Monday, December 24, 2012

Happy New Year - புது வருட வாழ்த்துக்கள்.


 
  
                                             We wish You a Happy New Year


New Year is a time to give thanks for the miracle of salvation, as well as for the many blessings we enjoy.

We hope you can spend this holidays with family and friends, making new and happy memories.

In the spirit of goodwill, we also want to remember that Christmas and New Year is a season of generosity and giving — a time, most especially, to help those in need.


Kuru Aravinthan


Thursday, December 20, 2012

Humen Smuggling - ஆட்கடத்தல்

ஆட்கடத்தல்

குரு அரவிந்தன்

சமீப காலமாக ஆட்கடத்தல் என்ற சொற்தொடர் அடிக்கடி தொடர்பு சாதனங்களால் பாவிக்கப்பட்ட வண்ணமிருக்கின்றன. ஆட்கடத்தல் என்பது சட்டத்திற்கு முரனான செய்கையாகவே கணிக்கப் படுகின்றது. ஆட்கடத்தலில் யார் யாரைக் கடத்துகின்றார்கள் என்பதுதான் முக்கியமான கேள்விக்குறியாக இருக்கின்றது. ஊரிலே அந்த நாட்களில் ஆட்கடத்தல் என்றால் பெற்றோரின் சம்மதமில்லாமல் காதலியைக் காதலன் கடத்திச் செல்வதாகவே இருந்தது. காதலனைக் காதலி கடத்தியதாக நான் இதுவரை கேள்விப்பட்டதில்லை. காதலியின் விருப்பமில்லாமல் இது நடந்தால் அவளைக் கடத்திக் கொண்டு போய்விட்டார்கள் என்று சொல்லப்பட்டது. இருவரும் சம்மதித்து இது நடந்தால் அதை ஓடிப்போய் விட்டார்கள் என்று ஊருக்குள் கதைத்துக் கொள்வார்கள். அதேபோல சிறுவர்களை வைத்துத் தொழில் செய்வதற்காகச் சிறுவர்களையும், பாலியல் தொழிலுக்காகப் பெண்களையும் கடத்துவார்கள். மீன்பிடித் தொழிலுக்காக கரைவலை குடில்களில் கடத்தப்பட்டு அடிமைகளாக்கப்பட்ட இப்படியான அனேக சிறுவர்களைப் பொலிசார் மீட்டெடுத்திருக்கிறார்கள். அதேபோல பெண்களையும் பாலியல் தொழிலுக்காகவும், இரவு விடுதிகளில் நடனமாடுவதற்காகவும் கடத்துவார்கள். அதன் பின் ஒரு காலகட்டத்தில் விடுதலைப் போராட்டத்திற்காக இயக்கங்கள் ஆட்கடத்தலில் ஈடுபட்டதும் யாவரும் அறிந்ததே. அதே போன்ற கடத்தலை அரசும் பலசமயங்களில் செய்தபோது வெள்ளைவான் கடத்தல் என்று குறிப்பிட்டார்கள். ஆனால் இன்று இந்தக் கட்டங்கள் எல்லாவற்றையும் தாண்டி ஆட்கடத்தல் என்பது சர்வதேசரீதியில் ஒரு வியாபாரமாகப் போய்விட்டது.


ஆட்கடத்தலில் தனித்தனியாக ஆட்கடத்துவது, கூட்டமாக ஆட்கடத்துவது என்று பலவிதமான ஆட்கடத்தல் முறைகள் இப்போது நிலவுகின்றன. ஆட்கடத்தலில் ஈடுபடும் சில முகவர்கள் கடவுச்சீட்டை மாற்றியோ அல்லது கள்ளமாக கடவுச்சீட்டை வேறு ஒருவருக்;காகப் பாவித்தோ ஆட்களைக் கடத்திக் கொண்டு வந்தார்கள். தனிப்பட்ட முறையில் ஆட்கடத்தல் செய்யும் போது பெரும்பாலும் விமானங்கள் மூலமே கடத்தல்கள் இடம் பெறுகின்றன. கூட்டமாக ஆட்கடத்தும் போது பெரிய வண்டிகள் அல்லது கப்பல்கள் பாவிக்கப்படுகின்றன. இதற்குத் தேவையான பணமும் கடத்தப்படுபவரிடம் இருந்தே முகவர்களால் அறவிடப்படுகின்றது.  பொதுவாகப் பொருளாதார நோக்கம் கருதியே அனேகமான ஆட்கடத்தல்கள் இடம் பெறுகின்றன.


2008ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின்படி சுமார் 2.5 கோடிமக்கள் 127 வௌ;வேறு நாடுகளில் இருந்து உலகின் வௌ;வேறு 137 நாடுகளுக்கு கடத்தப்பட்டிருந்தார்கள். பொதுவாக இப்படிக் கடத்தப்படுபவர்கள் தங்கள் விருப்பத்தின் பெயரிலேயே போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கும் ஒரு முகவரை நம்பிச் செல்கின்றார்கள். இரு நாடுகளுக்கான எல்லையில் கடத்தப்படும் இவர்கள் வழிமறிக்கப்படுகின்றார்கள். அச்சந்தர்ப்பத்தில் உள்ளே செல்வதற்குப் பல விதமான முயற்சிகளையும் மேற்கொள்கின்றார்கள். பொதுவாக அழைத்து வரும் முகவரின் கடமை அந்த நாட்டு எல்லைக்குள் வந்ததும் முடிந்துவிடும். அதன் பின் கடத்தப்பட்டவர் தானாகவே சென்றடைய வேண்டிய இடத்தைச் சென்றடைகின்றார். இல்லாவிட்டால் தடுப்பு முகாமிற்கு அதிகாரிகளால் அனுப்பப்படுகின்றார்.


1914ம் ஆண்டு 376 இந்திய சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த அகதிகள் காமகதாமாரூ என்ற கப்பலில் ஹங்கங்கில் இருந்து கனடா நோக்கி வந்தனர். ஏப்ரல் 14ம் திகதி புறப்பட்ட அந்தக் கப்பல் ஷங்காய் நகரிலும், யோககாமா நகரிலும் பல சீக்கியர்களை ஏற்றிக்கொண்டு மே 23ம் திகதி வான்கூவரை வந்தடைந்தது. கனடிய அகதிகளுக்கான சட்டதிட்டங்களுக்குள் அவர்கள் அகப்படாததால், அந்தக் கப்பலில் வந்தவர்கள் அகதிகள் அல்ல பணத்திற்காக ஆட்கடத்தல் என்ற காரணம்கூறி அவர்கள் திருப்பி அனுபப்பட்டார்கள். இந்தக் கப்பலில் திரும்பிச் சென்றவர்களில் 20 பேர்வரையில் இந்தியாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மரணமாகினர். இதேபோல மீண்டும் ஒரு முறை 1939ம் ஆண்டு 907 ஜெர்மனிய யூதர்கள் கலிபாக்ஸ் நகரை நோக்கிச் சென்லூயிஸ் என்ற கப்பலில் வந்தபோது அவர்களும் திருப்பி அனுப்பப்பட்டார்கள். அப்படித் திருப்பி அனுப்பப்பட்ட அவர்களில் பலர் பின்நாளில் விஷவாயு மண்டபத்தில் கொல்லப்பட்டதும் ஞாபகம் இருக்கலாம். முகவர்களுக்குப் பணம் கொடுத்து வந்ததால் அவர்களை அகதிகளாக ஏற்றுக் கொள்ள அமெரிக்காவும் கனடாவும் மறுத்து விட்டன. அதன் தாக்கத்தால் 1970ம் ஆண்டு பிற்பகுதியிலும், 1980ம் ஆண்டு முற்பகுதியிலும் பல நாடுகளிலும் இருந்து கனடாவிற்கு வந்த அகதிகள், அகதிக் கோரிக்கைக்குரிய காரணங்களோடு வந்ததால்,  ஏற்றுக் கொள்ளப்பட்டனர். பணம் கொடுத்து ஆட்கடத்தல் மூலம் அவர்கள் வந்தாலும் அகதிகள் என்று நிரூபிக்கப்பட்டதால் பலவேறு நாடுகளில் இருந்து பெருந்தொகையான மக்கள் கனடாவிற்குள் நுழைந்தனர். கனடா ஒரு பல்கலாச்சார நாடாக மாறியதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.


கனடாவிற்கு இப்படித்தான் அகதிகளை ஏற்றிக் கொண்டு 2009ம் ஆண்டு ஓசியன் லேடி என்ற கப்பல் 76 பேருடன் கனடாவிற்கு வந்தது. 2010ம் ஆண்டு சன் சீ என்ற இன்னுமொரு பழைய துரப்பிடித்த கப்பல் 492 பேருடன் கனடாவிற்கு வந்து சேர்ந்ததும் நினைவிருக்கலாம். தாய்லாந்தில் இருந்து வெளிக்கிட்டு பன்னிரண்டு வாரங்கள் ஆழ்கடலில் பயணித்து வான்கூவரை வந்தடைந்த இந்தக் கப்பலில் பெண்களும் குழந்தைகளும் அடங்கியிருந்தனர். சில தொடர்பு சாதனங்கள் இக் கப்பலில் வந்த அகதிகளை  ஆட்கடத்தல் என்று குறிப்பிட்டுப் பெரிது படுத்தியிருந்தன.
அந்தக் கப்பலில் அகதியாக வந்த ஒரு இளம் பெண்மணி குறிப்பிடும்Nபுhது, தாங்கள் பிறந்திலிருந்தே அச்சத்துடன் தான் வாழ்ந்ததாகவும், எப்போது ராணுவத்தினர் வருவார்களோ எப்போது தங்களை சுடுவார்களோ என்ற அச்சம் தங்களுக்குள் இருந்து கொண்டே இருந்தது என்றும் குறிப்பிட்டர். மேலும் அவர் உயிருக்கு மாத்திரம் தாங்கள் பயப்படவில்;லை என்றும் தங்களை பாலியியல் பலாத்காரம் செய்து விடுவார்களோ என்ற அச்சத்தில்தான் அங்குள்ள பெண்கள் எல்லோரும் வாழ்ந்துக் கொண்டிருந்தோம்.’ எனறும்; தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும் மோசமான நிலை காரணமாக இங்கு வந்ததாக அவர்கள் அறிவித்தாலும், பொருளாதாரத்துகாக கனடாவுக்கு வந்தார்களா அல்லது உண்மையிலேயே அகதிகள்தானா என்ற சந்தேகம் அரச அதிகாரிகளுக்கு இருந்தது. கடத்தல் காரர்களுக்குப் பணம் கொடுத்து வந்தவர்களை ஒரு போதும் அகதிகளாக ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்பதே அரசின் முடிவாக இருக்கின்றது.


இதே போல அவுஸ்திரேலியாவுக்குத் தொடர்ச்சியாக பொருளாதார நிலைகருதி வரும் ஆட்கடத்ல் காரணமாக, அவுஸ்திரேலியாவுக்கு வெளியில் அகதிகள் முகாம் ஒன்றை நிர்மாணிக்கவும், அகதிகளை அங்கே வைத்துப் பராமரிக்கவும் அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்திருந்தது. அவுஸ்ரேலியாவிற்கு வரும் அகதிகள் முதலில் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்படுகின்றார்கள். நீண்டு நாட்களுக்கு பின்னர் இலங்கையில் இருந்து கப்பலில் சென்றவர்களுக்கும் இப்படியான ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் 31ம் திகதி இலங்கையில் இருந்து அகதிகளாக அவுஸ்திரேலியா செல்வதற்காக தமது பயணத்தை ஆரம்பித்தவர்கள் கப்பலில் ஏற்பட்ட எரிபொருள் மற்றும் குடிநீர் தட்டுப்பாட்டைத் தொடர்ந்து இந்தோனிய கடற்பரப்பில் வழிமறிக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து இந்தோனேசிய கடற்படையினர் கப்பலில் இருந்த 87 பேரையும் மெரேக் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.


அகதிகள் அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட நிலையில், கிறிஸ்மஸ் தீவில் இருந்து மீண்டும் 50 அகதிக் கோரிக்கையாளர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். இதுவரை அகதிக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட சுமார் 350 பேர்வரை இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்கள். பல்வேறு நாட்டைச் சேர்ந்த 131 படகுகளில் 7600 பேர் இதுவரை ஆட்கடத்தல் மூலம் அவுஸ்ரேலியாவிற்குள் செல்ல முற்பட்டு எல்லைக் காவலர்களால் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். நவூறு மற்றும் மனூஸ் தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களில் 2100 பேர்மட்டும் அகதிகளாக ஏற்றுக் கொள்ளப்படுவர். முகாம்களில் தங்கவைக்கப்பட்டவர்களில் சிலர் அடிக்கடி உண்ணாவிரதம் இருந்து பார்க்கிறாரகள். குளிரூட்டப்பட்ட அறைகள் இல்லாததால், அதிக பெப்பம் காரணமாக அகதிகள் அவஸ்தைப்பட வேண்டிய நிலையில் உள்ளார்கள். இதுவரை வந்தவர்கள் அகதிகளா அல்லது ஆட்கடத்தலா என்பதை விசாரித்து அறியும்வரை இந்த நிலை நீடிக்கலாம். அகதிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டால் அவர்களுக்கு மறுவாழ்வு கிடைக்கும், இல்லை ஆட்கடத்தல் என்று அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டால் மறு உலகம்தான் கிடைக்கும்.

Kankesanturai Lighthouse - காங்கேசந்துறைக் கலங்கரை விளக்கம்
Kankesanturai Lighthouse


Kankesanturai Lighthouse was built in1893.
This light house is located on a bastion of an old fort on the Kankesanturai waterfront .

Hight 82 feet. Kankesanturai is a fort at the Northern end of srilanka.
The 25m height round masonry tower displays three white flashes every 15 seconds and visible up to14 nautical miles.
Most of the lighthouses in Sri Lanka were built during the British rule of Ceylon.


காங்கேசந்துறைக் கலங்கரை விளக்கம்
Kankesanturai - Light House


காங்கேசந்துறைக் கலங்கரை விளக்கம் மிகவும் புகழ் பெற்றது. ஆங்கிலேயர் காலத்தில் காங்கேசந்துறைக் கோட்டை அத்திவாரத்தின் மேல் 1893ம் அமைக்கப்பட்டது. 82 அடி உயரம் கொண்டது. ஒரே சீரான நேரத்தில் மூன்று தடவைகள் 15 விநாடிகள் இடைவெளியில் மின்னி மின்னி எரிவதே இதன் அடையாளமாக இருந்தது. 14 கடல் மைல் தூரத்திற்குத் தெரியும் இதன் வெளிச்சம் வடபகுதி மீனவர்களுக்கு வழி காட்டியாகவும் அமைந்திருந்தது. பருத்தித்துறை - கீரிமலை வீதியைக் காங்கேசந்துறை  - யாழ்ப்பாணம் வீதி சந்திக்கும் இடத்தில் இந்தக் கலங்கரை விளக்கம் அமைந்திருக்கிறது.

Monday, December 17, 2012

கள்ளிக்காடும் கண்ணீர்நாடும் - Kallikadu

கள்ளிக்காடும் கண்ணீர்நாடும் - 1

(குரு அரவிந்தன்)

அது வேறு உலகம். பூமிப்பரப்பில் இன்னொரு கிரகம். மேகங்களால் நிராகரிக் கப்பட்டு இயற்கையால் சபிக்கப்பட்டு கடக்கும்போது தேவதைகள் கண்மூடிக் கொள்ளும் வறண்ட நிலம்.     
இப்படித்தான் இந்த இதிகாசம் தொடங்குகிறது!

வேறு உலகம் என்றதும் தமிழர்கள் வாழும் மண்தான் மனக்கண் முன்னால் வந்து நிற்கின்றது. தமிழர்கள் அதிகமாக வாழும் இலங்கையின் வட, கிழக்குப்பகுதிகளில் ஒன்றான யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, வன்னி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்கிளப்பு, அம்பாறை போன்ற இடங்களைச் சுற்றிவர இருக்கும் பகுதிகளில் ஏதோ ஒன்றைப் பற்றித்தான் இந்தக்கதை சொல்லப்படுகிறதோ என்ற எண்ணம் சட்டென்று எழுகிறது. வறண்டநிலம் என்று ஆசிரியரால் சொல்லப்பட்டாலும் இவைஎல்லாம் என்றுமே மறக்கமுடியாத தமிழர்களின் பாரம்பரிய முந்தயர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்த சொர்க்கபூமியல்லவா?


கருவேலமரம்,பொத்தக்கள்ளி, கிலுவை, கற்றாழை, சப்பாத்திக்கள்ளி, இலந்தை, நெருஞ்சி, சில்லி, பிரண்டை, இண்டஞ்செடி, சூரன்கொடி, முதலான வானத்துக்குக்கோரிக்கைவைக்காத தாவரங்களும்
நரி, ஓணான், அரணை, ஓந்தி, பூரான், பாம்பு முதலான விலங்கினங்களும் - கழுகு, பருந்து, காடை, கௌதாரி, சிட்டு, உள்ளான், வல்லூறு முதலிய பறவை இனங்களும் மற்றும் மனிதர்களும் வாழும் மண்மண்டலம்.
கரும்பாறையிலும்,சரளையிலும்,சுக்கான்கல்லிலும்,முள்மண்டியநிலங்களிலும் தொலை ந்துபோன  வாழ்வை மீட்டெடுக்கும் போராட்டம்தான் அவர்களின் 'பொழைப்பு'.


 தமிழர்கள் வாழும் மண்ணிலே பிறந்தவன், என்றுமே மறக்கமுடியாத தாவரங்கள், விலங்கினங்கள், பறவைகள் மீண்டும் கண்முன்னால் நிழலாடுகின்றன. இதைவிட தமிழர்கள் வாழும் மண்ணலே பனை. தென்னை, வேம்பு, பூவரசு, முருங்கை, தாளை, ஆல், அரசு, வாகை, ஈச்சமரம் போன்ற பலமரங்களும், ஆமணக்கு, கொவ்வை, எருக்கலை, தொட்டச்சுருங்கி, குப்பைமேனி, காந்தள் போன்ற பலசெடிகொடிகளும், காகம், புலுனி, செம்பகம், மைனா, மீன்கொத்தி, கலகக்குருவி போன்ற பறவை யினங்களும் என்றுமே எங்கள் கண்ணைவிட்டு மறையாதன. ஏனென்றால் அவைகளோடு நாங்களும் ஒன்றாய் வாழ்ந்திருக்கிறோம். தாயிலும் மேலாம் எங்கள் தாய்மண். தாய்கூடப் பத்து மாதம்தான் சுமப்பாள், ஆனால் தாய்மண்ணோ கருவில் இருந்து, எருவாய்போனபின்பும்கூட,காலமெல்லாம் எங்களைச்சுமப்பவள் அல்லவா?


பாரம்பரியமாய் வாழ்ந்த இந்த மண்ணிலே தொலைந்துபோன, பறித்தெடுக்கப்பட்ட எங்கள் வாழ்வை மீட்டெடுக்கும் போராட்டம்தான் இன்று தமிழர்களாகிய எங்களின் ஒரே மூச்சாகி  நிற்கிறது என்பதை இங்கே சொல்லாமல் சொல்லிக் காட்டுகின்றார் இந்த நூல் ஆசிரியரான கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்.


உள்ளே நுழைகிறேன்...


செல்பேசியில் பேசிக்கொண்டே தங்களுக்குள் சிரித்துக் காலத்தைப் போக்கும் வேலையற்ற பைத்தியங்கள் போல அல்லாது, கோடை வெயிலை நிலா வெளிச்மாக்கி வேர்வை சிந்த, மாடுகளோடு பேசுவதுபோல தனக்குள் பேசிக்கொண்டு உழுது கொண்டிருக்கும் ஏர்க்காரர்கள்.

முண்டாசு, கலப்பை, தார்க்குச்சி, அரைஞான் கயிறு, தூக்குச்சட்டி, அம்மி, குழவி, துவையல் - புலம் பெயர்ந்த நாடுகளில், வழக்கத்தில் இருந்து மறைந்து கொண்டிருக்கும் இது போன்ற பல சொற்களை ஞாபகமூட்டுகிறார் ஆசிரியர்.

