Saturday, July 21, 2012

Neithal and Marutham - நெய்தலும் மருதமும்

Landscapes: Neithal and Marutham

Neithal: Background location is seashore.
Marutham: Background location is Cropland.

(நெய்தலும் மருதமும் பகுதி ஒன்றை யூன் மாதம் 2011ல் 12-06-2011 பார்க்கவும்)


நெய்தலும் மருதமும் - 11

காங்கேயன்துறையில் தென்னைமரம், தாழைமரம், பூவரசமரம், மாமரம், புளியமரம், நாவல்மரம் போன்றவை அதிகம். பொதுவாக பெரிய காய்கள் இருக்கும் மரங்களான தென்னை, பனை, விளாத்தி போன்ற மரங்களின் நிழலில் பிள்ளைகளின் பாதுகாப்புக் கருதி விளையாட விடமாட்டார்கள்.

சண்டிலிப்பாய் தோட்டங்களில் பெரிய பூசணிக்காய்களைப் பார்த்திருக்கிறேன். சிறுவயதில் நான் படித்தகதை ஒன்று எனக்கு ஞாபகம் வருகிறது. ஒரு குருவும், சீடனும் நடந்து வந்த களைப்பில் ஒரு ஆலமரத்தின் கீழ் ஓய்வெடுத்தார்களாம் அப்பொழுது மரத்தை அண்ணார்ந்து பார்த்த சீடன் குருவைப் பார்த்து, ‘சின்னஞ்சிறிய பூசணிக் கொடியில் எந்தப் பெரிய புசணிக்காய் காய்க்க, இந்தப் பெரிய ஆலமரத்தில மட்டும் ஏன் சின்னஞ்சிறிய காய் காய்க்கிறது? என்று ஏளனமாய்க் கேட்டானாம். அதற்கு குரு ‘ஆண்டவன் எல்லாவற்றையும் அளந்துதான் வைத்திருக்கிறான். அனுபவத்தில் நீ தெரிந்து கொள்வாய்’ என்று சிரித்துக் கொண்டே சொன்னாராம். அந்த நேரம் பார்த்து சீடனின் தலையிலே ஒரு ஆலம் பழம் விழுந்து தெறித்ததாம். ‘குருவே புரிந்து கொண்டேன்’ என்றானாம் சீடன் தலையைத் தடவிக் கொண்டே!


பாடசாலை விடுமுறைக்கு சண்டிலிப்பாய் செல்லும்போதெல்லாம் கூட்டாளிகள் எனக்காகக் காத்திருப்பார்கள். அவர்கள் கூட்டாளிகளாக மட்டுமல்ல ஏதோ ஒரு விதத்தில் சொந்தக்காரராயும்  இருந்தார்கள். பிரேமா, ரஞ்சன், சுரேஸ், ரகு, ரமேஸ், ராசன், ஜெயா, குணேஸ், தேவன், ஸ்ரீபவான், ரவி, தெய்வேந்திரம், பபூ என்று ஒரு கூட்டமே இருந்தது.

காங்கேயன்துறையில் இருந்து 769ம் இலக்க பேருந்து எடுத்து சுண்ணாகத்தில் இறங்கவேண்டும். அரைமணி நேரத்திற்கு ஒரு பேருந்து வரும். பேருந்து வராவிட்டால் தனியார் போக்குவரத்து வண்டிகளும் வரும். சுற்று வட்டாரங்களில் சுண்ணாகம் சந்தை, சங்கiனைச்சந்தை, மருதனாமடம்சந்தை போன்றவை பிரபல்யமானவை. வீடுகளில் நடக்கும் நல்ல, கெட்ட காரியங்களுக்கு அங்கே சென்றுதான் மரக்கறிகள் மொத்தமாக வாங்குவார்கள். சுண்ணாகம் சந்தை எப்பொழுதுமே பரபரப்பாக இருக்கும். சுண்ணாகத்தில் இருந்து நான்கு பேருந்துகள் மாசியப்பிட்டிவரை செல்லும். 775ம் இலக்கத்தைக் கொண்ட வண்டி ஓன்று சாவகச்சேரியில் இருந்து புறப்பட்டு சுண்ணாகம் வந்து மாசியப்பிட்டிவீதி வழியாகச் சங்கானைக்குச் செல்லும். 774ம் இலக்கத்தைக் கொண்ட அடுத்த வண்டி அச்சுவேலியில் இருந்து வெளிக்கிட்டு சுண்ணாகம் வந்து, மல்லாகம் வழியாக மாசியப்பிட்டிக்குச் சென்று, சங்கானையை அடையும். இந்த வண்டியில் செல்லும்போது அடிக்கடி கே.எஸ். பாலச்சந்திரனின் ‘அண்ணைரைற்’ தனிமனித நகைச்சுவை நாடகம் ஞாபகம் வரும். அடுத்த வண்டி 768ம் இலக்கத்தைக் கொண்டது. யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்டு சுண்ணாகம் வந்து,  மாசியப்பிட்டி வீதி வழியாக அளவெட்டியைக் கடந்து கீரிமலைக்குச் செல்லும். 772ம் இலக்கத்தைக் கொண்ட மற்ற வண்டி யாழ்பாணத்தில் இருந்து புறப்பட்டு, சுண்ணாகம் வந்து, மாசியப்பிட்டி வழியாக சங்கானை செல்லும். கூடியவரை மல்லாகம் வழியாகச் செல்லும் பேருந்தை நான் தவிர்க்கவே முற்பட்டேன்.

இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று சுற்றிப் போகவேண்டும். மற்றது கந்தரோடை வீதியால் சென்றால் பரந்து கிடக்கும் வயல் வெளியின் இயற்கைக் காட்சிகளை ரசித்துக் கொண்டு செல்லலாம். குறிப்பாக கந்தரோடை ஸ்கந்தவரோதயா பாடசாலையைக் கடந்ததும், வயல் வெளிகள் ஆரம்பமாகும்.

அளவெட்டியில் இருந்து தெற்கு நோக்கி வரும் வழுக்கை ஆறு இந்த வீதியைக் கடந்து செல்லுமிடத்தில் ஒரு சிறிய குளமும் உண்டு. கீரிமலையில் இருந்து இந்த ஆறு வந்ததாகவும் சென்ற தலைமுறையினரில் சிலர் குறிப்பிடுவர். வயலின் எல்லையில் கோயில்களின் கோபுரங்கள் கம்பீரமாக நிமிர்ந்து நிற்பதை இங்கிருந்தே பார்க்க முடியும்.

மகாஜனக்கல்லூரியில் படிக்கும்போது நான் வெள்ளிக்கிழமைகளில் பாடசாலை முடிந்ததும் அங்கிருந்தே துவிச்சக்கர வண்டியில் செல்வதுண்டு. அம்பனைச் சந்தியில் இருந்து அம்பனை வீதிவழியாக (கூட்டுறவாளர் வீதி) அலுக்கைச் சந்தியை அடைந்து, வலதுபக்கம் திரும்பி மல்லாகம் வீதிவழியாக மாசியப்பிட்டிச் சந்தியை அடைந்து, ஆலங்குளாய் வீதிக்குச் செல்வதுண்டு.

கோயிலில்லா ஊரில் குடியிருக்காதே! என்று முன்னோர்கள் சொன்னதாலோ என்னவோ,  தமிழர் வாழ்ந்த நிலம் முமுவதும் நிறைய வழிபாட்டுத் தலங்கள் இருந்தன.

நெய்தல் நிலமான காங்கேயன்துறையிலும்சரி, மருதநிலமான சண்டிலிப்பாயிலும்சரி நிறையக் கோயில்களைக் கட்டி, மக்கள் வழிபட்டு வந்தார்கள். கோயிற் திருவிழாக்கள் தொடங்கினால் கொண்டாட்டம்தான். திருவிழா முடியும்மட்டும் எங்களுக்கு சைவச்சாப்பாடுதான் தினமும் கிடைக்கும். சரித்திரப் புகழ் பெற்ற கோயில்கள் இங்கே இருந்ததற்கு நிறைய சான்றுகளும் இருக்கின்றன.

காங்கேயன்துறையில், வெகு அரிதாகக் காணப்படும் நாச்சிமார் கோயில் ஒன்று இருந்தது. அதேபோல சண்டிலிப்பாயிலும் அருகருகே இரண்டு அம்மன் கோயில்கள் இருந்தன. அங்கணாக்கடவையில் வெகு அரிதாகக் காணப்படும் கண்ணகை அம்மன் கோயிலும், அருகே மீனாட்சி அம்மன் கோயிலும் இருக்கின்றன. இதைவிட சீரணி அம்மன்கோயிலையும் சேர்த்தால் மூன்று அம்மன் கோயில்கள் சண்டிலிப்பாயில் இருக்கின்றன. இரட்டயப்புலம் வயிரவர்கோயில், நரசிம்ம வைரவர்கோயில், ஆலடிவைரவர்கோயில், அம்பலந்தறை வயிரவர்கோயில் என்று பல வயிரவர் கோயில்கள் இருக்கின்றன. ஆவளைப் பிள்ளையார்கோயில், காளிகோயில், வீரபத்திரர்கோயில், ஐயனார்கோயில் என்று நிறையவே வழிபாட்டுத் தலங்கள் காணப்படுகின்றன.

கஜபாகு மன்னன் காலத்தில் கண்ணகி அம்மன் வழிபாட்டுக்குரிய சான்றுகள் இருப்பதால், பூவல் குளத்தோடு சேர்ந்த சில கோயில்கள், குறிப்பாக கண்ணகை அம்மன் கோயில் கஜபாகு மன்னன் காலத்தில் கட்டப்படடிருக்கலாம் என்றும் நம்பப்படுகின்றது.; கல்வளையந்தாதி பாடிய நல்லூர் சின்னத்தம்பிப் புலவரைப்பற்றியும் இங்கே குறிப்பிடவேண்டும். சண்டிலிப்பாயில் உள்ள கல்வளை என்னும் பதியில் எழுந்தருளியிருக்கும் விநாயகக் கடவுள்மீது இவரால் கல்வளை அந்தாதி பாடப்பெற்றது. இவரது சிறுபருவத்தில், தெருவிலே விளையாடிக் கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த புலவர் ஒருவர் இவரது தந்தையாரின் பெயரைச் சொல்லி அவரது வீடு எங்கே இருப்பதாக இவரிடம் அடையாளம் கேட்டாராம். அதற்கு சின்னத்தம்பிப்புலவர்,


