Saturday, November 3, 2012

இலங்கை வானொலி - Ceylon Radio

இலங்கை வானொலியில் ஒலிக்காத பாடல்

(குரு அரவிந்தன்)


ற்செயலாக தொலைக்காட்சியில் அந்த நிகழ்ச்சியைக் காண நேர்ந்தது. விஜே தொலைக்காட்சியின் நீயா நானா என்ற அந்த நிகழ்ச்சியில் பங்குபற்றிய ஒருவர் இலங்கை வானெலியைப் பற்றிப் புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தார். அவரைத் தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் பங்கு பற்றிய பலரும் இலங்கை வானொலியைப் பற்றியே புகழாரம் சூடிக்கொண்டிருந்தனர். அவ்வப்போது நிகழ்ச்சி அமைப்பாளர் கோபிநாத்தும் அதைப்பற்றியே புகழாரம் சூடிக்கொண்டிருந்தார். இப்படிப் புகழ்ந்தவர்கள் வேறுயாருமல்ல, அத்தனை பேரும் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் இலங்கை வானொலி நேயர்கள். அவர்கள் புகழ்ந்தது இன்றைய இலங்கை வானொலியை அல்ல, எழுபது, எண்பதுகளில் ஒலிபரப்பிய அன்றைய இலங்கை வானொலியை என்பது அவர்கள் குறிப்பிட்ட பாடல்களில் இருந்து தெரிய வந்தது. அப்பொழுது அவர்கள் மாணவர்களாக, இளம்பருவத்தில் துள்ளித்திரிந்த காலம்.  கிராமங்களிலோ அல்லது நாட்டுப் பக்கங்களிலோ தொலைக்காட்சியே எட்டிப் பார்க்காத காலமது. அப்போது வானொலி ஒன்றுதான் அவர்களின் பொழுது போக்குச்சாதனமாக இருந்ததாம்.


அந்த நாட்களில் இந்திய வானொலியில் வர்த்தகசேவை இருந்தாலும் அது சரியான முறையில் இயங்கவில்லை. அதாவது மக்களைக் கவரக்கூடியதாக அதன் சேவை முழுநேர சேவையாக அமையவில்லை. அப்படி இல்லை என்று வானொலியைத் திருப்பினாலும் கர்நாடக சங்கீதமே காதில் கேட்கும். அதனால்தான் தென்னிந்தியாவில் பலரும் முழுநேர சேவையாற்றிய திரைப்படப் பாடல்களை ஒலிபரப்பிய இலங்கை வானொலியின் நேயர்களாக மாறியிருந்தனர். இதற்கு இன்னுமொரு காரணமும் சொல்லியிருந்தனர். அதாவது அந்த நாட்களில் எல்லோரிடமும் வானொலிப் பெட்டியை வைத்திருக்கும்  வசதி இருக்கவில்லையாம். நவீன சாதனங்களான ஒலிப்பதிவுக் கருவிகளும் அதிகம் இருக்கவில்லையாம். எனவே இசை ஆர்வலர்கள் இலங்கை வானொலி ஒலிபரப்பையே அதிகம் நம்பியிருந்தார்களாம். இளம் வயதினர் பலர் பக்கத்து வீட்டிலேயோ அல்லத உணவு விடுதிகளிலேயோ இருந்து ஒலிபரப்பாகும் இலங்கை வானொலிப் பாடல்களைக் கேட்கவேண்டிய சூழ்நிலையில் இருந்தார்களாம்.


