Sunday, September 30, 2012

மிருகம் - Mirukam - !st Prize


பிரபல எழுத்தாளர் திரு.குரு அரவிந்தன் அவர்கள் (கனடா) ஆதரவுடன் யாழ்பாணத்தில் வெற்றிமணி பத்திரிகை நடத்திய அகில இலங்கைக்கான மாணவர் சிறுகதைப் போட்டி   முடிவுகள். 

 சிறுகதைப் போட்டி முடிவுகள்:  1வது பரிசு:   மிருகம்

செல்வன். பாலசுப்பிரமணியம் நிதுஜன்
யா. மகாஜனாக் கல்லூரி
தெல்லிப்பழை

மாணவர் சிறுகதைப் போட்டியில் முதலாம் பரிசு பெற்ற சிறுகதை.
(பாலசுப்பிரமணியம் நீதுஜன், மகாஜனாக்கல்லூரி, தெல்லிப்பழை)கொண்டுவந்திருந்த தண்ணீர்ப் போத்தலை எடுத்துப் பார்த்தேன். அது காலியாக இருந்தது. ஏமாற்றத்துடன் டேவிட்டின் முகத்தைப் பார்த்தேன். ஐந்து மணிநேரமாக ஒரே இடத்தில் காத்துக் கிடக்கும் சலனமோ களைப்போ முகத்தில் தெரியவில்லை. சரிதான், இந்தத் தொழிலின் அடிப்படைப் பாடமே பொறுமையுடன் காத்திருப்பதுதானே. எனக்குத்தான் கற்றுக்குட்டி என்பதால் அது கொஞ்சம்கூட இல்லை.

‘சேர்..!’ மெதுவாக டேவிட்டை அழைத்தேன்.

என்ன..? என்றார் கிசு கிசு குரலில்.

‘எதுவும் வருகிற மாதிரித் தெரியவில்லை, வேண்டுமானால் நாளைக்கு மீண்டும் முயற்சி பண்ணிப் பார்க்கலாமே..?’

‘உஷ்.. பேசாமல் இரு. இன்னும் நான்கு மணி நேரம் இருக்கிறது. முயற்சி பண்ணிப் பார்க்கலாம்.’

என்னது இன்னும் நான்கு மணி நேரமா இந்த வெய்யிலில் ஒன்பது மணி நேரம் இருந்தால் 12ம் நம்பர் ஸ்பனரே உருகிவிடும்.  நானெல்லாம் அவிந்து விடுவேன். மாலைச் சாப்பாட்டுக்கு உப்பையும் தூளையும் தொட்டுவிட்டு விரல்களையே கடித்துக் கொள்ளலாம் போலிருந்தது. படித்து முடித்ததும் ஹொலிவூட்டில் வாய்ப்புத்தேடாமல் கமராவை எடுத்துக் கொண்டு காட்டிற்கு வந்ததற்கு எனக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும் என எண்ணிக் கொண்டேன்.

‘இன்னும் நான்கு மணி நேரம்தான்’ என்றார் டேவிட்.

அந்த உலகப் பிரபல தொலைக்காட்சி சனலில் ஒளிப்படக்காரராய் வேலை செய்யும் டேவிட்டிடம் உதவியாளராய் சேர்ந்த எனது முதலாவது வேலைத்திட்டம் இது. அரியவகை மருவானா மான்களின் வாழ்க்கையைப் படம் பிடிக்க நாமிருவரும் கடந்த ஆறுமாதங்களாக சைபீரியாச் சமவெளியில் அலைந்து திரிகின்றோம். ஏறத்தாள எல்லா வேலைகளும் முடிந்து விட்டது. முடிவாக சைபீரியா புலிகளால் மருவானா மான்கள் வேட்டையாடப்படுவதையும் படம் பிடித்தால் போதும். அதற்காகத்தான் ஒரு வரண்ட குளத்தின் அருகே புதருக்குள் மறைந்து படுத்தபடி நானும் டேவிட்டும் காத்திருந்தோம். ஏறத்தாள எண்பது மருவானா மான்கள் காலையில் இருந்து அந்தக் குளத்தடியில் மேய்ந்து கொண்டிருக்கின்றன.
திரும்பி டேவிட்டைப் பார்த்தேன். தொழிலில் அவரின் ஈடுபாடு என்னை பிரமிக்க வைத்தது. காத்திருக்கும் வேளைகளில் நான் சலித்துக் கொண்டாலும் அவர் எடுத்துக் கொண்ட கருமமே கண்ணாயிருப்பார். என்ன ஒரு தொழில் சிரத்தை! அப்படிப்பட்ட இந்த நல்ல மனிதரைப்பற்றி எத்தனை வதந்திகள். அரிய மிருகங்களைக் கடத்தும் சட்ட விரோதக் கும்பல்களுக்கு உதவுவதாக, தொலைக்காட்சிச் சனலின் பெயரால் கிடைக்கும் சலுகைகளை பயன்படுத்தி தடுக்கப்பட்ட இடங்களுக்கெல்லாம் போய்.. சரிதான், ஒருவரைப்பற்றி புகழ் பரவ ஆரம்பித்தாலே வதந்தியும் சேர்ந்துதானே பரவுகின்றது.

‘ஏய் அங்கே பார்..’

டேவிட் காட்டிய திசையைப் பார்த்தேன். மேய்ந்து கொண்டிருந்த மான் கூட்டத்தை நோக்கி ஒரு பெரிய உயரமான கம்பீரமான சைபீரியன் புலி ஒன்று மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தது. ஒரு பெருமூச்சை சின்னதாக விட்டேன். அப்பாடா இத்தோடு வேலை முடிந்தது. அந்தப் புலி ஒரு மானைப் பிடித்துக் குதறிக் கடித்துச் சாப்பிடுவதைப் படம் பிடித்தால் போதுமானது.