'மண்ணுதான் சாப்பாடு, மண்ணுதான் மருந்து நம்மளுக்கு.." பிறந்த மண்ணின் மகிமையை எவ்வளவு சிறப்பாக எடுத்துச் சொல்லும் ஆசிரியர், ஆட்டுப் புழுக்கையும், கோமியமும் சேந்தா பொட்டக்காடும் பொன் விளையும் என்கிறார்! தமிழீழ விவசாயிகளோ ஆட்டுப் புழுக்கை, மாட்டுச்சாணகம் மட்டுமல்ல தினமும் கூட்டிப் பெருக்கிச் சேகரிக்கும் குப்பையைக்கூட வீணாக்காமல் ‘கூட்டெருவாக’ மண்ணில் கலந்து பசளையாக்குகிறார்கள்.

கோழிகளின் கூவலில் விடியக் காத்திருக்கும் கிராமம்.தட்டான்பூச்சிகளும்  சில்வண்டுகளும், காடைகளும், வெள்ளெலிகளும், இரை தேடி வந்துபோன பாம்பின் தடமும், தலைகாட்டி மறையும் கீரிகளும் சொல்லமுடியாத அனுபவங்கள். தமிழீழத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் காணக்கூடிய காட்சிகள்.

கோழிக்கறி எப்படி வைப்பது என்று சொல்லித் தரும்போது, வீட்டிற்கு வந்து போன விருந்தினர்கள் மட்டுமல்ல, வேள்வி இறைச்சியும் குத்தரிசிச் சோறும் கூடவே ஞாபகம் வருகிறது. புலம் பெயர்ந்த நாட்டில் தினமும் கோழிக்கறி சாப்பிட வசதி இருந்தாலும், பிறந்த மண்ணில் அரப்பு, சீயாக்காய், எண்ணெய் தேய்த்து, கண் எரிய சனிநீராடி (முழுக்குப்போட்டு), அம்மாவின் கையால் சமைத்த வேள்வி இறைச்சியும், குத்தரிசிச் சோறும் சாப்பிட்டது போல வருமா? அதை நினைக்கும்போது மண்வாசனை போல, பெருஞ்சீரகத் தூள், கறுவா, கறிவேப்பிலை கலந்த கோழிக்கறி கொதிக்கும் வாசனை பல்லாயிரம் மைல்களைக் கடந்து இங்கேயும் எங்களை நாவூறத்தானே வைக்கிறது. இன்னொருமுறை வாழ்வதற்கு வாய்ப்பில்லாத அந்த இறந்த காலத்தை நினைக்க, எங்கள் விழிகளிலும் நீர் முட்டத்தானே செய்கிறது.

இருமலுக்கு நாட்டுவைத்தியம் சொல்லித்தருகிறார். நரித்தோலை கருகியும் கருகாமலும் சுட்டு, வெற்றிலையில் வைத்து தேனில் குழைத்துக் கொடுத்தால் இருமல் வந்த இடம் தெரியாமல் போய்விடும் என்கிறார். நாங்கள் கொத்து மல்லிக் கசாயம் என்று சொல்வதை, சுக்கு,மிளகு, திப்பிலி, தூதுவளைக் கசாயம் என்கிறார்.

ஊரடித் தோட்டத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது, கிணற்றை நம்பி தக்காளி, கத்தரி, மிளகாய், சர்க்கரைவள்ளிக்கிழங்கு இந்த நான்கும்தான் அந்த மண்ணுக்கு ஒத்து வரும் என்கிறார். எந்த எந்த மரங்களுக்கிடையே, எவ்வளவு இடைவெளி இருக்க வேண்டும் என்பதை இப்படிச் சொல்கிறார்.

'நண்டூர நெல்லு நரியோடக் கரும்பு
வண்டியோட வா(i)ழ தேரோடத் தென்ன"


 தமிழர்கள் வாழும் கிராமங்களில் அனேகமாக வீட்டிற்கு ஒரு கிணறாவது இருக்கும். குடிநீருக்கு மக்கள் அதை நம்பித்தான் இருப்பார்கள். அதைச் சுற்றி பத்துப் பன்னிரண்டு தென்னைமரங்கள், வாழைமரங்கள், கமுகு, எலுமிச்சை, தோடை மாமரம், பலா, ஈரப்பலா போன்றவை நடப்பட்டிருக்கும். அதைவிட தோட்டக் கிணறு கொஞ்சம் ஆழம் கூடியதாக இருக்கும். அந்தக் கிணற்று நீரை நம்பித்தான் சிறு தோட்டம் செய்வார்கள். தக்காளி, மிளகாய், வெங்காயம், கத்தரி, மரவெள்ளி, வெண்டி, வாழை என்று அவரவர் வசதிக்கும், மண்ணின் தன்மைக்கும் ஏற்ப பயிர் மாறுபடும். சில இடங்களில் உருளைக்கிழங்கு, நிலக்கடலை, பயறு, பீற்றூட், கரட், திராட்சை கூடப் பயிரிடுவார்கள். எலியோட வரகு என்று சமீபத்தில் கேட்ட ஒரு நாட்டுப்பாடல் வரிகூட இப்போது ஞாபகத்திற்கு வருகிறது.

'மண்ணுந் தண்ணியுந் தாண்டா குடியானவன் கும்பிடுற சாமி'
என்று ஒரு பாத்திரத்திற்கூடாகச் சொல்கிறார் ஆசிரியர். இலங்கையின் மூன்றில் இரண்டு பங்கு கடலோரம் தமிழர்களுக்குச் சொந்தமானது மட்டுமல்ல, அதன் சரித்திர முக்கியத்துவத்தையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். கரையோர மக்கள் கடல் வளத்தையே நம்பியிருக்கிறார்கள். முக்கிய துறைமுகங்களான திருகோணமலை, பருத்தித்துறை, காங்கேசந்துறை போன்றன இக் கடல் பரப்பிலேயே இருக்கின்றன. சமீபத்தில் ஏற்பட்ட ஆழிப்பேரலையின் அழிவிலும், பாதிப்பிலும் இருந்து கரையோர மக்கள் இன்னும் முற்றாக மீளவில்லை. எந்தக் கடலன்னை காலா காலமாய் அவர்களை வாழவைத்தாளோ, அதே கடலன்னை அவர்களை வஞ்சித்த போது அந்தத் துயரத்தை அவர்களால் தங்கமுடியவில்லை. பாதிப்புக் குள்ளான இக்கரையோர மக்களை, தமிழர்கள் என்பதால் மனிதாபிமானமற்ற முறையில் அரசும் சேர்ந்து பட்டினிபோட்டு வதைப்பதுதான் மிகப்பெரிய சோகக்கதை!

ஒரு கதாபாத்திரம் டீக்கடையில் ஒரு சிய்யம்- ஒருவடை -ஒருடீ என்று சாப்பிடும் விதத்தை சுவாரஸ்யத்துடன் சொல்லுகின்றார் ஆசிரியர். தமிழீழ தேனீர் சாலைகளில் பொதுவாக தேனீர், கோப்பி, உழுந்து வடை, பருப்புவடை, சூசியம், போண்டா, வாய்ப்பன்,வாழைப்பழம் என்பன பொதுவாக இருக்கும்.

சூசியத்தைத்தான் இங்கே 'சிய்யம்' என்று ஆசிரியர் குறிப்பிடு கின்றார். கோதுமை மாவோடு வாழைப் பழத்தைப் பிசைந்து எண்ணெய்யில் பொரித்து எடுக்கப்படும் பலகாரம் வாய்ப்பனாகும். இதைவிட வெதுப்பகத்தில் தயாரிக்கப்படும் சீனிப்பாண், ரோஸ் பாண், பச்சைப்பாண் போன்ற உணவு வகைகளும் தேனீர்ச்சாலையில் கிடைக்கும்.   

வானத்தில் இருந்து ஒரு நட்சத்திரம் உதிர்ந்தாலும், மரத்தில் இருந்து ஒரு பூ உதிர்ந்தாலும் இழப்பு இழப்புத்தான். மழைத்துளியில் எறும்பு மூழ்கினாலும், கடலுக்குள் கப்பல் மூழ்கினாலும் வலி வலிதான். அதனதன் நிலையில் அவரவர் துயரம் பெரிதுதான் என்று கதாபாத்திரமான பேயத்தேவரின் மனைவி இறந்தபோது ஆசிரியர் இப்படித்தான் குறிப்பிடுகின்றார்.

 தமிழ் மக்களுக்கு இழப்பு, அதுவும் இளமையில் இழப்பு என்பது அவர்களின் அன்றாடவாழ்வில் ஒரு அங்கமாகப் போய்விட்டது.

சொல்லியழுவதற்குக்கூட யாருமின்றி ஏதிலியாய், இன்று ஈழத்தமிழன் சொந்தமண்ணிலே அவதிப்படுவதைப் பார்த்து அணைக்க வேண்டியவர்கள், வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கலாமா?

இதையாரிடம் சொல்வது? யாரைநோவது?

பிணங்களுக்கு, கிடந்த திருக்கோலம் அல்ல அமர்ந்த திருக்கோலம்தான் கள்ளிக் காட்டுக் கலாசாரம் என்கிறார் நூல் ஆசிரியர். ஒரு நாற்காலியில் உயிர் உள்ள ஆள்போல் உட்கார வைத்து அலங்காரம் செய்து, வசதிக் கேற்ப தேர்கட்டித் தூக்கிச் செல்வார்களாம். மூத்த மகள்தான் இங்கே கொள்ளி வைக்கிறாள்.

அம்பலத்தில்தேரிறக்கி,அரளிப்பூச்சூறையிட்டு செல்லத்தாயி குடம் சுமந்து மூன்று முறை சுற்றிவர அரிவாள் மூக்கில் ஒவ்வொரு சுற்றுக்கும் ஒவ்வொரு துளைபோட்டு 'மூணாம் சுத்தில கொடம் ஒடச்சுத் திரும்பிப் பார்க்காம நடதாயி" என்று நாவிதன் சொல்வதாகவும், சாத்திரம் சடங்கு முடித்துக் குழிக்குள்ளே பிணம் இறக்கி, இடக்கையால் மண் தள்ளி, தலைமாட்டில் கள்ளி நட்டு பொழுது மசங்க வீடுவந்ததாகவும், எட்டாம் நாள் 'உருமாக்கட்டு' என்றும் ஆசிரியர் இங்கே குறிப்பிடுகின்றார்.    (தொடரும்)                கள்ளிக்காடும் கண்ணிர்நாடும் - 2 


ஒருவர் இறந்தால் இறுதிச் சடங்குகள் செய்யும் முறையில் ஈழத் தமிழர்களின் கலாச்சாரம் சற்று மாறுபட்டிருக்கிறது. கோயிலுக்கு சரீரத்தொண்டு செய்யும் குறிப்பிட்ட சிலபிரிவினரும், கிழக்குமாகாணத்தில் சில பகுதிகளில் சில பிரிவினரும் இறந்தவரை இப்படியான அமர்ந்த திருக்கோலத்தில் அலங்காரம் செய்து, தேர்கட்டி மயானத்திற்கு எடுத்துச் செல்வார்கள். பொதுவாக மற்றவர்கள் பாடைகட்டிப் பிணத்தைச் சுமந்து செல்வதுதான் வழக்கம்.

பாடையைப் பற்றிப் பேசும்போது, ‘பாடைகட்டி ஊர்சுமந்து போகும் போதும் பைந்தமிழின் ஓசையாங்கொலிக்கவேண்டும்,’ ‘ஓடையிலே என் சாம்பல் கரையும்போதும் ஒண்டமிழின் ஓசையங்கு கேட்கவேண்டும்’ போன்ற தமிழீழக் கவிஞர்களின் உணர்ச்சிக்கவிதை வரிகள்தான் நினைவிற்குவருகின்றன. பொதுவாகப் பெண்கள் மயானத்திற்குச் செல்வதில்லை.  பிணத்தைப் பெட்டியில் படுக்கவைத்து,பெட்டியை மூடித்தான் மயானத்திற்குக் கொண்டு செல்வார்கள். இந்துக்களில் பெரும்பாலானோர் பிணத்தைத் தகனம் செய்வதுதான் இன்றும் நடைமுறையில் இருக்கிறது. இறுதியாக வாய்க்கரிசி போடுவது முக்கியமாகக் கருதப்படுகிறது. தகப்பனுக்கு மூத்தமகனும், தாய்க்கு இளைய மகனும் கொள்ளி வைப்பதுதான் இன்றும் சம்பிரதாயமாக இருக்கிறது. எட்டாம் நாள் செய்யும் சடங்கை 'எட்டுச் செலவு' என்பார்கள்.  சிலபகுதிகளில் காடாத்துவது என்றும் சொல்வார்கள். சந்தர்ப்பம் சூழ்நிலைக்கு ஏற்ப நாட்கள் மாறுபடலாம். இறந்தவரைப்போல ஒரு உருவம் செய்து, அவருடைய புகைப்படத்தையும் வைத்து அவருக்குப் பிடித்தமான உணவு வகைகளைப் படைத்து, அவரது ஆத்மா சாந்தியடைய குடும்பத்தவர்கள் பிரார்த்திப்பார்கள். முப்பத்தி யோராம் நாள் சடங்கை அந்தியேட்டி என்பார்கள்.

      விவசாயக்கலாச்சாரத்தில் கடவுளாகவும், வேலைக்காரனாகவும் இருப்பது மாடுதான் என்று குறிப்பிடுகிறார் ஆசிரியர்.  அந்த மாடுகளுக்கு த்தான் தைப்பெங்கலை அடுத்து வரும் பட்டிப்பொங்கல் அல்லது மாட்டுப் பொங்கலன்று நன்றிக்கடன் (தாங்ஸ்கிவ்விங்) செலுத்து கின்றோம். கதாபாத்திரத்தின் செவலக்காளையும் மயிலக் காளையும் தமிழீழத்தில் வருடாவருடம் தைப்பொங்கல், வருடப்பிறப்பை முன்னிட்டு நடத்தப்படும் மாட்டுவண்டில் சவாரியில் பங்குபற்றும் காளைகளை ஞாபக மூட்டுகின்றன. மாட்டை அடித்துத் தின்னுவது என்பது குடும்பத்தில் ஓர் ஆளை அடித்துச் சாப்பிடுவது மாதிரி, கள்ளிக்காட்டு விவசாயி மாட்டுக்கறி தின்னமாட்டான் என்று ஓர் இடத்தில் குறிப்பிடும் ஆசிரியர் சாப்பிடமாட்டான் என்பதற்குப் பதிலாக தின்னமாட்டான் என்ற வார்த்தையை பிரயோகிக்கின்றார். புலம் பெயர்ந்த நாடுகளில் பட்டிப் பொங்கலுக்குரிய தேவை இல்லாததால், தைப்பொங்கலை மட்டும் தமிழர்கள் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.

மாடு யாருக்கச் சொந்தம் என்ற பிரச்சனை வந்தபோது அங்கே வாக்குவாதம் ஏற்படுகின்றது. நெல்லு சிந்தினா அள்ளலாம், சொல்லுச்சிந்தினா அள்ள முடியுமா? என்று அருமையான வார்த்தைப் பிரயோகம் செய்யும் ஆசிரியர் அனாவசியமாய் விழுந்த ஒருவார்த்தை மண்ணெண்ணெயில் விழுந்த தீக்குச்சியாய்ப் பட்டென்று பற்றிக் கொண்டது என்று குறிப்பிடுகின்றார்.

எதிரி தாக்கவந்தபோது ஊரே ஒன்றுபட்டு எதிர்க்க, ஊரே ஒண்ணுகூடி இன்னைக்கி மானம் காப்பாத்திட்டாகளப்பா! இந்த மனுசங்கள மறக்க முடியுமா? இந்த மண்ணைத்தான் மறக்க முடியுமா? என்று கதாபாத்திரத்தின் மூலம் ஒன்றுபட்டால் உண்டுவாழ்வு என்பதையும், ஒவ்வொரு சொல்லும் சொல்லப்படும்போது, அனாவசியமான வார்த்தையாடல்களை விட்டு ஊருலகம் நம்பக்கூடியதாகச் சொல்லவேண்டும் என்பதையும், மறைமுகமாய் ஆசிரியர் ஒவ்வொரு தமிழனுக்கும் எடுத்துச் சொல்கின்றார்.

இலங்கையில் வேலிகளுக்குக்கூட காலிருப்பதால், அங்கே அடிக்கடி நடக்கும் மாட்டுச் சண்டைக்குப் பதிலாக இங்கே வேலிச்சண்டை ஏற்படும். வேலிச்சண்டை என்பது சாதாரணமாக வேலிக்குக்கதியால் போடும்போது அல்லது வேலி அடைக்கும் போது ஒற்றுமை இல்லாத, அடுத்தடுத்து இருக்கும் சில வீடுகளுக்கிடையே நடப்பது வழக்கம். வேறுபல காரணங்கள் இருந்தாலும் இந்த வேலியைச்சாக்காக வைத்துத்தான் பொதுவாக பிரச்சனையே ஆரம்பமாகும். வாய்ச்சண்டையில் ஆரம்பித்து வெட்டுக்கொத்தில் முடிந்த கதைகள் இங்கேபல உண்டு. இன்று தமிழ் ஈழத்தில் இப்படியான சில்லறைத்தனமான சண்டைகள் எல்லாம் அருகிப்போய்விட்டன. ஆட்டைக் காணவில்லை, மாட்டைக் காணவில்லை என்று முறைப்பாடு செய்பவர்களைப் பார்த்திருக்கிறேன், ஆனால் சமீபத்தில் ஊருக்குப் போய்வந்த நண்பர் சொன்னார் தங்கள் வீட்டுக் கொல்லைப் பக்கத்தில் இருந்த கிணற்றையே காணவில்லை என்று! கிணற்றையே கொள்ளையடிக்கும் திருட்டுவேலிகளும் அங்கே இருக்கின்றன என்பது அப்போதுதான் எனக்குப் புரிந்தது!

ஈழத்தமிழன் தானுண்டு தன்பாடுண்டு என்று பலதலைமுறையாய் அமைதியாய் வாழ்ந்து வந்த சொந்தமண்ணே அவனுக்குச் சொந்தம் இல்லை என்று, பேரினவாதிகளால் ஒதுக்கித் தள்ளப்பட்டபோது வேலியைப் பற்றி நினைக்கவோ, அதற்காகச் சண்டைபோடவோ யாருக்கு நேரம் வரும். வேலியும் வேண்டாம், போலி வார்த்தையும் வேண்டாம், மண்ணைத் தக்கவைத்தாலே போதும் என்ற நிலையில்தான் தமிழன் இன்று வாழ்ந்து வருகின்றான். குட்டக்குட்ட இனியும் குனியமுடியாது என்ற நிலைக்கு, ஆக்கிரமிப்புப் பிரதேசத்தில் உள்ள தமிழ்மக்கள் வந்து விட்டார்கள். பலஸ்தீனத்தில் மக்கள், எதிரிகள் மீது கல் எறிவதுபோல இங்கேயும் ஆக்கிரமிப்பாளர்மீது பொதுமக்கள் கல்லெறியத் தொடங்கி விட்டார்கள். இதுஆரம்பம், இனியும் பொறுக்கமுடியாது, வாழ்வா அல்லது சாவா என்ற நிலைவந்தால் ஆக்கிரமிப்புப் பிரதேசங்களில் இன்று தொடரும் இந்தப்போராட்டம் மக்கள்போராட்டமாக, வெகுஜன சக்தியாக உருவெடுத்து எந்தநேரத்தில் வெடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!
கள்ளிக்காட்டில் உள்ள வயதான புளியமரத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது, வாலைக்குமரியாய்ப் பசபசவென்று பரவி, குலப்பெண்தன் கற்பைக் காப்பது போல் தன்பச்சை நிறம் காத்து நிற்கும் மரம் என்று ஆசிரியர் குறிப் பிடுகின்றார். அந்தமரத்தை யாரோ வெட்ட முயற்ச்சி செய்தபோது ;இது பஞ்சாயத்துக்குப் பாத்தியப்பட்டமரம். எவனும் விக்க முடியாது. எவனும் வெட்டமுடியாது. ரோட்ல போறவன் எல்லாம் ரோட்ட விக்கமுடியுமா? இது என்னப்பா நியாயம்?  என்று ஒரு பாத்திரத்தின் மூலம் ஆசிரியர் தட்டிக் கேட்கின்றார்.

