Friday, December 30, 2011

புதுவருட - தைப்பொங்கல் வாழ்த்துக்கள்

புதுவருட - தைப்பொங்கல்  வாழ்த்துக்கள்


Wednesday, December 21, 2011

ஒன்ராறியோ தமிழ் ஆசிரியர் சங்கம் - OTTA

ஒன்ராறியோ தமிழ் ஆசிரியர் சங்கம்
ஒன்ராறியோ தமிழ் ஆசிரியர் சங்கம் சமீபத்தில் நடத்திய ஆசிரியர்களுக்கான பயிற்சிப்பட்டறையின் போது பல தமிழ் ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஸ்காபரோவிலும், பிராம்டனிலும் இந்தப் பயிற்சிப் பட்டறைகள் நடைபெற்றன. இப் பயிற்சிப் பட்டறையின்போது கலந்துரையாடலும் இடம் பெற்றது. அக் கலந்துரையாடலில் பல பயனுள்ள விடையங்கள் ஆராயப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.


ரொறன்ரோ கல்விச்சபையைச் சேர்ந்த திருமதி பெனி அவர்கள் ஓய்வு பெற்றுச் சென்றபோது ஒன்ராறியோ தமிழ் ஆசிரியர் சங்கத்தினர் அவரது சேவையைப்பாராட்டி விருது கொடுத்து மலர் மாலை அணிந்து கௌரவித்தனர். திருமதி பெனியுடன் தமிழ் ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்த சில அங்கத்தவரையும் காணலாம்
Ontta President Writer Kuru Aravinthan (2011-2012)


ஒன்ராறியோ தமிழ் ஆசிரியர் சங்கத் தலைவர் எழுத்தாளர் குரு அரவிந்தன் சங்க நிகழ்வில் உரையாற்றினார்
ஒன்ராறியோ தமிழ் ஆசிரியர் சங்கத் தலைவர் எழுத்தாளர் குரு அரவிந்தனுடன் ரொறன்ரோ கல்விச்சபையைச் சேர்ந்த திருமதி பெனி அவர்கள்.


Tuesday, December 6, 2011

நெய்தலும் மருதமும் - Neithal and Marutham


Neithal and Marutham

Neithal: Seashore

Marutham: Cropland.

நெய்தலும் மருதமும் - 1

குரு அரவிந்தன்


Neithal   Land
‘கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் எனப்படும்
வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் எனப்படும்’


இலங்கைத்தீவின் நெய்தல் நிலத்தில் மூன்றில் இரண்டு பங்கு  வடக்குக், கிழக்கு மாகாணங்களைச் சார்ந்ததாகும். கரையோரப் பகுதிகள் நெய்தல் நிலங்களாயும், அனேகமாக அதன் மையப்பகுதிகள் மருத நிலங்களாயும் இருக்கின்றன. சங்க இலக்கியத்தில் உள்ள அத்தனை பண்புகளும் இந்த நெய்தல், மருதநிலங்களுக்கு இல்லாவிட்டாலும, பண்பாடு, கலாச்சாரம், வாழ்க்கைமுறை போன்றவற்றில் ஆங்காங்கே சிறிதளவு வேறுபட்டாலும், பொதுவாக இந்த ஈழமண்ணில் அவை ஒன்றுபட்டதாக, ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தாகவே இருக்கின்றன.

Marutham Land
அடுத்த தலைமுறையினர் எங்கள் தாய்மண்ணைப் பற்றியும், எங்கள் கடந்தகால வாழ்க்கை முறைகளைப் பற்றியும் சிறிதளவேனும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும், காலத்தின் கட்டாயத்தால் இவற்றை ஓரளவாயினும் ஆவணப்படுத்தி விடவேண்டும் என்ற எண்ணத் துடிப்பாலும், எனக்குப் பரிச்சயமான சில இடங்களையும், சில விடயங்களையும் மட்டும் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன். – ஆசிரியர்ஒன்றாரியோ ஏரிக்கரையில் உட்கார்ந்து நீண்டு பரந்து கிடந்த ஏரியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். சீகல் கடற்பறவை ஒன்று அருகே வட்டமிட்டு மெதுவாகத் தரை தொட்டு நின்றது. ஒரு கணம் இவனை நம்பலாமா என்பதுபோல அச்சத்தோட தலைசாய்த்து, என்னை நிமிர்ந்து பார்த்தது. மறுகணம் என் இருப்பை அசட்டை செய்துவிட்டு, பயமேதுமின்றித் தான் தேடிவந்த இரையை நோக்கி மெல்ல அடியெடுத்து நகர்ந்தது. இந்தப் பறவைக்குப் பயம் என்பதே இல்லையா..? ஒருவேளை இந்த மண்ணிலே பிறந்து சுதந்திரக் காற்றைச் சுவாசித்து வளர்ந்த அச்சமறியாப் பறவையாக அது இருக்குமோ..?சுதந்திரக் காற்று என்றதும் தாயகநினைவு நெஞ்சில் கவிந்தது. கூடுவிட்டுக் கூடுபாய்வதுபோல கண்டம்விட்டுக் கண்டம் பாய்ந்து, கடைசியில் நாங்கள் எதைச்சாதித்தோம் என்று நினைத்துப் பார்த்த போது நீண்டதொரு பெருமூச்சு என்னையறியாமலே வெளிப்பட்டது. எத்தனையோ சுகங்களை நாங்கள் இதுவரை இழந்திருக்கிறோம். நாங்கள் இழந்திருக்கிறோம் என்பதைவிட, வாழ்நாளில் திரும்பவும் பெறமுடியாத எத்தனையோ சுகங்களை எங்களிடம் இருந்து பலவந்தமாய் பறித்து எடுத்திருக்கிறார்கள் என்பதை நினைத்துப் பார்த்ததும் நெஞ்சு விம்மி வெடித்தது.

ஏரியின்நீரோ அமைதியாய் முதலைத் தூக்கம் போட்டுக் கொண்டிருந்தது. அமைதிக்கு எதிர்வினை என்ன..? ஆர்ப்பாட்டமா..? இல்லை, போராட்டமா..?

எதுவாக இருந்தால் என்ன, எண்ணச் சுவரில் தீட்டிய ஓவியத்தை, பலாத்காரமாய் அழித்துவிட முயன்று தோற்றுப்போனது போல ஆங்காங்கே நினைவலைகள் நெஞ்சில் முட்டி மோதிச் சிதறின.  அழித்துவிட முயன்றாலும் முடியாத முயற்சியில் தோற்றுப்போன மனது, காலம் தின்றதை இரைமீட்டுப் பார்க்க முற்பட்டது.


Kankesanturai & Sandilipaai


 பேரலை ஒன்று ஆர்ப்பாட்டாய் வந்து கால் நனைத்துச் செல்ல, கரையிலே தாழைமரத்தில் காத்திருந்த மீன்கொத்திப் பறவை ஒன்று தண்ணீரில் மூழ்கி, இரையைக் கொத்திச் சென்றது. குறிதவறாமல் இரையைத்தாக்கும் அந்தப் பறவையின் லாவகம், என்னை எப்பொழுதுமே வியப்படைய வைப்பதுண்டு.


அந்த சின்னஞ்சிறு குருவியின் லாவகம், எங்களாலும் எதையும் ‘சாதிக்கமுடியும்’ என்ற நம்பிக்கையூற்றை ஏற்படுத்தி அவ்வப்போது மனசெல்லாம் பிரவாகிக்கவைப்பதுண்டு.

‘இருங்கனி பரந்த ஈர வெண் மணல்
செவ்வரி நாரையோடு எவ்வாயும் கவர
கயல் அறல் எதிர, கடும் புனல் சாயஅய்ப்
பெயல் உலந்து எழுந்த பொங்கல் வெண்மழை
அகல் இரு விசும்பில் துவலை கற்ப…’


பரந்த ஈரவெண் மணலைத் தாண்டி என் பார்வை நிலைத்து நின்றபோது, இந்த சங்கஇலக்கியப் பாடல்தான் நினைவில் வந்தது.

என்தந்தை, தந்தையின் தந்தை, அவரின் தந்தை இப்படியே பாட்டன், பூட்டன் என்று பரம்பரை பரம்பரையாக பிறந்து, தமிழ் மணம் பரப்பி வாழ்ந்து வந்த இந்த மண்ணைத் தினமும் நினைக்கும் போதெல்லாம்,

‘தந்தையர் நாடென்ற போதினிலே
ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே..!’


என்ற புதுமைக்கவி பாரதியின் பாடல் வரிகள் எப்பொழுதும் நினைவில் வரும். எங்கிருந்தாலும் பிறந்த மண்ணின் உணர்வுகள் எப்பொழுதும் என்னை மெய் சிலிர்க்கவைக்கும். அந்தநாள் ஞாபகங்கள் மனசெல்லாம் பூத்துக் குலுங்கும்.

கடலலையின் தாலாட்டிற்கேற்ப, கடற்கரையில் நங்கூரமிட்டிருந்த படகுகளும், கட்டுமரங்களும் ஆட்டம்போட்டுக் கொண்டிருந்தன. வானம் கறுத்து எந்த நேரமும் மழை பெய்யலாம் என்று பயம் காட்டிக் கொண்டிருந்தது. வானம் கறுத்ததால் கடல் நீரிலும் கருமை படர்ந்திருந்தது. காற்றலையைக் கிழித்துக் கொண்டு எங்கிருந்தோ அந்த இனிய கீதம் மிதந்து வந்து என் காதிலே நுழைந்தது. தினம்தினம் கேட்கும் பாடல் என்றாலும் ஏனோ இன்று என் கவனத்தைக் கொஞ்சம் கவர்ந்து இழுத்தது.

‘ஏலேலோ ஏலோ.. ஏலேலோ ஏலோ... ஏலேலோ
கொய்கொய்யா கொய்யா கொய்கொய்யா...’KKS Light House
காற்றிலேமிதந்து வந்த அம்பாபாடல் வந்த திசை நோக்கி என்பார்வை நீண்டு பரந்தது. செவ்வரிநாரை ஒன்று தாழைமரத்தில் தன் இரைக்காக ஆவலோடு காத்திருக்க, இயற்கை அன்னை அள்ளிக்குவித்த வெண்மணல் மேட்டிலே பகல் முழுதும் கோலோச்சி நின்ற கட்டுமரங்களை, சிலர் கடலை நோக்கி ஒவ்வொன்றாக இழுத்துக் கொண்டிருந்தனர். கட்டு மரங்களும், படகுகளும் நீராடும் நேரம் வந்துவிட்டது என்பது, அவர்கள் பாடிக் கொண்டிருந்த அம்பாப்பாட்டின் மூலம் புரிந்தது.

அம்பாபாடிக்கொண்டே கட்டுமரத்தை இழுத்து வந்தவர்களின் உடல் அசைவும் அந்தப் பாடலுக்கு ஏற்றதுபோலவே அசைந்தது.

‘ஏலேலோ.. ஏலோ ஏலேலோ.. ஏலோ.. ஏலேலோ..!’

அந்திமயங்கும் நேரம் கடற்தொழிலுக்குப் போகும் ஆண்மகனைக் குடும்பமாக நின்று வழிஅனுப்பி வைக்கும் நெய்தல் நிலக் காட்சி பார்ப்பதற்கு அற்புதமானது. குடும்பத் தலைவனுக்குத் தினமும் பாசத்தோடு விடை கொடுப்பதும், பிரிந்து சென்றபின் வழிமேல் விழி வைத்துக் காத்திருப்பதும் இந்த மண்ணின் கட்டாயத்தின் சூழ்நிலையாப் போய்விட்டது. தினமும் நடக்கும் ஒரு நிகழ்வாக இருந்தாலும், மீண்டும் மறுநாள்  காலையில் கடலுக்குப்போன கணவன் இன்னமும் திரும்பி வரவில்லையே என்று ஏக்கத்தோடு கரையில் காத்துநின்று அவஸ்தைப்படும் காதல் கிழத்தியின் நிலையோ மிகவும் பரிதாபமானது.


‘தோள் துறந்து, அருளாதவர்போல் நின்று,
வாடைதூக்க, வணங்கிய தாழை
ஆடு கோட்டு இருந்த அசை நடை நாரை
நளி இருங் கங்குல், நம்துயர் அறியாது…’


வாடைக்காற்று அசைத்ததால் வளைந்த தாழை மரத்தின் அசையும் கிளையில் இருந்து பிரிந்த தளர்ந்த நடையை உடைய நாரையைப்போல, பிரிவு என்பது தினமும் வந்தாலும், அந்தப் பிரிவுத்துயரம் நிரந்தரமாகி விடக்கூடாதே என்ற பயம் கலந்த ஏக்கத்தில் தவிக்கும் இந்த நெய்தல்நிலப் பெண்களின் தவிப்போ சொல்ல வார்த்தைகள் இல்லாதது.

ஈரமணலில் சின்னஞ்சிறிய நண்டுகள் அங்குமிங்கும் ஓடி விளையாடிக் கொண்டிருந்தன. கடலலைகள் வந்து கரையைத் தொடுவதும் போவதுமாய் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தன.


Nandu - Sand Crab
அவ்வப்போது சிறுகச்சிறுக எங்கள் இனம் ஆசையாய் சேர்த்து வைத்ததையெல்லாம் இப்படித்தான் இனக்கலவரம் என்ற போர்வையில் நீதி நியாயம் இன்றி எங்கள் இனத்திடமிருந்து கொள்ளை அடிக்கப்பட்டதை நினைத்துப் பார்க்கும் போதெல்லாம்,


‘சிறுநண்டு மணல்மீது படம் ஒன்று கீறும் சிலவேளை அதை வந்து கடல் கொண்டு போகும்’

மகாஜனாவின் மும்மூர்த்திகள் என்று இலக்கிய உலகால் அழைக்கப்பட்ட அ.ந.கந்தசாமி, உருத்திரமூர்த்தி, முருகானந்தம் ஆகியோரில் எங்களுக்குமுன் வாழ்ந்த, அளவெட்டியில் பிறந்து, மகாஜனாவில் கல்விகற்ற, மகாகவி என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்ட உருத்திரமூர்த்தியின் பாடல் வரிகள்தான் எனக்கு அடிக்கடி ஞாபகம் வரும். எத்தனை அரிய உண்மைகளை கவிதை வரிகளில் சொல்லிவிட்டு மறைந்த அந்த மாபெரும் கவிஞனை நினைத்து சிலசமயம் நான் வியப்பதுண்டு. இந்தக் கடலலையைப் போலத்தான் நீதிநியாயம் எதுவும் இன்றி எங்களிடமிருந்து, எங்களின் சொந்தம் என்று சொல்லிக்கொள்ள எதுவுமே இல்லாமல் காலப்போக்கில் எல்லாமே கொள்ளை அடிக்கப்பட்டு விட்டதை நினைக்கும்போது, ஆற்றாமையால் உடம்பு குறுகிப்போவதுண்டு.நெய்தலும் மருதமும் - 2


கடற்கரை மணலில் சிறுநண்டு வரைந்த படத்தை மட்டுமல்ல நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது ஆசையாய் கட்டிவைத்த மணற்கோட்டைகளையும் இந்த அலைகள் அவ்வப்போது அடித்துச் சென்றிருக்கின்றன. எரிச்சல் வெறுப்பு சலிப்பு கோபம் ஆத்திரம் இப்படி இயலாமையில் ஏற்பட்ட எத்தனையோ உணர்வுகளை சிறுவர்களான நாங்கள் அந்த அலைகள்மேல் காட்டியிருக்கிறோம்.

'அலைகள் விரித்த வலையில் சிக்கிக்கொள்ளாதே! என்று ஒருநாள் எங்களையே கவனித்துக் கொண்டு கடற்கரையில் நின்ற பெரியவர் ஒருவர் சிரித்துக்கொண்டே சொன்னபோதுதான் எங்களுக்குச் சில உண்மைகள் புரிந்தன.

அதன் பிறகு மணல்வீடு கட்டும் போதெல்லாம் வற்றுக்கடல் பெருக்குக்கடல் எல்லாம் அவதானித்துத்தான் மாலை நேரங்களில் கடற்கரையில் மணல்வீடு கட்டி விளையாடினோம். எதற்கும் பாதுகாப்பாய் இருக்கட்டுமே என்று மணல் வீட்டிற்கும் கடலுக்குமிடையே மணலால் பெரிய அணையும் கட்டி வைப்போம். இவற்றை எல்லாம் பிற்காலத்தில் பேரினவாதம் என்ற பெரிய அலைக்குள் சிக்கிக் கொள்ளாமல் நாங்கள் தப்பிக்கொள்ள எங்களுக்குச் சிறுவயதில் கிடைத்த அனுபவங்கள் என்று எடுத்துக் கொண்டோம்.

தமிழர்களோ தாங்கள் படித்தவர்கள் உயர்படிப்பறிவுள்ளவர்கள் என்றெல்லாம் தங்களுக்குள் போட்டிபோட்டு பெருமைப்பட்டுக் கொண்டிருக்க படிப்பறிவே இல்லாதவர்கள் என்று யாரை இவர்கள் கேலி செய்தார்களோ அவர்கள் எல்லோரும் ஒன்றுபட்டு வார்த்தை ஜாலமூலம் ஆசைகாட்டி தமிழர்களை ஏமாற்றி அவர்களின் உரிமைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பறித்து படுகுழியில் தள்ளிய போதுதான் தமிழர்களில் சிலர் திடீரென விழித்துக் கொண்டார்கள். அவ்வப்போது இனக்கலவரம் என்ற போர்வையில் தமிழின ஒழிப்பு மட்டுமல்ல தொன்று தொட்டு தமிழர்கள் வாழ்ந்து வந்த மண்மீதும் அவர்கள் கைவைத்தபோதுதான் வேலியே பயிரை மேயத்தொடங்கி விட்டது என்ற உண்மையை மானமுள்ள தமிழர்கள் சிலர் உணர்ந்து கொண்டார்கள்.

Portugees Castle Foundation in Kankesanturai
 காகம் ஒன்று கரையிலே கிழிஞ்சல் பெறுக்கிக்கொண்டிருந்தது. அலைமேல் அலையடித்தால் கோட்டைச் சுவரும் இடியும் என்ற உண்மையை வாய்பிளந்து வானம் பார்த்துக் கிடந்த 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டைச் சுவர் சொல்லாமல் சொல்லி நின்றது. யாரோ ஒருசில அடிவருடிகளின் உதவியோடு 1505ல் இலங்கை மண்ணில் காலடி எடுத்துவைத்த போத்துக்கேயரால் பிற்காலத்தில் கட்டப்பட்ட அந்தக் கோட்டையின் அத்திவாரச்சுவர்தான் இப்படி இடிந்து கிடந்தது. மானமுள்ள தமிழன் இந்த மண்ணில் இருந்ததால்தான் அந்தக் கோட்டை கட்டி முடிக்கப்படாமலே அத்திவாரத்தோடு தடுத்து நிறுத்தப்பட்டு அன்னியன் அன்று துரத்தி அடிக்கப்பட்டிருக்கிறான் என்பதும் அந்த அத்திவாரச்சுவரைப் பார்த்ததும் புலனானது.

