Monday, July 25, 2011

‘நேற்றுப்போல இருக்கிறது’

கே. எஸ். பாலச்சந்திரனின் ‘நேற்றுப்போல இருக்கிறது’
(குரு அரவிந்தன்)


பழைய நினைவுகளை மீட்டிப் பார்ப்பது என்பது மிகவும் சுவாரஸ்யமானது. பிறந்த மண்ணிலே நினைவுகளை மீட்பதற்கும் புகுந்த மண்ணிலே நினைவுகளை மீட்பதற்கும் நிறையவே வித்தியாசம் இருக்கின்றது. அந்த மண்ணிலே இருந்தால் சிறுவயதிலே நடந்த சம்பவங்களின் இடங்களையோ அல்லது காட்சிப் பொருட்களையோ காண்பதற்கு எங்களுக்கு அடிக்கடி சந்தர்ப்பம் கிடைத்திருக்கும். ஆனால் புகுந்த மண்ணில் அந்த நினைவுகளை  மீண்டும் கற்பனையில் கொண்டு வந்து தான் நாங்கள் பார்த்து அனுபவிக் வேண்டும். அப்படியான ஒரு சூழலில்தான் கே. எஸ். பாலச்சந்திரனும் ‘நேற்றுப்போல இருக்கிறது’ என்ற தனது நூலில் தான் வாழ்ந்த கிராமப்பின்னணியில் இளமைக்கால நினைவுகளை தனக்கே உரிய நகைச்சுவை ததும்பும் பாணியில் இரை மீட்டிருக்கிறார். சமீபத்தில் ஒரு பேப்பரில் வெளிவந்த ‘கடந்தது நடந்தது’ என்ற இவரது இந்தக் கட்டுரைகள் பலரின் விருப்பத்திற்கிணங்க இன்று நூல் வடிவில் உருப் பெற்றிருக்கின்றன.

பொதுவாக எல்லா எழுத்தாளர்களும் தங்கள் இளமைக்கால அனுபவங்களைத் தமது கட்டுரைகள் மூலமோ அல்லது கதைகள் மூலமோ வெளிக்காட்டுவார்கள். ஆங்கிலத்தில் இளமைக்கால அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் இப்படியான நூல்கள் நிறையவே இருக்கின்றன. தமிழகத்தில் எழுத்தாளர் சுஜாதாவின் இத்தகைய உரைச்சித்திரத்தை வாசித்து ரசித்திருக்கிறேன். தமிழிலே செங்கை ஆழியான், கே. டானியல், அ. முத்துலிங்கம் போன்ற எழுத்தாளர்கள் தங்கள் ஆக்கங்கள் மூலம் யாழ்ப்பாணத்து பழைய நினைவுகளை அவ்வப்போது நிறையவே மீட்டிருப்பதை வாசித்து மகிழ்ந்திருக்கிறேன். இதைப்போலவே கனடா உதயன் பத்திரிகையில் வெளிவந்த குரு அரவிந்தனின் நெய்தலும் மருதமும் என்ற தொடரில் இத்தகைய இளமைக்கால நினைவுகளை மீட்டுப் பார்த்திருக்கின்றார். குறிப்பாக பாரதியார் ‘காக்கை குருவி எங்கள் ஜாதி’ என்று குறிப்பட்டதைப்போல, யாழ்ப்பாணப்பகுதியில் ஏழு பறவைகளாய் கூட்டமாக வரும் சாம்பல் நிற புலுனி, மழைகாலத்தில் வரும் சிகப்பு நிற தம்பளபூச்சி, மனிதர்போல பேசத் தெரிந்த மைனா, கூடுகட்டத் தெரியாத குயில், முதுகிலே மூன்று குறி போட்ட அணில், செம்மஞ்சள் இறகைக் கொண்ட செம்பகம் போன்ற உயிரினங்கள் இன்று அந்த மண்ணிலே அருகி வருகின்றன என்ற உண்மையையும் அந்த உரைச்சித்திரத்தின் மூலம் தெளிவாக வெளிக்காட்டி இருக்கின்றார். எனவே இத்தகைய பழைய நினைவுகள் எழுத்தாளர்களால் மீட்கப்படும்போது எதிர்காலச் சந்ததியினரால் முன்னோரைப் பற்றிய பல விடையங்களை இதன் மூலம் அறிந்து கொண்டு அவற்றை ஆவணப்படுத்த அவர்களால் முடிகின்றது. கே. எஸ் பாலச்சந்திரனும் அந்த முயற்சியில் வெற்றி பெற்றிருக்கின்றார்.

