Sunday, September 30, 2012

மிருகம் - Mirukam - !st Prize


பிரபல எழுத்தாளர் திரு.குரு அரவிந்தன் அவர்கள் (கனடா) ஆதரவுடன் யாழ்பாணத்தில் வெற்றிமணி பத்திரிகை நடத்திய அகில இலங்கைக்கான மாணவர் சிறுகதைப் போட்டி   முடிவுகள். 

 சிறுகதைப் போட்டி முடிவுகள்:  1வது பரிசு:   மிருகம்

செல்வன். பாலசுப்பிரமணியம் நிதுஜன்
யா. மகாஜனாக் கல்லூரி
தெல்லிப்பழை

மாணவர் சிறுகதைப் போட்டியில் முதலாம் பரிசு பெற்ற சிறுகதை.
(பாலசுப்பிரமணியம் நீதுஜன், மகாஜனாக்கல்லூரி, தெல்லிப்பழை)கொண்டுவந்திருந்த தண்ணீர்ப் போத்தலை எடுத்துப் பார்த்தேன். அது காலியாக இருந்தது. ஏமாற்றத்துடன் டேவிட்டின் முகத்தைப் பார்த்தேன். ஐந்து மணிநேரமாக ஒரே இடத்தில் காத்துக் கிடக்கும் சலனமோ களைப்போ முகத்தில் தெரியவில்லை. சரிதான், இந்தத் தொழிலின் அடிப்படைப் பாடமே பொறுமையுடன் காத்திருப்பதுதானே. எனக்குத்தான் கற்றுக்குட்டி என்பதால் அது கொஞ்சம்கூட இல்லை.

‘சேர்..!’ மெதுவாக டேவிட்டை அழைத்தேன்.

என்ன..? என்றார் கிசு கிசு குரலில்.

‘எதுவும் வருகிற மாதிரித் தெரியவில்லை, வேண்டுமானால் நாளைக்கு மீண்டும் முயற்சி பண்ணிப் பார்க்கலாமே..?’

‘உஷ்.. பேசாமல் இரு. இன்னும் நான்கு மணி நேரம் இருக்கிறது. முயற்சி பண்ணிப் பார்க்கலாம்.’

என்னது இன்னும் நான்கு மணி நேரமா இந்த வெய்யிலில் ஒன்பது மணி நேரம் இருந்தால் 12ம் நம்பர் ஸ்பனரே உருகிவிடும்.  நானெல்லாம் அவிந்து விடுவேன். மாலைச் சாப்பாட்டுக்கு உப்பையும் தூளையும் தொட்டுவிட்டு விரல்களையே கடித்துக் கொள்ளலாம் போலிருந்தது. படித்து முடித்ததும் ஹொலிவூட்டில் வாய்ப்புத்தேடாமல் கமராவை எடுத்துக் கொண்டு காட்டிற்கு வந்ததற்கு எனக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும் என எண்ணிக் கொண்டேன்.

‘இன்னும் நான்கு மணி நேரம்தான்’ என்றார் டேவிட்.

அந்த உலகப் பிரபல தொலைக்காட்சி சனலில் ஒளிப்படக்காரராய் வேலை செய்யும் டேவிட்டிடம் உதவியாளராய் சேர்ந்த எனது முதலாவது வேலைத்திட்டம் இது. அரியவகை மருவானா மான்களின் வாழ்க்கையைப் படம் பிடிக்க நாமிருவரும் கடந்த ஆறுமாதங்களாக சைபீரியாச் சமவெளியில் அலைந்து திரிகின்றோம். ஏறத்தாள எல்லா வேலைகளும் முடிந்து விட்டது. முடிவாக சைபீரியா புலிகளால் மருவானா மான்கள் வேட்டையாடப்படுவதையும் படம் பிடித்தால் போதும். அதற்காகத்தான் ஒரு வரண்ட குளத்தின் அருகே புதருக்குள் மறைந்து படுத்தபடி நானும் டேவிட்டும் காத்திருந்தோம். ஏறத்தாள எண்பது மருவானா மான்கள் காலையில் இருந்து அந்தக் குளத்தடியில் மேய்ந்து கொண்டிருக்கின்றன.
திரும்பி டேவிட்டைப் பார்த்தேன். தொழிலில் அவரின் ஈடுபாடு என்னை பிரமிக்க வைத்தது. காத்திருக்கும் வேளைகளில் நான் சலித்துக் கொண்டாலும் அவர் எடுத்துக் கொண்ட கருமமே கண்ணாயிருப்பார். என்ன ஒரு தொழில் சிரத்தை! அப்படிப்பட்ட இந்த நல்ல மனிதரைப்பற்றி எத்தனை வதந்திகள். அரிய மிருகங்களைக் கடத்தும் சட்ட விரோதக் கும்பல்களுக்கு உதவுவதாக, தொலைக்காட்சிச் சனலின் பெயரால் கிடைக்கும் சலுகைகளை பயன்படுத்தி தடுக்கப்பட்ட இடங்களுக்கெல்லாம் போய்.. சரிதான், ஒருவரைப்பற்றி புகழ் பரவ ஆரம்பித்தாலே வதந்தியும் சேர்ந்துதானே பரவுகின்றது.

