Monday, July 25, 2011

‘நேற்றுப்போல இருக்கிறது’

கே. எஸ். பாலச்சந்திரனின் ‘நேற்றுப்போல இருக்கிறது’
(குரு அரவிந்தன்)


பழைய நினைவுகளை மீட்டிப் பார்ப்பது என்பது மிகவும் சுவாரஸ்யமானது. பிறந்த மண்ணிலே நினைவுகளை மீட்பதற்கும் புகுந்த மண்ணிலே நினைவுகளை மீட்பதற்கும் நிறையவே வித்தியாசம் இருக்கின்றது. அந்த மண்ணிலே இருந்தால் சிறுவயதிலே நடந்த சம்பவங்களின் இடங்களையோ அல்லது காட்சிப் பொருட்களையோ காண்பதற்கு எங்களுக்கு அடிக்கடி சந்தர்ப்பம் கிடைத்திருக்கும். ஆனால் புகுந்த மண்ணில் அந்த நினைவுகளை  மீண்டும் கற்பனையில் கொண்டு வந்து தான் நாங்கள் பார்த்து அனுபவிக் வேண்டும். அப்படியான ஒரு சூழலில்தான் கே. எஸ். பாலச்சந்திரனும் ‘நேற்றுப்போல இருக்கிறது’ என்ற தனது நூலில் தான் வாழ்ந்த கிராமப்பின்னணியில் இளமைக்கால நினைவுகளை தனக்கே உரிய நகைச்சுவை ததும்பும் பாணியில் இரை மீட்டிருக்கிறார். சமீபத்தில் ஒரு பேப்பரில் வெளிவந்த ‘கடந்தது நடந்தது’ என்ற இவரது இந்தக் கட்டுரைகள் பலரின் விருப்பத்திற்கிணங்க இன்று நூல் வடிவில் உருப் பெற்றிருக்கின்றன.

பொதுவாக எல்லா எழுத்தாளர்களும் தங்கள் இளமைக்கால அனுபவங்களைத் தமது கட்டுரைகள் மூலமோ அல்லது கதைகள் மூலமோ வெளிக்காட்டுவார்கள். ஆங்கிலத்தில் இளமைக்கால அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் இப்படியான நூல்கள் நிறையவே இருக்கின்றன. தமிழகத்தில் எழுத்தாளர் சுஜாதாவின் இத்தகைய உரைச்சித்திரத்தை வாசித்து ரசித்திருக்கிறேன். தமிழிலே செங்கை ஆழியான், கே. டானியல், அ. முத்துலிங்கம் போன்ற எழுத்தாளர்கள் தங்கள் ஆக்கங்கள் மூலம் யாழ்ப்பாணத்து பழைய நினைவுகளை அவ்வப்போது நிறையவே மீட்டிருப்பதை வாசித்து மகிழ்ந்திருக்கிறேன். இதைப்போலவே கனடா உதயன் பத்திரிகையில் வெளிவந்த குரு அரவிந்தனின் நெய்தலும் மருதமும் என்ற தொடரில் இத்தகைய இளமைக்கால நினைவுகளை மீட்டுப் பார்த்திருக்கின்றார். குறிப்பாக பாரதியார் ‘காக்கை குருவி எங்கள் ஜாதி’ என்று குறிப்பட்டதைப்போல, யாழ்ப்பாணப்பகுதியில் ஏழு பறவைகளாய் கூட்டமாக வரும் சாம்பல் நிற புலுனி, மழைகாலத்தில் வரும் சிகப்பு நிற தம்பளபூச்சி, மனிதர்போல பேசத் தெரிந்த மைனா, கூடுகட்டத் தெரியாத குயில், முதுகிலே மூன்று குறி போட்ட அணில், செம்மஞ்சள் இறகைக் கொண்ட செம்பகம் போன்ற உயிரினங்கள் இன்று அந்த மண்ணிலே அருகி வருகின்றன என்ற உண்மையையும் அந்த உரைச்சித்திரத்தின் மூலம் தெளிவாக வெளிக்காட்டி இருக்கின்றார். எனவே இத்தகைய பழைய நினைவுகள் எழுத்தாளர்களால் மீட்கப்படும்போது எதிர்காலச் சந்ததியினரால் முன்னோரைப் பற்றிய பல விடையங்களை இதன் மூலம் அறிந்து கொண்டு அவற்றை ஆவணப்படுத்த அவர்களால் முடிகின்றது. கே. எஸ் பாலச்சந்திரனும் அந்த முயற்சியில் வெற்றி பெற்றிருக்கின்றார்.

நாடக உலகே கே. எஸ். பாலச்சந்திரனின் கனவாக இருந்ததால் ‘நாடகம் போட்டோம்’ என்று தனது விடலைப்பருவத்து அனுபவத்தை இந்த நூலில் முதல் கட்டுரையாகக் குறிப்பிடுகின்றார். 1970 களில் சிரித்திரன் சஞ்சிகையில் இக்கட்டுரை வெளிவந்ததாக ஆசிரியர் குறிப்பிடுகின்றார். இராமாயண நாடகத்தில் இராவணன் வேடமேற்று நடித்த அவர்களது வகுப்பு மெனிற்ரரை மற்ற மாணவர்கள் எப்படி பழி தீர்த்துக் கொண்டார்கள் என்ற கதையை நகைச்சுவையாய்ச் சொல்கிறார். நாடக நடிப்பு என்பது எல்லோருக்கும் இலகுவில் கிடைக்கும் அனுபவமல்ல, ஆனால் சயிக்கிள் பழகுவது என்பது அனேகமாக எல்லோருக்கும் கிடைக்கும் அனுபவமாகும். அந்த அனுபவத்தைப் பற்றியே அடுத்ததாகக் குறிப்பிடுகின்றார். 1950 தொடக்கம்வரை ஆண்கள் மட்டுமே பெற்றுக் கொண்ட அந்த அனுபவத்தை பெண்களும் பின்நாளில் பெற்றுக் கொண்டது, யாழ்ப்பாணத்தில் பெரியதொரு சமுதாய மாற்றத்திற்குக் காரணமாயிருந்தது. எதற்கெடுத்தாலும் ஆண்களையே நம்பியிருந்த தமிழ் பெண்களுக்கு அவர்கள் சுயமாக இயங்குவதற்கு இந்தச் சயிக்கிள் முக்கிய காரணாய் இருந்திருக்கிறது. ஒருவர் மட்டுமே அமர்ந்து செல்லக்கூடிய இந்த வண்டி தேவைகருதி இருவர், மூவர் அமர்ந்து செல்லும் வண்டியாக யாழ்ப்பாணத்து ஒவ்வொரு கிராமத்திலும் மாறியிருந்தது.

பள்ளிக்கூட நாட்கள் பற்றி ஆசிரியர் குறிப்பிடும் போது, பிந்திப் போனால் வாத்தியார் பிரம்பினால் அடிப்பார் என்ற பயத்தோடு அரைகுறை அழுகையுடன் ஓடியோடிப்போன அருமையான பள்ளிக் காலம் பற்றியும், பள்ளிப் பரீட்சை பற்றிக் குறிப்பிடும்போது பரீட்சை நடந்தால் பரவாயில்லை பரீட்சை முடிவுகள் வராமல் விட்டால் போதும் என்ற நிலையில் இருந்ததாகவும் குறிப்பிடுகின்றார்.  பள்ளிக்கூட விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றியது, பேச்சுப்போட்டி, பள்ளிகூட கண்காட்சி என்று ஒவ்வொரு கட்டுரையும் ஒவ்வொரு கதை சொல்கிறது. பேச்சுப் போட்டியின் போது பாரதி என்ன சொன்னார் என்று திரும்பத்திரும்பச் சென்னபோது சபையில் இருந்தவர் தன்னைப் பார்த்து என்ன சொன்னார் என்பதை நகைச்சுiயோடு குறிப்பிடுகின்றார்.

இடங்கள்தான் மாறுபட்டிருக்கிறதே தவிர சம்பவங்கள் எல்லாம் எல்லோருக்கும் அடிக்கடி ஏற்பட்ட அனுபவங்களாகவே இருக்கின்றன. காலத்திற்கேற்ப சில சம்பவங்களிலும் மாற்றங்கள் தெரிகின்றன. குறிப்பாக வாத்தியார் பிரம்பால் அடிப்பார் என்ற பயம் அந்தக் காலத்து மாணவர்களுக்கு இருந்தது போல, இப்போது உள்ள மாணவர்களுக்கு இருப்பதில்லை. பாடசாலை விளையாட்டுப் போட்டி பற்றி இவர்  குறிப்பிடும் போது பச்சை, சிகப்பு, நீலம், மஞ்சள் நிறங்களில் இல்லக் கொடிகள் இருக்கும் என்று குறிப்பிட்டிருக்கின்றார். நான் ஆரம்பக் கல்வி கற்ற நடேஸ்வராக் கல்லூரியிலும் வள்ளுவர், கம்பர், இளங்கோ, பாரதி என்று பெயர் வைத்தது மட்டுமல்ல இந்த நான்கு நிறங்களிலும்தான் இல்லக் கொடிகள் இருந்தன. வள்ளுவர் இல்லத்திற்குப் பச்சை நிறம் கிடைத்ததால் மாட்டுவண்டில் பிடித்து இடைக்காடு சென்று பச்சை நிறத்தில் இளநீர், தென்னங்குருத்து, தாளங்காய் எல்லாம் பச்சையாகவே பறித்துவந்து இல்லக் கொட்டகையை இயற்கைச் சூழலில் அலங்கரித்து பரிசு பெற்ற ஞாபகம் இன்றும் என்மனதில் பசுமையாக இருக்கின்றது.

