Sunday, October 2, 2011

மகாஜனாவின் முத்தமிழ் விழா – 2011 - Mahajana OSA Canada

மகாஜனாவின் முத்தமிழ் விழா – 2011

மாலினி அரவிந்தன்

சென்ற சனிக்கிழமை (24-09-2011) மகாஜனாக்கல்லூரியின் முத்தமிழ் விழா ரொறன்ரோ லோறன்ஸ் அவன்யூவில் உள்ள வின்சன் சேர்ச்சில் கலை அரங்கில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. விழாவை நிர்வாகசபை அங்கத்தவர் திரு. சந்திரலிங்கம் ஏற்கனவே குறிப்பிட்டது போல மாலை 5:40 க்கு சரியாக ஆரம்பித்து வைத்தார். விழாவிற்கு வருகை தந்தவர்கள், மகாஜனாவின் பாரம்பரியம் அறிந்த கலை ரசிகர்கள் என்பதால் விழா ஆரம்பமாகிய போதே அரங்கம் நிறைந்திருந்தது.


இலங்கையில் இருந்து வருகை தந்த திரு. ஜெயவர்மன், முன்னாள் ஆசிரியர் திரு. திருமதி யோகரட்ணம், மன்றத் தலைவர் திரு. திருமதி சாந்திநாதன் ஆகியோர் மங்கள விளக்கேற்றியதைத் தொடர்ந்து கனடிய தேசிய கீதம் செல்வி வைஷ்ணவி ஞானபாவானால் இசைக்கப்பட்டது. தொடர்ந்து கல்லூரிக்கீதம் மகாஜனா பழைய மாணவர் சங்க நிர்வாகசபை உறுப்பினர்களால் பாடப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து நிர்வாகசபை அங்கத்தினரும் கலைஞருமான எஸ். சிவதாசனின் வரவேற்புரை இடம் பெற்றது.


அனேகமான விழாக்களில் இடைவேளையுடன் சிலர் எழுந்து சென்றுவிடுவார்கள். ஆனால் இந்தவிழாவில் இறுதிவரை இருந்து பாராட்டிவிட்டுச் சென்ற உண்மையான கலை ரசிகர்களைக் காணமுடிந்தது. மேடையில் நடித்த பாத்திரங்களோடு தாங்களும் ஒன்றிப்போய் அவர்கள் அழும்பொழுது தாங்களும் அழுது, அவர்கள் சிரிக்கும்போது தாங்களும் கைதட்டிச் சிரித்து மகிழ்ந்த பார்வையாளர்களால் அரங்கமே நிறைந்திருந்தது.


கடந்த பல வருடங்களாகக் குறிப்பிட்ட நேரத்திற்குத் தொடங்கி குறிப்பிட் நேரத்தில் முடிக்கும், பலராலும் பேசப்படும் ஒரு கலைவிழாவாக மகாஜனாவின் முத்தமிழ் விழா கலைரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துவிட்டது.

முதலாவது நிகழ்ச்சியாக யசோதா அரவிந்தனின் இசையில் இளம் விரல்கள் என்ற இசை நிகழ்ச்சி இடம் பெற்றது. மகாஜனாக் கல்லூரி முன்னால் அதிபர் கிரு. பொ. கனகசபாபதி அவர்கள் இதுபற்றிக் குறிப்பிடும்போது, விழாவின் ஆரம்பமே ஒரு தெய்வீகத் தன்மையோடு தொடங்கியதை அவதானிக் முடிந்தது என்றும், திரை விலகியதும் கருவறையில் கலைமகளே வீணையுடன் வீற்றிருப்பது போன்ற ஒரு காட்சி மனதில் பதிந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். அடுத்து பரதக்கலாவித்தகர் சியாமா தயாளனின் தயாரிப்பில் பாரதி இந்திய சாஸ்திரிய நடனக்கல்லூரி மாணவர்களின் எதுவும் கடந்து போகும் என்ற நடன நிகழ்ச்சி இடம் பெற்றது.


பலராலும் பாராட்டப்பட்ட அந்த நடன நிகழ்ச்சியைத் தொடர்ந்து நா. சாந்திநாதனின் நெறியாள்கையில், வைரமுத்து சொர்ணலிங்கத்தின் பிரதியாக்கத்தில் துளிரும் சருகுகள் என்ற நாடகம் இடம் பெற்றது. நாடகக் கலைஞர்களான இராஜரத்தினம், அன்ரன் பிலீக்ஸ் ஆகியோர் தங்கள் திறமையான நடிப்பால் சபையோரைக் கண்கலங்க வைத்தனர். அடுத்து ஆடலரசி செந்தில்செல்வி சுரேஸ்வரனின் தயாரிப்பில் ஸ்ரீஅபிராமி நாட்டியாலய மாணவர்களின் கரங்கள் இணைந்தால் என்ற நடன நிகழ்ச்சி இடம் பெற்றது. பஞ்சதந்திரக் கதைகளில் இருந்து ஒரு காட்சியை மேடையேற்றியது வித்தியாசமானதாயும், பாராட்டக்கூடியதாயும் இருந்தது.


