத்தோடு பார்த்திருக்கிறாய். இத்தனை வருடமாய் அந்த எண்ணத்திலேயே வாழ்ந்தும் இருக்கிறாய். சொறி கண்ணா..! என்று இரக்கத்தோடு அவனைப் பார்த்தாள்.

இன்னும் என்ன சொல்லப் போகிறாய், சொல்ல வேண்டிதைச் சொல்லிமுடி..! என்பதுபோலக் கண்ணன் அவளைப் முறைத்துப் பார்த்தான்.

'உன்னுடைய வேதனை எனக்குப் புரியுது கண்ணா, இனியாவது பழசை எல்லாம் மறந்திட்டு, அந்த தப்பான எண்ணத்தை மாற்றிக் கொள்ளேன் கண்ணா! ப்ளீஸ்..!" மாலதி கண்ணனின் கைகளைப் பற்றிக் கொண்டு கெஞ்சினாள்.

விழி ஓரம் நீர் முட்டி நின்றது.

வேண்டாம், விடு..! என்று அவளது கைகளை உதற எத்தனித்தவன்,
'இந்தாபார் இதைத்தான் இத்தனை வருடமாய் திரும்பத் திரும்பச் செய்கிறாய். நீ தொடும்போதெல்லாம் என்னையே நான் மறந்து விடுகின்றேன். நான் ஒரு ஜடமாய் இருந்திருந்தால், நீ என்னைத் தொடும்போதெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு உணர்ச்சியே இல்லாத ஜடம்போல இருந்திருக்கலாம். என்னால முடியலையே மாலதி..!" என்றான் கண்ணன்.

'சொறிடா கண்ணா..!" ஏதோ தப்புச் செய்துவிட்டது போல மாலதி பதட்டப்பட்டு கைகளை உதறிக் கொண்டாள்.
'ஏன் இப்படிப் பதட்டப்படுகிறாய்?" உதறிய கைகளைப் பற்றிக் கொண்டே அவளது கண்களை ஊடுருவிப் பார்த்தான் கண்ணன். ஏனோ மாலதியின் இதயம் சில்லிட்டது.

"என்னைவிட அழகான ஒரு பெண்ணை நானே பார்த்துச் சொல்கிறேன், அவளைக் கட்டிக்கிறியா கண்ணா..?"
கண்ணன் மீண்டும் அவளை முறைத்தான்.
'வேண்டாம், எனக்கு வேறு யாருமே வேண்டாம். எனக்குத் தேவை நீ தான்.! இதை நீ புரிந்து கொண்டால் சரி!"
'இப்படிச் சொல்லி என்னை ஏன் வதைக்கிறாய், இதை எல்லாம் கேட்டபிறகு  எனக்கு என்ன செய்வதென்று புரியலையே கண்ணா..!" மனமும், உடம்பும் சோர்ந்து போக, வார்த்தைகள் வெளிவந்தன.
'புரியும்..! என்மேல் நீ வைத்திருக்கும் அன்பு உண்மை என்றால் நிதானமாய் உட்கார்ந்து சிந்தித்துப்பார், எல்லாமே புரியும்!"

கண்ணனின் கோபம் நியாயமானதுதான் என்பது மாலதிக்குத் தெரியும். ஆனாலும் அவளால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எப்படியாவது அவனைச் சமாதானப் படுத்த வேண்டும் என்று நினைத்தாள்.
'ஏன் எதற்கெடுத்தாலும் கோபப்படுகிறாய் கண்ணா? பொறுமையாச் சொல்லு, நான் என்ன செய்யணும்..?" மெதுவாய், நிதானமாய்க் கேட்டாள் மாலதி.
'ஒன்றுமே செய்ய வேண்டாம்! நீ எனக்கு இல்லை என்ற பிறகு உன்னிடம் கேட்க எதுவுமே இல்லை மாலதி, இப்ப உன்கிட்ட நான் கேட்பதெல்லாம் ஒன்றுதான். உன்மீது எவ்வளவு அன்பு வைத்திருந்தேனோ அதேபோல உன் குழந்தை ஆரணி மேல் அளவில்லாத பாசம் வைத்திருக்கிறேன். அவளை எந்தக் காரணம் கொண்டும் என்னிடம் இருந்து பிரிச்சிடாதே..! அவளை அமெரிக்காவிற்கு அழைத்துச் சென்று அங்கே படிப்பிக்க வேண்டும் என்று, அவளுடைய எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்று நிறையக் கனவுகள் கண்டு கொண்டிருக்கிறேன்!" அவன் அழாக்குறையாக மாலதியிடம் முறையிட்டான்.