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று சொல்வார்கள். கோயிலே இல்லாத ஊரே யாழ்ப்பாணத்தில் இல்லை. கோயில் இருந்தால் திருவிழா கட்டாயம் நடக்கும். திருவிழா வந்தால் எல்லா வயதினருக்கும் கொண்டாட்டம்தான். நேர்த்திக்கடன் வைத்துக் காவடி எடுப்பது மட்டுமல்ல, ஆட்டக்காவடி தாளத்தோடு ஆடுவதும் ஒரு கலைதான். அதைவிடப் பெரிய கலை அரும்பு மீசையோடு இளைஞர்கள் சுவாமி தூக்குவது. வீட்டிலே எதையாவது தூக்கச் சொன்னால் பஞ்சிப்படும் இளைஞர்கள் எல்லாம் சுவாமி தூக்குவதற்கு மட்டும் முண்டி அடித்துக் கொண்டு முன்வருவார்கள். காரணம் மேற்சட்டை இல்லாத தங்கள் பரந்த மார்பைப் பார்ப்பதற்கென்றே இரட்டைப் பின்னல்கள் தாய்மாருக்குப் பின்னால் பதுங்கியிருக்கும் என்பதையும் அவர்கள் அறிந்து வைத்திருப்பார்கள். இதைத்தான் கே. எஸ். பாலச்சந்திரனும் ‘அவர்களுக்குப் பின்னால் நின்று கொண்டு அவர்களின் சின்ன மகள்மாரும்..’ என்று சொல்லாமல் சொல்கின்றார்.

சிகை அலங்காரம் செய்ய வீட்டிற்கு ஒருவர் வருவார். பயத்துடன் அவர் வருகையை எதிர் கொள்வோம், காரணம் அவர்கையிலே கத்திரிக்கோல், றேசர்கத்தி, மண்டையை விறாண்டும் கூர்ப்பல்லுச் சீப்பு என்பன போன்ற ஆயுதங்கள் இருக்கும் என்று சிகையலங்காரம் செய்வது பற்றி ஆசிரியர் குறிப்பிடுகின்றார். அந்த நாட்களில் சிகை அலங்கார நிலையங்கள் கிராமங்களில் இருக்கவில்லை. அதனால்தான் வீடுதேடி வந்து சிகையலங்காரம் செய்வார்கள். அப்பன் மகன் என்ற வித்தியாசம் இல்லாமல் எல்லோருக்கும் பொலீஸ் கட்தான். அனேகமாக அப்படியான சிகையலங்கார அனுபவம் அந்தக் காலத்தில் எல்லோருக்கும் இருந்திருக்கும்.

தைப்பொங்கல், தீபாவளி, வருடப்பிறப்பு போன்ற பண்டிகை நாட்களைப்பற்றியும் குறிப்பிடுகின்றார். புத்தாடை உடுத்து ஊஞ்சால் கட்டி ஆடுவது. ஓற்றை ஊஞ்சால், அன்ன ஊஞ்சால் என்று பலவகையான ஊஞ்சால்கள் வீட்டில் உள்ள மாமரத்திலோ அல்லது வேப்ப மரத்திலோ கட்டி ஆடுவார்கள். இப்போதெல்லாம் அந்த வழக்கம் குறைந்து கொண்டே போகிறது. காரணம் ஊஞ்சால் கட்ட அங்கே மரங்களும் இல்லை, ஆடிமகிழப் பிள்ளைகளும் இல்லை.

யாழ்ப்பாணத்தில் நடக்கும் பணச்சடங்கு முறை, அந்தக் காலத்து எலெக்ஷன் எப்படி நடந்தது, கூப்பன் கடை என்றால் என்ன, அந்தக் கடைக்கு நடந்தது என்ன, அந்தக் காலத்து வாசிகசாலை எப்படி இருந்தது, குடும்பமாக சினிமா பார்க்கப்போன கதை என்று நகைச்சுவையோடு பல விடையங்களையும் இந்த நூலில் தந்திருக்கின்றார்.

இந்த நூலைத் தனது அம்மம்மா திருமதி. லட்சுமி உமாபதிக்குச் சமர்ப்பணம் செய்திருக்கின்றார் ஆசிரியர். இலங்கையில் உள்ள கனகா பதிப்பகத்தினர் இந்த நூலை வெளியிட்டிருக்கிறார்கள். அட்டைப்படத்தை யாழ்ப்பாணத்து பிரபல ஓவியர் ரமணி அவர்கள் வரைந்திருக்கிறார்கள். உள்ளே வரும் அத்தனை கட்டுரைகளுக்கும் தனித்தனியே ஓவியம் வரைந்தது மட்டுமல்ல, தனது ஓவியத்தின் மூலம் யாழ்ப்பாணத்து மண் வாசனையை அப்படியே வெளிக் கொண்டு வந்திருக்கின்றார். அச்சுப் பதிப்பை யுனி ஆர்ட்ஸ் செய்திருக்கிறார்கள். இதற்கான முன்னுரையை சாகித்யரத்னா செங்கை ஆழியன் க. குணராசா வழங்கியிருக்கின்றார். யாழ்ப்பாணத்து அனுபவங்களை கண்முன்னே கொண்டுவரும் இது போன்ற நூல்கள் நிறையவே வெளிவரவேண்டும், தமிழர் வாழ்ந்த நிலங்கள் பற்றிய குறிப்புக்கள் கட்டாயம் புலம் பெயர்ந்த மண்ணிலாவது ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டு, கே.எஸ்.பாலச்சந்திரனின் பணி மேன்மேலும் தொடரவேண்டும் என்று வாழ்த்துகின்றேன்.

Wednesday, July 20, 2011

'தாயுமானவர்' கலைமகள் குறு நாவல் போட்டி-2011கலைமகள் ராமரத்னம் குறு நாவல் போட்டி-2011
பரிசு பெற்ற கதை

நடுவர்களின் பார்வையில்…

புலம் பெயர்ந்த தமிழர்களின் மனக்குமுறல்கள், புலம்பெயர்ந்த தமிழர்களின் பண்பாட்டுச் சின்னங்கள் இவைகளைத் தங்கள் நாவலில் வெளிப்படுத்தியதற்காக 'தாயுமானவர்' நாவலைத் தேர்வு செய்தோம். கதைக் களம், எடுத்துக் கொண்ட பொருளில் வேறுபட்ட தன்மை இவைகள் எங்களை வெகுவாகக் கவர்ந்தன.

டாக்டர் லட்சுமி
திரு.பி. மணிகண்டன்
திரு.பா.ஸ்ரீதர்.


தாயுமானவர் - குரு அரவிந்தன்.

கீரிமலைக் கடற்கரை சுனாமி வந்து போனது போல அமைதியாக இருந்தது. அலைகளின் ஆர்ப்பரிப்பைத்தவிர, அங்கே மக்கள் நடமாட்டம் அதிகமிருக்கவில்லை. எங்கிருந்தோ பறந்து வந்த மீன் கொத்திப் பறவை ஒன்று சட்டென்று தண்ணீரில் மூழ்கி எதையோ கொத்திச் சென்றது. சுதந்திரமாய்ச் சிறகடித்து வானத்தில் பறக்கும் கடற்கொக்குகளைக் கூட இன்று  காணக் கிடைக்கவில்லை. அஸ்தி கரைப்பதற்காக கீரிமலைக் கடலில் தலை மூழ்கி எழுந்தபோது இதுவரை அடக்கிவைத்த எனது துயரம் தன்னிச்சையாகப் பீறிட்டு வெடித்தது. கிரிகைகள் செய்யும்போது துயரத்தை வெளிக்காட்டக் கூடாது என்பதால் கிரிகைகள் செய்த சமயாச்சரியின் முன்னால் இதுவரை அடக்கி வைத்த துயரம் தண்ணீரில் ஒவ்வொரு முறையும் தலைமூழ்கி எழுந்தபோது என்னையறியாமலே வெடித்துச் சிதறியது. ஆற்றாமையின் வெளிப்பாடாய் இருக்கலாம், ஏனோ வடதிசையைப் பார்த்து ஓவென்று அழவேண்டும் போலவும் இருந்தது. என் கண்ணீரைப் பாக்குநீரணை தனதாக்கிக் கொண்டபோது, ஆர்ப்பரித்த ஓயாத அலைகளின் ஆரவாரத்தில் என் அழுகைச் சத்தமும் அதற்குள் அடங்கிப் போயிற்று.

இப்படித்தான் ஆயிரமாயிரம் அப்பாவி மக்களின் மரண ஓலங்கள்கூட வடதிசையில் கடல் கடந்து சற்றுத் தொலையில் இருந்த உடன் பிறப்புக்களுக்குக் கேட்காமல் அரசியல் அலைகளால் அமுக்கப்பட்டிருக்குமோ என்று நினைக்கத் தோன்றியது. நினைவுகள் கரித்தது போல, வாயெல்லாம் உப்புக் கரித்தது. கரித்தது என் கண்ணீரா அல்லது வங்கக் கடல் நீரா என்பதைக்கூட தெரிந்து கொள்ள முடியாத அவலநிலையில் நானிருந்தேன்.

ஆங்காங்கே இராணுவ நடமாட்டம் இருந்ததால் என்னுடைய ஒவ்வொரு அசைவும் கவனிக்கப்படலாம் என்பதால் என் துயரை வெளியே காட்டிக் கொள்ளக்கூடாது என்பதில் நான் கவனமாக இருந்தேன். கவனமாக இருந்தேன் எனபதைவிட கவனமாக இருக்கும்படி எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தேன். நான் பிறந்த மண்ணுக்கு என்ன நடந்தது? ஏதோ ஒருவித பயங்கர அமைதி அங்கே நிலவுவதை என் உள்ளுணர்வு எடுத்துச் சொன்னது. இதே கடற்கரையில் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிற் தீர்த்தத் திருவிழாவின்போது நண்பர்கள், உறவுகள் புடைசூழ எவ்வளவு கலகலப்பாய் மகிழ்ச்சியோடு நீராடியிருக்கிறோம். கடற்கரை ஓரத்தில் இருந்த நன்னீர்க் கேணி என்பதால் கீரிமலைக் கேணி பிரசித்தி பெற்றிருந்தது. தென்னிந்தியாவில் இருந்து சோழ இளவரசியான  மாருதப்புரவீகவல்லி இந்தக் கேணியில் நீராடித்தான் தனது குதிரை முகம் போன்ற தனது முகத்தை அழகான முகமாக மாற்றியதாக வைதீகக் கதைகள் உண்டு. இளவரசியின் விருப்பப்படியே தென்னிந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட காங்கேயன் சிலை, அருகே இருந்த இந்தக் கடற்கரைத் துறைமுகத்தில் இறங்கியதால் அத்துறை காங்கேயன் துறையாயிற்று.  குதிரை முகம் அழகிய முகமாய் மாறியதால் மா-விட்டபுரம் என்ற பெயரும் எங்கள் ஊருக்கு அமைந்ததாக பாரம்பரியக் கதைகள் உண்டு.


