Tuesday, July 24, 2012

Queen Elizabeth - எலிசபெத் மகாராணி

பிரித்தானிய மகாராணியின் பதவிக்கால வைரவிழா

குரு அரவிந்தன்


சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யத்தின் மகாராணி என்று ஒரு காலத்தில் பெரிதாகப் பாராட்டப்பட்ட, பிரித்தானிய மகாராணி பதவி ஏற்று 60 வருடங்களாகிய நிகழ்வை வைரவிழாவாகச் சென்ற மாதம் பிரித்தானியாவிலும் பொதுநலவாய அமைப்பு நாடுகளிலும் மிகவும் சிறப்பாகக் கொண்டாடினார்கள். பக்கிங்ஹாம் மாளிகையில் இருந்து மகாராணியார் லண்டனில் உள்ள புனித போல் தேவாலயத்தை ஊர்வலமாகச் சென்றடைந்ததைத் தொடர்ந்து முதல் நாள் நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தன. வெஸ்ட்மினிஸ்டர் மண்டபத்தில் மதிய விருந்து நடைபெற்றது. தொடர்ந்து மூன்று நாட்களாக இந்தக் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இந்த நிகழ்வில் அரசகுடும்பத்தினரும், வெளிநாட்டுத் தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.


எலிசபெத் அலக்ஸான்ரா மேரி என்பதே அவரின் முமுப்பெயர். இவர் 21ம் திகதி ஏப்ரல் மாதம் 1926ம் ஆண்டு பிறந்தவர். 1952ம் ஆண்டு இவரது தந்தையான ஆறாவது ஜோர்ச் மன்னரின் மரணத்தைத் தொடர்ந்து 26வது வயதில் 2ம் எலிசபெத் முடிக்குரிய இளவரசியாகப் பதவி ஏற்றார். 1947ம் ஆண்டு இவர் இளவரசர் பிலிப்பைத் திருமணம் செய்து கொண்டார். இவர் சார்ல்ஸ், ஆன், அன்றூ, எட்வேட் ஆகிய நான்கு பிள்ளைகளின் தாயாராவார். 86 வயதான இவர் பிரித்தானிய முடிக்குரிய அரசியாகப் பதவி ஏற்ற 60வது வருட விழாவை சென்ற மாதம் சிறப்பாகக் கொண்டாடினார். யூன் மாதம் 2ம் திகதி தொடக்கம் யூன் மாதம் 5ம் திகதிவரை பொது விடுமுறை விடப்பட்டு இந்தக் கொண்டாட்டங்கள் சிறப்பாகக் கொண்டாடப் பெற்றன. இராணுவ அணிவகுப்புடன் நடைபெற்ற இக்கொண்டாட்டத்தின் போது பிரித்தானியாவின் பல நகரங்களில் மகாராணியாருக்கு மரியாதை செலுத்தும் முகமாக 41 தடவைகள் பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன. பல முன்னணி இசைக்கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகளும் அங்கே இடம் பெற்றன. இறுதி நாள் கொண்டாட்டத்தை நிறைவு செய்யும் முகமாக வாணவேடிக்கை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. பாடசாலைகளும் அலுவலகங்களும் மூடப்பட்டிருந்தன. இதே போன்ற கொண்டாட்டங்கள் 1977ல் வெள்ளி விழாவாகவும், 2002ம் ஆண்டு தங்க விழாவாகவும் கொண்டாடப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

லண்டன் நகர வீதிவழியாக அரச குடும்பத்தினர் பவனி வந்தபோது மக்கள் வீதி ஓரங்களில் கூடி நின்று அவர்களை வாழ்த்தினார்கள். வைரவிழாவை முன்னிட்டுப் பல போட்டி நிகழ்ச்சிகளும், இசை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றிருந்தன. பிரித்தானிய வரலாற்றில் வைரவிழா கொண்டாடிய இரண்டாவது மகாராணியாக இவர் திகழ்கின்றார். இவரது பூட்டியான விக்டோறியா மகாராணி ஏற்கனவே வைரவிழா கொண்டாடியிருக்கின்றார். விக்டோறியா மகாராணி 63 வருடங்கள் பதவியில் இருந்திருக்கிறார். சுமார் 1000 படகுகள் லண்டனில் உள்ள தேம்ஸ் நதியில் மிதந்து ஊர்வலம் வந்த காட்சி பலரையும் கவர்ந்திருந்தது. மகாராணியும் இவர்களுடன் ஒரு படகில் பயணம் செய்திருந்தார். இதுவரை இருந்த படகுகளின் ஊர்வல சாதனையை இந்த ஊர்வலம் உடைத்து உலகசாதனை ஆக்கியிருக்கிறது. இதைவிட பிரித்தானிய குடிமக்கள் வைரவிழா கொண்டாட்டத்தை நாடு முழுவதும் விருந்துகள் வைத்துக் கொண்டாடி மகிழ்ந்தார்கள். 1952ம் ஆண்டு பதவிக்கு வந்ததில் இருந்து 54 பொதுநலவாய நாடுகளின் தலைவராக எலிசபெத் மகாராணியார் இருக்கின்றார். இதில் கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளும் அடங்கும்.
கனடா பிரித்தானிய ஆட்சியின் கீழ் இருந்ததால் கனடாவிலும் மகாராணியின் 60ம் ஆண்டு வைரவிழா கொண்டாடப்பட்டது.