மாலதி நினைத்துப் பார்த்தாள். சின்னவயதில் இருந்தே கண்ணன்மேல் அவள் அளவிற்கு அதிக பாசம் வைத்திருந்திருக்கிறாள். கமலினியைவிட அதிக பாசத்தோடு பழகியிருக்கிறாள். கண்ணன் சொன்னதுபோல தாரம் என்ற ஒன்றைத்தவிர, இதுவரை அவனுக்கு அவள் எல்லாமாய் இருந்திருக்கிறாள். ஆனால் கண்ணனோ மாலதியை, அக்கா என்று அழைக்காமல் பெயர் சொல்லியே அழைத்ததால் சின்னவயதில் இருந்தே பாசம் என்பதைவிட அன்புதான் அங்கே நிறைய இருந்திருக்கிறது. அந்த அன்புதான் மாலதியை அவனுடைய முன்னோடியாக, வழிகாட்டியாக, ஏன் எல்லாமாகவே அவனைப் பார்க்க வைத்திருக்கிறது.

அனேகமாக டீன்ஏச்சில் இருக்கும் ஆண்களுக்கு அவர்களைவிட வயதில் கூடிய  பெண்கள்தான் அவர்களுடைய உதாரணப்பெண்களாக இருப்பார்கள். பெண்களின் மனவளர்ச்சி மட்டுமல்ல, அந்தப் பருவத்தில் அவர்களின் உடல் வளர்ச்சியும், ஆண்களுக்கு இப்படியான பெண்கள்மேல் ஒருவித ஈர்ப்பை ஏற்படுத்துவதற்கு முக்கிய காரணமாய் அமைந்து விடுகிறது.
சமுதாயக் கட்டுப்பாடுகள் காரணமாக, மனதுக்குள்ளேயே கற்பனை வளர்த்துக் கொள்ளும் இளைஞர்கள் அதை வெளியே சொல்வதில்லை. இங்கேயும் கண்ணனுக்கு அதுதான் நடந்தது. மாலதிமேல் கொண்ட அன்பு, டீன்ஏச்சை அடைந்தபோது மெல்ல மெல்ல அவள்மீது ஒருவித ஈர்ப்பாக மாறியது. அதுவே பின்பு அவனது சினேகிதர்கள் அவர்களை ஒன்றாச் சோடி சேர்த்துக் கேலி செய்யவே நாளடைவில் மென்மையான ஒருதலைக் காதலாய் மலர்ந்து விட்டது.

மாலதியும் சின்ன வயதில் இருந்தே கண்ணனோடு நெருங்கிப் பழகியதால் மாலதி தனக்கே உரியவள் என்ற எண்ணத்தை, மனசுக்குள்ளே வளர்த்து வந்திருக்கிறான். எனவேதான் சமுதாயக் கட்டுப்பாடுகள் காரணமாக தனது காதலை வெளியே சொல்ல முடியாமல் பல தடவைகள் அவன் அவஸ்தைப் பட்டிருக்கிறான்.

 அமெரிக்கா சென்று வந்ததால், அங்கே இப்படியான திருமணங்கள் சகஜம் என்பதால், தன்னைவிட வயதில்கூடிய ஒரு பெண்ணைத் திருமணம் செய்வது என்பது அவனுக்குத் தவறாகத் தெரியவில்லை. எனவேதான் அமெரிக்கக் கலாச்சாரத்தில் கொஞ்ச நாட்கள் ஊறிப்போன துணிவில், துணிந்து தன் எண்ணத்தை மாலதியிடம் வெளியிட்டான் கண்ணன். 
மாலதியோ சின்னவயதில் இருந்தே மனதில் எந்தத் தபப்பான எண்ணமும் இல்லாமல, கண்ணன் மேல் பாசம் மட்டும்தான் வைத்திருந்தாள். அதனால்தான் சமுதாயக் கட்டுப்பாடுகளோடு வளர்ந்த மாலதி, கண்ணன் கேட்டதும் அதை ஏற்க முடியாதவளாய் அதிர்ந்துபோய் அவனுக்கு மறுப்புச் சொன்னாள்.