உள்நாட்டுப் போர் என்றுதான் சொன்னார்கள். சர்வதேசமே வேடிக்கை பார்த்திருக்க, போரின் உச்சக்கட்டத்தில் யாருமே வன்னிப்பக்கம் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அப்பாவும், தங்கையும் அந்தப் பகுதிக்குத்தான் இடம் பெயர்ந்து தங்கியிருந்தார்கள். ஆனாலும் இருவரும் வெவ்வேறு இடங்களில் தங்கி இருந்தார்கள். இருவரும் வெவ்வேறு துருவங்களாய் இருந்தாலும், இருவருமே ஒரே மண்ணைத்தான் நேசித்தார்கள்.

எங்கள் கிராமமான மாவிட்டபுரம் இராணுவத்தின் அதியுயர் பாதுகாப்பு வலையத்திற்குள் அகப்பட்டதால், விரும்பியோ, விரும்பாமலோ சூழ்நிலையின் கட்டாயத்தால் குடும்பமே பரம்பரையாக வாழ்ந்த ஊரில் இருந்து இடம் பெயர்ந்து போகவேண்டி வந்தது. ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்ற கோட்பாட்டை அகிம்சைவாதியான அப்பாவும் ஏற்றுக் கொண்டிருக்கலாம். அதனால்தானோ என்னவோ பிறந்த மண்ணைப் பறிகொடுத்தாலும் கடைசிவரை தாங்கள் புகுந்த மண்ணைவிட்டுப் பிரிய இருவருமே முற்றிலும் மறுத்து விட்டார்கள்.

இருவரும் உயிரோடு இருக்கிறார்களா இல்லையா என்பதைக்கூடத் தெரிந்து கொள்ள முடியாத நிலையில் நான் புலம் பெயர்ந்த மண்ணில் இருந்தேன். நாட்டின் போர்ச் சூழ்நிலையால் கடைசிக்காலத்தில் எந்தவித தொடர்பும் எங்களுக்குள் இருக்கவில்லை. உறவுகள் உயிரோடு இருக்கிறார்கள் என்ற நல்லதொரு ஒரு செய்திக்காகப் புலம் பெயர்ந்த மண்ணில் ஏங்கியபடி தவித்தவர்களில் நானும் ஒருவன். போர் ஓய்ந்த சில நாட்களின் பின்தான் அந்தத் துயரச் செய்தி வந்தது. போர் மேகங்கள் திரண்டு வந்து குண்டு மழையாய்ப் பொழிந்த ஒரு நாளில் அப்பாவின் மரணம் சம்பவித்தாக தூரத்து உறவினர் ஒருவர் மடல் வரைந்திருந்தார். ஊர் சுமந்து போவதற்கு அந்த நேரத்தில் நான்கு பேர்கூட அங்கே கிடைக்கவில்லையாம். துப்பாக்கிச் சூடுகளுக்கும், ‘செல்’ அடிகளின் மத்தியில், முந்தியவனைப் பிந்தியவன் சுமப்பது என்ற நியதி போல, ஒரு தள்ளு வண்டியில் வைத்துத்தான் அருகில் இருந்த மயானத்திற்கு அப்பாவின் உடலை இருவர் தள்ளிச் சென்று சிதை மூட்டியதாகவும், அவரது அஸ்தியை எடுத்துக் கவனமாக வைத்திருப்பதாகவும் அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஊர்மக்களால் விரும்பப்பட்ட ஒரு காந்தியவாதியாய், அகிம்சையின் பிறப்பிடமாய், தலைமை ஆசியராய், ஊராட்சி மன்றத் தலைவராய் இருந்த அவருக்குச் சாதாரண ஒரு நாளாக இருந்திருந்தால், அதற்குரிய அத்தனை மரியாதைகளுடனும் அவரது கடைசி ஊர்வலம் சென்றிருக்க வேண்டும். பிரித்தானியரிடமிருந்து கிடைத்த சுதந்திரத்தைத்தான் தமிழர்களுக்குக் கிடைத்த உண்மையான சுதந்திரம் என்று நினைத்து ஏமாந்தவர்களில் அப்பாவும் ஒருவர். 'பாடையிலே படுத்தூரைச் சுற்றும் போதும் பைந்தமிழின் ஓசை அங்கு கேட்க வேண்டும், ஓடையிலே தன் சாம்பல் கரையும் போதும் நம்தமிழின் ஓசையாங்கொலிக்க வேண்டும்' என்று அவர் அடிக்கடி சொல்லிக் காட்டும் வார்த்தைகளை நான் அடிக்கடி நினைவுபடுத்திப் பார்ப்பதுண்டு. இதெல்லாம் அவரது ஆசைகளாகவோ அல்லது கனவுகளாகவோ மட்டுமே இருந்தன. சாதாரண ஒரு நாளாக இருந்திருந்தால் இவை எல்லாம் நிறைவேறியிருக்கும். எப்படி எல்லாம் தனது இறுதி ஊர்வலம் நடக்க வேண்டும் என்று அப்பா எதிர்பார்த்தாரோ அதை எல்லாம் துறந்து கடைசிக் காலத்தில் அப்பா ஒரு அனாதைப் பிணமாய்ப் போய்விட்டாரே என்ற கவலை எனக்குள் குமைந்து கொண்டே இருந்தது.

எனவேதான் யுத்தம் முடிந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் ஊருக்குச் சென்ற என்னால், அப்பாவிற்கான திதியை மட்டுமே செய்ய முடிந்தது. பொதுவாக எங்க ஊரின் வடக்கே, தென்னிந்திய கோடிக்கரையில் இருந்து பதினெட்டுக் கல் தெற்கே, கடற்கரை ஓரத்தில் இருந்த சடையம்மா மடத்தில்தான் இறந்தவர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம். இராணுவத்தின் அதியுயர் பாதுகாப்பு வலையத்திற்குள் அந்த மடம் அகப்பட்டுக் கொண்டதால் வடமேற்குத் திசையில் சற்றுத் தள்ளி இருந்த ஈஸ்வரத் தலங்களில் ஒன்றான கீரிமலை நகுலேஸ்வரத்திற்குச் சென்று அப்பாவின் திதியைக் கொடுத்தேன். ஈழத்தில் பஞ்சஈஸ்வரங்கள் என்று அழைக்கப்படும் நகுலேஸ்வரம், திருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், முன்னேஸ்வரம், தொண்டீஸ்வரம் ஆகிய தலங்களில் இதுவும் ஒன்றாகும். இவற்றில் சில கி.பி ஏழாம் எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த நாயன்மார்களின் தேவாரப்பாடல் பெற்ற புகழ்பெற்ற ஈஸ்வரங்களாகவும் இருக்கின்றன. சேக்கிழார் பெருமானின் பெரியபுராணத்திலும் இத் திருத்தலங்கள் இடம் பெற்றிருக்கின்றன.

'விதியே விதியே என்தாயை என்செய்தாய்?' என்றது போல, எனது தங்கையைப் பிரசவித்தபோது, அன்று எதிர்பாராமல் ஏற்பட்ட அம்மாவின் திடீர் மரணத்தை எங்களால் தாங்க முடியாததாக இருந்தது. அம்மா என்றொரு தெய்வம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஏன் தேவை என்பது அதன்பிறகான எங்கள் ஒவ்வொரு அசைவின் போதும்தான் எங்களால் புரிந்து கொள்ள முடிந்தது. அப்பாதான் எங்களுக்கு எல்லாமாகியியிருந்தார். என்னை மட்டுமல்ல கைக்குழந்தையான தங்கையையும் அவர்தான் பாசத்தோடு வளர்த்தெடுத்தார். தாயாய், தந்தையாய், நல்லாசிரியனாய், நண்பனாய், மந்திரியாய் எங்கள் ஒவ்வொரு அசைவிலும் அவர் கலந்திருந்தார். ‘தாயுமானவர்’ என்றுதான் பக்கத்து வீட்டுப் பார்வதிப்பாட்டி எங்க அப்பாவை அழைப்பாள். சிறுவயதில் அதன் அர்த்தம் எனக்குப் புரிவதில்லை. வளர்ந்து, புலம் பெயர்ந்து சென்ற பின்புதான் அந்தச் சொல்லின் அர்த்தத்தை என்னால் முழுமையகப் புரிந்து கொள்ள முடிந்தது. சுருங்கச் சொன்னால் தாயிடம் எதிர்பார்க்கும் தாய்பாலைத் தவிர மற்றைய எல்லாவற்றையுமே அவர் எங்களுக்கு ஊட்டியிருந்தார். எங்களுக்காகவே அவர் வாழ்ந்திருந்தார். அவரைப் பிரிந்து இருக்கும்போதுதான் அப்பாவின் அருமை புரியலாயிற்று. என் தங்கை மாலதி சிரித்தால் அவள் கன்னத்தில் குழி விழும். சிறு வயதில் எடுத்த புகைப்படத்தில் அம்மா இருந்தது போலவே மாலதியும் தோற்றத்தில் இருந்தாள். மிகவும் சுறுசுறுப்பாகவும், இரக்கசுபாவம் மிக்கவளாகவும் இருந்தாள். அம்மாவின் பிரிவுத்துயரை எங்கள் வீட்டில் அவள்தான் தீர்த்து வைத்தாள்.

எங்க வீட்டு சுவர் எல்லாம் இந்திய சுதந்திர தியாகிகளின் கறுப்பு வெள்ளைப் புகைப்படங்கள் பெரிய அளவில் மாட்டப்பட்டிருந்தன. காந்தி, நேரு, அரவிந்தர், வாவேசு ஐயர், திலகர், கப்பலோட்டிய சிதம்பரனார், பாரதியார், நேதாஜி சுபாஸ்சந்திரபோஸ், ரவீந்திரநாத் தாகூர், இராமகிருஸ்ணர், விவேகானந்தர் என்று அவர்களின் புகைப்படங்களே எங்கும் மாட்டப்பட்டிருந்தன. இந்தப் புகைப்படங்களைக் காட்டியே அப்பா எங்களுக்குச் சுதந்திரப் போராட்டக் கதைகள் சொல்வார். அப்பாவின் புத்தக அலுமாரி முழுவதும் சத்தியசோதனை, ரவீந்திரநாத்தின் கவிதைகள், அரவிந்தபோஸ்சின் வாழ்க்கை வரலாறு, பாரதி பாடல்கள், இராமகிருஷ்ணர், விவேகானந்தர், கஸ்தூரிபாய் என்று அவர்களைப் பற்றிய புத்தகங்கள் எல்லாம் ஆத்மீகத்தையும், அகிம்சையையும் போதிப்பதாக இருந்தன. தங்கையின் கவனமெல்லாம் இவற்றின் மீது திரும்பியதாகத் தெரியவில்லை, பதிலாக நேதாஜி மீதே இருந்ததை நான் அவ்வப்போது அவதானித்தேன். வளரும் பருவத்தில் அவள் அவரைப் பற்றிய நூல்களையே அதிகம் விரும்பிப்படித்தாள்.

