Saturday, May 7, 2011

Bharradhi Kalaikkoyil - பாரதி கலைக் கோயிலின் திறன்காணல் நிகழ்வு – 2011

பலராலும் பாராட்டப் பெற்ற பவதாரணியின் பாரதி கலைக் கோயிலின் திறன்காணல் நிகழ்வு – 2011

(குரு அரவிந்தன்)

சையிலும் கலையிலும் ஆர்வமுள்ள பல கனடிய மணவ செல்வங்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டு தங்கள் பல்வேறு வகைப்பட்ட திறமைகளின் ஒரு பகுதியை வெளிப்படுத்தும் ஒரு இனிய நிகழ்வாகச் சென்ற கிழமை நடைபெற்ற பவதாரணியின் பாரதி கலைக் கோயிலின் திறன் காணல் நிகழ்வு – 2011 அமைந்திருந்தது. பலராலும் பாராட்டப் பெற்ற பவதாரணியின் பாரதி கலைக் கோயிலின் இந்த திறன் காணல் நிகழ்வு – 2011, ஏப்ரல் மாதம் 22ம், 24ம் திகதிகளில், 610 Coronrtion Drive  வில் உள்ள IDOL Community Services மண்டபத்தில் இடம் பெற்றது. இந்த திறன் காணல் நிகழ்வில்  இசையிலும் கலையிலும் ஆர்வமுள்ள பல மாணவர்கள் கலந்து கொண்டனர். இறுதி நாளான ஞாயிற்றுக் கிழமை மாலை நடைபெற்ற நிகழ்வில் இளம் பாடகர்கள், நடன தாரகைகள், இசைக் கலைஞர்கள் பலர் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர். வித்தியாசமாக அமைந்திருந்த இந்த இலவச திறன் காணல் நிகழ்வின் மூலம் மண்டபத்தில் கூடியிருந்த மாணவச் செல்வங்களின் பெற்றோர்களும், இசைப்பிரியர்களும் சிறந்த அனுபவத்தைப் பெற்றுக் கொண்டனர்.

தன் உறக்கத்திலும் எம்மை விழித்திருக்கச் செய்திருக்கும் இசைத்தாய் பவதாரணி மதிவாசனின் ஆசியால் வேகமாக வளர்ந்து வரும் எம் கலைக்கோயில் ‘பவதாரணியின் பாரதி கலைக் கோயில்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக நிகழ்வில் அறிவிக்கப்பட்டபோது பலரும் கரகோசம் செய்து அந்த மாற்றத்தை வரவேற்றனர். பவதாரணியின் கற்பித்தல் முறையைப் பின்பற்றி அவருடைய வழிநடத்தலின்படி மாணவர்களுக்கு இலகுவாக இசை பயிற்றுவிக்கும் பாணியில் ஒரு பகுதியே இந்தத் ‘திறன் காணல்’ நிகழ்வாகும்.

அமரர் பவதாரணியின் பாரதி கலைக் கோயில் மாணவர்கள் கனடாவில் மட்டுமல்ல, இலங்கை, இந்தியா, ஐரோப்பிய நாடுகள் என்று சமீபத்தில் உலகெல்லாம் அவர்கள் இசைப்பயணம் மேற்கொண்டு தமது திறமைகளை வெளிக்காட்டியிருந்தது இசைப் பிரியர்களான உங்களுக்கு நினைவிருக்கலாம்.

விரல்விட்டு எண்ணக்கூடிய அளவு மாணவர்களோடு 1996ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பாரதி கலைக்கோயில் இன்று வளர்ந்து கிளைபரப்பி இசைத் தாகத்தைத் தீர்க்கும் கற்பகதருவாய் நிற்கிறது. இதன் வளர்ச்சிக்கு திரு. எஸ். மதிவாசனும் அவரது மனைவியான அமரர் பவதாரணி மதிவாசனுமே முக்கிய காரணமாக இருந்தனர். ‘இசைத்தாய்’ என்று மாணவர்களால் பாராட்டப்பட்ட பாரதி கலைக் கோயில் அதிபர் பவதாரணியின் திடீர் மறைவு மாணவர்களுக்கும், இசைப்பிரியர்களுக்குப் பெரியதொரு இழப்பாக இருந்தாலும் அந்த இழப்பை நிவர்த்தி செய்து பாரதி கலைக் கோயிலைத் தொடர்ந்தும் தலை நிமிர்ந்து நிற்க வைத்த பெருமை திரு. எஸ். மதிவாசனையும், அவரது உதவியாளர்களையுமே சேரும். பாரதி கலைக் கோயிலின் பெயரை அமரர் பவதாரணிக்குச் சமர்ப்பணமாக ‘பவதாரணியின் பாரதி கலைக் கோயில்’ என்று பெயர் மாற்றப்பட்டிருப்பதும் இங்கே குறிப்பிடத் தக்கது.


