Thursday, April 14, 2011

DRAMA UYIRPPU - உயிர்ப்பு நாடகப் பட்டறை
உயிர்ப்பு - 2011 அற்புதமான ஒரு கலை நிகழ்ச்சி

குரு அரவிந்தன்      Kuru Aravinthan

‘பூர்வீக மக்களின் குரல்’

இதிகாச‌ங்க‌ள் மாத்தி யோசிக்க‌ப்ப‌டும் போது..

The Voice of Aboriginal
சென்ற ஞாயிற்றுக் கிழமை 10-04-2011 உயிர்ப்பு நாடகப் பட்டறையின் 3வது கலை நிகழ்ச்சிக்குச் செல்வதற்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. ரொறன்ரோ, 1785 பின்ச் அவன்யூவில் உள்ள யோர்க்வூட் நூல்நிலைய அரங்கில் இந்த நிகழ்வு இடம் பெற்றது. மாலை 4:00 மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்வைப் பற்றிய விவரங்களை சுல்பிகா அவர்கள் தொகுத்து வழங்கினார். சனிக்கிழமையும் இதுபோன்ற நிகழ்வு நடந்ததாகப் பார்வையாளர் சிலர் குறிப்பிட்டனர்.

ஈழத்திலே புகழ் பெற்ற கலைஞர்கள் பலர், பிறந்த நாட்டில் ஏற்பட்ட போர் சூழல் காரணமாகப் புலம் பெயர்ந்து கனடாவைப் புகுந்த நாடாக ஏற்றுக் கொண்டிருப்பதும், அவ்வப்போது தமது ஆத்ம திருப்திக்காகக் கலை நிகழ்ச்சிகளை மேடை ஏற்றிக் கொண்டிருப்பதும் பலரும் அறிந்ததே. அப்படியான ஆர்வமுள்ள கலைஞர்களில் சிலரின் முயற்சியால் உருவாக்கப்பட்ட நாடகப் பட்டறைகளில் ஒன்றுதான் ‘உயிர்ப்பு’ நாடகப் பட்டறை.


Anangu
இந்த உயிர்ப்பு நாடகப் பட்டறையின் முதலாவது நிகழ்ச்சியாகப் ‘பூர்வீக மக்களின் குரல்’ என்ற நிகழ்ச்சி இடம் பெற்றது. இதில் இந்த மண்ணின் பூர்வீக மக்கள் சிலர் பங்குபற்றியிருந்தனர். அவர்களது இசைக் கருவியில் இசை எழுப்பி அதற்கேற்ப நடனமாடிப் பார்வையாளர்களை மகிழ்வித்தனர். எந்த மொழியில் அவர்கள் பாடினார்கள் என்று ஒரு பார்வையாளர் வினாவியபோது, அது ஒரு மொழி அல்ல வெறும் ஒலி மட்டும் ஏற்படுத்தினோம் என்று குறிப்பிட்டனர். காற்றின் மொழிதான் ஒலி, அது உங்களுக்கும், எங்களுக்கும், எல்லோருக்கும் சொந்தம் என்ற தத்துவத்தை எல்லோருக்கும் இலகுவில் புரிய வைத்தனர். கடைசியாக அவர்கள் ஏற்படுத்திய இசைக்குப் பார்வையாளர்களில் சிலரும் அவர்களுடன் சேர்ந்து நடனமாடி, அங்கேயிருந்த ஏனைய பார்வையாளர்களை மகிழ்வித்தனர். ஈழத்தமிழரின் மண்ணை இழந்த ஏக்கத்தைப் போலவே, அவர்கள் கனடிய பூர்வீகக் குடிகளாக இருந்தாலும் அவர்களின் குரலிலும் அந்த ஏக்கத்தைக் காணமுடிந்தது.


The war - Plowed Land
அந்த நிகழ்வைத் தொடர்ந்து வைரமுத்து திவ்யராஜனின் இயக்கத்தில் ‘போருழுத நிலம்’ என்ற  நாடகம் இடம் பெற்றது. ‘உங்களிடம் கேட்பதெல்லாம் ஒரு துளி மனிதம் மட்டுமே’ என்ற கருத்து தெளிவாக எடுத்துச் சொல்லப்பட்டது. இதில் சத்யா தில்லைநாதன், கே. நவம், சகாப்தன், சேகர் தம்பிராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். ஒவ்வொருவரின் அசைவிலும் அவர்களது கடின உழைப்புத் தெரிந்தது. ஒவ்வொருவரும் தாங்கள் பண்பட்ட நடிகர்கள் என்பதை மேடையில் நிரூபித்திருந்தனர்.திவ்யராஜன், சங்கீதாவின் குரலில் வெளிவந்த பாடல்கள் கவிதா நாடகத்திற்கு மேலும் வலுச்சேர்த்திருந்தன. உடை அலங்காரமும், ஒலி, ஒளி அமைப்புக்களும் நிகழ்வுக்கு ஏற்ப சிறப்பாக அமைந்திருந்தன.