பொன்பூச் சொரியும் பொலிந்த செழுந் தாதிறைக்கும்
நன்பூ தலத்தோர்க்கு நன்னிழலாம் - மின்பிரபை
வீசுபுகழ் நல்லூரான் வில்லவரா யன்கனக
வாசலிடைக் கொன்றை மரம்என்று பாடல் மூலம் அவருக்குப் பதில் தந்தாராம். ஏழு வயதிலேயே பாடல் இயற்றி கூழங்கைத் தம்பிரானிடம் ஆசி பெற்றவர். பிரபந்தங்கள், மறைசையந்தாதி, கல்வளையந்தாதி, கரவைவேலன் கோவை, பறாளை விநாயகர் பள்ளு என்பன இவரால் பாடப்பெற்றன. யாழ்ப்பாணத்து வல்லுவெட்டித்துறை போதகாசிரியர் ஸ்ரீ வைத்திலிங்கம் பிள்ளையவர்கள் இவரால் பாடப்பெற்ற கல்வளையந்தாதிக்கு உரை எழுதியுள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது. சண்டிலிப்பாயில் இருந்த கார்த்திகேயக் குருக்களும் ஆகமவிதிகளில் சிறந்து விளங்கியதாகவும், அவரிடம் கார்த்திகேயப்புலவர் சுத்தவாதுளம், மிருகேந்திரம் முதலிய ஆகமங்களைக் கற்று, அவ்வாகம நூலறிவில் சிறந்து விளங்கியதாகவும் வரலாறு கூறுகிறது.

மன்னராட்சிக் காலத்தில் இங்கே குதிரை லாயங்கள் இருந்ததாகவும், அரசபரிவாரங்களும், பலதொழில் துறைகளைச் சார்ந்தவர்களும் இங்கே வந்து குடியேறியிருந்ததாகவும் தெரிகிறது. வெளிநாட்டவரின் ஆக்கிரமிப்பு காரமாக ஏற்பட்ட மதமாற்றம் காரணமாக கத்தோலிக்க வழிபாட்டுத் தலம் ஒன்றும் இங்கே உண்டு.


காங்கேயன்துறையின் தெற்குப்பகுதியில், மாருதப்புரவீகவல்லி காலத்தில் வழிபாட்டுத் தலமாக இருந்த மாவிட்டபுரம் மாவைகந்தனின் கோபுரம் எப்பொழுதும் தலைநிமிர்ந்து நிற்கும். கீரிமலை சடையம்மா மடத்தடிக்கும், மாவிட்டபுரம் கோயிலுக்கும் நிலத்துக்கடியில் சுரங்கப்பாதை இருந்ததாக முன்னோர் குறிப்பிடுவர். சடையம்மா மடத்தடியில் குகை ஒன்று கடலைப் பார்த்தபடி இருந்ததாகவும் அதில் ஒரு முனிவர் இருந்ததாகவும், அவர் அந்தக் கடலில் வந்து நீராடுவதாகவும் சென்ற தலைமுறையில் இருந்த பலர் அதைக் கண்டதாகவும் குறிப்பிடுவர். ஆடிஅமாவாசையன்று கீரிமலையில் மாவைக்கந்தனின் தீர்த்த உற்சவம் நடக்கும். அதைத் தொடர்ந்து பூங்காவனமும், மறுநாள் தெப்போற்சவமும் நடக்கும். காங்கேயன்துறை கடற்கரையில் மின்சார விளக்குகளின் அலங்காரத்தோடு மாவைக்கந்தன் பவனி வருவது கண்கொள்ளாக் காட்சியாய் இருக்கும்.

மகாஜனக்கல்லூரியின் சார்பில் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலிலும், திருக்கேதீஸ்வரத்திலும் திருவிழாக்கள் நடக்கும். பாதுகாப்புக் காரணங்களுக்காக மகாஜனாக்கல்லூரி, நடேஸ்வராக்கல்லூரி போன்ற கல்லூரிகளில் இருந்து சாரணர்கள் கடமையில் ஈடுபட்டிருப்பர். திருக்கேதீஸ்வரத்திற்கு ஆசிரியர்களும் மாணவர்களும்; பேருந்து ஒழுங்கு செய்து பெற்றோருடன் செல்வார்கள். மாவிட்டபுரம் மாவைக்கந்தனின் திருவிழாவிற்கு சுற்றாடலில் உள்ளவர்கள் அனேகமாக கால்நடையாகவே செல்வர். மாவைக்கந்தனின் தரிசனத்தோடு வடக்கு நோக்கி வருபவர்களுக்கு மேலும் தரிசனம் செய்ய பல வழிபாட்டுத் தலங்கள் காங்கேயன்துறை மண்ணில் இருந்தன.

குமாரகோயில், மாங்கொல்லை வயிரவர்கோயில், மருதடிபிள்ளையார் கோயில், நரசிம்ம வைரவர்கோயில், நாதவலை வைரவர்கோயில் தையிட்டி வைரவர்கோயில், நுங்கப்பை வைரவர்கோயில், நாச்சிமார்கோயில், குருநாதசுவாமிகோயில், காளிகோயில், கிருஸ்ணர்கோயில், கசாத்துறை பிள்ளையார்கோயில், மாம்பிராய் வைரவர்கோயில், அம்மன்கோயில் இப்படியாக பல வழிபாட்டுத் தலங்கள் இருந்தன. காங்கேயன்துறை மயானத்திற்கு அருகே ஜயனார் கோயில் ஒன்றும் இருந்தது. சுருங்கச் சொன்னால், ஒவ்வொரு வீதியிலும் குறைந்தது ஒரு வயிரவர் கோயிலாவது இருந்தது. தெரிந்தோ தெரியாமலோ மக்கள் பக்தி மார்க்கத்தில் தள்ளப்பட்டனர்.

இதனால் சமூகத்தில் ஒழுக்கம், கட்டுப்பாடு, ஒன்றுகூடல் போன்றவை பேணப்பட்டன.