நாடக உலகே கே. எஸ். பாலச்சந்திரனின் கனவாக இருந்ததால் ‘நாடகம் போட்டோம்’ என்று தனது விடலைப்பருவத்து அனுபவத்தை இந்த நூலில் முதல் கட்டுரையாகக் குறிப்பிடுகின்றார். 1970 களில் சிரித்திரன் சஞ்சிகையில் இக்கட்டுரை வெளிவந்ததாக ஆசிரியர் குறிப்பிடுகின்றார். இராமாயண நாடகத்தில் இராவணன் வேடமேற்று நடித்த அவர்களது வகுப்பு மெனிற்ரரை மற்ற மாணவர்கள் எப்படி பழி தீர்த்துக் கொண்டார்கள் என்ற கதையை நகைச்சுவையாய்ச் சொல்கிறார். நாடக நடிப்பு என்பது எல்லோருக்கும் இலகுவில் கிடைக்கும் அனுபவமல்ல, ஆனால் சயிக்கிள் பழகுவது என்பது அனேகமாக எல்லோருக்கும் கிடைக்கும் அனுபவமாகும். அந்த அனுபவத்தைப் பற்றியே அடுத்ததாகக் குறிப்பிடுகின்றார். 1950 தொடக்கம்வரை ஆண்கள் மட்டுமே பெற்றுக் கொண்ட அந்த அனுபவத்தை பெண்களும் பின்நாளில் பெற்றுக் கொண்டது, யாழ்ப்பாணத்தில் பெரியதொரு சமுதாய மாற்றத்திற்குக் காரணமாயிருந்தது. எதற்கெடுத்தாலும் ஆண்களையே நம்பியிருந்த தமிழ் பெண்களுக்கு அவர்கள் சுயமாக இயங்குவதற்கு இந்தச் சயிக்கிள் முக்கிய காரணாய் இருந்திருக்கிறது. ஒருவர் மட்டுமே அமர்ந்து செல்லக்கூடிய இந்த வண்டி தேவைகருதி இருவர், மூவர் அமர்ந்து செல்லும் வண்டியாக யாழ்ப்பாணத்து ஒவ்வொரு கிராமத்திலும் மாறியிருந்தது.

பள்ளிக்கூட நாட்கள் பற்றி ஆசிரியர் குறிப்பிடும் போது, பிந்திப் போனால் வாத்தியார் பிரம்பினால் அடிப்பார் என்ற பயத்தோடு அரைகுறை அழுகையுடன் ஓடியோடிப்போன அருமையான பள்ளிக் காலம் பற்றியும், பள்ளிப் பரீட்சை பற்றிக் குறிப்பிடும்போது பரீட்சை நடந்தால் பரவாயில்லை பரீட்சை முடிவுகள் வராமல் விட்டால் போதும் என்ற நிலையில் இருந்ததாகவும் குறிப்பிடுகின்றார்.  பள்ளிக்கூட விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றியது, பேச்சுப்போட்டி, பள்ளிகூட கண்காட்சி என்று ஒவ்வொரு கட்டுரையும் ஒவ்வொரு கதை சொல்கிறது. பேச்சுப் போட்டியின் போது பாரதி என்ன சொன்னார் என்று திரும்பத்திரும்பச் சென்னபோது சபையில் இருந்தவர் தன்னைப் பார்த்து என்ன சொன்னார் என்பதை நகைச்சுiயோடு குறிப்பிடுகின்றார்.

