Tuesday, December 6, 2011

University - பார் பார் பல்கலைக்கழகம் பார்..!

பார் பார் பல்கலைக்கழகம் பார்..!

(குரு அரவிந்தன்)

பல்கலைக் கழகத்திற்குள் முதன் முதலாகக் காலடி எடுத்து வைக்கும்போது உங்கள் அனுபவம் எப்படி இருக்கும் என்று உங்களால் ஊகிக்க முடிகிறதா? செப்ரம்பர்மாதத்தில் அனேகமான உயர்வகுப்பு அதாவது 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த அனுபவம் கிடைக்கலாம். உயர்வகுப்பில் கல்வி கற்ற உங்களுக்கு பல்கலைக் கழகம் முற்றிலும் மாறுபட்ட சற்றும் எதிர்பாராத அனுபவத்தைத் தருவதாகவே இருக்கும். ஏனென்றால், வீட்டிலே பாசத்தோடு வீட்டுச் சூழ்நிலையில் வளர்ந்த சிலரால் இலகுவில் திடீரென எதிர்கொள்ளும் அந்த மாற்றங்களை ஏற்றுக் கொள்ள முடியாமலும் போகலாம். புதிய இடத்தில் ஏற்படும் தனிமையான சூழ்நிலை, கற்பிக்கும் முறையில் உள்ள மாற்றங்கள், பாசம் மிக்க குடும்பத்தை, அருமை நண்பர்களைப் பிரிந்திருத்தல் போன்ற சில காரணங்களால் சிலர் விரக்தியும் அடையலாம். ஆங்கில மொழி அறிவும் முக்கியமாக இங்கே கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். ஆங்கில மொழி அறிவு போதாவிட்டால் விரிவுரைகளைப் புரிந்து கொள்வது கடினமானதாக இருக்கும். எனவே இத்தகைய எதிர்மறைக் காரணங்களால் முதல் வருடமே பல்கலைக்கழகப் படிப்பை நிறுத்திவிட்டு வெளியேற வேண்டிய சந்தரப்பமும் சில மாணவர்களுக்கு ஏற்படலாம். உங்கள் எதிர்காலம் எப்படி அமையப்போகிறது என்பதை நீங்கள் எடுத்து வைக்கும் இந்த முதலடிதான் அனேகமாகத் தீர்மானிக்கும். மணப்பெண்ணைப் புகுந்த வீட்டிற்கு அழைத்து வரும்போது, 'மணமகளே மருமகளே வா வா’ என்று வரவேற்புப் பாடல் இசைப்பதுபோல உங்களையும் முதல்நாள் வரவேற்க அங்கே ஒரு கூட்டம் தயாராகக் காத்திருக்கும். அவர்கள் வேறுயாருமல்ல அங்கே கல்விகற்கும் 2ம், 3ம், இறுதி ஆண்டு மாணவர்கள் தான் உங்களுக்காக வாசலில் காத்திருப்பார்கள். வேடிக்கையாக முகத்திலே வர்ணம் பூசி, உங்களைச் சுற்றிவந்து பாட்டுப்பாடி உங்களை நட்போடு வரவேற்று உள்ளே அழைத்துச் செல்வார்கள். அந்தத் தனிமையான சூழ்நிலையைச் சமாளித்து முதல் வருடத்தைத் தாக்குப் பிடித்து விடுவீர்கள் என்றால், எப்படியாவது ஒருநாள் பட்டதாரியாக வெளிவந்து விடலாம் என்ற நம்பிக்கை உங்களுக்குள் ஏற்பட்டு விடும்.

தை மாதத்தில் இருந்தே நீங்கள் பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிக்கத் தொடங்கவேண்டும். முதலில் பல்கலைக்கழக அனுமதிக்கான தகைமைகள் உங்களுக்கு இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். நீங்கள் எடுக்கும் உயர் வகுப்பு பரீட்சையின் சராசரி புள்ளிகளைக் கொண்டே பல்கலைக்கழக அனுமதி வழங்கப்படும். அனுமதி கொடுக்கும் பல்கலைக் கழகங்கள் நீங்கள் எடுக்கும் புள்ளிகளுக்கு ஏற்ப மாறுபடலாம். அதேபோல ஏற்கனவே நீங்கள் படிக்கும் பல்கலைக் கழகத்தில் இருந்து வேறு பல்கலைக் கழகத்திற்கு மாறிச் செல்ல விரும்பினாலும் அதற்காக நீங்கள் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பாடத்திட்ட நிகழ்ச்சிக்கு ஏற்ப விண்ணப்பிக்கும் காலங்களும் மாறுபடலாம். ஆனால் குறிக்கப்பட்ட காலத்திற்குள் பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிக்க வேண்டியது அவசியமாகும். ஒவ்வொரு பல்கலைக் கழகத்திற்குமுரிய இணையத்தளத்திற்கும் சென்றால் எப்படி, எங்கே விண்ணப்பிக்கலாம் என்ற விபரங்கள் அங்கே இருக்கும். உங்களிடம் இருந்து விண்ணப்பப் பத்திரங்கள் கிடைக்கப் பெற்றதும் அவர்கள் உங்கள் விண்ணப்பப் பத்திரம் தங்களுக்குக் கிடைத்திருக்கிறது என்பதை உறுதிப்படுத்துவார்கள்.