நெய்தலும் மருதமும் - 12

எங்கள் தாய் மண்ணில் பழமொழிகள், பொன்மொழிகள், இணை மொழிகள், தொடற்செற்கள், உவமைகள் என்று நிறையவே பேசப்படுவதுண்டு. சராசரிமனிதரின் தினசரி வாழ்க்கை அனுபவங்களோடு மிருகத்தை, பறவையை, மரங்களை, இயற்கையை எல்லாம் அனேகமான சந்தர்ப்பங்களில் ஒப்பிட்டுப் பார்ப்பார்கள். பேச்சுவழக்கில் பெரியவர்கள் இவ்வுதாரணங்களை அடிக்கடி சொல்லிக் காட்டுவார்கள். பொதுவாக கண்முன்னால் உள்ள உதாரணத்தையே சொல்லிக் காட்டுவார்கள். முக்கியமாக மாடுகள் தான் முதலில் அகப்படும்.


‘ஆடுறமாட்டை ஆடிக்கறக்கணும்’ என்பார்கள். ‘அடியாத மாடு படியாது’ – பணியாமல் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல படிக்காமல் இருப்பவர்களுக்கும் இதைச் சொல்லியே அடிவிழும். செக்குமாடு– திரும்பத்திரும்ப ஒரே தவறைச் செய்பவர்களுக்கு. சோத்துமாடு- இது மூக்கு முட்டச் சாப்பிட்டுவிட்டு சோம்பேறியாய் இருப்பவர்களுக்கு. கட்டு;க்கடங்காகாளை– சொல்வழி கேட்காதவர்களுக்கு, பசுமாடு - இது சாதுவாய் இருப்பவர்களுக்கு. இதற்கு இளைஞர்கள் வேறு அர்த்தம் வைத்திருப்பார்கள்.


கோபம் அதிகமானால் நாயைக், கழுதையை, சிலசமயம் பண்டி என்று பன்றியைக்கூட இழுத்துத் திட்டுவார்கள்.

குரைக்கிற நாய் கடியாது, கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசைன? எறும்பூரக் கல்தேயும், யானையும் ஒருநாள் அடிசறுக்கும், காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு, உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?, குரங்கின் கை பூமாலை, எந்தப் புற்றுக்குள் எந்தப் பாம்பு? இலவுகாத்த கிளிபோல, இருதலைக் கொள்ளியுள் எறும்புபோல, எலியும் பூனையும்போல, கீரியும் பாம்பும்போல, தூண்டிலில் அகப்பட்ட மீன்போல, மதில்மேற் பூனiபோல, முயற் கொம்பு போல, வைக்கோல் போரில் நாய்போல, கிணற்றுத் தவளைபோல, பாம்பிற்குப் பால் வார்த்தால்போல இப்படி ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு உதாரணம் சொல்வார்கள்.
காங்கேயன்துறையில் நிறையக் காணிகள் வெறுமையாக இருந்தன. யாருக்குச் சொந்தம் என்பது தெரியாததால் அக்காணிகள் கவனிப்பார் அற்றுக் கிடந்தன. அக்காணிகளை ‘துண்டி’ என்றோ அல்லது ‘கலட்டி’ என்றோ அழைப்பார்கள். ஆடு, மாடுகள் போன்ற கட்டாக்காலி கால்நடைகள் இக்காணிகளில் புல்மேயும். கால்நடைகள் தின்னாத மரங்களும் செடிகளும் இப்படியான காணிகளில் அதிகம் பற்றையாய் வளர்திருக்கும்.

ஆற்றங்கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழும் அன்றே –


எதுவுமே இவ்வுலகில் நிலையற்றது என்று குறிப்பிடும் ஒளவையார்

மரம்பழுத்தால் வெளவாலை வாவென்று கூவி
இரந்தழைப்பார் யாவருமங்கில்லை -

என்பதையும் குறிப்பிடுகின்றார்.

எப்பொழுது ஈச்சமரம், அன்னமுன்னா, நாகதாளி, பன்னை, கடுகுநாவல் போன்றவற்றின் பழங்கள் பழுக்கும் என்று நாங்கள் காத்திருப்போம். இந்தப் பழங்கள் நச்சுத்தன்மை அற்றவை. சிறுவர்களாக இருந்தபோது இவற்றை எல்லாம் பறித்துச் சாப்பிட்டிருக்கிறோம்.

நீண்ட தடியில் கொக்கிச் சத்தகத்தைக்கட்டி ஈச்சங்குலை வெட்டி, கட்டிலுக்கு அடியில் உப்புத்தண்ணி தெளித்துப் பழுக்கவைத்து, புதையலைப் பூதம் காத்ததுபோலத் தினமும் காவலிருந்து சாப்பிட்டிருக்கிறோம். அதுபோலவே முற்றிய அன்னமுன்னாக் காயைப்பிடுங்கி வைக்கோல் போட்டுப் பழுக்கவைத்துச் சாப்பிட்டிருக்கிறோம். இலந்தைப்பழம், நாவற்பழம், கொய்யாப்பழம், புளியம்பழம் என்று, அலரிக்காயைத்தவிர மற்ற எல்லாவற்றையம் சாப்பிட்டுப் பார்த்திருக்கிறோம்.


மரம், செடிகளில் குறிப்பாக மஞ்சமுன்னா, ஈச்சமரம், பூநாறி, பன்னை, எருக்கலை, ஆமணக்கு, அன்னமுன்னா, அலரி, நொச்சி, பாவட்டை, பட்டி, கள்ளி, கற்றாழை, நாகதாழி, குமரிக்கற்றாழை, நாயுருவி, குப்பைமேனி, தூதுவளை, நெருஞ்சி போன்றவற்றை நிறையவே இந்தக் கட்டாந்தரையில் காணமுடியும். பூநாறியை கடுகுநாவல் என்றும் அழைப்பர்.