கீதா ஸ்ரீஸ்கந்தாவின் தயாரிப்பில் மகாஜனாவின் வழித்தோன்றல்கள் வழங்கிய பிறீமா நடனக்கல்லூரியின் சினித்துளிகள் நடனம் அடுத்து இடம் பெற்றது. மகாஜனாவின் வழித்தோன்றல்கள் என்பதால் சபையினர் மிகவும் ஆர்வத்தோடு அவதானித்தனர். அதைத் தொடர்ந்து ஜெ. சுஜனின் உருவாக்கத்தில், எஸ். தவத்தின் உதவியோடு காரை. மணிவண்ணனின் பிரதியாக்கத்தில் முறிக்க முடியாத முகங்கள் என்ற நாடகம் இடம் பெற்றது.


சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த இந்த நாடகத்தில், கணபதி ரவீந்திரன், ரூபி யோகதாசன், ஸ்ரீமுருகன், ஜெ.சுஜன், சண்முகதாசன், எஸ்.ஜனனி, எஸ். ராகவன் ஆகியோர் பங்குபற்றி நாடகத்தைச் சிறப்பித்தனர். பெரியவர்களும், சிறியவர்களும் வாய்விட்டுச் சிரிக்கக்கூடியதாக இந்த நாடகம் அமைந்திருந்தது.


கனடா பழைய மாணவர் சங்கத் தலைவர் நா. சாந்திநாதனின் தலைமை உரையைத் தொடர்ந்து இலங்கையில் இருந்து வருகை தந்த திரு. எஸ். ஜெயவர்மனின் விருந்தினர் உரை இடம் பெற்றது. அடுத்து விழா சிறப்பாக நடைபெற நிதியுதவி செய்தோர் கௌரவிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து  முன்னாள் மகாஜனக்கல்லூரி அதிபர் திரு. பொ. கனகசபாபதியின் உரை இடம் பெற்றது. அவரின் உரையைத் தொடர்ந்து கனடிய பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ராதிகா சிற்சபைஈசனின் உரை இடம் பெற்றது.
மகாஜனாக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் மாணவர்களுக்காக நடத்திய போட்டிகளில் பங்குபற்றிப் பரிசு பெற்றவர்கள் மேடையில் பரிசளித்துக் கௌரவிக்கப்பட்டனர். இந்த நிகழ்வில் பழைய மாணவர் சங்கப் போசகர்கள் பங்குபற்றி வெற்றியாளர்களைக் கௌரவித்தனர்.


இறுதி நிகழ்வாக இசைக்கலைமணி சங்கீத மிருதங்க கலா வித்தகர் வர்ண. இராமேஸ்வரனின் இசையில் நட்சத்திர கானங்கள் இடம் பெற்றன. கனடியப் பிரபலங்களான எம். விஜிதா, எம். சாயிசன், எலிசபெத்மாலினி, கே. நிர்ஜானி ஆகியோர் இந்த இசைநிகழ்ச்சியில் பங்கு பற்றிச் சிறப்பித்தனர். தொடர்ந்து வர்ண. இராமேஸ்வரனின் பாடலும் இடம் பெற்றது. ஒவ்வொரு பாடகர்களும் பாடி முடிந்ததும் பார்வையாளர்களின் கரவோசை சபையை அதிரவைத்தது.


இவ்விழாவின் அறிவிப்பாளர்களாக செல்வகுமார், சுஜிதா அஜந்தன், வைஷ்ணவி ஞானபவான், விதுரா ஜெயேந்திரன் ஆகியோர் சிறப்பாகக் கடமையாற்றினர். இறுதியாக மன்றச் செயலாளர் திரு. இரவீந்திரனின் நன்றியுரையுடன் மாலை 5: 40க்கு ஆரம்பமாகிய விழா சரியாகப் 10: 30 க்கு இனிதே நிறைவு பெற்ற போது பலரும் நம்பமுடியாமல் கடிகாரத்தைப் பார்த்த காட்சி இப்பொழுதும் கண்ணுக்குள் நிறைந்து நிற்கின்றது.

இந்தவிழா மிகவும் சிறப்பாக நடைபெற முன்னின்று உழைத்த நிர்வாகசபை உறுப்பினர்களும், மகாஜனாக் கல்லூரி பழைய மாணவர்களும், மற்றும் பங்குபற்றிய கலைஞர்களும், தன்னார்வத் தொண்டர்களும், நிதி உதவி வழங்கியவர்களும் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர்கள். நிர்வாகசபை அங்கத்தினர் சீருடையுடன் அங்குமிங்கும் நடமாடியதே கண்ணுக்கு விருந்தாக இருந்தது.


சென்ற வருடம் மகாஜனாக் கல்லூரியின் நூற்றாண்டு விழாவை கனடாவில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடியதும், இந்த வருடம் மொன்றியல் கலைஞர்களின் ஒத்துழைப்போடு மொன்றியலில் கலைவிழா ஒன்றைச் சிறப்பாக நடத்திப் பாராட்டுப் பெற்றதும் இங்கே குறிப்பிடத்தக்கது. மீண்டும் இது போன்ற சிறப்பான ஒரு முத்தமிழ் விழாவை 2012ல் எதிர்பார்த்துக் காத்திருப்பதில் மனம் ஏங்கித் தவிக்கின்றது.

No comments:

Post a Comment