Tuesday, December 6, 2011

சினிமா - பாட்டுப் பாடவா?

பாட்டுப் பாடவா?

(குரு அரவிந்தன்)

மிழ் சினிமாவைப் பொறுத்த வரையில் எந்தப் படமும் திரைக்கு வருமுன் அந்தப் படத்தின் பாடல்களே அப்படம் அதிக நாள் ஓடுமா இல்லையா என்பதை ஓரளவு தீர்மானிக்கின்றன. பாட்டை வைத்துக் கொண்டே படம் எப்படி இருக்கும் என்று தீர்மானித்த காலம் போய், இப்போதெல்லாம் பாடல் காட்சியை வைத்துத் தீர்மானிக்கத் தொடங்கி விட்டனர். பழம் பெரும் இசையமைப்பாளர்களைக் கவனித்தால் அவர்கள் எவ்வளவு தூரம் ஒரு பாட்டிற்கு இசையமைப்பதற்கு தங்கள் நேரத்தையும், காலத்தையும் செலவிட்டார்கள் என்பது தெரியவரும். அந்த நாட்களில் அவர்கள் மிகவும் குறைந்த வசதிகளோடு மிகவும் கஸ்டப்பட்டு இசை அமைத்ததாலோ என்னவே அந்தப் பாடல்கள் பலரின் மனதிலும் இப்பொழுதும் நிலைத்து நிற்கின்றன. சொற்ப வசதிகளே இருந்ததால், இசைக் கருவிகளைப் பாவித்தே அந்த நாட்களில் இசை அமைக்கக்கூடியதாக இருந்தது. ஆனால் இன்று கணனி யுகத்தில் இவை எல்லாம் இலகுவாகச் செய்ய முடிகின்றன. முன்கூட்டியே இசையமைப்பாளர்களால் பதிவு செய்யப்பட்ட இசையை வைத்துக் கொண்டு புதிய பாடல்களுக்கு ஏற்றவாறு இலகுவில் அவற்றைக் கணனி மூலம் கலக்கிக் கொடுக்க  அவர்களால் முடிகின்றது.

பழம் பெரும் நடிகர்களான பி.யூ. சின்னப்பா, எம். கே. தியாகராஜபகவதர், டி.ஆர். மகாலிங்கம், கே.பி. சுந்தராம்பாள் போன்றவர்கள் தாங்களே பாடியும் நடிக்கவும் செய்தார்கள். அந்தக் குறைகள் எல்லாம் தொழில் நுட்பவசதிகள் காரணமாக இப்போ நீக்கப்பட்டுவிட்டன.
சென்ற வருடம் நிறையவே தமிழ் படங்கள் வெளிவந்தாலும், நிறையவே இசையமைப்பாளர்கள் இசை அமைத்திருந்தாலும், மிகச்சிறந்த இசையைத் தந்த இசையமைப்பாளர் விரிசையில் ஏ.ஆர். ரஹ்மான், இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, ஜீ.வீ. பிரகாஷ்குமார், இமாம் போன்றவர்களைக் குறிப்பிடலாம். இவர்களில் இசைஞானி இளையராஜா சுமார் 4235 பாடல்களுக்கு இதுவரை இசை அமைத்திருப்பதாகத் தெரியவருகின்றது. இரண்டாவது இடத்தை (1096) தேவாவும், மூன்றாவது இடத்தை (525) யுவன் சங்கர் ராஜாவும், நாலாவது இடத்தை (491) வித்தியாசாகரும், ஐந்தாவது இடத்தை (470) ஏ.ஆர். ரஹ்மானும் பெற்றிருக்கிறார்கள்.

சில பாடல்கள் எப்பொழுதும் நெஞ்சில் நிறைந்து நிற்பதுண்டு. நல்ல இசை என்பது, கேட்பவரை மனம் லயிக்கச் செய்ய வேண்டும். சென்ற வருடமும் அப்படிச் சில பாடல்கள் நல்ல இசையோடு வெளிவந்தன. ‘மன்னிப்பாயா’ என்ற பாடலை இசையார்வமுள்ள சற்று வயதானவர்களும், ‘ஹோசானா’ என்ற பாடலை இளம் வயதினரும் இன்றுவரை முணுமுணுத்துக் கொண்டிப்பதை மட்டுமல்ல, இங்கே நடக்கும் எந்த இசை நிகழ்ச்சிகளிலும் அந்தப் பாடல்கள் இடம் பெறுவதை நீங்கள் அவதானித்திருக்கலாம். இந்தப் பாடல்களுக்கு இசை அமைத்தவர் வேறுயாருமல்ல, 2009ம் ஆண்டு இரட்டை ஆஸ்கார் விருது பெற்று சாதனை படைத்த ஏ.ஆர். ரஹ்மான்தான். சென்ற வருடம் விண்ணைத்தாண்டீ வருவாயா, ராவணன், எந்திரன் போன்ற படங்களுக்கு இவர் இசையமைத்திருந்தார். விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் பாடல்களின் வெற்றியைத் தொடர்ந்து ராவணன் படத்தில் இடம் பெற்ற பாடலான ‘உசுரே போகுதே’ என்றபாடலும் எந்திரன் படத்தில் வந்த ‘கிளிமாஞ்சாரோ’, ‘இரும்பிலே ஒரு இதயம’; போன்ற பாடல்களும் இரசிகர்களிடையே மிகுந்த ஆதரவைப் பெற்றிருந்தன. இசைக்காக இத்தகைய பாடல்கள் பிரபலமடைந்தாலும், இத்தகைய பாடல்களில் பிறமொழிச் சொற்களின் கலவையால், அல்லது தப்பான உச்சரிப்பால் தமிழின் இனிமை குன்றிப் போயிருப்பதைத் தெளிவாக அவதானிக்க முடிந்தது.