நாவற்பழம்போல கடுகளவாய், ‘பிளாக்பெரி’ போல இருந்ததால் இந்தப் பெயர் அதற்கு வந்திருக்கலாம். இவற்றின் மகிமை தெரியாமல் இவற்றை எல்லாம் வெறும் செடி கொடி என்று  நாங்கள் ஒதுக்கி விட்டாலும், இவை எல்லாம் சிறந்த ஆயுள்வேத மூலிகைகளாக இருந்தன என்பதை யாருமே மறக்க முடியாது. குறிப்பாக காஞ்சநொண்டி என்ற ஒரு செடி இருக்கிறது. இது உடம்பிலே பட்டால் உடனே அந்த இடம் தடித்து அரிப்பு எடுக்கத் தொடங்கும். இந்தச் செடிக்கு அருகே அதற்கு மருந்தும் இருந்தது. பன்னை என்று சொல்லப்படுகின்ற செடியின் இலைகளை உருவி அந்த இடத்தில் தேய்த்தால் உடம்புக் கடி எல்லாம் சட்டென்று பறந்து போய்விடும்.

கறிவேப்பிலை போல இதன் இலையும் இருக்கும். முகர்ந்து பார்த்தால்தான் வித்தியாசம் தெரியும். தூதுவளை இலையை கொத்தமல்லிக் கஷாயத்தில்போட்டு, உள்ளி, இஞ்சி, மிளகோடு அவித்துக் குடித்தால் தடிமன் பறந்துவிடும்.

தொட்டால்சுருங்கி என்று ஒரு செடி இருந்தது. இதைத் தொட்டதும் தன்னைத்தானே சுருக்கிக் கொள்ளும். பொழுது போகாவிட்டால் நாங்கள் இந்தச் செடிகளைத் தொட்டுத் தொட்டு வேடிக்கை பார்ப்பதுண்டு. நாங்கள் ‘வெடிச்செடி’ என்று இன்னுமொரு செடியை அழைப்போம். இதன் காய்ந்த விதைகள் விரலால் தொட்டதும், உடம்புச் சூட்டில் ‘டிக்’ என்ற சத்தத்தோடு வெடிக்கும். பாக்குவெட்டி என்றொரு செடி, இதன் இலையை பனைவடலிக் குருத்தோடு சேர்த்துச் சப்பினால் வெற்றிலை பாக்குப் போட்டதுபோல வாய் சிவக்கும். உடலிலே ஒட்டிக் கொள்ளும் சிறு விதைகளைக் கொண்ட செடிதான் நாயுருவி. பட்டி, அலரி போன்றவற்றை சுடுகாட்டிலும் அதிகம் காணமுடியும். அலரிப்பூ அழகாக இருந்தாலும், அதன் விதை ஆட்கொல்லி விஷமானதால், வீடுகளில் அதிகம் நடுவதில்லை. இன்னுமொரு கொடி, இதன் விதைகள் காற்றிலே பறந்துவிட, கோதுமட்டும் பாம்பு படம் எடுத்து ஆடுவது போல கொடியில் மிஞ்சி நிற்கும். நாங்கள் இதை எடுத்து இரண்டு துளைபோட்டு, குன்றிமணியால் கண் வைத்து, மருதடி குளக்கரையில் எடுத்த களிமண்ணால் பாம்பு செய்து விளையாடுவோம். குன்றிமணி என்பது ஒரு கொடியில் காய்க்கும் சிகப்புநிற விதையாகும். இந்த விதையில் விழிபோல கறுப்பு நிறம் கலந்திருக்கும். ‘குப்பையில் கிடந்தாலும் குன்றிமணி நிறம்மாறாது’ என்று ஒரு பழமொழியும் உண்டு.
பனந்தோப்புக்குச் சென்றால் சில பனை மரங்களில் ஒருவகை கற்றாளை முளைத்திருப்பதைக் காணலாம். ஆழகான ‘ஓக்கிட்’ மலர்கள்போல இதன் பூக்களும் மிகவும் அழகாக இருக்கும். காது வலி என்றால் இதன் இலையை எடுத்து நெருப்பிலே வாட்டி, சாற்றைப் பிழிந்து காதில் விட்டால் வலி இருந்த இடம் தெரியாமல் போய்விடும். அதேபோல பல் வலிக்கு, குப்பிளா என்ற ஒருவகை கொடியின் இலையை உப்போடு சேர்த்து துவைத்து அந்தச் சாற்றைக் கொப்பளித்தால் பல்வலி பறந்துவிடும்.

மெல்லிய வெட்டுக் காயங்கள் ஏதாவதென்றால் ஆமணக்கம் பால் எடுத்துத் தடவிவிட்டால் அப்படியே காய்ந்துவிடும். புலுமைச்சிலந்தி, மட்டத்தேள், கொடுக்கான் போன்ற விசஜந்துக்கள் ஏதாவது கடித்தால் எருக்கலம் இலையை நெருப்பில் வாட்டி கடிவாயில் வைத்துக் கட்டுவார்கள். கால், கை வீக்கத்திற்கு கற்றாழை தண்டின் உள் பகுதிளை எடுத்து, உப்பு மஞ்சளோடு சூடுகாட்டி அந்த இடத்தில் வைத்துக் கட்டினால் வீக்கம் வற்றிவிடும்.