 தமிழர் வாழும் மண்ணில் இன்று ஆக்கிரமிப்பாளர்கள் தங்கள்  பாதுகாப்பிற்காக அங்கே உள்ள தெருவோர மரங்களை எல்லாம் வெட்டி வீழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக ‘கற்பகவிருட்சம்’ என்று தமிழீழ மக்களால் பாதுகாக்கப்பட்ட பனைமரங்களும், ஏழ்மையில் வாடும் குடும்பங்களுக்கு வருவாய்தரும் தென்னைமரங்களும் தறிக்கப்பட்டு ஆக்கரமிப்பாளர்களின் பாதுகாப்பரண்களுக்குப் பாதுகாப்புக்காகப் பாவிக்கப்படுவதை யார்தட்டிக் கேட்பது? அப்படித் தட்டிக்கேட்டாலும் சமாதானகாலத்திலும் துப்பாக்கிதானே அதற்குப்பதில் சொல்கிறது!

ஊர்ச்சாராயம் காச்சுவதற்கு கடுக்கா, நவச் சாரக்கட்டி,   வாழப்பழத்தொலி, பேரிச்சம் பழம், பேட்ரிசெல்லு. தீப்பெட்டி, பொத்தக்கள்ளி, மனுச எலும்பு எல்லாம் போட்டுக் காய்ச்சவேண்டும் என்று ஒரு கதாபாத்திரத்திணூடாகச் சொல்லும் போதுகொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கிறது. ஆட்டுக்கால்சூப் என்று கேள்விப் பட்டிருக்கிறேன், ஆனால் மனிதஎலும்பு போட்டுச் சாராயம் காய்ச்சுவதை இப்போதான் கேள்விப்படுகிறேன்.

ஆக்கிரமிப்புக்காரரின் பிடியில் சிக்கி இருக்கும்  தமிழர் வாழும் மண்ணின் சில பகுதிகளில், பனைமரத்தில் இருந்து பதனீர் எடுத்து கருப்பட்டியும், பனங்கல்கண்டும் காச்சிய சில இடங்களில், அதற்குப்பதிலாக இன்று நார்க்கத்தாளை, பல்லி, அறணை, ஓணான், கரப்பொத்தான் போன்ற பலவற்றையும் போட்டுக் கள்ளச்சாராயம் காய்ச்சி, அதை அப்பாவி இளைஞர்களுக்குக் கொடுத்து, அடுத்த தலைமுறையிலும் எங்கள் தமிழ் இனம் எழுந்து நிற்றமுடியாமல் ஊரையே ஆக்கிரமிப்பாளர்கள் கெடுப்பதாகக் கேள்வி!      (தொடரும்)


கள்ளிக்காடும் கண்ணீர்நாடும் - 3

ஊர்விட்டு ஊர் வந்தகதையை கதாபாத்திரம் சொல்லும்போது, இதே போலத்தான் ஈழத்தமிழர்களும் இராணுவ ஆக்கரமிப்பில் இருந்து தப்பிப் பிழைபதற்காக, சொந்த மண்ணைவிட்டு அல்லற்பட்டு வன்னி மண்ணுக்குப் புலம் பெயர்ந்து சென்ற ஞாபகம் நெஞ்சில் முட்டிக்கனக்கிறது.
ஊர் அழிஞ்சுபோச்சு, வீடு வாசல் இல்லை, மாடு கன்டு இல்ல, குடி தண்ணிக் கெணத்தில பச்சநாவியக் கலந்துட்டுப் போயிட்டாங்க பாவிக. ஒரு ஈகாக்கா குருவி இல்ல, ஊரு காலியாயிருச்சு! என்று ஆசிரியர் வேதனையோடு குறிப்பிடுகின்றார்.

 தமிழர் வாழும் மண்ணில் நடந்தது, இன்று நடப்பது இதைவிடக் கேவலமானது. ஊரையே விமானத் திலிருந்து குண்டு போட்டுச் சீரழித்தது மட்டுமல்ல, தமிழ்ப்பெண்களைக் கற்பழித்து, மானபங்கப்படுத்தி, பச்சைப்பாலகர் களையும், இளைஞர்களையும் குத்தியும் வெட்டியும் கொன்று குவித்த அரச பயங்கரவாதத்தின் கண்ணீர்க்கதை சொல்லிமாளாது. எத்தனை தலைமுறைபோனாலும் மறக்கமுடியாதது!

சரித்திரம் மறந்தாலும், ஒவ்வொரு தமிழனின் நெஞ்சமும் மறக்காது! 
‘அய்யா நாங்க பொன்ன எழப்போம், பொருளை எழப்போம், மண்ண எழப் போம், மானத்தை எழக்கமாட்டோம், போயிட்டுவாங்க’ என்று பெண்ணாசையால் வீடுதேடிவந்த சமீந்தாரைப் பார்த்துக் கதிகலங்கிச் சொல்கிறார் ஒரு பெண்ணைப் பெற்ற தந்தை.‘பெண்ணை தூக்கிக் கொடுக்கிறியா? தூக்கிட்டுப் போகவா?’ பெண்ணாசை அவன் கண்ணை மறைக்க தந்தையை மிரட்டுகின்றான்.

பெண்ணைத் தொடப்போனவனின் கை,அண்ணனால் துண்டாடப்படுகிறது. அப்புறம் என்ன?தெரிந்ததுதானே!

‘நடுச்சாமத்திலே ஊரே தீப்புடிச்சு எரியுது. வைக்கப்படப்புக்கு வச்சதீயி கூரகூரைக்குத்தவ்வுது, ஆடுமாடுக கத்துது. பொண்டு பொடுசுக அலறுது.
அவன் பொண்ட புள்ளயக் காப்பாத் துவானா..? காயம்புத்தேவனுக்கு கைகுடுப்பானா? சக்தியுள்ள மட்டும் சண்டை போடுறாங்க. தாக்குப்புடிக்க முடியல. பெண்ணைக் கூட்டிக்கிட்டு அண்ணன் காரங்க தப்பி ஓடுறாங்க!’
தமிழர் வாழும் மண்ணில் இதுதான் நடக்கிறது. ஆக்கிரமிப்பாளன் வீடு புகுந்து தாய்க்குலத்தில் கைவைக்கிறான். தாய்க்குலத்தை மதிப்பவன் தமிழன். பெண்ணிலே கைவைத்தால் தமிழன் பொங்கி எழுவான் என்பது எதிராளிக்குத் தெரியம். எதிராளி எதிர்பார்ப்பதும் அதைத்தான். சமாதானத்தை சாக்காக வைத்து, ஜனநாயகப் போர்வைக்குள் ஊரையே அழித்திடலாம் என்று நினைத்தான். சாவுக்குள் தமது வாழ்வை விதைத்துவிட்ட போராளிகளின் கைகளுக்கு ‘சமாதானம்’ என்ற விலங்கைப் போட்டுவிட்டு, தமிழ் மக்களை இவர்கள் பாதுகாக்கிறார்களாம். ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுதகதை! உன்னுடைய தாயை, உன்னுடைய சகோதரியை, உன்னுடைய மகளை உனக்குமுன்னால் வைத்து மானபங்கப்படுத்தினால் உன்னுடைய மனநிலை எப்படி இருக்கும்? சிந்தித்துப்பார்! அந்த மனநிலையில் தான் இன்று ஒவ்வொரு தமிழனும் இருக்கின்றான்.

கனடியக் கவிஞர் ‘பவித்திரா’ அவர்கள் மனம்வெந்து எழுதிய கவிதையின் சில வரிகளை பாருங்கள்:


‘தொலைந்து போதலும் சூட்டிற்கிரை யாதலும்
சுற்றி வளைப்பினிலே மானமி ழத்தலும்
அலைந்து திரிதலும் அடியுதையில் அழிதலும்
ஆதர வின்றிச் சிறைதனில் மடிதலும்’


இன்று ஈழத்தமிழனின் சோகக் கதையாய்ப் போய்விட்டது. எதிராளி நினைத்தது எதுவுமே நடக்கவில்லை. அவனது ஆத்திரத்தினால், ஒவ்வொரு தமிழனும் ஏதோ ஒரு விதத்தில் பழிவாங்கப் பட்டிருக்கிறான். தமிழன் கடந்தகால அனுபவங்களில் இருந்து நிறையவே கற்றிருக்கிறான். ஒற்றுமையின் அவசியத்தைப் புரிந்து கொண்டி ருக்கிறான். எங்கே அணைக்க வேண்டுமோ அங்கே அணைத்துக் கொண்டான், எங்கே அடிக்க வேண்டுமோ அங்கே அடித்துக் கொண்டான்!

தமிழர்கள் வாழும் மண்ணில் விருந்தாளியாய் வந்தால் வரவேற்போம், வீம்பிற்கு வந்தால் விடமாட்டோம் என்பதை செய்கையிலும் காட்டத்தொடங்கி விட்டார்கள் பொதுமக்கள்! வெகுஜனம் பொங்கி எழுந்து பேரெழுச்சி கொண்டால் என்ன நடக்கும் என்பதை ஆக்கிரமிப்பாளர்கள் தெரிந்து கொள்ளவில்லை. உலகசரித்திரம், வரலாறு தெரிந்தவன் நிச்சயம் புரிந்து கொள்வான்!


‘உழுக நெலமில்ல.. ஒக்கார இடமில்ல, கஞ்சிகாச்சக் காசில்ல.. காச்சி ஊத்தப் பெண்டாட்டியில்ல..! என்று ஒரு கதாபாத்திரம் குறை கூறும்போது யுத்தத்தினாலும், ஆழிப்பேரலையாலும் உறவிழந்து, வீடிழந்து, தொழில் இழந்து பாதிக்கப்பட்ட குடும்பங்கள்தான் கண் முன்னால் நிற்கின்றன. மனிதாபிமானம் அற்றவர்களிடம் இதை எல்லாம் சொல்லி அழுவதில் எந்தப் பலனும் இல்லை. பேரினவாதிகள் எதற்கெடுத்தாலும் மனித அபிமானம் அற்ற முறையில் பயங்கரவாத முத்திரை குத்துகிறார்கள், அதை சர்வதேசமும் நம்பவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆங்கில மொழியில், அல்லது பிற மொழியில் திறமை மிக்க ஒவ்வொரு தமிழனும் உண்மை நிலையை ஊடகங்களக்கூடாக சர்வதேசத்திற்கும் எடுத்துச் சொல்ல வேண்டும். எது உண்மை, எது பொய் என்பதை சர்வதேசம் புரிந்து கொள்ள வேண்டும். பொய்யும், பிரட்டும், பித்தலாட்டமும் அதிக நாட்கள் நிலைக்காது. தர்மம் எங்கள் பக்கம் இருப்பதால் தமிழ் மக்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என்பதை ஒவ்வொரு மானமுள்ள தமிழனும் உணர்ந்து செயற்பட வேண்டும். இந்தச் சந்தர்ப்பத்தைவிட்டால் இனி எப்பொழுதுமே தமிழர்களுக்கு இப்படி ஒரு சாதகமான சூழ்நிலை உருவாகமாட்டாது.


                 பனைமரம் வச்சவன் பார்த்துக்கிட்டே சாவானாம், தென்னைமரம் வச்சவன் தின்னுட்டுச் சாவானாம்.. என்று இரண்டு மரங்களின் ஆயுளையும் ஒப்பிட்டுப் பார்க்கிறார் ஆசிரியர். தமிழர்கள் வாழும் மண்ணில் பனை மரங்கள் கூட்டமாக வளர்ந்திருக்கும் இடத்தை பனந்தோப்பு என்று சொல்லுவார்கள். பனங்காட்டுநரி சலசலப்புக்கு அஞ்சாது என்று ஊரிலே சொல்வார்கள். பனைமரம் ஒரு கற்பகவிருட்சம். வானளாவி நிற்கும் இந்தமரத்தின் ஒவ்வொரு பகுதியும் பாவனைக்குரியது. இன்று தமிழர்கள் வாழும் மண்ணில் ஒரு போராளிபோல, நிமிர்ந்து நின்று ஷெல்வீச்சிலிருந்து தமிழ்மக்களைப் பாதுகாக்க தன்னைத்தானே பலி கொடுக்கிறது. விமானத்தில் இருந்து குண்டு வீசித் தமிழர்களை அழிக்கமுயற்சிக்கும்போது, அவர்கள் பாதுகாப்பாக ஓடி ஒளிந்திருப்பதற்கு வேண்டிய பங்கர் என்ற சொல்லப்படும் பாதுகாப்பு நிலஅறை செய்யவதற்கு பனைமரம் நிறையவே பாவிக்கப்படுகின்றது.  இதைவிட பனைமரம் வீடுகட்ட, கிணற்றிற்கு துலாபோட உதவுகிறது.
ஓலை வீட்டுக்கூரைபோடவும், கால்நடைகளுக்கு உணவாகவும், வேலி அடைக்கவும், விறகாகவும், பாய், கடகம், பெட்டி, போன்றன செய்வதற்கும், நுங்கு, பனம்பழம், பனங்கிழங்கு, ஒடியல். கள்ளு, பதனீர், கருப்பட்டி, பனங்கற்கண்டு, பனாட்டு போன்ற உணவு வகைகளை எடுப்பதற்கும் பனைமரம் பயன்படுகின்றது.


பனை மரத்தைப்போலவே தென்னைமரமும் முக்கியமான ஒரு மரமாக தமிழ் மக்களால் போற்றப்படுகின்றது. தென்னை மரமும் வீடுகட்ட, துலாபோட, பாவிக்கப்படுகின்றது. பனைமரத்திற்கு நீர்பாய்ச்சத் தேவை யில்லை.ஆனால் தென்னைமரம் அதிகபலனைத் தரவேண்டுமானால் அதற்கு நீர்பாய்ச்சவேண்டும். தென்னோலை வீட்டுக்கூரை போடவும், கால் நடைகளுக்கு உணவாகவும், கிடுகுவேலியடைக்கவும், துடைப்பம் செய்யவும் உதவுகிறது. பதனீர் மதுபானம் செய்யவும், இளநீர், தேங்காய், தேங்காய் எண்ணெய்,சிரட்டைக்கரி,கயிறு போன்றன செய்யவும் உதவுகின்றது.


‘ஒரு ஒத்தமாட்டு வில்வண்டி சல்சல்சல்ன்னு சத்தம் போட்டுக்கிட்டு வந்து கிட்டிருக்கு’வண்டியில் வந்தவர் வீடுவிசாரிக்க,‘அந்தா.. அந்த வேப்பமரத்து வீடு’ என்று யாரோஅடையாளம் காட்டுகிறார்கள். ஒற்றைமாட்டு வண்டியை தாய்மண்ணில் இப்போதெல்லாம் காண்பதே மிகவும் அருமை. எனது தாத்தாவிடமும் ஒற்றைமாட்டு வில்வண்டி இருந்ததாம். இங்கே வீதியில் ‘லெமொஸினை’பார்க்கும் போதெல்லாம், சின்னவயதில் சில்லாலையில் இருந்து ஒரு ஆயுள்வேத வைத்தியரும், ஊரெழுவில் இருந்து உறவினர் ஒருவரும் சல்சல்சத்தத்தோடு ஒற்றைமாட்டு வில்வண்டியில் எங்கள் ஊருக்கு வந்துபோகும் ஞாபகம் என் மனதில் நிழலாடும். (தொடரும்)


கள்ளிக்காடும் கண்ணீர்நாடும் - 4

 தமிழர்கள் வாழும் மண்ணில் அனேகமான ஒவ்வொரு வீட்டுக் காணியிலும் வேப்பமரங்கள் நிற்பதைக் காணமுடியும். வேப்பங்காற்று மிகவும் ஆரோக்கியமானது மட்டுமல்ல, வேப்பமிலை கால்நடைகளுக்கு உணவாகவும், வேப்பம்பூ வடகம் செய்யவும், வேப்பம்விதை நுளம்புக் கடியில் இருந்து பாதுகாக்கவும் உதவுகின்றது. விடுமுறை நாட்களில் இந்த வேப்பமர நிழலில், பிரம்பு நாரினால் பின்னப்பட்ட சாய்மனைநாற்காலியில் அந்தவீட்டுத் தலைவர் சாய்ந்து படுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதையும், சில சமயங்களில் அவரைச் சுற்றிக் குடும்ப அங்கத்தினர் உட்கார்ந்திருப்பதையுத் அனேகமாகக் காணமுடியும். வீட்டிற்கு வருபவர்கள் முதலில் அவரிடம் நலன் விசாரித்து விட்டுத்தான் உள்ளே செல்வார்கள்.

அங்கே வேப்பமரத்தை அடையாளம் சொன்னதுபோல, வில்லவராயமுதலியார் வீட்டிற்கு வழி கேட்டபோது கவிதையில், பொன்பூச் சொரியும் பொலிந்த செழும் தாதிறைக்கும் கொன்றைமரத்தைச் சொல்லி அடையாளம் சொன்ன ஈழத்து சின்னத்தம்பி புலவரின் சிறுவயதுப் பாடல் ஒன்று ஞாபகம் வருகிறது.
 மஞ்சள் நிறமான பூக்களைச் சொரியும் இந்த கொன்றைமரத்தின் காய்கள் முருக்கங்காய் போல நீண்டதாக இருக்கும்.

‘நல்லது கெட்டதுக்கெல்லாம் நான் இருக்கேன்னு சொன்ன ஆளு போயிட்டாரு. இனிமே எனக்கொரு தெம்பு தெறம் சொல்ல ஆளிருக்கா?’ நல்ல நண்பனாய், வழிகாட்டியாய் இருந்தவரைச் சடுதியாகப் பிரிந்த வேதனையில் வேட்டியிலே கண்ணைத் தொடச்சிக்கிட்டாரு பேயத்தேவரு. என்று ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.

தமிழர்கள் வாழும் மண்ணில் நல்லது கெட்டதுக்கெல்லாம் நான் இருக்கேன் என்று துணிந்து ஐனநாயகவழியில் அரசியலில் இறங்கி, முன்னுக்கு நின்று தமிழ் மக்களுக்காக உழைத்தவர்கள் எல்லாம் கூலிப் படைகளால் பலிஎடுக்கப்பட்டு விட்டார்கள். தமிழர்கள் வாழும் மண்ணைத் தோண்டினால் எங்கும் குருதிப்பூக்கள்.

சட்டம்போட்டு மிருகபலியை நிறுத்திவிட்டார்களே என்ற கோபத்தினால்தான் அவர்கள் இன்று தேடித்தேடி நரபலி எடுக்கிறார்களோ தெரியவில்லை! வடக்குக் கிழக்கு மாகாணத்தில் இராணுவக் கெடுபிடிகளால் குடும்பத்தோடு வெளியேறும் மக்களின் அவலநிலையை சற்று எண்ணிப்பாருங்கள். இந்த வேதனையைத்தான் தமிழ் மக்களும் உயிரிழப்புகளோடு அனுபவிக்கிறார்கள்.

 தென்னம்பிள்ளையைக் கட்டிக்கிட்டு நெத்திய மரத்தில முட்டி முட்டி அழுதார் பேயத்தேவர். சின்ன வயசுல பீப்பீசெஞ்சு ஊத எல குடுத்த பூவரசு மரத்தத் தடவித்தடவி அண்ணாந்து பாத்து அழுதாரு பேயத்தேவர். கத்தாழங்காடே போயிட்டு வாரோம்! கள்ளிச் செடிகளா போயிட்டுவாரோம்! காடைகது வாலிகளா போயிட்டு வாரோம்! கம்மாக்கரையே போயிட்டுவாரோம்!

கரிசத்தரிசே போயிட்டுவாரோம்! சொந்தவீடே போயிட்டு வரோம்! சுடுகாடே போயிட்டுவாரோம்!– மனசுக்குள்ளே சொல்லி வாய்க்குள்ளேளே அழுதவருக்கு, கடைசியில ஞாபகம் வருது, போயிட்டு எங்க வாரது? போறோம்! ஆண்டாண்டு காலமாய் ஆண்டு அனுபவிச்ச அந்தப் பூமியைவிட்டுப் பிரியும் நேரம் வந்தபோது  அந்தக் கதாபாத்திரம் அழுவதைக் கவிப்பேரரசு இப்படி வர்ணிக்கிறார்.

