Thursday, May 17, 2012

புதிதாய் பூத்த புதிய கவிதை...

புதிதாய் பூத்த புதுக்கவியின் புதிய கவிதை...

இறுதி யுத்தத்தில் ஒரு மாதக் குழந்தையுடன் வாழ்க்கைக்குப் போராடியது மட்டுமல்லாது இவருடைய தனி மனிதப் போராட்டமே ஒரு உருக்கமான கவிதைதான்...

  Dr. Varatharajah is one of few physicians who medically helped wounded
innocent civilians trapped in a final brutal war on May 18, 2009.
His and two other physicians’interview to BBC during the crucial moments of the battle from the
makeshift medical tents also made them heroes among Tamil Diaspora
community but also got them imprisoned soon after the war ended.
Mrs.Vanitha Varatharajah had the first hand experience of the brutality of the
war with a month old baby at that time vividly reflecting on her experience
in the following poem.

 
நினைத்தாலே பனிக்கிறது

 முத்தாய் தமிழீழம் முகிழ்த்தது
 மூன்று தசாப்தமாய் வளர்ந்தது
 முல்லை மருதம் நெய்தலாய் விரிந்தது
 முக்கனியும் மலிந்தே விளைந்தது
 முத்தமிழும் இனிதே பொலிந்தது
 சீறிடும் சிறுத்தைகள் களமதில்
 சீரிய வெற்றிகள் இனிதினில்
 பாரிய திட்டங்கள் கடிதினில்
 பகை ஓடியது விரைவினில்
 பாரே வியந்தது நிறைவினில்


 சிந்தியுங்கள் ...
 மதம் கொண்ட யானைகளும்
 கர்ச்சிக்கும் சிங்கங்களும்
 குள்ள நரிகளும்
 கொடிய கழுகுகளும்கூடி
 பாயும் புலியை சதியால் வீழ்த்தினால்
 பரணியா பாட முடியும்?
 பரிகசியுங்கள்!

 ஆம்...
 இறுதி யுத்தம்...

 நினைத்தாலே கண்கள் பனிக்கிறது
 கல்லாக நெஞ்சம் கனக்கிறது
 முள்ளாக மனதை உறுத்திறது
 பனியாக குருதி உறைகிறது
 சொல்லில் அடங்கா துயரமது
 சொல்லத்துடிக்குது என் இதயமது
 கருமேகமாய் கரும்புகை பரந்தது
 இடிமுழக்கமாய் குண்டுகள் வெடித்தது
 மின்னலாய் ரவைகள் பாய்ந்தது
 புயலாய் பகைகள் சூழ்ந்தது
 மழையாய் யுத்தம் பொழிந்தது

 பயத்தால் உலர்ந்தது தொண்டை
 பாசத்தால் உறவுகளை அணைத்தது கைகள்
 வீட்டை துறக்க துணிந்தது மனது
 வீதியில் நடக்க தொடர்ந்தன கால்கள்
 தாகத்தால் வரண்டது நாக்கு
 பசியால் துடித்தது வயிறு
 பாய்ந்திடும் வேட்டுக்கு பயந்து
 பதுங்கியே சென்றோம் விரைந்தது

 கூடு கலைந்த குருவிகளாய்
 கூடி வாழ்ந்தவர் பிரிந்தோம்
 நாடி வரும் நல்ல முடிவென
 நாளுமே எதிர் பார்த்திருந்தோம்
 வெற்றுடல்கள் மத்தியிலே
 வெறுமனதுடனே வாழ்ந்தோம்
 புதுமாத்தளனில் கூட
 புதுவாழ்வு பிறக்காதா என்றிருந்தோம்

 பருகத் தூய தண்ணீரில்லை
 பசியாற உண்ண உணவுமில்லை
 கால்வயிற்றுக் கஞ்சியும்
 கடைசிவரை கிட்டவில்லை
 முலைப்பால் கேட்டழுத குழந்தையின் முகத்தில்
 முத்தமிட்டது தாயின் கண்ணீர்
 பட்டினிச்சாவும் தொடர்ந்தது
 பார் பார்த்தும் மௌனம் காத்தது