புலி சந்தடியின்றி மான் கூட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. ஒரு கமராவைப் புலிக்கும் மற்றதை மான் கூட்டத்திற்கும் குவித்தோம். புலி ஓசைப்படாமல் மெல்ல மெல்ல நெருங்கியது. தற்செயலாகத் திடீரென நிமிர்ந்து பார்த்த மான் குட்டி ஒன்று அதிர்ச்சியில் ஒரு கணம் நின்று, மிரண்டது. அதன் மிரட்சியில் ஏனைய மான்கள் உஷாராகின. அடுத்த கணம் சொல்லி வைத்தாற்போல எல்லாமே புலியை நிமிர்ந்து பார்த்தன. உடனே புலி அசையாது நின்றது. தலையை மட்டும் திருப்பி அங்குமிங்கும் பார்த்துத் தனது இரையைக் குறிவைத்தது. அடுத்த கணம் மிரண்டுபோன மான்கள் ஓட்டம் பிடிக்க ஆரம்பித்தன. புலியும் தனது இரையைத் துரத்த ஆரம்பித்தது. கூட்டமாக மான்கள் மிரண்டு ஓடினாலும், புலி தனது இரையை மட்டும் குறிவைத்துப் பாய்ந்தது. மான்கள் எல்லாம் கூட்டமாக உயரமாயிருந்த குளத்தின் அணைக்கட்டை நோக்கி ஓடலாயின.


டேவிட் என் முதுகில் தட்டி ஒரு இடத்தைச் சுட்டிக் காட்டினார். மேட்டின் அடியில் ஒரு மான் குட்டி விழுந்து படுத்திருக்க, ஒரு பெரிய மான், தாயாக இருக்க வேண்டும் தனது முகத்தால் நெம்பி அதை எழுப்ப முயன்று கொண்டிருந்தது. மேட்டில் பாய்ந்து ஏறும்போது மற்ற மான்களோடு முட்டுப்பட்டு கீழே விழுந்து கால் முறிந்திருக்க வேண்டும். தனது உயிராபத்தைப் பொருட்படுத்தாது அந்த தாய்மான் குட்டியை முகர்ந்து பார்ப்பதும், நெம்பி எழுப்ப முயல்வதுமாக இருந்தது. இடையிடையே நிமிர்ந்து புலியைப்பார்த்தது. எல்லா மான்களும் மேட்டில் பாதுகாப்பான இடத்தில் நின்றவாறு இவையிரண்டையும் பார்த்தன. சற்றுத் தொலைவில் நின்ற புலி திடீரென இவற்றைக் கண்டதும் மெதுவாக இவற்றை நோக்கி நடந்து வரத்தொடங்கியது. எனது நெஞ்சம் படபடத்தது. டேவிட்டை நிமிர்ந்து பார்த்தேன். அவர் திரையையே பார்த்துக் கொண்டிருந்தார்.


புலி மேலும் நெருங்கியது. தாய் மான் பதைபதப்புடன் அவசரமாக மிக அவசரமாக குட்டியை எழுப்பப் பார்த்தது. குட்டியும் மெதுவாக எழும்ப முயன்றது. ஆனால் முன்னங்கால்களை ஊன்ற முயன்றதும் மீண்டும் தரையில் வீழ்ந்தது. அதன் முன்னங்கால் முறிந்திருக்க வேண்டும். புலி கிட்ட நெருங்கவே, பயந்துபோன ஏனைய மான்கள் தப்பி ஓடத் தொடங்கின. புலி மெல்ல மெல்ல இந்த இரண்டு மான்களையும் நோக்கி நகர்ந்தது. தாய் மான் இறுதி முயற்சியாக மரணபயத்தோடு தன் குட்டியை எழுப்ப முயன்றது. முடியவில்லை. அதன் இயலாமை அதன் கண்களில் தெரிந்தது. மறுபடி குட்டியை முகர்ந்து பார்த்துவிட்டு மிரட்சியோடு புலியைப் பார்த்தது. மானின் கண்களைப் பார்த்த எனக்கு இதயமே நின்று விடும்போல இருந்தது.  மிரண்ட கண்களில் தெரிந்தது ஏக்கமா, உயிர்ப்பயமா, அவலமா. தவிப்பா என்பது எனக்குப் புரியவில்லை. என்ன நடக்கப்போகிறதோ என்ற அவலத்தோடு புலியைப் பார்த்தேன். 


மான்களை நோக்கி அருகே வந்த புலி அப்படியே நின்றது. சற்று நேரம் மான்களையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. மானின் கண்களில் உயிர்ப்பயம் அப்படியே இருந்தது. எந்த நேரமும் அந்த மான்களை நோக்கிப் பாயலாம் என்ற துடிப்பு எனக்குள் எழுந்தது. சற்றுமுற்றும் பார்த்த புலி அமைதியாகத் திரும்பி வந்த வழியே நடக்கத் தொடங்கியது. எனக்கு ஒன்றுமே புரியவில்லை. மானின் கண்களைப் பார்த்தேன். அது மிரட்சியோடு புலியையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தது. அதன் பார்வையில் தெரிந்ததென்ன? நன்றியா? புலி ஏன் மானை அப்படியே விட்டுச் சென்றது. வேட்டையாடாமல் கொன்று தின்ன விரும்பவில்லையா? எதை எவ்வாறு ஏற்றுக் கொள்வது என்று தெரியாமல் குழப்பத்துடன் டேவிட்டைப் பார்த்தேன்.


