Friday, June 17, 2011

ஈழத்துப் பூராடனார் - Eelathu Pooradanar

நாடகக் கலையும் ஈழத்துப் பூராடனாரும்

குரு அரவிந்தன்

Eelathu Pooradanar
னடாவில்தான் அவரை நான் அறிந்து கொண்டேன். முதல் சந்திப்பிலேயே அவருடைய தோற்றம், அந்த குழந்தைத்தனமான சிரிப்பு எல்லாமே என்னைக் கவர்ந்திருந்தன. மகாஜனாக் கல்லூரி முன்னாள் அதிபர் திரு. பொ. கனகசபாபதி அவர்கள்தான் அவரை ‘ஈழத்துப் பூராடனார்’ என்று சொல்லி என்னை அவருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். இவர்தான் முதன் முதலாக கணினித் தமிழுருவை உருவாக்கியவர் என்றும் அவரைப் பற்றிய சிறு குறிப்பு ஒன்றையும் சொல்லி வைத்தார்.

அதன்பின் எனது சுய தேடல்களின் மூலம் அவரைப் பற்றி நிறையவே அறிந்து கொள்ள முடிந்தது. சில விடையங்களில் அவருக்கு இருந்த ஆவர்வம் போலவே எனக்கும் இருந்ததால் அவரது முயற்சிகள் பற்றி அறிந்து கொள்வதில் நான் அதிக ஆர்வம் காட்டினேன். குறிப்பாக நாடகத்துறை, சினிமாத்துறை போன்றவற்றில் அவருக்கு இருந்த ஈடுபாட்டில் கவனம் செலுத்தினேன். நாடகத்துறையின் நவீன தொழில் நுட்ப வளர்ச்சியில் உருவானதுதான் சினிமாத்துறை என்பதால், சினிமாத் துறையில் எனக்கு இருந்த ஈடுபாடு காரணமாக அவருடைய மேற்;பார்வையில் அவரது மகன் ஜார்ஜ் இதயராஜ் என்பவரால் தயாரிக்கப்பட்ட தமிழ் மகன் படத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இதைவிட தமிழ் திரைப்படக் களஞ்சியம் என்ற பெயரில் பல ஆய்வுக் கட்டுரைகளைத் தொகுதிகளாக ஈழத்துப் பூராடனார் வெளியிட்டிருக்கின்றார். இதன் மூலம் அவருக்குச் சினிமாத்துறையில் இருந்த  ஆர்வத்தையும்,  அதற்காக அவர் எடுத்துக்கொண்ட விடாமுயற்சியையும், மெச்சினேன்.

ஊரிலே அனேகமான குழந்தைகளுக்கு ஏடு துவக்கி வைத்தது போலவே என்னுடைய தந்தையாரும் எனக்கும் ஏடு துவக்கி வைத்தார். அப்பொழுதெல்லாம் பச்சை அரிசியைத் தட்டிலே பரப்பி அதிலே அ  ஆ இ ஈ என்று சுட்டுவிரலால் எழுதச் சொல்வார்கள். இப்பொழுதெல்லாம் கனடாவில் சிலர் தங்களது குழந்தைகளுக்கு ஏடு துவக்கினாலும், கணினிக்கு முன்னால் உட்கார்ந்து ஒவ்வொரு தமிழ் எழுத்துக்களையும் தேடித் தேடி அச்சில் பதிக்கும்போது எனக்கு அந்த நாட்களில் எனது தந்தையார் ஏடு துவக்கிய ஞாபகம்தான் வரும். அதேசமயம் கணினித் தமிழுருவில் கனடாவில் இருந்து எங்களுக்கு கணிணியில் ஏடு துவக்கிவைத்த ஈழத்துப் பூhhடனாரின் ஞாபகமும் வரும். முதன் முதலாக தமிழுரு ஒன்றைத் தானாகவே உருவாக்கி கணினியில் தமிழின் பாவனையை அறிமுகப் படுத்திய பெருமை இவரையே சாரும். தான் உருவாக்கிய தமிழ் எழுத்துருவிலேயே தனது ஆக்கங்களை வெளியிட்ட பெருமையும் இவரையே சாரும். பெத்லேகம் கலம்பகம் என்ற தனது நூலை 1986ம் ஆண்டு இந்தத் தமிழ் எழுத்துருவிலேயே வெளியிட்டார். கோடிக்கணக்கான தமிழர்கள் தமிழகத்தில் இருந்தாலும் இதுவரை பொதுவான ஒரு தமிழுருவை ஏற்படுத்தி, எல்லோரும் பாவிக்க்கூடியதாக இலவசமாக எமக்குக் கிடைக்க வைக்காதது நாம் செய்த துர்ப்பாக்கியமே. ஆளுக்காள் ஒவ்வொரு தமிழுருவப் பாவிப்பதும், அதன் காரணமாக எழுத்துருவைப் வாசிக்க முடியாமல் போவதும் எமது தாய்மொழியின் பின்னடைவுக்கு முக்கியமான ஒரு காரணம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