இந்த மண்ணில் கோட்டைகட்டுவதில் தோற்றுப்போன போத்துக்கேயர் மீண்டும் 1589ல் மன்னாரில் ஒரு கோட்டை கட்டமுற்பட்டனர். இந்துக்களின் கோயிலான திருக்கேதீஸ்வர கோயிலை இடித்து அதன் கற்களை எடுத்துத்தான் மன்னாரில் கோட்டைகட்டியதாக முன்னோர் சொல்வர். பாரம்பரியமாய் ஆண்டாண்டு காலமாய் தமிழனால் ஆளப்பட்டு வந்த மண் முதலில் போத்துக்கேயராலும் அதைத் தொடர்ந்து 1660களில் டச்சுக்காரர் என்று அழைக்கப்பட்ட ஒல்லாந்தராலும் அதன்பின் 1798ல் ஆங்கிலேயராலும் ஆக்கிரமிக்கப்பட்டது. இந்த மண் ஆக்கிரமிப்பு ஆங்கிலேயரின் வெளியேற்றத்தோடு நின்றுவிடவில்லை அதன் பின்பும் 1948ல் சுதந்திரம் என்றும் ஜனநாயக உரிமைகள் என்றும் குடியேற்றத் திட்டங்கள் என்ற பெயரில் தமிழர்கள் ஏமாற்றப்பட்டு பெரும்பான்மை இனத்தவரால் மீண்டும் தமிழர் பரம்பரையாக வாழ்ந்த மண்  கொஞ்சம் கொஞ்சமாக அபகரிக்கப்பட்டது.

அண்ணார்ந்து பார்த்தேன். வெகுவிரைவில் இருண்டுவிடும் என்பதைத் தெரியப்படுத்துவது போல வானளாவி நின்ற கலங்கரை விளக்கம் ஒளி கொடுக்கத் தொடங்கியிருந்தது. பறவைகள் கூடு திரும்புவதுபோல நாங்கள் வீடு திடும்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதையும் எங்களுக்கு நினைவுபடுத்தியது. ஒவ்வொரு கலங்கரை விளக்கத்திற்கும் ஒவ்வொரு தனித் தன்மையுண்டு. பதினைந்து வினாடிகளுக்கு ஒருதடவை என்ற கணக்கில் அடுத்தடுத்து ஒன்றின்பின் ஒன்றாக மூன்றுதடவை மின்னுவதுதான் காங்கேயன்துறையில் பாக்குநீரிணையின் தென்கரையில் 82 அடி உயரத்திற்கு வானளாவி நிற்கும் இந்தக் கலங்கரைவிளக்கத்தின் தனித்தன்மை! போத்துக்கேயரால் கட்டிக் கைவிடப்பட்ட கோட்டை அத்திவாரத்திற்குள் ஆங்கிலேயரால் 1893;ம் ஆண்டு கட்டி எழுப்பப்பட்ட இந்தக் கலங்கரை விளக்கத்தின் வெளிச்சம் 14 கடல்மைல் தூரம்வரை தெரியக்கூடியது.

தமிழனாலும் சாதனைகள் படைக்க முடியம் என்று ஆழிக்குமரன் ஆனந்தன் நவரத்தினசாமி போன்றோரால் நீச்சலடித்து இந்தியகரையைத் தொட்டுச் சாதனைபடைத்துக் காட்டிய ஜலசந்திதான் பாக்குநீரிணை. அரபிக்கடலையும்  வங்கக் கடலையும் தொடுக்கும் தென்னிந்திய எல்லையைக் கொண்ட பாக்குநீரிணையை வடக்குப் பக்கமாகவும் புகழ்பெற்ற நகுலேஸ்வராலயம் அமைந்துள்ள கீரிமலையை மேற்குப் பக்கமாகவும் புகழ்பெற்ற மாவைக்கந்தன் என்று சொல்லப் படுகின்ற கந்தசுவாமி கோயிலைக் கொண்ட மாவிட்டபுரத்தை தெற்குப் பக்கமாகவும் புகழ்பெற்ற பலாலி விமான நிலையத்தை கிழக்குப் பக்கமாகவும் கடல்வழிப்பாதை வான்வழிப்பாதை தொடர்வண்டிப்பாதை தரைவழிப்பாதை எல்லாவற்றையும் தன்னகத்தே கொண்டதுதான் காங்கேயன்துறைப் பட்டினம்.

இத்தனைக்கும் நடுவே

இனமீன் இகல் மாற வென்ற சினமீன்
எறிசுறா வான் மருப்புக் கோத்து நெறி செய்த
நெய்தல் நெடு நார்ப் பிணித்து யாத்து கை உளர்வின்
யாழ் இசை கொண்ட இன வண்டு இமிர்ந்து ஆர்ப்ப
தாழாது உறைக்கும் தட மலர்த் தண் தாழை>


தனது இனமான மீன்களையே தாக்கி வென்ற சினமுடைய பெரிய சுறாவின் கொம்பால் செய்த பலகையைக் கோத்து புறஇதழ் ஒடித்த நெய்தற்பூவை நீண்ட நாரில் கோத்து அழகுடையதாய்க் கட்டி யாழின் ஓசையைத் தன்னிடத்தே கொண்ட வண்டுகள் ஒலித்துப்பாட தேன் துளிக்கும் வளவை உடைய தாழையின் விழுதால் திரித்து அமைக்கப்பட்ட ஊஞ்சலில் கன்னியர் அமர்ந்து ஆடும் நெய்தல் நிலத்தைப் பற்றி இலக்கியத்தில் வர்ணித்திருப்பது போல இலக்கியத்தமிழ் மணக்கும் நெய்தல் நிலத்தையும் தன்னகத்தே கொண்டதுதான் காங்கேயன்துறை.

பலாலி, மயிலிட்டி, ஊரணி, தையிட்டி, மாவிட்டபுரம் வடக்கு உட்பட்ட கிராமச் சூழலும் பட்டினப்பரபரப்பும் கொண்ட இடங்களைத் தன்னகத்தே கொண்ட ( 9 49 N 80 3 E ) நெய்தல் நிலம்தான் காங்கேயன்துறை. வடக்கே கரையோரப்பகுதி கடலும் கடல் சார்ந்த நெய்தல் நிலமாயுமிருக்க உள்நோக்கியபகுதி வீட்டிற்கு ஒரு கிணறுவெட்டி உபபயிர் செய்யும் வரண்ட செம்மண் நிலமாயும் மேற்குப் பகுதி சுண்ணாம்புக் கற்பாறைகளைக் கொண்ட சுண்ணக்கற்பிரதேசமாகவும் இருப்பதால் இங்கே சீமெந்து தொழிற்சாலை ஒன்றும் முதன்முதலாக நிறுவப்பட்டது.

அப்போது தமிழ் அமைச்சராக இருந்த ஜி.ஜி.பொன்னம்பலத்தின் முயற்சியால் 1950ன் முற்பகுதியில் நிறுவப்பட்டதாகவும் பிரதமராக இருந்த டி.எஸ்.சேனநாயக்கா வருகைதந்து தெழிற்சாலையைத் தொடக்கி வைத்ததாகவும் ஊர்ப்பெரியவர்கள் சொல்லிக் கொள்வார்கள்.
இந்த மண்ணில் அன்று தொட்டு இன்றுவரை நேரம்காட்டியைப் பார்காமலே நேரத்தையும் பருவகாலத்தையும் திசைகளையும் அறிந்துகொள்ள இயற்கையாகவும் செயற்கையாகவும் இங்கே இருந்த பல சாதனங்களை, எம்முன்னோர்கள் பயன்படுத்தினார்கள்.
KKS - Cement Factory


 சாமத்திலும் அதிகாலையிலும் சேவலின் கூவல் குயிலின் கீதம் வானத்துச் சூரிய சந்திர நட்சத்திரங்கள் பருவகாலமழை காற்றின் திசை கடலலையின் வேகம் கடல்வாழ் உயிரினத்தின் பெருக்கம் அவ்வப்போது கேட்கும் கோயில் மணியோசை இப்படிப் பல முறையிலும் நேரத்தையும் காலத்தையும் திசையையும் எம் முன்னோர் அறிந்து அதற்கேற்ப நடந்தனர். ஆனால் எங்கள் காலமோ வித்தியாசமாய் இருந்தது.

இயற்கையின் அரவணைப்பை நம்பியிராமல் காலமாற்றத்தில் கிடைத்த தொழில் நுட்பவசதிகளை நம்பியே அனேகமாக அடுத்த தலைமுறையான எங்கள் காலம் அமைந்திருந்தது.

அதிகாலையில் சேவல் கூவியதோ இல்லையோ காங்கேயன்துறை சீமெந்துத் தொழிற்சாலையின் சங்கொலி மட்டும் கணீரென்று முழங்கும். தொழிலாளர் வேலை மாறும் நேரம் மட்டுமல்ல பள்ளிக்கூடம் போகும் பிள்ளைகளுக்கும் இது ஒரு நேரம்காட்டி போலவும் இருக்கும். காலை 5.45க்கு முதற் சங்கும் ஆறுமணிக்கு அடுத்த சங்கும் ஒலிக்கும். சுற்று வட்டாரத்தில் இருக்கும் கிராமம் எல்லாம் இந்த ஒலி கேட்டதும் பரபரப்பாகும். பிள்ளைகளை நித்திரையால் எழுப்பிவிடுபவர்களும் வேலைக்குச் செல்லும் கணவன்மாருக்கோ பிள்ளைகளுக்கோ சாப்பாடு சமைத்து பக்குவமாய்க் கட்டிக்கொடுத்துவிடும் தாய்க்குலமும் அதிகாலையில் பரபரப்பாகிவிடும்.நெய்தலும் மருதமும் - 3

தலைவாரிப் பூச்சூடி உன்னைப் - பாடசாலைக்குப்
போ என்று சொன்னாள் உன் அன்னை
சிலை போல ஏனங்கு நின்றாய் - நீ
சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய்?


புரட்சிக்கவி பாரதிதாசனின் பாடல் வரிகளின் பாசம்மிக்க அன்னையர் பள்ளிக்குப் போகமாட்டேன் என்று சிறுவயதில் அழுது அடம்பிடிக்கும் தங்கள் குழந்தைகளை படியாத பெண்ணாய் இருந்தால் இந்த ஊரார் உன்னைக் கேலிசெய்வார் என்று சொல்லி அரவணைத்து தலைவாரிப் பூச்சூடி அருகே உள்ள பாடசாலைக்கு அனுப்பி வைக்கும் காட்சியை அனேகமான ஒவ்வொரு வீட்டு வாசல்களிலும் காணமுடியும். ஆனால் காலப்போக்கில் அந்தப் பாடலின் அர்த்தமே மாறிவிட்டதோ என்று எண்ணத்தோன்றுகிறது.


Building near Nadeswara College
இன்று இராணுவத் தடை முகாங்களைக் கடந்து பாடசாலைக்குப் போகும் ஒரு மாணவியின் மனநிலை எப்படி இருக்கும் என்பதும் அவள் தயங்குவதற்குக் காரணம் என்ன என்பதும் பெற்ற தாய்க்குத் தெரியாமலா இருக்கும்? படிக்கவேண்டும் வாழ்க்கையில் முன்னேறி உயர்ந்த இடத்தை எட்டிப்பிடிக்க வேண்டும் என்ற லட்சிய வெறியோடு அவள் தினமும் பாடசாலைக்குச் சென்றாலும் இராணுவ சோதனைச் சாவடியைக் கடந்து செல்லும்போது சோதனை என்ற பெயரில் அவர்கள் என்னென்ன எல்லாம் கேட்டு எங்கெங்கெல்லாம் தொட்டுத் தன்னை அசிங்கப் படுத்தினார்கள் என்பதைப் பெற்றதாயிடம் எப்படி அவளால் சொல்லமுடியும்?

தமிழ் மக்களின் அசையாத செல்வம் கல்விச் செல்வம்தான் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே! எங்கு எப்படிச் சென்றாலும் தடையின்றி அவர்களுடன் எடுத்துக் கொண்டு செல்லக்கூடிய செல்வம் மாதா பிதா குரு தெய்வம் எங்களுக்குக் கொடையாய்க் கொடுத்த இந்தக்கல்விச் செல்வம்தான்! அதனால்தான் சின்னவயதிலேயே படிக்கவேண்டும் என்ற ஆர்வம் காரணமாக கால்நடையாக நடந்து செல்பவர்களும் துவிச்சக்கர வண்டியில் பேருந்தில்; வாடகைக் காரில் போபவர்களும் என்று காலை நேரம் இந்த ஊரே அல்லோல கல்லோலப்படும். மீண்டும் சீமெந்துத் தொழிற்சாலையில் இருந்து 7:45க்கும் எட்டுமணிக்கும் சங்கொலி கேட்கும். பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்பியபின் நிம்மதிப் பெருமூச்சுவிட்டு தாய்க்குலம் ஒய்வெடுக்க  சிறிது நேரம் ஊர் மௌனமாய் அடங்கியிருக்கும்.

மீண்டும் 1:45 க்கும், இரண்டு மணிக்கும் 3:45 க்கும் நாலு மணிக்கும், இரவு 9:45 க்கும் பத்து மணிக்கும்; சீமெந்துத் தொழிற்சாலையின் சங்கொலிக்கும். பத்து மணிச் சங்கொலியோடு அனேகமாக ஊரடங்கிவிடும். இப்பொழுதெல்லாம் திறந்த வெளிச்சிறைச்சாலை போதாதென்று ஆறுமணிக்கே வீட்டுக்குள் முடங்கிக்கிட என்று ஊர்பேர் தெரியாத யார்யாரோ எல்லாம் அங்கே கட்டளை போடுகிறார்களாம்!


KKS - Railway Station - After War
 யாழ்தேவி உத்தரதேவி தபால்வண்டி கடுகதிவண்டி உள்ளுர் தொடர்வண்டி ஆகியன புறப்படுவதையும் வந்து சேர்வதையும் வைத்து இங்குள்ள மக்களால் ஓரளவு நேரத்தைக் கணிக்கமுடிந்தது. குறிப்பிட்ட நேரங்களில் உள்ளுர் வண்டி காங்கேயன்துறையில் இருந்து வெளிக்கிட்டு யாழ்ப்பாணம்வரை சென்று திரும்பிவரும். இவற்றைவிட அதிகாலை 5:55க்கு காங்கேயன்துறை தொடர்வண்டி நிலையத்திலிருந்து உத்தரதேவி புறப்பட்டு கொழும்பு நோக்கிச் செல்லும். மீண்டும் இரவு 10:20க்கு காங்கேயன்துறையை வந்தடையும். அதேபோல கொழும்பில் இருந்து காலை புறப்பட்டு வரும் யாழ்தேவி 1:40க்கு காங்கேசயன்துறைக்கு வந்து மீண்டும் 2:05க்கு கொழும்பு நோக்கிப் புறப்படும். காலை 6:20க்கு கொழும்பில் இருந்துவரும் தபால் வண்டி மாலை நேரம் 5:55க்கு மீண்டும் கொழும்பு நோக்கிப் புறப்பட்டுச் செல்லும். தபால்கள் இந்த வண்டியில் கொண்டு செல்லப்படுவதால் இதற்குத் தபால்வண்டி என்று பெயர். இதைவிட சனிக்கிழமை காலையில்வரும் கடுகதிவண்டி காங்கேயன்துறையில் தங்கி நின்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8:20க்குப் புறப்பட்டு மீண்டும் கொழும்பு நோக்கிச் செல்லும். வடமராச்சியைச் சேர்ந்த பயணிகளில் அனேகமானோர் ஊர்நோக்கி வரும்போது அனேகமாக கொடிகாமம் சாவகச்சேரி போன்ற இடங்களில் இறங்கி பேருந்து எடுத்து தங்கள் இடத்திற்கு விரைவாகச் சென்றுவிடுவார்கள். கொழுப்பிற்கு திரும்பி செல்லும்போது நீண்டதூரம் பயணம் செய்ய வேண்டும் என்பதால் இருக்கையில் உட்கார்ந்து செல்லும் வசதிக்காக அனேகமாவர்கள் காங்கேயன்;துறை தொடர்வண்டி நிலையத்திற்கு வந்துதான் தொடர்வண்டி எடுப்பார்கள்.
YARL DEVI - Train
 இதனால் எப்பொழுதும் தொடர்வண்டி புறப்படும் நேரங்களில் நிலையம் நிரம்பி வழிந்து பரபரப்பாக இருப்பதைக் காணமுடியும். தையிட்டியைச் சேர்ந்த குருநாதி> செல்வராஜா போன்றோரின் ஏபோட்டி சோமசெட் வாடகை வண்டிகள் எப்பொழுதும் தயார் நிலையில் தொடர்வண்டி நிலையத்தில் நிற்கும். யாராவது தபால்வண்டியைத் தமது தாமதம் காரணமாக தவறவிட்டால் இவர்கள் கைகொடுப்பார்கள். தவிர்க்கமுடியாத காரணங்களுக்காக மறுநாள் எப்படியும் கொழும்பில் நிற்கவேண்டும் என்றால் அவர்களை விரைவாக தங்கள் வண்டியில் கொண்டு சென்று கொடிகாமத்தில் தபால் வண்டியை எப்படியும் பிடித்து ஏற்றிவிட்டுவிடுவார்கள். அதற்காக அவர்களுக்குச் சனமானமும் கிடைக்கும்.


Mail Train to KKS
1902ம் ஆண்டுதான் வடபகுதி நோக்கித் தொடர்வண்டிப் பாதை அமைக்கப்பட்டு முதற்பயணம் தொடங்கியது. கொடிகாமம் வரை இருந்தபாதை 1905ல் காங்கேயன்துறை வரையும் நீடிக்கப்பட்டது இந்தப்பாதையின் நீளம் 256 மைல்கள். சென்ற வருடம்தான் யாழ்தேவி வடபகுதிக்கு சேவையில் ஈடுபடுத்தப்பட்ட 50வது ஆண்டு நிறைவை புகையிரத இலாக்காவினர் வண்டியில்லாமல் பாதையில்லாமல் பொன்விழாவாகக் கொண்டாடினார்கள்.