  பதுங்குகுழியே பஞ்சணையானது
 பலசமயம் புதைகுழியுமானது
 அங்கங்கள் இழந்தே போனது
 அழுகுரல் ஓலமே நிறைந்தது
 கருவினில் உதித்த சிசுவும்
 கணத்தினில் கருகிப்போனது
 செங்கொடி பறந்த தேசம்
 செங்குருதியால் பெருக்கெடுத்தது

 தமிழர் என்பது எம்மினம்
 தனித்துவமானது எம்குணம்
 மேன்மைத் தமிழர் நாம்
 மே பதினெட்டை மறக்கலாமா
 தரணி விழி மூடியது
 தமிழீழத்தின் இதயமே
 தன் துடிப்பை மறந்தது
 தளராத நெஞ்சங்கள் வெடித்தது
 தமிழினமே துன்பத்தில் துடித்தது

 எனினும்... .
 முப்பதாண்டுகள் நிழல் தந்த
 மூலவிருச்சட்தின் அடியில்
 மூச்சாய் முளைத்த கன்றுகள்
 முழுதாய் என்றோ நிழலளிக்கும்
 முத்தான தமிழ் செழிக்கும்
 முயன்றால் முடியாதது இல்லை...


 வனிதா வரதன்

Wednesday, May 16, 2012

தொலைந்த விமானம்

சகாரா பாலைவனத்தில் தொலைந்த விமானம்

 (குரு அரவிந்தன்)

எழுபது வருடங்களுக்கு முன் தொலைந்து போன போர்விமானம் ஒன்றை சகாரா பாலைவனத்தில் தற்போது கண்டுபிடித்திருக்கிறார்கள். பறப்பின்போது சில விமானங்கள் தொலைந்து போயிருந்தாலும் உடனடியாகவே விபத்து நடந்த இடத்தைக் கண்டு பிடித்து வேண்டிய நடவடிக்கைகளை அதற்குரிய அதிகாரிகள் மேற்கொள்வர். சில சமயங்களில் எங்கே எப்படித் தொலைந்தது என்பதுகூடத் தெரியாமல் போய் விடுவதுண்டு. அப்படித் தொலைந்து போன அந்த விமானங்களுக்கு என்ன நடந்திருக்கும், அதில் பயணம் செய்தவர்கள் என்னவாகியிருப்பர் என்பதுகூடத் தெரியாமல் போய்விடும். அப்படியான சம்பவங்கள் மர்மமாகவே இருக்கும். ஆனால் சுமார் எழுபது வருடங்களுக்கு முன் தொலைந்து போன ஒரு போர்விமானத்தைத் தற்போது சகாரா பாலைவனத்தில் தற்செயலாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஜேக்கப் பெர்க்கா என்பவரின் தலைமையில் சென்ற போலாந்து எண்ணெய் சுத்திகரிக்கும் நிறுவனத்தை சேர்ந்தவர்கள்தான் தற்செயலாக இந்த விமானத்தின் சிதைவுகளை அங்கே கண்டு பிடித்தனர். சகாரா பாலைவனத்தில், குடிமனை உள்ள நகரத்தில் இருந்து சுமார் 200 மைல்களுக்கு அப்பால் இந்த விமானத்தின் சிதைவுகள் கண்டெடுக்கப்பட்டன. நல்ல நிலையில் இருந்த இந்த விமானத்தின் சிதைவுகளில் இருந்து சுமார் 70 வருடங்களுக்கு முன் காணாமல் போன Kittyhawk P-40 என்ற அமெரிக்க போர்விமானத்தின் சிதைவுகள் தான் அவை என்பதைக் கண்டறிந்திருக்கிறார்கள்.