‘ஏய் அங்கே பார்..’

டேவிட் காட்டிய திசையைப் பார்த்தேன். மேய்ந்து கொண்டிருந்த மான் கூட்டத்தை நோக்கி ஒரு பெரிய உயரமான கம்பீரமான சைபீரியன் புலி ஒன்று மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தது. ஒரு பெருமூச்சை சின்னதாக விட்டேன். அப்பாடா இத்தோடு வேலை முடிந்தது. அந்தப் புலி ஒரு மானைப் பிடித்துக் குதறிக் கடித்துச் சாப்பிடுவதைப் படம் பிடித்தால் போதுமானது.

புலி சந்தடியின்றி மான் கூட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. ஒரு கமராவைப் புலிக்கும் மற்றதை மான் கூட்டத்திற்கும் குவித்தோம். புலி ஓசைப்படாமல் மெல்ல மெல்ல நெருங்கியது. தற்செயலாகத் திடீரென நிமிர்ந்து பார்த்த மான் குட்டி ஒன்று அதிர்ச்சியில் ஒரு கணம் நின்று, மிரண்டது. அதன் மிரட்சியில் ஏனைய மான்கள் உஷாராகின. அடுத்த கணம் சொல்லி வைத்தாற்போல எல்லாமே புலியை நிமிர்ந்து பார்த்தன. உடனே புலி அசையாது நின்றது. தலையை மட்டும் திருப்பி அங்குமிங்கும் பார்த்துத் தனது இரையைக் குறிவைத்தது. அடுத்த கணம் மிரண்டுபோன மான்கள் ஓட்டம் பிடிக்க ஆரம்பித்தன. புலியும் தனது இரையைத் துரத்த ஆரம்பித்தது. கூட்டமாக மான்கள் மிரண்டு ஓடினாலும், புலி தனது இரையை மட்டும் குறிவைத்துப் பாய்ந்தது. மான்கள் எல்லாம் கூட்டமாக உயரமாயிருந்த குளத்தின் அணைக்கட்டை நோக்கி ஓடலாயின.


டேவிட் என் முதுகில் தட்டி ஒரு இடத்தைச் சுட்டிக் காட்டினார். மேட்டின் அடியில் ஒரு மான் குட்டி விழுந்து படுத்திருக்க, ஒரு பெரிய மான், தாயாக இருக்க வேண்டும் தனது முகத்தால் நெம்பி அதை எழுப்ப முயன்று கொண்டிருந்தது. மேட்டில் பாய்ந்து ஏறும்போது மற்ற மான்களோடு முட்டுப்பட்டு கீழே விழுந்து கால் முறிந்திருக்க வேண்டும். தனது உயிராபத்தைப் பொருட்படுத்தாது அந்த தாய்மான் குட்டியை முகர்ந்து பார்ப்பதும், நெம்பி எழுப்ப முயல்வதுமாக இருந்தது. இடையிடையே நிமிர்ந்து புலியைப்பார்த்தது. எல்லா மான்களும் மேட்டில் பாதுகாப்பான இடத்தில் நின்றவாறு இவையிரண்டையும் பார்த்தன. சற்றுத் தொலைவில் நின்ற புலி திடீரென இவற்றைக் கண்டதும் மெதுவாக இவற்றை நோக்கி நடந்து வரத்தொடங்கியது. எனது நெஞ்சம் படபடத்தது. டேவிட்டை நிமிர்ந்து பார்த்தேன். அவர் திரையையே பார்த்துக் கொண்டிருந்தார்.


புலி மேலும் நெருங்கியது. தாய் மான் பதைபதப்புடன் அவசரமாக மிக அவசரமாக குட்டியை எழுப்பப் பார்த்தது. குட்டியும் மெதுவாக எழும்ப முயன்றது. ஆனால் முன்னங்கால்களை ஊன்ற முயன்றதும் மீண்டும் தரையில் வீழ்ந்தது. அதன் முன்னங்கால் முறிந்திருக்க வேண்டும். புலி கிட்ட நெருங்கவே, பயந்துபோன ஏனைய மான்கள் தப்பி ஓடத் தொடங்கின. புலி மெல்ல மெல்ல இந்த இரண்டு மான்களையும் நோக்கி நகர்ந்தது. தாய் மான் இறுதி முயற்சியாக மரணபயத்தோடு தன் குட்டியை எழுப்ப முயன்றது. முடியவில்லை. அதன் இயலாமை அதன் கண்களில் தெரிந்தது. மறுபடி குட்டியை முகர்ந்து பார்த்துவிட்டு மிரட்சியோடு புலியைப் பார்த்தது. மானின் கண்களைப் பார்த்த எனக்கு இதயமே நின்று விடும்போல இருந்தது.  மிரண்ட கண்களில் தெரிந்தது ஏக்கமா, உயிர்ப்பயமா, அவலமா. தவிப்பா என்பது எனக்குப் புரியவில்லை. என்ன நடக்கப்போகிறதோ என்ற அவலத்தோடு புலியைப் பார்த்தேன். 