‘இந்தியாவிற்கு நள்ளிரவில்தான் சுதந்திரம் கிடைத்ததாம், அது உனக்குத் தெரியுமாண்ணா?’ என்று பேச்சு வாக்கில் ஒருநாள் தங்கை குறிப்பிட்டாள்.
‘ஆமாம், அப்பா அவர்களைப் பற்றித்தானே தினமும் போதிக்கிறார்.’ என்றேன்.
‘இந்தியாவின் சுதந்திரத்தில் நேதாஜிக்கும் பங்கிருக்கு தெரியுமா?’
‘தெரியும்!’
‘அப்போ ஏன் அதைச் சிலர் மூடிமறைக்கிறாங்க?’
‘வன்முறையை அவங்க விரும்பவில்லைப் போலும், அதனால்தான் அதை முன்னிலைப்படுத்த அவங்க விரும்பவில்லை.’ என்று பதில் சொன்னேன்.
எனது வாதத்தையை அவள் ஏற்கவில்லை என்பது அவளது பார்வையில் புரிந்தது.
ஒருநாள் பகத்சிங்கின் வாழ்க்கை வரலாறு பற்றிய புத்தகம் அவளது படுக்கையில் தலையணைக்கு அடியில் இருந்ததை அவதானித்தேன். காலத்தின் கட்டாயத்தில் அவள் வளர்ச்சி;க்கு ஏற்ப அவளது சிந்தனையும் வளர்ச்சியடைந்தது.

‘கடல் கடந்து நாங்கள் வாழ்ந்தாலும், ஏனப்பா இந்திய சுதந்திர போராட்ட வீரர்களின் படங்களையே வீட்டுச்சுவர் எல்லாம் மாட்டியிருக்கிறீங்கள்’ என்று ஒரு நாள் இரவு உணவு அருந்தும்போது அப்பாவிடம் கேட்டேன்.

‘கடல்தான் எங்களைப் பிரிக்கிறதே தவிர உணர்வால், பண்பாடு கலாச்சாரத்தால் நாங்கள் ஒன்றாகவே வாழ்கிறோம்’ என்றார் அப்பா.
‘அப்பா இன்னமும் அந்தக் காலத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்’ என்பது போன்ற ஒரு அசட்டுச் சிரிப்பு தங்கையிடம் இருந்து உதிர்ந்ததை அப்போது அவதானித்தேன்.

காணி நிலம் வேண்டும் பராசக்தி என்று பாரதி கண்ட கனவு போல, வீடும், காணியும், கிணறும் அதைச் சுற்றிலும் பத்துப் பன்னிரண்டு தென்னை மரங்களும் வைத்து அப்பாவும் அம்மாவும் சேர்ந்து தாங்கள் வாழ்ந்த இடத்தை ஒரு சோலையாகவே மாற்றியிருந்தனர். எந்த மண் பச்சைப் பசேலென்று செழித்த பூமியாக் காட்சி தரவேண்டும் என்று அப்பா ஆசைப்பட்டாரோ அந்த மண் இன்று காய்ந்த பூமியாய்ப் போயிருந்தது. யாழ்ப்பாணத்துக் கற்பகதரு என்று சொல்லப்பட்ட பனைமரங்கள் அனேகமாகத் தலையிழந்து முண்டங்களாய் நின்றன. மரங்கள் எல்லாம் இராணுவம் ஏவிய செல் விழுந்தும் தண்ணீர் இல்லாமலும் கருகிப் போயிருந்தன. இதைவிட நச்சுப் புகைகளின் தாக்கமும் செடி கொடிகளின் இலைகளில் தெரிந்தன. காங்கேசன்துறை வீதிக்கரையில் மாவிட்டபுரத்தில் இருந்த தோட்டங்களில் வெற்றிலைச் செடிகள் எப்பொழுதும் பச்சைப் பசேலென்று இருக்கும். கடும் பச்சையும், குருத்துப் பச்சையுமாய் முள்முருக்கை மரத்தைச் சுற்றி மேல் நோக்கி அவை படர்ந்திருக்கும். வீதியின் இரு மருங்கும் தோட்டத்தில் படர்ந்திருக்கும் அந்தக் கொடிகளின் அழகும் அழகுதான். அனேகமான முருக்கை மரங்கள் பட்டுப் போயிருந்தன. அந்த வெற்றிலைக் கொடிகள் எல்லாம் நச்சுப் புகையின் தாக்கத்தால் சுருண்டு கீழே விழுந்து கிடந்தன. கொழுகொம்பு கிடைத்தால் மீண்டும் படர்ந்து நிமிர்ந்துவிட அவை தயாராக இருப்பதுபோல் தெரிந்தன. எங்கே எழுந்து நிற்க ஒரு ஊன்றுகோல் கிடைக்கும் என்று எதிர்பார்த்து நிற்கும் அந்த மண்ணின் மக்களின் வாழ்க்கையும் இப்படித்தான் தலைகீழாய் மாறிப்போயிருந்தன.

இந்தக் காட்சிகளை எல்லாம் பார்க்க நேர்ந்தபோது, காலா காலமாய் யுத்தம் என்பது ஒரு கொலைக் களம் என்பது மட்டுமல்ல அழிவுகளின் ஏகப்பிரதிநிதியாகவும் இருப்பது மனித சமுதாயத்திற்கு ஒரு சாபக்கேடே என்று நினைக்கத் தோன்றியது. மனித உயிர்கள் மட்டுமல்ல மரங்கள் செடிகள் காக்கை குருவியினங்கள் என்று எல்லாமே அழிந்து போவதற்கு இந்த யுத்தமே எப்போதும் ஒரு காரணமாக இருந்திருக்கிறது.

ஊரிலே மற்றவர்களைவிட எங்க அப்பா நடையுடை பாவனையில் வித்தியாசமானவராக இருந்தார். மற்ற ஆண்கள், குறிப்பாக ஆசிரியர்கள் எல்லாம் பாண்டும் சேர்ட்டும் அணிந்து பாடசாலைக்கு வந்த  காலத்தில் இவர் மட்டும் கதராடை கட்டி காந்திக் குல்லா போட்டிருந்தார். ‘சட்டம்பியார்’ என்றே பெற்றோர்கள் இவரை மரியாதை நிமிர்த்தம் அழைத்தார்கள். மதிப்பும் மரியாதையும் அவரிடம் வைத்திருந்ததால் தங்கள் குறைகளைத் தீர்க்கத் தினமும்  எங்க வீடுதேடி வந்தனர். தங்கள் பிள்ளைகளின் படிப்பு சம்பந்தமாக அறிவுரை கேட்க, குடும்பப் பிரச்சனைக்கு புத்திமதி கேட்க, திருமணப் பொருத்தம் பார்க்க, காணிப்பிரச்சனை, எல்லைப் பிரச்சனை என்று தினமும் வீடுதேடிவந்து அப்பாவிற்காகக் காத்திருந்தனர். அரச கடிதங்களை ஆங்கிலத்தில் எழுதுவதற்கும், அவர்களோடு தொடர்பு கொள்ளவும் அப்பாவையே நம்பிக்கையோடு நாடிவந்தனர். அப்பா அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடாவிட்டாலும் சொந்த மண்மீதும், மொழிமீதும் ஆழ்ந்த பற்று வைத்திருந்தார்.

இந்தியப் பண்பாடு கலாச்சாரத்தில் ஒன்றிப் போனதால், எப்பொழுதும் கலைமகள், ஆனந்தவிகடன், கல்கி, மஞ்சரி போன்ற பத்திரிகைளை வாங்கிப் படித்தார். வீடு முழுவதும் நல்ல தரமான புத்தகங்களால் நிரம்பி வழிந்ததால் எங்களை அறியாமலே எங்களிடம் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தியிருந்தார். மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் தெற்பத்திருவிழாவின் போது அப்போது கலைமகள் ஆசிரியராக இருந்த அறிஞர் கி.வா. ஜெகநான் அவர்கள் அந்த விழாவில் உரையாற்ற தமிழ் நாட்டில் இருந்து வந்திருந்தார். காங்கேசன்துறைக் கடற்கரையில் நடந்த, பக்தர்களால் நிரம்பி வழிந்த அந்த விழாவில் அப்பா கி.வாவின் சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருக்க, அப்பாவின் மடியில் உட்கார்ந்து நான் நிலக்கடலையை உடைத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். கடற்கரை முழுவதும் மின்சார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுப் பளீச்சென்றிருந்தது. இதேபோல அந்த நாட்களில் பல அறிஞர்கள் தமிழ்நாட்டில் இருந்து சொற்பொழிவாற்ற வருவதுண்டு. சில சமயங்களில் புலம் பெயர்ந்த மண்ணில் இருந்து கொண்டு, அந்த நாட்கள் திரும்பவும் வந்திடாதா என்ற ஏக்கத்தோடு நினைத்து பார்ப்பேன். விடுதலை வேண்டி ஊரெல்லாம் திரண்டு காந்தியின் அகிம்சை முறையில் சத்தியாக்கிரகம் செய்தபோது அப்பாவும் தன் பங்கிற்கு அதில் கலந்து கொள்ளக் கதராடை அணிந்து காந்திக் குல்லாவோடு பயபக்தியாகச் சென்றார். யாழ்பாணக்கச்சேரி என்று சொல்லப்பட்ட அரசகரும அலுவலகத்திற்கு முன்னால் ஏனைய தமிழ் அரசியல் வாதிகளுடன் சேர்ந்து ஒத்துழையாமைப் போராட்டம் நடத்தினார். அவருடைய நெற்றியிலே இருந்த தழும்பு ஏன் எற்பட்டது என்று காரணம் கேட்டபோதுதான், அகிம்சை முறையில் நடந்த ஒத்துழையாமை இயக்க நடவடிக்கையின்போது குண்டர்கள் கூட்டம் கற்களால் தாக்கிய போது ஏற்பட்ட தழும்புதான் அது என்பதை ஏற்றுக் கொண்டார்.