தொடர் வண்டிப்பாதை இல்லாவிட்டாலும் இருந்ததை உறுதிசெய்ய கைகாட்டி மரங்கள் ஆங்காங்கே அடையாளமாய் நிற்கின்றன. இலங்கை - கனடா நட்புறவின் ஒரு அங்கமாக இலங்கைக்கு 1954ம் ஆண்டு சில எம்2 வகையைச் சேர்ந்த தொடர்வண்டி இஞ்சின்கள் கொழும்புத்திட்த்தின் பலனாக அன்பளிப்பாகக் கிடைத்தன. நீராவியில் இயங்கும் கரிகோச்சிகள்தான் அதுவரை பாவனையில் இருந்தன. அன்பளிப்பாய் கிடைத்த அந்த இஞ்சின்களுக்கு ஒன்ராறியோ(569) அல்பேட்டா(570) சக்கச்சுவான்(571) என்று சிலகனடிய மாகாணங்களின் பெயரைச் சூட்டினர். 571ம் இலக்கத்தைக் கொண்ட சக்கச்சுவான் தமிழீழ மண்ணுக்கு ஆக்கிரமிப்பு இராணுவத்தையும் இராணுவ தளபாடங்களையும் ஏற்றிச் செல்வதில் ஈடுபடுத்தப்பட்டது. தன்னைப் பகடைக்காயாய்ப் பாவிக்கிறார்களே என்ற வேதனை தாங்கமுடியாமல் ஒருநாள் வடபகுதித் தொடர்வண்டிப் பாதையில் தீக்குளித்துக் கொண்டது.

570ம் இலக்க அல்பேட்டா இந்தப் பயத்தில் காங்கேயன்துறை தங்குமிடத்தில் இருந்து வெளியே வரப்பயப்பட்டது. இரும்புப்பாதைகளும் சிலீப்பர்கட்டைகளும் பதுங்கு குழிக்குப் பாவிப்பதற்காக இராணுவத்தால் அகற்றப்படவே அல்பேட்டா திரும்பிச் செல்வதற்கு வழியின்றித் தவித்தது. வேறுவழியில்லாமல் அதன் பாகங்கள் கழட்டப்பட்டு கப்பல் மூலம் கொழும்பிற்கு அனுப்பிவைக்கப்பட்டது.கரி இஞ்சின்
காங்கேயன்துறை(628-எம்2டி) என்ற பெயரிலும் ஒரு பச்சைசிகப்பு நிறத்தில் இஞ்சின் ஒன்று சேவையில் ஈடுபட்டது. அந்த இஞ்சின் சென்ற இடமெல்லாம் காங்கேயன்துறைக்குப் பெருமை சேர்த்தது.
தொடர்வண்டிப் பயணத்தின்போது நல்ல பல அனுபவங்கள் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும். சந்திப்பது பிரிவது மட்டுமல்ல வவுனியா கச்சான்கடலை அனுராதபுரம் இளநீர் பொல்காவலை மகோ றாகம கரிக்காப்பி மசாலவடை என்று மறக்கமுடியாத அனுபவங்கள் பல உண்டு. வீட்டிலே ஆசையாய் கட்டிக் கொடுத்துவிடும் சாப்பாட்டை யார்முதலில் தொடங்குவது என்ற காத்திருந்து மெல்லப்பிரித்து அருகே இருபவர்களுக்கும் கொஞ்சம் கொடுத்து பகிர்ந்து சாப்பிட்ட அந்தநாட்கள் மறக்கமுடியாதன. காகங்கள்கூட தமிழரின் விருந்தோம்பலைப் பார்த்துத்தான் தங்களுக்குள் பகிர்ந்து உண்ணப் பழகிக் கொண்டவோ தெரியவில்லை. இப்படியான நெடும்தூரப் பயணத்தின்போது சிலர் சகபயணிகளுக்கு இருக்கஇடம் கொடுக்காமல் எதிர்த்த இருக்கையில் காலைப் போட்டுக் கொண்டு ஹாயாய் இருப்பார்கள். இந்த நாட்டாண்மை எல்லாம் அனுராதபுரம் வரையும்தான்! பெரும்பாண்மை இனத்தவர்கள் அனுராதபுரத்தில் ஏறியதும் அவர்களை அறியாமலே உள்ளுர் நாட்டாண்மையின் கால்கள் கீழே இறங்கிவிடும்.

சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காரடீ..!

என்று பாரதி குத்திக் காட்டியதுபோல  தன்னுடைய இனத்தவன் கால்வலிக்க அருகே நின்றுகொண்டுவர பல்லிளித்துக் கொண்டு அனுராதபுரத்தில் ஏறியவர்களுக்கு இவர்கள் இடம் கொடுப்பார்கள்.

தொடக்க காலங்களில் அனுராதபுரத்தில் ஏறிக்கொண்டிருந்த பெரும்பாண்மை இனத்தவர்கள் காலப்போக்கில் மதவாச்சிவரையும் பரந்து குடியேறி மதவாச்சியையும் தங்கள் பிரதேசமாக்கிக் கொண்டார்கள். தமிழர்களின் வாக்கிலேயே தங்கியிருந்த மதவாச்சி பாராளுமன்ற உறுப்பினர் திட்டமிடப்பட்ட இக் குடியேற்றமூலம் தமிழர்களின் வாக்கில் தங்கியிராது தனது இனமக்களின் வாக்கைப் பெற்று பாராளுமன்றம் செல்லக்கூடியதாக நன்கு திட்டமிட்டு இக் குடியேற்றங்கள் செய்யப்பட்டன. மறைமுகமான இந்த நில ஆக்கிரமிப்பை அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வவுனியா வரை நடைமுறைப்படுத்த முற்பட்டனர். இதே போலவே திட்டமிடப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் மூலம் கிழக்கு மாகாணத்தில் தமிழரின் பாரம்பரிய நிலங்களான கல்லோயா கந்தளாய் போன்ற இடங்களும் தமிழரிடம் இருந்து குடியேற்றத் திட்டம் என்ற பெயரில் பறித்தெடுக்கப்பட்டன. (தொடரும்)


நெய்தலும் மருதமும் -4

தொடர் வண்டியைப் பார்த்து ஊர்மக்கள் நேரம் அறிவதைப்போல, வானத்தைப் பார்த்தும் நேரத்தை அறியமுடிந்தது. தினமும் காலை 9:00 மணியளவில் கொழும்பில் இருந்து வரும் பயணிகள் விமானம் ஒன்று தரை இறங்குவதற்காக காங்கேயன்துறையின் கிழக்கே உள்ள பலாலி விமான நிலையத்தை நோக்கி இரைச்சலோடு தாளப்பறக்கும். அந்த நேரம் மகாஜனக்கல்லூரி ஆனந்தநடராஜப் பெருமானின் வாசலில் வரிசையாக நின்று தேவாரம் சொல்லிக் கொண்டிருக்கும் எங்களின் காதிலும் அதன் இரைச்சல் விழும். அதிபரின் பார்வையும் எங்கள்மேல் இருக்கும் என்பதால் நிமிர்ந்து பார்க்க விழிகள் அஞ்சும். அழகிய வண்ணவண்ண ரோஜாச் செடிகளால் பூத்துக் குலுங்கிய பலாலி விமான நிலையத்தில் இருந்து தினமும் சென்னைக்கும், திருச்சிக்கும், கொழும்பிற்கும் பயணிகள் விமானம் பறந்த மகிழ்ச்சியான, அமைதியான நாட்களும் உண்டு!

‘என்ன யோசனை.. போவோமா..?’ கண்ணன் கேட்டான்.

நண்பர்கள் எல்லோரும் ‘சரி’ என்று தலையசைக்கவே மனமில்லாமல் எழுந்து, துவிச்சக்கர வண்டியை எடுத்துக் கொண்டு வீடு நோக்கிப் புறப்பட்டோம். வீடு போகுமுன் அனேகமாக காங்கேயன்துறை சந்தியில் உள்ள தேநீர்க்கடைக்கு நாங்கள் செல்வது வழக்கம். பிளேன்ரீ, ஒரு வடை, அல்லது வாய்ப்பன். அதன் சுவை சொல்லித் தெரியாது. தேநீர் அருந்திக் கொண்டிருக்கும்போது நாதன் பரபரப்பாக உள்ளே ஓடிவந்தான்.

இப்படித்தான் ஏதாவது பரபரப்பான செய்திகள் கொண்டுவரும்போது இதேபோன்ற பதட்டத்துடன்தான் அவன் ஓடி வருவான்.

‘என்ன..?’ என்பதுபோல எல்லோரும் நிமிர்ந்து பார்த்தோம்.

அவனது வெளிறிப்போன முகத்தைப் பார்த்ததும் நிச்சயமாக நல்ல செய்தி அல்ல என்பது மட்டும் புரிந்தது. அவனே சொல்லட்டும் என்று காத்திருந்தோம்.

‘சிவா..! என்று தடுமாறினான்.

‘சிவாவிற்கு என்ன…?” அதிர்ச்சியோடு தனம் கேட்டான்.

‘செத்துப்போயிட்டான்’ என்றவனுக்கு மேற்கொண்டு பேசமுடியாமல் மூச்சு வாங்கியது.

‘என்ன சொல்கிறாய், சி.. வா.. செத்துப்போயிட்டா.. னா?’ நம்பமுடியாமல் ஒரேயடியாய் அதிர்ந்தோம்.

நாதன் சொன்னதை நம்பமுடியாவிட்டாலும் இந்த விடையத்தில் அவன் வேடிக்கை பண்ணமாட்டான் என நம்பினோம்.

‘என்ன நடந்தது? எப்படி?’
‘பொலீஸ் சுற்றி வளைத்து..!’
‘பிடிச்சிட்டாங்களா…?’ மணியன் பரபரத்தான்.
‘இல்லை அதற்கு முன்னமே சயனைட் சாப்பிட்டான்!’
‘சயனைட்டா..?’

மாணவப் பருவத்தில் சிறுவர்களாக இருந்த எங்கள் வாழ்க்கையில், அன்பு, பாசம், நேசம், அகிம்சை, சாத்வீகம் என்று பழக்கப்பட்டுப்போன, சட்டத்தையும் ஒழுங்கையும் மதித்து நடந்த எங்களுக்கு அந்த மரணம் பெரிய அதிர்ச்சியாகவே இருந்தது. அதிர்ச்சி மட்டுமல்ல, அதுவே எதிர்காலத்தில், ஈழத்தமிழரின் வாழ்க்கை வரலாற்றில் ஒரு பெரிய திருப்பு முனையாக அமையும் என்று யாரும் அன்று எதிர்பார்க்கவில்லை!


தமிழ் இனம் தலைநிமிர்ந்துவாழ, மண்ணையும், தாய்மொழியையும் நேசித்த மூத்தமாணவன் சிவகுமாரன் அன்று கொடுத்த முதற் களப்பலி அது!
இப்படி இன்னும் எத்தனை பலிகள் கொடுக்கப் போகிறார்களோ?

முதல் வேலையாக வீடு திரும்பியதும் ‘சயனைட்’ என்றால் என்னவென்று அகராதியைப் புரட்டிப்பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். எங்களிடம் இருந்து பலாத்காரமாய் பறிக்கப்பட்ட எத்தனையோ சுகங்கள், இனி எங்கள் வாழ்நாளில் இதுபோல என்றுமே  கிடைக்கப்போவதில்லை என்பது அப்போதே எங்களுக்குப் புரிந்துபோயிற்று!


‘முட்டாள், இப்படியும் ஒரு காரியம் செய்வானா?’ என்று தங்களைத்தானே சுற்றி வட்டம் போட்டுக் கொண்ட ஒருசிலர் திட்டித் தீர்த்துக் கொண்டார்கள்.

அலுமாரியைத் திறந்து பார்தேன்.
எனது தந்தையார் சேகரித்து வைத்த, பழையபஞ்சாங்கம், அகராதி போன்ற பல பயனுள்ள புத்தகங்கள் நிறைய உள்ளே இருந்தன.

தந்தையார் நடேஸ்வரா கனிஷ்ட பாடசாலையில் அதிபராக இருந்தவர். இதைவிட காங்கேயன்துறை பட்டினசபையின் இரண்டாம் வட்டாரப் பிரதிநிதியாகவும், சபையின் பிரதித் தலைவராகவும் கடமையாற்றியவர். தன்னார்வத் தொண்டரான அவரிடம் மாலை நேரங்களில் உதவி எதிர்பார்த்து நிறையப்பேர் வீடு தேடி வருவார்கள். பகல் முழுவதும் பாடசாலையில் நின்றபடியே படிப்பிப்பதால் சற்று ஓய்வெடுக்கும் நோக்கத்தோடு, பிரம்பு நாரினால் பின்னப்பட்ட சாய்மனைக் கதிரையில் அவர் சாய்ந்திருப்பார். மலேசியாவில் இருந்து இவரது சகோதரி இவருக்குப் பரிசாக அதை அனுப்பியிருந்தார். பிள்ளைகளின் பிரச்சனை, காணிப்பிரச்சனை, குடும்பப்பிரச்சனை என்று பலவிதமான பஞ்சாயத்தும் அங்கே நடக்கும். தேவையானவர்களுக்கு தமிழிலோ, அல்லது ஆங்கிலத்திலோ கடிதம் எழுதிக் கொடுப்பது, கலியாணப் பொருத்தம், குறிப்புப்பார்ப்பது, காணிக்கு எல்லைபோட அளந்து கொடுப்பது போன்ற பொதுத்தொண்டுகளுக்கு என்று வீட்டிலே தினமும் கூட்டம் போடும். ‘சட்டம்பியார்’ என்றுதான் அவரிடம் படித்த பிள்ளைகளின் பெற்றோர்களில் அனேகர் மரியாதையாக அவரை அழைப்பார்கள். வழியிலே கண்டால் பயபக்தியோடு மரியாதையாக ஒதுங்கி நின்று, புன்முறுவலோடு  வழிவிடுவார்கள். எதிரே சைக்கிளில் வந்தால் இறங்கி மரியாதையோடு, இவர் தங்களைக் கடந்து செல்லும்வரை நிற்பார்கள். ‘மாபெரும் சபைகளில் நீ நடந்தால், மாலைகள் விழவேண்டும்’ கவியரசு கண்ணதாசன் குறிப்பிட்டதுபோல மதிப்பு, மரியாதை என்ற மாலைகள் அவ்வப்போது அவருக்கு சூடப்பட்டபோது, ஒரு தனிமனிதன் என்பதைவிட, ஒரு ஆசிரியருக்கு, அவர் கற்ற கல்விக்கு எப்படி பெற்றோரும், மாணவரும் அந்த நாட்களில் மதிப்புக் கொடுத்தார்கள் என்பதை புலம் பெயர்ந்த நாடுகளில் நடைமுறையோடு ஒப்பிட்டுப் பார்த்தபோதுதான் எனக்குப் புரிந்தது.

அவர் சேர்த்து வைத்த அரியபல புத்தங்களில் ஆங்கில விரிவான அகராதியும் இருந்தது. அதை எடுத்துப் புரட்டிப் பார்த்தேன்.

‘இரத்தத்துடன் கலந்தால் ஏழு எட்டு வினாடிகளில் உயிரை எடுத்துவிடும் வெள்ளை நிறப்பவுடர்’ என்று குறிப்பிடப் பட்டிருந்தது. ஒரு கொடிய எதிரியிடம் அகப்பட்டு சித்திரவதைப் படுவதைவிட சட்டென்று இறந்துவிடுவதே மேலானது என்று அந்த நேரம் சிவா நினைத்திருக்கலாம், அல்லது எதற்கும் தயாராக, சாவதற்குக்கூட அவன் தயாராக இருந்திருக்கலாம்.

எது எப்படியோ இறப்பு என்ற அந்த நிகழ்வு சட்டென்று நிகழ்ந்துவிட்டது. அந்த நாட்களில் இயற்கை மரணத்தைத் தவிர வேறு எந்த மரணத்தைப் பற்றிக் கேள்விப்பட்டாலே பதறித் துடித்துப் போகும் தமிழ் இனத்திற்கு அதன் பின் ஒவ்வொன்றாகத் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சிகள் அதிர்ச்சிமேல் அதிர்ச்சியைக் கொடுக்கத் தொடங்கின. நாளடைவில், ஈழத்தமிழ் மக்களைப் பொறுத்தவரை இளமையில் மரணம் என்பது ஒரு சாதாரண நிகழ்ச்சியாகிப் போய்விட்டது.


இளைஞர்களின் எண்ணங்கள் விடுதலை வேட்கையால் கவரப்பட்டாலும், இது எங்கேபோய் முடியுமோ என்று சில பெரியவர்கள் முணுமுணுக்கத் தொடங்கினர். குறிப்பாக அரசாங்க உயர்பதவிகளில் இருந்த சிலரும், பொருளாதார ரீதியாக தென்பகுதியை நம்பி இருந்தவர்களும், அற்பசொற்ப சுகத்திற்காகச் சொந்த இனத்தைக் காட்டிக் கொடுத்தவர்களும், பிரித்தானிய அடிமைவாழ்க்கையில் ஊறிப்போய் குட்டக் குட்டக் குனிந்து கொண்டு இருந்தவர்களும் இந்த இளைஞர்களின் திடீர் எழுச்சியை, சமுதாயமாற்றத்தை விரும்பவேயில்லை. கடைசிவரையும் தங்கள் வெறுப்பைக் காட்டியவர்களாகவே அவர்கள் இருந்தார்கள்.


எப்போதாவது பிரச்சனைகள் நடக்கும் போதெல்லாம் ‘அவர்கள் தருவதை வாங்கிக் கொண்டு இவர்கள் பேசாமல் இருந்திருக்கலாம்’ என்று இளையதலைமுறையைக் குறைசொல்லிக் கொண்டேயிருந்தனர்.


காந்தியம் பலன்தரும் என்றவர்களுக்காக, அகிம்சை முறையில் கேட்டுப்பார்த்தாச்சு, சத்தியாக்கிரகம் இருந்து பார்த்தாச்சு, உண்ணா நோன்பிருந்து காடையரிடம் அடியுதை பட்டுப் பார்த்தாச்சு. எதுவுமே கிடைக்கவில்லை. இனியும் என்ன செய்யக்கிடக்கிறது?