செட்டிப்பாளையம் என்னும்  ஊரில் வாழ்ந்த நாகமுத்து சாமுவேல் கதிர்காமத் தம்பிக்கும், வள்ளியம்மை அம்மாளுக்கும் 1928ம் ஆண்டு மார்கழி மாதம் 13ம் திகதி மகனாகப் பிறந்த க.தா. செல்வராஜகோபால் பிற்காலத்தில் தோற்றாத் தீவில்தான் வாழ்ந்தார். இலங்கையில் ஆசிரியராகப் பணி புரிந்த இவர், நாட்டின் போர்ச் சூழல் காரணமாக நீண்ட காலம் அங்கே வாழ முடியாததால், 1985ல் கனடாவிற்குப் புலம் பெயர்ந்தார். இங்கே வந்தும், தமிழை வாழவைக்க அவர் பின்னிற்கவில்லை. தமிழ் நூல்களை வெளியிடுவதற்கான தேவை கருதி அச்சகம், பிரசுரம் போன்றவற்றை நிறுவினார். தமிழ் மக்கள் பயனுறும் வகையில் நிழல் என்ற சஞ்சிகையையும் வெளியிட்டார். இவரது எழுத்தாளுமை கதை, கட்டுரை, கவிதை, நாடகம், திறனாய்வு, மொழிபெயர்ப்பு என்று பன்முகப்பட்டதாக விளங்கியது. இவர் இலங்கையில் உள்ள மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்தவராகையால் அப்பகுதி மக்களின் பண்பாடு, கலாச்சார, நாட்டுப்புற கலைகள், பழக்க வழக்கங்கள் பற்றி எல்லாம் தனது அனுபவ மூலமாக எழுதியிருக்கின்றார்.

1995ல் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் கனடாக் கிளையை ஆரம்பிப்பதற்கு முன் நின்று பாடுபட்டார். அதன்பின் பல ஆண்டுகள் அதன் காப்பாளராகவும் இருந்து கடமையாற்றினார். இலங்கையின் கிழக்குப் பல்கலைக் கழகம் அவரைக் கௌரவிக்கும் முகமாக அவருக்கு கலாநிதிப்பட்டம் கொடுத்துக் கௌரவித்தது கனடியத் தமிழ் மக்களுக்குப் பெருமை சேர்ப்பதாக இருந்தது.

முத்தமிழில் ஒன்றான நாடகத்துறை சார்ந்த பல ஆக்கங்களை ஈழத்துப் பூராடனார் எமக்காக ஆவணப்படுத்திவிட்டுச் சென்றுள்ளார். நாடகத் துறையில் அவருக்கிருந்த அளவில்லா ஆர்வமே இதற்குக் காரணமாகும். முற்காலத்தில் கூத்துக்கள் எல்லாம் செய்யுள் வடிவிலேயே அமைந்திருந்தன. சங்க இலக்கியங்களில் கூத்து என்ற சொல் பாவனையில் இருந்திருக்கிறது. சங்க இலக்கியமான சிலப்பதிகாரத்தில் பதினொரு வகை ஆடல்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழர்களின் பாரம்பரியத்தை அடையாளப் படுத்தும் மேடைக்கூத்து, தெருக்கூத்து என்று வௌ;வேறு வடிவங்களில் இவை இருந்தன. கூத்துக் கலை என்பது நாட்டியம், நாடகம் ஆகிய இரு கலைகளுக்கும் பொதுவானது. வழிபாட்டுத் தலங்களிலும், பொது இடங்களிலும் கூத்துக்கள் இடம் பெற்றன. குரவைக்கூத்து, ஆரியக்கூத்து, பாவைக்கூத்து, வள்ளிக்கூத்து, துணங்கைக்கூத்து என்று ஆடலும் பாடலுமாகப் பலவகையான கூத்துக்களும் சங்ககாலத்தில் இருந்தே இடம் பெற்று வருகின்றன. இளங்கேவடிகள் நாடகம் என்ற சொல்லை சங்க இலக்கியத்தில் குறிப்பிட்டிருந்தாலும், சுப்ரமணியபாரதியின் காலத்தின் பின்தான் அவை மெல்லமெல்ல வசனநடைக்கு மாறிவந்தன. நாடகத் துறையைப் பொறுத்த வரையில் ஈழத்துப் பூராடனார் கூத்தர் வெண்பா, கூத்தர் விருத்தம், கூத்தர் குறள், கூத்தர் அகவல், கூத்துக் கலை திரவியம், வடமோடி, தென்மோடிக் கூத்து, கனடாவில் இருபாங்கு மரபுக் கூத்துக்கலை, போன்ற விளக்கமான நூல்களை எழுதி ஆவணப்படுத்தியிருக்கின்றார். இதைவிட கூத்துக்கலையில் சிறந்து விளங்கிய சில கலைஞர்களைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கின்றார். பழந்தமிழர் பண்பாட்டுக் கோலங்களை இத்தகைய கூத்துக்கள் புலம் பெயர்ந்த மண்ணிலும் இனங்காட்டி நின்றதால், தமிழர்கள் சென்ற இடமெல்லாம் கூத்துக் கலையும் வாழவேண்டும் என்பது அவரது விருப்பமாக இருந்தது. மேலும் ஈழத்துப் பூராடனார் தமிழழகிய காப்பியம் என்ற பெயரில் தமிழ் நுர்ல்களின் வரலாற்றை ஒன்பது காண்டங்களாக உருவாக்கியுள்ளார்.

ஈழத்துப் பூராடனார் தனது 82வது வயதில் எங்களைவிட்டுப் பிரிந்தாலும், நேற்றிருந்தார் இன்றில்லை என்ற நியதியை நாம் ஏற்றுக் கொண்டாலும்,  அவரது நினைவுகளும் அவர் அரும்பாடு பட்டுச் சேகரித்த ஆவணங்களும் என்றென்றும் இந்த மண்ணில் ஈழத்தமிழர்களின் சரித்திரம் சொல்லி நிற்கும் என்பதில் சந்தேகமில்லை. தமிழ்ப் பணிக்காகத் தன்னைத்தானே அர்ப்பணித்த இவரைப்போன்ற தமிழ் அறிஞர்களின் இழப்பு எங்கள் தமிழ் இனத்திற்குப் பேரிழப்பாகும் என்பதையும் இங்கே பதிவு செய்ய விரும்புகின்றேன்.

No comments:

Post a Comment