Tuesday, August 16, 2011

சாயி அமுதம் - Sai Amutham

சாயி அமுதம்

குரு அரவிந்தன்
சாயி அமுதம் என்ற மரபுக்கவிதை நூலைப் படிக்கும் சந்தர்ப்பம் சென்ற வாரம் எனக்குக் கிடைத்தது. அகணி என்ற புனைப் பெயரைக் கொண்ட கனடாவில் வசிக்கும் சி. அ. சுரேஸ் அவர்கள் இந்த மரபுக் கவிதைகளை எழுதி சமீபத்தில் நூலாக வெளியிட்டிருக்கின்றார். புலம் பெயர்ந்த மண்ணில் மரபுக் கவிதை தெரிந்தவர்கள் மிகவும் குறைவான தொகையினரே இருக்கின்றார்கள். கனடாவில் மரபுக்கவிதையை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு கனடா எழுத்தாளர் இணையத்தின் சார்பில் ரொறன்ரோவில் ம.சே. அலெக்ஸாந்தர், கவிஞர் வி. கந்தவனம் ஆகியோரின் உதவியோடு மரபுக் கவிதைப் பட்டறை ஒன்றை நாங்கள் முன்பு ஏற்பாடு செய்திருந்தோம். மாபுக் கவிதையில் ஆர்வம் உள்ள பலர் மிகவும் ஆர்வத்தோடு இந்தப் பட்டறையில் பங்குபற்றிப் பலன் அடைந்திருந்தார்கள். அதன் தொடர்ச்சியாக இரண்டாவது கவிதைப் பட்டறையில் தானும் பங்கு பற்றிப் பலன் அடைந்ததாகச் சாயி அமுதத்தின் ஆசிரியர் அகணி தனது முன்னுரையில் குறிப்பிட்டிருக்கின்றார்.

சந்தக் கவிபாடும் சத்திய சாயியே
எந்தன் கவிதையினை ஏற்றிடச் செய்வாயே
உந்தன் அருளாலே ஊக்கம் தருவாயே
சிந்து கவிக்குச்சோ தி.

என்ற இன்னிசை வெண்பாவோடு உள்ளே நுழைகிறோம். சோதி மயமானவரே எனது கவிதைக்கும் சோதிதா என்று ஆசிரியர் கேட்பதுபோல இந்தப் படையல் அமைந்திருக்கிறது. நானும் சின்னவயதிலே கோயிலுக்குப் போகும் போதெல்லாம் இதைப்போலவே, ஆனைமுகனுக்கு முன்பாக நின்று ‘துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச் சங்கத் தமிழ் மூன்றும்தா’ என்று பலமுறை வேண்டியிருக்கின்றேன்.

சாயி அமுதம் என்ற இந்த நூலில் பல பா வகைகளும், பாவினங்களும் காணப்படுகின்றன. ஆத்மீகத் துறையில் அதிக ஈடுபாடு கொண்ட இவர் யாப்பிலக்கண, அணியிலக்கண வழி நின்று சிந்து, கும்மி, வண்ணம், தெம்மாங்கு போன்ற செய்யுட்கள் மூலம் சாயி புகழ் பாடியிருப்பதையும் இங்கே முக்கியமாகக் குறிப்பிடவேண்டும். பகவான் தரிசனத்தால் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பக்திச் சுவையோடு கலிப்பா, கட்டளைக் கலிப்பா போன்றவை மூலம் மிகவும் எளிமையாக வெளிப்படுத்தியிருக்கின்றார். இந்நூலில் சாயி பஞ்சபுராணங்கள், சாயி கீர்த்தனைகள், சத்திய சாயி வணக்கம், சீரடி பாபா வணக்கம், தெய்வத்தாய் ஈஸ்வரம்மா, சாயி அவதாரப் பெருமை, சாயி போதனைகள், சாயி விந்தைகள் என்று பல செய்யுட்கள் மரபுக்கவிதை வடிவில் இடம் பெற்றிருப்பது பாராட்டத்தக்கது.

‘உங்களுடைய இருதயங்களில் அன்பு என்னும் ஒளியை ஏற்றி வைக்க வந்திருக்கின்றேன். அது நாளுக்கு நாள் அதிக மெருகுடன் பரிணமிக்கும்படி பாரத்துக்கொள்வேன்’ என்ற பாபாவின் வார்த்தைகள் இதயத்தைத் தொடுகின்றன. இந்த நூலில் குறிப்பிட்டது போல, இறை பக்தி நிறைந்திருக்கும் அழகான தமிழ் வரிகள், கவிதையால் மட்டுமே எழுப்ப முடிகின்ற ஓர் அற்புதமான ஒலியுடன் பிணைந்து இந் நூல் செதுக்கப்பட்டிருக்கின்றது.

மரபுக் கவிதையில் ஆர்வமுள்ள எல்லோரும் கட்டாயம் படித்துப் பலன் அடைய வேண்டிய இந்தக் கவிதை நூலுக்கான அட்டைப்பட வடிவமைப்பை ஆசிரியர் அகணியின் மகள் சயனிகா சுரேஸ் அவர்களும், அச்சுப்பதிப்பை கனடாவில் உள்ள கிரபிக்லாண்ட்டும் செய்திருக்கிறார்கள். ஆசியுரையை மூத்த சகோதரர் அ. இரமேசும், அணிந்துரையை ஆசிரியர் ம. செ. அலெக்ஸாந்தரும், வாழ்த்துப்பாவை அகணியின் தாயார் அ. கனகமணி அவர்களும்; வழங்கியிருக்கிறார்கள்.

‘கவிச்சாரல்’ என்ற பெயரில் புதுக்கவிதை நூல் ஒன்றையும் ஏற்கனவே இவர் கனடாவில் வெளியிட்டிருந்தார். இது போன்ற இன்னும் பல ஆக்கங்களைப் புலம்பெயர்ந்த தமிழ் இலக்கியத்திற்குத் தரவேண்டும் என்று ஆசிரியர் அகணியிடம் வேண்டி, அவரது எழுத்துப்பணி மேன்மேலும் தொடர வாழ்த்துகின்றேன்.

No comments:

Post a Comment