‘ம்..’  என்ற ஒரு பெருமூச்சை விட்டபடி டேவிட் சொன்னார் ‘எனது வாழ்க்கையில் இப்படிப்பட்ட ஒரு சம்பவத்தைப் பார்த்ததேயில்லை. இதைக் கவர் பண்ண முடிந்தது எனது அதிஷ்டம்தான்’.


நான் தலையை ஆட்டியபடி புலியைப் பார்த்தேன். தனது பசியைத் தியாகம் செய்துவிட்டு அது நிதானமாக நடந்து போய்க் கொண்டிருந்தது. அது மிருகமா அல்லது மனிதனைவிட உயர்ந்ததா என்று மனசுக்குள் எண்ணிக் கொண்டிருந்தபோது, டேவிட் எனது முதுகில் தட்டி நாங்கள் எங்கள் பாதுகாப்பிற்காகக் கொண்டுவந்த ‘ஷொட்கண்' வகைத் துப்பாக்கியை என்னிடம் தந்து,

‘அந்தப் புலி, அந்த இரண்டு மான்கள் இருக்கிறதல்லவா?’ என்றார்.

‘ஆமாம்..’

‘மூன்றையும் சுட்டுவிடு!’.

  •        

(மாணவர்களை இலக்கியத்தில் ஊக்குவிக்கும் நோக்கத்தோடு கல்லூரி மாணவர்கள் எழுதிய இக் கதை பற்றிய தங்கள் நல்ல கருத்தை எதிர்பார்க்கின்றோம்.)

kuruaravinthan@hotmail.com


நட்புடன் குரு அரவிந்தன்.
உங்கள் தகவல்களுக்கு நன்றி. இப்படியான போட்டிகள் மூலம் இலக்கியத்தின் மீது மாணவர்களுக்கு ஆர்வத்தினை ஏற்படுத்த முடியும். இன்றைய நவீன காலத்தில் மாணவர்களின் 
நல்நடத்தைக்கு இலக்கியமே வழிகாட்டமுடியும். இலக்கியக் கதைகளின் உண்மையினை மாணவர்கள் புரிந்துகொண்டால், எதிர் காலத்தில் தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ முடியும்.
உங்கள் பணிக்கு எமது இதயம் நிறைந்த பாராட்டுக்கள்.
தொடரட்டும் உங்கள் பணி.
நன்றியுடன் 
வரதன் -  பிரான்ஸ்
Varathan - France

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு எனது வாழ்த்துகள்.

அன்புடன்
சிறீதரன்மிருகம் அருமையான சிறுகதை. 
தகுதியான கதைக்கே பரிசு கிடைத்திருக்கிறது. 
எழுதியவருக்கு வாழ்த்துக்கள்.

பாஸ்கரன் _ ரொறன்ரோ.


பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


Wednesday, September 26, 2012

Short Story Contest - Results

சிறுகதைப்போட்டி முடிவுகள்.

வணக்கம்

தமிழ் மாணவர்களின் கலை, இலக்கிய வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு பிரபல எழுத்தாளர் குரு அரவிந்தனின் ஆதரவுடன் யாழ்ப்பாணம் வெற்றிமணி பத்திரிகை நடத்திய அகில இலங்கை மாணவர்களுக்கான சிறுகதைப் போட்டியின் பரிசளிப்பு விழா பற்றிய தகவல்கள்.பரிசளிப்பு விழா நல்லூரில் உள்ள நாவலர் மண்டபத்தில் 21-09-2012 மிகவும் சிறப்பாக நடைபெற்றது. நேரடியாக வந்து பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட, பரிசு பெற்ற சில மாணவர்களின் படங்கள் இங்கே இடம் பெறுகின்றன.

யாழ் பல்கலைக் கழகப் பேராசிரியர் வேல்நம்பி அவர்கள் பரிசுகளை வழங்கிக் கௌரவித்தார்.தொடர்பு கொள்ள விரும்புவோர் kuruaravinthan@hotmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தொடர்பு கொள்ளவும்.Monday, September 24, 2012

வைகறை வானம் - Vaikarai Vaanam

விழுவது மீண்டும் எழுவதற்கே..!

குரு அரவிந்தன்

மிழகத்திற்கு ஒரு பாரதிபோல, ஈழத்தில் ஒரு காசி ஆனந்தன்போல, கனடாவிலும் ஒரு மாவிலி மைந்தன் (சி. சுண்முகராஜா) இருக்கின்றார் என்பதை அவரது ரொறன்ரோ கவிதை நூல் வெளியீட்டு விழாவிற்குச் (22-09-2012) சென்றபோது புரிந்து கொண்டேன். கவியரங்கங்களுக்காகக் கவிதை எழுதிக்கொண்டிருந்த நண்பர் சி. சுண்முகராஜாவை மரபுக் கவிதை எழுத வைத்த பெருமை கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தையே சாரும் என்பதை அவரே அந்த விழாவில் ஏற்றுக் கொண்டார்.