கற்றாழையின் உள்பகுதியை எடுத்து நன்றாக தண்ணீரில் கழுவிச் சாப்பிட்டல் உடல் சூடு குறையும். அதேபோல நொச்சி இலையும் வீக்கத்திற்கு நல்லது. பாவட்டை, நொச்சி, வேப்பம் இலை போன்றவற்றை அவித்து அந்த நீரில் குளித்தால் வாதநோய் போன்றவை குணமாகும். பெண்கள் மகப்பேறு முடிந்ததும் இந்த இலைகளை அவித்து அந்த நீரில் குளிப்பதுண்டு.  இவை எல்லாம், வேறு வழியில்லத நேரத்தில் செய்யக்கூடிய முதல் உதவிகளே தவிர நிரந்தர வைத்தியம் ஆகாது.
‘கௌவை’ என்று ஒருவகை கொடி பற்றைகளுக்கு இடையே படரும். இதன் பழங்கள் அழகானவை. கிளிகள் இவற்றை விரும்பிச் சாப்பிடும்.


மழை காலத்தில் ‘காந்தள்’ என்று சொல்லப்படுகின்ற ஒருவகைக் கொடி ஒன்று இந்தப் பற்றைகளுக்கிடையே வளர்ந்து, கார்த்திகை மாதத்தில் அழகான பூக்கள் பூக்கும். நாங்கள் இதை கார்த்திகைப்பூ என்று அழைப்போம்.

அதன் மகரந்தம் கண்ணில் பட்டால் கண்ணுக்குக் கூடாது என்பதால் இந்தப் பூக்களைப் பறிப்பதற்குப் பெரியவர்கள் எங்களை அனுமதிப்பதில்லை. முட்களின் நடுவே மோகன ரோஜா மலர்வதுபோல, பற்றைகளின் நடுவே மலர்ந்து கவனிப்பார் அற்று இருந்த கார்த்திகைப்பூக்கள்  இன்று சர்வதேசமும் வியப்போடு பார்க்கும் பூக்களாயும் மாறியிருக்கிறது.

கார்த்திகைப் பூப்போல தாழம்பூ அழகாக இல்லாவிட்டாலும் நல்ல வாசமுள்ளது. கடற்கரை ஓரங்களில் நிறையவே தாழை மரங்களுண்டு. தாழம்பூவில் சிறிய பாம்புகள் இருக்கும் என்பதால் அந்தப்பூவையும் பறிக்க எங்களைப் பெரியவர்கள் விடுவதில்லை. தாழங்காய் அன்னாசிப்பழம்போல அழகானது. ஆனால் சாப்பிட முடியாதது. இது போன்ற பல மரங்கள் தாய் மண்ணை அழகு செய்தன.


நெய்தலும் மருதமும் - 13


வேப்பமரம் ஆரோக்கிமான பயன் தரும்மரம். அனேகமானவர்களின் வீட்டு வளவுகளில் வேப்பமரம் நிற்கும். வேப்பங்காற்றைச் சுவாசிப்பது ஆரோக்கியமானது. விடுமுறை நாட்களில் வீட்டுப் பெரியவர்கள் வேப்பமர நிழலில் சாய்மனைக்கதிரை போட்டு ஓய்வெடுப்பதுண்டு.

வேப்பம்பூவை எடுத்து வடகம் செய்வார்கள். வடகம் என்பது உணவோடு பொரித்துச் சாப்பிடக்கூடிய உபஉணவு. மாரிகாலத்தில் நுளம்பை விரட்டுவதற்கு, வேப்பம் கொட்டையை இடித்து வேப்பமரத்தூளில் பொச்சுவைத்து புகைபோடுவார்கள். ‘ஆலும் வேலும் பல்லுக்குறுதி’ என்று பெரியோர்கள் சொல்வார்கள். வேல் என்பது வேப்பமரம். வேப்பங் குச்சியில் பல் துலக்கினால் பற்கள் ஆரோக்கியமாக இருக்கும். வேப்பம்பிசின் எடுத்து காகிதங்களை ஒட்டுவதற்குப் பாவிப்பார்கள். வேப்பமிலை, வேப்பம் எண்ணெய் ஆகியவற்றை கிருமிநாசினியாகப் பாவிப்பார்கள். வீட்டிற்குத் தேவையான யன்னல், கதவு, நிலை போன்றவற்றை செய்யவும் வேப்பமரத்தைப் பாவிப்பார்கள்.


இதேபோலத்தான் வாழைமரம் வீடுகளில் மட்டுமல்ல தோட்டங்களிலும் இருக்கும். வாழைமரத்திற்கு அடியில் அதன் குட்டிகள் முளைக்கும். இதனால்தான் பரம்பரையைக் குறிப்பிடும்போது, ‘வாழையடி வாழையாக’ என்று குறிப்பிடுவார்கள். இதன் பூவான வாழைப்பொத்தியும், வாழைக்காயும் கறிசமைக்க உதவும். பழம் சாப்பிட உதவும். கதலி, கப்பல், மொந்தன், இதரை, பன்றி, மலைவாழை, செவ்வாழை, சீனிவாழை என்று வாழையில் பல இனங்கள் உண்டு. இதன் இலையில் உணவு படைப்பர். நயினாதீவு நாகபூசனி அம்பான் தேர்த்திருவிழாவிற்குச் செல்லும் போதெல்லாம் காய்ந்த வாழைமடலில் உணவு சாப்பிட்ட அனுபவம் உண்டு  சலஅடைப்பிற்கு வாழைத் தண்டின் சாறு மிகச் சிறந்தது என்பர். அதேபோல இதரை வாழைப்பழம்; குளிர்மையானது. மொந்தன் வாழைக்காய் சிறிய துண்டுகளாக வெட்டிப் பொரிக்கச் சிறந்தது. வாழைப் பொத்தியில் தேங்காய்ப்பூவையும் கலந்து வறை செய்வர். கார்த்திகை விளக்கீட்டின்போது, எல்லா இடமும் தீபம் ஏற்றுவதுமட்டுமல்ல, வாழைக் குற்றியை வீட்டு வாசலில் நட்டு அதன்மேல் பாதி கொப்பறாதேங்காய் வைத்து விளக்கேற்றி எங்கும் ஒளிமயமாக்குவர்.