அமரர் பவதாரணியின் பாரதி கலைக் கோயிலால் பல நுண்கலைகளும், பாடநெறிகளும் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்ற செய்தி மாணவர்களுக்கு மேலும் உட்சாகம் தருவதாக இருக்கின்றது. தமிழ், வாய்ப்பாட்டு, வீணை, மிருதங்கம், வயலின், பரதநாட்டியம், தபேலா, ட்றம்ஸ், கிட்றார், கீபோர்ட் போன்ற நுண்கலைத் துறைகளில் மாணவர்கள் கற்ற நெறிகளில் இருந்து திறன் காணல் நிகழ்வு இடம் பெற்றது. இதைவிட தமிழ், தியானம், யோகாசனம், வீடியோ படப்பிடிப்பு, போன்ற பல நுண்கலைகளும் இங்கே கற்பிக்கப்படுகின்றன. இந்த மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்த உதவியாக இருந்த பாரதி கலைக் கோயில் ஆசிரியர்களும், தன்னார்வத் தொண்டர்களுமான நிசாந்தன் பாலகுமார், லசாந்தி ராஜ்குமார், மாலினி பரராஜசிங்கம், கிரிதரன் சச்சிதானந்தம், காண்டீபன் ரங்கநாதன், குகன் சிவசுப்ரமணியம், சஹானா ராஜசிங்கம், துபாரகன் சோதிலிங்கம், பிரவீன் மதிவாசன், பவித்ரா இரத்தினசிங்கம்,

மற்றும் கலைக்கோயில் அதிபர் மதிவாசன் சீனிவாசகம் ஆகியோரும், உதவி ஆசிரியர்களாகக் கடமையாற்றும் குயின்சி சோமசேகரம் நயனி இராமகிருஷ்னன், தட்சணன் உதயகுமார், செந்தூரன் மாணிக்கவாசகர், திவாகர் பாலயோகேஸ்வரன் ஆகியோரும், மேலும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறப் பின்னணியில் நின்று பாடுபட்ட நிலா முரளிதரன், யாழினி அருள், இரத்னேஸ்வரன், தன்னார்வத் தொண்டர்கள், பெற்றோர்கள் ஆகியோரும் நிச்சயமாகப் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

சென்ற வெள்ளிக் கிழமையும், ஞாயிற்றுக் கிழமையும், நடைபெற்ற இந்த நிகழ்வில் ரொறன்ரோவைச் சேர்ந்த பலகல்விமான்களும், பல்வேறு துறைசார் கலைஞர்களும் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர். இரு தினங்களாக நடைபெற்ற இந்த நிகழ்வில் மகாஜனக்கல்லூரி முன்னாள் அதிபர் திரு பொ. கனகசபாபதி, திரு. திருமதி பேராசிரியர் இ. பாலசுந்தரம், எழுத்தாளர்களான திரு. திருமதி குரு அரவிந்தன், கனடா உதயன் பத்திரிகை ஆசிரியர் ஆர் என். லோகேந்திரலிங்கம், கனடா தமிழ் எழுத்தாளர் இணையத் தலைவர் த. சிவபாலு, கதிர் ஒளி ஆசிரியர் இராஜபாண்டியன் போல்ராஜ், நாடக நெறியாளரும், மகாஜனாக் கல்லூரி பழைய மாணவர் சங்கத் தலைவருமான சாந்திநாதன், மூத்த கலைஞரும் நடிகருமான கே. எஸ். பாலச்சந்திரன், சிந்தனைப்பூக்கள் திரு. திருமதி பத்மநாதன், கலைஞர் மனுவல் ஜேசுதாசன், பேராசிரியர்களான திரு. திருமதி சுப்ரமணியன், நாடகக் கலைஞர் புராந்தகன், சினிமா கலைஞர் திருமதி பவானி, எழுத்தாளர் வேலாயுதபிள்ளை, கலைஞர் இராசநாயகம், எழுத்தாளர் சிவநாயகமூர்த்தி, முன்னாள் மகாஜனாக் கல்லூரி பழைய மாணவர் சங்கத் தலைவர் நந்தீஸ்வரர், கலாநிதி சிவகணேஷநாதன், ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர்.