Tamil Writers - Work shop

கனடாவில் கவிநாயகர் கந்தவனம் அவர்கள் மேடைகளிலும், கவிதை நூல்களிலும் கவிதைகளைப் பரப்பிக் கொண்டிருந்தபோது எனது தமிழ் ஆரம் (Tamil Aaram) என்ற சிறுவர்களுக்கான ஒளித்தட்டில் பதிவேற்ற அவரிடம் ஒரு சிறுவர் பாடல் கேட்டிருந்தேன். அதேபோல பண்டிதர் ம. செ. அலெக்ஸ்சாந்தர் அவர்களிடமும் பாடல் கேட்டிருந்தேன். இருவரும் எந்தத் தயக்கமும் இல்லாது மனமுவர்ந்து அருமையான பாடல்களை எழுதித் தந்தார்கள். மரபுக் கவிதை எழுதுவதில் இருவரும் சிறந்த அறிவுடையவர்களாகையால் அவர்களது அறிவை மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக்க விரும்பினேன். எனவே மரபுக்கவிதைப் பட்டறை ஒன்றை நடத்த வேண்டும் என்ற எனது விருப்பத்தை அவர்களிடம் வெளியிட்டபோது அவர்களும் தயங்காது ஏற்றுக் கொண்டார்கள். அப்பொழுது கனடா எழுத்தாளர் இணையத் தலைவராக கவிநாயகர் வி. கந்தவனம் அவர்களும், செயலாளராக நானும் இருந்தோம். இடவசதி இல்லாததால் நண்பர் கரு கந்தையாவை அணுகினோம். அவரும் தயங்காது பட்டறைக்கான இடவசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தார். ஆசிரியர் பண்டிதர் அலெக்ஸாந்தருக்கு வாகன வசதி இல்லாததால் அவரை தினமும் நான் எனது வாகனத்தில் அழைத்து வந்தேன். இப்படித்தான் எமது மரபுக் கவிதைப் பட்டறை அன்று ஆரம்பமானது. தொடர்ந்து ஆர். என். லோகேந்திரலிங்கம், த.சிவபாலு, சின்னையா சிவநேசன் ஆகியோரின் தலைமையில் மரபுக் கவிதைப் பட்டறை சிறப்பாகவே நடைபெற்றது. இன்று மரபுக் கவிதையில் முன்னணியில் நிற்கும் பல கவிஞர்களுக்கு அன்று ஆரம்பித்து வைத்த பயிற்சிப்பட்டறை மிகவும் துணையாக இருந்தது. அனேகமாக வகுப்பு நடக்கும் போது எனக்கு அருகேதான் நண்பர் சண்முகராஜா அமர்ந்திருப்பார். மனதில் பட்டவற்றை அழகான கவிதைகளாக வடிப்பார். அப்பொழுதே அவரிடம் உள்ள திறமையைக் கண்டு அவரைப் பாராட்டினேன். அவரது கனவுகள் நினைவாகும் நாளுக்காகக் காத்திருந்தேன். இன்று அவரது கவிதை நூலான வைகறை வானம் என்ற கவிதை நூல் என் கைகளில் தவழ்கிறது. அதை வாசிக்கும்போது கவிதைக்கு இங்கேயும் ஒரு பாரதி இருக்கின்றார் என்ற எண்ணம் எனக்குள் எழுந்தது.

அந்தக் கவிதை  நூலில் இருந்து என் மனதைத் தொட்ட சில வரிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.


விழுவது மீண்டும் எழுவதற்கே என்ற கவிதையில் அவர் தனது ஆதங்கத்தை இப்படி வெளிப்படுத்துகின்றார்


ஆழ்கடற்கோளே உன்னால்
அழிந்தது குமரிக்கண்டம்
ஊழ்வினை என்றே உன்னுள்
உறைந்தது பூம்புகாரும்
சூழ்பகை கண்டு வீழா
ஈழமும் வீழ்ந்தது உன்னால்
வீழ்வதெம் விதியாகட்டும்
வீறுபெற்றெழுவோம் நாங்கள்.காலா காலமாய் இப்படி எத்தனை அழிவுகளைக் கண்ட இனம், விதி என்று சொல்லி மனம் சோர்ந்து போகாமல் மீண்டும் வீறுபெற்றெழுவோம் என்பதை கடலன்னைக்குச் சொல்வதுபோல் சொல்லப்பட வேண்டியவர்களுக்குச் சொல்லிக் காட்டுகின்றார்.


‘தாய் மொழியைத் தம் பண்பாட்டை
ஏளனமாய் நோக்கிடுவோர் இழிந்த மாக்கள்
அன்னையினைப் புறந்தள்ளி அயலான் தாயை
அரவணைத்தால் போலாகும் அன்னார் செய்கை
பொன்னாலும் புகழாலும் பொலிந்த போதும்
பொருளற்ற வாழ்வானாற் போலி வாழ்வே’தமிழன் என்ற முகத்தோடு வாழும் போலிகளை கவிதைகளாற் சாடுகின்றார். சுயநலத்திற்காக எதையும் விலைபேசும் இப்படியான போலிகளிடம் ஏமாந்து விடவேண்டாம் என்று எச்சரிக்கை செய்கின்றார்.

இசைவேந்தன் இராவணனார் ஆண்டதேசம்
இதிகாசக் காலமுன்பே எங்கள் தேசம்
அசைவின்றித் தமிழ் மன்னர் ஆட்சி செய்த
அழகு தமிழீழமே எங்கள் தேசம்சரித்திரம் தெரியாத தமிழர்களுக்கு, கூலிக்கு மாரடித்த தமிழர்களுக்கு தமிழ் மொழியின் தொன்மையை இந்தக் கவிதை வரிகள் மூலம் எடுத்துக் காட்டுகின்றார்.


‘எந்த இனம் தன் மொழியை இழிவாய் நோக்கும்
எந்தஇனம் தானழிந்த நாள் கொண்டாடும்’எமது முன்னோர்களைக் கொன்றொழித்த துயர்படிந்த நினைவு நாட்களை சமயத்தின் பெயரால் நாமே கொண்டாடுவது எவ்வளவு மூடத்தனம் என்பதை அறிவுள்ள மாந்தரே நினைவில் கொள்ளுங்கள் என்று எடுத்துச் சொல்கின்றார்.


