Sunday, July 22, 2012

Cinema world - 2011 சினிமா உலகம்.

                                                 2011ல் சினிமா உலகம்.

                                                                    
                                                   குரு அரவிந்தன்                                   

ன்று அதிகமான இளைஞர்களைக் கவர்ந்திழுக்கும் ஒரு சாதனமாக சினிமா உலகம் உருவாகியிருக்கிறது. சினிமா மட்டுமல்ல, சின்னத்திரை, திரையிசை போன்ற துறைகளிலும் அதிக நாட்டம் கொண்டவர்களாக இன்றைய இளைஞர்கள் இருக்கின்றார்கள். தொழில் நுட்பத் துறைகளில் ஏற்பட்ட வேகமான வளர்ச்சி காரணமாக கணினித்துறையின் வசதி பெரும்பாலானவர்களுக்குக் கிடைத்திருப்பதும், சினிமாவைத் தேடித் திரையரங்குகளுக்குச் செல்லாமல் சினிமாவே வீடுதேடி வருவதும்  இதற்கு ஒரு முக்கிய காரணமாகும். இணையத்தளங்கள் மூலம் சினிமா பற்றிய பரப்புரைகள் விரைவாக நடைபெறுவதால், வானொலி மூலம் பாடல்கள் கேட்ட காலம்போய், வீட்டில் இருந்தபடியே தொலைக்காட்சி, கணினி மூலம் அவற்றை அவதானிக்கவும் முடிகிறது.


சினிமா என்று பார்க்கும்போது நம்மவர்களின் நாட்டம் அல்லது ஆர்வம் தமிழ் படங்களிலும், அடுத்து ஆங்கிலப் படங்களிலும் இருக்கின்றது. ஆங்கிலப்படங்களைப் பொறுத்த வரையில் சிறந்த படங்கள், மோசமான படங்கள் என்று சினிமாத்துறை சார்ந்த நிறுவனங்கள் ஒவ்வொரு வருடமும் கணிப்பு எடுப்பதுண்டு. ஒவ்வொருவரின் ரசனையும் மாறுபடுவதால், சிலருக்குப் பிடித்த படங்கள் வேறு சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். சில நிறுவனங்கள் சிறந்த படங்கள் என்று தங்களுக்கோ, தங்கள் ரசிகர்களுக்கோ பிடித்த சில படங்களை ஒவ்வொரு வருடமும் வகைப்படுத்துவதுண்டு. அந்த வகையில் 2011ம் ஆண்டுக்கான சினிமாப் படங்களையும் இணையத்தளம் மூலம் அவர்கள் வகைப்படுத்தியிருந்தார்கள். அவையாவன:

Beginners, Super – 8, Bridesmaids, Attack the Block, The help, The artist, Hugo, Midnight in Paris, Shame, 50/50, The Descendants, The Tree of life, Drive, Money ball, War Horse.

அதேபோல தங்கள் ரசனைக்கேற்ப மோசமான படங்களையும் பட்டியலிட்டிருக்கிறார்கள். மோசமான படங்கள் என்று பார்க்கும்போது சிலருக்கு அந்தப் படங்களையோ, அவ்வது அந்தப் படங்களில் சில காட்சிகளையோ கூடப் பிடித்திருக்கலாம். ஆனாலும் எல்லா அம்சங்களையும் பொதுவாக எடுத்துப் பார்க்கும்போது தரம் குறைந்த படங்களை மோசமான படங்களாகக் கணிக்கிறார்கள். 2011ம் ஆண்டில் மோசமான படங்களாக:

Afghan Luke, Iron Man, The Dilemma, Hass Pass, Just Go with It, New year eve, Red Riding Hood, Season of the Witch, Something Borrowed.