மயிலே மயிலே இறகுபோடு என்றால் இறகுபோடுமா? நிரந்தர அடிமையாகவே வாழ்வதா, இல்லை நெஞ்சமெலாம் சுதந்திரக் காற்றை உள்வாங்கி அதன் சுகத்தை அனுபவிப்பதா? அது இலகுவில் முடியுமா? இதற்கு வழி என்ன? எல்லோர் மனதிலும் ஈழத்தமிழரின் எதிர்காலம் பெரிதொரு கேள்விக்குறியாய் எழுந்து நின்றது! (தொடரும்)நெய்தலும் மருதமும் - 5

காங்கேயன்துறை தொடர்வண்டி நிலையம்தான் வடபகுதியின் கடைசி நிலையமாக, கடற்கரைக்கு அருகே இருந்தது. வெளியே இருந்து நேரத்தோடு பேருந்து வண்டியில் வரும் பயணிகள் கடற்கரையில் வந்து நின்று காற்று வாங்கி, கப்பல் பார்த்து, இயற்கையை ரசித்துச் செல்வார்கள். அப்படி ஒரு அழகு அந்தக் கடற்கரைக்கு!பொலீஸ் நிலையம் சற்றுத்தள்ளி கடற்கரை ஓரமாய் காங்கேசந்துறைச் சந்திக்கு அப்பால் இருந்தது. வேலை மாற்றம் பெற்று குமரேசன் என்ற தமிழர் ஒருவர் அப்போது இன்ஸ்பெக்டராகப் பதவி ஏற்று வந்திருந்தார். பொலீஸ் நிலையத்திற்கு அருகே உள்ள பொலிஸாருக்கான சுற்றுமதில் கட்டிய விடுதியில்தான் அவரது குடும்பம் தங்கியிருந்தது. அவருடைய மகளையும், மகனையும் நடேஸ்வராக் கல்லூரியில் படிப்பதற்காகக் கூட்டிக் கொண்டுவந்து சேர்த்திருந்தார். அந்தப் பெண்ணோ தினமும் மிகநாகரிகமாக உடையணிந்து பொலீஸ் வண்டியில் வந்து இறங்கி அழகாக நடந்து வகுப்பிற்கு வருவார். எங்களைவிட நிறமாயும், அழகாயும் இருந்தார். எல்லோருக்கும் அவரைத் திரும்பிப் பார்க்க, அவருடன் பழக ஆசையாக இருந்தாலும் பொலீஸ் இன்ஸ்பெக்டரின் மகள் என்பதால் எல்லோரும் அவரிடம் இருந்து கொஞ்சம் விலகி, வம்பு வேண்டாமே என்று சற்று எட்டவே நின்று கொண்டார்கள். ஆனாலும் ஆசை யாரை விட்டது!


அறிஞர் அண்ணா அவர்கள், ‘மாற்றான் வீட்டு மல்லிகையை மணந்து பார்க்கலாம், ஆனால் பறிக்கக்கூடாது’ என்று ஒருமுறை வேடிக்கையாய் குறிப்பிட்டது போல மலர்பூத்துக் குலுங்கினால் நறுமணம் வீசத்தானே செய்யும், இதனால் மாலை நேரங்களில் காங்கேயன்துறைச் சந்திக்கு அருகே, கீரிமலை வீதியில் உள்ள அவரது விடுதிப்பக்கம் சில சைக்கிள்கள் திசை திரும்பத் தொடங்கின. இதற்காகவே இருக்கையை உயர்த்திவிட்டு மதிலுக்கு மேலால் எட்டிப் பார்த்து கொண்டு செல்வதில் ஒருவித மனத்திருப்தி. நாளடைவில் கீரிமலை வீதியில் சைக்கிள்கள் வலம்வரும் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. மறுநாள் வகுப்பிலே ‘இன்னநிறச் சட்டையோடு உன்னைக் கண்டேனே’ என்று அவளிடம் சொல்லி மகிழ்வதில் சகமாணவர்களுக்கு ஒருவித திருப்தி. தினவரவு ஏட்டில் இருந்து அவளுடைய பெயர் புவனேசுவரியம்மாள் என்று, கிச்சான் தெரிந்து கொண்டு வந்து சொன்னான். கிளியோபத்ரா மாதிரிஅல்ல, இது கொள்ளைபோகும் அழகு! அவளுடைய அழகிற்கு புவனேசுவரி என்ற பெயர் கர்நாடகமாகத் தெரியவே, அழைப்பதற்குச் இதமாக ‘புவனா’ என்று அவளுடைய பெயரை நாங்கள் சுருக்கிக் கொண்டோம். நாதன் இன்னுமொருபடி மேலேபோய் ‘புவா’ என்று செல்லமாய் சொல்லிக் கொண்டான்.

‘அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்’ கம்பராமாயணம் பாடப்புத்தகமாக இருந்தாலும், படிக்கும்போது எங்களுக்கு அதன் அர்த்தம் புரிந்ததில்லை. இவர்கள் மதிலுக்கு மேலால் நோக்கும் போதெல்லாம் அவளும்; நோக்கியிருப்பாள், ஆனாலும் தகப்பனின் பயத்தில் அதை வெளியே காட்டிக் கொண்டதில்லை!

  
ஊர்மக்களுக்கு, துவிச்சக்கரவண்டி என்று சொல்லப்படுகின்ற சயிக்கிள்தான் முக்கியமான போக்குவரத்துச் சாதனமாக இருந்தது. பாரிசைச் சேர்ந்த பாரொன்கரெல் வொன்ரெயிஸ் என்பவரால் 1818ல் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட சயிக்கிளில் றலி, கேக்குலீஸ், மொனறா, ஏசியன்பைக் என்று பலவிதமான தயாரிப்புகள் இலங்கையில் இருந்தன. தொடக்கத்தில் ஆண்கள் மட்டுமே சைக்கிள் ஓட்டினார்கள். காலப்போக்கில் பெண்களும் சைக்கிள் ஓடப்பழகிக் கொண்டார்கள். கிணறும், நாயும் இல்லாத வீடே இல்லை என்பதுபோல, சைக்கிள் இல்லாத வீடும் இல்லை எனலாம். சில வீடுகளில் இரண்டு சைக்கிள்கள்கூட இருந்தன. அனேகமானவர்கள் சையிக்கிளில் இன்னும் ஒருவரை ஏற்றிச் செல்வது வழக்கம். சிலசமயங்களில் டபிள், றிபிள் என்று ஒரு சைக்கிளில் மூன்றுபேர் கூடச் செல்வார்கள். இன்ஸ்பெக்டர் குமரேசன் பதவி மாற்றலாகி வந்ததும் ஊர்மக்களின் இயல்பு வாழ்க்கைக்குப் பங்கம் ஏற்படத் தொடங்கியது. குறிப்பாக மாணவர்கள் இருவர் சைக்கிளில் சென்றால் அவர்களை வழிமறித்து அவர்களைக் கொண்டே சைக்கிள் சில்லின் காற்றைத் திறந்துவிடச் செய்வார். சிலசமயம் பொலீஸ் நிலையம் வரையும் அவர்களின் சயிக்கிளைத் தள்ளிக் கொண்டு வரச்செய்வார். பலசாலியான சிலரைச் சைக்கிளைத் தூக்கிக் கொண்டு பொலீஸ் நிலையம்வரை நடந்து வரும்படியம் பணித்திருக்கிறார். அவரது மனநிலையைப் பொறுத்து, தண்டனை பலவிதமாயும் இருக்கும். இப்படியான கெடுபிடிகளால் இளைஞர்களுக்கு இன்ஸ்பெக்டர்மீது ஒருவித காழ்ப்புணர்வு ஏற்படத் தொடங்கியது. எதை அவர் தடுக்க நினைத்தாரோ அதைத் திரும்பத் திரும்பச் செய்வதில் இளைஞர்கள் மிகவும் துடிப்போடு இருந்தார்கள்.


அனேகமாக வெள்ளிக்கிழமைகளில் அவர் செல்வச்சன்னதிக்கு சென்றுவருவது வழக்கம். அன்றும் அப்படித்தான் நாங்கள் கடற்கரையில் இருந்து இருண்டுவிட்டதே என்று அவசரமாக சைக்கிளில் வீடு நோக்கிப் புறப்பட்டோம். கண்ணனின் சைக்கிளில் கிச்சானும், சிறியின் சைக்கிளில் நாதனும், அருள்முருகனின் சைக்கிளில் சூரியாவும் டபிள் வந்தார்கள். நான் இன்னுமொரு சைக்கிளில் தனியே வந்தேன். வீதியின் ஒரு பகுதியை மறைத்தபடி நாங்கள் கதைத்துச் சிரித்துக் கொண்டு வந்தபோது எங்களைக் கடந்து ஒரு ஜீப்வண்டி வேகமாகச் சென்றது. சென்ற வேகத்தில் கிரீச் என்ற சத்தத்தோடு பிறேக்கடித்து நின்றது. மறுநிமிடம் வேகமாக எங்களை நோக்கி பின்நோக்கி நகர்ந்தது.

ஜீப்வண்டி பின்நோக்கி வந்ததும், ‘பொலீஸ்’ என்று கத்தியபடி நாதன் சைக்கிளில் இருந்து வெளியே பாய்ந்தான். எங்களை அறியாமலே சட்டென்று பிறேக்பிடித்து எல்லோரும் இறங்கி நின்றோம். கால்கள் மெல்ல நடுங்கின.

நெற்றியில் வீபூதியும் சந்தணப் பொட்டுமாக இன்ஸ்பெக்டர் குமரேசன் கீழே இறங்கினார்.

செல்வச்சன்னதிக்குப் போய்வந்ததன் அடையாளமாக நெற்றியிலே வீபூதிப்பட்டை, சந்தணப்பொட்டு. கோயிலுக்குப் போய் சுவாமி தரிசனம் செய்தபடியால,; பயபக்தியோடு இருப்பார் எங்களை ஒன்றும் செய்யமாட்டார் என்று எங்களுக்கு மனதில் ஒரு தைரியம் இருந்தது. பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பதுபோல பொலீசைக் கண்டால், எல்லோருமே பயப்பிட்டகாலம் அது!

நான் தனியே துவிச்சக்கர வண்டியில் வந்ததால் ‘பிறேக் இருக்கா? லைட் இருக்கா?’ என்றார். தலையாட்டி பொம்மையாய் தலை அசைத்தேன். இலக்கத்தகடு இருக்கா என்று குனிந்து பார்த்துவிட்டு என்னைப் போகச்சொன்னார்.

நான் உடனே போகாமல் ஒரு கணம் தயங்கி நின்றேன். அவர்களின் சைக்கிள் காற்றைத் திறந்துவிடச் சொன்னார். திறந்து விட்டதும் போய்விடுவார் என்று நினைத்தேன். ஆனால் என்னகடுப்பில் இருந்தாரோ தெரியவில்லை, சைக்கிளைத் தூக்கிக் கொண்டு பொலீஸ் நிலையம் வரையும் நடக்கச் சொன்னார். அவர்கள் என்னைப் பரிதாபமாகப் பார்த்துவிட்டு இருவராகச் சேர்ந்து சைக்கிளைத் தூக்கிக் கொண்டு பொஸீஸ் நிலையத்தை நோக்கி நடந்தார்கள். இது என்ன பெரிய காரியம் ஒற்றைக் கையால்கூடத் தூக்கிக்கொண்டு நடப்போம் என்பதுபோல அலட்சியமாய் சைக்கிளைத் தூக்கிக் கொண்டு நடந்தார்கள்.

அருகேதான் பொலீஸ் நிலையம் இருந்தது என்றாலும் பொலீஸ்விடுதியின் வாசலில் தாயாருடன் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த புவனேசுவரியின் விழிகள் இந்தக் காட்சியைப் பார்த்ததும், ‘இவர்களா?’ என்று ஆச்சரியமாய் விரிந்தன. அவளால் நம்பமுடியாமல் இருந்தது. அவர்கள் அவளைக் கடந்து சென்றபோது, தன்னையறியாமலே ‘க்ளுக்’ என்று பலமாக ஒரு சிரிப்புச் சிரித்தாள். ஏன் சிரித்தாள் என்பது அவர்களுக்குப் புரியவில்லை! அது ஆச்சரியமா அல்லது ஏளனமான நக்கல் சிரிப்பா என்பதும் அவர்களுக்கு அப்போது தெரியவில்லை! ஆனாலும் இதயத்தில் கத்தி செருகியதுபோன்ற சுருக்கொன்ற ஒரு உணர்வு அவர்களைத் தாக்கியிருக்கலாம். அந்தச் சிரிப்பு எங்களை என்னவோ செய்தது. மகாபாரதத்தில் துரியோதனன் பளிங்கு மாளிகையில் நடக்கமுடியாமல் தடுமாறியபோது இப்படித்தான் திரௌபதையும் சிரித்திருப்பாளோ? என்று எனக்குள் கற்பனை செய்து பார்த்தபடி, அடுத்து என்ன செய்வது, எங்கே போவது, இவர்களை எப்படி வெளியே கொண்டு வருவது என்று தெரியாமல் வேகமாகச் சயிக்கிளைத் தள்ளிக்கொண்டு கீரிமலை வீதியால் காங்கேயன்துறை சந்தியை நோக்கி கால்போன போக்கில் நடந்தேன்!

அவரவர் வீட்டிற்குக் கதை போகுமுன் இவர்களை எந்தப் பாதிப்பும் இல்லாமல் வெளியே எடுக்க வேண்டும்! ஊரிலே கதை போவது என்பது மின்னஞ்சல் வசதி அப்போது இல்லாவிட்டாலும் அதைவிட இது வேகமானது. ‘இருட்டினபிறகு தெருவில நிக்காதையுங்கோ’ என்று தினமும் ஒவ்வொருவர் வீட்டிலும் சொல்லித்தந்த பாடம் மனதைக் குடைந்தது. இனி என்ன செய்யலாம்? யாராவது நன்மதிப்புக்குரிய ஒருவர் பொலீஸ் நிலையத்திற்கு வந்து, குறிப்பிட்ட அதிகாரியிடம் சொன்னால்தான் இவர்களை வெளியே விடுவார்கள் என்பதால், பொலிஸாரின் மதிப்புக்குரிய ஒருவரைத் தேடமுற்பட்டேன். இந்த நேரத்தில் யாரைத் தேடிப்பிடிப்பது? தெரிந்தவர்கள் ஒவ்வொருவராக மனக் கண்முன் வந்தார்கள்.  யோசனையோடு நடந்த என்முகத்திலே சட்டென்று வெளிச்சம் பட்டுத் தெறித்தது. நிமிர்ந்து பார்த்தேன். கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் வெளிச்சவீட்டு வெளிச்சம் ‘பக்பக்பக்’ என்று கண்ணுக்குளே மின்னியதும், ஏதோ ஒரு எண்ணம் மனசுக்குள் பொறிதட்டியது. (தொடரும்)


நெய்தலும் மருதமும் - 6


கப்பல்களுக்கு வழிகாட்டும் அந்த கலங்கரைவிளக்கம் எனக்கும் வழிகாட்டியது. மாவிட்டபுரம் கந்தசுவாமிகோயில் தெப்பத்திருவிழாவை, கப்பல் திருவிழாவாக மாற்றியது, காங்கேயன் வந்து இறங்கிய இந்தக் கடற்கரையோரம்தான். அது ஒளி தருகிறது என்றால் கட்டாயம் எனது உறவு முறையான வல்லிபுரம் அங்கே நிற்பார் என்பது எனக்குத் தெரியும். வீட்டிற்கு விளக்கேற்றும் மகாலட்சுமிபோல, ஊருக்கே இவர் விளக்கேற்றுவதால் அவரை எல்லோரும் ‘வெளிச்சவீட்டு வல்லிபுரம்’ என்றுதான் அழைப்பார்கள். ரயில் வரும்போது, குருவிளையாட்டுக் கழகமைதானத்திற்கு அருகே உள்ள தண்டபாளத்தில் சோடாமூடி வைத்து நாங்கள் விளையாடும் போதெல்லாம், அவருடைய வீடு அதற்கு அருகே இருந்ததால் நிறையத்தடவை அவரிடம் ஏச்சு வாங்கியிருக்கிறோம். தடி எடுத்து விரட்டுவார். ஆபத்திற்குப் பரவாயில்லை என்று பயந்து பயந்து நடந்ததை எல்லாம் அவரிடம் சொல்லிவிட்டு ஏச்சு வாங்கத் தயாராய் நின்றேன். என்னை ஒரு பார்வை பார்த்துவிட்டு, அவர் சால்வைத் துண்டை எடுத்து சேட்டுக்குமேலே போட்டுக் கொண்டு பொலீஸ் நிலையம் நோக்கிக் கம்பீரமாய் நடந்தார். நான் சயிக்கிளில் அவரைப் பின் தொடர்ந்தேன். உள்ளே சென்ற அவர் என்ன மாயம் செய்தாரோ தெரியவில்லை, சொற்ப நேரத்தில் அவர்களையும் கூட்டிக் கொண்டு வெளியே வந்தார்.


‘இங்கே விளையாடிக் கொண்டு நிற்காமல் சீக்கிரம் வீட்டிற்குப் போங்கோ’ என்று மட்டும் சொல்லிவிட்டு, கையிலே இருந்த சால்வைத் துண்டை, அந்த நாளிலேயே ரஜனி ஸ்டைலில் ஒரு சுழட்டுச் சுழற்றி தோளில் போட்டுக்கொண்டு வெளிச்சவீட்டை நோக்கி மீண்டும் நடந்தார். ஒரு சால்வைத் துண்டிற்கு இத்தனை மரியாதையா? என்று எனக்குள் நான் வியந்து போனேன். இப்போ ரஜனி படம் பார்க்கும் போதெல்லாம் எனக்கு அவருடைய ஞாபகம் வரும். தமிழீழத்தில் இவரைப் போன்ற பலபெற்றோர்கள், பிள்ளைகளை நல்வழிப் படுத்துவதற்காக தங்கள் முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டு, ஒரு கண்டிப்பான தகப்பன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதுபோல, பாசத்தை வெளிக்காட்ட முடியாமல் மனசுக்குள்ளே ஏக்கத்தோடு தவித்தபடி நடமாடுகிறார்கள் என்பதை, அவரது பெருந்தன்மையான செய்கையில் இருந்து, நாங்கள் புரிந்து கொண்டோம். ‘அடிக்கிற கைதான் அணைக்கும் என்பதும் போகப்போகத்தான் புரிந்தது!

நாங்கள் காற்றுப்போன சயிக்கிளையும் தள்ளிக் கொண்டு நடந்தோம். சந்தியிலே இருந்த சயிக்கிள் கடையில் சயிக்கிள் சில்லுக்குக் காற்றடித்தவிட்டு, மீண்டும் டபிள் போட்டுக் கொண்டு வீடுநோக்கிச் சென்றோம். மீண்டும் பொலீஸ் வண்டி வரலாம் என்ற பயம் எனக்கிருந்தது.