அடுத்து யாழ்ப்பாணத்தின் கற்பகதரு என்று சொல்லப்படுகின்ற பானை மரத்தைப் பற்றிக் குறிப்பிட விரும்புகின்றேன். பனைமரம் வீடு கட்டுவதற்குத் தேவையான கூரைமரம், சலாகை, சாரமரம் போன்றவற்றிற்குப் பயன்படும். கிணற்றிலே தண்ணி அள்ளும் துலாவாகவும், ஆடுகாலின் குறுக்கு மரமாகவும் பாவிக்கப்படும். சிறிய துண்டுகளும், மூரிமட்டையும, ஊமலும்; விறகாக எரிப்பதற்குப் பாவிக்கப்படும். மூரிமட்டை வேலி அடைக்கவும் உதவும். பனை ஓலை கால்நடைகளின் தீனியாகவும், வீடு வேயவும், வேலி அடைக்கவும் உதவும். இதைவிட பாய், பெட்டி, கடகம், சுளகு, நீத்துப்பெட்டி, தட்டி, திருகணி போன்றவை செய்யவும் உதவும்.


பனம் பாளையைச் சீவினால் அதில் இருந்து வரும் பதநீரைக் கள்ளு என்று சொல்வர். இதைக் குடித்தால் வெறிக்கும் என்பதால் இதை மதுபான வகையில் சேர்ப்பர். பதநீரில் இருந்து கருப்பநீர், பனங்கட்டி, கல்லாக்காரம் என்று சொல்லப்படுகின்ற பனங்கற்கண்டு போன்றவையும் பெறப்படும். 110 பாகை பரனைட் கொதிநிலையில் இது பெறப்படும். பனங்கற்கண்டு இருமலுக்குச் சிறந்ததாகும். நுங்கு, பனம்பழம், பனங்கிழங்கு, பனாட்டு, ஒடியல், புளுக்கொடியல், பூரான் போன்றவையும் பெறப்படும். பனங்களியில் இருந்து பனங்காய் பணியாரம் செய்வார்கள். ஒடியல் மாவில் கூழ் காய்ச்சுவார்கள்.

பனங்கிழங்கோடு நாராயின் அலகை ஒப்பிட்டு சக்திமுத்தப் புலவர் பாடிய ஒரு பழைய பாடலைப்பாருங்கள்.


நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்னை
பவளக்கூர் சுடர்வாய் செங்கால் நாராய்!


இப்போதெல்லாம் இராணுவம் தமிழ் குடிமனைகள்மீது ஏவும் செல்களைத் தடுத்து நிறுத்தும், இயற்கை தந்த போராளிகளாகவும் பனைமரங்கள் இருக்கின்றன. பாதுகாப்பு அரன்கள் அமைக்க, இராணுவத்தினர் கற்பகதருவான பனைமரங்களைத் தறித்து, அவற்றைப் பாவிக்கின்றனர்.
அனேகமாக ஒவ்வொரு வீட்டிலும் கிணற்றடியில் சில தென்னை மரங்களாவது இருக்கும். குளிக்கும்போது விரையமாகும் தண்ணீர் தினமும் அவற்றிற்குப் பாய்ச்சப்படும்.


‘நின்று தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான் தருதலால்’தென்னையில் இருந்து ‘தென்னங்கள்’ பெறப்படும். தேங்காய் சமையலுக்கும், கொப்பறா என்று சொல்லப்படுகின்ற காய்ந்த தேங்காய் எண்ணெய் வடிக்கவும் உதவும். தேங்காயின் பொச்சு மட்டையில் உள்ள தும்பு எடுத்து கயிறு, மெத்தை, தும்புத்தடி போன்றவற்றை செய்வர். தென்னோலையில் பின்னப்படும் கிடுகு வேலி அடைக்கவும், வீடு வேயவும் உதவும். ஈர்கிள் விளக்குமாறு செய்யவும், சிரட்டை போன்ற உதிரிப் பாகங்கள் விறகாக எரிக்கவும் உதவும். தென்னங் குருத்தை வெட்டி அலங்கார தோரணம் செய்வர். செவ்விளநீர் குளிர்மையாகையால் வெய்யில் காலங்களில் விரும்பி அருந்துவர். சுவாமிக்கு அபிசேகம் செய்யவும் இளநீரைப் பாவிப்பர்.


நெல்லுக்கிரைத்த நீர்வாய்க்கால் வழியோடி
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்..நல்ல காரியங்களுக்காக நாங்கள் செய்யும் விடயங்கள் சில சமயங்களில் தப்பான காரியங்களுக்கும் பயன்பட்டுவிடும் என்பதை ஒளவையார் இப்படிச் சொல்லிக் காட்டுகின்றார்.