ஒரு ஆணும் பெண்ணும் நெருங்கிப் பழகும்போது ஏற்படும் நட்பு சில சமயங்களில் அதன் எல்லையைத் தாண்டி காதலாய் மாறி விடுவதுண்டு. இருவருக்குமிடையே புரிந்துணர்வு இருந்தால் அது நல்லபடியாய் முடிந்துவிடும். இல்லை என்றால் அது தோல்வியில் முடிந்து ஒரே சோகக் கதையாகிவிடும்.

மாலதி வயதில் மூத்தவள் என்பதால் நட்பு, பாசம் என்ற எல்லைக்குள் நின்று கொண்டாள். கண்ணனோ  அவற்றைத்தாண்டிச் சென்று ஒருதலைக்காதல் என்ற வலைக்குள் சிக்கிக்கொண்டான். இந்தச் சிக்கலுக்கால் வெளியேற அவனுக்கு மாலதின் துணை கட்டாயம் தேவைப்பட்டது. எனவே மென்மையான இந்த உறவு உடைந்து போகாமல் காப்பதில் மிகவும் கவனமாக இருந்தான். அதேபோல மற்றவர்களுக்கு ஏற்றமாதிரி அனுசரித்துப்போகும் பழக்கம் மாலதியிடம் இருந்ததால், கண்ணனுக்காக தனது பிடிவாதத்தை தளர்த்தவும் மாலதி தயாராக இருந்தாள்.

காலையிலே மாலதி கண்ணனின் கதவைத் தட்டித் திறந்தாள். எங்கேயோ செல்வதற்காக மாலதியும், ஆரணியும் வாசலில் தயாராக நின்றார்கள்.
'என்ன..?" என்றான் கண்ணன்.
'கொஞ்சம் வெளியே போகணும், எங்ககூட வர்றியா..?
"நான் எதற்கு? சுமக்கணுமா..?" என்றான் நித்திரைத் தூக்கத்திலிருந்த கண்ணன்.
பழைய ஞாபகம் வரவே மாலதி கலகலவென்று சிரித்தாள். கண்ணனுக்கும் புரிந்துபோகவே அவனும் சேர்ந்து சிரித்தான்.
அவர்கள் ஏன் சிரிக்கிறார்கள் என்று தெரியாமல் ஆரணி விழித்தாள்.
போட்டோ ஸ்ரூடியோ ஒன்றிற்குப் போய் ஆரணியை புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.  துணிமணிகள் கொஞ்சம் வாங்கிக் கொண்டாள் மாலதி.
ஏன் திடீரென போட்டோ? கண்ணன் ஆச்சரியமாய்க் கேட்டான்.
உங்க அம்மாவிற்கு!
அம்மாவிற்கா, ஏன்?
'கமலினி; நேற்று போன் பண்ணினா." என்றாள் மாலதி.
'என்னவாம்..?" கண்ணன் சிரத்தையில்லாமல் கேட்டான்.
'கொஞ்ச நாட்கள் என்றாலும் தன்கூட வந்து  அமெரிக்காவில் தங்கவேண்டும் என்று கட்டாயப் படுத்தியிருக்கிறாள்.
'அப்படியா..?" ஆர்வமில்லாது, ஏனோதானோ என்பதுபோலக் கேட்டான்.
'என்னஇது, நான் சொல்லிட்டே போறேன், நீ அக்கறை இல்லாமல் கேட்கிறாயா..?"
'இதைக் கேட்கிறதாலே எனக்கு என்ன பிரயோசனம்? நான் என்ன செய்ய இருக்கு..?" என்றான் கண்ணன்.
'உன்னைத்தான் நம்பியிருக்கிறேன்!"
'என்னையா? எதுக்கு..?"
'நாங்களும் உன்கூட அமெரிக்கா வர்றோம்!"
'உண்மையா..?" நம்பமாட்டாமல் திரும்பவும் கேட்டான்.
"ஆமா..!" என்றாள் மாலதி. கண்ணன் நம்பமுடியாமல் விழி உயர்த்திப் பார்த்தான். அவளைப் புரிந்து கொள்ளவே முடியாமல் இருந்தது.
உணர்ச்சி வசப்பட்டவன், ஆரணியை அப்படியே தூக்கி செல்லம் என்கூட வர்றியா? என்று கன்னத்தில் முத்தம் கொடுத்தான். இதைப் பார்த்துக் கொண்டிருந்த மாலதிக்கு, தனக்கே முத்தம் கொடுத்ததுபோல உடம்பெல்லாம் புல்லரிக்கவே சட்டென்று தலை குனிந்தாள்.