‘வரமாட்டான், சந்நிதிக்குப் போயிட்டுவந்தா, தண்ணி அடிச்சிட்டுப் படுத்திடுவான், இனி வரமாட்டான்!’ என்று கண்ணன் ஆத்திரத்தில் ஒருமையில் குறிப்பிட்டான். உண்மையிலேயே ஆட்சியில் இருந்த அதிகாரவர்க்கத்தின் மீது தான் அவனது கோபம் திரும்பியிருந்தது. இதுபோல தொடர்ந்து நடந்த பல சம்பவங்கள் அடக்கியாள நினைக்கும் நகர்காவலர்மீது தமிழீழ மக்கள் வைத்திருந்த நம்பிக்கையையும், மதிப்பையும், கொஞ்சம் கொஞ்சமாக இழக்கவைத்தது.   


மறுநாள் புவனேசுவரியின் முகத்தில் முழிக்க எங்களுக்கு வெட்கமாக இருந்தது. அவள் எதுவுமே பேசாமல் மௌனம் சாதித்தது எங்களை மிகவும் பாதித்தது. அவளது ‘அந்தச்சிரிப்பு’ மட்டும் எங்கள் மனசைக் குடைந்து கொண்டே இருந்தது.


நடேஸ்வராக் கல்லூரியில் நாடகம் போட்டார்கள். பிரபல நாடக நடிகர்களும், இயக்குநர்களுமான கலையரசு ஏ.ரி.பொன்னுத்துரை, திருமதி. வள்ளிநாயகி இராமலிங்கம் போன்ற ஆசிரியர்கள் நாடகத்துறையில் மிகவும் ஈடுபாடு கொண்டவர்களாக இந்தக் கல்லூரியில் கல்வி கற்பித்தார்கள். அவ்வப்போது உதவியாக, ஊரிலுள்ள நடிகமணி வி.வி. வைரமுத்து, அண்ணாவி நாகமுத்து போன்றவர்கள் இத்துறையில் அவர்களுக்குப் பக்கப்பலமாக இருந்தார்கள். பாலகிருஷ்னன் பாத்திரத்தில் நடிக்க அழகான ஒருவர் தேவைப்பட்டதால் மாணவர்களிடையே யாரைத் தெரிந்தெடுப்பது என்று ஆலோசித்தார்கள். ஆண்களுடைய மூஞ்சி ஒன்றுமே சரியில்லாததால், அந்தப் பாத்திரத்தில் நடிக்கப் புவனாவைத் தெரிந்தெடுத்தார்கள். புவனேசுவரி பாலகிருஸ்னனாக நாடகத்தில் நடிக்கப் போகிறாளாம் என்ற செய்தி பள்ளிக்கூடம் முழுவதும் வேகமாகப் பரவியது.


‘நம்ம புவனாவா?’ நாதன் சந்தேகத்தோடு கேட்டான்.
‘ஆமா!’ என்றேன்.
‘நடிப்பாளா?’
‘நடிக்கத் தெரியாமலா அந்தச் சிரிப்புச் சிரித்தாள்?’
‘அப்போ கட்டாயம் முன்வரிசையில் இருந்து பார்க்கவேண்டும்’ என்றான்  நாதன்.
‘ஏன்? தினமும் இங்கேதான் பார்க்கிறியே, போதாதா?’
‘பார்க்கிறேன்தான், ஆனால் நாடகத்தில பாலகிருஸ்னன் பாத்திரத்தில் அல்லவா நடிக்கிறாள்?’

‘அதுக்கென்ன..?’ சந்தேகத்தோடு கேட்டேன்.
‘பாலகிருஸ்னனுடைய படம் ஒன்றும் நீங்க பார்த்ததில்லையா? ஒரு பட்டுத்துண்டைப் போர்த்துக்கொண்டு.. செக்கச் செவேலென்று ஆகா.. கிட்ட இருந்து பார்த்தால் எப்படி இருக்கும்?’ அவன் கண்களை மூடிக் கற்பனையில் எதையெதையோ எல்லாம் ரசித்தபடி வர்ணித்தான்.
‘செக்கச் செவேலென்றா… இவன் என்ன சொல்லுறான்..?’  சந்தேகத்தைக் கிளப்பினான் கிச்சான்.

‘கண்ணா கருமைநிறக் கண்ணா’ என்று ஒரு சினிமாப்பாட்டுக்கூட இருக்கே..! பாலகிருஸ்ணன் கறுப்பல்லவா..?’ என்பங்கிற்கு நானும் சொல்லி வைத்தேன்.

‘இல்லை, நான் எங்க புவனாவைச் சொன்னேன்!’ என்றான் நாதன்.
நாதன் சொன்ன, பாலகிருஸ்னன் தோற்றத்தில் புவனாவைப் பார்க்க யார்தான் விருப்பமாட்டார்கள்? நாதனுக்கு மட்டும்தான் அழகை, இல்லை நாடகத்தை ரசிக்கத் தெரியுமா? நாடகம் மேடையேறும் அந்த நாளுக்காக நாங்களும்; ஆவலோடு காத்திருந்தோம்!

ஊருக்குள்ளே மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட அந்த நாடகம் மேடை ஏறியது. கிச்சான் வெளிக்கிட்டு வருவதற்கு கொஞ்சம் தாமதித்ததால், அவனைத் திட்டிக்கொண்டே பரபரப்பாக நாங்கள் மண்டபத்திற்குள் நுழைந்தோம். ஊரிலே உள்ள கிழடுகட்டை எல்லாம், சிந்தாமணி நாயகி அஸ்வத்தமாவின் நினைவை மீட்டியபடி முன்வரிசையைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். முன்வரிசை எல்லாம் பறிபோனதில் நாதனுக்கும் கிச்சானுக்கும் பிரச்சனையே வந்துவிட்டது. ‘இந்த மன்மதராசா மேக்கப்போட்டு வெளிக்கிட்டுவர எவ்வளவு நேரம் எடுத்தது தெரியுமே, கொஞ்சம் முன்னுக்கு வந்திருந்தால் என்னவாம்?’ என்று நாதன் சலித்துக் கொள்ள, ‘இவனுக்கு ஓட்டைவாய், ஊரெல்லாம் இவன்தான் பறைதட்டியிருப்பான்’ என்று கிச்சானும் ஒருவரை ஒருவர் மாறிமாறித் திட்டிக் கொண்டிருந்தார்கள். போதாக்குறைக்கு அதிபர் கையிலே பிரம்போடு அருகே வந்து ‘பிள்ளைகள் நீங்கள் ரிகேசல் பாத்தனீங்கள்தானே, ஆனபடியால் பெற்றோருக்கு இருக்கஇடம் கொடுங்கோ’ என்று சொல்ல, நாங்கள் பிடித்து வைத்திருந்த கதிரையையும் தியாகம் செய்ய வேண்டி வந்துவிட்டது.


மகாபாரத அருச்சுணனின் நிலையில் நாங்கள் இருந்தோம். திரை விலகியபோது எங்கள் பார்வையெல்லாம், புவனாவைத்தவிர வேறு எதிலும் செல்லவேயில்லை. புவனாவை அந்தக் கோலத்தில் பார்த்ததும் நாதனுக்கு சப்பென்று போய்விட்டது. எல்லோரும் நன்றாக இருந்ததாக நாடகத்தைப் புகழ்ந்தார்கள். ‘ஆடைதெரிவில் ஏதோ குளறுபடி நடந்திருக்கவேண்டும், கடைசி நிமிடத்தில் வி.வி.வைரமுத்துவின் காத்தவராயன் நாடகத்திற்குப் பாவித்த பழைய அரசர் காலத்து உடுப்பைத்தான் இவளுக்குப் போட்டிருக்க வேண்டும்’ என்று நாடகம் முடிந்து திரும்பி வீட்டிற்குப் போகும்போது நாதன் அலுத்துக் கொண்டான்.
‘நாடகத்தில் முகபாவம்தான் முக்கியம்!;’ என்றேன்.

‘அதுக்கென்ன இப்போ..? என்றான்.

‘அதுதான் புவனாவின் முகத்தை மட்டும், மூடிமறைக்காமல் தெரியக்கூடியதாக விட்டிருக்கிறார்கள்’ என்றேன் நான்!

கொதிப்பிலே இருந்த நாதனுக்கு ஏறிக்கொண்டு வந்தது. ‘இதைவிட ரிகேசல் பரவாயில்லை’ என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினான்.

இதுபோன்ற நாடகங்கள், கூத்துக்கள், இசையரங்கங்கள், திருவிழாக்கள், விளையாட்டுப்போட்டிகள் என்று ஏதோ ஒரு வடிவத்தில் சமுதாய முன்னேற்றத்திற்காக, வாரம் ஒருமுறையாவது நல்ல நிகழ்ச்சிகள் அந்த மண்ணிலே நடந்து கொண்டுதானிருந்தன. (தொடரும்)


நெய்தலும் மருதமும் - 7 


நெய்தல், மருதநிலங்களில் உள்ள ஏனைய பாடசாலைகள் போலவே காங்கேயன்துறையில் நடேஸ்வராக்கல்லூரி, அமெரிக்கன்மிஷன், வீமன்காமம் கலவன் பாடசாலை போன்ற பாடசாலைகளும் கலை, இலக்கிய, விளையாட்டுத் துறைகளில் முன்னின்றன. இந்தப் பாடசாலைகளைத்தவிர, கலை, இலக்கியம், விளையாட்டுதுறை போன்றவற்றை வளர்ப்பதில் இளந்தமிழர் மன்றம், குருபடிப்பகம்,  குருவிளையாட்டுக் கழகம், றோயல் விளையாட்டுக்கழகம், தையிட்டி ஸ்டார் விளையாட்டுக் கழகம் போன்ற பல கழகங்களும் சமுதாய முன்னேற்றத்திற்கு முன்னின்று உழைத்தன. கனகசெந்திநாதன், கவிநாயகர் வி. கந்தவனம், தங்கம்மா அப்புக்குட்டீ, எஸ்.பொன்னுத்துரை, டொமினிக்ஜீவா, போன்ற பல அறிஞர்களும், கி.வா. ஜெகநாதன், கி.ஆ.பொ. விசுவநாதன், கிருவானந்தவாரியார், பாரதியாரின் பேர்த்தியான விஜயபாரதி போன்ற பலவெளிநாட்டு அறிஞர்களும் அவ்வப்போது வருகை தந்து சொற்பொழிவாற்றிச் சென்ற ஞாபகம் இன்றும் மனக்கண்முன் விரிகிறது.


ஒவ்வொரு சிவராத்திரிக்கும் நடேஸ்வராக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடிகமணி வி;.வி;.வைரமுத்துவின் காத்தவராயன் கூத்து விடியவிடிய நடைபெறும். சண்டிலிப்பாயைச் சேர்ந்த நடிகமணி செல்வராஜாவும் இதில் முக்கிய பாத்திரமேற்று நடிப்பார். இதைவிட இந்த மண்ணில் பிறந்தவர்களும், புகுந்தவர்களுமாக உள்ளுரில் பலர் கலை, இலக்கிய, விளையாட்டுத் துறைகளில் ஈடுபாடு கொண்டவர்களாகவும் இருந்தார்கள்.


இதுபோன்ற பலதுறைகளிலும் ஈடுபாடு கொண்ட சிலரின் பெயர்கள் எனது ஞாபகத்திற்கு வருவதால் அவர்களைப்பற்றிக் குறிப்பிட விரும்புகின்றேன்.

இவர்களில் சிலர் அந்த மண்ணிலும், சிலர் வெளிநாடுகளிலும் இத்துறைகளில் இப்பொழுதும் ஈடுபாடு கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
அமரர் நவநீதகிருஸ்னபாரதி, தயா, கிருபா என்ற புனைப்பெயரில் எழுதிய அமரர் அருளம்பலம், திருமதி வள்ளிநாயகி இராமலிங்கம் (குறமகள்), த.சண்முகசுந்தரம், பொ. கனகசபாபதி (கபோதி), அமரர் உருத்திராபதி,  திருமதி.சிங்கராஜா, ஹம்சத்வனி, பி.விக்னேஸ்வரன், குரு அரவிந்தன், பரம்ஜீ ஞானேஸ்வரன், முருகதாஸ், அமரர் நடமாடி இராசரத்தினம், ஆனந்த இராஜமாணிக்கம், நடாராஜ்குமார், தையிட்டி இராஜதுரை, அண்ணாவி நாகமுத்து. நா.இரகுநாதன், நாகரட்ணம், சத்தியசீலன், அமரர் நா.கருணானந்தசிவம், பிள்ளையினார், அமரர் பொன்.கணேசமூர்த்தி, இலிங்கவேலாயுதம், மு.இராஜேஸ்வரன், பாலச்சந்திரன், எஸ். சண்முகநாதன்(பாபு), சண்முகராஜா (வீணைமைந்தன்), யோகசுந்தரி, சுமங்கலி அரியநாயகம், கோதை அமுதன், பூங்கொடி அருந்தவநாதன், வனிதா இராசேந்திரம், இராஜ்மீரா, கனி விமலநாதன், நடாமோகன், பத்மினி ஆனந், நாவுக்கரசி பொன்னம்பலம், முரளி நடராஜா, பரம்சோதி மாஸ்டர், வேலாயுதம் மாஸ்டர், ராஜதுரை மாஸ்டர், மோகன் திருச்செல்வம், செல்வன்திருச்செல்வம் (மொன்றியல்), கௌசல்யா ஆனந்தராஜா, மல்லிகாவதி அரியரட்ணராஜா, மாவிட்டபுரம்ராசா, சண்முகநாதன், ரவி,கவி சகோதரர்கள், போன்ற பலரும், இன்னும் இங்கே பெயர்குறிப்பிடாத பலரும் இந்தத் துறைகளில் மிகவும் ஈடுபாடு கொண்டவர்களாக இருந்தார்கள்.


நடேஸ்வராக் கல்லூரியில் பாலர் வகுப்பில் படிக்கும்போது நாகம்மாரீச்சர், பொன்னம்மாரீச்சர், பூரணம்ரீச்சர், மீனாரீச்சர், என்று பல ஆசிரியைகள் படிப்பித்தார்கள். எங்களை ஏதாவது பாட்டுப் பாடச்சொன்னால், ‘மழைவா வெய்யில்போ’ என்று ஒரேயடியாய் கோரஸ் பாடுவோம். வேறு ஏதாவது நல்லபாட்டுப் பாடுவோம் என்று அவர்கள் எங்களுக்குச் சிறுவர் பாடல்கள் சொல்லித் தருவார்கள். தொடக்கத்தில் நிலா நிலா ஓடிவா, பச்சைக்கிளியே வாவாவா, வண்ணத்துப் பூச்சி பறக்குது பார்! என்று, எங்களுக்கும் இயற்கையை ரசிக்கப் பழக்கினார்கள். அப்புறம்,


‘ஆடிப்பிறப்பிற்கு நாளை விடுமுறை
ஆனந்ம் ஆனந்தம் தோழர்களே!
கூடிப் பனங்கட்டி, கூழும் குடிக்கலாம்,
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!’என்ற பாட்டைச் சொல்லித் தந்தார்கள். நாங்களும் புளியமரநிழலில் நின்று கைகளைத்தட்டி, வட்டம் வட்டமாய் சுற்றிச் சுற்றி ஆடிப்பாடினோம். மறுநாள் இனிப்புக்கூழும், கொழுக்கட்டையும் வீட்டிலே கிடைத்தது. ஆனால் விடுமுறை கிடைக்கவில்லை.  எங்க அண்ணா, அக்கா படித்தகாலத்தில் விடுமுறை விட்டார்களாம். அதனால்தான் அந்தப்பாடல் அந்தக் காலத்திற்கு ஏற்றதாக இருந்தது. ஆனால் அரசகட்டுப்பாட்டில் பாடசாலைகள் வந்ததும் இப்படியான விடுமுறைகள் எல்லாம் நிறுத்தப்பட்டுவிட்டன. அதனால் இந்தப்பாடல் காலத்தோடு ஒத்துப்போகாமல், மெல்ல ஒதுங்கிப் போய்விட்டது. இதுபோலவே சித்திரை மாதத்தில் தமிழர்கள் புதுவருடத்தைக் கொண்டாடிக் கொண்டிருந்தால் எனது சிறுவர் பாடல் ஒன்றில்  ‘சித்திரை மாதத்து முதல்தினம் அதுவே புதுவருடம்’ என்ற பாடல்வரியை, பருவகாலங்கள் பற்றிய எனது சிறுவர் பாடலில் ஒரு இடத்தில் குறிப்பிட்டிருந்தேன். தைப்பொங்கல்தான் தமிழரின் வருடப்பிறப்பு என்ற கொள்கையைக் கொண்டவர்களால் தைமாதம்தான் புதுவருடம் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டதால் அந்தப் பாடல் வரிகள், புதுவருட மாற்றம் காரணமாக காலத்தால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஆனாலும் இது போன்ற பாடல்கள் வரிகள் காலத்தைக் காட்டி நிற்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. ஈழத்துப் புலவர்கள், கவிஞர்கள் பலரின் ஆக்கங்கள் இன்று கவனிபார் அற்று, ஆவணப்படுத்தாததால் எங்கள் மத்தியில் இருந்து மறைந்து கொண்டிருக்கின்றன.


கத்தரிதோட்டத்து மத்தியிலே நின்று
காவல் புரிகின்ற சேவகா! – நின்று
காவல் புரிகின்ற சேவகா!
மெத்தக் கவனமாய்க் கூலியும் வாங்காமல்
வேலை புரிபவன் வேறுயார்?அன்று எல்லோர் வாயிலும் முணுமுணுக்கப்பட்ட ஈழத்தைச் சேர்ந்த நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் இந்தப் பாடல், இப்படி ஒரு பாடல் இருக்கிறதா என்று இன்று கேட்கும் நிலைக்கு வந்துவிட்டது. உண்மையிலே இந்தப் பாடல் எவ்வளவு தீர்க்கதரிசனத்தோடு எழுதப்பட்டது என்பதை நினைத்துப்பாருங்கள்.
கத்தரித்தோட்டம் என்பது எங்கள் தமிழீழமண். சேவகம் என்பது, தாய்மண்ணுக்குச்  சேவை செய்வது, அதாவது எங்கள் உயிரிலும் மேலாம் தமிழீழத் தாய்க்காக உடல் பொருள் ஆவி அத்தனையையும் துறப்பது.

தமிழீழ மண்ணைக் காப்தற்காக
கண்ணு மிகையாமல் நித்திரை கொள்ளாமல்
காவல் புரிகின்ற சேவகா!
எண்ணில் உனைப்போல் இரவு பகலாக
ஏவல் புரிபவன் வேறுயார்?

தாய் மண்ணுக்காக தங்களையே தியாகம் செய்பவர்களைத் தவிர வேறுயாரைப் பற்றிப் புலவர் சொல்லியிருக்க முடியும்?