அனேகமான வீட்டு வளவுகளில் முருங்கை மரம் இருக்கும். குச்சிபோல நீளமானதும், உட்பகுதியில் சதைப்பற்று உள்ளதுமாக இதன் காய் இருக்கும். முருங்கைக்காய் கறி சமைக்க உதவும். முருங்கை இலை வறுத்துச் சாப்பிட உதவும். கணவாய், நண்டு, இறால் போன்ற வாய்வு உள்ள கறிகள் சமைக்கும்போது இஞ்சி, உள்ளியோடு முருங்கைப்பட்டையும் போட்டுச் சமைப்பார்கள்.


அனேகமாக வீட்டைச் சுற்றியுள்ள காணிகளும், தோட்டக் காணிகளும் வேலி போட்டு அடைக்கப்பட்டிருக்கும். வீட்டுத் தோட்டத்துப் பயிர்களை கால்நடைகளிடம் இருந்து காப்பாற்றவே இந்த வேலிகள் போடப்பட்டிருக்கும். பனையோலை, தென்னோலையில் பின்னிய கிடுகு, மூரிமட்டை, இலந்தைமுள்ளு, கிளுவை, பூநாறி போன்றவற்றால் வேலிகள் போடப்பட்டிருக்கும். சில வீடுகளில் சுற்றுமதில் கட்டியிருப்பர். அந்த நாட்களில் திருட்டுப்பயம் இருக்கவில்லை. அனேகமான வீடுகளில் அறைக்கதவு பகலில் திறந்தபடியே இருக்கும். அயலவரின் பார்வையில் படவேண்டி வரும் என்பதால், அந்நியரின் நடமாட்டம் மிகக்குறைவாகவே இருக்கும். ஒவ்வொரு வீட்டிலும் நாய் வளர்த்தபடியால் இரவில் அந்நியரின் நடமாட்டத்தைக் கண்டால் அவை குரைக்கும். இதைவிட பொது இடங்களில் யாராவது நடமாடினால் ஆட்காட்டிக் குருவி என்று ஒரு வகைக் குருவி சத்தம் போட்டுக் காட்டிக் கொடுத்து விடும்.

ஒவ்வொரு வீட்டிற்கு அருகிலும் ஒரு கிணறாவது இருக்கும். கிணற்றுக்கு அருகே ஒரு தண்ணீர்த் தொட்டியும், துணி துவைப்பதற்று பெரிய கல் ஒன்றும் வைக்கப்பட்டிருக்கும். நிரந்தர ஆறு இல்லாத காரணத்தினால், மழை நீரையும் கிணற்று நீரையும் நம்பியே மக்கள் வாழ்ந்தார்கள்.


‘முழுமுதற் கமுகின் மணி உறழ் எருத்திற்
கொழுமடல் அவிழ்ந்த குரூஉக்கொள் பெருங்குலை..’கமுகமரத்தில் இருந்து பாக்கு எடுப்பார்கள். யாராவது இறந்தால் பாடை கட்டவும் கமுகமரத்தைப் பாவிப்பர்.


தென்னை, வாழை, பலா, மா, எலுமிச்சை, தோடை, மாதுளை, கறிவேப்பிலை, ஈரப்பலா, நெல்லி, கொய்யா, பப்பாசி, போன்ற பலன் தரும் மரங்களை வீட்டுத் தோட்டத்தில் காணலாம். இதைவிட முருங்கை, அகத்தி, சண்டி போன்ற மரங்கள் வேலிக் கதியால்களோடு சேர்த்து நடப்பட்டிருக்கும். இவற்றின் இலைகள் வறுத்துச் சாப்பிடக்கூடிய சத்துள்ள உணவாகும். கங்குள்கீரை, தவசிமுருங்கை, அகத்திக்கீரை, வல்லாரை, பொன்னாங்காணி, முளைக்கீரை, குப்பைமேனி, கொவ்வை, முருங்கைக்கீரை, ரம்பை, போன்ற கீரைவகைகளையும் காணமுடியும்.

 ‘அகத்தி ஆயிரம் காய்த்தாலும் புறத்தி’ என்று ஊரிலே சொல்வதுண்டு.

புளியமரம், ஆலமரம், அரசமரம், வேப்பமரம், இலுப்பைமரம், பூவரசமரம், கொன்றைமரம், மஞ்சமுன்னாமரம், தேக்கு, முதிரை, பாலை மரம், மலைவேம்பு, எலும்புருக்கி, இலந்தைமரம், நாவல் என்று நிறைய மரங்கள் நிழல் தரும் மரங்களாகவும், பயன்தரும் மரங்களாகவும் வளர்ந்திருந்தன. சின்னவயதில் பூவரசம் இலை பறித்து அதைச் சுருட்டி ‘பீப்பீக்’ குழல் செய்து ஊதி விளையாடுவோம். அதே போல தென்னங் குருத்தில் சுருள் செய்து, அடிப் பக்கத்திற்குள் பனை ஓலையின் சிறிய இரண்டு துண்டுகளைச் செருகி, நீண்டகுழல் செய்து ஊதிவிளையாடி இருக்கிறோம். கீழே விழுந்து கிடக்கும் குரும்பட்டி எடுத்து ஈர்க்கிளை வளைத்துச் செருகிச் சுற்றும்போது, டிக்டிக் சத்தம்போடும் தையல்மெசின் செய்திருக்கிறோம். மஞ்சமுன்னா காய்பறித்து ஈர்க்கிள் குத்தி, தேர் செய்திருக்கிறோம்.1 comment:

  1. மிக நேர்த்தி. நல்ல பதிவு. நாளைய தலைமுறை படிக்கக் கூடும்.

    ReplyDelete