‘வம்சம் வளத்தமண்ணு வகுத்துப்பசி தீத்தமண்ணு-இது
இல்லேன்னு போகுமுன்னே என்னுசுரு போனாலென்ன?’ 


சொந்த மண்ணைவிட்டு ஏதிலியாய் பிரிந்தபோது, எங்கள் மதிப்புக்குரிய இளவாலை அமுது அவர்களின் மனநிலையைப் பாருங்கள்:

‘அடுப்புகள் அணைந்து கிடக்கக் கூரைகள் எரிந்து கொண்டிருந்தன.
 காவல் நிலையங்கள் கற்பழிப்பு மையமாகி பயிரைமேயும் பாவவேலிகளாகின. தேசியக்கொடி கந்தல் கந்தலாகக் கிழிந்து என் அந்தர ஆத்மாவில் தொங்கியது. தேசியப்பாடல் அடி வயிற்றில் குமட்டியது. இழவு வீடாக ஈழம் மாறியது. அவலக் குரல் கேளாத வீடுகள் இல்லை. உண்மைகள் உலகில் பரம்பாமல் மறைக்கப்பட்டன. தாயகம் நெருப்பு நீரில் நீந்தியது. மரங்கள் எல்லாம் அசையாமல் நின்று துயரத்தோடு எங்களை உற்றுப் பார்த்தன. பிரியும் கடைசி நேரத்தில் வீட்டின் புறங்கையைத் தொட்டு முத்தமிட்டேன். மனைவிக்குத் தெரியாமல் கண்களை மெல்லத் துடைத்துக் கொண்டேன். அரும்பாடுபட்டு யானும் என் மனைவியும் அந்த வீட்டைக் கட்டினோம். ஒரு கல்லைப் புரட்டி எடுத்தாலும் அது எங்கள் பெயரைச் சொல்லிப் பெருமூச்சுவிடும்! '
என்று அவர் பிரிவுத்துயரம் தாங்கமுடியாமல் மிகுந்த வேதனையோடு குமுறுகின்றார்.


‘கடைசியாச் சொல்றேன், காலி பண்ணிருங்க இல்லேன்னா காலி பண்ண வப்போம்!’ திருகோணமலை பகுதியில் பரம்பரை பரம்பரையாய் வாழ்ந்து வந்த தமிழ்மக்களைத் தினமும் துப்பாக்கி முனையில் ஊர்காவற்படையும் இராணுவமும் மிரட்டிவெளியேற்றிக் கொண்டிருப்பதுபோல அங்கேயும் அரச உத்தியோகத்தர் தாசில்தார் குடி மக்களை மிரட்டுகின்றார். ஊரே வெறிச்சுன்னு போச்சு. காக்கா குருவி மட்டும் சொந்தக்காரகளக் காணோமேன்னு அங்கிட்டும் இங்கிட்டுமாப் பறந்து பறந்து அலையுதுக. பேயத்தேவரு கம்பங்காட்டப் பாக்குறாரு, பூமியப்பாக்குறாரு, அழுதகண்ணோட தலயத் தூக்கி ஆகாயம் பாக்குறாரு. ஊச்சக்குரல்ல ஒப்புச்சொல்லி அவரா அழுதுபாடுறாரு:

‘நாலுபோகம் வெளைஞ்சகாடு நாளைக்கு என்னதில்ல
நெஞ்சமுட்டும் கண்ணீரு நில்லுன்னா நிக்குதில்லை
புடிச்சுவச்ச என்னுசுரு போ ன்னாப் போகுதில்ல.’


ஆகாயத்தையும் பூமியையும் அவரு கையைடுத்துக் கும்பிட்டு ரெண்டு
 கையாலும் அகலமா விரிச்சு, தங்கத்தூளா நெனச்சு மண்ணை அள்ளி
மடியேந்தி நின்னவுகளுக்கெல்லாம் போட்டாரு. மண்ணவிடமாட்டேன் என்றுகடைசிவரைக்கும் கருமாயப்பட்ட ஆள, கடைசியாமண்ணு விடல.
ஒரு மகாமனுசனக் கொன்டுபுட்டமேன்னு ஒரு நிமிசம்கூட மவுனம் காக்காம அதுபாட்டுக்குப் பேசிக்கிட்டேயிருந்துச்சு அல.

உண்மைதான், மண்ணைக் காத்துநின்ற இப்படி எத்தனை மகாமனிதர்களை வங்கக்கடல் பலி எடுத்திருக்கிறது. அந்த மகாமனிதர்களிள் அருமை ஆரவாரிக்கும் கடலலைக்கோ, மனித நேயமற்றவர்களுக்கோ புரியாமல் இருக்கலாம், ஆனால் இதயமுள்ள ஒவ்வொரு தமிழனுக்கும் புரியும்!

வானத்திலிருந்து ஒரு நட்சத்திரம் உதிர்ந்தாலும் மரத்திலிருந்து ஒரு பூ உதிர்ந்தாலும் இழப்பு இழப்புத்தான்!


இதிகாசம் எனில் இது நிச்சயமாய் நடந்தது என்று பொருள். 42 ஆண்டுகளாய் நெஞ்சில் தூக்கிச் சுமந்த துயரத்தை ஆனந்தவிகடனில் பவளவிழாவில் ‘கள்ளிக்காட்டு இதிகாசமாய்’ இறக்கி வைத்ததாக கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் குறிப்பிடுகிறார்கள். கடைசி அத்தியாயம் எழுதி முடித்த கனத்த மனதோடு, வைகை அணையின் மதகில் படுத்துப் புரண்டுகொண்டே இந்தப் படைப்புக்காகத்தான் காலம் எங்களைத் தண்ணீரில் அமிழ்த்துப் பிழிந்து தரையில் வீசியதோ என்று கடைவிழியில் நீரொழுக நீரொழுக நினைத்துக் கிடந்தேன் என்று ஆனந்தம் துக்கம் என்ற இரண்டுக்கும் மத்தியில் ஒரு மனநிலையோடு குறிப்பிடுகின்றார்.

சாராயம் காய்ச்சுவது முதல் சவரத் தொழில்வரை கேட்டு-பார்த்து-பேசி- பழகிப்-பயின்று கொண்டேன் என்று மேலும் குறிப்பிடும் கவிப்பேரரசு, இந்த இதிகாசத்தைத் தொடர்ந்து, இன்று ஆனந்தவிகடனில் ‘கருவாச்சிக் காவியம்’ படைத்துக் கொண்டிருக்கிறார். கவிப்பேரரசுவின் கவிதைநயம் மிக்க வார்த்தையாடல்கள், யதார்தமான வசனநடைகள், அடுத்து என்ன நடக்கும் என்ற திருப்பு முனைகள் வாசகர்களின் தொடர்ந்து படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது. இலக்கிய ஆர்வலர்கள் ஒவ்வொருவரும் படித்துப் பயன்பெறவேண்டிய இதிகாசமிது. கவிப்பேரரசு வைரமுத்துவின் இலக்கியப்பணி பாராட்டும், பலபரிசுகளும் பெற்று மேலும் சிறப்புற வாழ்த்துகின்றேன். என்றாவது ஒரு நாள் ஈழத்தமிழரின் கண்ணீர்கதையும் காவியமாகும், ஈழத்தமிழன் பூண்டோடு அழித்தொளிக்கப்பட்டாலும், நாளைய சரித்திரம் அதைச் சொல்லும்! அப்பொழுதாவது மனித நேயம் மிக்கவர்கள் ஈழத்தமிழரின் நியாயமானபோராட்டத்தைப் பற்றிப் புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையோடு,   அன்புடன் - குரு அரவிந்தன்.

Tuesday, December 4, 2012

LIFE OF PIE - லைவ் ஒவ் பை- பாம்பே ஜெயஸ்ரீ

Life of Pi

லைவ் ஒவ் பை

விமர்சனம் : குரு அரவிந்தன்
Director : Ang Lee 

Cast : Suraj Sharma, Irrfan Khan, Gérard Depardieu, Tabu, Ayush Tandon, Adil Hussain
Life of Pi is a 2012 American adventure drama film based on Yann Martel's 2001 novel of the same name.
A 16 year-old Indian boy's passage to a new life in America aboard a freighter ends in a shipwreck in the Pacific. He is left to fend for himself on a life raft with an orangutan, a zebra, a hyena and a Bengal tiger.


இசையமைப்பாளர் மைக்கேல் டேன்னாவின் இசையில் கண்ணே கண்மணியே கண்ணுறங்கு என்ற தாலாட்டுப் பாடலைப் பாடிய பாம்பே ஜெயஸ்ரீயின் தமிழ் பாடலும் ஆஸ்கார் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலை எழுதியவரும் ஜெயஸ்ரீதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடலுக்கு கனடாவைச் சேர்ந்த இசையமைப்பாளர் மைக்கேல் டேன்னா இசை அமைத்துள்ளார்.சிறந்த நாவலுக்கான பரிசைப் பெற்ற இந்தக் கதை இப்போது  திரைப்படமாக்கப்பட்டிருக்கின்றது. 

பாண்டிச்சேரியில் நடக்கும் ஒரு சம்பவத்தைப் பின்னணியாகக் கொண்டது. அடிக்கடி தமிழ் வசனங்கள் இடம் பெறுகின்றன.
கண்ணே கண்மணியே கண்ணுறங்கு என்ற பாடலுடன் படம் ஆரம்பமாகிறது.

பிரபல நடிகர்களான தபு, சுராஜ் சர்மா, இர்பான் கான் போன்றவர்கள் நடித்திருக்கிறார்கள். பசுபிக் கடலில் உயிருக்குப் போராடும் காட்சி தமிழ் மக்கள் அகதிகளாகச் சென்று கடலில் அவதிப்படுவதை நினைவில் கொண்டு வருகின்றது.


 பிரபல இயக்குநர் ஆங்-லீ இயக்கி,
3டீ (3D) யில் இந்தப் படம் எடுக்கப்பட்டிருப்பது காட்சிகளுக்கு மேலும் வலுவூட்டுகின்றது. மிருகங்களும் இந்தப் படத்தில் நடிக்கின்றன.சினிமா ரசிகர்கள் ஒருதடவை பார்க்க்கூடிய படம் என்று பரிந்துரைக்கலாம்.

Wednesday, November 21, 2012

சிந்து மனவெளி - Sindhu Manavelie

சிந்து மனவெளி 

குரு அரவிந்தன்

னம் குழம்பிப்போய் சஞ்சலப்பட்டது. இந்தத் திரைப்படத்தைப் பார்த்திருக்கக்கூடாதோ என்று எண்ணத்தோன்றியது. சஞ்சலம் என்பது எப்போதும் எவருக்கும் வரலாம். இதுவரை தப்பாய் நினைக்காத ஒன்றைத் தப்புத் தப்பாய் நினைக்கவும் வைக்கலாம். எப்போதாவது நேரம் கிடைத்து, நல்ல திரைப்படம் என்று யாராவது சொன்னால், அல்லது ஒரு படத்தைப்பற்றி நல்ல விமர்சனம் எழுதப்பட்டிருந்தால் நான் திரையரங்கத்திற்குச் சென்று அந்தப் படத்தைப் பார்ப்பதுண்டு. இதைக்கூட ஒரு நண்பன் தான் நல்ல கலைப்படைப்பு என்றான்.


ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ரசனை பிடிப்பதால், இவனது ரசனை எப்படிப் பட்டது என்பது எனக்குத் தெரியாது. ஆனாலும் அவன் இந்தப் படத்தைக் கட்டாயம் போய்ப்பார்க்க வேண்டும் என்று வற்புறுத்தியிருந்தான். சில மலையாளப் படங்கள் போல யதார்த்தமாய் இருக்கிறது என்றும், குழந்தைகளோடு சென்று பார்க்கமுடியாத திரைப்படம் என்றும் வேறு சொல்லிவைத்தான். அவனுக்கு இது கலைப்படைப்பாகத் தெரிந்திருக்கலாம். அது கலையா இல்லையா என்பது ஒவ்வொருவரின் பார்வையையும், ரசனையையும் பொறுத்தது. குழந்தைகள் பற்றிய அந்தக் கவலை எனக்கு இல்லாததால்தான், தனியே சென்று அந்தத் திரைப்படத்தைத் தியேட்டரில் பார்த்தேன். மனைவியோடு கூடச் சென்று அந்தப் படத்தைப் பார்த்திருக்கலாம். ஆனால் அந்தக் கொடுப்பனவு எனக்கு இருக்கவில்லை. அவளுக்கோ திரையரங்கத்திற்கு வந்து திரைப்படம் பார்ப்பதில் அதிக ஆர்வம் இருக்கவில்லை. பெரியதிரைக்கு முன்னால் உட்கார்ந்திருந்தால் வாந்தி வருவது போல் இருக்கிறது என்பாள். என்ன காரணமோ தெரியவிலிலை, வீட்டுக்குள் அடைந்து கிடப்பதிலேயே அவளது அதிகமான நேரம் செலவானது.


‘தேவையில்லாமல் என்னைச் சங்கடத்தில் மாட்டிவிட்டானே நண்பன்’ என்று மட்டும் சொல்ல மாட்டேன். அது கொஞ்சம் ஆழமான தாக்கத்தைத் தரும் படம்தான் என்பதைப் படம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே நான் புரிந்து கொண்டேன். இப்படிப்பட்ட படங்கள் என்றால் அது கொஞ்ச நாளைக்குப் படம் பார்த்தவர்களின் மனதைக் குழப்பிக் கொண்டுதானிருக்கும். அது போலத்தான் நண்பன் சிபாரிசு செய்த இந்தப் படமும் மனசைக் குழப்பிக் கொண்டிருந்தது. அதற்குக் காரணமும் இருந்தது.

மாமனுக்கும் மருமகளுக்கும் இடையே தற்செயலாக, எதிர்பாராத ஒரு சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட நெருங்கிய உறவு பற்றியதாக அந்தப்படம் அமைந்திருந்தது. அவர்களின் அந்த உறவு தொடர்வதற்கும் சந்தர்ப்ப சூழ்நிலைகள் அவ்வப்போது காரணமாய் அமைந்திருந்தன. பெண் என்பவள் கொஞ்சம் அழகாகவும், இளமையாகவும் இருந்து விட்டால் ஈர்ப்பும் அதிகமாகத்தான் இருக்குமோ தெரியாது. ஆனால் பெண்கள் சம்பந்தப்பட்ட விடயமாயிருந்தால், தெரிந்தோ தெரியாமலோ ஆழ்மனசில் எங்கேயாவது காயப்பட்டிருந்தால் மனசு ஒரேயடியாய்க் குடைஞ்சு கொண்டேதானிருக்கும். அப்படி ஒரு சம்பவம் என்னுடைய மனசிலும் புகுந்து என்னையறியாமலே என்னைக் குடைந்து கொண்டு இருந்திருக்கலாம். அல்லது சின்னவயதில் இருந்தே அப்படி ஒரு பிரேமை எனக்குள் ஏற்கனவே இருந்திருக்கலாம். சந்தேகம் பொல்லாதது, சந்தேகம் வரக்கூடாது, வந்தால் குடும்பத்தையே அழித்து விடும் என்று புத்திமதி சொல்வார்கள். அதற்காகப் பொறுமையாக இருந்தாலும், கண்முன்னால் நடப்பதைப் பார்த்துக் கொண்டு எப்பொழுதுமே இளிச்சவாயனாக இருந்துவிட முடியுமா?


சின்ன வயதிலே இப்படித்தான் ‘தி பேர்ட்ஸ்’ என்ற ஒரு ஆங்கிலப்படத்தைப் பார்த்தேன். படம் வெளியாகிப் பல வருடங்களின் பின் உள்ளுர் சினிமாவில் அந்தப் படம் ஓடியது.  பறவைக் கூட்டங்கள் மனித இனத்தைத் தாக்குவது போன்ற படம். டப்னி டியு மொரியர் என்பவரால் எழுதப்பட்ட கதை, திகில்பட மன்னன் அல்பிரெட் ஹிக்காச் என்பவரின் நெறியாள்கையில் வெளிவந்தது. மறுநாள் காலையில் எழுந்து பின் வளவில் உள்ள கிணற்றடிக்குக் குளிக்கப் போனபோது காகம் ஒன்று வேலியில் உட்கார்ந்து தலை சாய்த்து என்னைப் பார்த்தது. எனக்குத் தி;க்கென்றது. தாக்குதலுக்கான எடுப்புப்போல என்னைப் பார்த்தபடி ‘கா கா’ என்று அடித்தொண்டையில் கத்திக் கூக்குரலிட்டது. கழுத்தைச் சிலிர்த்து, செட்டையை மெதுவாக விரித்து தாக்குதலுக்குத் தயாராகுவது போல அதன் நடவடிக்கை இருந்தது. அவ்வளவுதான், முதல்நாள் பார்த்த படத்தின் ஞாபகம் வரவே ஒரே ஓட்டமா ஓடி வீட்டிற்குள் மறைந்து கொண்டேன். புலம் பெயர்ந்து இந்த மண்ணுக்கு வந்த பின்பும் அந்தப் பயம் இங்கேயும் தொடர்ந்தது. இப்பொழுதும் அப்படிப் பறவைகளைக் கூட்டமாகக் கண்டால் சிலசமயங்களில் உடம்பு சிலிர்க்கும். ஏனென்றால் இந்த மண்ணில் காகங்கள் அதிகம் இல்லாவிட்டாலும், அதற்குப் பதிலாக எங்கே பார்த்தாலும் அந்தப் படத்தில் வந்தது போன்ற நிஜப்பறவைகள் இருந்தன. அதைப் போலத்தான், இந்தப் படத்தைப் பார்த்த போதும் என் மனதில் ஏற்கனவே சஞ்சலம் இருந்ததால் சந்தேகம் என்ற பிசாசு என்னைத் தாவிப் பிடித்துக் கொண்டது. படத்தைப் பார்த்ததால் தான் அந்த சந்தேகம் வந்ததா, அல்லது என் மனதில் ஏற்கனவே சஞ்சலம் பதுங்கி இருந்ததா தெரியவில்லை. ஆனாலும் புகைந்து கொண்டிருந்த நெருப்பிற்கு எண்ணெய் ஊற்றியது போல அந்தப் படத்தைப் பார்த்ததும் கொஞ்சநஞ்சம் இருந்த சந்தேகமும் கொழுந்து விட்டெரியத் தொடங்கியது.


கண்ட கண்ட குப்பை எல்லாம் வாசிக்கக் கூடாது என்று பிடிவாதமாக இருந்தாலும், புலம் பெயர்ந்த மண்ணில் மாற்றுக் கருத்துச் சொல்கிறோம் என்று சொல்லிக் கொண்டு ஒருசாரார் தங்களுக்கு ஏற்ற சில கருத்துக்களை வெளிப்படையாகவே முன்வைக்கின்றார்கள். ‘ஆதாமுக்கும் ஏவாளுக்கும் பிறந்தவர்கள் யாரோடு உறவு வைத்துக் கொண்டார்கள் தெரியுமா?’ என்று வாய் கூசாமல் கேட்கிறார்கள். எகிப்திய இளவரசியாக இருந்த கிளியோபட்ராவும் எகிப்திய மன்னனும் சகோதர உறவு கொண்டவர்கள் என்று தெரிந்திருந்தாலும் அவர்கள் இருவரும் அரசியல் தேவைகருதி மணந்து கொள்ளவில்லையா, அந்த நாட்களில் அரச குடும்பத்தில் இதெல்லாம் சகஜம்தானே என்கி;றார்கள். அரச பரம்பரைக்குள்ளேயே சந்ததி பெருக வேண்டும் என்பதால் இன்று தகாதஉறவு என்று சொல்லப்படுவதைக்கூட அவர்கள் அன்று நியாயப்படுத்தி ஏற்றுக் கொண்டார்களாம். அரச குடும்பம் என்பதால் சரிபிழை சொல்லாமல், வாயைத் திறக்காமல் எல்லோரும் மௌனமாக ஏற்றுக்கொண்டார்கள், இதுவே ஒரு சாதாரண குடும்பத்தில் நடந்திருந்தால் ஒரு பிரளயமே நடந்திருக்காதா?