எதையும் தகுந்த முறையில் ஆவணப்படுத்த ஈழத்தமிழர் தயங்குவதற்குக் காரணம் என்னவென்றுதான் எனக்குப் புரியவில்லை. இந்தக் கட்டுரை எழுதும் போதுகூட பலரின் எதிர்ப்பைச் சந்திக்கப் போகிறாய் என்று என்னைச் சிலர் எச்சரித்தார்கள். சரியோ பிழையே எதையுமே ஆவணப் படுத்தாவிட்டால் எங்களுக்கு என்று ஒரு சரித்திரமே இல்லாமல் போய்விடும் என்பதால், துணிந்து எழுதுகின்றேன். ஒன்றுமே இல்லாமல் இருப்பதைவிட ஏதாவது இருப்பது நல்லது என்று நினைக்கிறேன். தவறுகளைத் திருத்திக் கொள்ளலாம்!


சபாதேவன் என்று ஒரு மாணவன் படிப்பிலே மிகவும் கெட்டிக்காரன். அதேபோல மாபிள் வைத்து விளையாடும்போது சொல்லி அடிப்பதிலும் கெட்டிக்காரன். அடிமாபிள் என்று ஒன்று வைத்திருப்பான். அதை யாருக்கும் தரமாட்டான். மதிய இடைவேளைக்குப்பின் வகுப்புத் தொடங்கிய பின்தான் வியர்க்;க விறுவிறுக்க ஓடிவருவான். இரண்டு பொக்கற்றிலும் மாபிள், மாட்டுச் சலங்கைபோல் ஜில் ஜில் என்று தாளம்போடும். வகுப்பிற்குப் பிந்திவருதால், கஷ்டப்பட்டு விளையாடிச் சேகரித்த மாபிள் எல்லாம் பூரணம் ரீச்சரிடம் பறிபோய்விடும். முழுவதையும் எடுத்து மேசையில் வைக்கச் சொல்லுவா, இவன் அடிமாபிளை தவிர மற்றவற்றை எடுத்து வைப்பான். ரீச்சர் எப்படியோ அடிமாபிளையும் காற்சட்டை  பொக்கற்ரில் தேடிப்பிடித்து எடுத்து விடுவார். இது அடிக்கடி நடக்கும் ஒரு நிகழ்ச்சியாகவும், இவர்கள் பிடுங்குப்படும்போது எங்களுக்கு வேடிக்கையாகவும் இருந்தது.

என்ன நடந்தது என்று தெரியவில்லை, ஏதோ ஒரு காரணத்தால் சபாவிடம் இருந்து மாபிள் பறிப்பதை ரீச்சர் திடீரெனக் கைவிட்டுவிட்டார். மதியவகுப்புத் தொடங்கும்போது அடிக்கடி நடக்கும் வேடிக்கை நிகழ்ச்சி தடைப்பட்டுப் போனதால், சபாவிடமே என்ன நடந்தது என்று விசாரித்தோம்.

‘இனிமேல் மாபிள் பறிக்கமாட்டா, அண்டைக்குப் பொக்கற்றில கைவிட்டதோட சரி!’ என்று சொல்லிவிட்டு, தனது காற்சட்டைப் பொக்கற்றை வெளியே உருவிக் காட்டினார். இரண்டு பொக்கற்ரும் அரைவாசியில் கத்திரிக்கோலால் வெட்டி எடுக்கப்பட்டிருந்தது. தேடுதல் நடவடிக்கை ஏன் திடீரென நிறுத்தப்பட்டது என்பது மட்டுமல்ல, அன்று சபாவின் பொக்கற்ரைச் சோதிக்கும்போது ரீச்சரின் முகம் அப்படிப் போனதற்கு என்ன காரணம்  என்பதும் புரிந்து போயிற்று!


நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாய் புழுதி குளித்து, நாங்கள் முத்தமிழ் வளர்த்த அந்தப் பாடசாலைகள், இன்று அன்னிய ஆக்கிரமிப்பின் அதிபாதுகாப்பு வலயத்திற்குள் அகப்பட்டு, சித்திரவதை முகாமாக மாறியிருக்கிறன. தினமும் நாங்கள் கையெடுத்துக் கும்பிட்ட காளி அம்மனுக்குப் பக்கத்தில் உள்ள அரசமரத்தடியில் புத்தபெருமான் தியானம் செய்ய, வந்து அமர்ந்து விட்டாராம். சொல்வதற்கு யாருமில்லை, சொல்லியழ வார்த்தையில்லை! புலம்பெயர்ந்த எங்கள் அடுத்த தலைமுறைக்கு, நாங்கள் பிறந்த மண்ணில் எப்படி எல்லாம் வாழ்ந்தோம் என்பதும் தெரியப் போவதில்லை.

விடியலுக்கான ஒளிக்கீற்று எங்கேயாவது தெரியாதா என்று ஒவ்வொரு கணமும், ஒவ்வொரு உள்ளமும் ஏங்குகிறது. என்றாவது ஒருநாள் தர்மயுத்தம் வெல்லும் என்ற நம்பிக்கை மட்டும் எல்லோர் மனதிலும் அசையாத நம்பிக்கையாய் பதிந்திருக்கிறது!நெய்தலும் மருதமும் - 8

 தைபிறந்தால் வழிபிறக்கும் என்று முன்னோர்கள் சொன்னதுபோல தமிழர்களின் திருநாளாம் தைப்பொங்கல் எப்போது வரும் என்று தமிழர்கள் ஆவலோடு காத்திருப்பது வழக்கம். சூரியன் மகரராசியில் சஞ்சரிக்கும் காலமான, தமிழரின் தைமாதம் முதலாம் திகதியில் இவ்விழா வருவதால் மகர சங்கிராந்தி என்றும் அழைப்பர். முற்றத்தில் கோலம் போட்டு, புதுநெல்லில் எடுத்த அரிசியைப் பாலோடு சேர்த்துப் பொங்கிச் சூரியனுக்குப் படைப்பார்கள். பொங்கிப் படைத்தபின், புத்தம்புதிய உடுப்புக்கள் அணிந்து கோயிலுக்கும் உறவினர் வீட்டிற்கும் செல்வது மட்டு மல்ல, பட்டாசு கொழுத்தி, வீட்டிலே ஊஞ்சால் கட்டி ஆடுவது தமிழர்கள் வாழும் பிரதேசங்களில், குறிப்பாக வடக்குக், கிழக்கு மாகாணங்களில் ஒரு பாரம்பரியமாக இருந்து வந்தது. நீர்கொழும்பில் இருந்து தயாரித்து வரும், யானைமார்க், மான்மார்க் வெடிகள் அப்போது பிரபல்யம். எந்த வெடியின் சத்தம் அதிகம் என்று போட்டிக்கு வெடிக்கவைப்பதுமுண்டு. இதைவிட ஈர்க்குவாணம், மத்தாப்பு, பூவிசுறு என்று அவரவர் வசதிக்கு ஏற்ற வாணவேடிக்கையும் நடக்கும். பட்டாசு சத்தத்தில் பயந்துபோன ஊர் நாய்கள் எல்லாம் எங்கேயாவது ஓடி ஒளிந்து கொள்ளும்.


எங்கள் வீட்டு அல்சேஷன் நாயும் இப்படித்தான் ஒருதடவை கழுத்துப்பட்டியை அறுத்துக் கொண்டு ஓடியபோது, அப்போது எங்களோடு மகாஜனாவில் படித்துக் கொண்டிருந்த நண்பன் தனபாலசிங்கம் (மாஸ்டர்), எப்படியோ எங்கள் வீட்டு நாய் என்பதை அடையாளம் கண்டு, நாய்படாத பாடுபட்டு வீட்டிற்குக் கொண்டுவந்து சேர்த்தார்.


ஊஞ்சல் அனேகமாக இரண்டு வகையாக இருக்கும். ஒன்று ஒற்றை ஊஞ்சல். மற்றது அன்ன ஊஞ்சல். ஓற்றை ஊஞ்சல் என்பது தன்pயாக ஒருவர் ஆடுவது. அன்ன ஊஞ்சல் என்பது நீண்ட பலகையில் இரண்டுபக்கமும் கயிற்றைக் கட்டி ஆடுவது. நடுவே சிறுவர், சிறுமிகளை உட்காரவைத்து இரண்டு கரையிலும் இருவர் எழுந்து நின்று, உந்தியாடும்போது விமானத்தில் பறப்பது போன்ற உணர்வு சிலசமயங்களில் ஏற்படுவதுண்டு;. வீட்டுக் காணியில் நிற்கும் பலமான கிளைகளைக் கொண்ட மரங்களான வேப்பமரம், மாமரம், புளியமரம் போன்றவற்றில்தான் பொதுவாக ஊஞ்சல் கட்டி ஆடுவர். தமிழீழத்து அனேகமான கோயில்களில் ஊஞ்சல் திருவிழா என்று ஒரு திருவிழாவும் நடக்கும்.


விவசாயத்திற்கு உதவி செய்த கதிரவனுக்கு நன்றி சொல்லும் நாளான தைப்பொங்கலுக்கு மறுநாள் பட்டிப்பொங்கல் இடம் பெறும். சூரியனுக்கு நன்றி சொன்னது போலவே விவசாயத்திற்கு உதவி செய்த மாடுகளுக்கு நன்றி சொல்லும் தினம்தான் மாட்டுப் பொங்கல் அல்லது பட்டிப்பொங்கல் எனப்படும். சில கிராமங்களில் மாட்டுவண்டில் சவாரியும் இடம் பெறும். எங்கள் வீட்டிற்கு சற்றுத்தள்ளி தெற்குப் பக்கத்தில், கூத்தியவத்தையில் ஒரு பெரிய மருதமரம் இருந்தது. அதன் கீழே ஒரு பிள்ளையர் குடியிருந்தார். பக்கத்தில் ஒரு சிறிய குளமும் இருந்தது. சுற்றிவர வயற்காணிகள் இருந்தன. மாரிகாலத்தில் பச்சைப் பசேல் என்றிருக்கும் வயல் வெளிகள், அறுவடை முடிந்ததும் காய்ந்துபோய்க் கிடக்கும் அந்த பெரிய வயற்காணியில் மாட்டுவண்டில் சவாரி நடக்கும். பல பாகங்களிலும் இருந்து போட்டியில் பங்குபெற வண்டில் மாட்டோடு அங்கு வருவார்கள்.

ஒற்றை மாட்டு வண்டில் சவாரி, இரட்டை மாட்டு வண்டில் சவாரி என இரண்டு தரமான போட்டிகள் நடைபெறும். சீனிக்காளை, மாவெள்ளை, சிவப்புக்காளை என்றெல்லாம் மாடுகளுக்குப் பெயர் சூட்டியிருப்பார்கள். இதைவிடப் பார்வையாளர்களும் எல்லாத் திசையில் இருந்தும் நிறைய வருவார்கள். இவர்களின் வருகையால் தைப்பொங்கலை அண்டிய நாட்களில் காங்கேயன்துறை ஒரேயடியாக் களைகட்டியிருக்கும். இதேபோல மீண்டும் சித்திரை வருடப்பிறப்பை அண்டிய நாட்களில் நடக்கும் மாட்டுவண்டிச் சவாரியைப் பார்ப்பதற்காக ஊரே களைகட்டும். இதைப்போலவே தினகரன் விளையாட்டு விழா என்று யாழ்ப்பாணம் கோட்டைக்கு அருகே உள்ள முற்றவெளியில் மிகப்பெரிய அளவில் மாட்டுவண்டில் சவாரி, சயிக்கிள் ஓட்டப்போட்டி, பழைய கார்களின் பவனி, வாணவேடிக்கை எல்லாம் வைப்பார்கள். இப்போது இருப்பதுபோன்ற, இராணுவம் பொதுமக்களுக்கு வேடிக்கை காட்டும் இறக்குமதி செய்யப்பட்ட, ஆட்கொல்லி ‘மல்ரிபரல்’ வாணவேடிக்கை எல்லாம் அந்தக் காலத்தில் கிடையாது!


வாடைக்காற்று வீசும் இந்தப் பருவநாட்களில் சிறுவர் முதல் பெரியவர்கள்வரை கொடி என்று சொல்லப்படுகின்ற பட்டம் கட்டிப்பறக்கவிடும் விளையாட்டில் மும்முரமாக ஈடுபடுவர். ‘கொக்கு பறபற, காகம்பறபற’ என்பதுபோல நாங்கள் ‘பட்டம்பறபற, கொக்கன்பறபற, பிராந்தன்பறபற’ என்று பாடுவதுண்டு. பருந்தைத்தான் பிராந்தன் என்று பேச்சுவழக்கில் சொல்வதுண்டு. பாம்பன், பெட்டி, நட்சத்திரம், சானா, படலம், என்று பல வர்ணங்களில், பலவிதமான பட்டங்களும் கட்டிப் பறக்கவிடுவோம். கொக்கன், பராந்தன், செம்பிராந்தனுக்கும் கீழ்ப்பகுதியில் இரண்டு குஞ்சம் இருக்கும். நொச்சையோ, வாலோ இல்லாமல் பெட்டிக் கொடியைப் பறக்கவிடமுடியம். பாம்பன், நட்சத்திரம், சானா, படலங்களுக்கு நீண்ட வால் இருக்கும். நெச்சையைக் கொஞ்சம் இளக்கிவிட்டால் அது வாலைச் சுழற்றி அடித்து தனக்கு அருகே பறந்து கொண்டிருக்கும் பட்டத்தை தனது வாலால் அடித்து விழுத்திவிடும்.


எங்கள் வீட்டிற்கு முன் வீட்டிலே சுப்பண்ணா என்று ஒரு அங்கிள் இருந்தார். அவர் வீட்டிலே ஒரு கடிநாயும் இருந்தது. கொக்கன், பராந்தன், செம்பிராந்தன் கொடிகள் கட்டுவதில் மிகவும் கெட்டிக்காரர். கொடிகட்டுவதில் மட்டுமல்ல அதற்கு விண் கட்டிப் பறக்க விடுவதிலும் சூரன். பச்சைப் பனைமட்டை எடுத்து அதிலே விண் வாரவேண்டும். எவ்வளவு மெல்லிதாக இருக்கிறதோ அவ்வளவிற்கு விண்கூவும். விண் வாருவதற்கு ஏற்றமாதிரியான விதம்விதமான பேனாக் கத்திகளும் அவரிடம் இருக்கும். மாமர நிழலில் பலகைக்கட்டை போட்டு அதிலே உட்கார்ந்து, காலை மடக்கி குதிக்காலில் நாரைவைத்து விண் வாரும் அழகே ஒரு அலாதி. கரணம் தப்பினால் மரணம் என்பதுபோல கொஞ்சம் பிழைத்தாலும் கஷ்டப்பட்டுச் சீவிய விண் கிழிந்துவிடும், அல்லது காலைப் பதம் பார்த்து விடும். பூவரசம் தடிஎடுத்து அதில் இரண்டு பக்கமும் பொருந்தக்கூடிய மாதிரி விண்கட்டையும் செய்வார். மழை பெய்யாவிட்டால், விண்பூட்டிய பட்டத்தை இரவிலும் தொடர்ந்து பறக்கவிடுவார். ஒருமுறை செப்புக் கம்பியில் விண் செய்து, பெரியதொரு கொக்கன் கொடியை இரவிரவாகப் பறக்கவிட்டார். இரவின் நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டு செப்புக்கம்பி வானத்தில் விண்கூவியது. சிலர் தூக்கம் கெட்டுவிட்தென்று புறுபுறுத்தார்கள். ஆனாலும் அவரிடம் ஒருவரும் முறைப்பாடு செய்யவில்லை.

மறுநாள் காலையில் பொஸீஸ் வண்டி ஒன்று அவர் வீட்டு வாசலில் வந்து மெதுவாக நின்றது.
பொலீஸ் வண்டி வந்து நின்றதும் அக்கம் பக்கமெல்லாம் வாசலில் கூடிவிட்டார்கள். ஒவ்வொருவர் முகத்திலும் கேள்விக் குறி!
இன்ஸ்பெக்டர் குமரேசன் வண்டியில் இருந்து இறங்கினார்.

‘யாருடைய பட்டம் இது?’ என்று வானத்தில் விண் கூவிக் கொண்டு நின்ற கொக்கன் கொடியைக் காட்டிக் கேட்டார்.

நூல் எந்த வளவிற்குள் இருந்து போகிறது என்பதில் இருந்து அவரே கண்டு பிடித்திருக்கலாம். ஆனாலும் கேட்டார். யாரும் காட்டிக் கொடுக்க விரும்பவில்லை. சுப்பண்னா சட்டையை மாட்டிக் கொண்டு தானே வெளியே வந்து அது தனது பட்டம்தான் என்று சொன்னார். இன்ஸ்பெக்டர் குமரேசன் அவரை ஏறஇறங்கப் பார்த்து விட்டு, பட்டத்தைக் கீழே இறக்கச் சொன்னார்.

சுப்பண்ணா அவசரமாக பட்டத்தை வலித்தார். வலிக்கும்போது பெரியபட்டங்கள் நிலத்தில் விழுந்து கிழிந்துவிடும் சாத்தியக் கூறுகள் இருப்பதால், திறமைசாலியான அவர் அதை லாவகமாக வலித்து கீழே விழுந்துவிடாமல் கைப்பட்டமாக எடுத்தார். இன்ஸ்பெக்டர் குமரேசன் வந்த காரியத்தை மறந்து அவர் பட்டம் வலிக்கும் கலையைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார். சுப்பண்ணா பட்டத்தை கவனமாக நிலத்தில் படுக்க வைத்துவிட்டு நூலைச்சுற்றத் தொடங்க, குமரேசன் சொன்னார்,

‘எல்லோரும் கவனமாகக் கேளுங்கோ, இனிமேல் பட்டத்தை அதிக உயரமாக ஒருவரும் பறக்க விடக்கூடாது, மற்றது பட்டத்தில் விண்கட்டிப் பறக்கவிடக்கூடாது, பலாலி விமான நிலைய வயலெஸ் தொடர்புசாதனங்கள் அதனாலே பாதிப்பு அடைவதாக முறைப்பாடு வந்திருக்கு, நான் சொன்னது புரியுதா?’


புரிந்ததோ இல்லையோ எல்லோரும் புரிந்ததாக தலை அசைத்தனர். அங்கே நின்றவர்களை  எச்சரித்து, ஒரு அதிகாரப் பார்வையை வீசிவிட்டுக் குமரேசன் ஜீப்பிலேறி திரும்பிச் சென்றார்.