‘ஏனப்பா நிராயுத பாணியான உங்களை அவங்க தாக்கிய போது கோழைபோல முதுகு காட்டி ஓடினீங்களாப்பா?’ என்று தங்கை மாலதி கேட்டபோது அவராற் அதற்குப் பதில் சொல்ல முடியவில்லை.

‘அதற்காக வன்முறையை ஆதரிக்கச் சொல்கிறாயாம்மா?’ என்று மட்டும் எதிர்க் கேள்வி கேட்டுத் தங்கையின் வாயை அடைத்துவிட்டார்.

அப்பா இது போல பலதடவைகள் அகிம்சை முறைப்போராட்டத்தில் பங்கு பற்றினார். ஓவ்வொரு முறையும் தடியடி வாங்குவது, ஜெயிலுக்குப் போவது என்று ஒழுங்காக நடந்ததே தவிர இவர்களின் கோரிக்கை ஒன்றுமே அரசால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அப்பாவின் தோல்விகள் மாலதியை மனதளவில் பாதித்திருக்க வேண்டும். தோல்விகள் எல்லாம் தோல்விகள் அல்ல என்று அப்பா அடிக்கடி நினைவு படுத்தினாலும், எந்த ஒரு பலனும் தராத இத்தகைய போராட்டங்களை இளம் இரத்தம் ஏற்றுக் கொள்வதாக இல்லை.

அகிம்சை பற்றி அப்பா போதனை செய்யும் போதெல்லாம் அவள் அப்பாவின் நெற்றித் தழும்பைத்தான் பார்ப்பாள். அப்பாவை அடிக்கடி சீண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பாள்.

‘கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வந்தது..
நெற்றி மேலே காயமொன்று வைத்துவிட்டுப் போனது’
என்று அவள் வாய்குள் முணுமுணுப்பதிலிருந்து அப்பாவிற்குப் புரிந்து விடும்.
‘அகிம்சை என்றால் என்ன என்று உனக்கு இப்போ புரியாதம்மா, என்றாவது ஒருநாள் நீ புரிஞ்சு கொள்வாய்’ அப்பா அதற்கும் சாந்தமாய்ப் பதில் சொல்வார்.
‘இந்தக் காலத்திற்கு இதெல்லாம் சரிவராதப்பா’ என்பாள் மாலதி.
மாலதி வளரவளர அவளது போக்கில் மாற்றங்கள் தெரிய ஆரம்பித்தன. அப்பா அதைக் கவனித்தாரோ தெரியவில்லை, ஆனால் நான் அவதானித்தேன். அப்பாவின் அகிம்சைக் கோட்பாட்டோடு தங்கை மாலதிக்கு ஒத்துப் போகவில்லை என்பதை நான் மெல்ல மெல்லப் புரிந்து கொண்டேன்.

அப்பா எப்படி இராசராச சோழனைப் (கி.பி 985 – 1014) பற்றிப் புகழ்ந்து கொண்டிருந்தாரோ அதேபோல தங்கை மாலதி எல்லாள மன்னன் பற்றிப் புகழ்ந்து கொண்டிருப்பாள். ஈழத்தின் பல கிராமங்களைத் தஞ்சைக் கோயிலுக்குத் தானமாகக் கொடுத்தது பற்றியும், திருவாலங்காட்டுப் பட்டயங்கள் பற்றியும் அப்பா சொல்லிக் காட்டுவார். எல்லாள மன்னன்மீது (கிமு 145 - 101) தங்கைக்கு ஒரு வித பக்தி இருந்தது. அனுராதபுரத்தை தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆண்ட தமிழ் மன்னன் என்பதால் அந்த மன்னனை வீரகாவியம் படைத்தாக தங்கை பெருமைப்பட்டுக் கொள்வாள். அனுராதபுர ஆட்சியின்போது எட்டுத் தமிழ் மன்னர்கள் 81 வருடங்களுக்குமேல் ஆட்சி புரிந்ததைச் சொல்லிக்காட்டுவாள். 22 வருடங்கள் ஆட்சி செய்த ஈழசேனனையும், 44 வருடங்கள் ஆட்சி செய்த அவனது மகன் எல்லாளனைப் பற்றியும் புகழ்வாள்.

‘அண்ணா, எல்லாள மன்னன் வஞ்சனையால்தான் தோற்கடிக்கப்பட்டான் என்பது உனக்குத் தெரியுமா?’ என்றாள் ஒரு நாள்.
‘துட்டகைமுனுவால் தோற்கடிக்கப்பட்டது தெரியும் ஆனால் வஞ்சனையால் தோற்கடிக்கப்பட்டான் என்பது எனக்குத் தெரியாது.’ என்றேன்.
‘எல்லாள மன்னன் குதிரைச்சமர் யானைச்சமர் எல்லாவற்றிலுமே சிறந்த வீரன். எனவேதான் அவற்றைத் தவிர்த்து உண்மையான வீரன் என்றால் தரையிலே நின்று சண்டை பிடிப்போமா என்று துட்டகைமுணு சவால் விட்டான். தள்ளாத வயதிலும் விட்டுக் கொடுக்காது இளைஞனான துட்டகைமுணுவோடு தரையிலே நின்று சண்டை போட்டதால்தான் எல்லாள மன்னன் தோல்வியைத் தழுவிக் கொண்டான். சுருங்கச் சொன்னால் வஞ்சக நோக்கம் கொண்ட ஒருவனால் ஏமாற்றப்பட்டான்’ என்றாள் மாலதி.
‘எல்லாள மன்னன் இறந்தபோது நாட்டு மக்கள் அவனுக்குக் கோயில் கட்டிக் கும்பிட்டதாகச் சரித்திரம் கூறுகிறது. அனுராதபுரத்தில் தூர்ந்துபோன அந்தக் கோயில் இப்பொழுதும் இருக்கிறது. எல்லாள மன்னன் இறந்தபோது ஈழத்தமிழனின் சரித்திரமும் முடிந்து விட்டதாகவே பேசப்பட்டது. தமிழன் பாரம்பரியமாய் பரம்பரையாய் வாழ்ந்த மண்ணின் சரித்திரம் முடியவில்லை. முடியப்போவதும் இல்லை. அதன்பின் பல தமிழ் மன்னர்கள் வந்து போய்விட்டார்கள். வருவதும் போவதும் தொடரத்தான் செய்யும்’ என்று அப்பாவோடு வாதாடுவாள்.

ஈழத்து தமிழ் மன்னர்கள் பற்றி நிறையவே தெரிந்து வைத்திருந்தாள். தகுந்த ஆதாரங்களோடு அவர்கள் ஆண்ட காலங்களை ஆவணப்படுத்தியிருந்தாள். தொன்று தொட்டு பாரம்பரியமாய் வாழ்ந்த எங்கள் இனம் எந்தக் காரணம் கொண்டும் அழிந்து போகக்கூடாது, மொழி அழிந்தால் நம் இனம் அழிந்துவிடும் என்று மொழிக்கு முதன்மை கொடுத்து வாதாடுவாள்.

பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த மண் என்பதால் அப்பா அந்த மண்ணைவிட்டு வெளியே வர விரும்பவில்லை. அம்மா ஒரு சங்கீத ஆசிரியையாக இருந்தாள். அப்பா ஒரு சங்கீதப் பிரியர். அதனால் சங்கீத ஞானம் அம்மாவிடம் மட்டுமல்ல மாலதியிடமும் அந்த இசை ஞானம் இருந்தது.

‘எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே’

என்று பாரதி பாடலைத் தங்கை மாலதி எப்போதாவது பாடும்போது அப்பாவும் சேர்ந்து பாட ஆரம்பித்து விடுவார். திடீரென அம்மாவின் நினைவுகளில் மூழ்கி உணர்ச்சி வசப்பட்டு அவர் கண்களில் கண்ணீர் துளிர்க்கும். அப்போதெல்லாம் மாலதிதான் அவருக்கு ஆறுதல் சொல்வாள்.

‘அப்பா இப்படியே பாடிப்பாடி எத்தனை நாளைக்கு அழுதிட்டே இருப்பீங்க?’

‘என்னம்மா செய்யிறது, உன்னுடைய அம்மா பிறந்து, தவழ்ந்து, வளர்ந்து வாழ்ந்த வீடு இது, இதை எல்லாம் விட்டிட்டு எப்படியம்மா நாங்க தனியே போறது.’ வீட்டை விட்டுப் பிரிந்து செல்ல அவரால் முடியவில்லை.

