Tuesday, October 4, 2011

Kalaimanram - கலைமன்றத்தின் 7வது பட்மளிப்புவிழா

கலைமன்றத்தின் 7வது பட்மளிப்புவிழா

மாலினி அரவிந்தன்

சென்ற ஞாயிற்றுக்கிழமை (02-10-2011) கலைமன்றத்தின் 7வது பட்மளிப்புவிழா யோக்வூட் மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பரதநாட்டிய உலகிற்கு அறிமுகமே தேவையில்லாத ஸ்ரீமதி நிறைஞ்சனா சந்துரு பற்றி நான் அதிகம் சொல்லத் தேவையில்லை. ஸ்ரீமதி திரிபுரசுந்தரி யோகானந்தம் அவர்களிடம் முறையாக நடனக்கலையைப் பயின்ற  ஸ்ரீமதி நிறைஞ்சனா சந்துரு அவர்கள் இன்று புகழ் பெற்ற நடன ஆசியையாகக் கனடாவில் திகழ்வது யாவரும் அறிந்ததே. நடனக்கலையில் திறமை மிக்க ஆசிரியர்களை உருவாக்க வேண்டும் என்ற உயரிய சிந்தனையோடு புலம் பெயர்ந்த மண்ணில் ஸ்ரீமதி நிறைஞ்சனா சந்துருவால் 1992ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது தான் ‘கலைமன்றம்’ என்ற இந்த விருட்சம்.


இந்த விருட்சம் இன்று பல திசைகளிலும் கிளைகளைப் பரப்பிக் கம்பீரமாக நிமிர்ந்து நிற்பதைப் பார்க்கப் பெருமையாக இருக்கின்றது. சென்ற ஆண்டுவரை 31 நிருத்த நிறைஞர்களையும் 13 ஆசிரியர்தர டிப்ளோமா பட்டதாரிகளையும் உருவாக்கி இந்த மண்ணிலே எங்கள் இனத்திற்குப் புகழ் தேடித்தந்த பெருமை ஸ்ரீமதி நிரஞ்சனாவையே சாரும். ஆசியர்தர டிப்ளோமா பட்டதாரிகளான இவர்களில் பலர் இன்றும் தொடர்ந்து தமது கலைச் சேவையினை சுயமாகவும், தமது ஆசிரியர்களுடன் இணைந்தும் வழங்கி வருவது பாராட்டுக்குரியது.

ஏழாவது பட்டமளிப்பு விழாவான அன்று மீண்டும் புதிதாக அவர் உருவாக்கிய நடனதாரகைகள் எங்கள் பண்பாடு, கலை, கலாச்சாரத்தை பேணிக்காக்கும் தூயநோக்கோடு எங்கள் முன் மேடையில் அமர்ந்திருந்தார்கள். அவர்களில் 14 மாணவர்கள் ஆசிரிய தரத்தைக் கொண்டவர்கள். அவர்களில் 7 மாணவர்கள் நிருத்த நிறைஞர்களாவார். ஸ்ரீமதி நிரஞ்சனா சந்துருவின் அயராத உழைப்பை ஆசிரியர்களாகப்போகும் இவர்களின் வடிவில் அங்கே காணமுடிந்தது. அன்று நிருத்த நிறைஞர் பட்டம் பெற்ற சகானாவின் நடன அரகேற்றத்தில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் எனக்கு எதிர்பாராமல் கிடைத்திருந்தது. முன்னாள் மகாஜனாக் கல்லூரி அதிபரின் அன்பான வேண்டுகோளுக்கு இணங்க சகானாவின் பெற்றோர்களான திரு. திருமதி  கார்வண்ணதாசன் அவர்கள் தமது மகளின் நடன அரங்கேற்றத்தில் கலந்து கொள்ளும்படி எனது குடும்பத்தையும் அழைத்திருந்தனர். பிராம்டனில் உள்ள றோஸ் தியேட்டரில் யூலை மாதம் 9ம் திகதி நடைபெற்ற சகானாவின் அந்த அரங்கேற்றத்தில் நாங்களும் மகிழ்ச்சியோடு கலந்து கொண்டு சகானாவின் திறமையைப் பாராட்டினோம். ஸ்ரீமதி நிரா சந்துருவின் மாணவிதான் சகானா என்பதை அறிந்து அன்று மிகவும் பெருமைப்பட்டேன இசையில் இருந்த ஆர்வம் காரணமாக சகானா, இசைக்கலைமணி வர்ண. இராமேஸ்வரன் அவர்களிடம் வாய்ப்பாட்டு பயின்றது மட்டுமல்ல, கீ போட் இசைப்பதிலும் திறமை பெற்றிருக்கின்றார். வாய்ப்பாட்டில் இவர் 2ம்தரத்திலும், கீபோட்டில் 4ம் தரத்திலும் சித்தி பெற்றிருக்கின்றார். சென்ற வாரம் நடைபெற்ற மகாஜனாக் கல்லூரி முத்தமிழ் விழாவில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியில் அவர் கீபோட் வாசித்துச் சபையினரின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றபோது அவரது திறமையை என்னால் அன்று நேரடியாகவே அவதானிக்க முடிந்தது. எங்கள் தாய் மொழியாம் தமிழ் மொழியில் மிகவும் திறமை கொண்ட சகானா பன்னிரண்டாம் தரத்திற்குரிய தமிழ் திறமையைக் கொண்டிருக்கின்றார். நாட்டிய ஆசிரிய தராதரப் பரீட்சைக்காக சகானா இந்து மதமும் பரதநாட்டியமும் என்ற தலைப்பில் ஓர் ஆய்வுக்கட்டுரை ஒன்றையும் எழுதியுள்ளார். இந்துமதம் என்றால் என்ன, பரதநாட்டியம் என்றால் என்ன, இந்த இரண்டுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன என்பது பற்றி மிகவும் தெளிவாக எழுதியிருக்கின்றார்.
ஸ்ரீமதி நிரஞ்சனாவைப் போலவே கலையார்வம் கொண்ட கணவர் திரு. சந்துரு அவர்களதும், பிள்ளைகளினதும் ஈடுபாடும், ஒத்துழைப்பும் இந்தக் கலைமன்றத்தின் வளர்ச்சிக்கு மேலும் உரம் சேர்த்தன என்பதை நாம் மறக்கமுடியாது. அதேபோல தங்கள் பிள்ளைகளுக்கு ஏதாவது ஒரு கலையையாவது கற்பிக்க வேண்டும் என்ற சிறந்த நோக்கத்தோடு செயற்படும் பெற்றோரும் கட்டாயம் பாராட்டப்பட வேண்டியவர்கள். அவர்கள் இல்லாவிட்டால் இந்தப் பல்கலாச்சார மண்ணில் கலை வளர்க்க, எங்கள் பெருமைபேசச் சந்தர்ப்பமே இல்லாது போய்விடக்கூடும்.

No comments:

Post a Comment