‘பட்டம் பறக்கவிடுவதற்குக்கூட எங்களுக்கு உரிமை இல்லையா?’ அருகே நின்ற சுதன்; முணுமுணுப்பது என் காதில் விழுந்தது.
‘பட்டமென்ன, கப்பலே ஓட்டியவன் தமிழன்! நாங்க நினைத்தால் விமானமே பறக்கவிடுவோம்!’ குரல் வந்த திசை திரும்பிப் பார்த்தேன், ரோஜாவின் கணீரென்ற குரலில் நம்பிக்கை தெரிந்தது!


பரம்பரை பரம்பரையாகப் பட்டம்விட்டு மகிழ்ந்து கொண்டிருந்த அந்த ஊர்மக்களுக்கு, இந்தத்தடையானது  அவர்களின் எதிர்கால சுதந்திரத்தில் அரசு மூக்கை நுழைக்கத் தொடங்கிவிட்டதோ என்ற சந்தேகத்தால், அரசுமேல் இதுவரை வைத்திருந்த அரைகுறை நம்பிக்கையையும் கேள்வி குறியாக்கியிருந்தது! அவர்களின் சந்தேகம் சரியானதே என்பதுபோல காலப்போக்கில் சிங்கள அரசின் இத்தகைய கெடுபிடிகள் தமிழரின் தாய் மண்ணில் மூலைமுடுக்கு முழுவதும் திட்டமிட்ட முறையில் கொஞ்சம், கொஞ்சமாக அதிகரிக்கத் தொடங்கின!நெய்தலும் மருதமும் - 9


சுப்பண்ணா வீட்டு கடிநாயைப் பற்றிக் கட்டாயம் இங்கே குறிப்பிட வேண்டும். ஏனென்றால் பள்ளிப்பருவத்திலே நான் தினசரி தரிசனம் செய்பவர்களில் அவரும் ஒருவராய் இருந்தார். சுப்பண்ணா வீட்டு வாசற் படலைக்கு வெளியே தெருவோரம் இவர் படுத்திருப்பார். உடம்பு மண்ணிறம், முன்நெற்றியில் வீபூதிப்பட்டை போட்டதுபோல பெரிய வெள்ளை மச்சம், போதாகுறைக்கு கழுத்துப்பட்டி வேறு, சாட்சாத் உருத்திராட்சமாலை அணிந்த சாமியார் தவமிருப்பது போலக் காட்சி தருவார். படலை வாசலில் மாமரநிழலில் முன் இரண்டு கால்களையும் பரப்பி அதிலே தலை சாய்த்து கண்மூடிக் கோழித் தூக்கம் போட்டுக் கொண்டிருப்பார். நாய்களுக்கு மோப்பசக்தி அதிகம் என்பதாலோ என்னவோ, தூரத்தில் யாராவது வரும் சத்தம் கேட்டாலும் அசையமாட்டார், ஆனால் அவரது காது இரண்டும், வண்ணத்துப் பூச்சியின் சிறகுகள் மாதிரி சட்டென்று விரிந்து அதைக்கிரகிக்கும். ஓசைகிட்ட நெருங்க, நெருங்க தலையை அசைக்காமல் கண்ணை மட்டும் திறந்து மெல்லப் பார்ப்பார். ஓசைக்குரியவர் தன்னைக் கடந்து செல்லுமட்டும் வைத்த விழி வாங்கால் உஷார் நிலையில் இருப்பார். பகையாளியாக இருந்தால், எப்போதாவது இவரோடு சேட்டை விட்டிருந்தால் ஒரேபாய்ச்சல், இல்லாவிட்டால் அவர்களைக் கண்டு கொள்ளமாட்டார்.

‘கல்லைக் கண்டால் நாயைக்காணோம்
நாயைக் கண்டால் கல்லைக் காணோம்’


நாய் துரத்தும்போது, அதற்கு எறிவதற்கு ஒரு கல்லும் அருகே கிடைக்காத அனுபவத்தில்தான் இப்படிச் சொன்னார்களோ என்று நான் சின்னவயதில் நினைப்பதுண்டு;. அப்புறம்தான் கல்லிலே செதுக்கப்பட்ட ஒரு நாயின் உருவத்தை எப்படிப் பார்க்கிறோம் என்பதன் அர்த்தத்தில் சொல்லியிருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டேன். அதை வெறும்;கல் என்றுபார்த்தால் கல்தான், நாய் என்று பார்த்தால் நாய்தான்! எவ்வளவு அரிய தத்துவத்தை நம்மவர்கள் சாதாரணமாய் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்கள்!


சிறுவனாய் இருக்கும்போது சுப்பண்ணா வீட்டு நாயிடமிருந்து நிறைய விடையங்களை நான் கற்றக் கொண்டேன். தினமும் பலதடைவ அவரைக் கடந்து செல்ல வேண்டும் என்பதால் எங்களுக்குள் எழுதப்படாத ஒருவித சமரசம் செய்து கொண்டோம். அதாவது எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் கல்லெடுத்து அவரை நான் அடிக்கமாட்டேன், அதற்குப் பதிலாக அவர் ஒருபோதும் என்னைத் துரத்தக்கூடாது, முக்கியமாக கூட்டாளிகளோடு அவரைக் கடந்து போகும்போது உறுமவோ, துரத்தவோ கூடாது! அது ஒரு மானப்பிரச்சனையாக இருந்ததால் அதில் நான் மிகவும் கவனமாக இருந்தேன். கடைசிவரை அந்த ஒப்பந்தத்தை இருவருமே மீறவில்லை. ஒப்பந்தம் அமலில் இருந்தாலும், எதிர்வீட்டு வாசலில் ‘நாயைப் பிடியுங்கோ, நாயைப் பிடியுங்கோ’ என்ற, பலதரப்பட்ட அவலக்குரல்கள் அவ்வப்போது கேட்டுக் கொண்டிருந்ததால், நான் எதற்கும் தற்பாதுகாப்போடு இருக்க முற்பட்டேன். விளையாடப் போவதானால் விக்கட் அல்லது பாட்டையோ, கடைக்குப் போவதனால பிரம்புக் கூடையோ கொண்டு போவேன். இப்படி ஏதாவது கையில் கவசம்போல எப்போதும் இருக்கும். சைக்கிளில் போகும்போது தற்செயலாகத் துரத்தினாலும் என்ற பயத்தில் காலைத்தூக்கி பாரிலே வைத்துக் கொண்டு சைக்கிள் ஓடவும் பழகி வைத்திருந்தேன்.


அதுகூட வலம்புரியைப் பார்த்துத்தான் கற்றுக் கொண்டேன். நடேஸ்வராக் கல்லூரி மைதானத்தில் அவர் ஒரு சாதனை நிலை நாட்டுவதற்காக, ‘உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம், அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உரிமையடா!’ என்பது போன்ற பழையபாடல்களை ஒலிபரப்பி, சைக்கிள் கான்டிலில் இருந்து பின்பக்கமாக தொடர்ந்து இரவு பகலாய் மூன்று நாட்கள் சைக்கிள் ஓட்டி ஒரு சாதனை படைத்தார். அதைப் பார்த்துத்தான் நானும் பழகி வைத்திருந்தேன்.


தைமாதத்தில் தைப்பொங்கல் கொண்டாடப் படுவதுபோல சித்திரை மாதத்தில் தமிழர் வருடப்பிறப்பைக் கொண்டாடுவர். தமிழர்களின் வருடம் பிறப்பது தைமாதத்திலா அல்லது சித்திரை மாதத்திலா என்பதில் ஆங்காங்கே பட்டிமன்றங்கள் நடத்தி சர்ச்சைகள் எழுந்தாலும், பொதுவாக தமிழர்களில் அனேகமானோர் இந்து க்களாக இருந்ததால், சித்திரை மாதத்தையே வருடப்பிறப்பாக கொண்டாடினர். புத்தாடை உடுத்து, கோயிலுக்கும், உறவினர் வீடுகளுக்கும் சென்றுவருவர். போர்த்தேங்காய் அடிப்பது இந்நாளில் விசேடமான விளையாட்டு. இலங்கை அரசால் வெளியிடப்பட்ட பழைய நாட்காட்டிகளை அவதானித்தால் சில உண்மைகளைப் புரிந்த கொள்ளமுடியம். கொழும்பில் உள்ள பழம் பெரும் புத்தக விற்பனை நிலையமான மக்கலம் புத்தகசாலைக்கு கணக்குப் பரிசோதனை காரணமாக ஒருமுறை சென்றபோது அங்கே பழைய உலகப்படங்களையும், நாட்காட்டி களையும் பார்க்க முடிந்தது. அறுபதுகளில் வெளிவந்த நாட்காட்டிகளில் தமிழ் சிங்கள புதுவருடம் என்றும், எழுபதுகளில் வெளிவந்த நாட்காட்டிகளில் சிங்கள தமிழ் புதுவருடம் என்றும், எண்பதுகளில் வெளிவந்த நாட்காட்டிகளில் சிங்கள புதுவருடம் என்றும் திட்டமிடப்பட்ட முறையில் மாற்றம் பெற்று தமிழர்களின் கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களில் இருந்து அவர்கள் எப்படி ஓரங்கட்டப்பட்டார்கள் என்பதை இந்த நாட்காட்டிகளின் மாற்றங்களில் இருந்தே என்னால் அவதானிக்க முடிந்தது. வாரஇறுதி நாட்களில் நான் தமிழ் கற்பிப்பதுண்டு. சமீபத்தில் தமிழர் கொண்டாடும் திருநாட்களைப் பற்றி அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தேன். அடுத்தவாரம் பாடம் தொடங்குமுன் அவர்களிடம் தமிழர் திருநாட்களைப் பற்றிக் கேட்டேன். ‘தைமாதத்தில் என்ன திருநாள் வரும்?’ என்று ஒரு மாணவனிடம் கேட்க, ‘தைப்பொங்கல்’ என்று பதில் சொன்னார். ‘சித்திரையில் என்னவரும்?’ என்று அடுத்த மாணவனிடம் கேட்டேன், ‘வெய்யில் சிந்துவதால் வெக்கை வரும்!’ என்றாரே பார்க்கலாம்! சிலப்பதிகாரம் தெரியாவிட்டாலும் சிவப்பதிகாரம் தெரிந்திருக்கிறது நல்ல தமிழ் சினிமாவும் தமிழ் வளர்க்கிறது என்பதில் ஐயமேயில்லை!


எனது தந்தை பிறந்த மண் காங்கேயன்துறையின் தெற்குப் பகுதியில் உள்ள மாவிட்டபுரம் என்பதில் எவ்வளவு பெருமைப்பட்டேனோ அதே அளவு பெருமை எனது தாயார் பிறந்த மண்ணான சண்டிலிபாய்மீதும் எனக்கிருந்தது. பாடசாலை விடுமுறையின்போது மட்டுமல்ல, அங்கே நடக்கும் எல்லா விசேடங்களுக்கும், வாரஇறுதியாக இருந்தால் அதில் கலந்து கொள்வதுண்டு. குறிப்பாக சித்திரை வருடப்பிறப்பன்று பக்கத்து ஊரான மானிப்பாயில் உள்ள மருதடிப் பிள்ளையார் கோயிலில் தேர்த்திருவிழா நடக்கும். ஆடி அமாவாசைக்கு முன்தினம் நடக்கும் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழாபோல இதுவும் அப்பகுதியில் பிரசித்தி பெற்றது. 


சண்டிலிப்பாய்  - Sandilipaaiகாங்கேயன்துறை கடலும் கடல் சார்ந்த நெய்தல் நிலமும் எப்படிப் பெருமை பெற்றதோ, அதேபோல சண்டிலிப்பாயின் வயலும் வயல்சார்ந்த மருதநிலமும் பெருமை பெற்றிருந்தது. இரண்டு இடங்களுமே வேறுபட்ட வித்தியாசமான சூழ்நிலையில் அமைந்திருந்ததால் அந்த சூழ்நிலை மாற்றங்கள் சிறுவயதில் எனக்குள் நிறையவே வியப்பை ஏற்படுத்தியதுண்டு.

காங்கேயன் துறை கடற்கரையில், வெண்மணற்பரப்பில் மணிக்கணக்காக உட்கார்ந்து எப்படி இயற்கையை ரசித்தேனோ, அதே போல சண்டிலிப்பாய் வயல் வெளிக்கரையின் வரம்பில் உட்கார்ந்து, பூவல் என்று சொல்கின்ற தெப்பக்குளத்தையும், வழுக்கை யாற்றையும், பச்சைப்பசேலென்ற வயல்வெளிகளையும், அவற்றையும் கடந்து கழனி எல்லையில் வானத்து முகிலோடு தொட்டு விளையாடும், கம்பீரமான கற்பகதருவாம், பனைமரங்களையும் பார்த்து இயற்கை அன்னை இவ்வளவு அழகாகவா இருக்கிறாள் என்ற வியப்போடு நிறையவே ரசித்திருக்கிறேன்.


நீர் ஆர் செறுவில் நெய்தலொடு நீடிய
நேர் இதழ் ஆம்பல் நிரை இதழ் கொண்மார்
சீர் ஆர் சேயிழை ஒலிப்ப, ஓடும்
ஓரை மகளிர் ஓதை வெரீஇ எழுந்து
ஆரல் ஆர்கை அம் சிறைத் தொழுதி
உயர்ந்த பொங்கர் உயர் மரம் ஏறி..நீர் நிறைந்த கழனியில் வளர்ந்த ஒத்த இதழை உடைய நெய்தல் மலருடன் ஆம்பலின் மலர்களையும் பறிப்பதற்காக சிலம்பு, கொலுசு, மெட்டி போன்றவை ஒலிக்க ஓடும் மகளிரின் அணிசெய்யும் ஆரவாரத்திற்கு அஞ்சி எழுந்து, ஆரல் மீனை உண்ணும் அழகிய சிறகை உடைய பறவைக்கூட்டம் உயர்ந்த மரத்தின் கொம்பில் போய் அமருமாம் என்ற கருத்துப்பட கலித்தொகையில் குறிப்பிட்டதுபோன்ற காட்சிகளை சண்டிலிப்பாய் வயல்வெளிகளிலும் காணமுடியும்.

 மெட்டி ஒலியை சின்னத்திரையில் பார்த்திருக்கிறேனே தவிர, அந்த மண்ணில் அடிக்கடி கேட்ட ஞாபகமில்லை. அதற்குப் பதிலாக ஜில், ஜில் என்ற தாளத்தோடு வரும் வண்டில்மாட்டுச் சலங்கை ஒலியைக் கேட்டிருக்கிறேன். அந்த சத்தத்திற்கு அஞ்சிய பறவைகள் எழுந்து கூட்டமாகப் பறப்பதையும், திரும்பவும் வானத்தில் வட்டமடித்து, வந்து அமர்ந்து தானியங்களை உண்பதையும் பாரத்திருக்கிறேன்.

 மழைகாலங்களில் சுண்ணாகத்தில் இருந்து கந்தரோடை வீதி வழியாக மாகியப்பிட்டி நோக்கி பேருந்தில் செல்லும்போது, இயற்கையின் அழகை ரசிப்பதற்காகவே யன்னல் கரையில் உட்கார்ந்து செல்வதுண்டு.நெய்தலும் மருதமும் - 10


வழுக்கையாற்றை கந்தரோடைவீதி கடந்து செல்லும் இடத்தில் ஒரு அழகான குளமும், அதன் கரையில் ஒரு நிழல்தரும் மருதமரமும் உண்டு. அந்த மரத்தின் நிழலில் குடும்பமாக நின்று துணி துவைக்கும் உழைப்பாளிகள் என் கவனத்தைக் கவருவதுண்டு. அதேபோல நீண்டு பரந்த வயல்வெளியில் பாடுபட்டு உழைக்கும் உழவர்களையும் வியர்வை சிந்தி உழைக்கும் அந்த உழைப்பின் உயர்வையும் கண்டு,


நெற்றி வியர்வை சிந்தினோமே முத்து முத்தாக - அது
நெல் மணியாய் விளைந்திருக்கு முத்து முத்தாக..என்ற பாடல் வரிகளுக்கேற்படி, அவர்கள் வயல்வெளியில் சிந்திய வியர்வைத் துளிகள் முத்துமுத்தாய், நெற்கதிர்களாய் விளைந்திருப்பதையும், ஏர்முனைக்கு நேர் இங்கே எதுவுமேயில்லை என்ற உழைப்பின் பெருமையில் மார்தட்டி நிற்கும் அவர்களின், புன்னகைபூத்த முகங்களைப் பார்த்து நானே பலதடவை பெருமைப் பட்டிருக்கிறேன்.
புராதனகாலத்து கோயில்களோடு கூடிய அந்த மருதநிலத்தின் இயற்கை அழகை சொல்லி, விளங்க வைக்க முடியாதது. பார்வை விரியும்போது, வயல்வெளியில் ஆங்காங்கே பூத்திருக்கும் வெள்ளைக் கொக்குகள் கண்ணைக் கவர்ந்திழுக்கும்.


அலையலையாய் தொட்டுத் தழுவும் இதமான தென்றல்காற்றோடு நெற்கதிர்களோ கொஞ்சிக் குலாவிக் கொண்டிருக்கும். ‘ஆகா இவன் கொஞ்சம்கூட நாகரிகம் இல்லாமல் எங்களை இப்படி வேடிக்கை பார்க்கிறானே’ என்று, பருவப்பெண்களின் வெட்கத்தோடு நெற்பயிர்கள் நாணித் தலைகுனியும் காட்சிகள் அந்த மருதநிலத்தின் சொத்துக்கள். பச்சைப்பசேலென்ற ஆடைகட்டி நிற்கும் அந்த வயல் வெளிகள், பார்த்தவர் மனதைவிட்டு என்றுமே அகலாதவை! மாடுகட்டிப் போரடித்தால் மாளாது சீமை என்று ராக்டர் ஓட்டிப்போரடிக்கும் காட்சிகள் அங்கே நிறைய உண்டு!

காங்கேசந்தறை மண் வடற்கே மணற்தரையாயும், கிழக்கு, தெற்கு பகுதிகள் செம்பாட்டு மண்ணாயும், மேற்குப்பகுதி சுண்ணக்கல் பிரதேசமாயுமிருக்க, சண்டிலிப்பாய் வடமேற்குப்பகுதி தோட்டம் செய்வதற்கு உகந்த செம்பாட்டுமண்ணாகவும், கிழக்குப்பகுதி வயல் செய்வதற்கு ஏற்ற சிறந்த விவசாய நிலமாயும் இருக்கிறது. வடக்கே பனாக்கைக் குளத்திலிருந்து வரும் வழுக்கையாறு அயற்கிராமமான அளவெட்டியைக் கடந்து தெற்கு நோக்கி அழகுநடை நடந்து சண்டிலிப்பாயின் வயல் வெளிகளைக் கடந்து ஜந்துகண் மதகையும் தாண்டி கட்டுடைப்பக்கம் சென்று கல்லுண்டாய் வழியாக அராலிக் கடலில் சங்கமமாகிறது.


