Saturday, June 18, 2011

Rathika Sitsabaiesan - ராதிகா சிற்சபேசனின் உரை.

கனடிய பாராளுமன்றத்தில் உறுப்பினர் ராதிகா சிற்சபேசனின் உரை.

மாலினி அரவிந்தன்

கனேடிய பாராளுமன்றத்துக்கு ஸ்காப்ரோ ரூஸ் ரிவர் தொகுதியில் இருந்து முதல் முறையாக தெரிவான தமிழ் உறுப்பினரான ராதிகா சிற்சபேசன் சென்றவாரம் கனேடிய பாராளுமன்றத்தில் தமிழ்மொழியில் உரை நிகழ்த்தினார். கனடிய பாராளுமன்றத்திற்குச் சென்ற முதல் தமிழ் பெண் என்ற வகையிலும், அவர் தனது கன்னி உரையைத் தமிழிலே நிகழ்த்தினார் என்பதையும் எண்ணி நாங்களும் பெருமைப்படுகின்றோம்.

அவர் தனது பாராளுமன்ற தமிழ் உரையில்,

‘கனேடிய பாராளுமன்றத்தின் முதலாவது தமிழ் உறுப்பினர் என்ற வகையிலேயே இந்த மதிப்பிற்குரிய அவையிலேயே எனது தாய் மொழியில் பேச முடிவதையிட்டு  பெருமையாகவும் எளிமையாகவும் உணர்கிறேன்’ என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து அவர் பேசும்போது, ‘பெரும்பாலும் ஒடுக்குமுறைகளிலிருந்தும் போர்ச் சூழலில் இருந்தும் தப்பித்தே தமிழர்களாகிய நாங்கள் கனடாவிற்கு வந்திருக்கிறோம். கனடிய தேசம் எங்களை இருகரம் கொண்டு அரவணைத்தது. நாமும் இந்தப் பெருநாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பண்பாட்டு வளத்திற்கும் முனைப்போடு பங்களித்து வருகிறோம்.
இன்று இந்த அவையிலே தமிழ் பேசப்பட்டதை அப்படி ஒரு மைல்கல் எம்மால் எட்டப்பட்டதை அறிந்து ஸ்காப்ரோ ரூஸ் ரிவரிலும் டொரொண்டோ பெரும்பாகத்திலும் ஏன் உலகெங்குமே பரந்து வாழும் தமிழர்கள் நிச்சயமாக பெருமையடைவார்கள்.

கனடாவில் எமது சமூகத்தின் வளர்ச்சியின் அடுத்தப் படி இதுவாகும். தமிழர்களின் பிள்ளைகள் எதிர்நோக்கும் தடைகள் தகரும். அவர்கள் கனடாவின் உயர்தலைமை பொறுப்புக்களை நோக்கி முன்னேறுவார்கள்” எனத் தெரிவித்தார்.

அன்றைய தினம் ஆங்கிலம், பிரெஞ்சு, தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் இவர் பாராளுமன்றத்தில் உரையாற்றினார். 29 வயதே உடைய ராதிகா புதிய ஜனநாயகக் கட்சியின் உறுப்பினராவார். இந்தக் கட்சி இன்று 102 ஆசனங்களைக் கொண்ட கனடாவின் பிரதான எதிர்க்கட்சியாக விளங்குகின்றது.

1 comment:

  1. அன்பினிய குரு.அரவிந்தன் அண்ணா அவர்களுக்கு, வணக்கம்
    தங்களின் வலை வழியாக நமது தங்கை ராதிகா சிற்சபேசன் அவரகள் கனேடிய நாடாளுமன்றத்தில் தனது கன்னி உரையைத் தமிழில் நிகழ்த்தியதை அறிந்து பெருமகிழ்ச்சி அடைந்தேன். அவர்கள் வாழ்க.
    அவர்களைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கும், அவர் சார்ந்த கட்சிக்கும் எமது நல்வாழ்த்துகள்.
    அவர்களின் தலைமைப் பண்பு மென்மேலும் வளரவும், தமிழ் மக்களுக்கான உலக வளர்ச்சியில் அவர்களின் பங்களிப்பு சிறந்தோங்கவும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
    தங்களுக்கும் எனது நன்றி அண்ணா.
    அன்புடன்,
    நா.முத்து நிலவன்
    புதுக்கோட்டை, தமிழ்நாடு,
    இந்தியா.
    19-06-2011

    ReplyDelete