Monday, September 24, 2012

வைகறை வானம் - Vaikarai Vaanam

விழுவது மீண்டும் எழுவதற்கே..!

குரு அரவிந்தன்

மிழகத்திற்கு ஒரு பாரதிபோல, ஈழத்தில் ஒரு காசி ஆனந்தன்போல, கனடாவிலும் ஒரு மாவிலி மைந்தன் (சி. சுண்முகராஜா) இருக்கின்றார் என்பதை அவரது ரொறன்ரோ கவிதை நூல் வெளியீட்டு விழாவிற்குச் (22-09-2012) சென்றபோது புரிந்து கொண்டேன். கவியரங்கங்களுக்காகக் கவிதை எழுதிக்கொண்டிருந்த நண்பர் சி. சுண்முகராஜாவை மரபுக் கவிதை எழுத வைத்த பெருமை கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தையே சாரும் என்பதை அவரே அந்த விழாவில் ஏற்றுக் கொண்டார்.


Tamil Writers - Work shop

கனடாவில் கவிநாயகர் கந்தவனம் அவர்கள் மேடைகளிலும், கவிதை நூல்களிலும் கவிதைகளைப் பரப்பிக் கொண்டிருந்தபோது எனது தமிழ் ஆரம் (Tamil Aaram) என்ற சிறுவர்களுக்கான ஒளித்தட்டில் பதிவேற்ற அவரிடம் ஒரு சிறுவர் பாடல் கேட்டிருந்தேன். அதேபோல பண்டிதர் ம. செ. அலெக்ஸ்சாந்தர் அவர்களிடமும் பாடல் கேட்டிருந்தேன். இருவரும் எந்தத் தயக்கமும் இல்லாது மனமுவர்ந்து அருமையான பாடல்களை எழுதித் தந்தார்கள். மரபுக் கவிதை எழுதுவதில் இருவரும் சிறந்த அறிவுடையவர்களாகையால் அவர்களது அறிவை மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக்க விரும்பினேன். எனவே மரபுக்கவிதைப் பட்டறை ஒன்றை நடத்த வேண்டும் என்ற எனது விருப்பத்தை அவர்களிடம் வெளியிட்டபோது அவர்களும் தயங்காது ஏற்றுக் கொண்டார்கள். அப்பொழுது கனடா எழுத்தாளர் இணையத் தலைவராக கவிநாயகர் வி. கந்தவனம் அவர்களும், செயலாளராக நானும் இருந்தோம். இடவசதி இல்லாததால் நண்பர் கரு கந்தையாவை அணுகினோம். அவரும் தயங்காது பட்டறைக்கான இடவசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தார். ஆசிரியர் பண்டிதர் அலெக்ஸாந்தருக்கு வாகன வசதி இல்லாததால் அவரை தினமும் நான் எனது வாகனத்தில் அழைத்து வந்தேன். இப்படித்தான் எமது மரபுக் கவிதைப் பட்டறை அன்று ஆரம்பமானது. தொடர்ந்து ஆர். என். லோகேந்திரலிங்கம், த.சிவபாலு, சின்னையா சிவநேசன் ஆகியோரின் தலைமையில் மரபுக் கவிதைப் பட்டறை சிறப்பாகவே நடைபெற்றது. இன்று மரபுக் கவிதையில் முன்னணியில் நிற்கும் பல கவிஞர்களுக்கு அன்று ஆரம்பித்து வைத்த பயிற்சிப்பட்டறை மிகவும் துணையாக இருந்தது. அனேகமாக வகுப்பு நடக்கும் போது எனக்கு அருகேதான் நண்பர் சண்முகராஜா அமர்ந்திருப்பார். மனதில் பட்டவற்றை அழகான கவிதைகளாக வடிப்பார். அப்பொழுதே அவரிடம் உள்ள திறமையைக் கண்டு அவரைப் பாராட்டினேன். அவரது கனவுகள் நினைவாகும் நாளுக்காகக் காத்திருந்தேன். இன்று அவரது கவிதை நூலான வைகறை வானம் என்ற கவிதை நூல் என் கைகளில் தவழ்கிறது. அதை வாசிக்கும்போது கவிதைக்கு இங்கேயும் ஒரு பாரதி இருக்கின்றார் என்ற எண்ணம் எனக்குள் எழுந்தது.

அந்தக் கவிதை  நூலில் இருந்து என் மனதைத் தொட்ட சில வரிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.


விழுவது மீண்டும் எழுவதற்கே என்ற கவிதையில் அவர் தனது ஆதங்கத்தை இப்படி வெளிப்படுத்துகின்றார்


ஆழ்கடற்கோளே உன்னால்
அழிந்தது குமரிக்கண்டம்
ஊழ்வினை என்றே உன்னுள்
உறைந்தது பூம்புகாரும்
சூழ்பகை கண்டு வீழா
ஈழமும் வீழ்ந்தது உன்னால்
வீழ்வதெம் விதியாகட்டும்
வீறுபெற்றெழுவோம் நாங்கள்.காலா காலமாய் இப்படி எத்தனை அழிவுகளைக் கண்ட இனம், விதி என்று சொல்லி மனம் சோர்ந்து போகாமல் மீண்டும் வீறுபெற்றெழுவோம் என்பதை கடலன்னைக்குச் சொல்வதுபோல் சொல்லப்பட வேண்டியவர்களுக்குச் சொல்லிக் காட்டுகின்றார்.