இரண்டாம் உலகமகா யுத்தத்தின் போது பிரித்தானிய விமானப்படைப் பிரிவினர் ஆபிரிக்காவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள எகிப்திலே முகாமிட்டுத் தங்கியிருந்தார்கள். டெனிஸ் கொப்பிங் என்ற பெயருடைய 24 வயதே நிரம்பிய ஆர்ஏஎவ் 260 (RAF'S 260) விமானப்படைப் பிரிவைச் சேர்ந்த விமானிதான் விபத்தில் சிக்கிய அந்த விமானத்தை ஓட்டிச் சென்றிருக்கின்றார். இவர் பிரித்தானியாவில் உள்ள சவுத்என்ட் என்ற இடத்தைச் சேர்ந்தவர். 1942ம் ஆண்டு யூன் 28ம் திகதி இந்தப் போர்விமானத்தை பழுது பார்ப்பதற்காக இன்னுமொரு விமானத்தளத்தை நோக்கி சகாரா பாலைவனத்திற்கு மேலாக ஓட்டிச் சென்ற போதுதான் இந்த விமான விபத்து நடந்திருக்கின்றது.  யுத்த கால சேவையில் ஈடுபட்டிருந்ததால், விமானி காணாமல் போய்விட்டார் என்று மட்டும் அவரது பெற்றோருக்கு அந்த நேரம் அறிவிக்கப் பட்டிருந்தது. யுத்த காலத்தில் காணாமல் போனவர்களின் பட்டியலில் அவரது பெயரும், தொலைந்துபோன விமானங்களின் பட்டியலில் அந்த விமானத்தைப் பற்றிய குறிப்புகளும்  சேர்க்கப் பட்டிருந்தன.

சகாரா பாலைவனத்தில் கண்டெடுக்கப்பட்ட விமானத்தின் பாகங்களிளில் துப்பாக்கிச் சன்னங்களால் துளைக்கப்பட்ட துவாரங்கள் பல காணப்பட்டன. அத்தகைய திருத்த வேலைகளுக்காகத்தான் அந்த விமானம் வேறு இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதா, அல்லது அந்த விமானப் பறப்பின்போது இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதா என்பதை இதுவரை அறிந்து கொள்ள முடியவில்லை. எதிரிகளின் நடமாட்டம் அந்தப் பகுதிகளில் இருந்ததற்கான தடயம் எதுவும் இருக்கவில்லை. விமானம் தரைதட்டிய போது விமானி உயிரோடு இருந்ததற்குச் சான்றுகள் இருந்திருக்கின்றன. ஏனென்றால் விமானத்திற்கு அருகே பரசூட் குடை விரிக்கப்பட்ட நிலையில் இருந்திருக்கிறது. அதன் அருகே அவசர அழைப்புக்கான வானொலியும், அதற்குரிய பற்றிகளும் இருந்திருக்கின்றன.  எனவே உயிரோடு இருந்த விமானி அவசர செய்தி அனுப்ப முயற்சித்திருப்பதும், வெய்யிலின் தாக்கத்தில் இருந்து தப்ப, பரசூட் குடையைப் பாவித்திருப்பதும் தெரியவந்திருக்கின்றது. அவசர செய்தி அனுப்ப முடியாத நிலையில் விமானி ஏதாவது ஒரு திசை நோக்கி நடந்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. உணவும், தண்ணீரும் அற்ற நிலையில் அவர் அந்த இடத்தை விட்டு அகன்றிருக்கலாம். அப்படி நகர்ந்திருந்தால், சுட்டெரிக்கும் வெய்யிலில் சுமார் இருபது மைல்களுக்குமேல் அவரால் நடக்கமுடியாமல் போயிருக்கலாம் என்பதையும் அவதானிகள் குறிப்பிடுகின்றனர். விபத்து நடந்த இடத்திற்கு மிக அருகே உள்ள நகரத்தைச் சென்றடைவதென்றாலும் சுமார் 200 மைல்கள் வரை பாலைவனத்தில் அவர் நடந்திருக்க வேண்டும். பாலைவனத்தில் அப்படி நடந்து செல்வதற்குச் சந்தர்ப்பமே இல்லை. பகலிலே சுட்டெரிக்கும் வெய்யிலும், இரவிலே கடும் குளிரும் அவரைப் பாதித்திருக்கலாம். எனவே விமானி அந்தச் சுற்று வட்டாரத்திலேயே எங்கேயாவது பசி பட்டினியால் இறந்திருக்கலாம் என்று நம்பப் படுகின்றது.


