Monday, July 9, 2012

பீல் குடிமக்கள் (SOPCA) ஒன்றியத்தின் ஒன்றுகூடல்

(குரு அரவிந்தன்)


சென்ற ஞாயிற்றுக்கிழமை சொப்பா என்றழைக்கப்படும் பீல் குடிமக்கள் ஒன்றியத்தின் ஒன்றுகூடல் நிகழ்ச்சி மிசசாகாவில் உள்ள மிசசாகாவலி பூங்காவில் நடைபெற்றது. பீல்குடிமக்கள் ஒன்றியத்தின் அங்கத்தவர்கள், அவர்களின் குடும்பத்தவர், நண்பர்கள் என்று பலரும் ஆர்வத்தோடு வந்து இந்த ஒன்றுகூடலில் கலந்து கொண்டனர். காலநிலை சீராக இருந்ததால், சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள், இளைஞர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள், பெரியவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் என்று பலவிதமான விளையாட்டுப் போட்டிகளும் அங்கே இடம் பெற்றன.உடலாரோக்கியத்தைக் கவனத்தில் கொண்டு எல்லா வயதினருக்குமான உடற்பயிற்சிகளும், ஆரோக்கியமான உணவுவகைகளும் அங்கே பரிமாறப்பட்டன. சென்ற ஒன்றுகூடலின்போது பாரம்பரிய உணவான கூழ் காய்ச்சியிருந்தார்கள். எல்லோரும் ரசித்து, ருசித்துக் குடித்தது ஞாபகம் வந்தது. ஆடிமாதமாகையால் ஆடிக்கூழின் ஞாபகம் வந்தது.


‘ஆடிப்பிறப்பிற்கு நாளை விடுதலை
ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே’
கூடிப்பனங்கட்டி கூழும் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே”என்ற சோமசுந்தரப் புலவரின் பாடலும் கூடவே நினைவில் வந்தது. கடந்த மூன்று வருடங்களாக இத்தகைய ஒன்றுகூடல் நிகழ்ச்சிகள் எங்கள் பழைய ஞாபகங்ளை மீட்டுக் கொண்டு வருவதால் பலரின் வரவேற்பையும் அவை பெற்றிருக்கின்றன.
ஊரிலே சின்னவயதில் நாங்கள் விளைபாட்டு மைதானத்தில் ஓடியாடி விளையாடிய பழைய ஞாபகத்தை இந்த நிகழ்வு எல்லோர் மனதிலும் கொண்டு வந்து சேர்த்தது. நடுமைதானத்தில் பந்தை வைப்பார்கள். குறிப்பிட்ட இலக்கத்தை அழைத்ததும் இந்த இலக்கத்திற்குரிய இருபக்க விளையாட்டு வீரர்களும் ஓடி வந்து பந்தை எடுக்க வேண்டும். மற்றவரிடம் அகப்படாமல் பந்தை எடுத்துக்கொண்டு திரும்புபவர் வெற்றியாளராகக் கருதப்படுவார். கிட்டத்தட்ட இதே போன்ற ஒரு விளையாட்டை சின்ன வயதிலே நாங்களும் விளையாடியிருக்கின்றோம். இதை எங்கள் ஊரிலே பார் ஓட்டம் என்று சொல்லுவார்கள். கோயில் திருவிழா காலங்களில் அதிகமாக இளைஞர்கள் கோயில் வீதிகளில் இதை விளையாடுவார்கள். ஒரு பக்கத்தில் நிற்பவர்களில் ஒருவர் ஓடிச் சென்று மறுபக்கத்தில் உள்ள கோட்டில் தொட்டு விட்டுப் பாதுகாப்பாக தங்கள் பக்கத்திற்குத் திரும்ப வேண்டும். அச்சந்தர்ப்பத்தில் மறுபக்கத்தில் நிற்கும் ஒருவர் ஓடிவந்து இவரைத் தொடவேண்டும். அப்படியானால் அவர் ஆட்டமிழப்பார். அகப்படாமல் பாதுகாப்பாகத் திரும்பிச் சென்றால் அந்தப் பக்கத்திற்கு ஒரு புள்ளி கிடைக்கும். அப்படியே மாறிமாறி விளையாட்டுத் தொடரும். சுவாரஸ்யமாய் இருந்தால் சுவாமி வெளிவீதி வலம் வரும்வரை விளையாட்டுத் தொடரும். பெரியவர்களும் கண்டும் காணாததுபோல இருந்து விடுவார்கள்.
புலம் பெயர்ந்த மண்ணிலும் ஊரில் இருந்து கொண்டு வந்த பல விளையாட்டுகளை எம்மவர்கள் அறிமுகப் படுத்தியிருக்கிறார்கள். கிட்டி அடிப்பது, கயிறு இழுப்பது, கிளித்தட்டு அல்லது தாச்சிக்கோடு போன்ற விளையாட்டுக்கள் பிரபலமானவை. இத்தகைய விளையாட்டுகளை இங்கே பிறந்து வளர்ந்த பிள்ளைகளாக இருந்தாலும் அவர்கள் மிகவும் ஆர்வத்தோடு விளையாடியதைப் பார்த்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இதைவிட ஒன்றுகூடலில் உள்ள சிறப்பான அம்சம் என்னவென்றால் பெற்றோர்கள், பிள்ளைகள், உறவினர், அயலவர், நண்பர்கள் என்று எல்லோரும் ஒன்றாகச் சேர்வதற்கு இத்தகைய ஒன்றுகூடல்கள் வழி வகுத்துக் கொடுக்கின்றன. குறிப்பாக இங்கே புலம் பெயர்ந்த மண்ணில் உள்ள பெரியகுறை என்னவென்றால் எம்மினத்துப் பிள்ளைகளை ஒன்றாகச் சேர்ந்து பொது நிகழ்ச்சிகளில் பங்குபற்றவோ அல்லது விளையாட்டுகளில் கலந்து கொள்ளவோ பொதுவாகப் பெற்றோர்கள் அனுமதிப்பதில்லை. அதனால் எம்மினப் பிள்ளைகள் அனேகமான இடங்களில் தனிமைப்படுத்தப் படுகின்றார்கள். எனவே இப்படியான ஒன்று கூடல்களை வரவேற்க வேண்டும் என்று பலரும் விரும்புவதற்குக் காரணம் இத்தகைய குறைகளை நிவர்த்தி செய்து ஒற்றுமையையும், புரிந்துணர்வையும் எங்கள் இனத்திற்கிடையே வளர்க்க உதவுகின்றன என்பதேயாகும்.

No comments:

Post a Comment