‘தாய் மொழியைத் தம் பண்பாட்டை
ஏளனமாய் நோக்கிடுவோர் இழிந்த மாக்கள்
அன்னையினைப் புறந்தள்ளி அயலான் தாயை
அரவணைத்தால் போலாகும் அன்னார் செய்கை
பொன்னாலும் புகழாலும் பொலிந்த போதும்
பொருளற்ற வாழ்வானாற் போலி வாழ்வே’தமிழன் என்ற முகத்தோடு வாழும் போலிகளை கவிதைகளாற் சாடுகின்றார். சுயநலத்திற்காக எதையும் விலைபேசும் இப்படியான போலிகளிடம் ஏமாந்து விடவேண்டாம் என்று எச்சரிக்கை செய்கின்றார்.

இசைவேந்தன் இராவணனார் ஆண்டதேசம்
இதிகாசக் காலமுன்பே எங்கள் தேசம்
அசைவின்றித் தமிழ் மன்னர் ஆட்சி செய்த
அழகு தமிழீழமே எங்கள் தேசம்சரித்திரம் தெரியாத தமிழர்களுக்கு, கூலிக்கு மாரடித்த தமிழர்களுக்கு தமிழ் மொழியின் தொன்மையை இந்தக் கவிதை வரிகள் மூலம் எடுத்துக் காட்டுகின்றார்.


‘எந்த இனம் தன் மொழியை இழிவாய் நோக்கும்
எந்தஇனம் தானழிந்த நாள் கொண்டாடும்’எமது முன்னோர்களைக் கொன்றொழித்த துயர்படிந்த நினைவு நாட்களை சமயத்தின் பெயரால் நாமே கொண்டாடுவது எவ்வளவு மூடத்தனம் என்பதை அறிவுள்ள மாந்தரே நினைவில் கொள்ளுங்கள் என்று எடுத்துச் சொல்கின்றார்.


‘வீரியம் இழந்து எங்கள்
விழுமியம்எல்லாம்
ஆரிய மாயைச் சேற்றில்
ஆழ்ந்ததாற் தொலைந்தே போனோம்’நாங்கள் எப்படித் தொலைந்து போனோம் என்பதை ‘நீதான், நீதான்’ என்று எங்கள் முதுகிலே தட்டி எங்கள் முதுகிலே குத்தியவர்களை இன்னமும் நம்பிக் கனவு காண்பவர்களுக்கு இந்த வரிகளைத் தந்திருக்கின்றார்.


சிறப்பொடு வாழ்ந்த செந்தமிழ் இனமே
சிரித்திட வாழ்ந்திடல் தகுமோ
புறப்படு தமிழா புதுமைகள் படைக்க
புதிதாய் விரியும் உன்பாதை!உறைந்துபோயிகுக்கும் தமிழ் இனமே, மனம் சோர்ந்து போகலாமா? எழுந்து வா புதுமைகள் படைக்கலாம் என்று புதிய பாதையைக் காட்டுகின்றார்.


திசைமாறி வந்தபெரும் திருடர் கூட்டம்
தேசத்தைத் தமதாக்கிக் கொண்டே எம்மை
வசைபாடி வந்தேறு குடிகள் என்றே
வாழ்வுரிமை அனைத்தையும் பறித்தார் வீழ்ந்தோம்


எதையுமே ஆவணப்படுத்துவதில் தயக்கம்காட்டும் தமிழ் இனமே, உன் பலவீனம் தெரிந்ததால்தானே நேற்று வந்தவர்கள் காலாகாலமாய் வாழ்ந்த மண்ணைவிட்டு உன்னை விரட்டி அடிக்கிறார்கள்

தலைநிமிர்ந்து மார்தட்டித் தமிழரென்றே
தன்மானமே யுயிராய்ப் போற்றி வாழ்ந்தோம்
நிலையழிந்து நிலமிழந்து நாடற் றோராய்
நிம்மதியும் இழந்தஇன மான தேனோ?


ஒன்றுபட்டால் வாழ்வுண்டு உணர்ந்தோ மானால்
ஒளிந்தழிக்கும் உட்பகைவர் அழிந்தே போவார்..


என்று தமிழினத்தைச் சிந்திக்க வைக்கின்றார். தமிழனின் முதல் எதிரி யாருமல்ல, ஒளிந்தழிக்கும் உட்பகைவர் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள் என்று  மிகவும் தெளிவாக எங்கள் சமூகத்திற்கு எடுத்துச் சொல்கின்றார்.

நன்றாய் நம் மொழி வளர்த்து மரபைக் காத்து
நல்லதமிழ்ச் சமுதாயம் அமைப்போமானால்
வென்றிடலாம் வரும் பகையை  வெட்டி வீழ்த்தி
வெறும் சொல்லாய் மாற்றிடலாம் விதியைத்தானே!


