Thursday, August 23, 2012

KARNAN - கர்ணன்

கர்ணன்

குரு அரவிந்தன்

‘உள்ளத்தை உள்ளத்தால் தொடுவதுதான் இசை’ என்ற யதார்த்த வாக்கியம் உள்மனதைத் தொட்டு, மூத்த இசைக் கலைஞர்களிடம் இருந்து பாராட்டாக வெளிவந்தபோது சபையே கண்கலங்கியது. கர்ணன் படத்தில் இடம்பெற்ற இன்றும் எங்கள் மனதைவிட்டு அகலாத

‘உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததெடா கர்னா வருவதை எதிர் கொள்ளடா’

என்ற கணிரென்ற குரல் சீர்காழி கோவிந்தராஜனுடையது. பகவத்கீதையின் சில வாசகங்களைப் பாடல் வரிகளாக்கிய பெருமை கவியரசு கண்ணதாசனுடையது. அதன்பின் பல பாடகர்கள் அந்தப் பாடலைப் பாட முயன்றாலும் சீர்காழியின்  குரல்போல அந்தப் பாடல் எடுபடவில்லை.

ஆனாலும் விஜய் தொலைக்காட்சியில் ‘சுப்பசிங்கர்’ நிகழ்ச்சியில் அந்தப் பாடலை கௌத்தம் என்ற சிறுவன் பாடியபோது எல்லோருமே எழுந்து நின்று பாராட்டிக் கண் கலங்கினார்கள். இதற்கு மூன்று காரணங்கள் இருந்தன. ஒன்று அந்தச் சிறுவன் அழகாகக் கணிரென்ற குரலில் பாடலை உணர்ந்து பாடியது. அடுத்தது அதைப்பாடிய சீர்காழி கோவிந்தராஜன் இப்போது எங்கள் மத்தியில் இல்லை என்பது. மூன்றாவது அந்த அழகிய கருத்து மிகுந்த பாடலை இயற்றிய கலையரசு கண்ணதாசனும் எங்களை விட்டு மறைந்து விட்டார் என்பது. சபையோரைக் கண்கலங்க வைத்ததற்கு இவையும் ஒரு காரணமாக இருக்கலாம். இந்தப் பாடல் வரிகளைக் கேட்டதும் கர்ணன் படம் தான் என் நினைவில் வந்தது.


 ‘எல்லாமே சாம்பார் படங்கள்தான், படமாளிகைக்குப் போவதற்கே பிடிக்கவில்லை’ என்று சில மாதங்களுக்கு முன் எனது நண்பன் சலித்துக் கொண்டபோது, இப்போ ஒரு சரித்திரப்படமோ அல்லது பக்திப்படமோ எடுத்தால் நன்றாக ஓடும் என்று நான் எனது எண்ணத்தைக் குறிப்பிட்டேன். ‘கொலைவெறியை ரசிக்கிற சனம் சரித்திரப்படமா பார்கப்போகிறது’ என்று நண்பன் சிரித்தான். எப்பொழுதுமே வித்தியாசமான ஒரு படத்தை எடுக்கும்போது அதற்கு ஆயுள் அதிகம் என்பதை என்னுடைய அனுபவத்தில் நான் அறிந்து வைத்திருந்தேன்.
திரைக்கதை வசனம் எழுதும் போதெல்லாம் ஒரு சரித்திரக்கதை, அல்லது பக்திக் கதையை நாடி யாராவது தயாரிப்பாளர்கள் வரமாட்டார்களா என்று நினைப்பதுண்டு. என்ன நடந்ததோ தெரியவில்லை நான் நினைத்ததைவிட சற்று வித்தியாசமாக அந்தத் தயாரிப்பாளரும் நினைத்திருக்க வேண்டும். புதிய படத்திற்குப் பதிலாக ஜனவரி 14, 1964ம் ஆண்டு தைப்பொங்கல் வெளியீடாக வெளிவந்த கர்ணன் படத்தை திரும்பவும் டிஜிட்டல் தொழில் நுட்பஉதவியுடன் மீளாக்கம் செய்து சென்ற மார்ச் மாதம் 16ம் திகதி வெளியிட்டிருந்தார். அதிசயக்கத்தக்கவகையில் அந்தப்படம் தமிழகத்தில் 100 நாட்களைத் தொட்டிருந்தது. ஐந்து கோடிக்குமேல் பணவசூல் கிடைத்தது. சத்தியம் தியேட்டர், சாந்தி தியேட்டர் போன்றவற்றிலும், திருச்சி, தஞ்சாவூர், மதுரை, நெல்லை, நாகர்கோயில் போன்ற இடங்களிலும் வெற்றிகரமாக ஓடியது. சுமார் 250 படமாளிகைகளில் திரையிடப்பட்டன. இதற்குமுன் ‘மாஜாபஜார்' என்ற பழைய திரைப்படம் மறுபடியும் திரையிடப்பட்டபோது 100 நாட்கள் ஓடியிருந்தது.


