Tuesday, December 6, 2011

மொழி அழிந்தால் எம் இனம் என்னவாகும்..?

மொழி அழிந்தால் எம் இனம் என்னவாகும்..?

 (குரு அரவிந்தன்)

மிழ் மக்களாகிய நாம் எமது கூடுதலான நேரத்தை அனேகமாக கல்வி கற்பதிலேயே தாய் மண்ணில் செலவிட்டோம். அது ஒன்றுதான் அழியாத சொத்து என்று நினைத்தோம். எங்கு சென்றாலும் எடுத்துச் செல்லக்கூடிய சொத்தாகவும் அதுவே இருந்தது. ஊரிலே எந்த வீட்டுப் பிள்ளைகளைப் பார்த்தாலும் ரியூசன் வகுப்பு என்று சொல்லிக் கொண்டு மேலதிக கல்விக்காக ஊரூராகச் சயிக்கிளில் அலைந்து திரிந்தது கல்வி கற்றது ஒரு காலம். அந்த இனிய நினைவுகளை மறுக்கவோ மறைக்கவோ முடியாது. உள்நாட்டு போர்ச் சூழல் காரணமாக, சூழ்நிலையின் தாக்கத்தால் இன்று எமது பிள்ளைகளின் கல்வி அறிவு பாதிக்கப்பட்டு, இந்த தலைமுறை மட்டுமல்ல அடுத்த தலை முறையும் கல்வியறிவற்றவர்களாக மாற்றப்பட்டு விட்டார்கள். அமைதியாக இருந்து படிப்பதற்கு ஏற்ற சூழ்நிலை அங்கே இன்னும் உருவாக்கப்படவில்லை. இது திட்டமிட்ட செயலா, இல்லையா என்பது தெரியாது. எது எப்படி இருந்தாலும், ஒரு இனம் தொடர்ந்தும் கல்வியறிவு அற்ற இனமாக இருக்குமானால் அது சுயமாகச் சிந்திக்கும் தன்மையையும் இழந்துவிடும். காலப்போக்கில் அடிமை இனமாக மாறி ஒரு காலக்கட்டத்தில் அந்த இனமே அழிந்துவிடும். ஆனால் இப்படியான ஒரு சூழ்நிலையில் இருந்து எழுந்து, நிமிர்ந்து நிற்க, அங்கே உள்ள எமது உடன் பிறப்புகளுக்கு இன்னும் சிறிது காலமெடுக்கலாம்.

சமீபத்தில் வடஅமெரிக்காவில் இருக்கும் அலாஸ்காவில் கொப்பர் ஆற்றுச் சமவெளியில் (Copper River Valley) இருந்த எஜாக் (Eyak) என்ற ஓரினம் மெல்ல மெல்ல அழிந்து போய்விட்டது. கடைசியாக வாழ்ந்த மாரி ஸ்மித் ஜோன்ஸ் (Marie Smith Jones) என்ற பெண்மணி தன் இனத்தின் கவலையீனத்தால் பாரம்பரியமான பழமை வாய்ந்த தங்கள் இனம் அழிந்து விட்டதே என்ற ஏக்கப் பெருமூச்சோடுதான் தன் கடைசி மூச்சை விட்டார். தன் கடைசிக் காலத்தைப் புரிந்து கொண்ட அவர் தனது மொழியை எப்படிப் பேசவேண்டும், எப்படி எழுதவேண்டும் என்ற குறிப்பை ஒலி, ஒளிப்பதிவு மூலம் முடிந்தவரை விளக்கம் கொடுத்து பதிவு செய்துவிட்டே மரணமானார்.

அடுத்த தலைமுறையினர் தங்கள் மொழியை மறந்ததால், தொன்றுதொட்டு வாழ்ந்த அந்த இனமும் இன்று அழிந்து விட்டது. அழிக்கவே முடியாது என்ற இறுமாப்போடு பல்லாயிரக் கணக்கான மக்களால் தொன்று தொட்டுப் பேசப்பட்ட மொழிக்கு இன்று என்ன நடந்தது என்று சிந்தித்துப் பாருங்கள். எங்கள் கண்முன்னால் நடந்த இத்தகைய சூழ்நிலையில் இருந்து நாம் எப்படி வெளிவரலாம்.

போர்ச்சூழ்நிலையை அடுத்து, தமிழர்கள் கொல்லப் படும்போதெல்லாம் எங்கள் இனம் தாய்மண்ணில் அழிந்து போகிறதே என்று நாங்கள் மனம்நொந்து போகின்றோம். ஆனால் புலம் பெயர்ந்த மண்ணில் கொல்லப்படாமலே எங்கள் இனம் அழிந்து போகிறது என்பதை யாரும் அவதானித்தாகத் தெரியவில்லை. சில பெற்றோர்களின் அசட்டையீனத்தாலோ, அல்லது சுயநலம் கருதியோ தமிழ் பிள்ளைகள் தமிழ் மொழி கற்பதைப் புறக்கணிக்கிறார்கள். அதனால் அடுத்த தலை முறையினர் தமிழ் மொழி அறிவற்றவர்களாக மாற்றப்படுகின்றார்கள். அதனால் தமிழர் என்ற இனத்தில் இருந்து தாமாகவே விலகிக் கொள்கிறார்கள்.  புலம் பெயர்ந்த மண்ணில் இப்படியான நிலை தொடர்ந்தும் நீடித்தால் ஒரு காலகட்டத்தில் எம்மினம் இந்த மண்ணிலே முகவரி; அற்ற ஓரினமாக மாறிவிடலாம்.

புலம்பெயர்ந்த மண்ணில் எமக்குக் கிடைத்த கல்வி கற்கும் வசதிகளைக்கூட நாம் அலட்சியப்படுத்த முற்படுகின்றோம். குறிப்பாக பல்லின கலாச்சார நாடாகிய கனடாவில் சர்வதேச மொழித்திட்டத்தின் கீழ் தாய் மொழி கற்பதற்கான வசதிகள் ரொறன்ரோ கல்விச்சபை போன்ற சில கல்விச் சபைகளால் செய்து கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அனேகமான பெற்றோர்கள் இந்த வசதிகளைப் பயன் படுத்திக் கொள்வதில்லை. சின்ன வயதிலே எது நல்லது, எது கெட்டது என்பதைத் தாமாக விளங்கிக் கொள்ளும் பக்குவம் பிள்ளைகளுக்கு இருப்பதில்லை. பெற்றோர்கள் தான் பிள்ளைகளின் விடையத்தில் அதைத் தீர்மானிக்க வேண்டும். கிழமை நாட்களில் மாலை நேரங்களிலும், வார இறுதி நாட்களில் காலையிலும் தமிழ் வகுப்புகள் உங்களுக்கு அருகே இருக்கும் பாடசாலைகளில் நடைபெறுகின்றன. தமிழ் பிள்ளைகளாகத் தங்களை ஏன் வளர்க்கவில்லை என்ற கேள்வியை உங்கள் பிள்ளைகள் எதிர்காலத்தில் உங்களைப் பார்த்துக் கேட்பதற்குச் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்காதீர்கள். எங்கள் இனத்திற்கும், எங்கள் மொழிக்கும் செய்யும் கடமையாக எண்ணிச் செயற்படுங்கள். மொழி அழிந்தால் நம் இனம் அழிந்து விடும் என்பதை நினைவில் கொண்டு, முயற்சி திருவினையாக்கும் என்ற நம்பிக்கையோடு நாங்கள் செயற்படுவோம்.

No comments:

Post a Comment