திரைப்படம், சின்னத்திரை என்று அதன் பாதிப்பு கொஞ்ச நாட்களாக மண்டையைக் குடைந்ததில், மனம் சஞ்சலப்பட்டுக் கொண்டேயிருந்தது. போதாக் குறைக்கு இந்தப் படம் என் மனநிலையை மேலும் குழப்பிவிட்டது. இப்படித்தான் சென்ற வாரத்தில் ஒருநாள் எங்கள் மாலைநேர விரிவுரையாளர் சொல்லிக் கொண்டிருந்த பாடம் தலைக்குள் ஏறவில்லை. அனேகமான பெண்கள் அவர்களது குடும்பத்தோடு நெருங்கிப் பழகுபவர்களால் தான் பாலியல் நெருக்கடிக் குள்ளாக்கப் படுவதாக விரிவுரையாளர் சொல்லிக் கொண்டிருந்தார். அது மட்டுமல்ல, தப்புச் செய்தால் அதை மூடிமறைப்பதற்காக அவர்கள் பெண்களுக்குப் பிடித்தமான ஏதாவது பரிசுப் பொருளை வாங்கிக் கொடுத்தோ அல்லது அவர்களை மிரட்டியோ சமாளித்து விடுவார்களாம். வெளியே தெரிந்தால் குடும்பத்துக்குள் பூகம்பமே வெடிக்கும் என்ற பயத்தால் பாதிக்கப்பட்ட பெண்களும் அதை வெளியே சொல்லாமல் மறைத்து விடுவார்களாம். ஒரு முறை தப்பு செய்தவர்கள் தொடர்ந்தும் தப்புச் செய்ய இந்தப் பயம் வழிவகுத்து விடுமாம். தப்பித் தவறிப் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றித் தெரியவந்தால், அவர்களின் பலவீனத்தை மற்றவர்களும் தங்களுக்குச் சாதகமாகப் பாவிக்கத் தொடங்கி விடுவார்களாம். விரிவுரையாளரின் இந்த வார்த்தைகள் சும்மா இருந்த மனதில் சந்தேகம் என்ற புகையை மெல்லக் கிளப்பி விட்டது. நிஜவாழ்க்கையில் அப்படி எல்லாம் இருக்காது என்று உள்மனம் மறுத்தாலும் நெருப்பில்லாமல் புகையுமோ என்ற ஒரு கேள்வியும் உடனேயே தலைதூக்க, மறுப்புச் சொல்ல முடியாத மனசோ  நெருப்பை ஊதி வேடிக்கை பார்த்தது.


அந்த விரிவுரையாளரின் விரிவுரை, எங்க வீட்டில் தினசரி நடப்பதை அப்படியே படம் பிடித்துக் காட்டுவது போன்ற ஒரு மாயையே எனக்குள் உருவாக்கி விட்டிருந்தது. தைப்பொங்கல் தீபாவளி என்றால் சிந்துவின் மாமாவும் துணிமணிகள் வாங்கித் தருவார். சிந்துவிற்குப் பிடித்தமாதிரியே அவரது செலக்ஷன் இருக்கும். முன்கூட்டியே சிந்துவிடம் கேட்டுத்தான் அவளுக்குப் பிடித்தமானதை வாங்கிக் கொண்டு வருகிறாரோ அல்லது அவருடைய மனம் நோகக்கூடாது என்று சிந்து அவர் கொண்டு வந்ததை எல்லாம் தனக்குப் பிடித்திருக்கிறது என்று சொல்லிக் கொள்கிறாளோ தெரியவில்லை. நான் ஆசைப்பட்டு எதையாவது வாங்கிக் கொண்டு வந்தாலும் அது அவளுக்குப் பிடித்தமாதிரி இருப்பதில்லை. குற்றம் குறை கண்டு பிடித்து முகத்தில் அறைந்தது போல நேரடியாகவே சொல்லிவிடுவாள். என்னிடம் குறை கண்டு பிடிப்பற்கென்றே காத்திருப்பது போல, அப்படி ஏதாவது ஒரு சந்தர்ப்பத்திற்காக எப்பொழுதும் காத்திருப்பாள். ரொம்ப நாளாய் இவளது இத்தகைய செய்கை  என் மனதைப் புண்படுத்திக் கொண்டே இருந்தது. மெல்ல மெல்ல எதற்கெடுத்தாலும் என்னை அசட்டை செய்வதும், வேண்டுமென்றே மாமாவைப் புகழ்ந்து பேசுவதும் தினசரி நிகழ்வாகிக் கொண்டிருந்தது.
வெளியே சென்றுவிட்டு வீட்டுக்குள் வந்தால் எப்போதுமே சிகரட்புகை நாற்றம் குப்பென்று மூக்கைத் துளைக்கும்.


‘இதென்ன வீடெல்லாம் சிகரட் புகை மணக்குது.’ பொறுக்க முடியாமல் ஒருநாள் கேட்டேன்.
‘சொன்னால் மாமா கேட்கிறார் இல்லை. சிகரட் குடிச்சுக் குடிச்சே அவருடைய உடம்பு பழுதாப் போகுது.’ என்றாள் சிந்து.
அவருடைய உடம்பு பழுதாகிறதே என்கிற கரிசனை அவளுக்கு வேறு!
‘நான் இப்போ அதைக் கேட்கவில்லை. வீடெல்லாம் நாறுது என்றுதானே சொன்னேன்.’
‘அதற்கு நான் என்ன செய்யிறது’ என்றாள் சிந்து.
‘சிகரட் பிடிக்கிறதென்றால் வெளியே போய் நின்று பிடிக்கச் சொல்லு, வீட்டுக்குள்ள பிடிக்க வேண்டாம்.’ குரலை உயர்த்தினேன்.
‘நான் எப்படி அவரிட்டைச் சொல்லுறது?’ என்றாள்.
‘ஏன்?’ என்றேன்.
‘அவரை நம்பித்தானே நாங்க இருக்கிறோம்.’
‘என்ன சொல்லுறாய்?’
‘இல்லை, அவர் தர்ற பணத்திலதானே நாங்க வீட்டிற்கு மோட்கேஜ் கட்டிறோம் என்று சொல்ல வந்தேன்’ என்றாள்.
 அதற்காக வீட்டு மோட்கேச் கட்டக்கூட வக்கில்லாதவன் இவன் என்று என்னைச் சொல்லிக் காட்டுகின்றாளா?
‘பார்க்கப்போனால் இது அவருடைய வீடுதானே, நாங்க எப்படி அவரை வெளியே நின்று சிகரட் பிடிக்கச் சொல்கிறது.’
‘அப்போ நாங்க வெளியே போகணும் என்கிறியா?’ என்றேன் கொஞ்சம் கடுப்பாக.
‘மாமா அப்படிச் சொல்லவில்லை, நாங்க அவருக்கு மதிப்புக் கொடுக்கணும்?’
‘என்னைவிட மாமாதான் உனக்கு உசத்தியா?’
‘ஏன் அப்படி எல்லாம் நினைக்கிறீங்க?’
‘அப்படித்தானே நீ நடக்கிறாய்!’


மாமா மீதிருந்த வெறுப்பை அவளிடம் உமிழ்ந்து விட்டு நடந்தேன். எடுத்ததற்கெல்லாம் மனைவி ஏதாவது பதில் சொல்வதும், மாமாவிற்காகப் பரிந்து பேசுவதும் எனக்கென்னவோ இதெல்லாம் வேண்டா விவாதம் போலத்தான் இருந்தது. அவளுக்கு மாமாமீது ஏன் இவ்வளவு பாசம் என்பதுதான் எனக்குப் புரியாமல் இருந்தது. ஒரு விபத்தில் தாய் தந்தையரை இழந்தபின் சிந்துவை அவளுடைய இந்த தாய்மாமன்தான் எடுத்து வளர்த்தாராம். சொற்ப காலத்தில் மாமி நோய் வாய்ப்பட்டடு இறந்த போதும் சிந்துவை வளர்த்து ஆளாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மாமா மறுமணம் செய்து கொள்ளவில்லையாம். இந்த மாமா மருமகளிடம் காட்டுவது பாசமா, அல்லது அளவிற்கு மிஞ்சிய அன்பா, என்ன என்பதில்தான் எனது சந்தேகம் ஆரம்பித்தது. தப்பாக எதையும் நினைக்கக்கூடாது என்றுதான் இதுவரைகாலமும் இருந்தேன், ஆனால் நான் பார்த்த இந்தப் படத்தின் ஆளுமை என் மனசைக் குழப்பிக் கொண்டே இருந்தது.


இரவுக் காட்சி பார்த்துவிட்டு வீட்டிற்குத் தாமதமாக வந்தபோது, படத்தில் வந்த சில காட்சிகளின் தாக்கத்தால் மனம் குழம்பிப்போய்க் கிடந்தது. வாசல் மணியடித்து சற்று நேரம் சென்றுதான் சிந்து வந்து கதவைத் திறந்தாள். மாடியில் இருந்து அவள் கீழே இறங்கி வருவதற்குச் சற்று நேரம் எடுத்திருக்கலாம். சாதாரண நாளாக இருந்திருந்தால் பொறுமையோடு காத்திருந்திருப்பேன். நான் பார்த்த படத்தின் பாதிப்பு என்னைப் பொறுமை இழக்க வைத்தது. கதவைத் திறந்ததும் வழமையாக குப்பென்று அடிக்கும் சிகரட்வாசம் அன்று அடிக்கவே இல்லை.


ஒருவேளை மாமா வீட்டில் இல்லையோ என்று நினைத்தேன். மாடிப்படி ஏறும்போது குளியல் அறையில் தண்ணீர்ச் சத்தம் கேட்டது. வேறுயாராக இருக்கும், அது மாமாவாக இருக்கலாம். படுக்கை அறையில் சட்டையைக் கழற்றி மாட்டும் போதுதான் அவதானித்தேன், வாசலில் மணக்காத சிகரட்புகை படுக்கை அறைக்குள் நுழைந்து விட்டது போன்ற உணர்வு திடீரென எனக்கு ஏற்பட்டது. மனசுக்குள் படம் ஓட, வேண்டாத கற்பனையால் மனம் சஞ்சலப்பட்டு மனைவியை நிமிர்ந்து பார்க்கவே கூசியது. படுக்கையில் சரிந்தபோது, எதையோ முணுமுணுத்தபடி கழற்றிப் போட்ட எனது சட்டைக்கருகே நகர்ந்த மனைவி மூக்கை உறுஞ்சி மோப்பம் பிடிப்பதையும், முகத்தைச் சுழிப்பதையும் என்னால் அவதானிக்க முடிந்தது. சிகரட்புகை எனது சட்டையில் மணத்ததா அல்லது அறைக்குள் மணத்ததா என்பதில் இப்போ எனக்குள் குழப்பமாக இருந்தது.

Opportunity - சந்தர்ப்பம்

 
 
உங்கள் மனதில் உள்ளதை யாருடனாவது பகிர்ந்து கொள்ளலாம்,
ஆனால் சிலசமயம் அவர்கள் சந்தர்ப்பவாதிகளாக மாறிவிடக்கூடும்
என்ற எண்ணத்தை நினைவில் வைத்திருங்கள்

Saturday, November 17, 2012

Short story 2nd Prize- அரசமரத்தடிப் பிள்ளையார்

பிரபல எழுத்தாளர் குரு அரவிந்தனின் ஆதரவுடன் யாழ்ப்பாணம் வெற்றிமணி பத்திரிகை நடத்திய அகில இலங்கை கல்லூரி மாணவர்களுக்கான சிறுகதைப் போட்டியில் இரண்டாவது பரிசு பெற்ற சிறுகதை.


அரசமரத்தடிப் பிள்ளையார்


(செல்வி. சோபிதா இளங்கோ – வேம்படி மகளிர் கல்லூரி)


மாலை நான்கு முப்பது மணியைத் தாண்டிவிட்டது என்பது வெயிலின் தன்மையிலும் வயல் வெளியில் நெற்கதிர்களின் சிணுங்கலுடன் வீசும் தென்றலில் இருந்தும் புரிகிறது. பிரமாண்டமாய் வளர்ந்து விரிந்து நிமிர்ந்து நிழல் தரும் அரசமரத்தின் கீழ் ஏங்கிய முகத்துடன் வயல் வெளியை வெறித்து பார்த்தபடி இருக்கும் ஏழு வயதே நிரம்பிய அவள் முகத்தில் ஏன்தான் இத்தனை சோகம் கலந்த ஏக்கமோ தெரியவில்லை.


இறுதிநேரக் கோரயுத்தத்தில் அவள் இழந்தது அதிகம்தான். கனகராயன் குளத்தில் தொடங்கிய இழப்பு வவுனியா முகாம்வரை தொடர்ந்தது. தாயின் இழப்பிற்கு முன்னால் செல்லடியில் தனது கால் ஒன்றை இழந்ததைக்கூட அவள் பெரிது படுத்தவில்லை. உயிரைக் கையிலே பிடிச்சுக் கொண்டு தந்தை கந்தசாமியோடு வவுனியா முகாமில் கிடந்து இழுபட்டு கடைசியாய் யாழ்ப்பாணத்தில் சண்டிலிப்பாய் வந்ததும், தூரத்து உறவினருக்குச் சொந்தமான வெறும் வளவில் நாலு கிடுகு வைச்சு சின்னதா ஒரு கொட்டில் கட்டி வழுகின்ற இவளுக்கு இந்த அரசமரம்தான் வளர்ப்புத்தாய்.


பெரும் சத்தத்துடன் வயலுக்கும் அரசமரத்தடிக்கும் இடையே இருக்கிற தார் வீதியால் தென்னம் பாளை கட்டிய சொகுசு பஸ் ஒன்று சிங்கள பைலாப்பாடல் ஒலிக்க விசில் கைதட்டல் எனக் கடந்து சென்றது. மயூரி இமைக்காமல் அந்த பஸ் சென்ற பாதையைப் பார்த்தபடி இருந்தாள். அந்த பஸ் சற்றுத் தூரத்தில் இருந்த இராணுவ முகாமடியில் சென்று நிற்பதும் அதில் இருந்து இறங்கியவர்களில் சிலர் ஆரவாரத்தோடு இராணுவத்தினரைக் கட்டித் தழுவுவதும் இங்கிருந்தே அவளுக்குத் தெரிந்தது.


‘ஏ9 பாதை திறந்தாலும் திறந்தாங்கள் இந்தச் சனங்களின்ரை தொல்லை தாங்கமுடியேல்லை..!’ சினமான குரல் கேட்டுத் திடுக்கிட்டவள் வருவது அவளது நண்பி பறுவதம் என்பதைப் புரிந்து கொண்டாள். நண்பி என்றால் ஒத்த வயதில் இருக்க வேண்டுமா என்ன? நான்கு பிள்ளைகளையும் வெளிநாடு அனுப்பிவிட்டுப் பாவம் இப்போ அனாதைபோல இருக்கிறாள் பறுவதம் பாட்டி. அரைக் கூனலுடன் களைத்துப்போனவள் போல மயூரிக்குப் பக்கத்தில் உள்ள கல்லில் வந்தமர்ந்தாள். அரச மரமும் பாட்டியும்தான் அவளுக்கு ஆறுதலாய் இருப்பதால் பாட்டியைக் கண்டதும் அவளுக்கு உற்சாகம் பொங்கியது.


‘என்ன பிள்ளை எங்கட வானரப்படைகள் வரேல்லையே?’
அரசமரத்தடியில் வழமையாக விளையாடும் சிறுவர்களைத்தான் அப்படிப் பாட்டி சொல்கிறாள் என்றதும் மயூரிக்குச் சிரிப்பு வந்தது. பாட்டிக்கும் அவர்களுக்கும் அப்படி ஒன்றும் பெரிய பகையில்லை. மயூரியை நொண்டி என்று கேலி செய்வதும், அவளை அவர்களுடன் விளையாட்டிற்குச் சேர்ப்பதில்லை என்பதும்தான் பாட்டியைப் பெரிதும் பாதித்தன. அதுவே பாட்டிக்குப் பெரிய குறையாக இருந்தது


‘பாட்டி சும்மா இருங்கோ, அவங்களை ஒரு குறையும் சொல்லவேண்டாம், எனக்குக் கால் போனதுக்கு அவை என்ன செய்வினம், பாவங்கள்.’ என்றாள்.

எண்டைக்காவது ஒரு நாள் தன்னைப் புரிந்து கொள்வார்கள் தன்னையும் சேர்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை அவளுக்கு இருந்தாலும், ராஜன்தான் தன்னை ஏனோ எதிரியைப் பார்ப்பதுபோலப் பார்க்கிறான் என்று நினைத்துக் கொண்டாள். பாட்டியோ பழங்கதை புதுக்கதை என்று ஓயாமல்  ஏதாவது கதைத்துக் கொண்டிருக்க மயூரி அதைக் கேட்டுக் கொண்டிந்தாள். சிறுவர் கூட்டம் தூரத்தில் வருவது அவர்களின் கூச்சல் சத்தத்தில் புரிந்தது.

‘இவர்களை எப்படியாவது இண்டைக்கு என்னோட பேசவை கடவுளே’ என்று வேண்டிக் கொண்டாள். ராஜனோ மயூரியின் பக்கம் திரும்பாமல் தலையைத் திருப்பிக் கொண்டு செல்ல, மற்றவர்கள் கேலி செய்தபடி சென்றார்கள்.

‘உங்கைபாரு குரங்குக் கூட்டங்கள் வந்திட்டாங்கள். வா பிள்ளை வீட்டை போவம்.’ பாட்டி எழமுயற்சி செய்தபடி மயூரியை அழைத்தாள்.
‘இல்லைப்பாட்டி இருப்பம்’ மனமில்லாதவளாய் சொன்னாள் மயூரி.
‘ஏன் பாட்டி எனக்குக் கால் இருந்தால் என்னையும் விளையாட அழைத்திருப்பினம்தானே?’

பாட்டியின் மௌனம் அவளைத் திரும்பவும் பேசவைத்தது.
‘பாட்டி எனக்குக் கால் திரும்ப வராதா?’ அவள் ஏக்கத்தோடு கேட்டபோது, கண்களில் கண்ணீர் அரும்பியது.

‘பக்தியோட பிள்ளையாரிட்ட கேள் பிள்ளை, கட்டாயம் தருவார்’ என்ன சொல்வது என்று புரியாத பாட்டி அவளது தலையை மெதுவாக வருடிவிட்டாள்.

‘ஓடிவாங்கோ ஜயோ ஓடிவாங்கோ’ அவர்கள் கதைத்துக் கொண்டிருக்கும்போது சிறுவர்களிடம் இருந்து அவலக்குரல் கேட்டது.
மயூரி பக்கத்தில் கிடந்த தனது ஊன்றுகோலை எடுத்து அக்குளில் வைத்துக் கொண்டு அவர்களை நோக்கி நொண்டிக் கொண்டு ஓட, பறுவதம் பாட்டியும் பின் தொடர்ந்தாள்.

அங்கே மண் அகழ்வதற்காக வெட்டிய சிறிய குழியில் ராஜன் விழுந்து கிடந்தான். காலில் பலமான அடிபட்டதால் அவனால் மேலே ஏற முடியவில்லை. பிடித்து ஏறுவதற்கோ அல்லது அவனுக்கு உதவி செய்யப் பெரியவர்களோ இருக்கவில்லை. உடனே மயூரி குழியின் விளிம்பில் அமர்ந்து தன் ஊன்றுகோலின் கைப்பக்கத்தை உள்ளே விட்டு கால் பக்கத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்டு ராஜன் பிடிடா நான் தூக்கிவிடுறேன் எனத் தைரியமாகச் சொல்லப் பக்கத்தில் நின்ற சிறுவர்களும் சேர்ந்து ஊன்று கோலைப் பிடித்துக் கொண்டனர். ராஜன் ஊன்று கோலைப் பலமாகப் பிடித்துக் கொள்ள எல்லோரும் சேர்ந்து அவனை மேலே தூக்கி விட்டனர். மேலே வந்த ராஜனால் நடக்க முடியவில்லை. உடனே மயூரி தனது ஊன்று கோலை அவனது அக்குளுக்குள் திணித்து மெதுவாகத் தானும் கெந்திக் கொண்டு அவனோடு சேர்ந்து நடந்தாள். மற்றவர்கள் வீதிக்கு ஓடிச் சென்று அந்த வழியால் வந்த வாகனம் ஒன்றை மறித்து அவனை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.


மணி 5:00 ஐத் தாண்டிவிட்டது இதுவரை வழமையாக விளையாட வரும் ஒருவரையும் காணவில்லை. ராஜனுக்கு என்ன ஆனதோ அதுவும் தெரியாது, இந்தப் பாட்டி எங்கே போனாவோ தவித்துக் கொண்டிருந்தாள் மயூரி.

‘மயூரி..!’ ஒரு குரல் பின்னால் இருந்து கேட்கவே திரும்பிய அவளால் ஆச்சரியம் தாங்க முடியவில்லை.

காலில் வெள்ளைநிற கட்டுடன் நின்றான் ராஜன்.

‘மன்னிச்சிடு மயூரி உன்னை நான் நிறைய நோகடிச்சிட்டன் மன்னிச்சிடு’ என்ற ராஜனின் குரலில் மனசார அவன் சொன்னது புரிந்தது.
‘சரி சரி அதைவிடு, இனிமேல் நாங்க நண்பர்கள் சரியா’ என்றவள் வெகுளிபோலச் சிரித்தாள்.

‘போடி’ என்று செல்லமாக அடித்துவிட்டு ஓட முயன்றவன், ‘அ..ம்..மா’ என்று வலியால் கத்தினான்.

இதையெல்லாம் அவதானித்தபடியே அருகே வந்த பறுவதம் பாட்டி சிரித்தபடியே, ‘என்ன பிள்ளை மயூரி இப்பதான் உன்னோட அருமை புரிஞ்சதாமோ இவனுக்கு’ என்றாள்.


‘எங்களை மன்னிச்சிடுங்கோ பாட்டி, எங்கட மயூரியின்ரகால் சரிவராதா பாட்டி’ என்று ஏனைய சிறுவர்கள் ஆவலோடு கேட்டனர்.
‘ஏன் சரிவராது எல்லாரும் பிள்ளையாரிட்ட பக்தியோட வேண்டுகோள் விடுத்தால் சரிவந்திடும்’ என்றாள் பறுவதம் பாட்டி.

‘எங்கட ஊரிலைதான் பிள்ளையார் கோயில் இல்லையே’ என்றான் ராஜன்.
‘பாட்டி நீங்கதான் அடிக்கடி சொல்லுவீங்களே இந்த அரசமரத்தடியில் பிள்ளையார் இருந்தவர் என்று உங்கட அம்மா சொன்னவா எண்டு’

‘ஓம், ஓம் பிள்ளை, ஒவ்வொரு முறையும் போத்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் எண்டு அந்நியர்கள் படையெடுத்து வரும்போது எங்கடை கோயில்களைத்தான் முதல்ல உடைச் செறியிறவாங்களாம். அதுதான் அந்தக் காலத்தில பிள்ளையாரைக் கொண்டுபோய் கிணத்துக்குள்ள ஒளிச்சு வைக்கிறவையாம்.’


‘அப்ப அக்கம் பக்கத்து வீட்டுக் கிணறுகளுக்கை எங்கையாவது இப்பவும் பிள்ளையார் ஒளிச்சிருப்பாரோ தெரியாது’

‘இப்ப என்ன செய்வம் பாட்டி?’
‘ஒரு கல்லை வைச்சுக் கும்பிடுவமே’
‘இல்லை பாட்டி, எங்கடவீட்டில ஒரு சின்னப் பிள்ளையார் சிலை இருக்கு, வீட்டில கேட்டிட்டு கொண்டு வந்து தரட்டே’

‘நொண்டி நொண்டி திரியிற உனக்கு என்னத்துக்கு இந்த வேலை எல்லாம். பேசாமல் வீட்டில கிட. உன்ரை அம்மாவை அவங்கள் கென்றபோது, உன்ரை கால் துண்டாய் போனபோது எங்கை போயிட்டார் இந்தப் பிள்ளையார் இப்ப என்னத்திக்கு இதைத் தூக்கிக் கொண்டு போறாய்..?’ கந்தசாமியின் குரல் ஆவேசமாய் வெளிப்பட்டது.

நிலைமையைப் புரிந்து கொண்ட, வெளியே நின்ற பறுவதம் பாட்டிதான் உதவிக்குப் போனாள்.

‘என்ன தம்பி கதைக்கிறியள். அந்தப் பிஞ்சுக்கு உங்களை விட்டால் யார் துணை அவள் அரசமரத்தடியில பிள்ளையாரை வைச்சுக் கும்பிடப் போறன் எண்டு சொன்னதில என்ன தப்பிருக்கு கொஞ்சம் யோசிச்சுப் பாருங்கோ, இத்தனை பேரின்ர உயிரை அவங்கள் மிருகத்தனமாய் பறிச்சபோது இவளைக் காப்பத்தினதும் இந்தப் பிள்ளையார்தானே, ஏதோ அடுத்த சந்ததியாவது மிஞ்சியிருக்க வேண்டும் என்ற இரக்கத்திலதானே இவையையாவது மிஞ்சியிருக்க விட்டிருக்கிறார்.’ பாட்டியின் வார்த்தைகள் அவளது தகப்பனை சிந்திக்க வைத்தன.

மறுநாள் அரசமரத்தின் கீழ் முன்பு பிள்ளையார் இருந்த கருங்கல்லின்மேல் புதிய பிள்ளையாரை வைத்து விளக்கேற்றித் தீபம் காட்டி எல்லோரும் வழிபட்டார்கள். சின்னப் பிள்ளையார் எண்டாலும் ஊருக்கே வழிகாட்ட ஒரு வெளிச்சம் வந்தது போல எல்லோரும் உணர்ந்தார்கள்.

மறுநாள் இவர்கள் அந்த இடத்தை பெருக்கிச் சுத்தம் செய்தபோது ரீசேட்டும் டெனிம் காற்சட்டையும் அணிந்த வாட்டசாட்டமான ஒருவன் வந்தான். அவனது பார்வை அரசமரத்தடிப் பிள்ளையார் மேலிருந்தது. பிள்ளையாரை நோக்கி அவன் கோபத்தோடு செல்வதைக் கண்ட மயூரி அவசரமாக அவனைத் தடுக்க முயன்றாள். அவனோ அவளைத் தள்ளி விழுத்திவிட்டு ஆவேசத்தோடு பிள்ளையாரைத் தூக்கி வேகமாகத் தரையில் வீசி எறிந்தான்.

‘பாவி உன்ரை கை விளங்காதடா’ என்ற பாட்டியின் திட்டுதலையும் பொருட்படுத்தாது,

‘என்னைக் கேட்காமல் யார் இடத்தில யார் சிலை வைக்கிறது?’ என்று கண்டபடி அவர்களைத் திட்டினான்.

‘யார் பாட்டி இவன்?’ மயூரி தள்ளாடி எழுந்து பிள்ளையார் சிலையைக் கையில் எடுத்தபடி கேட்டாள்.

‘இவன்தான் இந்தக் காணியின் சொந்தக்காரனாம். எப்படி இவனுக்கு இந்தக் காணி சொந்தமானது எண்டுதான் தெரியேல்லை. ஒரே பணப்புழக்கமாயிருக்கு எங்கையிருந்து காசு கிடைச்சுதோ தெரியாது. இவன் ஒருக்காலும் ஊரோட ஒத்துப் போகமாட்டான். பிரச்சனைப் படுத்தவெண்டே இப்பிடி ஒவ்வொரு ஊரிலையும் ஒண்டுடிரண்டு இருக்குதுகள்.’ என்றாள் பறுவதம் பாட்டி.

‘எங்களை மன்னிச்சிடுங்கோ, உங்களைக் கேட்காமல் செய்தது எங்கட தப்புத்தான். உங்களுக்குப் பிடிக்காட்டி நாங்க போயிடுறோம்’ என்று சொல்லிக் கொண்டு மயூரி பிள்ளையார் சிலையோடு வெளியேற அந்த அரசமரம் தனித்துப்போய் நின்றது.

அவர்கள் வீதிக்கு வந்தபோது சுற்றுலா வண்டி ஒன்று இராணுவ முகாம் பக்கத்திலிருந்து வந்து அந்த அரசமரத்தடியில் நின்றது. அந்த பஸ் வண்டியில் வந்து இறங்கிய படையினரைத் தொடர்ந்து புத்த பிக்குமாரும் ‘புத்தம் சரணம் கச்சாமி’ என்று ஓதிக்கொண்டே இறங்கினார்கள்.

தலைமைப் பிக்குவின் கையில் புத்தர் சிலையொன்றிருந்தது.  அரசமரத்தடியில் அந்தச் சிலையை வைத்து வணங்கிவிட்டு ‘இது எங்க இடம், புரியுதா? என்று வீதியில் நின்று வேடிக்கை பார்த்தவர்களை மிரட்டிவிட்டு அவர்கள் அந்த சுற்றுலா வண்டியில் ஏறிச் செல்ல, அந்த மிரட்டலில் பயந்துபோன எல்லோரும் மௌனமாய்க் கலைந்து பேயினர்.


‘புத்தரைக் கண்டால் பக்தி வருவதற்குப் பதிலாகப் பயமல்லவா வருகுது’ என்று பறுவதம் பாட்டி தனக்குள் சொல்லிக் கொண்டே நடந்தாள்.


‘இந்த அந்நியர்கள், எவ்வளவு காலத்திற்கோ? ’ என்று வாய்க்குள் முணுமுணுத்த மயூரி, பிள்ளையார் சிலையை அணைத்தபடி கிணற்றடியை நோக்கி நொண்டி நொண்டி நடந்தாள்.Saturday, November 3, 2012

இலங்கை வானொலி - Ceylon Radio

இலங்கை வானொலியில் ஒலிக்காத பாடல்

(குரு அரவிந்தன்)


ற்செயலாக தொலைக்காட்சியில் அந்த நிகழ்ச்சியைக் காண நேர்ந்தது. விஜே தொலைக்காட்சியின் நீயா நானா என்ற அந்த நிகழ்ச்சியில் பங்குபற்றிய ஒருவர் இலங்கை வானெலியைப் பற்றிப் புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தார். அவரைத் தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் பங்கு பற்றிய பலரும் இலங்கை வானொலியைப் பற்றியே புகழாரம் சூடிக்கொண்டிருந்தனர். அவ்வப்போது நிகழ்ச்சி அமைப்பாளர் கோபிநாத்தும் அதைப்பற்றியே புகழாரம் சூடிக்கொண்டிருந்தார். இப்படிப் புகழ்ந்தவர்கள் வேறுயாருமல்ல, அத்தனை பேரும் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் இலங்கை வானொலி நேயர்கள். அவர்கள் புகழ்ந்தது இன்றைய இலங்கை வானொலியை அல்ல, எழுபது, எண்பதுகளில் ஒலிபரப்பிய அன்றைய இலங்கை வானொலியை என்பது அவர்கள் குறிப்பிட்ட பாடல்களில் இருந்து தெரிய வந்தது. அப்பொழுது அவர்கள் மாணவர்களாக, இளம்பருவத்தில் துள்ளித்திரிந்த காலம்.  கிராமங்களிலோ அல்லது நாட்டுப் பக்கங்களிலோ தொலைக்காட்சியே எட்டிப் பார்க்காத காலமது. அப்போது வானொலி ஒன்றுதான் அவர்களின் பொழுது போக்குச்சாதனமாக இருந்ததாம்.


அந்த நாட்களில் இந்திய வானொலியில் வர்த்தகசேவை இருந்தாலும் அது சரியான முறையில் இயங்கவில்லை. அதாவது மக்களைக் கவரக்கூடியதாக அதன் சேவை முழுநேர சேவையாக அமையவில்லை. அப்படி இல்லை என்று வானொலியைத் திருப்பினாலும் கர்நாடக சங்கீதமே காதில் கேட்கும். அதனால்தான் தென்னிந்தியாவில் பலரும் முழுநேர சேவையாற்றிய திரைப்படப் பாடல்களை ஒலிபரப்பிய இலங்கை வானொலியின் நேயர்களாக மாறியிருந்தனர். இதற்கு இன்னுமொரு காரணமும் சொல்லியிருந்தனர். அதாவது அந்த நாட்களில் எல்லோரிடமும் வானொலிப் பெட்டியை வைத்திருக்கும்  வசதி இருக்கவில்லையாம். நவீன சாதனங்களான ஒலிப்பதிவுக் கருவிகளும் அதிகம் இருக்கவில்லையாம். எனவே இசை ஆர்வலர்கள் இலங்கை வானொலி ஒலிபரப்பையே அதிகம் நம்பியிருந்தார்களாம். இளம் வயதினர் பலர் பக்கத்து வீட்டிலேயோ அல்லத உணவு விடுதிகளிலேயோ இருந்து ஒலிபரப்பாகும் இலங்கை வானொலிப் பாடல்களைக் கேட்கவேண்டிய சூழ்நிலையில் இருந்தார்களாம்.


இத்தனை பேரைக் கவர்ந்திழுத்த இலங்கை வானொலி 1922ம் ஆண்டுதான்  சோதனை முறையில் முதன் முறையாக ஆரம்பிக்கப்பட்டது. 1925ம் ஆண்டு கொழும்பு வானொலி என்ற பெயரில் இயங்கினாலும் 1949ல் தான் இலங்கை வானொலி எனப் பெயர் மாற்றப்பட்டது. பின் இதே இலங்கை வானொலிதான் 1967ல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமாக மாற்றப்பட்டது. இலங்கை வானொலியின் தமிழ் வர்த்தக சேவை ஒலிபரப்பாளராக ஈடுபட்ட அனைவருமே ஒரு காலத்தில் சினிமா கதாநாயருக்கு நிகராகக் கணிக்கப்பட்டார்கள். தமது கம்பீரமான குரலால் சர்வதேசம் எங்கும் நேயர்களைத் தேடிக் கொண்டவர்கள். முகம் காட்டாத கதாநாயகர்களாக, கதாநாயகிகளாக இருந்த இவர்களை நேரிலே சந்திக்க வேண்டும் என்று நேரடியாகவே பல மைல்கள் பயணம் செய்து இலங்கை வானொலி நிலையத்திற்கு வந்தவர்கள் பலர். இலங்கை வானொலி முற்றத்து மண்ணை எடுத்துச் சென்று பாதுகாப்பாகப் பூசை அறையில் வைத்த தமிழ் நாட்டு நேயர்களும் உண்டு என்று வானொலி நடிகர் கே. எஸ். பாலச்சந்திரன் ஒருமுறை குறிப்பிட்டதும் ஞாபகம் வருகின்றது.
அந்த வகையில் நான் சிறுவனாக இருந்தபோதும் சரி, பிற்காலத்தில் அந்த மண்ணில் வாழ்ந்த காலம் வரை இலங்கை வானொலி ஒலிபரப்பாளர்களாக ஈடுபட்டிருந்த பலரின் பெயர்கள் இப்பொழுதும் நினைவில் நிற்கின்றன. இவர்களில் வர்த்தக ஒலிபரப்பின் மூத்த அறிவிப்பாளராகக் கடமையாற்றிய எஸ்.பி. மயில்வாகனன் மறக்கமுடியாதவர். இவரைவிட வீ. சுந்தரலிங்கம், ராஜகுரு சேனாபதி கனகரட்ணம், வீ.ஏ. கபூர், எஸ். புண்ணியமூர்த்தி, எஸ்.கே. பரராஜசிங்கம், சற்சொரூபவதிநாதன், கே. எஸ். ராஜா, பி.எச். அப்துல் ஹமீட், விமல் சொக்கநாதன், சரா இமானுவேல், சில்வெஸ்டர் பாலசுப்ரமணியம், ராஜேஸ்வரி சண்முகம், பி.விக்னேஸ்வரன், ஜோர்ச் சந்திரசேகரன், எஸ். நடராஜசிவம், ஜோர்க்கிம் பெர்னாண்டோ, வி.என்.மதியழகன், மயில்வாகனம் சர்வானந்தா, ஆர். சந்திரமோகன், செல்வம் பெர்ணான்டோ, எஸ் கணேஷ்வரன், எழில் வேந்தன், கமலினி செல்வராஜன், கமலா தம்பிராஜா ,ஆகியோர் இப்பொழுதும் எனது நினைவில் நிற்கின்றார்கள். அதன் பின் பல அறிவிப்பாளர்கள் இலங்கை வானொலியில் திறம்படச் சேவையாற்றினாலும் அவர்களின் பெயர்களை எல்லாம் நினைவில் வைத்திருக்க முடியவில்லை.


இலங்கை வானொலியின் தமிழ் சேவை ஒன்றில் நாடகங்கள் பல இடம் பெற்றாலும், நான் அறிந்த வகையில் பி. விக்னேஸ்வரனின் நாடகங்கள் ஒரு காலகட்டத்தில் பல நேயர்களின் பாராட்டைப் பெற்றிருந்தன. எனது ஊரவர் மட்டுமல்ல, நான் படித்த நடேஸ்வராக்கல்லூரியில் அவரும் படித்ததால் படிக்கிற காலத்திலிருந்தே நான் அவரை அறிவேன். அதேபோல வர்த்தக சேவையான தமிழ் சேவை இரண்டில் இடம் பெற்ற நாடகங்கள் சில புகழ் பெற்ற நாடகங்களாக பலர் நேயர்கள் விரும்பிக் கேட்ட நாடகங்களாக இருந்தன. சில்லையூர் செல்வராஜனின் தணியாத தாகம், வரணியூரானின் இரைதேடும் பறவைகள், ராமதாஸின் கோமாளிகளின் கும்மாளம், கே. எஸ். பாலச்சந்திரனின் கிராமத்துக் கனவுகள் போன்றவை அந்தக் காலகட்டத்தில் பலராலும் கேட்கப்பட்ட புகழ்பெற்ற வானொலி நாடகங்களாக இருந்தன.


ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பாடல்கள் பிடிக்கலாம். அந்தப் பாடலின் இசைக்காக, அதன் பாடல் வரிகளில் வெளிப்படும் கருத்திற்காக, அந்தப் பாடல் வரிகளில் வரும் சம்பவங்களோடு அவர்களுக்கும் ஏதோ வகையில் தொடர்பிருப்பதற்காக, அந்தப் பருவத்தில் அவர்களைக் கவருவதற்கு ஏதாவது காரணமிருக்கலாம். விஜே தொலைக்காட்சியில் நடந்த அந்த நிகழ்ச்சியின்போது ஒருவர் நேரத்தின் மகத்துவத்தைச் சொல்லித் தந்தது இலங்கை வானொலிதான் என்று அதற்குரிய விளக்கமும் தந்தர்ர். இன்னுமொருவர் பிறந்தநாள் இன்று பிறந்தநாள் என்று தமிழில் தொடங்கும் போதே ஒரு புத்துணர்ச்சி மனசுக்கள் ஏற்பட்டுவிடும், இப்போதெல்லாம் ஹப்பி பார்த்டே என்று ஆங்கிலத்தில்தான் தொடங்குகிறார்கள் என்று குறைப்பட்டுக் கொண்டார். இன்னுமொரு நேயர் ‘தோல்வி நிலையென நினைத்தால்’ என்ற பாடலைக் கேட்கும் போதெல்லாம் ஈழத்தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்கப் பழகிக் கொண்டதாகக் குறிப்பிட்டார். நான்கூட மாணவனாக இருந்தபோது இந்தப் பாடலைக் கேட்டிருக்கின்றேன். இந்தப் பாடலை புளட் இயக்கத்தினர் தங்கள் சிற்றலை வரிசை வானொலியில் தங்கள் நிகழ்ச்சி தொடங்கும்போது தினமும் ஒலிபரப்புவார்கள். அகிம்சை முறைப் போராட்டம் எந்தப் பலனையும் தராது தோற்றுப் போனதால், தமிழ் இளைஞர்கள் ஆயுதப் போராட்டம் நோக்கித் தங்கள் பார்வையைத் திருப்பிய காலக்கட்டம் அதுவாக இருந்தது.