‘வீரியம் இழந்து எங்கள்
விழுமியம்எல்லாம்
ஆரிய மாயைச் சேற்றில்
ஆழ்ந்ததாற் தொலைந்தே போனோம்’நாங்கள் எப்படித் தொலைந்து போனோம் என்பதை ‘நீதான், நீதான்’ என்று எங்கள் முதுகிலே தட்டி எங்கள் முதுகிலே குத்தியவர்களை இன்னமும் நம்பிக் கனவு காண்பவர்களுக்கு இந்த வரிகளைத் தந்திருக்கின்றார்.


சிறப்பொடு வாழ்ந்த செந்தமிழ் இனமே
சிரித்திட வாழ்ந்திடல் தகுமோ
புறப்படு தமிழா புதுமைகள் படைக்க
புதிதாய் விரியும் உன்பாதை!உறைந்துபோயிகுக்கும் தமிழ் இனமே, மனம் சோர்ந்து போகலாமா? எழுந்து வா புதுமைகள் படைக்கலாம் என்று புதிய பாதையைக் காட்டுகின்றார்.


திசைமாறி வந்தபெரும் திருடர் கூட்டம்
தேசத்தைத் தமதாக்கிக் கொண்டே எம்மை
வசைபாடி வந்தேறு குடிகள் என்றே
வாழ்வுரிமை அனைத்தையும் பறித்தார் வீழ்ந்தோம்


எதையுமே ஆவணப்படுத்துவதில் தயக்கம்காட்டும் தமிழ் இனமே, உன் பலவீனம் தெரிந்ததால்தானே நேற்று வந்தவர்கள் காலாகாலமாய் வாழ்ந்த மண்ணைவிட்டு உன்னை விரட்டி அடிக்கிறார்கள்

தலைநிமிர்ந்து மார்தட்டித் தமிழரென்றே
தன்மானமே யுயிராய்ப் போற்றி வாழ்ந்தோம்
நிலையழிந்து நிலமிழந்து நாடற் றோராய்
நிம்மதியும் இழந்தஇன மான தேனோ?


ஒன்றுபட்டால் வாழ்வுண்டு உணர்ந்தோ மானால்
ஒளிந்தழிக்கும் உட்பகைவர் அழிந்தே போவார்..


என்று தமிழினத்தைச் சிந்திக்க வைக்கின்றார். தமிழனின் முதல் எதிரி யாருமல்ல, ஒளிந்தழிக்கும் உட்பகைவர் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள் என்று  மிகவும் தெளிவாக எங்கள் சமூகத்திற்கு எடுத்துச் சொல்கின்றார்.

நன்றாய் நம் மொழி வளர்த்து மரபைக் காத்து
நல்லதமிழ்ச் சமுதாயம் அமைப்போமானால்
வென்றிடலாம் வரும் பகையை  வெட்டி வீழ்த்தி
வெறும் சொல்லாய் மாற்றிடலாம் விதியைத்தானே!


விதியில் பழியைப் போடாதீர்கள், மொழி அழிந்தால் நம் இனம் அழியும், தியாகிகளின் கனவுகள் வீணாகும் என்பதையும், மொழி வளர்த்து நல்ல தமிழ் சமுதாயம் அமைப்போமானால் வென்றிடலாம் இனிமேல் வரும் பகையை என்று கவிதைவரிகளால் விளங்க வைக்கிறார்.

பொல்லூன்றும் அகவையிலும் புலியாகும் குணங்கள்
பொங்கியெழும் படையாகி தமிழ்காக்கும் கரங்கள்
பல்லாண்டாய் உயிர்வாழும் பைந்தமிழர் முறைகள்
பண்பாட்டின் விளைநிலமே..


எப்படியான வீரம் நிறைந்த மண்ணில் தான் பிறந்தேன் என்று தான்பிறந்த மண் வாசனையை முகர்ந்து பார்க்கின்றார்.

கன்னியாம் தமிழ்காக்கக் களத்திலாடிக்
கந்தகத்துக் காற்றோடு கலந்தேபோன
எண்ணரிய மாவீரர் ஈகைகண்டே
எழுச்சியுற்ற தமிழுக்கா இழிவு சேரும்


மொழியை இனத்தை மண்ணைக் காக்கக் களமாடிய உடன் பிறப்புக்களை எண்ணிப் பார்க்கின்றார்.

வான்வெளியில் வட்டமிட்டு எச்சமிடும் வல்லூறின்
வன்சிறகுகள் ஒடிந்து வீழும்நாள் நாளைவரும்!


தீர்க்க தரிசனமாய் இவர் கூற்று நிறைவேறியபோதெல்லாம் உளம் மகிழ்ந்த, மீளாத்துயரில் ஆழ்ந்த மக்கள் ஆயிரமாயிரம்.

கந்தத் தீயுமிழும் கணைவெடிகள் காவிவந்த
காற்றும் ஒருநாள் கட்டாயம் திசை மாறும்!
மனித அவலத்தை மண்ணில் பயிரிட்டோர்
மாறிக் கதிரறுக்கும் மாற்றமொன்று நாளைவரும்!