இடங்கள்தான் மாறுபட்டிருக்கிறதே தவிர சம்பவங்கள் எல்லாம் எல்லோருக்கும் அடிக்கடி ஏற்பட்ட அனுபவங்களாகவே இருக்கின்றன. காலத்திற்கேற்ப சில சம்பவங்களிலும் மாற்றங்கள் தெரிகின்றன. குறிப்பாக வாத்தியார் பிரம்பால் அடிப்பார் என்ற பயம் அந்தக் காலத்து மாணவர்களுக்கு இருந்தது போல, இப்போது உள்ள மாணவர்களுக்கு இருப்பதில்லை. பாடசாலை விளையாட்டுப் போட்டி பற்றி இவர்  குறிப்பிடும் போது பச்சை, சிகப்பு, நீலம், மஞ்சள் நிறங்களில் இல்லக் கொடிகள் இருக்கும் என்று குறிப்பிட்டிருக்கின்றார். நான் ஆரம்பக் கல்வி கற்ற நடேஸ்வராக் கல்லூரியிலும் வள்ளுவர், கம்பர், இளங்கோ, பாரதி என்று பெயர் வைத்தது மட்டுமல்ல இந்த நான்கு நிறங்களிலும்தான் இல்லக் கொடிகள் இருந்தன. வள்ளுவர் இல்லத்திற்குப் பச்சை நிறம் கிடைத்ததால் மாட்டுவண்டில் பிடித்து இடைக்காடு சென்று பச்சை நிறத்தில் இளநீர், தென்னங்குருத்து, தாளங்காய் எல்லாம் பச்சையாகவே பறித்துவந்து இல்லக் கொட்டகையை இயற்கைச் சூழலில் அலங்கரித்து பரிசு பெற்ற ஞாபகம் இன்றும் என்மனதில் பசுமையாக இருக்கின்றது.

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று சொல்வார்கள். கோயிலே இல்லாத ஊரே யாழ்ப்பாணத்தில் இல்லை. கோயில் இருந்தால் திருவிழா கட்டாயம் நடக்கும். திருவிழா வந்தால் எல்லா வயதினருக்கும் கொண்டாட்டம்தான். நேர்த்திக்கடன் வைத்துக் காவடி எடுப்பது மட்டுமல்ல, ஆட்டக்காவடி தாளத்தோடு ஆடுவதும் ஒரு கலைதான். அதைவிடப் பெரிய கலை அரும்பு மீசையோடு இளைஞர்கள் சுவாமி தூக்குவது. வீட்டிலே எதையாவது தூக்கச் சொன்னால் பஞ்சிப்படும் இளைஞர்கள் எல்லாம் சுவாமி தூக்குவதற்கு மட்டும் முண்டி அடித்துக் கொண்டு முன்வருவார்கள். காரணம் மேற்சட்டை இல்லாத தங்கள் பரந்த மார்பைப் பார்ப்பதற்கென்றே இரட்டைப் பின்னல்கள் தாய்மாருக்குப் பின்னால் பதுங்கியிருக்கும் என்பதையும் அவர்கள் அறிந்து வைத்திருப்பார்கள். இதைத்தான் கே. எஸ். பாலச்சந்திரனும் ‘அவர்களுக்குப் பின்னால் நின்று கொண்டு அவர்களின் சின்ன மகள்மாரும்..’ என்று சொல்லாமல் சொல்கின்றார்.