இரண்டாம் உலக யுத்தத்தின் போது மிகவும் பிரபலமான அமெரிக்கத் தயாரிப்பான இந்த கிற்ரிகவாக் போர் விமானங்கள் சேவையாற்றியிருக்கின்றன. அமெரிக்காவில் நியூயோர்க் மாகாணத்தில் உள்ள பவலோ என்ற இடத்தில்தான் இத்தகைய விமானங்கள் தயாரிக்கப்பட்டன. நேசநாடுகளான பிரித்தானியா, அவுஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளும் இத்தகைய விமானங்களையே யுத்த காலத்தில் பாவித்தன. 1938ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14ம் திகதி இந்தரக விமானம் முதலாவது பரீட்சார்த்த பறப்பை மேற்கொண்டிருந்தது. அந்தத் தொடர்ந்து 1939 – 1944 க்கும் இடைப்பட்ட காலத்தில் சுமார் 13,737 விமானங்கள் அங்கே தயாரிக்கப்பட்டிருக்கின்றன. இத்தகைய விமானங்கள் ஒற்றை இயந்திரத்தைக் கொண்டவையாகவும், ஒரு விமானி மட்டுமே இருக்க்கூடிய ஆசன வசதியைக் கொண்டவையாகவும் இருக்கின்றன. இந்தப் போர்விமானங்களில் ஆறு 50 கலிப்பர் சுடுகலன்கள் இணைக்கப் பட்டிருந்ததால், வானத்தில் இருந்து தரைத் தாக்குதலுக்கு அதிகமாகப் பாவிக்கப் பட்டன.  இவை மிக இலகுவாக வானத்தில் வட்டமிட்டுப் பறக்கவும், எதிரி விமானத்ததை வேகமாகத் துரத்திச் செல்லவும் கூடியன. விபத்துக்குள்ளான இந்த விமானத்தில் இருந்து எகிப்திய இராணுவத்தினர் பாதுகாப்பு காரணங்களுக்காக அதில் இருந்த சுடுகலன்களை ஏற்கனவே அகற்றியிருப்பதாகத் தெரியவருகின்றது.


விபத்துக்குள்ளான விமானியின் பெற்றோர்கள் மகனின் வரவிற்காகத் தினமும் காத்திருந்ததாகவும், என்றாவது ஒருநாள் திரும்பி வருவான் என்ற நம்பிக்கையோடும் இருந்ததாகத் தெரியவருகின்றது. ஏக்கத்தோடு இருந்த பெற்றோர்கள் மகனைக் காணாமலே இறந்து விட்டதாகவும் இறந்த விமானியின் சகோதரியின் மகனான பென்நெட் என்பவர் ஒரு நேர்காணலின் போது குறிப்பிட்டிருந்தார். வடலண்டனில் உள்ள கென்டன் விமானக்காட்சிச் சாலையில் விபத்தில் சிக்கிய இந்த விமானத்தின் சிதைவுகளைக் கொண்டு வந்து காட்சிப் பொருளாக வைப்பதற்கு ஆலோசித்திருக்கிறார்கள். மிக அரிதாகவே இந்த ரக விமானங்கள் எஞ்சியிருப்பதால், அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இறந்து போனதாகக் கருதப்படும் விமானியின் எச்சங்கள் ஏதாவது விபத்து நடந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்டால், விமானியின் சொந்த ஊருக்குக் கொண்டு வந்து அதற்குரிய மரியாதைகளைச் செய்ய உறவினர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

Thursday, May 3, 2012

தமிழ் மொழித் திறன்

ஒன்ராறியோ மாகாணத் தமிழ்ப் பிள்ளைகளின் தமிழ் மொழித் திறன்


குரு அரவிந்தன்


ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள தமிழ் மாணவர்களுக்குத் தமிழ் மொழியில் கல்விகற்பிக்கவும், பயிற்சி பெறவும் பல வகையிலும் தமிழ் பெற்றோர்களும், ஆசிரியர்களும், மற்றும் நலன் விரும்பிகளும் முன்னின்று பாடுபட்டு வருகின்றார்கள். எப்படியாவது எங்கள் தாய் மொழியை இந்த மண்ணில் தக்க வைத்துவிட வேண்டும் என்ற ஆதங்கம் புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் எண்ணத்தில் என்றும் நிலைத்து நிற்கின்றது. இவர்களுக்குத் துணை புரிவதற்காகப் பல நிறுவனங்களும் இந்த முயற்சிகளுக்கு ஆதரவு தருகின்றார்கள். பல மொழி பேசும் மக்கள் உள்ள இந்த நாட்டில் அவர்களின் மொழி பண்பாடு கலாச்சாரத்தைப பேணிக்காப்பதில் அவர்களுக்கு மத்திய, மாகாண அரசுகளும் ஏதோ ஒரு வகையில் உதவி செய்கின்றன. எதிர்காலத்தில தமிழ் மொழியும், தமிழ் இனமும் இந்த மண்ணில்; நிலைத்து நிற்க வேண்டுமானால் அதற்குப் பிள்ளைகளின் தமிழ் மொழித் திறனை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற சிறந்த நோக்கத்தோடு ஒவ்வொருவரும் தம்மால் இயன்றளவு பாடுபடுவதை இந்த நிகழ்வின்போது அவதானிக்க முடிந்தது.