இத்தனை பேரைக் கவர்ந்திழுத்த இலங்கை வானொலி 1922ம் ஆண்டுதான்  சோதனை முறையில் முதன் முறையாக ஆரம்பிக்கப்பட்டது. 1925ம் ஆண்டு கொழும்பு வானொலி என்ற பெயரில் இயங்கினாலும் 1949ல் தான் இலங்கை வானொலி எனப் பெயர் மாற்றப்பட்டது. பின் இதே இலங்கை வானொலிதான் 1967ல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமாக மாற்றப்பட்டது. இலங்கை வானொலியின் தமிழ் வர்த்தக சேவை ஒலிபரப்பாளராக ஈடுபட்ட அனைவருமே ஒரு காலத்தில் சினிமா கதாநாயருக்கு நிகராகக் கணிக்கப்பட்டார்கள். தமது கம்பீரமான குரலால் சர்வதேசம் எங்கும் நேயர்களைத் தேடிக் கொண்டவர்கள். முகம் காட்டாத கதாநாயகர்களாக, கதாநாயகிகளாக இருந்த இவர்களை நேரிலே சந்திக்க வேண்டும் என்று நேரடியாகவே பல மைல்கள் பயணம் செய்து இலங்கை வானொலி நிலையத்திற்கு வந்தவர்கள் பலர். இலங்கை வானொலி முற்றத்து மண்ணை எடுத்துச் சென்று பாதுகாப்பாகப் பூசை அறையில் வைத்த தமிழ் நாட்டு நேயர்களும் உண்டு என்று வானொலி நடிகர் கே. எஸ். பாலச்சந்திரன் ஒருமுறை குறிப்பிட்டதும் ஞாபகம் வருகின்றது.
அந்த வகையில் நான் சிறுவனாக இருந்தபோதும் சரி, பிற்காலத்தில் அந்த மண்ணில் வாழ்ந்த காலம் வரை இலங்கை வானொலி ஒலிபரப்பாளர்களாக ஈடுபட்டிருந்த பலரின் பெயர்கள் இப்பொழுதும் நினைவில் நிற்கின்றன. இவர்களில் வர்த்தக ஒலிபரப்பின் மூத்த அறிவிப்பாளராகக் கடமையாற்றிய எஸ்.பி. மயில்வாகனன் மறக்கமுடியாதவர். இவரைவிட வீ. சுந்தரலிங்கம், ராஜகுரு சேனாபதி கனகரட்ணம், வீ.ஏ. கபூர், எஸ். புண்ணியமூர்த்தி, எஸ்.கே. பரராஜசிங்கம், சற்சொரூபவதிநாதன், கே. எஸ். ராஜா, பி.எச். அப்துல் ஹமீட், விமல் சொக்கநாதன், சரா இமானுவேல், சில்வெஸ்டர் பாலசுப்ரமணியம், ராஜேஸ்வரி சண்முகம், பி.விக்னேஸ்வரன், ஜோர்ச் சந்திரசேகரன், எஸ். நடராஜசிவம், ஜோர்க்கிம் பெர்னாண்டோ, வி.என்.மதியழகன், மயில்வாகனம் சர்வானந்தா, ஆர். சந்திரமோகன், செல்வம் பெர்ணான்டோ, எஸ் கணேஷ்வரன், எழில் வேந்தன், கமலினி செல்வராஜன், கமலா தம்பிராஜா ,ஆகியோர் இப்பொழுதும் எனது நினைவில் நிற்கின்றார்கள். அதன் பின் பல அறிவிப்பாளர்கள் இலங்கை வானொலியில் திறம்படச் சேவையாற்றினாலும் அவர்களின் பெயர்களை எல்லாம் நினைவில் வைத்திருக்க முடியவில்லை.


இலங்கை வானொலியின் தமிழ் சேவை ஒன்றில் நாடகங்கள் பல இடம் பெற்றாலும், நான் அறிந்த வகையில் பி. விக்னேஸ்வரனின் நாடகங்கள் ஒரு காலகட்டத்தில் பல நேயர்களின் பாராட்டைப் பெற்றிருந்தன. எனது ஊரவர் மட்டுமல்ல, நான் படித்த நடேஸ்வராக்கல்லூரியில் அவரும் படித்ததால் படிக்கிற காலத்திலிருந்தே நான் அவரை அறிவேன். அதேபோல வர்த்தக சேவையான தமிழ் சேவை இரண்டில் இடம் பெற்ற நாடகங்கள் சில புகழ் பெற்ற நாடகங்களாக பலர் நேயர்கள் விரும்பிக் கேட்ட நாடகங்களாக இருந்தன. சில்லையூர் செல்வராஜனின் தணியாத தாகம், வரணியூரானின் இரைதேடும் பறவைகள், ராமதாஸின் கோமாளிகளின் கும்மாளம், கே. எஸ். பாலச்சந்திரனின் கிராமத்துக் கனவுகள் போன்றவை அந்தக் காலகட்டத்தில் பலராலும் கேட்கப்பட்ட புகழ்பெற்ற வானொலி நாடகங்களாக இருந்தன.


ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பாடல்கள் பிடிக்கலாம். அந்தப் பாடலின் இசைக்காக, அதன் பாடல் வரிகளில் வெளிப்படும் கருத்திற்காக, அந்தப் பாடல் வரிகளில் வரும் சம்பவங்களோடு அவர்களுக்கும் ஏதோ வகையில் தொடர்பிருப்பதற்காக, அந்தப் பருவத்தில் அவர்களைக் கவருவதற்கு ஏதாவது காரணமிருக்கலாம். விஜே தொலைக்காட்சியில் நடந்த அந்த நிகழ்ச்சியின்போது ஒருவர் நேரத்தின் மகத்துவத்தைச் சொல்லித் தந்தது இலங்கை வானொலிதான் என்று அதற்குரிய விளக்கமும் தந்தர்ர். இன்னுமொருவர் பிறந்தநாள் இன்று பிறந்தநாள் என்று தமிழில் தொடங்கும் போதே ஒரு புத்துணர்ச்சி மனசுக்கள் ஏற்பட்டுவிடும், இப்போதெல்லாம் ஹப்பி பார்த்டே என்று ஆங்கிலத்தில்தான் தொடங்குகிறார்கள் என்று குறைப்பட்டுக் கொண்டார். இன்னுமொரு நேயர் ‘தோல்வி நிலையென நினைத்தால்’ என்ற பாடலைக் கேட்கும் போதெல்லாம் ஈழத்தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்கப் பழகிக் கொண்டதாகக் குறிப்பிட்டார். நான்கூட மாணவனாக இருந்தபோது இந்தப் பாடலைக் கேட்டிருக்கின்றேன். இந்தப் பாடலை புளட் இயக்கத்தினர் தங்கள் சிற்றலை வரிசை வானொலியில் தங்கள் நிகழ்ச்சி தொடங்கும்போது தினமும் ஒலிபரப்புவார்கள். அகிம்சை முறைப் போராட்டம் எந்தப் பலனையும் தராது தோற்றுப் போனதால், தமிழ் இளைஞர்கள் ஆயுதப் போராட்டம் நோக்கித் தங்கள் பார்வையைத் திருப்பிய காலக்கட்டம் அதுவாக இருந்தது.


இதைவிட அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் தங்களுக்குப் பிடித்தமன பாடல்களின் சில வரிகளைப் பாடியும் காட்டினார்கள். இளமைப் பருவத்தில் இசையை ரசிக்கவும் நல்ல உணர்வுகளைத் துண்டிவிடுவதற்கும் காரணமாக இந்தப் பாடல்கள் இருந்தனவாம். ஜோடிகளாக வந்திருந்த பலர் தாங்கள் காதல் திருமணம் செய்வதற்கு இலங்கை வானொலியில் ஒலிபரப்பிய சிலபாடல்கள் ஒருவகையில் தங்களுக்கு உதவியதாகக் குறிப்பிட்டனர். பழைய நினைவுகளை மீட்டபோது, அவர்கள் குறிப்பிட்ட பாடல்களின் சிலவரிகளை இங்கே தருகின்றேன். நல்ல இசையோடு கூடிய அர்த்தமுள்ள பாடல்களாக அவை இருந்ததும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். இசையில் ஆர்வம் இருந்திருந்தால், நீங்கள்கூட இப்படியான பாடல்களைக் கேட்டிருக்கலாம். உங்களுக்குக்கூட இது போன்ற சில பாடல் அனுபவங்கள் கடந்தகாலத்தில் என்றாவது ஒருநாள் ஏற்பட்டிருக்கலாம். அப்படியானால், இப்போது உங்கள் நினைவுகளையும் ஒருமுறை மீட்டிப் பாருங்கள்.
இதோ அவர்கள் குறிப்பிட்ட பாடல் வரிகளைப் பாருங்கள். கண்ணில் என்ன கார்காலம், (படம்-உன்கண்ணில் நீர் வழிந்தால். வைரமுத்துவின் பாடல் வரிகள்) நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா (படம் இதயக்கோயில். வைரமுத்துவின் பாடல் வரிகள்), அன்னக்கிளி உன்னைத் தேடுதே, ஈரமான ரோஜாவே (இளமைக்காலங்கள்), அந்தி மழை பொழிகிறது, உனக்குமட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன், ஒரு நாள் உன்னை நான் பார்த்தது, மலரே என்னென்ன கோலம், விழியிலே கலந்தது உறவிலே மலர்ந்தது, உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டது, கண்ணன் ஒரு கைக் குழந்தை, நினைவோ ஒரு பறவை, என் தாய் என்னும் கோயிலிலே, உறவென்னும் புதிய,  வண்ணப்பூ சூடவா வெண்ணிலா, இந்த மேகக் கூந்தல் கலைந்தால், காதல் ஓவியம், ஆயிரம் மலர்களே மலருங்கள், உன் நெஞ்சிலே பாரம், உறவுகள் தொடர்கதை, உன்னை நான் பார்த்தது, கோவில் மணி ஓசை கேட்டது, மாஞ்சோலைக் குயிலே, பார்வை நூறு போச்சு, மின் மினிக்கு, நான் உங்கவீட்டுப் பிள்ளை, குயிலே குயிலே கவிக்குயிலே, நாலு பக்கம் வேடர் உண்டு., சித்திரச் செவ்வானம் சிரிக்க் கண்டேனே, என் இனிய வெண்ணிலாவே, ஒரே நாள் உனைநான் நிலாவில் பார்த்தது, மீன் கொடித் தேரில் மன்மத ராஜன், வான் நிலா நிலா அல்ல, மெட்டி ஒலி காற்றோடு, புத்தம் புதுக் காளை, பட்டுக் கன்னம் தொட்டு, அந்த மானைப் பாருங்கள் அழகு, நினைவாலே சிலை செய்து உனக்காக, காத்தாடி பாவாடை காத்தாட,  எங்கும் மைதிலி..மைதிலி என்னைக் காதலி, என்னைவிட்டு ஓடிப்போக முடியுமா, நான் தேடும் செவ்வந்திப் பூவிது (தர்மபத்தினி). இது போன்ற பல பாடல்களை அந்த நாட்களில் அவர்கள் கேட்டு ரசித்தார்களாம். இன்றும் நவீன வசதிகளைப் பயன்படுத்தித் தங்களுக்கு விருப்பமான அந்தப் பாடல்களை ஒலிப்பதிவு செய்து விரும்பிய நேரங்களில் போட்டுக் கேட்பதாகவும் அவர்களில் பலர் குறிப்பிட்டனர். இலங்கை வானொலி இன்று தென்றலாக மாறிவிட்டது. தெற்கேயிருந்த வருவதால் பொருத்தமானதுதான் என்கிறார்கள் தமிழகத்து நேயர்கள்.


இலங்கை வானொலியில் ஒலிபரப்பான பழைய பாடல்களில் எனக்குப் பிடித்தமான சில பாடல்களும் உண்டு. பாவாடைதாவணியில் பார்த்த உருவமா, நான் மலரோடு தனியாக ஏன் அங்கு நின்றேன் (இருவல்லவர்கள்), துயிலாத பெண் ஒன்று கண்டேன்.., காதல் நிலவே கண்மணிராதா.., நெஞ்சம் அலை மோதவே கண்ணும் குளமாகவே கொஞ்சும் ராதையைப் பிரிந்தே போகிறான்.. கண்ணன் ராதையைப் பிரிந்தே போகிறான். ( இந்தப் பாடல் எந்தப் படத்தில் என்று தெரியவில்லை. யாராவது தெரிந்தால் தயவு செய்து அறியத்தரவும்.) துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா? இசைக்காகவோ அல்லது அதில் உள்ள கருத்திற்காகவோ எனக்குப் பிடித்த பாடல் வரிசையில் இந்தப் பாடல்களும் அடங்கும்.


இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்படாத பல பாடல்களும் உண்டு. நான் குறிப்பிடும் இந்தப் பாடல் தடைசெய்யப்பட்டதாகும். இந்தப் பாடல் என்றைக்குமே இலங்கை வானொலியில் ஒலிபரப்பப் போவதில்லை. என்னதான் உங்கள் மனம் கல்லாக இருந்தாலும், ‘தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தணப் பேழைகளே’ என்ற இந்தப் பாடலை ஒரு கணம் கண்களை மூடி மௌனமாகக் கேட்டால் கரையாத கல்லையும் கரைய வைக்கும் யதார்த்தத்தைக் கொண்டதாகும். இந்தப் பாடல் ஒவ்வொரு தமிழனின் இரத்தத்திலும் கலந்து, உயிரில் உறைந்திருக்கிறது என்பதை மறுக்கவோ, மறைக்கவோ  முடியாது.

No comments:

Post a Comment