உயர்வகுப்பு மாணவர்கள் பல்கலைக் கழக அனுமதிபற்றி அறிந்து கொள்ள வேண்டுமானால் அதற்கான உதவிகள் வழங்கத் தயாராக இருக்கும் குழுவினரோடு (secondary school guidance counselors) தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம். எந்தப் பல்கலைக்கழகத்திற்கு நீங்கள் செல்ல விரும்புகிறீர்களோ அதைப்பற்றிய அடிப்படைத் தகவல்களை eINFO என்ற இணையத்தளத்தில் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். அதேபோல ஒன்ராறியோவிற்கான பல்கலைக் கழக அனுமதி பற்றிய மேலதிக விபரங்களை (Ontario Universities' Application Centre (OUAC) இருந்தும் பெற்றுக் கொள்ளலாம். அல்லது நீங்கள் அனுமதி பெற விரும்பும் பல்கலைக்கழகங்களின் தனித்தனி இணையத் தளங்களில் இருந்தும் விபரங்களைப் பெற்றுக் கொள்ளலாம். எனவே பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் ஒவ்வொரு வருடமும் காலம் தாழ்த்தாது தேவைக்கேற்ப விரைவாகச் செயற்படுவதன் மூலம் கவனமாகவும், இலகுவாகவும் உங்களுக்கு விருப்பமான பல்கலைக்கழக அனுமதி பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

எவ்வளவு மாணவர்கள் விடுதியில் தங்கலாம், அவர்களுக்கு உரிய செயற் திட்டங்கள் என்ன, முதல் வருடம் விடுதியில் தங்குவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன, அங்கே என்னென்ன வசதிகள் கிடைக்கும் போன்ற பல விடையங்களை இணையத்தளம் மூலம் அவர்களுடன் தொடர்பு கொண்டு முற்கூட்டியே அறிந்து கொள்ள முடியும். நீங்கள் விரும்பினால் முன்கூட்டியே பதிவு செய்து அதற்குரிய ஒழுங்குகளைச் செய்வதன் மூலம் நீங்கள் செல்ல இருக்கும் பல்கலைக் கழக்த்திற்கு விஜயம் செய்யமுடியும். அவர்களிடமிருந்து அவர்களைப்பற்றிய விபரங்கள் அடங்கிய கையடக்கப் புத்தகம் ஒன்றையும் நீங்கள் பெற்றுக் கொள்ள முடியும். நேரடியாக அங்கே சென்று பார்ப்பதன் மூலம் அங்கேயுள்ள அந்த சூழ்நிலைக்கு ஏற்ப உங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ள முடியும். அதைவிட முதலாம் வருடத்தில் உங்களோடு படிக்கப்போகும் புதிய நண்பர்களை அங்கே சந்திப்பதன் மூலம் அவர்களோடு பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும். தங்குமிட வசதிகள், வாகன தரிப்பிட வசதிகள், நூல் நிலைய வசதிகள், அங்கே தங்கியிருந்து படிப்பதற்கு ஏற்ற சூழ்நிலை உங்களுக்குச் சாதகமாக அமைந்திருக்கிறதா போன்ற பல விடயங்களை நீங்கள் குறிப்பிட்ட பல்கலைக்கழகத்திற்குச் சுற்றுலா போவதன் மூலம் நேரடியாகவும் அறிந்து கொள்ள முடியும். இதன் மூலம் கடைசி நேரத்தில் உங்களுக்கு ஏற்பட இருக்கும் மனவுளைச்சலை கொஞ்சமாவது தளர்த்திக் கொள்ளமுடியும்.