போன்ற சில ஆங்கிலப்படங்களை இணையத்தளத்தில் குறிப்பிட்டிருந்தார்கள். ஏற்கனவே நான் குறிப்பிட்டதுபோல ஒவ்வொருவரின் ரசனையும் மாறுபடுவதால் நல்லபடமா, மோசமான படமா என்பதை அவ்வப்போது ரசிகரகளே தீர்மானிக்க வேண்டும். 2011ல் அதிக வசூலைக் கொடுத்த ஆங்கிலப் படங்களையும் இதுபோலவே வரிசைப் படுத்தியிருந்தார்கள், இதில் இரண்டு வாணபிரதேஸ், இரண்டு வால்ட்டிஸ்னி படங்களும் அடங்கும். அவையாவன:

Harry Potter and the Deathly Hallows, Transformers: Dark of the Moon, Pirates of the Caribbean, Kung Fu Panda -2, The Twilight Saga, Fast Five, The Hangover Part – 11, The Smurts, Cars-2, Rio.

தமிழ் சினிமாவிலும் சில படங்களை இப்படியாகப் பட்டியலிட்டிருக்கிறார்கள். தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் புதிய படங்கள் வெளிவரும்போது ஆனந்தவிகடன் ஓரளவு நம்பகரமான புள்ளிகளைக் கொடுப்பதை அவதானிக்க முடிகின்றது.

தெய்வத்திருமகள், வேங்கை, சிறுத்தை, மங்காத்தா, யுவன்யுவதி, வானம், முரட்டுக்காளை, மாப்பிள்ளை, எங்கேயும்காதல், கோ, அவன் இவன், காவலன், 7ம் அறிவு, வேலாயுதம், வித்தகன் போன்ற படங்கள் இதுவரை ஓரளவு வசூலில் முன்னிற்கின்றன. பயணம், 180, காஞ்சனா, எங்கேயும் எப்போதும், மயக்கம் என்ன போன்ற படங்களையும் இங்கே குறிப்பிடலாம்.

சிறந்த தமிழ் படங்களின் பட்டியல் 2012ம் ஆண்டின் முற்பகுதியில்தான் தெரியவரலாம்.  2010ம் ஆண்டு சிறந்த மாநிலமொழி திரைப்படப் பிரிவில் தமிழ்ப்படமான தென்மேற்குப் பருவக்காற்று தெரிவுசெய்யப்பட்டிருந்தது. இந்தப்படம் வர்த்தக ரீதியில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறாவிட்டாலும் சிறந்த கதைக் களத்தைக் கொண்டிருந்தது.


2010 ஆண்டில் ஆடுகளம், மைனா, எந்திரன், நம்மகிராமம், அங்காடித்தெரு போன்ற சில சிறந்த படங்களும் வெளிவந்திருந்தன. 2010ம் ஆண்டுக்கான பிலிம்பெயர் விருது மைனா படத்திற்குக் கிடைத்திருந்தது. சினிமா குறித்த எழுத்துப்படைப்புக்காகத் திரைச்சீலை என்ற புத்தகம் தேசிய விருதைப் பெற்றிருந்தது. இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் ஓவியர் ஜீவா என்று அமைக்கப்படும் வி. ஜீவானந்தன் என்பதும் குறிப்பிடத் தக்கது.

2011ம் ஆண்டுக்கான தேசிய விருது பெற்ற படங்களில் தமிழில் வெளிவந்த அழகர்சாமியின் குதிரை, ஆரண்யகாண்டம் ஆகியனவும் அடங்கும்.


தமிழ்ப்படங்களுக்கு பெயர் வைப்பதில் தமிழ்ப் பெயர்களுக்குத் தட்டுப்பாடு இருப்பதால் இப்போதெல்லாம் வெங்காயம், வெடி என்றெல்லாம் பெயர் வைக்கிறார்கள். ஒஸ்தி என்றுகூட ஒரு தமிழ் படத்திற்குப் பெயர் வைத்திருக்கிறார்கள்.