‘இங்கே இருந்தாக் கொன்று போடுவாங்கப்பா, இந்தப் பக்கம் இன்னும் செல் வந்து விழவில்லை. இராணுவம் நெருங்கீட்டு இருக்கிறாங்களப்பா, எந்தநேரமும் அவங்க இந்தப் பக்கம் நகரலாமப்பா.’
‘எனக்கு என்னைப்பற்றிப் பயமில்லையம்மா, அண்ணாதான் வளர்ந்திட்டான். அவன் இங்கே இருந்தால் அவனது உயிருக்கு ஆபத்து’
‘என்னப்பா சொல்லுறீங்க, என்னோட கூட்டாளிங்க எல்லாம் இங்கேதானே இருக்கிறாங்கப்பா’ என்றேன்.
‘யாருக்கு எப்ப என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது மகனே, அதனால நான் ஒரு முடிவு எடுத்திருக்கிறேன்.’ என்றார் அப்பா தீர்க்கமாக.
‘என்னப்பா?’ என்றே அவசரமாக.
‘அம்மாவின் கடைசி ஆசையை நீதான் நிறைவேற்றி வைக்க வேண்டும்’
‘சொல்லுங்கப்பா!’
‘நீ படிச்சு நல்லாய் வரவேணும்.  சமுதாயம் மதிக்கக்கூடிய பொறுப்புள்ளவனாக வாழவேண்டும்.’
‘நான் படிச்சுக் கொண்டுதானே இருக்கிறேன்.’
‘நாட்டு நிலைமை சரியில்லை. இங்கே இருந்து படிக்கச் சரிவராது, அதனாலே நீ வெளிநாடு போகவேண்டும்.’
‘வெளிநாட்டிற்கா? நானா, என்னப்பா சொல்லுறீங்க?’
‘நீ வெளிநாடு போய்ப் படிச்சால்தான்  மாலதியையும் அங்கே கூப்பிடலாம். இரண்டு பேரையும் கரை சேர்த்திட்டால் நான் நிம்மதியாய் கண் மூடிடுவேன்’
அப்பாவின் கனவுகள் எல்லாம் இப்படித்தான் தொடர்ந்தன. எங்களைக் கரை சேர்ப்பதிலேயே அவர் கண்ணும் கருத்துமாய் இருந்தார். இறுதி யுத்தம் தொடங்கு முன்பாகவே என்னை வெளிநாட்டிற்குப் படிப்பதற்காக அனுப்பிவிட்டார்.
அப்பாவின் விருப்பப்படியே மேற்படிப்பிற்காக நான் வெளிநாடு சென்றாலும் என்னால் கவனம் செலுத்திப் படிக்க முடியவில்லை. என் கவனம் எல்லாம் ஊரிலேயே இருந்தது. அப்பாவைப்பற்றிய, தங்கையைப் பற்றிய கவலையோடும் ஏக்கத்தோடும் தினம் தினம் காலம் கழிந்தது. தினசரி வரும் அவலச் செய்திகள், அவர்களை அங்கே தனியே விட்டு விட்டு நான் மட்டும் கோழை போல இங்கே ஓடி வந்திருக்கக்கூடாதோ என்று நினைத்துப் பார்க்கவும் வைத்தது. எங்கள் குடும்பம் போலவே அந்த மண்ணில் பல்லாயிரக் கணக்கான குடும்பங்களின் நிலைமையும் கவலைக்குரியதாகவே இருந்தது. வெளிநாட்டில் இருந்து இப்படிப் பதட்டப் படுவதால் என்ன பலன் கிடைத்து விடப்போகிறது. தொடக்கத்தில் எங்கேயாவது குண்டு வெடித்தால் பதட்டப்பட்ட மனசு தினம் தினம் அங்கே குண்டு வெடிப்பதும், அப்பாவி மக்கள் இறப்பதும் ஒரு நிகழ்ச்சியான பிறகு எனக்கும் அது தினசரி நடக்கும் ஒரு சாதாரண நிகழ்வாய்ப் போய்விட்டது.

இனிமேலும் அங்கே தங்க முடியாது என்ற நிலையில், சொந்த வீட்டைவிட்டுப் பிரியும் கடைசி நேரத்தில் ‘போய்வருகிறேன்’ என்றபடி அப்பா வாசற்படியைத் தொட்டுக் கண்ணில் ஒற்றித் தேம்பிய காட்சி மாலதியை நிறையவே பாதித்திருந்தது. மண்ணை, மரத்தை, ஆடுமாட்டை என்று ஒன்றையுமே மிச்சம் விடாமல் அவர் பிரிவுத் துயரோடு விடை பெற்ற கடைசி நாட்களில்கூட ‘போய் வருகிறேன்’ என்று நம்பிக்கையோடுதான் புறப்பட்டாராம். பிறந்து வளர்ந்த சொந்த மண்ணிலேயே அகதியாக்கப்பட்டபோது அவர் துடித்துப் போய்விட்டார்.

கிளிநொச்சி பாடசாலையில் கிபீர் விமானங்கள் குண்டு வீசியபோது அதைக் கேள்விப்பட்ட அப்பா ரொம்பவும் பாதிக்கப்பட்டிருந்தார். தலைமை ஆசிரியர் என்ற வகையில் குழந்தைகளோடு பழகி அவர்களின் உளவியலை நன்றாக அறிந்து வைத்திருந்தவர் அப்பா. பள்ளியை ஒரு கோயிலாகத்தான் அவர் நினைத்து வாழ்ந்திருந்தார். எதையுமே பதட்டப்படாமல் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் அப்பாவின் மனதை அந்த நிகழ்வு நிறையவே பாதித்திருந்தது. அதன் தாக்கமோ என்னவோ, எப்படியோ யாரையோ பிடிச்சு அவசரமாக தங்கையைக் கொண்டு எழுதி எனக்கு ஒரு கடிதம் போட்டிருந்தார்.

‘கிளிநொச்சி வான்பரப்பில் இருந்து குண்டு போட்டாங்களாம். கேள்விப்பட்டியோ தெரியாது. குழந்தை குட்டின்னு நிறைப்பேர் இறந்திட்டாங்களாம். எல்லாமே பள்ளிக்கூடப் பிள்ளைங்க, கேள்விப்பட்தில் இருந்து மாலதி தவித்துப் போயிருக்கிறாள்.  இங்க நான் ஒரு குமரை வச்சுக் கொண்டு தவிக்கிற தவிப்பு யாருக்குத் தெரியும். எப்படியாவது இவளைக் கரை சேர்த்திட்டா நான் நிம்மதியாய்ப் போயிடுவேன். நிம்மதி இழந்ததால தூக்கம் போச்சு. இப்ப இவளையும் இழந்திடுவேனோ என்று எனக்குப் பயமாயிருக்கு.

குண்டு வீச்சில் பிள்ளைகள் செத்துப் போனதைக் கேள்விப்பட்டதும், எங்க பக்கத்து வீட்டுப் பார்வதிப் பாட்டி தாங்க முடியாமல் தெரு மண் அள்ளித் திட்டீட்டா. மனசெரிஞ்சு யாராவது திட்டினா அது பலிச்சிடும்ணு பெரியவங்க சொல்லுவாங்க. எய்தவன் இருக்க நாம அம்பை நோகலாமா? அவசரப்பட்டிட்டாவோ என்று நினைக்கிறேன். எனக்கு மனசு கேக்கல, எங்களுக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்குதோ தெரியாது. ஆண்டவன்தான் தப்புப் பண்ணுறவங்களை மன்னிக்கவேணும்’ - அப்பா
அப்பாவின் அந்தக் கடிதத்திலேயே மிகுதியாய் இருந்த வெற்றிடத்தில் மாலதி குணுக்கி எழுதியிருந்தாள்.

‘ஆண்டவன்தான் தப்புப் பண்ணுறவங்களைத் தண்டிக்கணும் என்று அப்பா எழுதுவார் என்று நினைச்சா அவங்களை மன்னிக்கணும் என்றல்லவா எழுதியிருக்கிறார். அகிம்சையும் காந்தியமும் அவரோடு கூடப்பிறந்திருக்கலாம். அல்லது எங்க வீட்டுச் சுவரிலே மாட்டியிருக்கும் இந்திய சுதந்திர போராட்ட வீரர்களின் அகிம்சை முறை இவருக்குள் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம். அவர்களின் வழியைப் பின்பற்றியே சுதந்திரம் பெற்றுவிடலாம் என்று அப்பா கனவு கண்டு கொண்டிருக்கிறாரோ தெரியாது? அகிம்சா மூர்த்தி மகாத்மா காந்தியின் மரணத்தோடு அகிம்சையும் மரணமாகிவிட்டது என்பது அப்பாவிற்குத் தெரியாதா? இத்தனை நாட்களில் இந்த மண்ணில் ஏற்பட்ட அனுபவங்கள் அவருக்குப் போதாதா?  ஈவு இரக்கமின்றி எத்தனை குழந்தைகளைக் கிபீர் விமானத்திலிருந்து குண்டு போட்டுக் கொன்று குவித்திருக்கிறார்கள். ஏன் இதை யாரும் கண்டு கொள்ளவில்லை. அந்தக் குழந்தைகளின் அவலக்குரல் இவர்களுக்குக் கேட்கவில்லையா? ஒரு இனத்தின் மீது வெறுப்பிருக்கலாம் அதற்காகப் பெண்கள், குழந்தைகள் என்று கூடப்பார்க்காமல் கொலை வெறியோடு பாடசாலை மீது குண்டு வீசியவனை எப்படி எங்களால் மன்னிக்க முடியும்? அண்ணா நீ எப்பவுமே அப்பாவின் பக்கம்தான் என்று எனக்குத் தெரியும். அகிம்சை, சாத்வீகம் என்று சொல்லிக் கொண்டே நீங்கள் காலத்தைக் கடத்தி விடுவீர்கள். என்னால் முடியாதப்பா, எம்மினம் அழிவதைப் பார்த்துக் கொண்டு இனிமேலும் மௌனமாக இருக்கமாட்டேன். – அன்புத் தங்கை மாலதி.

மன்னிக்க முடியும் என்று அப்பா மன்னித்தார். எந்தப் பட்டறையில் இதை எல்லாம் அப்பா கற்றுக் கொண்டாரோ தெரியவில்லை. அவருடைய உலகம் முற்றிலும் வேறாக இருந்தது. இந்தக் காலத்திலும் இப்படி ஒருவரா என்று இளைஞர் கூட்டம் அவரை ஏளனத்தோடு பார்த்தது.

மாலதியை இழந்திடுவேனோ என்று அப்பா பயந்தது போலவே ஒரு நாள் அந்த நிகழ்வு நடந்து விட்டது. ஆமாம், உண்மையாகவே மாலதி தொலைந்து போயிருந்தாள். பாடசாலையால் நெடு நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லையே என்று அப்பா பதட்டப்பட்டுத் தேடியபோதுதான் அவள் எழுதி வைத்துவிட்டுச் சென்ற கடிதம் அப்பாவின் கண்களில் பட்டிருக்கிறது. மாலதி இயக்கத்தில் இணையப்போவதாகச் சொல்லிவிட்டு வீட்டைவிட்டுப் போய்விட்டாள். அப்பா எவ்வளவோ முயற்சி செய்தும் அவள் வீட்டிற்குத் திரும்பி வரவில்லை. தாய்மண்ணுக்காக, இனத்திற்காக, மொழிக்காக விடுதலை வேண்டிப் போய்விட்டாள் என்று ஊர் பேசிக்கொண்டது.

வீட்டைவிட்டு மாலதி இயக்கத்திற்குப் போனபோது அந்தப் பிரிவுத்துயரை அப்பாவால் தாங்க முடியாததாக இருந்தது. இவ்வளவு கட்டுப்பாட்டோடு அடக்க ஒடுக்கமாய், ஒழுக்கத்தோடு வளர்ந்து வந்த பெண் எப்படிக் கட்டுப்பாட்டை மீறினாள் என்ற அதிர்ச்சிதான்; அப்பாவிடம் மிஞ்சி இருந்தது. தங்கையின் பிரிவும் எங்கள் துயரின் ஒரு தொடர் அங்கம் போலாகிவிட்டது. எங்கே தவறு நடந்தது என்பதை அப்பாவால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஏனென்றால் தாயில்லாப் பிள்ளைகள் என்று எந்தக் குறையும் வைக்காமல் வளர்ந்த தனது பிள்ளைகள் தவறே செய்ய மாட்டார்கள் என்ற அதீத நம்பிக்கையும் அவரது ஏமாற்றத்திற்குக் காரணமாயிருக்கலாம். வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பியே ஏமாந்தவர் அப்பா.