அதிக பாடல்களுக்கு இசை அமைத்த பெருமை இசைஞானி இளையராஜாவையே சேரும். பின்னணி இசைக்காகத் தேசிய விருதைப் பெற்ற பழசிராஜா என்ற மழலயாளப்படத்திற்கும் இவரே இசை அமைத்திருந்தார். நந்தலாலா படத்திற்கு இசை அமைத்தது மட்டுமல்ல, ‘தாலாட்டுக் கேட்க’ என்ற பாடலையும் பாடியிருந்தார்.


2010ம் ஆண்டு தமிழ் சினிமாப் பாடல்களில் அதிக நேயர்கள் விரும்பிய பாடலைக் கொடுத்தவர் யுவன் சங்கர் ராஜா. இவர் இசை அமைத்த பாடலான ‘துளித்துளி’ என்ற பாடல் இடம் பெற்ற ஒலித்தட்டுகளே அதிக விற்பனை படைத்துச் சாதனை படைத்தன அது மட்டுமல்ல இந்திய அளவில் முதல் இருபது பாடல் வரிசையிலும் இந்தப் பாடல் இடம் பெற்றுக் கொண்டது. சென்ற வருடம் அதிக படங்களுக்கு இசை அமைத்த பெருமையும் (15) யுவன் சங்கர் ராஜாவையே சாரும். நான் மகான் அல்ல, பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற படத்துப் பாடல்கள் பலராலும் பேசப்பட்ட பாடல்களாக இருந்தன. இவரது இசையமைப்பில் வெளிவந்த கோவா, சர்வம் போன்ற படங்கள் வெற்றிப்படமாக ஓடாவிட்டாலும் அதன் பாடல்கள் பற்றிப் பரவலாகப் பேசப்பட்டன.

இன்னுமொரு சிறந்த இசையமைப்பாளராக ஜீ.வீ. பிரகாஷ் அங்காடித் தெரு மூலம் பலராலும் பாராட்டப்பட்டிருக்கின்றார். ‘அவள் அப்படி என்றும் அழகில்லை’ என்ற பாடலும், தொடர்ந்து மதராசபட்டினம் படத்தில் வந்த ‘வாம்மா துரையம்மா’, ‘பூக்கள் பூக்கும்’ போன்ற பாடல்களும் அவருக்குப் புகழ் தேடித்தந்தன.

அடுத்துப் பரவலாகப் பேசப்பட்டவர் இசையமைப்பாளர் இமாம். மைனா படத்தில் ‘மைனா மைனா நெஞ்சுக்குள்ளே’ என்ற பாடல் மூலம் பலரின் இதயத்தைத் தொட்டவர். இவர்களைவிட ஹரிஸ் ஜெயராயும் இசையுலகில் தனக்கென தனி இடம் பிடித்துள்ளார். சுமார் 175 பாடல்களுக்கு இதுவரை இசையமைத்திருக்கின்றார். அதிக பாடல் பாடியவர்களின் வரிசையில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சுமார் 1433 பாடல்களையும், பீ. சுசீலா சுமார் 1392 பாடல்களையும் பாடியிருக்கிறார்கள். அடுத்து ஜானகி சுமார் 1051 பாடல்களைப் பாடியிருக்கின்றார். ஈழத்துப் பாடகி சுமங்கலி இதுவரை சுமார் 9 தமிழ் பாடல்களும், பல தெலுங்குப் பாடல்களும் இதுவரை பாடியிருக்கின்றார். இசையமைப்பில் பெண்களின் பங்கு அதிகம் இல்லாவிட்டாலும் கனடாவில் உருவான படங்களுக்கு இசையமைப்பாளராக அமரர் பவதாரனி மதிவாசன் பணியாற்றினார் என்பது பெண்களுக்குப் பெருமைதரக் கூடியதே.

2 comments:

  1. Hi Aravinthan -mani

    I enjoy reading your write-up, it brings me back my school days. Meanwhile I regret that I am unable to bring this pleasant memories to our next generation.

    ReplyDelete