எல்லாள மன்னன் வஞ்சனையால் கொல்லப்பட்டபோது, இனித் தமிழன் அழிந்துவிடுவான் என்றுதான் சிலர் கணக்குப் போட்டார்கள். ஆனால் அதன் பின் எத்தனையோ தமிழ் மன்னர்கள் ஆட்சிக்கு வந்து ஆண்டுவிட்டுத்தான் சென்றார்கள். எனவே வருவார்கள், கவலைப்படாதீர்கள், மாற்றங்கள் விரைவில் வரும் என்று ஆறுதல் தருகின்றார் கவிஞர்.
 
தனது இன்றைய ஆசைகளை, அந்த மண் வாசனையைக் கவிதை மூலம் வெளிக் கொண்டு வருகின்றார் ஆசிரியர்.

மீண்டும்தாய் மண்மடியிற் தவழ்ந்திடவே ஆசை
மெல்லவரும் கடற்காற்று மேனிபட ஆசை
வேண்டுமட்டும் நுங்கிளநீர் விருந்துண்ண ஆசை
வேப்பமர மீதேறி விளையாட ஆசை..


அந்த மண்ணில் பிறந்த ஒவ்வொருவருக்கும் தாய் மண்மேல் இருக்கும் ஆசைகளாகவே அவை இருக்கின்றன. நாலு பக்கமும் கடல் சூழ்ந்திருப்பதால் அருமையான கடலோரக் காற்றை மறக்கமுடியாது. கற்பக விருட்சமாம் நீண்டு நிமிர்ந்து வானம் தொடும் பனை மரங்களும்,  பாரதி குறிப்பிட்ட தோப்புக்களில் தலை நிமிர்ந்து நிற்கும் தென்னை மரங்களும் அந்த மண்ணின் இரு கண்கள் என்றே சொல்லலாம். காலாகாலமாய் அந்த மண்ணின் மக்களைத் ‘தலை நிமிர்ந்து நில்’ என்று பாடம் சொல்லிக் கொடுத்ததே இந்த மரங்கள்தான் என்றால் அது மிகையாகாது.  பனையில் இருந்து பெறும் நுங்கும், தென்னையில் இருந்து பெறும் இளநீரும், ஆகா.. அதன் சுவையைச் சொன்னால் புரியாது.

இனிவரும் காலம் இவர்களே தமிழர்
எனவொரு முகவரி காட்ட
தனித்துவம் பேணித் தமிழ்மொழி காத்து
தரணியில் தலைநிமிர்ந் திடுவோம்.


முகவரி அற்றவர்களாகத் தமிழர்கள் மாறிவிடக்கூடாது, தமிழ் மொழி காத்து தரணியில் தலை நிமிர்ந்து நிற்போம் என்பதில் தன் உணர்வை கொட்டுகின்றார். தமிழனாய்ப் பிறந்த ஒவ்வொரு தமிழனும் எதிர் பார்த்து நிற்பதும் இதற்காகத்தானே!

Tuesday, September 18, 2012

Short Story Contest - சிறுகதைப் போட்டி

வெற்றிமணி ஆசிரியர்
கலாநிதி மு.க.சு.சிவகுமாரன் அவர்களின்
'பொன்னும் மணியும்'
நூல் அறிமுக விழாவில்


வெற்றிமணி மாணவர் சிறுகதைப் போட்டி பற்றி…


யா / மகாஜனாக்கல்லூரி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பிரபல எழுத்தாளர் குரு அரவிந்தன் ஆதரவில் வெற்றிமணி நடாத்திய மாணவர்களுக்கான சிறுகதைப் போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்வு:

பரிசளிப்பு விழா 21-09-2012 மாலை 3:30 மணியளவில் ஆரம்பமாகும்.

இடம்: நாவலர் கராசார மண்டபம். நல்லூர். (யாழ்ப்பாணம்.)

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

வணக்கம்.

தவிர்க்கமுடியாத காரணங்களால் மாணவர்களுக்கான சிறுகதைப் போட்டி முடிவுகள் வெளிவருவதில் தாமதமாகிவிட்டது. மாணவர்களுக்கான இந்தச் சிறுகதைப் போட்டியில் பொதுவாகப் பங்குபற்றிய எல்லா மாணவர்களுமே நன்றாக எழுதியிருக்கின்றார்கள். ஆனாலும் போட்டி என்று வரும்போது குறிப்பிட்ட சில கதைகளை மட்டுமே நடுவர்களால் தெரிவு செய்ய வேண்டி வந்தது. மாணவர்களின் வயதிற் கேற்ற முதிர்ச்சி கதைகளில் காணப்படுகின்றது. எடுத்துக் கொண்ட கருப்பொருளைத் தெளிவாகச் சொல்ல வந்தாலும் கதையின் ஓட்டம் ஆங்காங்கே சில இடங்களில் தடைப்படுகின்றது. ஒரு வாசகன் சிறுகதையை வாசிக்கத் தொடங்கினால் அதை மூச்சு விடாமல் வாசித்துவிடவேண்டும். அப்படியான கதைகளே வாசகர் மனதில் பதிந்துவிடும். அதற்கு நல்ல கருப்பொருள் மட்டுமல்ல, எழுத்து நடையும் எதிர்பாராத திருப்பங்களும் கதையில் இடம்பெற வேண்டும். வேண்டாத வர்ணனைகளைத் தவிர்த்து, கதையைச் சுருங்கச் சொல்லி வாசகர்களைக் கவரும் திறமை வேண்டும்.