தன் வளர்ப்பில் எங்கோ தவறு செய்து விட்ட குற்ற உணர்வில் அப்பா தவித்துப் போய்விட்டார். அவளாகவே விரும்பித்தான் சென்றாள் என்பதால் அவள் இனித் திரும்பி வரமாட்டாள் என்பது அப்பாவிற்குப் புரிந்து போய்விட்டது. அவள் வீட்டைவிட்டுப் போனது சரியா பிழையா என்பதை நான் ஆராயவில்லை. பட்டிமன்றம் போட்டு விவாதிக்கவும் தயாராக இல்லை. எனது கவலை எல்லாம் அப்பா தனித்துப் போய்விட்டாரே என்பதில்தான் இருந்தது. நான் புலம் பெயர்ந்த மண்ணிலும், மாலதி இயக்க முகாமிலுமாய் அப்பாவை விட்டுப் பிரிந்திருந்தோம். கடைசிக் காலத்தில் தசரதமன்னன் போல அப்பாவும் புத்திர சோகத்தால் வாடவேண்டும் என்ற நியதியோ புரியவில்லை.

‘என்ன பாட்டி, இங்கேயிருந்து ஒரு பிடி மண் எடுத்து தூற்றினால் அங்கே மேலே பறக்கிற விமானத்தை அடிச்சிடுமா’ என்று பார்வதிப்பாட்டி இயலாமையால் அன்று மண் எடுத்துத் திட்டியபோது தங்கை மாலதி பாட்டியைக் கேலி செய்ததாக அன்று கடிதத்தில் எழுதியிருந்தது இன்று என் நினைவிற்கு வந்தது.

‘அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்’ என்பதைப் பிறிதொருநாளில் அதே கிபீர் விமானம் விபத்துக்குள்ளாகி அந்த விமான ஓட்டியின் உடல் சிதறிச் செத்தபோது ‘தெய்வம் நின்று கொல்லும்’ என்பது எவ்வளவு உண்மை, அநியாயம் செய்தவர்கள் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் என்பது நிரூபணமாயிடிச்சு என்று பலரும் பேசிக் கொண்டார்கள். அந்த ஒரு தனி மனிதனின் மரணத்தில், பாதிக்கப்பட்ட ஆயிரமாயிரம் பேர் மகிழ்ச்சியடைந்ததாகக் காட்டிக்கொண்டதில் அவர்களுக்கு ஒருவித ஆத்மதிருப்தி. அனாலும் அந்தச் செய்தியைக் கேட்க அன்று விமான ஓட்டியைத் திட்டித் தீர்த்த பார்வதிப் பாட்டியோ, மனிதாபிமானத்தோடு மன்னித்து மறந்துவிட்ட அப்பாவோ  இன்று உயிரோடு இல்லை. நேற்றிருந்தார் இன்றில்லை என்பதும் நியதிதானே!

Sunday, July 17, 2011

மகாஜனாக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் - 2011

மகாஜனாக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் - கனடா

வசந்தகால ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டியும் 2011

July 16th Saturday – 9.00 AM – 5.30 PM
Highcastle Public School, 370 Military Trail.
Scarborough Ontario M1E 4E6

மகாஜனாக்கல்லூரியின் வசந்தகால ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டியும் சென்ற சனிக்கிழமை ஸ்காபரோவில் உள்ள கைகாசில் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் ( Highcastle Public School) மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

மகாஜனக்கல்லூரி பழைய மாணவர்கள், முன்னாள் அதிபர், ஆசிரியர்கள், அவர்களது குடும்பத்தினர் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Commity Members with President Santhinathan


மேலும் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்திருந்த பழைய மாணவர்களும் அவர்களது குடும்பத்தினரும் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இந்த நிகழ்வைச் சிறப்பித்தனர்.

மகாஜனக் கல்லூரியின் முன்னால் விளையாட்டு வீரரான திரு. புண்ணியமூர்த்தி பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். லண்டனில் இருந்து வருகைதந்த ரவி அருனாச்சலம், நோர்வேயில் இருந்து வருகை தந்த விஜிட் தனபாலசிங்கம், எஸ். நாகரட்ணம், அவுஸ்ரேலியாவில் இருந்து வருகை தந்த கே. ஜெகன் போன்ற சில பழைய மாணவர்களும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டிகளில் பரிசு பெற்றவர்களுக்குப் பரிசு கொடுத்துச் சிறப்பித்தனர்.

மகாஜனக் கல்லூரி முன்னாள் அதிபர் திரு. பொ. கனகசபாபதி, முன்னாள் ஆசிரியரும் போசகருமான திரு. கார்த்திகேசு போன்றவர்களுடன் ஏனைய கனடா பழைய மாணவர் சங்கப் போசகர்களும் கலந்து கொண்டனர்.
ஒன்று கூடல், விளையாட்டுப் போட்டி ஆகியவற்றின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படக் காட்சிகளை உங்களுக்காக இங்கே தருகின்றோம்.கயிறு இழுப்பு போட்டி
நெஞ்சில் அலை மோதும் மகாஜனாவின்
பழைய ஞாபகம்.

Monday, July 11, 2011

Trail - A Journey By The Living, For Life.

Nathan Sivagananathan

நினைவு நல்லது வேண்டும்...

 “Doing my bit to fight cancer ever since the deadly disease hit my sister… if I can make a difference to one persons life by walking the 672kms from Dondra to Point Pedro.. It would be worth the effort..”

Nathan Sivagananathan


All funds collected by Trail goes towards building the paediatric Cancer ward in Jaffna Sri Lanka
Trail fundraising campaign.

When you ask someone to donate to your Trail Walk, you are giving them an opportunity to do something good for others, and, in turn, feel good about themselves.

Here is the link to donate:
This mail was generated from trailsl.com
Please click on 'Donate to my walk'


Tel : +94 (0) 713 827025
Email : info@trailsl.com
   

Please Donate for something good. Donate whatever you can.


TRAIL latest :
Rs 100 million reached.
300kms completed.
1500 registered walkers.
Over 15000 walkers/supporters over the last 12 days

Piranavan we Wish you all the very best on this most courageous walk


யாழ்ப்பாணம் வைத்திய சாலையில் குழந்தைகள் புற்றுநோய் மருத்துவத்திற்கான ஒரு பகுதியை உருவாக்குவதற்காக
பிரணவன் சிவகணநாதன் அவர்கள் நீண்ட நடை பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இலங்கையின் தென் பகுதியான டொண்டுறா தொடங்கி வடக்கே பருத்தித்துறை வரையும் இவரது நடை பயணம் இடம் பெறும். 670 கிலோ மீற்றர் தூரத்தை 23 நாட்களில் நடந்து முடிக்க இருக்கின்றார்.
இந்த அரிய முயற்சிக்கு உங்கள் அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கின்றோம். தமிழ் மக்கள் நோயற்ற வாழ்வு வாழ கரம் கொடுப்பீர்கள் என எதிர்பார்க்கின்றோம்.

Please find link to 'Trail' short video clip from yesterday at the Gallface
http://www.virakesari.lk/vira/video/video.asp?key_c=1204

'காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.'மனம் இருந்தால் இடம் உண்டு.

Wednesday, July 6, 2011

கனடா தினக் கொண்டாட்டம் - 2011

சொப்காவின் (SOPCA) கனடா தினக் கொண்டாட்டம் - 2011கனடாவின் 144வது பிறந்த தினக் கொண்டாட்டத்தை பீல் பிரதேசத்தில் வசிக்கும் கனடிய குடிமக்கள் மிசசாக்காவில் உள்ள ஸ்குயர்வண் பார்வையாளர் மண்டபத்தில் சென்ற வியாழக்கிழமை மிகவும் சிறப்பாகக் கொண்டாடினர். கனடிய தேசிய கீதம், தமிழ் வாழ்த்து ஆகியவற்றைத் தொடர்ந்து கனடிய தேசியக்கொடியை மூத்த உறுப்பினர்களில் ஒருவரான திரு. எம். சோமசுந்தரம் ஏற்றிவைத்தார். அடுத்து தாயகத்தில் மரணித்த உறவுகளுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி சபையினரால் செலுத்தப்பட்டது.

சொப்காவின் தலைவர் அந்தனி ஜேசுதாசன் ‘எங்களை வரவேற்று பயமற்று வாழ மறுவாழ்வு தந்த கனடா நாட்டின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை இன்று நாங்கள மெய்யன்புடனும், நன்றியுணர்வுடனும்  கொண்டாடுகின்றோம்’ என்று தனது உரையில் குறிப்பிட்டார். தொடர்ந்து சொப்காவின் உப தலைவர் குரு அரவிந்தன் ‘பல்கலாச்சார, ஒற்றுமையான வாழ்க்கைக்கு கனடா மிகவும் சிறந்த உதாரணமாக மற்ற நாடுகளுக்கு விளங்குகின்றது. இந்த நாட்டை எனது புகுந்த வீடு என்று சொல்லிக் கொள்வதில் நான் மிகவும் பெருமைப் படுகின்றேன்’ என்று தனது உரையில் குறிப்பிட்டார்.

குரு அரவிந்தனின் உரையைத் தொடர்ந்து செல்வி தாரணி தயாபரன், செல்வி கிருத்திகா தயாபரன் ஆகியோரது வரவேற்பு நடனம் இடம் பெற்றது. வரவேற்பு நடனத்தைத் தொடர்ந்து நகராட்சி மன்ற 10ம் வட்டார உறுப்பினர் சூ மக்பெடரின் உரை இடம் பெற்றது. அடுத்து கனடா தினத்தைப் பற்றிய உரையை பிரெஞ்சு மொழியில் செல்வி அனிதா ரங்கநாதன் நிகழ்த்தினார். அடுத்து சொப்பகா சிறுவர்கள் கலந்து கொண்ட கலாச்சார நடனம் இடம் பெற்றது.