ஒன்ராறியோவில் பல்கலைக்கழக அனுமதி பெறவிரும்புபவர்கள், ஒன்ராறியோவில் உள்ள சுமார் இருபது சிறந்த பல்கலைக் கழகங்களில் இருந்து தங்கள் தெரிவை மேற்கொள்ளமுடியும். புறூக் பல்கலைக்கழகம், கால்ரன் பல்கலைக்கழகம், கல்வ் பல்கலைக்கழகம், லேக்கெட் பல்கலைக்கழகம் , லோறின்ரன் பல்கலைக்கழகம், மக்மாஸ்டர் பல்கலைக்கழகம், நிப்பிசிங் பல்கலைக்கழகம், , ஓன்ராறியோ கொலிச் ஒவ் ஆட்ஸ் அன்ட் டிசைன் பல்கலைக்கழகம்,  ஒன்ராறியோ இன்சிரியூட் ஒவ் ரெக்னோலஜி, ஒட்டாவா பல்கலைக்கழகம், , குயின்ஸ் பல்கலைக்கழகம், , றைசன் பல்கலைக்கழகம்,  ரொறன்ரோ பல்கலைக்கழகம், ரென்ட் பல்கலைக்கழகம்,  வாட்டலூ பல்கலைக்கழகம்,  வெஸ்ரேன் ஒன்ராறியோ பல்கலைக்கழகம்,  வில்பிரெட் லோறியர் பல்கலைக்கழகம்,  வின்சர் பல்கலைக்கழகம்,  ஜோர்க் பல்கலைக்கழகம் போன்ற பல பல்கலைக் கழகங்கள் ஒன்ராறியோவில் சிறப்பாகச் செயற்படுவது மட்டுமல்ல, மாணவர்களின் தேவைகளையும் அவர்களின் தேவையறிந்து அவ்வப்போது பூர்த்தி செய்கின்றன.

ஒன்ராறியோ பல்கலைக்கழகங்களில் பொதுவாக இலையுதிர் காலத்திற்கான வகுப்புகள் செப்ரம்பர் மாதம் தொடக்கம் டிசம்பர் மாதம் வரை நடைபெறும். பனிக்காலத்திற்கான வகுப்புகள் ஜனவரி மாதம் தொடக்கம் ஏப்ரல் மாதம்வரை நடைபெறும். இளவேனிற்காலத்திற்கான வகுப்புகள் மே மாதம் தொடக்கம் ஆகஸ்ட் மாதம் வரை நடைபெறும். பல்கலைக்கழகத்திற்கு செல்வதானால் அதற்குரிய தகுதிகள் ஒரு மாணவனுக்கு இருந்தாலும் பொருளாதார வசதிகளும் மிகவும் முக்கியமான விடயமாகும். குறிப்பாக பல்கலைக்கழக அனுமதிக்கட்டணம், பாடநெறி கற்பதற்கான கட்டணம், புத்தகங்களுக்கான கட்டணம், வாழ்க்கைச் செலவு, போக்குவரத்துச் செலவு, காப்புறுதி போன்ற செலவுகள் கவனிக்கப்படவேண்டும். இதற்கான பொருளாதார வசதிகள் இல்லாவிட்டால் மாணவர்கள் அரைகுறையாகப் படிப்பை நிறுத்த வேண்டிவரலாம். பல்கலைக்கழக அனுமதி பெற்ற சில மாணவர்களுக்கு மேற்கொண்டு படிப்பதற்குப் போதிய பொருளாதார வசதிகள் இல்லாமற் போகலாம். பெற்றோரின் பொருளாதார உதவியை ஏற்க விரும்பாத மாணவர்களும் இருக்கலாம். அத்தகைய கொள்கையோடு, அல்லது வசதிக் குறைவோடு  இருக்கும் மாணவர்கள் ஓன்ராறியோ மாணவர்களுக்கான உதவித் திட்டத்தின் (The Ontario Student Assistance Program (OSAP) மூலம் தாங்கள் படிப்பதற்குத் தேவையான தற்காலிக கடன் வசதிகளைப் பெற்றோரின் வருமானத்தைப் பொறுத்துப் பெற்றுக் கொள்ள முடியும்.

ஆகவே மாணவர்களே மனவுறுதியோடும், உங்களால் முடியும் என்ற நம்பிக்கையோடும் பல்கலைக்கழகத்திற்குச் செல்லுங்கள். எமது இனம் புலம்பெயர்ந்த மண்ணில் சிறப்பாக வாழவேண்டுமானால் முக்கியமாக நான்கு துறைகளிலாவது மாணவர்கள் உடனடியாகக்கவனம் செலுத்தவேண்டும் என்பதே எனது விருப்பம். குறிப்பாக வர்த்தகம், சட்டத்துறை, அரசியல், இதழியல் சார்ந்த துறைகளில் உயர்கல்வி கற்பதன் மூலம் எமது இனத்தின் விடிவிற்காக இனவுணர்வு உள்ள மாணவர்களால் ஈடுபட முடியும். இத்துறைகளில் பின்தங்கியவர்களாகவே இன்றும் இருக்கின்றோம் என்பதை நாம் நினைவிற் கொண்டு, அத்துறைகளில் எமது இனத்தின் வளர்ச்சிக்காக முழுமனதோடு  செயற்படுவோம்.

No comments:

Post a Comment