சிகை அலங்காரம் செய்ய வீட்டிற்கு ஒருவர் வருவார். பயத்துடன் அவர் வருகையை எதிர் கொள்வோம், காரணம் அவர்கையிலே கத்திரிக்கோல், றேசர்கத்தி, மண்டையை விறாண்டும் கூர்ப்பல்லுச் சீப்பு என்பன போன்ற ஆயுதங்கள் இருக்கும் என்று சிகையலங்காரம் செய்வது பற்றி ஆசிரியர் குறிப்பிடுகின்றார். அந்த நாட்களில் சிகை அலங்கார நிலையங்கள் கிராமங்களில் இருக்கவில்லை. அதனால்தான் வீடுதேடி வந்து சிகையலங்காரம் செய்வார்கள். அப்பன் மகன் என்ற வித்தியாசம் இல்லாமல் எல்லோருக்கும் பொலீஸ் கட்தான். அனேகமாக அப்படியான சிகையலங்கார அனுபவம் அந்தக் காலத்தில் எல்லோருக்கும் இருந்திருக்கும்.

தைப்பொங்கல், தீபாவளி, வருடப்பிறப்பு போன்ற பண்டிகை நாட்களைப்பற்றியும் குறிப்பிடுகின்றார். புத்தாடை உடுத்து ஊஞ்சால் கட்டி ஆடுவது. ஓற்றை ஊஞ்சால், அன்ன ஊஞ்சால் என்று பலவகையான ஊஞ்சால்கள் வீட்டில் உள்ள மாமரத்திலோ அல்லது வேப்ப மரத்திலோ கட்டி ஆடுவார்கள். இப்போதெல்லாம் அந்த வழக்கம் குறைந்து கொண்டே போகிறது. காரணம் ஊஞ்சால் கட்ட அங்கே மரங்களும் இல்லை, ஆடிமகிழப் பிள்ளைகளும் இல்லை.

யாழ்ப்பாணத்தில் நடக்கும் பணச்சடங்கு முறை, அந்தக் காலத்து எலெக்ஷன் எப்படி நடந்தது, கூப்பன் கடை என்றால் என்ன, அந்தக் கடைக்கு நடந்தது என்ன, அந்தக் காலத்து வாசிகசாலை எப்படி இருந்தது, குடும்பமாக சினிமா பார்க்கப்போன கதை என்று நகைச்சுவையோடு பல விடையங்களையும் இந்த நூலில் தந்திருக்கின்றார்.

இந்த நூலைத் தனது அம்மம்மா திருமதி. லட்சுமி உமாபதிக்குச் சமர்ப்பணம் செய்திருக்கின்றார் ஆசிரியர். இலங்கையில் உள்ள கனகா பதிப்பகத்தினர் இந்த நூலை வெளியிட்டிருக்கிறார்கள். அட்டைப்படத்தை யாழ்ப்பாணத்து பிரபல ஓவியர் ரமணி அவர்கள் வரைந்திருக்கிறார்கள். உள்ளே வரும் அத்தனை கட்டுரைகளுக்கும் தனித்தனியே ஓவியம் வரைந்தது மட்டுமல்ல, தனது ஓவியத்தின் மூலம் யாழ்ப்பாணத்து மண் வாசனையை அப்படியே வெளிக் கொண்டு வந்திருக்கின்றார். அச்சுப் பதிப்பை யுனி ஆர்ட்ஸ் செய்திருக்கிறார்கள். இதற்கான முன்னுரையை சாகித்யரத்னா செங்கை ஆழியன் க. குணராசா வழங்கியிருக்கின்றார். யாழ்ப்பாணத்து அனுபவங்களை கண்முன்னே கொண்டுவரும் இது போன்ற நூல்கள் நிறையவே வெளிவரவேண்டும், தமிழர் வாழ்ந்த நிலங்கள் பற்றிய குறிப்புக்கள் கட்டாயம் புலம் பெயர்ந்த மண்ணிலாவது ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டு, கே.எஸ்.பாலச்சந்திரனின் பணி மேன்மேலும் தொடரவேண்டும் என்று வாழ்த்துகின்றேன்.

No comments:

Post a Comment