சர்வதேச மொழித்திட்டத்தின் கீழ் ஒன்ராறியோ மாகாணத்தில் ஒவ்வொரு இனத்தவர்களும் தங்கள் தாய் மொழியைத் தங்கள் குழந்தைகளுக்குக் கற்பிப்பதற்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பிட்டளவு பிள்ளைகள் குறிப்பிட்ட இடத்தில் தாய் மொழிக் கல்வி கற்ற விரும்பினால் அதற்குத் தேவையான ஒழுங்குகளை மாகாண அரசு முறைப்படி செய்து கொடுக்கும். மாணவர்கள் எந்தத் தரத்தில் படிக்கிறார்களோ அதே தரத்தில்தான் தமிழ் மொழி வகுப்புக்கும் செல்ல வேண்டும். தமிழ்ப் பெற்றோர்களைப் பொறுத்தவரையில் புலம் பெயர்ந்த மண்ணில் தங்கள் குழந்தைகள் தாய்மொழியில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் உள்ளவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் மே மாதம் 2009ம் ஆண்டிற்குப்பின் தமிழ் கற்பதில் உள்ள ஆர்வம் தமிழ் மாணவர்கள் மத்தியில் சற்று மந்த நிலையில் குறைந்து இருந்தாலும், இப்போது மீண்டும் பழைய ஆர்வம் மாணவர்களிடையே துளிர்விட்டிருக்கின்றது.


கடந்த நான்கு ஆண்டுகள் தொடர்ந்து நடந்தது போல, சென்ற மாதமும் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள மாணவர்களிடையே உள்ள தமிழ் மொழித் திறனை வெளிப்படுத்துவதற்காக ஒரு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. சுமார் 1800 மாணவர்கள் வரை தங்கள் மொழித் திறன்களை வெளிப்படுத்துவதற்காக விண்ணப்பித்திருந்தார்கள். சென்ற வருடத்தைவிட அதிக மாணவர்கள் விண்ணப்பித்ததில் இருந்து மாணவர்களின் தாய் மொழிக் கல்வியில் உள்ள ஆர்வம் தெளிவாகப் புலப்படுகின்றது. பாலர் கீழ்ப்பிரிவில் இருந்து எட்டாம் தரம் வரையிலான மாணவர்களுக்குத் தங்கள் திறன்களை வெளிப்படுத்தச் சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டது. மிகவும் ஆர்வத்தோடு மாணவர்கள் இந்த நிகழ்வில் பங்குபற்றியிருந்தனர். குறிப்பா இம்முறை பீல் கல்விப்பகுதியில் இருந்து அதிக மாணவர்களும், தன்னார்வத் தொண்டர்களாக ஆசிரியர்களும் பங்குபற்றியிருந்தது குறிப்பிடத் தக்கது. யங் வீதிக்குக் கிழக்காகவும் மேற்காகவும் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு மேற்குப் பகுதி, கிழக்குப் பகுதி என்று இரண்டு பிரிவாகப் பிரிக்கப்பட்டு இரண்டு நாட்களாக இந்த நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. ஒன்ராறியோ தமிழ் ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்த பல ஆசிரியர்களும், ஒன்ராறியோ கல்விச் சபைகளைச் சேர்ந்தவர்களும் தன்னார்வத் தொண்டர்களாக ஆர்வத்தோடு வந்து கலந்து கொண்டு நிகழ்ச்சி திறம்பட நடப்பதற்கு உதவி செய்தனர். இவர்களைவிட பல இளைஞர்களும், யுவதிகளும் தன்னார்வத் தொண்டர்களாக வருகை தந்து போட்டிகளுக்கு வேண்டிய முன் ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தனர். சுருங்கச் சொன்னால் எங்கள் மொழி, எங்கள் இனம் என்ற ஒரு கூட்டுக் குடும்பச் சூழ்நிலை ஒன்றை எல்லோரும் சேர்ந்து உருவாக்கியிருந்தனர். எந்த ஒரு பலனையும் எதிர்பார்க்காமல் எங்கள் மொழியும் இனமும் இந்த மண்ணில் நிலைத்து நிற்கவேண்டும் என்ற பரந்த நோக்கத்தோடு எல்லோரும் ஒத்துழைத்தது மட்டுமல்ல, தங்கள் தாய் மொழியை அடுத்த தலைமுறையிடம் கையளிப்பது என்பதைத் தங்கள் தார்மீகக் கடமையாக நினைத்து அதையும் திறம்பட நிறைவேற்றியிருந்தார்கள்.