விதியில் பழியைப் போடாதீர்கள், மொழி அழிந்தால் நம் இனம் அழியும், தியாகிகளின் கனவுகள் வீணாகும் என்பதையும், மொழி வளர்த்து நல்ல தமிழ் சமுதாயம் அமைப்போமானால் வென்றிடலாம் இனிமேல் வரும் பகையை என்று கவிதைவரிகளால் விளங்க வைக்கிறார்.

பொல்லூன்றும் அகவையிலும் புலியாகும் குணங்கள்
பொங்கியெழும் படையாகி தமிழ்காக்கும் கரங்கள்
பல்லாண்டாய் உயிர்வாழும் பைந்தமிழர் முறைகள்
பண்பாட்டின் விளைநிலமே..


எப்படியான வீரம் நிறைந்த மண்ணில் தான் பிறந்தேன் என்று தான்பிறந்த மண் வாசனையை முகர்ந்து பார்க்கின்றார்.

கன்னியாம் தமிழ்காக்கக் களத்திலாடிக்
கந்தகத்துக் காற்றோடு கலந்தேபோன
எண்ணரிய மாவீரர் ஈகைகண்டே
எழுச்சியுற்ற தமிழுக்கா இழிவு சேரும்


மொழியை இனத்தை மண்ணைக் காக்கக் களமாடிய உடன் பிறப்புக்களை எண்ணிப் பார்க்கின்றார்.

வான்வெளியில் வட்டமிட்டு எச்சமிடும் வல்லூறின்
வன்சிறகுகள் ஒடிந்து வீழும்நாள் நாளைவரும்!


தீர்க்க தரிசனமாய் இவர் கூற்று நிறைவேறியபோதெல்லாம் உளம் மகிழ்ந்த, மீளாத்துயரில் ஆழ்ந்த மக்கள் ஆயிரமாயிரம்.

கந்தத் தீயுமிழும் கணைவெடிகள் காவிவந்த
காற்றும் ஒருநாள் கட்டாயம் திசை மாறும்!
மனித அவலத்தை மண்ணில் பயிரிட்டோர்
மாறிக் கதிரறுக்கும் மாற்றமொன்று நாளைவரும்!


எல்லாள மன்னன் வஞ்சனையால் கொல்லப்பட்டபோது, இனித் தமிழன் அழிந்துவிடுவான் என்றுதான் சிலர் கணக்குப் போட்டார்கள். ஆனால் அதன் பின் எத்தனையோ தமிழ் மன்னர்கள் ஆட்சிக்கு வந்து ஆண்டுவிட்டுத்தான் சென்றார்கள். எனவே வருவார்கள், கவலைப்படாதீர்கள், மாற்றங்கள் விரைவில் வரும் என்று ஆறுதல் தருகின்றார் கவிஞர்.
 
தனது இன்றைய ஆசைகளை, அந்த மண் வாசனையைக் கவிதை மூலம் வெளிக் கொண்டு வருகின்றார் ஆசிரியர்.

மீண்டும்தாய் மண்மடியிற் தவழ்ந்திடவே ஆசை
மெல்லவரும் கடற்காற்று மேனிபட ஆசை
வேண்டுமட்டும் நுங்கிளநீர் விருந்துண்ண ஆசை
வேப்பமர மீதேறி விளையாட ஆசை..


அந்த மண்ணில் பிறந்த ஒவ்வொருவருக்கும் தாய் மண்மேல் இருக்கும் ஆசைகளாகவே அவை இருக்கின்றன. நாலு பக்கமும் கடல் சூழ்ந்திருப்பதால் அருமையான கடலோரக் காற்றை மறக்கமுடியாது. கற்பக விருட்சமாம் நீண்டு நிமிர்ந்து வானம் தொடும் பனை மரங்களும்,  பாரதி குறிப்பிட்ட தோப்புக்களில் தலை நிமிர்ந்து நிற்கும் தென்னை மரங்களும் அந்த மண்ணின் இரு கண்கள் என்றே சொல்லலாம். காலாகாலமாய் அந்த மண்ணின் மக்களைத் ‘தலை நிமிர்ந்து நில்’ என்று பாடம் சொல்லிக் கொடுத்ததே இந்த மரங்கள்தான் என்றால் அது மிகையாகாது.  பனையில் இருந்து பெறும் நுங்கும், தென்னையில் இருந்து பெறும் இளநீரும், ஆகா.. அதன் சுவையைச் சொன்னால் புரியாது.

இனிவரும் காலம் இவர்களே தமிழர்
எனவொரு முகவரி காட்ட
தனித்துவம் பேணித் தமிழ்மொழி காத்து
தரணியில் தலைநிமிர்ந் திடுவோம்.


முகவரி அற்றவர்களாகத் தமிழர்கள் மாறிவிடக்கூடாது, தமிழ் மொழி காத்து தரணியில் தலை நிமிர்ந்து நிற்போம் என்பதில் தன் உணர்வை கொட்டுகின்றார். தமிழனாய்ப் பிறந்த ஒவ்வொரு தமிழனும் எதிர் பார்த்து நிற்பதும் இதற்காகத்தானே!

1 comment: