Thursday, January 26, 2012

Costa Conkodia - கோஸ்டா கொங்கோடியா

Costa Conkodia


விபத்தில் சிக்கிய கோஸ்டா கொங்கோடியா
(குரு அரவிந்தன்)
அவன் தலையிலே கைவைத்துக்கொண்டு அதிர்ச்சியில் உட்கார்ந்திருந்தான். ‘என்னப்பா கப்பல் கவிண்டு விட்டது போல உட்கார்ந்திருக்கிறாய்’ என்று நண்பன் கேலி செய்தபோது தான் உண்மையிலே கப்பல் கவிண்டு விட்டது என்ற உண்மை நண்பனுக்குத் தெரிய வந்தது. ஆமாம் சென்ற வெள்ளிக்கிழமை இத்தாலிய கப்பல் ஒன்று தரைதட்டிக் கவிழ்ந்து விட்டது. கவிண்டது சரக்குக் கப்பலல்ல, உல்லாசப் பயணிகளை ஏற்றிச் செல்லும் பிரமாண்டமான ஆடம்பரக் கப்பல். யார்யாரையோ நம்பிப் பாதுகாப்பில்லாத கப்பலில் பயணம் செய்வது என்பது எவ்வளவு ஆபத்தானது என்பதை இப்பொழுதுதான் உல்லாசப் பயணிகள் உணர ஆரம்பித்திருக்கிறார்கள். இப்படித்தான் உல்லாசப் பயணிகளோடு சென்ற ரைற்ரானிக் கப்பலுக்கும் நூறு வருடங்களுக்கு முன் ஒரு விபத்து நடந்தது. எந்த ஒரு ஆபத்தையும் சந்திக்கத் தயாரக இருக்கிறது அந்தப் பிரமாண்டமான ரைற்ராணிக் கப்பல் என்றுதான் அப்போது விளம்பரம் செய்தார்கள். ஆனால் அந்த நம்பிக்கையை அந்தக் கப்பல் காப்பாற்றவில்லை. அந்தக் கப்பல் பனிப்பாறையில் மோதி உடைந்தபோது யதார்த்தம் வேறுவிதமாக இருந்தது. அந்தக் கப்பல் பல உயிர்களைக் காவுகொண்ட சம்பவத்தை இன்றும் பயணிகள் நினைத்து பயப்படுகின்றார்கள்.
ரைற்ரானிக் கப்பல் 15-04-1912 விபத்துப் போலத்தான் இந்தக் கோஸ்டா கொங்கோடியா என்ற ஆடம்பர சொகுசுக் கப்பல் விபத்தும் 13-01-2012 ஏற்பட்டது. கன்னிப்பயணத்தை மேற்கொண்டிருந்த ரைற்ரானிக் கப்பலில் 2223 பயணிகள பயணித்திருந்தனர். 1500 மேற்பட்ட பயணிகள் அன்று நடந்த விபத்தில் கொல்லப்பட்டனர். இந்தக் கோஸ்டா கொங்கோடியா கப்பல் பாதைமாறிப் பயணித்தபோது அதை ஏன் காப்டனோ அல்லது சிப்பந்திகளோ கவனத்தில் கொள்ளவில்லை என்பதுதான் இன்றும் கேள்விக் குறியாகவே இருக்கின்றது. நூறு வருடங்களைக் கடந்து விட்டாலும் உல்லாசக் கப்பலில் பயணம் செய்யும் பயணிகளின் பாதுகாப்பு விடையத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பதையே இது காட்டுகின்றது. கிக்லியோ தீவுக்கு அருகே நடந்த இந்த விபத்தில் இதுவரை 11 பயணிகள் இறந்து விட்டதாகவும், 24 பயணிகள் காணாமல் போய்விட்டதாகவும் தெரிய வருகின்றது. கடைசிவரை அங்கே நின்று பயணிகளைக் காப்பாற்ற வேண்டிய கப்பல் கப்டனே அந்த இடத்தைவிட்டு வெளியேறி விட்டதாகச் சில செய்திகள் தெரிவிக்கின்றன. இத்தாலியில் உள்ள பின்கன்ரெறி என்ற கப்பல் கட்டும் நிறுவனத்தால் 2006ம் ஆண்டு இந்தக் கப்பல் சேவைக்கு விடப்பட்டது. 450 மில்லியன் ஈரோ நாணயப் பெறுமதி கொண்டது. 3780 பயணிகளை ஏற்றிச் செல்லும் வசதி கொண்டது. 1500 அறைகளையும், ஐந்து உணவு விடுதிகளையும், பதின்மூன்று மதுச்சாலைகளையும் கொண்டது. இந்தக் கப்பலில் நான்கு நீச்சல் தடாகங்களும் உண்டு. இதைவிட அழகு சாதன நிலையம், உடற்பயிற்சி நிலையம், விளையாட்டரங்கு, சினிமா தியேட்டர், சீட்டாடுமிடம், டிஸ்கோ நடனமாடும் மண்டபம் என்று பல வசதிகளைத் தன்னகத்தே கொண்டது.
விபத்து நடந்தபோது 4200 பயணிகளுக்குமேல் கப்பலில் இருந்ததாகத் தெரியவருகின்றது. கரையோரப் பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்றார்கள். கரையோரத்தில் நடந்த விபத்து என்பதால் அதிக உயிர்ச் சேதம் ஏற்படாமல் தப்பிக் கொண்டார்கள். விபத்து நடந்ததும் உயிர் காப்புப் படகுகளுக்குக் காத்திராமல் பயணிகள் பலர் கடலில் குதித்து நீந்திக் கரை சேர்ந்திருக்கிறார்கள். கப்பலுக்குள் சிக்கிக் கொண்டவர்களின் விபரம் ஒன்றும் தெரியவில்லை. சரிந்த கப்பலில் சுமார் நான்கு இடங்களிளில் வெடி வெத்து தகர்த்து அதனூடாகத் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறார்கள். காணாமல் போனவர்களில் யேர்மனியர்கள், இத்தாலியர், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள், அமெரிக்கர்கள், இந்தியர்கள், ஹங்கேரியர் ஆகியோர் அடங்குவர். இந்தக் கப்பலில் 300 மேற்பட்ட இந்திய சிப்பந்திகள் தொழில் புரிந்ததாகத் தெரிய வருகின்றது. இவர்களில் சுமார் பத்துப்பேர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள். சரிந்த கப்பலில் இருந்து எரிபொருளான எண்ணெய்யை வெளியேற்றுவதில் வேறு ஒரு குழவினர் ஈடுபட்டிருக்கிறார்கள். 1.9 மில்லியன் லிற்ரர் எரிபொருள் இந்தக் கப்பலின் பாவனைக்காக இந்தக் கப்பலில் கொண்டு செல்லப்பட்டது. பதினேழு கொள்கலன்களில் இவை நிரப்பப்பட்டிருக்கின்றன. எந்த நேரமும் தீ விபத்து ஏற்படலாம் என்ற எச்சரிக்கை உணர்வு மட்டுமல்ல, சூழல் பாதுகாப்பும் முக்கிய காரணமாக இருக்கின்றது. எரிபொருள் கடலில் கலக்கும் பட்சத்தில் சூழல் மாசடையச் சந்தர்ப்பம் உண்டு. எனவே கப்பல் முற்றாக மூழ்கிப் போகுமுன் இந்த எரிபொருள் வெளியேற்றும் நடவடிக்கையை அவசரமாக மேற்கொண்டிருக்கிறார்கள். இந்தத் கடலில் டொல்பின், திமிங்கிலம் போன்ற கடல் வாழ் இனங்கள் அதிகம் வசிப்பதால் அவற்றின் பாதுகாப்பும் முக்கியமாகக் கவனிக்கப்படுகின்றது.
ஏன் இந்த விபத்து நடந்தது, விபத்திற்குக் காரணம் என்னவென்று தெரிந்து கொள்ளும்வரை கோஸ்டா கொங்கோடியா கப்பலில் காப்டனான பிரான்ஸிஸ்கோ செச்சிட்டினோவை விளக்க மறியலில் வைக்கும்படி உள்ளுர் நீதிபதி உத்தரவிட்டிருக்கின்றார். சென்ற வருடம் ஆகஸ்ட் மாதம் இந்தத் தீவில் நடந்த சூட்டிங் ஸ்டார் நைட் விழாவின்போது இரவுநேரத்தில் இந்தக் கப்பல் பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு, தீவிற்கு மிக அருகாமையில் பயணித்தாகவும் தெரிய வருகின்றது. இம்முறை அதற்குரிய அனுமதி கொடுக்கப்படவில்லை என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர். வுpபத்து நடந்தால் ஆபத்து நேரத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றிச் சிப்பந்திகளுக்குத் தகுந்த முறையில் பயிற்சி கொடுக்கப்பட வேண்டும். பயிற்சி பெற்றாலும் அவர்களும் அந்த நேரத்தில் அதற்கு ஏற்ற மாதிரி நடந்து கொள்ள வேண்டும். என்னதான் உயிர் காக்கும் சாதனங்கள் குவிந்து கிடந்தாலும் அவற்றை ஆபத்து நேரத்தில் பாவிக்கத் தெரியாவிட்டால் அவற்றால் எந்தப் பிரயோசனமும் இல்லை. ரைற்ரானிக் கப்பல் விபத்தின்போது எப்படி எல்லோரும் அல்லோல கல்லோலப்பட்டார்களோ அதே நிலைதான் இந்தக் கோஸ்டா கொங்கோடியா கப்பல் விபத்தின்போதும் நடைபெற்றிருக்கின்றது. தேவையான நேரத்தில் உயிர்காக்கும் படகுகள்கூட இறக்கி விடப்படவில்லை என்பதே உயிர்தப்பிய பயணிகளின் குறையாக இருந்தது. நூறு வருடங்கள் கடந்தாலும் பாதுகாப்பு முறையில் எந்த மாற்றங்களும் ஏற்படவில்லை. இனிமேலாவது இப்படியான விபத்துக்கள் நடைபெறும்போது உயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை எப்படி நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற சட்டத்தைத் திருத்தி அமைக்க வேண்டும் என்று தீர்மானம் எடுக்கப்பட வேண்டும். அதுவே எதிர் காலத்தில் உல்லாசப் பயணிகளின் கப்பல் போக்குவரத்து வளர்ச்சிக்;கு உதவியாக இருக்;கும் என எதிர்பார்க்கலாம்.


No comments:

Post a Comment