ஒன்ராறியோ அரசு தரும் இலவசமான தாய் மொழி கற்கும் திட்டத்தை தமிழ் பெற்றோர்களாகிய நாங்கள் கவனமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தாய் மொழியைக் கற்பதற்கு மாணவர்களுக்கு வேண்டிய எல்லா வசதிகளையும் அரசு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. எங்களுக்குக் கிடைத்திருக்கும் இந்த அரிய சந்தர்ப்பத்தை நாங்கள் பயன்படுத்தாவிட்டால் காலப்போக்கில் அவர்கள் அதை ரத்துச் செய்து விடுவார்கள். எக்காரணம் கொண்டும் இந்த வசதிகளை நாங்கள் திரும்பவும் பெற்றுக் கொள்ள முடியாது. எனவே உங்களுக்கு அருகாமையில் உள்ள சர்வதேச மொழி கற்பிக்கும் பாடசாலைகளில் நீங்கள் உங்கள் பிள்ளைகளைப் பதிவு செய்து கொள்ள முடியும். பீல் பிரதேச கல்விச்சபையில் தமிழ் மொழி கற்பவர்கள் இணையத்தளத்திற்கூடாக விண்ணப்பிக்க முடியும். ரொறன்ரோ கல்விச்சபையில் கல்வி கற்பவர்கள் செப்டம்பர் மாதத்தின் முதற் கிழமையில் நேரடியாகச் சென்று அருகே உள்ள தமிழ் மொழி கற்பிக்கும் பாடசாலைகளில் விண்ணப்பிக்கலாம். காலதாமதம் செய்யாமல் செயற்றிட்டத்தில் இறங்குங்கள். போதிய மாணவர்கள் இல்லாவிட்டால் வகுப்புகளை ரத்துச் செய்து விடுவார்கள். தாய் மொழி கற்பதில் தமிழ் மாணவர்களுக்கு உள்ள ஆர்வத்தை எக்காரணம் கொண்டும் மூழ்கடிக்காதீர்கள். தங்களுக்குத் தகுந்த முறையில் தாய் மொழிக் கல்வி கிடைக்கவில்லையே என்ற குற்றச்சாட்டை பெற்றோர்கள் மீது எதிர்காலச் சந்ததியினர் வைப்பதற்கு இடம் கொடுக்காதீர்கள். அரசு தரும் இந்த வசதிகளைத் தகுந்த முறையில் பயன்படுத்துவது மூலம், புலம் பெயர்ந்த மண்ணில், தமிழ் மொழியை மட்டுமல்ல, எங்கள் பண்பாடு, கலாச்சாரத்தையும் எங்களால் பேணிக் காக்க முடியும். தாய் மொழி கற்பதில் முன்னணியில் நின்ற எங்கள் தமிழ்ப் பிள்ளைகள் இன்று சில பெற்றோரின் அலட்சியத்தால் தமிழ் கற்பதைப் புறக்கணித்ததால், நாங்கள் இன்று இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.