எங்கள் ஊரான மாவிட்புரத்திற்கு வடதிசையில் காங்கேசந்துறைக் கடற்கரைக்கு அருகே இரண்டு திரை அரங்குகள் இருந்தன. ஒன்று ராஜநாயகி தியேட்டர் அது காங்கேசன்துறை வீதியிலும், மற்றது யாழ் படமாளிகை பருத்துறை வீதியிலும் இருந்தன. இத்திரை அரங்குகளில் வாரநாட்களில் பழைய படங்களைத் திரையிடுவார்கள். தெல்லிப்பளை, கீரிமலை, மயிலிட்டி, பலாலி என்று சுற்றி இருக்கும் ஊர்களில் இருந்து துவிச்சக்கர வண்டியில் ரசிகர்கள் வந்து குவிவார்கள். அப்படித் திரையிட்டபோது சின்னவயதிலே ஒருமுறை கர்ணன் படத்தை பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. மனதைத் தொட்ட சில பாடல் வரிகளும் அதன் காட்சிகளும் இப்பொழுதும் பசுமையாக என் மனதில் நிலைத்து நிற்கின்றன.


மகாபாரத கதையின் பாத்திரமான கர்ணனாக நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்திருந்தார். தெலுங்குப்பட நடிகரான என். டி. ராமராவ் கண்ணனாகவும், அசோகன் துரியோதனனாகவும், முத்துராமன் அருச்சுணனாகவும் நடித்திருந்தனர். இவர்களுடன் பிரபல நடிகைகளான தேவிகா, சாவித்திரி ஆகியோரும் நடித்திருந்தனர்.


சக்தி கிருஸ்ணசாமியின் திரைக்கதை வசனத்தில் பி. ஆர். பந்துலுவின் இயக்கத்தில் இந்தப்படம் வெளிவந்தது. எம் எஸ் விஸ்வநாதன், ராமமூர்த்தி இசையமைப்பில், கவியரசு கண்ணதாசனின் பதின்னான்கு பாடல்களைக் கொண்ட படமாக இது அமைந்தது. இதில்

‘ஆயிரம் கரங்கள் நீட்டி’ என்ற பாடலைப் பல பாடகர்கள் சேர்ந்து பாடியிருந்தனர்.

அப்போது மிகவும் பிரபலமாக இருந்த ரி. ஏம் . சௌந்தரராஜன், பி. பி. சிறீனிவாஸ், சீர்காழி கோவிந்தராஜன், திருச்சி லோகநாதன் ஆகியோர் இணைந்து இப்பாடலைப் பாடியிருந்தனர். பெண்குரலுக்கு பி. சுசீலாவும், சூலமங்கலம் ராஜலட்சுமியம் பாடியிருந்தனர். மொத்தமாக எல்லாப் பாடல்களும் இப்படத்தில் 43.5 நிமிடங்களை விழுங்கியிருந்தன.

மகாபாரதக் கதை என்பதால் காலத்தால் அழியாத படமாகவும் கர்ணன் இருக்கின்றது.