எந்த நேரமும் மாலதி மனம் மாறலாம் என்ற பயத்தில், எந்த மறுப்பும் சொல்லாமல் கண்ணன் ஓடிஓடி எல்லா ஆயத்தங்களையும் செய்தான்.
ஆரணி தங்களை விட்டுப் பிரியப்போகிறாளே என்ற கவலை தேவகிக்கு இருந்தது. ஆனாலும் அவர்களின் நல்லதொரு எதிர் காலத்திற்காக இந்தப் பிரிவைத் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும் என்று கனகேஸ்வரன் ஆறுதல் கூறினார்.

தொடர்வண்டி நிலையத்தில்கூட ஆரணியைப் பிரிய முடியாமல்தான் தேவகியும், கமலேஸ்வரணும் இருந்தார்கள். பிரிவைப் பொறுக்க முடியாமல் தேவகி மாலதியிடம் மனம் விட்டுக் கேட்டாள்,
அம்மாடி குழந்தையை எங்ககிட்ட கொடுத்திடேன். நாங்க ரொம்ப கவனமாய் வளர்த்து உன்கிட்ட திருப்பிக் கொடுத்திர்றோம்.

அம்மா பேசாமல் இருக்கிறீங்களா..? யாரோ பெற்ற பிள்ளைக்காக நீங்க ஏன் ஏங்கிறீங்க? கண்ணன் தாயைக் கண்டித்தான். 
யாரோ பெற்ற பிள்ளை இல்லையடா, நம்ம பெண்ணு மாலதியோட குழந்தையடா. அவளை நாங்க யார் வீட்டுப் பெண்ணோ மாதிரியா வளர்த்தோம்..?

கண்ணன் தன்மீது கோபத்தில் இருக்கிறான் என்பது மாலதிக்கு விளங்கியது. என்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். இவனை கொஞ்சம் விட்டுத்தான் பிடிக்கவேண்டும் என்று சமாதானப் படுத்திக் கொண்டாள்.

வண்டி புறப்படச் சற்று முன்பாக, வண்டியில் ஏற அவள் ஆயத்தமானபோது அவளுக்கு அதிர்ச்சி தரும் அந்தச் சம்பவம் நடந்தது.
போலீஸ் அதிகாரி ஒருவர் வந்து கண்ணனிடம் அவனது பெயரை விசாரித்தார். அப்புறம் மாலதியிடம் ஏதோ கேட்டுவிட்டு, அவளை மட்டும் தன்னுடன் அழைத்துச் சென்று அங்கே உள்ள ஒரு அறையில் உட்காரச் சொன்னார்.
மாலதி எதுவும் புரியாமல் மிரளமிரள விழித்தாள். மாலதியிடம் மீண்டும் பெயரைக் கேட்டார்.
மாலதி என்றாள்.
மாலதி வட்? முழுப் பொயர் என்ன? அவர் கொஞ்சம் அதட்டுவது போல உணர்ந்தாள் மாலதி;. ஆனாலும் பொறுமையாகப் பதில் சொன்னாள்.
மாலதி சுந்தரேஸ்வரன்!
அப்போ மாலதி ராஜநாதன் என்று உன்னுடைய கலியாண அத்தாட்சிப் பத்திரத்தில் எழுதி இருக்கே? தான் வைத்திருந்த பிரதியைக் காட்டிக் கேட்டார்.
அது வந்து..? பதில் சொல்லத் தயங்கினாள் மாலதி.
என்ன தயக்கம்? இது உன்னோட கலியாண போட்டோதானே..?
ராஜனும் அவளும் சோடியாக நின்று கலியாணத்திலன்று எடுத்த கலியாணப்படம்.
பார்த்துவிட்டு, ஆமா என்று தலையசைத்தாள்.
இது உன்னோட கணவன்தானே? என்றார். அதற்கும் ஆமா என்றாள்.
அப்போ உன்னோட பயணம் வர்றானே அவன் யார்? அதிகாரி அதட்டினார்.
அதிர்ச்சியில் இருந்த மாலதியின் தொண்டை பயத்தில் அடைத்துக் கொண்டது.
சொல்லேன், உன்னோட கள்ளக் காதலனா? வீட்டைவிட்டு ஓடிப்போறீங்களா? அவளது முகத்தில் அறைந்தது போல பச்சையாகக் கேட்டார்.
கேட்கக் கூடததைக் கேட்டு, சூடான ரத்தம் குப்பென்று பாய்ந்து முகம் சிவந்துபோன மாலதிக்கு ஓவென்று கத்தி அழவேண்டும் போல இருந்தது.

No comments:

Post a Comment