தொடக்கத்தில் நல்ல கதையோ இல்லையோ தயங்காமல் வாசியுங்கள். அந்தக் கதையின் வெற்றிக்கு அல்லது தோல்விக்கு என்ன காரணம் என்று ஆராய்ந்து பாருங்கள். நிறைய வாசிப்பீர்களேயானால் உங்கள் எழுத்தில் உங்களை அறியாமலே மாற்றங்கள் ஏற்படும். உங்களுக்கென்று ஒரு நடையைப் பின்பற்றுவீர்களேயானால் நாளைய இலக்கிய உலகில் நீங்களும் பிரகாசிப்பீர்கள். தோல்விகள் எல்லாம் தோல்விகள் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்ற நியதியை மனதிற் கொண்டு உங்கள் எழுத்துப் பணியைத் தொடருங்கள். எதிர் காலத்தில் உங்கள் எழுத்துப் பணி சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்.

அன்புடன்
குரு அரவிந்தன்.சிறுகதைப் போட்டி முடிவுகள்:

1வது பரிசு: மிருகம்

செல்வன். பாலசுப்பிரமணியம் நிதுஜன்
யா. மகாஜனாக் கல்லூரி
தெல்லிப்பழை


2வது பரிசு: அரசமரத்தடிப் பிள்ளையார்

செல்வி. சோபிதா இளங்கோ
யா. வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை
யாழ்ப்பாணம்.


3வது பரிசு: மருந்துச் சிட்டை

செல்வி. ம. பிரதாயினி
யா. சிதம்பரக்கல்லூரி
வல்வெட்டித்துறை.

ஆறுதல் பரிசுகள்:

துயரத்தின் பிடியில்

செல்வி தர்ஷனா முருகமூர்த்தி
யா. மகாஜனாக்கல்லூரி
தெல்லிப்பழை.

விழியோரக் கனவுகள்

செல்வி. எஸ். கிறிஸ்ரின் யுடிற்றா சுப்பிரமணியம்
இளவாலை திருக்கன்னியர் மகாவித்தியாலயம்
இளவாலை.


மாணவர் சிறுகதைப் போட்டியைச் சிறப்பாக நடத்திய வெற்றிமணி ஆசிரியர் கலாநிதி மு.க.சு. சிவகுமாரன் அவர்களுக்கும், வலன்ரீனா இளங்கோவன் (யாழ்ப்பாணம்) அவர்களுக்கும், போட்டியில் பங்குபற்றிய மாணவர்களுக்கும், ஆக்கமும் ஊக்கமும் தந்த ஆசிரியர் அதிபர் அவர்களுக்கும், பெற்றோருக்கும் எமது நன்றிகள்.

Saturday, September 1, 2012

அரங்கேற்றம் - Arangetram

புலத்தில் புது வரலாறு எழுதும்

ஈழம் தந்த தாரகைகள்.

"Bharathanatyam is a form of art that can be taught, but cannot be enforced on the disciples. It is only real when it comes from the soul of the dancer. Dance will automatically come from the heart and soul once the dancer has developed maturity."

Bharathanatya Arangetram of     

Naveeni Rasiah & Praveeni Rasiah

'The first word of appreciation is always special for an artiste.'

குரு அரவிந்தன்
  By: Kuru Aravinthan

சென்ற சனிக்கிழமை (18-08-2012) மார்க்கம் கலையரங்கில் (Markham Theatre) மாலை 6:00 மணியளவில் நவீனி இராசையா, பிரவீனி இராசையா ஆகியோரின் பரத நாட்டிய அரங்கேற்றத்திற்குச் சென்றிருந்தேன். உடலும், உள்ளமும், உணர்வும் ஒன்றாகக் கலந்த ஒப்பற்ற கலை நிகழ்வாக அந்த நிகழ்வு அமைந்திருந்தது. முதலில் சலங்கைப் பூசையைத் தொடர்ந்து, மங்கல விளக்கேற்றி, தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது. அடுத்து கனடிய தேசிய கீதம் இடம் பெற்றது. தமிழ் ஆங்கிலம் பிரெஞ்ச் ஆகிய மூன்று மொழிகளிலும் நடன தாரகைகள் சிறந்து விளங்குவதால் கனடிய தேசிய கீதம் இசைக்கும்போது மூன்று மொழிகளிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டதால் நிகழ்ச்சியின் ஆரம்பம் மிகவும் சிறப்பாக இருந்தது. தொடர்ந்து வரவேற்புரையைத் தமிழில் கலைமகள் புஸ்பநாதனும் ஆங்கிலத்தில் வைத்தியகலாநிதி சங்கீதா செந்தூரனும் நிகழ்த்தினர்.