ஸ்காபரோ ரூச்றிவர் பாராளுமன்ற கௌரவ உறுப்பினரும், கனடாவின் முதல் தமிழ் பாராளுமன்ற உறுப்பினருமான ராதிகா சிற்சபேசன் அவர்கள் கனடா பிறந்த நாள் கேக் வெட்டி, பிறந்த நாள் பாடல் பாடி நிகழ்வைச் சிறப்பித்தார். அவரது சிறப்புரையைத் தொடர்ந்து, கலைமகள் குறுநாவல் போட்டியில் சர்வதேச விருது பெற்ற எழுத்தாளர் குரு அரவிந்தனுக்கு ‘புனைகதை வித்தகன்’ என்ற பட்டம் சூட்டி, விருது வழங்கி அவரது சாதனையையிட்டு தான் மட்டுமல்ல தமிழ் இனமே பெருமைப்படுவதாகக் குறிப்பிட்டு அவரைப் பாராட்டினார்.

தொடர்ந்து அபிராம் சந்திரமோகன் பாடலிசைக்க பிரியங்கா சந்திரகுப்தன் நடனமாடினார். அடுத்து அழகன் சின்னத்தம்பி, சிர்வின் ராஜ்குமார், திர்ஷா ஜேசுதாசன் ஆகியோரின் பாடல்களும் சொப்பா இசைக்குழுவின் இசை நிகழ்ச்சியும் இடம் பெற்றன. தொடர்ந்து இடம்பெற்ற சொப்கா இளைஞர்களின் நகைச்சுவை உiயாடல் சபையோரை வயிறு குலுங்க வைத்தது. அடுத்து பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட வைத்திய கலாநிதி விக்டர் பிகராடோவின் சிறப்புரை இடம்பெற்றது. பிரதம விருந்தினர் உரையைத் தொடந்து திரு. ஞானபண்டிதர், திரு அழகன் சின்னத்தம்பி குழுவினர் பங்கு பற்றிய வில்லுப்பாட்டு இடம் பெற்றது. இந்த நிகழ்வைத் தொடர்ந்து கனடா தினப் போட்டியில் பங்குபற்றிப் பரிசு பெற்ற மாணவர்கள் பரிசு கொடுத்துக் கௌரவிக்கப்பட்டனர். இறுதியாக சொப்காவின் செயலாளர் செல்வி ராகுலா சிவயோகநாதனின் நன்றியுரை இடம் பெற்றது.

செல்வி.ஜெனிரா ரூபரஞ்சன், செல்வி.சிவானி சிவசெல்வச்சந்திரன் ஆகியோர் நிகழ்ச்சிகளை மிகவும் விறுவிறுப்பாகக் கொண்டு நடத்தினர். இரவு விருந்துடன் கனடா பிறந்த நாள் கொண்டாட்டம் இனிதே முடிவுற்றது.

Sunday, July 3, 2011

SOPCA Canada Day - 2011

Canada Day


Millions of Canadians from coast to coast are today celebrating the nation’s 144th birthday.
The Social Cultural Recreational Educational and Environmental Network, a Tamilese community organization based in
Mississauga, with acronym SOPCA (SCREEN of Peel Community Association), did its celebrating last night.
And what a party it was.

Crowded into the Older Adult Centre at Square One, more than 150 people were treated to two hours of traditional Tamil dancing and singing – even a skit. Not forgotten, of course, were the singing of O Canada and the hoisting of the Canadian flag.
“Tonight we are celebrating our fidelity and gratitude to a great country which has welcomed us, given us refuge and a life free from fear,” said SOPCA president Anthony Jesuthasan.
The patriotism was palpable.vice-president Kuru Aravinthan
Canada is truly a model for other countries to follow. I’m really proud to call this country home,” said vice-president Kuru Aravinthan.


Demonstrating the cultural diversity of Canada, teenage emcees Jeneta Rubaranjan and Sivaani Sivachelvachandran kept the show humming along smoothly in both English and Tamil.
Invited guests included Ward 10 Councillor Sue McFadden and Dr. Victor Figurado, a Mississauga-based volunteer with Doctors without Borders who witnessed first hand the devastation wrought by the 2004 Indian Ocean tsunami. Hardest hit were Sri Lanka, where most Tamils live, India and Thailand.
Scarborough-Rouge River MP Rathika Sitsabaiesan, who became Canada’s first Tamil member of parliament when she elected in the May 2 election, dropped by to cut the cake. Mississauga.
 Mississauga ... my family still call Mississauga home,” she told the enthusiastic crowd.
Sitsabaiesan said she was “humbled” to be elected to parliament; she also noted she has a dual role to play.

“I grew up in

Award given to Kuru Aravinthan by MP Rathika Sitsabaiesan


“I will do the best I can to do you proud,” she promised.
True to its mission to combat social injustice and promote family values, SOPCA used the occasion to hand out awards to winners of its Canada Day quiz and art contests.
Sanjay Ramanathan (Grades 3 and 4), Kabila Vetharaniyaseyon (Grades 5 and 6), and Surya Ratnam and Krujan Jegatheeswaran (tied in Grades 7 and 8) took first place in quiz. Arunesh Baskaran (Grades 3 and 4), Surutiga Ranjan (Grades 5 and 6) and Krujan Jegatheeswaram (Grades 7 and 8) were tops in art.
 


CTWA - Award

Thinakkural-03-07-2011

Friday, July 1, 2011

Canadaian Tamil Writers Association

விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு கனடா எழுத்தாளர் இணையத்தின் பாராட்டு

மாலினி
Kuru
ழுத்தாளர் எஸ்.பொ, எழுத்தாளர் குரு அரவிந்தன், எழுத்தாளர் அகில் ஆகியோருக்கு கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் பாராட்டு விழா ஒன்றை 26-06-2011 ஞாயிற்றுக் கிழமை மாலை 7:00 மணியளவில் ரொறன்ரோ பேர்ச்மவுண்ட வீதியில் உள்ள பார்வையாளர் அரங்கத்தில் நடத்தினர். அவுஸ்ரேலியாவில் இருந்து வருகை தந்திருந்த கனடிய தமிழ் இலக்கியத்தோட்டத்தில் விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரை, தமிழகத்தில் இருந்து வெளிவரும் மூத்த சஞ்சிகைகளில் ஒன்றான கலைமகள் சஞ்சிகை நடத்திய சர்வதேச குறுநாவல் போட்டி – 2011ல் விருது பெற்ற எழுத்தாளர் குரு அரவிந்தன், இலங்கையில் இருந்து வெளிவரும் ஞானம் சஞ்சிகை நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற எழுத்தாளர் அகில் சாம்பசிவம் ஆகியோர் இவ் விழாவில் கௌரவிக்கப்பட்டனர்.


SPO & Kuru
 தமிழ்த்தாய் வாழ்த்து, கனடியதேசியகீதம் ஆகிய இரண்டையும் செல்வி. அ. இராசையா இசைத்தார். அமைதி வணக்கத்தைத் தொடர்ந்து எழுத்தாளர் இணைய செயலாளர் திருமதி இராஜ்மீரா இராசையா வரவேற்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து தலைமை உரையை இணையத்தலைவர் த. சிவபாலுவும், சிறப்புரையை முன்னாள் மகாஜனாக் கல்லூரி அதிபர் பொ. கனகசபாபதி அவர்களும் நிகழ்த்தினார்கள். அதிபர் பொ. கனகசபாபதி தனது சிறப்புரையில் ‘குரு அரவிந்தன் வடஅமெரிக்கா, இலங்கை, மற்றும் புலம்பெயர்ந்த நாடுகளில் மட்டுமல்ல தமிழகத்திலும் தனக்கெனப் பல்லாயிரக்கணக்கான வாசகர்களை உருவாக்கி இருப்பதால்தான் இன்று முன்னிலையில் இருக்கும் எழுத்தாளர்களில் ஒருவராக இருக்கின்றார்’ என்று குறிப்பிட்டார்.

அடுத்து ‘எழுத்துலகில் அகில் சாம்பசிவம்’ என்ற தலைப்பில் சின்னையா சிவநேசன் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தி அவரைப் பாராட்டினார். திரு சண்முகராஜா, கருணாகரமூர்த்தி ஆகியோர் மாலை அணிவித்து,  பொன்னாடை போர்த்திக் கௌரவிக்க, பாராட்டு விருதை திரு. எஸ்.பொன்னுத்துரை வழங்கினார். அதைத் தொடர்ந்து அகில் ஏற்புரை நிகழ்த்தினார்.

Kuru - Spo - Akil
இந்த நிகழ்வைத் தொடர்ந்து எழுத்தாளர் குரு அரவிந்தனைப் பற்றி எழுத்துலகில் ‘குரு அரவிந்தனின் எழுத்தாளுமை’ என்ற தலைப்பில் கவிநாயகர் வி. கந்தவனம் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார். அவர் தனதுரையில் அதிக வாசகர்களைக் கொண்ட எழுத்தாளர்களில் ஒருவராக இன்று இவர் இனம் காணப்படுவதற்குக் காரணம் இவரது எழுத்தாளுமையும், இவரது தன்னடக்கமுமே காரணமாகும் என்று மேலும் குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து சட்டத்தரணி மனுவல் ஜேசுதாசன் குரு அரவிந்தனுக்கு மாலை அணிந்து கௌரவிக்க, பண்டிதர். ம.செ. அலெக்சாந்தர் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார். எழுத்தாளர் எஸ். பொன்னுத்துரை குரு அரவிந்தனுக்கு விருது வழங்கிக் கௌரவித்தார். தொடர்ந்து குரு அரவிந்தனின் ஏற்புரை இடம் பெற்றது.

அடுத்து ‘எஸ்.பொவின் இலக்கியப்பணி’ என்ற தலைப்பில் முனைவர் இ.பாலசுந்தரம் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து திரு. எஸ்.பொ அவர்கள் மாலை அணிந்து, பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார். தொடர்ந்து அமரர் ஆ.பொ. செல்லையாவின் மனைவியான திருமதி செல்லையா பாராட்டு விருதை வழங்கிக் கௌரவித்தார். எழுத்தாளர் திரு. எஸ். பொன்னுத்துரை ஏற்புரை வழங்கினார்.

இலக்கிய ஆர்வலர்கள் பலர் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். பலவேறு துறையைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்ட சிறப்புமிக்க விழாவாகவும் இது அமைந்திருந்தது. இரவு விருந்துடன் பாராட்டு விழா இனிதே முடிவுற்றது.