2011ல் வெளிவந்த படங்களில் மிருகங்களின் பெயர்களோடு தொடர்புடைய சில படங்களும் வெளிவந்திருந்தன.

சிறுத்தை, வேங்கை, ஆடுபுலி, நடுநிசிநாய்கள், குள்ளநரிக்கூட்டம், அழகர்சாமியின் குதிரை, முரட்டுக்காளை, கோ, புலி வருது, புலி வேஷம் போன்ற பெயர்களைக் கொண்ட சில படங்கள் வெளிவந்திருந்தன.


சில ஆக்கபூர்வமான செயற்திட்டங்களையும் தமிழ் திரைப்படத்துறையினர் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. தமிழ் மொழி வளர்ச்சிக்கு, குறிப்பாகப் புலம் பெயர்ந்த மண்ணில் உள்ள அடுத்த தலைமுறையினர் மொழி அறிவைப் பெறுவதற்கு இந்தத் திரைப்பட ஊடகம் முன்னிற்பதும், முக்கிய காரணியாகத் திகழ்வதும் மறுக்கமுடியாதது. அடுத்த தலைமுறையோடு நெருங்கிப் பழகும் எங்களால் திரைப்படத்துறையில் அவர்களுக்கு இருக்கும் ஈடுபாட்டைப் புரிந்து கொள்ள முடிகிறது. தமிழ்ப்படமோ, சின்னத்திரை நாடகமோ அல்லது திரையிசைப் பாடல்களையோ கேட்கும் மாணவர்களிடம் மொழித்திறன் அதிகமாக இருப்பதையும் அவதானிக்க முடிகின்றது.

திரையிசையில் ஆர்வமுள்ள பலர் தமிழ் நாட்டில் காலடி பதித்து தங்கள் தமிழ் மொழித் திறனை வெளிப்படுத்திப் புகுந்த, பிறந்த மண்ணுக்குப் பெருமை தேடித்தருவதைப் பாராட்டாமல் இருக்க முடியாது. தமிழ் திரைப்படத்துறையின் நாகரிக முன்னேற்றத்திற்கு இன்னுமொரு உதாரணமாக, சமீபத்தில் மானுடத்தின்பால், நீதியின்பால் அக்கறையுள்ள தமிழ் திரைப்படத்துறையினர் தூக்குத்தண்டனை என்ற அநாகரீக பழக்கத்தை ஒழிக்க வேண்டும் என்று தமிழ் நாட்டில் குரல் கொடுத்திருப்பதும் பாராட்டத்தக்கதே.


நல்லதும் கெட்டதும் கொண்டதுதான் நாங்கள் வாழும் இந்த உலகம். எதையுமே சமாளித்துக் கொண்டு வாழ நாங்கள் தான் பழகிக் கொள்ள வேண்டும். திரையுலகமும் அப்படிப்பட்டதே. தமிழ் திரைப்படங்களைப் பார்க்கக்கூடாது என்று பிள்ளைகளுக்குத் தடைவிதிக்கும் சில பெறோர்களும் இருக்கிறார்கள். அந்தந்தப் பருவத்திற்குரிய எதையோ இழந்துவிட்ட ஏக்கம் அந்தப் பிள்ளைகளின் அடிமனதில் பதிந்திருப்பதை அவர்களுடன் பேசும்போது அவதானிக்க முடிகிறது. எது சரி, எது தவறு என்பதைப் பெற்றோர்தான் பிள்ளைகளுக்கு உணர்த்த வேண்டும். ‘களவும் கற்றுமற’ என்று எமது பெரியோர்கள் குறிப்பிட்டது போல திரைப்படங்களில் இருந்து நல்லவற்றை தெரிந்தெடுத்துக் கொண்டு மற்றவற்றை மறந்துவிடப் பழகிக் கொள்ள வேண்டும். அப்படி வாழப் பழகிக் கொண்டவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்பதில் சந்தேகமேயில்லை.

No comments:

Post a Comment