இதைவிட அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் தங்களுக்குப் பிடித்தமன பாடல்களின் சில வரிகளைப் பாடியும் காட்டினார்கள். இளமைப் பருவத்தில் இசையை ரசிக்கவும் நல்ல உணர்வுகளைத் துண்டிவிடுவதற்கும் காரணமாக இந்தப் பாடல்கள் இருந்தனவாம். ஜோடிகளாக வந்திருந்த பலர் தாங்கள் காதல் திருமணம் செய்வதற்கு இலங்கை வானொலியில் ஒலிபரப்பிய சிலபாடல்கள் ஒருவகையில் தங்களுக்கு உதவியதாகக் குறிப்பிட்டனர். பழைய நினைவுகளை மீட்டபோது, அவர்கள் குறிப்பிட்ட பாடல்களின் சிலவரிகளை இங்கே தருகின்றேன். நல்ல இசையோடு கூடிய அர்த்தமுள்ள பாடல்களாக அவை இருந்ததும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். இசையில் ஆர்வம் இருந்திருந்தால், நீங்கள்கூட இப்படியான பாடல்களைக் கேட்டிருக்கலாம். உங்களுக்குக்கூட இது போன்ற சில பாடல் அனுபவங்கள் கடந்தகாலத்தில் என்றாவது ஒருநாள் ஏற்பட்டிருக்கலாம். அப்படியானால், இப்போது உங்கள் நினைவுகளையும் ஒருமுறை மீட்டிப் பாருங்கள்.
இதோ அவர்கள் குறிப்பிட்ட பாடல் வரிகளைப் பாருங்கள். கண்ணில் என்ன கார்காலம், (படம்-உன்கண்ணில் நீர் வழிந்தால். வைரமுத்துவின் பாடல் வரிகள்) நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா (படம் இதயக்கோயில். வைரமுத்துவின் பாடல் வரிகள்), அன்னக்கிளி உன்னைத் தேடுதே, ஈரமான ரோஜாவே (இளமைக்காலங்கள்), அந்தி மழை பொழிகிறது, உனக்குமட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன், ஒரு நாள் உன்னை நான் பார்த்தது, மலரே என்னென்ன கோலம், விழியிலே கலந்தது உறவிலே மலர்ந்தது, உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டது, கண்ணன் ஒரு கைக் குழந்தை, நினைவோ ஒரு பறவை, என் தாய் என்னும் கோயிலிலே, உறவென்னும் புதிய,  வண்ணப்பூ சூடவா வெண்ணிலா, இந்த மேகக் கூந்தல் கலைந்தால், காதல் ஓவியம், ஆயிரம் மலர்களே மலருங்கள், உன் நெஞ்சிலே பாரம், உறவுகள் தொடர்கதை, உன்னை நான் பார்த்தது, கோவில் மணி ஓசை கேட்டது, மாஞ்சோலைக் குயிலே, பார்வை நூறு போச்சு, மின் மினிக்கு, நான் உங்கவீட்டுப் பிள்ளை, குயிலே குயிலே கவிக்குயிலே, நாலு பக்கம் வேடர் உண்டு., சித்திரச் செவ்வானம் சிரிக்க் கண்டேனே, என் இனிய வெண்ணிலாவே, ஒரே நாள் உனைநான் நிலாவில் பார்த்தது, மீன் கொடித் தேரில் மன்மத ராஜன், வான் நிலா நிலா அல்ல, மெட்டி ஒலி காற்றோடு, புத்தம் புதுக் காளை, பட்டுக் கன்னம் தொட்டு, அந்த மானைப் பாருங்கள் அழகு, நினைவாலே சிலை செய்து உனக்காக, காத்தாடி பாவாடை காத்தாட,  எங்கும் மைதிலி..மைதிலி என்னைக் காதலி, என்னைவிட்டு ஓடிப்போக முடியுமா, நான் தேடும் செவ்வந்திப் பூவிது (தர்மபத்தினி). இது போன்ற பல பாடல்களை அந்த நாட்களில் அவர்கள் கேட்டு ரசித்தார்களாம். இன்றும் நவீன வசதிகளைப் பயன்படுத்தித் தங்களுக்கு விருப்பமான அந்தப் பாடல்களை ஒலிப்பதிவு செய்து விரும்பிய நேரங்களில் போட்டுக் கேட்பதாகவும் அவர்களில் பலர் குறிப்பிட்டனர். இலங்கை வானொலி இன்று தென்றலாக மாறிவிட்டது. தெற்கேயிருந்த வருவதால் பொருத்தமானதுதான் என்கிறார்கள் தமிழகத்து நேயர்கள்.


இலங்கை வானொலியில் ஒலிபரப்பான பழைய பாடல்களில் எனக்குப் பிடித்தமான சில பாடல்களும் உண்டு. பாவாடைதாவணியில் பார்த்த உருவமா, நான் மலரோடு தனியாக ஏன் அங்கு நின்றேன் (இருவல்லவர்கள்), துயிலாத பெண் ஒன்று கண்டேன்.., காதல் நிலவே கண்மணிராதா.., நெஞ்சம் அலை மோதவே கண்ணும் குளமாகவே கொஞ்சும் ராதையைப் பிரிந்தே போகிறான்.. கண்ணன் ராதையைப் பிரிந்தே போகிறான். ( இந்தப் பாடல் எந்தப் படத்தில் என்று தெரியவில்லை. யாராவது தெரிந்தால் தயவு செய்து அறியத்தரவும்.) துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா? இசைக்காகவோ அல்லது அதில் உள்ள கருத்திற்காகவோ எனக்குப் பிடித்த பாடல் வரிசையில் இந்தப் பாடல்களும் அடங்கும்.


இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்படாத பல பாடல்களும் உண்டு. நான் குறிப்பிடும் இந்தப் பாடல் தடைசெய்யப்பட்டதாகும். இந்தப் பாடல் என்றைக்குமே இலங்கை வானொலியில் ஒலிபரப்பப் போவதில்லை. என்னதான் உங்கள் மனம் கல்லாக இருந்தாலும், ‘தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தணப் பேழைகளே’ என்ற இந்தப் பாடலை ஒரு கணம் கண்களை மூடி மௌனமாகக் கேட்டால் கரையாத கல்லையும் கரைய வைக்கும் யதார்த்தத்தைக் கொண்டதாகும். இந்தப் பாடல் ஒவ்வொரு தமிழனின் இரத்தத்திலும் கலந்து, உயிரில் உறைந்திருக்கிறது என்பதை மறுக்கவோ, மறைக்கவோ  முடியாது.

நாதஸ்வரம் - Natheswaram

குழல் இனிது…
குரு அரவிந்தன்


குழல் இனிது யாழ் இனிது என்ப தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர்’ குழந்தையின் இனிய மழலைச் சொற்களுக்கு அடுத்ததாக இனிமையாக இருப்பது குழலும் யாழும்தான் என்று திருவள்ளுவரே குறிப்பிடுகின்றார். குழல் என்ற சொல் யாழ்ப்பாண சொல்வழக்கில் இருக்கிறது. இது நாதஸ்வரம் என்ற இசைக்கருவியைக் குறிப்பதாகும். இதை நாகஸ்வரம் என்றும் அழைப்பர். தமிழர்களின் இசைக் கருவிகளில் யாழும் குழலும் முக்கியமானவை. புல்லாங்குழலையும் சங்க இலக்கியத்தில் குழல் என்று குறிப்பிடுவர். நான் இங்கே குழல் என்று சொல்லப்படுகின்ற நாதஸ்வர இசைக் கருவியைப் பற்றித்தான் குறிப்பிட வருகின்றேன்.


சினிமா ரசிகர்களுக்கு சிவாஜி கணேசன், பத்மினி நடித்த தில்லானா மோகனாம்பாள் (1968) என்ற திரைப்படம் ஞாபகம் இருக்கலாம். அந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் அந்தப் படத்தில் நாதஸ்வரம் வாசிப்பவராக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மிகவும் பிரமாதமாக நடித்ததுதான் என்பதை மறக்கமுடியாது. அவர் ஒரு உண்மையான நாதஸ்வரக் கலைஞன்போல மூச்சடக்கி வாசிப்பதையும், ஒரு கலைஞனுக்குரிய கர்வம் அவர் கண்களில் பளிச்சிடுவதையும் ரசிகர்களால் உணரமுடிந்தது. அவரோடு தவில் கலைஞராக டி.எஸ். பாலையா நடித்திருந்தார். கொத்தமங்கலம் சுப்புவின் கதையைத்தான் திரைப்படமாக்கியிருந்தார்கள். நலம்தானா.. நலம்தானா.. உடலும் உள்ளமும் நலந்தானா..? என்ற அந்தப்பாடலுக்கு உண்மையிலே நாதஸ்வர இசை கொடுத்தவர்கள் பிரபல நாதஸ்வர வித்துவான்களான மதுரை சேதுராமன் பொன்னுசாமி சகோதரர்களாவார்.  பாடலைப் பாடியவர் பின்னணிப்பாடகி சுசீலா ஆவார். இதனால் சேதுராமன் பொன்னுசாமி என்ற நாதஸ்வரக் கலைஞர்களும் தில்லானா மோகனாம்பாள் என்ற திரைப்படம் மூலம் புகழ் பெற்றிருந்தனர்.

அதற்குப் பலவருடங்களுக்கு முன் ஜெமினி கணேசன் நடித்த முதன் முதலாக ‘டெக்னிக்’ கலரில் வெளிவந்த கொஞ்சும் சலங்கை படத்திலும் (1962) சிங்காரவேலனே தேவா.. என்ற பாடல் பிரபலமாகியிருந்தது. இந்தப் பாடலுக்கு அட்சரசுத்தி பிசகாமல் நாதஸ்வரம் வாசித்தவர் காருக்குறுச்சி அருணாசலம் ஆவார். ஆபேரி ராகத்தில் அமைந்திருந்த அந்தப் பாடலைப் பாடியவர் பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி ஆவார். பின்னணிப்பாடகி பீ. லீலாவிற்குக் கிடைத்த அந்த வாய்ப்பை அவரது சிபார்சின் பேரில் பாடகி ஜானகி பெற்றுக் கொண்டார். இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் எஸ். எம். சுப்பையா. மிகவும் பிரபலமான இந்தப் பாடல் பதிவானபோது, நாதஸ்வரம் வாசித்த காருக்குறுச்சி அருணாசலமோ அல்லது பாடலைப்பாடிய பாடகி ஜானகியோ ஒருவரை ஒருவர் சந்தித்ததேயில்லையாம். இதுபோல சினிமாவில் நாதஸ்வரம் புகுந்ததால் கண்டும் காணாமல் இருந்த நாதஸ்வர இசை சினிமா மூலம் புகழ் பெறத்தொடங்கியது. நாதஸ்வரம் என்ற பெயரில் ஜேடி ஜெர்ரி என்ற இயக்குநர்களின் ஆக்கத்தில் ஒரு ஆவணப்படமும் சமீபத்தில் தமிழில் வெளிவந்திருந்தது.


இசை என்பது மொழிகளைக்கடந்த ஒரு தெய்வீக உணர்வு, தமிழ் காலாச்சாரத்தில் தனித்துவம் மிக்க இசைக்கருவியாக நாதஸ்வரமும், தவிலும் வகிக்கின்ற பங்கு மிகவும் முக்கியமானது. நாதஸ்வர இசையுடன்தான் அனேகமான தமிழர்களின் முக்கியமான மங்கல, மகிழ்சிகரமான நிகழ்வுகள் நிகழ்கின்றன. என்ன காரணமோ தெரியவில்லை, எந்த ஒரு விடையத்தையும் ஆவணப்படுத்துவதில் தமிழர்கள் தொன்றுதொட்டு அசட்டையாகவே இருப்பதால், தமிழர்களின் இசைக் கருவியான நாதஸ்வரம் பற்றிய முழுமையான தகவல்களையும் அறிய முடியாமல் இருக்கின்றது. தொன்றுதொட்டு நாதஸ்வர இசைக்கருவி பழக்கத்தில் இருந்தாலும், 17ம் நூற்றாண்டில்தான் பாதசங்கிரகம் என்ற இசைநூல் குறிப்பில் இவ்விசைக்கருவி பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. சிலப்பதிகாரத்தில் வங்கியம் என்று குறிக்கப்படும் காற்று இசைக்கருவி இதுவாக இருக்கலாம் என்றும் கருத இடமுண்டு. நாதஸ்வரத்தைக் குழல் என்றும் தவிலை மேளம் என்றும் யாழ்ப்பாணத்தில் சொல்வார்கள். கோயில் திருவிழாக்கள், திருமண வைபவங்கள், புதுமனை புகுதல், வரவேற்பு உபசாரங்கள், கலைநிகழ்ச்சிகள், வானெலி, தொலைக்காட்சி நிகழ்வுகள்  என்று தமிழரின் வாழ்வோடு தொன்று தொட்டுப் பின்னிப் பிணைந்திருப்பது நாதஸ்வரமும் தவிலும் என்றால் மிகையாகாது. நாதஸ்வரமும் தவிலும்போல வேறு எந்த இசைக்கருவியும் இரண்டறக் கலந்ததில்லை என்று இசையார்வலர் குறிப்பிடுவர். நாதஸ்வரத்தில் இரண்டு வகையுண்டு. திமிரி நாதஸ்வரம் என்பது உயரம் குறைந்தது. உச்ச ஸ்தாயியில் வாசிக்க உகந்தது. இதைத் திமிரிநாயனம் என்றும் அழைப்பர். பாரி நாதஸ்வரம் என்பது உயரம் கூடியது மட்டுமல்ல, இனிமையாகவும், மென்மையாகவும் வாசிக்க்கூடியது. நாதஸ்வரத்திற்குச் சுருதி தருவது ஒத்து என்று அழைக்கப்படும் நாதஸ்வரம் போன்ற இன்னுமொரு கருவியாகும். இதிலிருந்து ஆதார சுரதி மட்டும்தான் வெளிவரும். இதைச் யாழ்ப்பாணத்தில் சிறுவர்கள் ஊமைக்குழல் என்று வேடிக்கையாக அழைப்பார்கள். இப்பொழுதெல்லாம் கச்சேரிகளில் இதற்குப் பதிலாகச் சுருதிப் பெட்டிகளைப் பாவிக்கின்றார்கள். கும்பகோணத்தில் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் நாதஸ்வரக் கலைஞர்கள் வாசிக்கக்கூடிய கருங்கல்லால் செய்யப்பட்ட ஒரு நாதஸ்வரம் இருப்பதாகத் தெரியவருகின்றது. அதுபோல, ஆழ்வார்திருநகரி, திருவாரூர் ஆகிய இடங்களிலும் கருங்கல் நாதஸ்வரம் இருப்பதாகத் தெரிகின்றது.


இசைப் பிரியர்களான யாழ்ப்பாண மக்களிடையே மிகவும் பிரபலமாக இருந்தது நாதஸ்வரமும், தவிலும் என்றால் அது மிகையாகாது. நாதஸ்வரத்திற்குத் தாளக்கருவியாகத் தவிலைப் பாவிப்பர். இது ஒரு தோற்கருவியாகும். இதைப் பெரிய மேளம் என்று யாழ்ப்பாணத்தில் அழைப்பர். நடன மாதர்கள் ஆடும்போது பாவிக்கும் மேளம் சிறிதாக இருப்பதால் அதைச் சின்னமேளம் என்று அழைப்பர். உள்ளுர் கோயில்களில் வாசிப்பவர்களைக் கோயில் மேளம் என்பார்கள். திருவிழாக்காலங்களில் சுவாமி வெளியே வரும்போது இவர்கள் மல்லாரி வாசிப்பார்கள். வீதிவலம் வரும்போது ராகஆலாபனை வாசிப்பார்கள். சிறுவர்களான எங்களுக்கு சுவாமி வீதிவலம் வரும்போது, எப்போ வடக்குவீதிக்கு சுவாமி வரும் என்று காத்திருப்போம். சுவாமி வடக்கு வீதிக்கு வந்ததும் இவர்கள் வாசிக்கும் பாடல்கள் பிரமாதமாக இருக்கும். அந்த நாட்களில் பாரதிபாடல்கள், புதிய, பழைய சினிமாப்பாடல்கள்தான் எங்கள் விருப்பமாக, செவிக்கு உணவாக இருக்கும். அவர்கள் நின்ற நிலையில் வீதியில் நின்று வாசிக்கும்போது, தூக்கத்தை மறந்து நாங்களும் தாளம் போடுவோம். நாதஸ்வரக் கலைஞர்கள் உள்ளுர் வாசிகளாகையால், நேயர் விருப்பம்போல முன்கூட்டியே நாங்கள் விரும்பிய பாடல்களை இவர்களிடம் சொல்லி வைப்பதுமுண்டு.


நாதஸ்வர, தவில் கலைஞர்கள் எங்கிருந்தாலும் முக்கியமாகப் பாராட்டப்பட வேண்டியவர்கள். நான் சிறுவனாக இருந்தபோது யாழ்ப்பாணத்தில் மிகவும் பிரபலமான சில நாதஸ்வர, தவில் கலைஞர்கள் இருந்தார்கள். இவர்களில் அளவெட்டி என்.கே. பத்மநாதன், கோண்டாவில் பாலகிருஷ்ணன், பஞ்சாபிகேசன், இணுவில் தட்சணாமூர்த்தி, என்.ஆர். சின்னராசா, குமரகுரு, கைதடி பழனி, புண்ணியமூர்த்தி, கணேசபிள்ளை ஆகிய கலைஞர்களை இப்பொழுதும் எனக்கு ஞாபகம் இருக்கின்றது. இவர்கள் எந்தத் திருவிழாவிற்குச் சென்றாலும் பெரும் கூட்டம் அவர்களுக்காகக் காத்திருக்கும். இவர்களில் என்.கே. பத்மநாதன், என்.ஆர். கோவிந்தசாமி, பாலகிருஷ்ணன், பஞ்சாபிகேசன், கானமூர்த்தி – பஞ்சமூர்த்தி, சிதம்பரநாதன், சிவகுருநாதன், சண்முகநாதன், கேதீஸ்வரன், எம் பி. நாகேந்திரன், பல்லவி இராஜதுரை ஆகியோர் நாதஸ்வரக் கலைஞர்களாகவும், தட்சணாமூர்த்தி, சின்னராசா, குமரகுரு, பழனிவேல், புண்ணியமூர்த்தி, கணேசபிள்ளை, சின்னப்பழனி ஆகியோர் தவில் கலைஞர்களாகவும் இருந்தனர். இவர்களில் தட்சணாமூர்த்தி, சின்னராசா ஆகிய இருவரின் சிறப்பு என்னவென்றால் தனித்தவில் வித்துவான்களாக இவர்கள் இருந்தார்கள். திருவிழாக் காலங்களில் இவர்களின் தனித்தவில் கச்சேரிகளைக் கேட்பதற்கென்றே பலர் பல மைல்களுக்கப்பால் இருந்து வந்து விடிய விடியக் காத்திருந்து கச்சேரியை ரசிப்பார்கள். தட்சணாமூர்த்தி சிறிய உருவம் கொண்டவராகவும், சின்னராசா பெரிய உருவம் கொண்டவராகவும் இருந்தாலும் ஏட்டிக்குப் போட்டியாக அவர்கள் தவில் வாசிக்கும்போது மெய் சிலிர்க்கும். தென்னிந்தியக் கலைஞர்களோடு இணைந்து வாசித்த பெருமை இவர்களுக்கு உண்டு. இசையார்வம் காரணமாக அந்தநாளில் மிகவும் பிரபலமாக இருந்த தென்னிந்திய நாதஸ்வரக் கலைஞர்களான ராஜரட்ணம்பிள்ளையையும், குழிக்கரை பிச்சையப்பாபிள்ளையையும் முதன் முதலாக ஒரே மேடையில் அமரவைத்து நாதஸ்வர நிகழ்ச்சி நடத்திய பெருமை கரவெட்டி மக்களையே சாரும். அந்த நாட்களில் சினிமா நடிகர்களுக்குக் கொடுப்பது போன்ற மதிப்பை யாழ்ப்பாண ரசிகர்கள் நாதஸ்வரக் கலைஞர்களுக்கும் கொடுத்தார்கள். என் நினைவில் நிற்பவர்களை மட்டுமே நான் இங்கே குறிப்பிடுகின்றேன். இவர்களைப்போல சிறந்த பல நாதஸ்வர, தவில் கலைஞர்கள் இலங்கையில் அன்று இருந்தார்கள், இன்றும் இருக்கிறார்கள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.