றிச்வியூ பாடசாலையில் நவீனி 12ம் வகுப்பிலும், பிரவீனி 11ம் வகுப்பிலும் பிரெஞ்ச் மொழியை முக்கிய பாடமாகக் கொண்டு கல்வி கற்கின்றார்கள். சர்வதேச மொழித் திட்டத்தின் கீழ் ரொறன்ரோ கல்விச் சபை நடத்தும் தமிழ் மொழி வகுப்புகளிலும், தாய் மொழி மீது கொண்ட பற்றுக் காரணமாகத் தாய் மொழியாம் தமிழ் மொழியைக் கற்கின்றார்கள். நவீனி, பிரவீனிக்குத் தமிழ் கற்பித்த ஆசிரியர் என்ற வகையில் முன் வரிசையில் உட்கார்ந்து அவர்களின் நடனத்தைப் பார்ப்பதற்கு எனக்குச் சந்தர்பம் கிடைத்தது. எப்பொழுதும் கற்பிக்கும் ஆசிரியர்களின் நன்மதிப்பையும், பாராட்டுகளையும் பெற்றுவரும் இவர்கள் பாடசாலைக் கல்வியைப் பொறுத்தவரையில் எல்லாத் தரங்களிலும், எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்குகின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. பெரியோரை மதித்தல், எல்லோரிடமும் பண்பாய் பழகுதல் போன்ற பல நற்பண்புகளை அவர்களிடம் நான் அவதானித்திருக்கிறேன்.ஈழம் தந்த தாரகைகளே!
புலத்தில் புது வரலாறு எழுதும் -உங்கள் சலங்கையின் நாதம்..!திரு. முருகு இரத்தினம் குறிப்பிட்டது போல, மூன்று வயதில் நடனம் பயிலத் தொடங்கிய நவீனி, பிரவீனி சகோதரிகளின் நடன ஆசிரியை பற்றிக் கட்டாயம் குறிப்பிட வேண்டும். அவர் வேறுயாருமல்ல கவின் கலாலய அதிபர் பரதசூடாமணி ஸ்ரீமதி. சிவா திவ்வியராஜன் அவர்கள்தான். புலம் பெயர்ந்த மண்ணில் நடனம் கற்கும் மாணவ, மாணவிகளுக்குத் தமிழிலே பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியைகளில் இவரும் ஒருவர் என்பதில் பெருமைப் படவேண்டும். நவீனி, பிரவீனியின் ஒவ்வொரு அசைவிலும் மொழியை உணர்ந்து அதை உள்வாங்கித் தங்களை அப்படியே ஐக்கியமாக்கி நடனமாடுகிறார்கள் என்பதை அப்போது என்னால் உணர முடிந்தது. தமிழ் மொழியில் திறமையும், இசையை இரசிக்கும் திறனும் இவர்களிடம் இருப்பதால் எமது பண்பாடு, பாரம்பரியம் போன்றவற்றைப் புரிந்து கொண்டு பாடல்களுக்கேற்ற பாவங்களோடு மட்டுமல்ல, நளினத்தையும் ஒவ்வொரு பாடலிலும் சிறப்பாக வெளிப்படுத்தினார்கள். பரத நாட்டியக் கலையில் எல்லாவற்றையும் அறிந்து வைத்திருந்தாலும் நடனமாடும்போது மாணவிகள் நளினத்தை வெளிப்படுத்தாவிட்டால் அந்த நடனம் பார்வையாளர் மத்தியில் ஒருபோதும் சிறப்பதில்லை.


இந்த அரங்கேற்ற நிகழ்வின்போது, ஸ்ரீமதி சிவா திவ்யராஜன், சங்கீதா செந்தூரன் ஆகியோர் நட்டுவாங்கம் செய்தனர். சங்கீத மிருதங்க கலாவித்தகர் ஸ்ரீ வர்ண ராமேஸ்வரனின் கணிரென்ற குரல் சபையையே கட்டிப்போட்டிருந்தது. இசைக் கலைஞர்களான திரு. வைரமுத்து திவ்யராஜன், திரு. கீர்த்தனன் திவ்யராஜன், சங்கீத கலா வித்தகர் ஸ்ரீ வி.என். பாலமுரளி, இசைக்கலைமணி ஸ்ரீமதி கல்யாணி சுதர்சன், ஸ்ரீமதி சசிரேகா ரகுபதி ஆகியோர் அரங்க மேடையில் ஒன்றாக அமர்ந்து இசை வழங்கியபோது, ஆடலுடன் பாடலைக் கேட்டதில் சுகம்.. சுகம்.. என்று ஒவ்வொரு பாடலுக்கும் சபையோரைக் கரவோலி எழுப்ப வைத்தது.‘பழைய சுமை எங்களுக்கு’ என்ற நாட்டிய நாடகம் கவிஞர் முருகையன், கலைஞர் திவ்யராஜன் ஆகியோரின் ஆக்கத்தில் பிறந்த மண்ணில் மட்டுமல்ல புகுந்த மண்ணிலும் பெண்கள் படும் அவலத்தை எடுத்துக் காட்டுவதாய் அமைந்திருந்தது. இந்த நாட்டிய நாடகத்தில் நவீனி, பிரவீனி இருவருமே சொல்ல வந்த கருப் பொருளைப் பார்வையாளர்கள் இலகுவில் புரிந்து கொள்ளத்தக்க வகையில் தங்கள் பாவனை மூலம் உணர்வோடு சிறப்பாக வெளிக்காட்டியிருந்தனர். இருவரின் உடையலங்காரமும் மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. திரு. பிரதீபன் ரட்ணம் அவர்கள் உடையலங்காரம் செய்திருந்தார்.


எழுத்தாளரும், விமர்சகருமான க. நவம் அவர்கள் நிகழ்ச்சியைச் சிறப்பாகத் தமிழிலும் ஆங்கிலத்திலும் தொகுத்து வழங்கினார்.இந்த அரகேற்றம் மிகவும் சிறப்பாக நடைபெறுவதற்குக் காரணமான, பிள்ளைகளின் தேவை அறிந்து அதற்கேற்ப தமது பொன்னான நேரத்தைச் செலவிட்ட கலையார்வம் மிக்க பெற்றோரான திரு. இராசையா, திருமதி கமலவதனா இராசையா ஆகியோரைப் பாராட்டவேண்டும். இவர்களது பேரனார் அழகையா அவர்கள் சிறந்த இசை நடனக் கலைஞர் என்பதும் குறிப்பிடத் தக்கது.

இந்த அரங்கேற்றத்தோடு இவ்வரிய நடனக்கலையை நிறுத்திவிடாமல் தொடர்ந்தும் பயின்று அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்ல வேண்டும், புலத்தில் புது வரலாறு படைக்கவேண்டும் என்று நவீனி, பிரவீனி இருவரையும் வாழ்த்துகின்றேன்.