மான்களை நோக்கி அருகே வந்த புலி அப்படியே நின்றது. சற்று நேரம் மான்களையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. மானின் கண்களில் உயிர்ப்பயம் அப்படியே இருந்தது. எந்த நேரமும் அந்த மான்களை நோக்கிப் பாயலாம் என்ற துடிப்பு எனக்குள் எழுந்தது. சற்றுமுற்றும் பார்த்த புலி அமைதியாகத் திரும்பி வந்த வழியே நடக்கத் தொடங்கியது. எனக்கு ஒன்றுமே புரியவில்லை. மானின் கண்களைப் பார்த்தேன். அது மிரட்சியோடு புலியையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தது. அதன் பார்வையில் தெரிந்ததென்ன? நன்றியா? புலி ஏன் மானை அப்படியே விட்டுச் சென்றது. வேட்டையாடாமல் கொன்று தின்ன விரும்பவில்லையா? எதை எவ்வாறு ஏற்றுக் கொள்வது என்று தெரியாமல் குழப்பத்துடன் டேவிட்டைப் பார்த்தேன்.


‘ம்..’  என்ற ஒரு பெருமூச்சை விட்டபடி டேவிட் சொன்னார் ‘எனது வாழ்க்கையில் இப்படிப்பட்ட ஒரு சம்பவத்தைப் பார்த்ததேயில்லை. இதைக் கவர் பண்ண முடிந்தது எனது அதிஷ்டம்தான்’.


நான் தலையை ஆட்டியபடி புலியைப் பார்த்தேன். தனது பசியைத் தியாகம் செய்துவிட்டு அது நிதானமாக நடந்து போய்க் கொண்டிருந்தது. அது மிருகமா அல்லது மனிதனைவிட உயர்ந்ததா என்று மனசுக்குள் எண்ணிக் கொண்டிருந்தபோது, டேவிட் எனது முதுகில் தட்டி நாங்கள் எங்கள் பாதுகாப்பிற்காகக் கொண்டுவந்த ‘ஷொட்கண்' வகைத் துப்பாக்கியை என்னிடம் தந்து,

‘அந்தப் புலி, அந்த இரண்டு மான்கள் இருக்கிறதல்லவா?’ என்றார்.

‘ஆமாம்..’

‘மூன்றையும் சுட்டுவிடு!’.

  •        

(மாணவர்களை இலக்கியத்தில் ஊக்குவிக்கும் நோக்கத்தோடு கல்லூரி மாணவர்கள் எழுதிய இக் கதை பற்றிய தங்கள் நல்ல கருத்தை எதிர்பார்க்கின்றோம்.)

kuruaravinthan@hotmail.com


நட்புடன் குரு அரவிந்தன்.
உங்கள் தகவல்களுக்கு நன்றி. இப்படியான போட்டிகள் மூலம் இலக்கியத்தின் மீது மாணவர்களுக்கு ஆர்வத்தினை ஏற்படுத்த முடியும். இன்றைய நவீன காலத்தில் மாணவர்களின் 
நல்நடத்தைக்கு இலக்கியமே வழிகாட்டமுடியும். இலக்கியக் கதைகளின் உண்மையினை மாணவர்கள் புரிந்துகொண்டால், எதிர் காலத்தில் தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ முடியும்.
உங்கள் பணிக்கு எமது இதயம் நிறைந்த பாராட்டுக்கள்.
தொடரட்டும் உங்கள் பணி.
நன்றியுடன் 
வரதன் -  பிரான்ஸ்
Varathan - France

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு எனது வாழ்த்துகள்.

அன்புடன்
சிறீதரன்மிருகம் அருமையான சிறுகதை. 
தகுதியான கதைக்கே பரிசு கிடைத்திருக்கிறது. 
எழுதியவருக்கு வாழ்த்துக்கள்.

பாஸ்கரன் _ ரொறன்ரோ.


பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


1 comment:

  1. அடியேன்தான் அந்தக் கதையை எழுதிய நீதுஜன் பாலசுப்பிரமணியம். ஆரம்பகட்ட மிகச் சிறு எழுத்தாளனாகிய என்னை ஊக்குவிக்கும் விதமாக தாங்கள் அளித்த பரிசிலுக்கும், பாராட்டுதலுக்கும் எனது நன்றிகள்.
    பாராட்டிய ஏனைய அறிஞர்களுக்கும் எனது பணிவான நன்றிகள்.

    ReplyDelete