Tuesday, August 23, 2011

எங்கே அந்த வெண்ணிலா? - நூல் விமர்சனம்

நூல் விமர்சனம்


எங்கே அந்த வெண்ணிலா?

புனைகதை மன்னன்  குரு அரவிந்தன் அவர்கள் எழுதி சென்னை மணிமேகலை பிரசுரமாக வெளிவந்த “எங்கே அந்த வெண்ணிலா?” என் கையில் கிடைத்ததும் ஆவலுடன் படிக்கத் தொடங்கினேன். வானத்தில் தோன்றும் நட்சத்திரங்கள்….. முகில் கூட்டங்கள் ….. கூடவே அழகிய பெண் முகம் வானத்தில் தோன்றிய வெண்ணிலாவாகக் கண்ணைப் பறித்தது.
எங்கே அந்த வெண்ணிலா?  …………. படிக்க முன்பே யார்தான் அந்த வெண்ணிலாவாக இருக்கும் என்ற ஆவல் நெஞ்சத்தைத் தொட்டது. மிகவும் பொருத்தமான அட்டைப் படமாக இருந்தது.

அட்டைப் படத்தைத் தாண்டி உள்ளே சென்றதும் அந்த வெண்ணிலாவின் முழுத்தோற்றம் கொண்ட சித்திரம் மேலும் வாசகர்களின் ஆவலைத் தூண்டவே செய்யும்.

புலம்பெயர்ந்து தமிழர் வாழும் மண்ணில் உள்ள யதார்த்தங்களுடன் கற்பனை சேரப் பிறந்ததுவே இந்த நாவல் என்னும் கருத்தைக் கூறும் நூலாசிரியரின் சில வாசகங்கள் அவரின் “என்னுரை” பகுதியில் இருந்தன.

இந்த நாவல் கனடா, மொன்றியலில் இருந்து வெளிவரும் “இருசு” பத்திரிகையில் தொடர்கதையாக வெளிவந்ததாகவும் அறிந்து கொண்டேன். இந்த நாவல் தொடராக வெளிவந்து கொண்டிருந்த சமகாலத்தில் வாசகர்களால் எழுதப்பட்ட குறிப்புக்களும் என் கவனத்தை ஈர்ந்து சிந்திக்க வைத்தன. அப்பொழுது என் மனதில் ஒரு வினா எழும்பியது. இந்த நாவலை முற்றாக எழுதி முடித்ததன் பின்னால் தொடர்கட்டுரையாக பிரசுரமாகியிருக்குமா அல்லது பகுதி பகுதியாக பிரசுரமாகிக்கொண்டிருக்க நாவல் எழுதி முடிக்கப்பட்டீருக்குமா என்பதே என் மனதில் எழுந்த கேள்வி. இந்த கேள்விக்கான காரணம் எனது தேடல் மட்டும்தான். இந்த கேள்விக்கான விடை எதுவாக இருந்தாலும் இந்த நாவலைப் பற்றி எனது மனதில் எழுந்த அபிப்பிராயம் மாறாது என்பதையும் உணர்ந்து கொண்டேன்.

வாழ்த்துரையில் தேவிபாலா அவர்கள் குறிப்பிட்டது போலாக “எங்கே அந்த வெண்ணிலா? தலைப்பிற்கு படிக்கத் தூண்டும் ஈர்ப்புச்சக்தி நிறையவே உள்ளது என்பதை நானும் ஏற்றுக்கொள்கின்றேன்.
மனித வாழ்வில் ஏற்படும் சிறு சம்பவங்கள் கூட பாரிய திருப்பங்களை ஏற்படுத்தி விடுகின்றன. இந்த யதார்த்தத்தைக் காட்டும் வகையில் விக்ரமினது தொலைபேசியில் அவரது காதலி மதுமிதா பதிவு செய்திருந்த தகவலுடன் நாவல் ஆரம்பமாகின்றது. ரொறன்ரோவிற்கும் நியுயோர்க்கிற்குமிடையில் ஓடித்திரியும் விக்ரம் தனது கைத்தொலைபேசியை எப்படி மறந்து நியுயோர்க் சென்றிருப்பார் என நினைக்கத் தோன்றினாலும் நடைமுறை இயல்பானதாகவே கருத வேண்டியுள்ளது.

பதற்றத்துடன் மதுமிதா தொலைபேசியில் பதிவுசெய்த செய்தியால் கலக்கத்துடன் மதுமிதாவைத் தேடி ஓடி அறிந்த செய்தியால் குழப்பமடைந்து விரக்தியுடன் சுபாவிடம் தனது மனச்சுமையை இறக்கிவைப்பதில் இருந்து மேலும் பல கதாபாத்திரங்கள் நாவலில் புகுந்து கொள்கின்றன. இதனையடுத்து நாவலில் விறுவிறுப்புத் தன்மை மெல்ல மெல்லக் கூடுகின்றது. இனி வாசகர்கள் நாவலை வாசித்து முடிக்காமல் விடமாட்டார்கள் என்ற நிலைக்கு மிகவும் சாதுர்யமாக நூலாசிரியர் வாசகர்களை தனக்கே உரித்தான பாணியில் கட்டிப் போடுகிறார் எனலாம்.
இந்தக் கட்டத்தில் ஒரு திருப்பு முனையாக விக்ரம் நினைவில் மதுமிதா வந்து அவர்களின் கடந்த காலக்கதையை நகர்த்திச் செல்லும் விதம் மிகவும் நன்றாக உள்ளது. படங்களில் வரும் பாடல் கட்டங்கள் போல நினைவலைகள் காதல் செய்யும் பலரின் கவனத்தைக் கட்டாயம் ஈர்க்கத்தான் செய்யும். இவர்கள் காதல் விவகாரம் மதுமிதாவின் தந்தையார் புண்ணியமூர்த்தி காதில் விழுகிறது. கதையின் திசை மாறுகிறது. பொதுவான அம்சம் என்றாலும் நாவல் தொடர்ந்து விறுவிறுப்பாகத்தான் செல்கிறது. நாவலில் சேர்ந்து பயணிக்கும் ஏனைய பாத்திரங்களும் அவர்கள் கதைகளும் மிகவும் நன்றாகப் புனையப்பட்டுள்ளன.

நாவலை நகர்த்திச் செல்லுவதற்குக் கையாளும் யுக்திகள் பிரமாதம். போராட்டம் நிறைந்த காதலினைச் சித்தரிப்பதாகவும் பணத்தின் மேலுள்ள ஆசை பாசத்தை மறைக்கும் இயல்பான நிலையையும் நன்கு எடுத்துக் கூறுவதாக உள்ளது இந்த நாவல். மொத்தத்தில் ஓர் அருமையான நாவல். அனைவரும் விரும்பிப் படிக்கத்தக்க ஒரு நாவல். குரு அரவிந்தன் மேலும் பல படைப்புக்களைத் தந்து சாதனை படைக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தி மனதார வாழ்த்தி விடைபெறுகின்றேன்.

அன்புடன்

சி. அ.சுரேஸ் (அகணி)

Tuesday, August 16, 2011

சாயி அமுதம் - Sai Amutham

சாயி அமுதம்

குரு அரவிந்தன்
சாயி அமுதம் என்ற மரபுக்கவிதை நூலைப் படிக்கும் சந்தர்ப்பம் சென்ற வாரம் எனக்குக் கிடைத்தது. அகணி என்ற புனைப் பெயரைக் கொண்ட கனடாவில் வசிக்கும் சி. அ. சுரேஸ் அவர்கள் இந்த மரபுக் கவிதைகளை எழுதி சமீபத்தில் நூலாக வெளியிட்டிருக்கின்றார். புலம் பெயர்ந்த மண்ணில் மரபுக் கவிதை தெரிந்தவர்கள் மிகவும் குறைவான தொகையினரே இருக்கின்றார்கள். கனடாவில் மரபுக்கவிதையை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு கனடா எழுத்தாளர் இணையத்தின் சார்பில் ரொறன்ரோவில் ம.சே. அலெக்ஸாந்தர், கவிஞர் வி. கந்தவனம் ஆகியோரின் உதவியோடு மரபுக் கவிதைப் பட்டறை ஒன்றை நாங்கள் முன்பு ஏற்பாடு செய்திருந்தோம். மாபுக் கவிதையில் ஆர்வம் உள்ள பலர் மிகவும் ஆர்வத்தோடு இந்தப் பட்டறையில் பங்குபற்றிப் பலன் அடைந்திருந்தார்கள். அதன் தொடர்ச்சியாக இரண்டாவது கவிதைப் பட்டறையில் தானும் பங்கு பற்றிப் பலன் அடைந்ததாகச் சாயி அமுதத்தின் ஆசிரியர் அகணி தனது முன்னுரையில் குறிப்பிட்டிருக்கின்றார்.

சந்தக் கவிபாடும் சத்திய சாயியே
எந்தன் கவிதையினை ஏற்றிடச் செய்வாயே
உந்தன் அருளாலே ஊக்கம் தருவாயே
சிந்து கவிக்குச்சோ தி.

என்ற இன்னிசை வெண்பாவோடு உள்ளே நுழைகிறோம். சோதி மயமானவரே எனது கவிதைக்கும் சோதிதா என்று ஆசிரியர் கேட்பதுபோல இந்தப் படையல் அமைந்திருக்கிறது. நானும் சின்னவயதிலே கோயிலுக்குப் போகும் போதெல்லாம் இதைப்போலவே, ஆனைமுகனுக்கு முன்பாக நின்று ‘துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச் சங்கத் தமிழ் மூன்றும்தா’ என்று பலமுறை வேண்டியிருக்கின்றேன்.

சாயி அமுதம் என்ற இந்த நூலில் பல பா வகைகளும், பாவினங்களும் காணப்படுகின்றன. ஆத்மீகத் துறையில் அதிக ஈடுபாடு கொண்ட இவர் யாப்பிலக்கண, அணியிலக்கண வழி நின்று சிந்து, கும்மி, வண்ணம், தெம்மாங்கு போன்ற செய்யுட்கள் மூலம் சாயி புகழ் பாடியிருப்பதையும் இங்கே முக்கியமாகக் குறிப்பிடவேண்டும். பகவான் தரிசனத்தால் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பக்திச் சுவையோடு கலிப்பா, கட்டளைக் கலிப்பா போன்றவை மூலம் மிகவும் எளிமையாக வெளிப்படுத்தியிருக்கின்றார். இந்நூலில் சாயி பஞ்சபுராணங்கள், சாயி கீர்த்தனைகள், சத்திய சாயி வணக்கம், சீரடி பாபா வணக்கம், தெய்வத்தாய் ஈஸ்வரம்மா, சாயி அவதாரப் பெருமை, சாயி போதனைகள், சாயி விந்தைகள் என்று பல செய்யுட்கள் மரபுக்கவிதை வடிவில் இடம் பெற்றிருப்பது பாராட்டத்தக்கது.

‘உங்களுடைய இருதயங்களில் அன்பு என்னும் ஒளியை ஏற்றி வைக்க வந்திருக்கின்றேன். அது நாளுக்கு நாள் அதிக மெருகுடன் பரிணமிக்கும்படி பாரத்துக்கொள்வேன்’ என்ற பாபாவின் வார்த்தைகள் இதயத்தைத் தொடுகின்றன. இந்த நூலில் குறிப்பிட்டது போல, இறை பக்தி நிறைந்திருக்கும் அழகான தமிழ் வரிகள், கவிதையால் மட்டுமே எழுப்ப முடிகின்ற ஓர் அற்புதமான ஒலியுடன் பிணைந்து இந் நூல் செதுக்கப்பட்டிருக்கின்றது.

மரபுக் கவிதையில் ஆர்வமுள்ள எல்லோரும் கட்டாயம் படித்துப் பலன் அடைய வேண்டிய இந்தக் கவிதை நூலுக்கான அட்டைப்பட வடிவமைப்பை ஆசிரியர் அகணியின் மகள் சயனிகா சுரேஸ் அவர்களும், அச்சுப்பதிப்பை கனடாவில் உள்ள கிரபிக்லாண்ட்டும் செய்திருக்கிறார்கள். ஆசியுரையை மூத்த சகோதரர் அ. இரமேசும், அணிந்துரையை ஆசிரியர் ம. செ. அலெக்ஸாந்தரும், வாழ்த்துப்பாவை அகணியின் தாயார் அ. கனகமணி அவர்களும்; வழங்கியிருக்கிறார்கள்.

‘கவிச்சாரல்’ என்ற பெயரில் புதுக்கவிதை நூல் ஒன்றையும் ஏற்கனவே இவர் கனடாவில் வெளியிட்டிருந்தார். இது போன்ற இன்னும் பல ஆக்கங்களைப் புலம்பெயர்ந்த தமிழ் இலக்கியத்திற்குத் தரவேண்டும் என்று ஆசிரியர் அகணியிடம் வேண்டி, அவரது எழுத்துப்பணி மேன்மேலும் தொடர வாழ்த்துகின்றேன்.

Tamils' Information - தமிழர் தகவல்

தமிழர் தகவல்
கனடாவில் இருந்து வெளிவரும் தமிழர் தகவல் இதழில் ஆகஸ்ட் மாதம் 2011 வெளிவந்த செய்தி.

Tuesday, August 2, 2011