Re- Contructing the classics
அடுத்து சுமதியின் பிரதி இயக்கத்தில் ‘அணங்கு’ என்ற நாடகம் இடம் பெற்றது. இதிகாசங்களின் முடிவை மாற்றி அமைத்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் உருவான இந்த நாடகம் பலரையும் கவர்ந்ததில் வியப்பில்லை. இந்த நாடகத்தில் தர்சினி வரப்பிரகாசம், யாழினி ஜோதிலிங்கம், மயோ மனோ, ஜலஜா யோகராஜ், நிவேதா ரவி, சமீரா சுல்பிகா, மயூரி யோகராஜ், அன்ரன் மானுவேல் ஆகியோர் பங்கு பற்றியிருந்தனர். மாற்றுக் கருத்தும், வௌ;வேறு கோணங்களில் நின்று வெளிப்படும் சிந்தனைகளும் ஆணாதிக்கத்திற்கு விடப்படும் சவால்களாக அமைந்திருந்தன. கண்ணகி, சீதை, மணிமேகலை போன்ற பாத்திரங்களின் மாற்றுக் கருத்தை ஏற்றுக் கொள்வதும் விடுவதும் அவரவர்


விருப்பமாகையால், சொல்ல வந்த கருத்து ஒரு சிலரின் மனதைத் தொட்டு மாற்றங்களை ஏற்படுத்தினாலும் அதன் வெற்றி பிரதி இயக்குனர் சுமதிக்கும், தங்கள் பண்பட்ட நடிப்பால் பார்வையாளர்களைக் கவர்ந்த நடிகர்களையுமே சேரும். தர்சினி, அன்ரன் ஆகியோரின் இறுதி நடனம், நிறைவான பயிற்சி பெற்ற நடனமாக மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. சிலர் ஏற்கனவே இந்த நாடகத்தைப் பார்த்து விட்டதாகச் சொன்னாலும், மொத்தத்pல் பார்வையாளர்களை நேரம் போனதே தெரியாமல் கட்டிப்போட்ட ஒரு நிகழ்வாக இது அமைந்திருந்தது.


Time Travel
இறுதி நிகழ்வாக ‘காலப்பயணம்’ என்ற நாடகம் இடம் பெற்றது. பிரதி இயக்கம் சக்கரவர்த்தி. வரலாற்றுப் புத்தகத்தில் இருந்து கிழித்தெடுக்கப்பட்ட பக்கமாக 2011 ஆண்டுகளுக்கு முன்நோக்கிய பயணமாக இந்த நாடகம் அமைந்திருந்தது. இதில் பிரசாத் சிவா, தர்ஷன் சிவா, ரமேஷ், மித்ரன், திருமாவளவன் ஆகியோர் நடித்திருந்தனர். இடைவேளைக்குப் பின் நடந்ததாலோ என்னவோ பார்வையாளர்கள் சிலர் அதிக கவனம் செலுத்தாது இருந்தனர். யேசுவை சிலுவையில் அறைந்த சம்பவத்தைக் கருப் பொருளாகக் கொண்டு, தவறான பாதையில் வழி நடத்தப்படும் எந்த மதமும் மக்களை நல்வழிப்படுத்தாது என்பதை எடுத்துச் சொல்லும் நாடகமாக இது அமைந்திருந்தது. தொன்மாக்கள் (Ancestors) நடன அமைப்பை தர்சினி வரப்பிரகாசமும், போர் செய்யும் ஆணுடலுக்கான நடன அமைப்பை சுதர்ஸன் துரையப்பாவும் செய்திருந்தனர். இந்த நடனங்களில் இளைஞர்களும் யுவதிகளும் நிறையவே பங்குபற்றியிருந்தனர்.

An extracted page from history
மொத்தத்தில் மாற்றுக் கருத்துக்களைச் சொல்ல வந்த நாடகங்களாகவே இவை அமைந்திருந்தன. சொல்லப்பட்ட இந்தக் கருத்துக்களை ஏற்றுக் கொள்வதும் விடுவதும் பார்வையாளர்களைப் பொறுத்தது. நேற்று பிழையான கருத்தாக இருந்தது இன்று சரியாகத் தோன்றலாம். இன்று பிழையான கருத்தாகத் தெரிவது நாளை சரியாகவும் தோன்றலாம். அதேபோலச் சரியான கருத்துக்கூடப் பிழையாகத் தோன்றலாம். எனவே காலமும் இடமும் மாறும்போது கருத்துக்கள் கொள்கைகளில் மாற்றங்கள் ஏற்படலாம். ஆனாலும் ஒரு நாடகத்தை மேடை ஏற்றுவது என்பது எவ்வளவு கடினமானது என்பதை அறிந்தவன் என்ற வகையில், இந்த நிகழ்வை நடத்தியவர்களின் கடின உழைப்பைக் கட்டாயம் பாராட்டியே ஆகவேண்டும். சினிமாவுக்குள் மூழ்கிப்போகாமல் மேடை நாடகங்கள் இந்த மண்ணில் இன்றும் நிலைத்து நிற்பது அதிசயமே!.

No comments:

Post a Comment