திறன் காணல் நிகழ்வு சிறப்பாக நடைபெற,  தன்னார்வத் தொண்டர்களும், மாணவர்களும், பெற்றோர்களும்  கடமை உணர்வோடு முன்னின்று பாடுபட்டனர். வருடாவருடம் நடக்கும் இத்தகைய திறன் காணல் நிகழ்வுகள் மூலம் பாரதி கலைக் கோயில் நிறுவுனர் அமரர் இசைத்தாய் திருமதி பவதாரணி மதிவாசனின் கனவுகள் அக் கல்லூரி மாணவர்களின் பங்களிப்போடு ஒவ்வொன்றாக நிறைவேறுவதை நினைக்க எமக்கும் பெருமையாக இருக்கிறது.

பாரதி கலைக்கோயில் நிறுவனர் திரு.எஸ்.மதிவாசனின் வழிநடத்தலில் கலைஞர் திரு. டாக்டர் கதிர் துரைசிங்கம் நிகழ்ச்சிகளைக் கொண்டு நடத்தினார். இத்தகைய இசை நிகழ்வுகள் எம் இளம் சந்ததியினருக்கு பல கோணங்களிலும் உதவியாக இருப்பது மட்டுமல்ல, அவர்களது திறமைகளை அடையாளம் கண்டு அவர் தம் வளர்ச்சிக்கும் வழிகாட்டியாக அமையும் என்பதைப் பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். தாம் கற்ற கலையை திறன் காணல் நிகழ்வின் மூலம் சபையில் சமர்ப்பித்துப் பலரின் பாராட்டையும் பெற்ற மாணவர்களுக்கும், அதற்கு ஊக்கமும் ஆக்கமும் தந்த பெற்றோருக்கும் எமது மனமார்ந்த பாராட்டுக்கள் உரித்தாகுக. பவதாரணியின் பாரதி கலைக் கல்லூரி தொடர்ந்தும் புலம் பெயர்ந்த மண்ணில் சிறப்பாகச் சேவையாற்றி, எனது மொழி, பண்பாடு, கலாச்சாரம், இசை, நுண்கலை, போன்றவற்றைப் பேணிக்காக்க வேண்டும் என்று மனதார வாழ்த்துகின்றோம். இறுதியாக பெரியவர் சிறியவர் என்ற பேதமில்லாமல் எல்லோரையும் மன மகிழவைத்த இந்த நிகழ்விற்கு ஊக்கம் தந்து உட்சாகம் கொடுத்த சிறப்பு விருந்தினர்களுக்கும், பெற்றோர்களுக்கும், தன்னார்வத் தொண்டர்களுக்கும், நிகழ்வில் கலந்து கொண்ட பார்வையாளர்களுக்கும் கலைக் கோயிலின் சார்பில் அதிபர் திரு. எஸ். மதிவாசன் அவர்கள் நன்றி தெரிவித்தார்.

1 comment:

 1. இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவில்லையே என்ற ஏக்கத்தை உங்களது இந்த விமர்சனம் ஓரளவாவது தீர்த்து வைத்துள்ளது அதாவது நேரடியாகவே நிகழ்வில் கலந்து கொண்ட ஒரு உணர்வை தந்துள்ளது.
  பாராட்டுக்கள்.
  மதிவாசன் எனது நண்பன் பலகாலமாக தொடர்புகள் இல்லை இருப்பினும் கடந்தவருடம் அவரது கலையரங்கில் எங்கவூர் "இலக்கணாவத்தை மக்கள்" ஒன்றுகூடலை நடத்தியிருந்தோம்.
  பவதாரனி சமூகத்தில் தனக்கென்றோரு இடத்தை பதிவு செய்துள்ளா, அழியாச்சொத்து.
  தனது பெயரை ஞாபகப்படுத்தும்படி பல கலைஞர்களை உருவாக்கியுள்ளா. எல்லோருக்கும் பாராட்டுக்களும், நன்றிகளும் உரித்தாகட்டும்.

  நன்றி,
  மு.லிங்கம்.

  ReplyDelete