புள் இமிழ் அகல்வயல் ஒலி செந்நெல் இடைப்பூத்த
முள் அரைத் தாமரை முழுமுதல் சாய்த்து, அதன்
வள் இதழ் உறநீடி, வயங்கிய ஒரு கதிர்…பறவைகளின் ஒலி கேட்கின்ற அகன்ற அந்த வயலில் ஒலிக்கின்ற செந்நெல்லிடை மலர்ந்த முட்களை உடைய தாமரைப்பூ, பூவலில் மலர்ந்து மெல்லத் தலைசாய்த்திருக்கும் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. அருகே உள்ள வயல்வரம்பிலே உட்கார்ந்து நேரம்போவதே தெரியாமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம். சேற்றிலேதான் செந்தாமரை மலர்கிறது, அதற்காக அந்த அழகை இல்லை என்று மறுத்துவிடமுடியுமா? தாமரைக் கொடியில் சிக்கிவிடுவோமோ என்ற பயத்தால் பெரியவர்களின் துணையில்லாமல் எங்களைப் பூவலில் இறங்க விடமாட்டார்கள்.


அங்கண் அகல் வயல் ஆர் பெயற் கலித்த
வண்தோட்டு நெல்லின் வருகதிர் வணங்க,

அழகாகத் தலைசாய்த்து காற்றோடு இசைபாடும் நெல் மணிக் கதிர்களையும், வயல் வெளிகளையும், அவற்றையும் கடந்து சோலைபோல் வளர்ந்து நிழல்தரும் மரங்களையும் நினைத்துப் பார்க்கும்போது அவை நக்கீரரின் இந்த நெடுநல்வாடைப் பாடல் வரிகளைத்தான் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தும். மறக்முடியாத அந்த மருதநிலத்pன் நினைவுகள் இன்னமும் என்நெஞ்சில் ஈரமாகவே இருக்கின்றன.


சண்டிலிப்பாயில் உள்ள எறும்புகளைக் கண்டால் எனக்கு ஒரே பயம். சின்ன வயதிலேயே அவை என்னை ஒரேயடியாய்ப் பயப்படுத்தி வைத்திருந்தன. காங்கேயன்துறையில் உள்ள எறும்புகள் கட்டெறும்பு, சிற்றெறும்பு, மரைஎறும்பு என்று எல்லாமே கறுப்பு நிறத்தில் இருந்தன. இதில் மெல்லிய கொஞ்சம் நீளமான உடம்பைக் கொண்ட மரைஎறும்பு மட்டும்தான் கடிக்குமோ அல்லது கூரானவாலால் குத்துமோ தெரியாது, ஆனால் ரொம்பவலிக்கும். சண்டிலிப்பாய் எறும்புகளோ சிகப்பு நிறத்தில் இருந்தன. காங்கேயன்துறையில் காணமுடியாத முசுறு என்று சொல்லப்படுகிற ஒருவகை சிகப்புநிற எறும்பை சண்டிலிப்பாயில்தான் காணடேன். நெருப்பெறும்பு என்று ஒருவகை சிகப்புஎறும்பு, தப்பித்தவறி அவர்களின் பாதையில் கால் வைத்தால் கூட்டமாய் கடித்துக் குதறிவிடும். கடியின் வேதனை தாங்காமல் காலைப்போட்டு உதறியடித்து, எங்களை அறியாமலே மற்றவர்களுக்கு முன்னால் நடனமாட வைத்துவிடும். ஒரு முறை அந்த அனுபவம் எனக்குக் கிடைத்தது. எனது தாயார் முன்வீட்டு அம்மம்மாவோடு பேசிக்கொண்டு நின்றபோது நானும் அவருக்காக அருகே காத்திருந்தேன். திடீரென செருப்பிற்கு மேலால் கடிஎறும்புகள் ஏறி என் பாதத்தைப் பதம் பார்க்கத் தொடங்கி விட்டன. என்னை அறியாமலே கடியின் வேதனையில் நான் துள்ளிக் குதித்து காலை உதறியபோது, முன் வீட்டு வேலி ‘க்ளுக்’ கென்று சிரித்தது. அந்தச் சிரிப்பின் அர்த்தம் புரிந்ததால் எறும்புக்கடியின் வேதனையையும் தாங்கிக் கொண்டு பொறுமையாக, எதுவமே நடக்காததுபோல அந்தப் பக்கம் திரும்பிப் பார்த்தேன். ஏனென்றால் எறும்புக் கடியைவிட அந்த இளமைச் சிரிப்பு என்னை கவர்ந்து இழுத்தது.

முத்தில் மோகனப் பல்லெடுத்து
முழுமதி யென்ன முகமெடுத்து
கத்தும் குயிலின் குரலெடுத்த – அந்த
சித்திரைப் பாவை ஏன்சிரித்தாள்?கிடுக வேலிக்குப் பின்னால், வானம் சற்றேமறைத்த நிலவுபோல தெரிந்த அந்த சித்திரப்பாவை ஏன் சிரித்தாள் என்று எனக்கே தெரியவில்லை. ஆனால் அந்த அழகான முகத்தைப் பாரத்ததும், நடேஸ்வராக் கல்லூரியில் படித்த எனது கல்லூரித் தோழன் இராஜேஸ்வரன் (அமரர் கவிஞர் விஜேந்திரன்) எனது  குறிப்புப் புத்தகத்தில் என்றோ எழுதிவிட்ட இந்த நான்கு வரிகளும் தான் எனக்கு உடனே ஞாபகம் வந்தன. சின்ன வயதில் எப்படி இவ்வளவு திறமை அவரிடம் வந்தது என்று வியந்தபோது, ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளையின் பேரன்தான் அவர் என்பது எனக்குத் தெரியவந்தது. அவரது மூத்த சகோதரியும், அமரருமான விஜயாவின் பெயரையும், நெருங்கிய நண்பன் மகேந்திரனின் பெயரையும் எடுத்தே விஜேந்திரன் என்று தனது புனைப்பெயரை வைத்துக் கொண்டார். பிற்காலத்தில் தமிழக சினிமாவில் புகுந்து, பிரபல நடிகர்களுடன் இணைந்து நடித்து தனது நடிப்பாற்றலை தமிழ் உலகெல்லாம் அறியவைத்தவர். தமிழ் சினிமா உலகை எனக்கு அறிமுகம் செய்து வைத்ததும் இவர்தான்.

ஒரு முறை, இவரது பாட்டன் நாடக கொட்டகைக்கு நாடகம் பார்க்கச் சென்றபோது, நிலத்திலே விரித்திருந்த பாயில் இருந்து நாடகம் பார்பதற்கு ஐந்து ரூபா என்றும், கதிரைக்கு பத்து ரூபா என்றும் வாசலில் எழுதிப் போட்டிருந்தார்களாம். ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை பத்துரூபாவிற்கு சீட்டு எடுத்து நாடகம் பார்த்தாராம். போகும்போது கதிரையையும் தூக்கிக் கொண்டு போனாராம். பதட்டமடைந்த நாடகக் கொட்டகை உரிமையாளர் ‘ஏன் கதிரையைக் கொண்டு போகிறீர்கள்?’; என்று கேட்டபோது, கதிரைக்கு பத்து ருபா என்றுதானே போட்டிருந்தீர்கள், அதுதான் கொண்டு போகிறேன் என்று வேடிக்கையாக அவர் செய்த ஒரு சம்பவத்தைப் பற்றி ஊரிலே சொல்லிக் கொள்ளுவார்கள்.


ஆத்தா ஆடு வளர்த்தா, கோழி வளர்த்தா என்றதுபோல அனேகமாக இங்கே ஒவ்வொரு வீட்டிலும் கோழி, ஆடு, மாடு, நாய் என்று எல்லாமே வளர்த்தார்கள். சிலவீடுகளில் கள்ளிப் பலகைகளில் கூடமைத்து புறாக்களைக்கூட வளர்த்தார்கள். கர்ணப்புறா என்று ஒன்று, அதை இரண்டு மூன்று தடவை சுற்றிப்போட்டு பறக்கவிட்டால் வானத்திலே கரணமடிக்கும். பார்ப்பதற்கு வேடிக்கையாக இருக்கும். கோழிமுட்டை எடுத்துக் குஞ்சு பொரிக்க வைப்பார்கள். பேட்டுக்கோழி அடைகாத்து கோழிக்குஞ்சுகள் பொரித்ததும் வெண்பஞ்சுபோல அவை அழகாக இருக்கும். பருந்து, வல்லூறு போன்ற பறவைகளிடம் இருந்து குஞ்சுகளைக் காப்பாற்ற, சிகப்பு நிறத்தைக்கண்டால் அவை கிட்டவரமாட்டாது என்ற நம்பிக்கையில் அவற்றிற்கு குங்குமத்தைக் கரைத்து பூசிவிடுவார்கள். சில சமயங்களில் அண்டங்காக்காகூடக் கோழிக்குஞ்சுகளைத் தூக்கிச் சென்றுவிடும்.


அனேகமானவர்களுக்கு விவசாயத்தோடு தொடர்பிருந்ததால் ஆடு, மாடுகளும் வளர்த்தார்கள். சில வீடுகளில் வண்டில், மாடுகள் இருந்தன. வண்டில்மாடு வைத்திருப்பது என்பது அந்தக் காலத்தில் பென்ஸ், பிஎம்டபிள்யூ வைத்திருப்பது போல, சவாரி வண்டில் ஒற்றைமாடென்றால் ஜகுவர்போல. புராதனகாலத்துக் கோயில்கள், மாரிகாலத்தில் தாமரைப் பூக்களால் நிறைந்திருந்த பூவல், மாட்டுத்தொழுவம், மாட்டுத்தொட்டில், புகையிலை பதப்படுத்தும் போறணை, அழகான வேலைப் பாடுகளுடன்கூடிய வீட்டுக்கதவுகள், சித்திரவேலைப்பாடோடு கூடிய மரப்பெட்டகங்கள், இரவிலே ஒன்றின்பின் ஒன்றாக தொடர்வண்டிபோல ஓடிவிளையாடும் மூஞ்சீறுகள், அந்த நிசப்தத்தை உடைத்துக் கொண்டு, அதிகாலையில் ‘தொம்’ என்ற சத்தத்தோடு தரைதொட்டு தூக்கத்தைக் கலைக்கும் விளாம்பழங்கள் என்று எல்லாமே என்னை வியக்கவைத்தன.


மரங்களைப் பொறுத்தவரை பனைமரம், தென்னைமரம், விளாமரம், மாமரம், ஆலமரம், அரசமரம், புளியமரம், இலுப்பைமரம் போன்றவை அதிகமாக இருந்தன. வீட்டு காணிகளில் கிணற்று நீரை நம்பி, தென்னைமரம், வாழைமரம், கமுகமரம,; பலாமரம், எலுமிச்சைமரம், கொய்யாமரம் போன்றவை அனேகமாகக் காணப்பட்டன. தென்னைமரக் குருத்துக்களைப் பாதிக்கும் ஒருவகைக் கருவண்டுகளின் தாக்கத்தைத் தவிர்ப்பதற்காக தென்னம் பாத்திகளில் கற்பூரவெள்ளியை நட்டிருந்தார்கள். ஒன்றின் அழிவில் இருந்து அதைப் பாதுகாக்க மாற்றுச் சக்திகளும் ஏதோ ஒரு வடிவில் தயாராகவே இருந்தன. (தொடரும்)

மொழி அழிந்தால் எம் இனம் என்னவாகும்..?

மொழி அழிந்தால் எம் இனம் என்னவாகும்..?

 (குரு அரவிந்தன்)

மிழ் மக்களாகிய நாம் எமது கூடுதலான நேரத்தை அனேகமாக கல்வி கற்பதிலேயே தாய் மண்ணில் செலவிட்டோம். அது ஒன்றுதான் அழியாத சொத்து என்று நினைத்தோம். எங்கு சென்றாலும் எடுத்துச் செல்லக்கூடிய சொத்தாகவும் அதுவே இருந்தது. ஊரிலே எந்த வீட்டுப் பிள்ளைகளைப் பார்த்தாலும் ரியூசன் வகுப்பு என்று சொல்லிக் கொண்டு மேலதிக கல்விக்காக ஊரூராகச் சயிக்கிளில் அலைந்து திரிந்தது கல்வி கற்றது ஒரு காலம். அந்த இனிய நினைவுகளை மறுக்கவோ மறைக்கவோ முடியாது. உள்நாட்டு போர்ச் சூழல் காரணமாக, சூழ்நிலையின் தாக்கத்தால் இன்று எமது பிள்ளைகளின் கல்வி அறிவு பாதிக்கப்பட்டு, இந்த தலைமுறை மட்டுமல்ல அடுத்த தலை முறையும் கல்வியறிவற்றவர்களாக மாற்றப்பட்டு விட்டார்கள். அமைதியாக இருந்து படிப்பதற்கு ஏற்ற சூழ்நிலை அங்கே இன்னும் உருவாக்கப்படவில்லை. இது திட்டமிட்ட செயலா, இல்லையா என்பது தெரியாது. எது எப்படி இருந்தாலும், ஒரு இனம் தொடர்ந்தும் கல்வியறிவு அற்ற இனமாக இருக்குமானால் அது சுயமாகச் சிந்திக்கும் தன்மையையும் இழந்துவிடும். காலப்போக்கில் அடிமை இனமாக மாறி ஒரு காலக்கட்டத்தில் அந்த இனமே அழிந்துவிடும். ஆனால் இப்படியான ஒரு சூழ்நிலையில் இருந்து எழுந்து, நிமிர்ந்து நிற்க, அங்கே உள்ள எமது உடன் பிறப்புகளுக்கு இன்னும் சிறிது காலமெடுக்கலாம்.

சமீபத்தில் வடஅமெரிக்காவில் இருக்கும் அலாஸ்காவில் கொப்பர் ஆற்றுச் சமவெளியில் (Copper River Valley) இருந்த எஜாக் (Eyak) என்ற ஓரினம் மெல்ல மெல்ல அழிந்து போய்விட்டது. கடைசியாக வாழ்ந்த மாரி ஸ்மித் ஜோன்ஸ் (Marie Smith Jones) என்ற பெண்மணி தன் இனத்தின் கவலையீனத்தால் பாரம்பரியமான பழமை வாய்ந்த தங்கள் இனம் அழிந்து விட்டதே என்ற ஏக்கப் பெருமூச்சோடுதான் தன் கடைசி மூச்சை விட்டார். தன் கடைசிக் காலத்தைப் புரிந்து கொண்ட அவர் தனது மொழியை எப்படிப் பேசவேண்டும், எப்படி எழுதவேண்டும் என்ற குறிப்பை ஒலி, ஒளிப்பதிவு மூலம் முடிந்தவரை விளக்கம் கொடுத்து பதிவு செய்துவிட்டே மரணமானார்.

அடுத்த தலைமுறையினர் தங்கள் மொழியை மறந்ததால், தொன்றுதொட்டு வாழ்ந்த அந்த இனமும் இன்று அழிந்து விட்டது. அழிக்கவே முடியாது என்ற இறுமாப்போடு பல்லாயிரக் கணக்கான மக்களால் தொன்று தொட்டுப் பேசப்பட்ட மொழிக்கு இன்று என்ன நடந்தது என்று சிந்தித்துப் பாருங்கள். எங்கள் கண்முன்னால் நடந்த இத்தகைய சூழ்நிலையில் இருந்து நாம் எப்படி வெளிவரலாம்.

போர்ச்சூழ்நிலையை அடுத்து, தமிழர்கள் கொல்லப் படும்போதெல்லாம் எங்கள் இனம் தாய்மண்ணில் அழிந்து போகிறதே என்று நாங்கள் மனம்நொந்து போகின்றோம். ஆனால் புலம் பெயர்ந்த மண்ணில் கொல்லப்படாமலே எங்கள் இனம் அழிந்து போகிறது என்பதை யாரும் அவதானித்தாகத் தெரியவில்லை. சில பெற்றோர்களின் அசட்டையீனத்தாலோ, அல்லது சுயநலம் கருதியோ தமிழ் பிள்ளைகள் தமிழ் மொழி கற்பதைப் புறக்கணிக்கிறார்கள். அதனால் அடுத்த தலை முறையினர் தமிழ் மொழி அறிவற்றவர்களாக மாற்றப்படுகின்றார்கள். அதனால் தமிழர் என்ற இனத்தில் இருந்து தாமாகவே விலகிக் கொள்கிறார்கள்.  புலம் பெயர்ந்த மண்ணில் இப்படியான நிலை தொடர்ந்தும் நீடித்தால் ஒரு காலகட்டத்தில் எம்மினம் இந்த மண்ணிலே முகவரி; அற்ற ஓரினமாக மாறிவிடலாம்.

புலம்பெயர்ந்த மண்ணில் எமக்குக் கிடைத்த கல்வி கற்கும் வசதிகளைக்கூட நாம் அலட்சியப்படுத்த முற்படுகின்றோம். குறிப்பாக பல்லின கலாச்சார நாடாகிய கனடாவில் சர்வதேச மொழித்திட்டத்தின் கீழ் தாய் மொழி கற்பதற்கான வசதிகள் ரொறன்ரோ கல்விச்சபை போன்ற சில கல்விச் சபைகளால் செய்து கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அனேகமான பெற்றோர்கள் இந்த வசதிகளைப் பயன் படுத்திக் கொள்வதில்லை. சின்ன வயதிலே எது நல்லது, எது கெட்டது என்பதைத் தாமாக விளங்கிக் கொள்ளும் பக்குவம் பிள்ளைகளுக்கு இருப்பதில்லை. பெற்றோர்கள் தான் பிள்ளைகளின் விடையத்தில் அதைத் தீர்மானிக்க வேண்டும். கிழமை நாட்களில் மாலை நேரங்களிலும், வார இறுதி நாட்களில் காலையிலும் தமிழ் வகுப்புகள் உங்களுக்கு அருகே இருக்கும் பாடசாலைகளில் நடைபெறுகின்றன. தமிழ் பிள்ளைகளாகத் தங்களை ஏன் வளர்க்கவில்லை என்ற கேள்வியை உங்கள் பிள்ளைகள் எதிர்காலத்தில் உங்களைப் பார்த்துக் கேட்பதற்குச் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்காதீர்கள். எங்கள் இனத்திற்கும், எங்கள் மொழிக்கும் செய்யும் கடமையாக எண்ணிச் செயற்படுங்கள். மொழி அழிந்தால் நம் இனம் அழிந்து விடும் என்பதை நினைவில் கொண்டு, முயற்சி திருவினையாக்கும் என்ற நம்பிக்கையோடு நாங்கள் செயற்படுவோம்.