இலவசமான தமிழ் மொழித் திறன் காணல் போட்டி என்பதால், இம்முறை போட்டிக்கான விண்ணப்பங்களை மாணவர்கள் நேரடியாகவே விண்ணப்பிக்கக்கூடியதாக இணையத் தளங்கள் (ழவௌய.ழசப) மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சில பெற்றோர்கள் தொடக்கத்தில் தயங்கினாலும், நவீன தொழில் நுட்பத் துறைக்குள் தங்களையும் மெல்ல மெல்ல அவர்கள் பழக்கப்படுத்திக் கொண்டார்கள். எங்கள் இனம் எந்த ஒரு நல்ல விடையத்திலும் பின்தங்கி நிற்கக்கூடாது என்பதை அவர்களும் புரிந்து கொண்டதால் தங்களால் இயன்றளவு ஒத்துழைப்பையும் நல்கினார்கள். பிள்ளைகள் மட்டுமல்ல சில பெற்றோர்களும் நவீன தொழில் நுட்பத்தின் மூலம் கணினி அறிவை இதன் மூலம் பெற்றுக் கொண்டார்கள். பாலர் கீழ்ப்பிரிவு, பாலர் மேற்பிரிவு பெற்றோர்கள் மிகவும் ஆர்வமுள்ளவர்களாகக் காட்டிக் கொண்டார்கள். தமிழ் மொழித் திறன் காணல் போட்டி என்பதைவிட தமிழ் மாணவர்களின் திறமைகளை வெளிக் கொண்டுவரும் ஒரு நிகழ்வு என்றே இதைக் குறிப்பிட வேண்டும். கடந்த மூன்று மாதங்களாகப் பல தமிழ் பிள்ளைகள் சொல்வுது எழுதுதல், எழுத்தை இனங்காணல், படத்தைப் பார்த்து சொற்கள், வசனங்கள் எழுதுதல், வாசித்தல் போன்ற பல துறைகளில் அதிக கவனம் செலுத்திப் பயிற்சி எடுப்பதில் தங்கள் பொன்னான நேரத்தைச் செலவிட்டதை அவதானிக்க முடிந்தது. அடுத்த தலைமுறையினர் தங்கள் தாய் மொழியைக் கற்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள் என்பது பெருமைப்பட வேண்டியதொன்றாகும்.  விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரைத் தவிர, தமிழ் மாணவர்களின் இந்த முயற்சிக்குப் பெற்றோர்களும், ஆசிரியர்களும் மனமுவந்து கொடுத்த ஊக்கமும் ஆக்கமும் கட்டாயம் பாராட்டப்பட வேண்டியதொன்றாகும். சமீபத்தில் எடுத்த ஒரு புள்ளி விபரக் குறிப்பின்படி சர்வதேச மொழித்திட்டத்தின் கீழ் தாய்மொழிக் கல்வி கற்கும் மாணவர்கள் ஏனைய மாணவர்களைவிட அதி திறமைசாலிகளாக இருப்பதும் தெரிய வந்துள்ளது. காரணம் என்னவென்றால், அவர்கள் பாடசாலையில் கற்கும் பாடங்களை தமிழில் மாணவர்கள் முற்கூட்டியே கற்றுக் கொள்வதால் ஆசிரியரின் கேள்விகளுக்கு மொழி மாற்றத்தின் மூலம் இலகுவாகப் பதிலளிக்க முடிகின்றது.


குறிப்பாக இந்த மொழித்திறன் காணும் நிகழ்ச்சிக்கு தாமாகவே முன் வந்து ஆதரவுதந்த எல்லா கல்விச் சபைகளுக்கும், பத்திரிகைகளுக்கும், வானொலி, தொலைக்காட்சி, இணையத்தளங்கள், மற்றும் எல்லா தொடர்பு சாதனங்களுக்கும் தமிழ் மக்களின் சார்பில் நன்றிகூறக் கடமைப்பட்டிருக்கின்றோம். மொழி அழிந்தால் நம் இனம் அழிந்துவிடும் என்ற மறுக்க முடியாத உண்மையை மீண்டும் உங்களுக்கு, குறிப்பாகத் தமிழ்ப் பெற்றோர்களுக்கு அவர்களின் தார்மீகக் கடமையை நினைவூட்டுவதன் மூலம் இந்த மண்ணில் எங்கள் இனத்தையும் மொழியையும் கட்டிக்காப்பதில் எம்மால் முடிந்த உதவிகனைச் செய்வோம். இறுதியாக இந்த தமிழ் மொழித் திறன் காணல் நிகழ்வு மிகச் சிறப்பாக நடந்தேறத் தன்னார்வத் தொண்டர்களாக வந்து கலந்து கொண்ட பெற்றோர், மாணவர்கள், மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றிகூற விரும்புகின்றேன்.