மகாராணியின் நினைவாக தபால் தலையும் நாணயமும் வெளியிடப்பட்டன. அமெரிக்க ஜனாதிபதிகளில் சுமார் 12 ஜனாதிபதிகள் இதுவரை இவரது காலத்திலேயே பதவிக்கு வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இவர்களில் ஜனாதிபதிகளான றூமன்(1945-53), ஐசனோவர்(1953-61),கென்னடி(1961-63), ஜோன்சன்(1963-69), நிக்சன்(1969-74), போர்ட்(1974-77), காட்டர்(1977-81), றீகன்(1981-89), புஸ் சீனியர்(1989-93), கிளிங்டன(1993-2001);, புஸ் யூனியர்(2001-09), ஒபாமா(2009..) ஆகியோரைக் குறிப்பிடலாம்.


மகாராணி எலிசபெத்திக்குப் பின் இளவரசர் சாள்ஸ்தான் முடி சூடவேண்டும் என்று சுமார் 58 சதவீதமானோர் விரும்புகின்றனர். இதில் 35 சதவீதமானோர் கோமகன் வில்லியம் பதவி ஏற்க வேண்டும் என்று விரும்புகின்றனர். இதில் இன்னுமொரு சிறப்பு அம்சம் என்னவென்றால் இந்த வருடம் மகாராணியாருடைய வருடாந்த வருமானம் 20 வீதத்தால் அதிகரித்து சுமார் 70 கோடி டொலர்களாகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்று சிறீலங்கா என்று பெயர் மாற்றப்பட்ட இலங்கைத்தீவு முழுமையாக 1815ம் ஆண்டு தொடக்கம் 1948ம் ஆண்டுவரை பிரித்தானிய சாம்ராச்சியத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். முதலில் போத்துக்கேயரின் கட்டுப்பாட்டிலும், பின் ஒல்லாந்தரின் கட்டுப்பாட்டிலும் இருந்த இலங்கைத்தீவின் சில பகுதிகளை 1801ல் இவர்கள் கைப்பற்றியதன் மூலம் இவர்கள் இலங்கைத்தீவைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்கள். இக்கால கட்டத்தில் பிரித்தானிய மன்னர் மூன்றாம் ஜோர்ச், நாலாம் ஜோர்ச், நாலாம் வில்லியம், விக்ரோறியா மகாராணியார், ஏழாம் எட்வேட், ஐந்தாம் ஜோர்ச், எட்டாம் எட்வேட், ஆறாம் ஜோர்ச் ஆகியோர் முடிக்குரியவர்களாக இருந்தார்கள்.; 133 வருடகால ஆட்சியின் பின்னர் பெப்ரவரி 4ம் திகதி 1948ல் பிரித்தானியரின் ஆட்சியில் இருந்து இலங்கை விடுதலை பெற்றது. பிரித்தானியா பெரும்பான்மை இனத்தவரிடம் அப்போது ஆட்சியை ஒப்படைத்தால் இன்று சிறுபான்மை இனத்தவரான ஈழத்தமிழ் மக்களின் அவலத்திற்கு இவர்களே காரணம் என்பது கண்கூடு.


பிரித்தானியா இன்று ஒரு ஜனநாயக நாடாக இருப்பதால், ஜனநாயக முறைப்படி தெரிவு செய்யப்படும் பிரதமமந்திரியே அரசியல் சாசனப்படி அரசாங்கத்தின் தலைவராவார். ஆனாலும் பிரித்தானிய மக்களில் ஒருசாரார் பழமை விரும்பிகளாக இருப்பதால், முடிக்குரிய பரம்பரையினரே தங்களை ஆளவேண்டும் என்று இன்றும் மக்களில் ஒரு பகுதியினர் விரும்புகின்றார்கள். அதனால்தான் பிரித்தானியா ஒரு ஜனநாயக நாடாக இருந்தாலும், ஆட்சிப் பொறுப்பில் இன்றும் அரசபரம்பரையினர் அந்த மண்ணில் நிலைத்து நிற்கின்றார்கள்.

No comments:

Post a Comment