தமிழ் நாட்டில புகழ் பெற்ற நாதஸ்வரக் கலைஞர்களாக திருவாடுதுறை ராஜரட்ணம் பிள்ளை, காருக்குறுச்சி அருணாச்சலம், திருமெய்ஞ்ஞானம் நடராஜசுந்தரம்பிள்ளை, திருவீழிமிழலை சகோதரர்கள், வேதாரண்யம் வேதமூர்த்தி, நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன், சேக் சின்ன மௌலானா, குழிக்கரை பிச்சையப்பாபிள்ளை, திருவெண்காடு சுப்ரமணியபிள்ளை, நல்லடை ராதாகிஷ்ணன், வல்லம் கிஷ்ணன், சாயாவனம் கனகசபாபதிப்பிள்ளை போன்றவர்கள் திகழ்ந்தார்கள். தவில் வித்துவான்களாக நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம், நாச்சியார்கோயில் ராகவப்பிள்ளை, கும்பகோணம் தங்கவேலுப்பிள்ளை, வலங்கைமான் சண்முகசுந்தரம்,  சண்முகவடிவேலு, வேணுகோபால், திருவிடை மருதூர் மாலி, வளையாப்பட்டி சுப்ரமணியம், ஏ.கே. பழனிவேல், திருவாளப்புத்தூர் கலியமூர்த்தி, சேங்காலிபுரம் பக்கிரிசாமி போன்றோரைக் குறிப்பிடலாம். பெண்களும் நாதஸ்வரம் வாசிப்பதில் குறைந்தவர்கள் அல்ல என்பதற்குச் சிறந்த எடுத்துக் காட்டாக மதுரை பொன்னுத்தாயம்மாள், சுபாணி போன்றவர்கள் திகழ்கிறார்கள். தோடி ராகத்தில் புகழ்பெற்ற நாதஸ்வரக் கலைஞரான ரி.என். ராஜரட்ணம் பிள்ளைக்குத் தபால்தலை வெளியிட்டு அவரைக் கௌரவித்திருக்கின்றார்கள் ரசிகர்கள் என்பது பெருமைக்குரியதே.


தற்சமயம் பாவனையில் இருக்கும் நாதஸ்வரம் திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளை அவர்களால் இரண்டு கட்டை, இரண்டரைக்கட்டை சுதியில் புதிய வடிவத்தோடு அமைக்கப்பட்டது. இதற்கான மரத்தை ஆச்சா என்று சொல்லப்படுகின்ற மரத்தில் இருந்து எடுக்கிறார்கள். இடிந்துபோன மிகப் பழைய வீடுகளில் உள்ள அனேகமான தூண்கள் இந்த மரத்தால் செய்யப்பட்டிருப்பதால், அவற்றைத் தேடி எடுத்து நீண்ட மரத்துண்டுகளாக வெட்டுகின்றார்கள். பின் உளியால் உருண்டை வடிவமாக்குகிறார்கள். அதன்பின் பிரமாஸ்திரம் என்று சொல்லப்படுகின்ற துளையிடும் கருவி மூலம் துளையிடுகின்றனர். அதன்பின் ஒவ்வொரு அங்குல இடைவெளி விட்டு ஏழு துவாரங்கள் போடுகின்றார்கள். வாயை வைத்து ஊதும்போது இந்தத் துவாரங்கள் வழியாகத்தான் சரிகமபதநி என்ற சப்தஸ்வரங்கள் பிறக்கின்றன. நாதஸ்வரத்தின் நீளமான பகுதியை உளவு என்றும் விரிந்து இருக்கும் கீழ்ப்பகுதியை அணசு என்றும் அழைப்பர். வாயிலே வைத்து ஊதும் சாதனத்தை சீவாளி என்றழைப்பர். ஆற்றங்கரையில் இருக்கும் நாணல் புற்களில் இருந்து இதைத் தயாரிக்கின்றார்கள். இதை நறுக்கு அல்லது நறுக்குத்தட்டை என்றும் சொல்வர். செப்புத்தகட்டைச் சிறிதாக வெட்டி உருளையாக்கி அதில் நறுக்குத்தட்டைச் செருகி நூலினால் கொண்டை கட்டுவார்கள். அதன் பின்தான் நாதஸ்வரம் என்ற கருவி முழுமைபெறும். கும்பகோணத்திற்கு அருகே உள்ள நரசிங்கம்பேட்டையில்தான் அதிகமான நாதஸ்வரம் தயாரிக்கப்படுகின்றது. தமிழ் நாட்டில் இருந்து எமது கலை பண்பாட்டுச் சின்னங்களைக் கொண்டு வருவது தடைப்பட்டபோது, பாரி நாதஸ்வரத்தை வன்னியிலே கிடைத்த வளங்களைக் கொண்டு புதுவை ரட்ணதுரையின் மேற்பார்வையில் உருவாக்கியதும் இங்கே குறிப்பிடத் தக்கது.


ஊரிலே ஊரடங்குச் சட்டம், உள்நாட்டு நிலைமை காரணமாகக் கோயில்கள் எல்லாம் கவனிப்பாரற்றுத் திருவிழாக்கள் நிறுத்தப்பட்டதாலும், மேளதாளத்தோடு பகிரங்கமாக எந்த ஒரு நிகழ்ச்சியும் நடத்த முடியாததாலும் நாதஸ்வர இசைக்கலையில் ஒருவித தேக்கம் ஏற்பட்டிருக்கின்றது. இதைவிட தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக நாதஸ்வர இசை பதிவு செய்யப்பட்டதால் பல நிகழ்ச்சிகளில் பதிவு செய்யப்பட்ட நாதஸ்வர இசைத் தட்டுக்களே மங்கல இசைக்காகப் பாவிக்கப்படுகின்றன. இதனால் நாதஸ்வரக்; கலைஞர்களுக்குப் போதிய வருமானம் கடந்த காலங்களில் கிடைக்கவில்லை. இதன் காரணமாக ஆர்வமுள்ள அடுத்த தலைமுறையினர் கூட வேறு வழியின்றி வேறு தொழில் தேடிச் செல்லவேண்டிய நிர்ப்பந்தம் இன்று இலங்கையில் ஏற்பட்டிருக்கின்றது. எனவே தமிழர்களாகிய நாங்கள் மங்கலம் ஒலிக்கும் நாதஸ்வரக்கலை தொடரவேண்டுமானால், ஆர்வமுள்ள நாதஸ்வரக் கலைஞர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்கவேண்டும் என்பதே என்போன்ற இசை ஆர்வலர்களின் விருப்பமாகும்.

Sunday, September 30, 2012

மிருகம் - Mirukam - !st Prize


பிரபல எழுத்தாளர் திரு.குரு அரவிந்தன் அவர்கள் (கனடா) ஆதரவுடன் யாழ்பாணத்தில் வெற்றிமணி பத்திரிகை நடத்திய அகில இலங்கைக்கான மாணவர் சிறுகதைப் போட்டி   முடிவுகள். 

 சிறுகதைப் போட்டி முடிவுகள்:  1வது பரிசு:   மிருகம்

செல்வன். பாலசுப்பிரமணியம் நிதுஜன்
யா. மகாஜனாக் கல்லூரி
தெல்லிப்பழை

மாணவர் சிறுகதைப் போட்டியில் முதலாம் பரிசு பெற்ற சிறுகதை.
(பாலசுப்பிரமணியம் நீதுஜன், மகாஜனாக்கல்லூரி, தெல்லிப்பழை)கொண்டுவந்திருந்த தண்ணீர்ப் போத்தலை எடுத்துப் பார்த்தேன். அது காலியாக இருந்தது. ஏமாற்றத்துடன் டேவிட்டின் முகத்தைப் பார்த்தேன். ஐந்து மணிநேரமாக ஒரே இடத்தில் காத்துக் கிடக்கும் சலனமோ களைப்போ முகத்தில் தெரியவில்லை. சரிதான், இந்தத் தொழிலின் அடிப்படைப் பாடமே பொறுமையுடன் காத்திருப்பதுதானே. எனக்குத்தான் கற்றுக்குட்டி என்பதால் அது கொஞ்சம்கூட இல்லை.

‘சேர்..!’ மெதுவாக டேவிட்டை அழைத்தேன்.

என்ன..? என்றார் கிசு கிசு குரலில்.

‘எதுவும் வருகிற மாதிரித் தெரியவில்லை, வேண்டுமானால் நாளைக்கு மீண்டும் முயற்சி பண்ணிப் பார்க்கலாமே..?’

‘உஷ்.. பேசாமல் இரு. இன்னும் நான்கு மணி நேரம் இருக்கிறது. முயற்சி பண்ணிப் பார்க்கலாம்.’

என்னது இன்னும் நான்கு மணி நேரமா இந்த வெய்யிலில் ஒன்பது மணி நேரம் இருந்தால் 12ம் நம்பர் ஸ்பனரே உருகிவிடும்.  நானெல்லாம் அவிந்து விடுவேன். மாலைச் சாப்பாட்டுக்கு உப்பையும் தூளையும் தொட்டுவிட்டு விரல்களையே கடித்துக் கொள்ளலாம் போலிருந்தது. படித்து முடித்ததும் ஹொலிவூட்டில் வாய்ப்புத்தேடாமல் கமராவை எடுத்துக் கொண்டு காட்டிற்கு வந்ததற்கு எனக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும் என எண்ணிக் கொண்டேன்.

‘இன்னும் நான்கு மணி நேரம்தான்’ என்றார் டேவிட்.

அந்த உலகப் பிரபல தொலைக்காட்சி சனலில் ஒளிப்படக்காரராய் வேலை செய்யும் டேவிட்டிடம் உதவியாளராய் சேர்ந்த எனது முதலாவது வேலைத்திட்டம் இது. அரியவகை மருவானா மான்களின் வாழ்க்கையைப் படம் பிடிக்க நாமிருவரும் கடந்த ஆறுமாதங்களாக சைபீரியாச் சமவெளியில் அலைந்து திரிகின்றோம். ஏறத்தாள எல்லா வேலைகளும் முடிந்து விட்டது. முடிவாக சைபீரியா புலிகளால் மருவானா மான்கள் வேட்டையாடப்படுவதையும் படம் பிடித்தால் போதும். அதற்காகத்தான் ஒரு வரண்ட குளத்தின் அருகே புதருக்குள் மறைந்து படுத்தபடி நானும் டேவிட்டும் காத்திருந்தோம். ஏறத்தாள எண்பது மருவானா மான்கள் காலையில் இருந்து அந்தக் குளத்தடியில் மேய்ந்து கொண்டிருக்கின்றன.
திரும்பி டேவிட்டைப் பார்த்தேன். தொழிலில் அவரின் ஈடுபாடு என்னை பிரமிக்க வைத்தது. காத்திருக்கும் வேளைகளில் நான் சலித்துக் கொண்டாலும் அவர் எடுத்துக் கொண்ட கருமமே கண்ணாயிருப்பார். என்ன ஒரு தொழில் சிரத்தை! அப்படிப்பட்ட இந்த நல்ல மனிதரைப்பற்றி எத்தனை வதந்திகள். அரிய மிருகங்களைக் கடத்தும் சட்ட விரோதக் கும்பல்களுக்கு உதவுவதாக, தொலைக்காட்சிச் சனலின் பெயரால் கிடைக்கும் சலுகைகளை பயன்படுத்தி தடுக்கப்பட்ட இடங்களுக்கெல்லாம் போய்.. சரிதான், ஒருவரைப்பற்றி புகழ் பரவ ஆரம்பித்தாலே வதந்தியும் சேர்ந்துதானே பரவுகின்றது.

‘ஏய் அங்கே பார்..’

டேவிட் காட்டிய திசையைப் பார்த்தேன். மேய்ந்து கொண்டிருந்த மான் கூட்டத்தை நோக்கி ஒரு பெரிய உயரமான கம்பீரமான சைபீரியன் புலி ஒன்று மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தது. ஒரு பெருமூச்சை சின்னதாக விட்டேன். அப்பாடா இத்தோடு வேலை முடிந்தது. அந்தப் புலி ஒரு மானைப் பிடித்துக் குதறிக் கடித்துச் சாப்பிடுவதைப் படம் பிடித்தால் போதுமானது.

புலி சந்தடியின்றி மான் கூட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. ஒரு கமராவைப் புலிக்கும் மற்றதை மான் கூட்டத்திற்கும் குவித்தோம். புலி ஓசைப்படாமல் மெல்ல மெல்ல நெருங்கியது. தற்செயலாகத் திடீரென நிமிர்ந்து பார்த்த மான் குட்டி ஒன்று அதிர்ச்சியில் ஒரு கணம் நின்று, மிரண்டது. அதன் மிரட்சியில் ஏனைய மான்கள் உஷாராகின. அடுத்த கணம் சொல்லி வைத்தாற்போல எல்லாமே புலியை நிமிர்ந்து பார்த்தன. உடனே புலி அசையாது நின்றது. தலையை மட்டும் திருப்பி அங்குமிங்கும் பார்த்துத் தனது இரையைக் குறிவைத்தது. அடுத்த கணம் மிரண்டுபோன மான்கள் ஓட்டம் பிடிக்க ஆரம்பித்தன. புலியும் தனது இரையைத் துரத்த ஆரம்பித்தது. கூட்டமாக மான்கள் மிரண்டு ஓடினாலும், புலி தனது இரையை மட்டும் குறிவைத்துப் பாய்ந்தது. மான்கள் எல்லாம் கூட்டமாக உயரமாயிருந்த குளத்தின் அணைக்கட்டை நோக்கி ஓடலாயின.


டேவிட் என் முதுகில் தட்டி ஒரு இடத்தைச் சுட்டிக் காட்டினார். மேட்டின் அடியில் ஒரு மான் குட்டி விழுந்து படுத்திருக்க, ஒரு பெரிய மான், தாயாக இருக்க வேண்டும் தனது முகத்தால் நெம்பி அதை எழுப்ப முயன்று கொண்டிருந்தது. மேட்டில் பாய்ந்து ஏறும்போது மற்ற மான்களோடு முட்டுப்பட்டு கீழே விழுந்து கால் முறிந்திருக்க வேண்டும். தனது உயிராபத்தைப் பொருட்படுத்தாது அந்த தாய்மான் குட்டியை முகர்ந்து பார்ப்பதும், நெம்பி எழுப்ப முயல்வதுமாக இருந்தது. இடையிடையே நிமிர்ந்து புலியைப்பார்த்தது. எல்லா மான்களும் மேட்டில் பாதுகாப்பான இடத்தில் நின்றவாறு இவையிரண்டையும் பார்த்தன. சற்றுத் தொலைவில் நின்ற புலி திடீரென இவற்றைக் கண்டதும் மெதுவாக இவற்றை நோக்கி நடந்து வரத்தொடங்கியது. எனது நெஞ்சம் படபடத்தது. டேவிட்டை நிமிர்ந்து பார்த்தேன். அவர் திரையையே பார்த்துக் கொண்டிருந்தார்.


புலி மேலும் நெருங்கியது. தாய் மான் பதைபதப்புடன் அவசரமாக மிக அவசரமாக குட்டியை எழுப்பப் பார்த்தது. குட்டியும் மெதுவாக எழும்ப முயன்றது. ஆனால் முன்னங்கால்களை ஊன்ற முயன்றதும் மீண்டும் தரையில் வீழ்ந்தது. அதன் முன்னங்கால் முறிந்திருக்க வேண்டும். புலி கிட்ட நெருங்கவே, பயந்துபோன ஏனைய மான்கள் தப்பி ஓடத் தொடங்கின. புலி மெல்ல மெல்ல இந்த இரண்டு மான்களையும் நோக்கி நகர்ந்தது. தாய் மான் இறுதி முயற்சியாக மரணபயத்தோடு தன் குட்டியை எழுப்ப முயன்றது. முடியவில்லை. அதன் இயலாமை அதன் கண்களில் தெரிந்தது. மறுபடி குட்டியை முகர்ந்து பார்த்துவிட்டு மிரட்சியோடு புலியைப் பார்த்தது. மானின் கண்களைப் பார்த்த எனக்கு இதயமே நின்று விடும்போல இருந்தது.  மிரண்ட கண்களில் தெரிந்தது ஏக்கமா, உயிர்ப்பயமா, அவலமா. தவிப்பா என்பது எனக்குப் புரியவில்லை. என்ன நடக்கப்போகிறதோ என்ற அவலத்தோடு புலியைப் பார்த்தேன். 


மான்களை நோக்கி அருகே வந்த புலி அப்படியே நின்றது. சற்று நேரம் மான்களையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. மானின் கண்களில் உயிர்ப்பயம் அப்படியே இருந்தது. எந்த நேரமும் அந்த மான்களை நோக்கிப் பாயலாம் என்ற துடிப்பு எனக்குள் எழுந்தது. சற்றுமுற்றும் பார்த்த புலி அமைதியாகத் திரும்பி வந்த வழியே நடக்கத் தொடங்கியது. எனக்கு ஒன்றுமே புரியவில்லை. மானின் கண்களைப் பார்த்தேன். அது மிரட்சியோடு புலியையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தது. அதன் பார்வையில் தெரிந்ததென்ன? நன்றியா? புலி ஏன் மானை அப்படியே விட்டுச் சென்றது. வேட்டையாடாமல் கொன்று தின்ன விரும்பவில்லையா? எதை எவ்வாறு ஏற்றுக் கொள்வது என்று தெரியாமல் குழப்பத்துடன் டேவிட்டைப் பார்த்தேன்.


‘ம்..’  என்ற ஒரு பெருமூச்சை விட்டபடி டேவிட் சொன்னார் ‘எனது வாழ்க்கையில் இப்படிப்பட்ட ஒரு சம்பவத்தைப் பார்த்ததேயில்லை. இதைக் கவர் பண்ண முடிந்தது எனது அதிஷ்டம்தான்’.


நான் தலையை ஆட்டியபடி புலியைப் பார்த்தேன். தனது பசியைத் தியாகம் செய்துவிட்டு அது நிதானமாக நடந்து போய்க் கொண்டிருந்தது. அது மிருகமா அல்லது மனிதனைவிட உயர்ந்ததா என்று மனசுக்குள் எண்ணிக் கொண்டிருந்தபோது, டேவிட் எனது முதுகில் தட்டி நாங்கள் எங்கள் பாதுகாப்பிற்காகக் கொண்டுவந்த ‘ஷொட்கண்' வகைத் துப்பாக்கியை என்னிடம் தந்து,

‘அந்தப் புலி, அந்த இரண்டு மான்கள் இருக்கிறதல்லவா?’ என்றார்.

‘ஆமாம்..’

‘மூன்றையும் சுட்டுவிடு!’.

  •        

(மாணவர்களை இலக்கியத்தில் ஊக்குவிக்கும் நோக்கத்தோடு கல்லூரி மாணவர்கள் எழுதிய இக் கதை பற்றிய தங்கள் நல்ல கருத்தை எதிர்பார்க்கின்றோம்.)

kuruaravinthan@hotmail.com


நட்புடன் குரு அரவிந்தன்.
உங்கள் தகவல்களுக்கு நன்றி. இப்படியான போட்டிகள் மூலம் இலக்கியத்தின் மீது மாணவர்களுக்கு ஆர்வத்தினை ஏற்படுத்த முடியும். இன்றைய நவீன காலத்தில் மாணவர்களின் 
நல்நடத்தைக்கு இலக்கியமே வழிகாட்டமுடியும். இலக்கியக் கதைகளின் உண்மையினை மாணவர்கள் புரிந்துகொண்டால், எதிர் காலத்தில் தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ முடியும்.
உங்கள் பணிக்கு எமது இதயம் நிறைந்த பாராட்டுக்கள்.
தொடரட்டும் உங்கள் பணி.
நன்றியுடன் 
வரதன் -  பிரான்ஸ்
Varathan - France

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு எனது வாழ்த்துகள்.

அன்புடன்
சிறீதரன்மிருகம் அருமையான சிறுகதை. 
தகுதியான கதைக்கே பரிசு கிடைத்திருக்கிறது. 
எழுதியவருக்கு வாழ்த்துக்கள்.

பாஸ்கரன் _ ரொறன்ரோ.


பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி