Saturday, November 3, 2012

நாதஸ்வரம் - Natheswaram

குழல் இனிது…
குரு அரவிந்தன்


குழல் இனிது யாழ் இனிது என்ப தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர்’ குழந்தையின் இனிய மழலைச் சொற்களுக்கு அடுத்ததாக இனிமையாக இருப்பது குழலும் யாழும்தான் என்று திருவள்ளுவரே குறிப்பிடுகின்றார். குழல் என்ற சொல் யாழ்ப்பாண சொல்வழக்கில் இருக்கிறது. இது நாதஸ்வரம் என்ற இசைக்கருவியைக் குறிப்பதாகும். இதை நாகஸ்வரம் என்றும் அழைப்பர். தமிழர்களின் இசைக் கருவிகளில் யாழும் குழலும் முக்கியமானவை. புல்லாங்குழலையும் சங்க இலக்கியத்தில் குழல் என்று குறிப்பிடுவர். நான் இங்கே குழல் என்று சொல்லப்படுகின்ற நாதஸ்வர இசைக் கருவியைப் பற்றித்தான் குறிப்பிட வருகின்றேன்.


சினிமா ரசிகர்களுக்கு சிவாஜி கணேசன், பத்மினி நடித்த தில்லானா மோகனாம்பாள் (1968) என்ற திரைப்படம் ஞாபகம் இருக்கலாம். அந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் அந்தப் படத்தில் நாதஸ்வரம் வாசிப்பவராக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மிகவும் பிரமாதமாக நடித்ததுதான் என்பதை மறக்கமுடியாது. அவர் ஒரு உண்மையான நாதஸ்வரக் கலைஞன்போல மூச்சடக்கி வாசிப்பதையும், ஒரு கலைஞனுக்குரிய கர்வம் அவர் கண்களில் பளிச்சிடுவதையும் ரசிகர்களால் உணரமுடிந்தது. அவரோடு தவில் கலைஞராக டி.எஸ். பாலையா நடித்திருந்தார். கொத்தமங்கலம் சுப்புவின் கதையைத்தான் திரைப்படமாக்கியிருந்தார்கள். நலம்தானா.. நலம்தானா.. உடலும் உள்ளமும் நலந்தானா..? என்ற அந்தப்பாடலுக்கு உண்மையிலே நாதஸ்வர இசை கொடுத்தவர்கள் பிரபல நாதஸ்வர வித்துவான்களான மதுரை சேதுராமன் பொன்னுசாமி சகோதரர்களாவார்.  பாடலைப் பாடியவர் பின்னணிப்பாடகி சுசீலா ஆவார். இதனால் சேதுராமன் பொன்னுசாமி என்ற நாதஸ்வரக் கலைஞர்களும் தில்லானா மோகனாம்பாள் என்ற திரைப்படம் மூலம் புகழ் பெற்றிருந்தனர்.

அதற்குப் பலவருடங்களுக்கு முன் ஜெமினி கணேசன் நடித்த முதன் முதலாக ‘டெக்னிக்’ கலரில் வெளிவந்த கொஞ்சும் சலங்கை படத்திலும் (1962) சிங்காரவேலனே தேவா.. என்ற பாடல் பிரபலமாகியிருந்தது. இந்தப் பாடலுக்கு அட்சரசுத்தி பிசகாமல் நாதஸ்வரம் வாசித்தவர் காருக்குறுச்சி அருணாசலம் ஆவார். ஆபேரி ராகத்தில் அமைந்திருந்த அந்தப் பாடலைப் பாடியவர் பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி ஆவார். பின்னணிப்பாடகி பீ. லீலாவிற்குக் கிடைத்த அந்த வாய்ப்பை அவரது சிபார்சின் பேரில் பாடகி ஜானகி பெற்றுக் கொண்டார். இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் எஸ். எம். சுப்பையா. மிகவும் பிரபலமான இந்தப் பாடல் பதிவானபோது, நாதஸ்வரம் வாசித்த காருக்குறுச்சி அருணாசலமோ அல்லது பாடலைப்பாடிய பாடகி ஜானகியோ ஒருவரை ஒருவர் சந்தித்ததேயில்லையாம். இதுபோல சினிமாவில் நாதஸ்வரம் புகுந்ததால் கண்டும் காணாமல் இருந்த நாதஸ்வர இசை சினிமா மூலம் புகழ் பெறத்தொடங்கியது. நாதஸ்வரம் என்ற பெயரில் ஜேடி ஜெர்ரி என்ற இயக்குநர்களின் ஆக்கத்தில் ஒரு ஆவணப்படமும் சமீபத்தில் தமிழில் வெளிவந்திருந்தது.


இசை என்பது மொழிகளைக்கடந்த ஒரு தெய்வீக உணர்வு, தமிழ் காலாச்சாரத்தில் தனித்துவம் மிக்க இசைக்கருவியாக நாதஸ்வரமும், தவிலும் வகிக்கின்ற பங்கு மிகவும் முக்கியமானது. நாதஸ்வர இசையுடன்தான் அனேகமான தமிழர்களின் முக்கியமான மங்கல, மகிழ்சிகரமான நிகழ்வுகள் நிகழ்கின்றன. என்ன காரணமோ தெரியவில்லை, எந்த ஒரு விடையத்தையும் ஆவணப்படுத்துவதில் தமிழர்கள் தொன்றுதொட்டு அசட்டையாகவே இருப்பதால், தமிழர்களின் இசைக் கருவியான நாதஸ்வரம் பற்றிய முழுமையான தகவல்களையும் அறிய முடியாமல் இருக்கின்றது. தொன்றுதொட்டு நாதஸ்வர இசைக்கருவி பழக்கத்தில் இருந்தாலும், 17ம் நூற்றாண்டில்தான் பாதசங்கிரகம் என்ற இசைநூல் குறிப்பில் இவ்விசைக்கருவி பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. சிலப்பதிகாரத்தில் வங்கியம் என்று குறிக்கப்படும் காற்று இசைக்கருவி இதுவாக இருக்கலாம் என்றும் கருத இடமுண்டு. நாதஸ்வரத்தைக் குழல் என்றும் தவிலை மேளம் என்றும் யாழ்ப்பாணத்தில் சொல்வார்கள். கோயில் திருவிழாக்கள், திருமண வைபவங்கள், புதுமனை புகுதல், வரவேற்பு உபசாரங்கள், கலைநிகழ்ச்சிகள், வானெலி, தொலைக்காட்சி நிகழ்வுகள்  என்று தமிழரின் வாழ்வோடு தொன்று தொட்டுப் பின்னிப் பிணைந்திருப்பது நாதஸ்வரமும் தவிலும் என்றால் மிகையாகாது. நாதஸ்வரமும் தவிலும்போல வேறு எந்த இசைக்கருவியும் இரண்டறக் கலந்ததில்லை என்று இசையார்வலர் குறிப்பிடுவர். நாதஸ்வரத்தில் இரண்டு வகையுண்டு. திமிரி நாதஸ்வரம் என்பது உயரம் குறைந்தது. உச்ச ஸ்தாயியில் வாசிக்க உகந்தது. இதைத் திமிரிநாயனம் என்றும் அழைப்பர். பாரி நாதஸ்வரம் என்பது உயரம் கூடியது மட்டுமல்ல, இனிமையாகவும், மென்மையாகவும் வாசிக்க்கூடியது. நாதஸ்வரத்திற்குச் சுருதி தருவது ஒத்து என்று அழைக்கப்படும் நாதஸ்வரம் போன்ற இன்னுமொரு கருவியாகும். இதிலிருந்து ஆதார சுரதி மட்டும்தான் வெளிவரும். இதைச் யாழ்ப்பாணத்தில் சிறுவர்கள் ஊமைக்குழல் என்று வேடிக்கையாக அழைப்பார்கள். இப்பொழுதெல்லாம் கச்சேரிகளில் இதற்குப் பதிலாகச் சுருதிப் பெட்டிகளைப் பாவிக்கின்றார்கள். கும்பகோணத்தில் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் நாதஸ்வரக் கலைஞர்கள் வாசிக்கக்கூடிய கருங்கல்லால் செய்யப்பட்ட ஒரு நாதஸ்வரம் இருப்பதாகத் தெரியவருகின்றது. அதுபோல, ஆழ்வார்திருநகரி, திருவாரூர் ஆகிய இடங்களிலும் கருங்கல் நாதஸ்வரம் இருப்பதாகத் தெரிகின்றது.


இசைப் பிரியர்களான யாழ்ப்பாண மக்களிடையே மிகவும் பிரபலமாக இருந்தது நாதஸ்வரமும், தவிலும் என்றால் அது மிகையாகாது. நாதஸ்வரத்திற்குத் தாளக்கருவியாகத் தவிலைப் பாவிப்பர். இது ஒரு தோற்கருவியாகும். இதைப் பெரிய மேளம் என்று யாழ்ப்பாணத்தில் அழைப்பர். நடன மாதர்கள் ஆடும்போது பாவிக்கும் மேளம் சிறிதாக இருப்பதால் அதைச் சின்னமேளம் என்று அழைப்பர். உள்ளுர் கோயில்களில் வாசிப்பவர்களைக் கோயில் மேளம் என்பார்கள். திருவிழாக்காலங்களில் சுவாமி வெளியே வரும்போது இவர்கள் மல்லாரி வாசிப்பார்கள். வீதிவலம் வரும்போது ராகஆலாபனை வாசிப்பார்கள். சிறுவர்களான எங்களுக்கு சுவாமி வீதிவலம் வரும்போது, எப்போ வடக்குவீதிக்கு சுவாமி வரும் என்று காத்திருப்போம். சுவாமி வடக்கு வீதிக்கு வந்ததும் இவர்கள் வாசிக்கும் பாடல்கள் பிரமாதமாக இருக்கும். அந்த நாட்களில் பாரதிபாடல்கள், புதிய, பழைய சினிமாப்பாடல்கள்தான் எங்கள் விருப்பமாக, செவிக்கு உணவாக இருக்கும். அவர்கள் நின்ற நிலையில் வீதியில் நின்று வாசிக்கும்போது, தூக்கத்தை மறந்து நாங்களும் தாளம் போடுவோம். நாதஸ்வரக் கலைஞர்கள் உள்ளுர் வாசிகளாகையால், நேயர் விருப்பம்போல முன்கூட்டியே நாங்கள் விரும்பிய பாடல்களை இவர்களிடம் சொல்லி வைப்பதுமுண்டு.


நாதஸ்வர, தவில் கலைஞர்கள் எங்கிருந்தாலும் முக்கியமாகப் பாராட்டப்பட வேண்டியவர்கள். நான் சிறுவனாக இருந்தபோது யாழ்ப்பாணத்தில் மிகவும் பிரபலமான சில நாதஸ்வர, தவில் கலைஞர்கள் இருந்தார்கள். இவர்களில் அளவெட்டி என்.கே. பத்மநாதன், கோண்டாவில் பாலகிருஷ்ணன், பஞ்சாபிகேசன், இணுவில் தட்சணாமூர்த்தி, என்.ஆர். சின்னராசா, குமரகுரு, கைதடி பழனி, புண்ணியமூர்த்தி, கணேசபிள்ளை ஆகிய கலைஞர்களை இப்பொழுதும் எனக்கு ஞாபகம் இருக்கின்றது. இவர்கள் எந்தத் திருவிழாவிற்குச் சென்றாலும் பெரும் கூட்டம் அவர்களுக்காகக் காத்திருக்கும். இவர்களில் என்.கே. பத்மநாதன், என்.ஆர். கோவிந்தசாமி, பாலகிருஷ்ணன், பஞ்சாபிகேசன், கானமூர்த்தி – பஞ்சமூர்த்தி, சிதம்பரநாதன், சிவகுருநாதன், சண்முகநாதன், கேதீஸ்வரன், எம் பி. நாகேந்திரன், பல்லவி இராஜதுரை ஆகியோர் நாதஸ்வரக் கலைஞர்களாகவும், தட்சணாமூர்த்தி, சின்னராசா, குமரகுரு, பழனிவேல், புண்ணியமூர்த்தி, கணேசபிள்ளை, சின்னப்பழனி ஆகியோர் தவில் கலைஞர்களாகவும் இருந்தனர். இவர்களில் தட்சணாமூர்த்தி, சின்னராசா ஆகிய இருவரின் சிறப்பு என்னவென்றால் தனித்தவில் வித்துவான்களாக இவர்கள் இருந்தார்கள். திருவிழாக் காலங்களில் இவர்களின் தனித்தவில் கச்சேரிகளைக் கேட்பதற்கென்றே பலர் பல மைல்களுக்கப்பால் இருந்து வந்து விடிய விடியக் காத்திருந்து கச்சேரியை ரசிப்பார்கள். தட்சணாமூர்த்தி சிறிய உருவம் கொண்டவராகவும், சின்னராசா பெரிய உருவம் கொண்டவராகவும் இருந்தாலும் ஏட்டிக்குப் போட்டியாக அவர்கள் தவில் வாசிக்கும்போது மெய் சிலிர்க்கும். தென்னிந்தியக் கலைஞர்களோடு இணைந்து வாசித்த பெருமை இவர்களுக்கு உண்டு. இசையார்வம் காரணமாக அந்தநாளில் மிகவும் பிரபலமாக இருந்த தென்னிந்திய நாதஸ்வரக் கலைஞர்களான ராஜரட்ணம்பிள்ளையையும், குழிக்கரை பிச்சையப்பாபிள்ளையையும் முதன் முதலாக ஒரே மேடையில் அமரவைத்து நாதஸ்வர நிகழ்ச்சி நடத்திய பெருமை கரவெட்டி மக்களையே சாரும். அந்த நாட்களில் சினிமா நடிகர்களுக்குக் கொடுப்பது போன்ற மதிப்பை யாழ்ப்பாண ரசிகர்கள் நாதஸ்வரக் கலைஞர்களுக்கும் கொடுத்தார்கள். என் நினைவில் நிற்பவர்களை மட்டுமே நான் இங்கே குறிப்பிடுகின்றேன். இவர்களைப்போல சிறந்த பல நாதஸ்வர, தவில் கலைஞர்கள் இலங்கையில் அன்று இருந்தார்கள், இன்றும் இருக்கிறார்கள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.


தமிழ் நாட்டில புகழ் பெற்ற நாதஸ்வரக் கலைஞர்களாக திருவாடுதுறை ராஜரட்ணம் பிள்ளை, காருக்குறுச்சி அருணாச்சலம், திருமெய்ஞ்ஞானம் நடராஜசுந்தரம்பிள்ளை, திருவீழிமிழலை சகோதரர்கள், வேதாரண்யம் வேதமூர்த்தி, நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன், சேக் சின்ன மௌலானா, குழிக்கரை பிச்சையப்பாபிள்ளை, திருவெண்காடு சுப்ரமணியபிள்ளை, நல்லடை ராதாகிஷ்ணன், வல்லம் கிஷ்ணன், சாயாவனம் கனகசபாபதிப்பிள்ளை போன்றவர்கள் திகழ்ந்தார்கள். தவில் வித்துவான்களாக நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம், நாச்சியார்கோயில் ராகவப்பிள்ளை, கும்பகோணம் தங்கவேலுப்பிள்ளை, வலங்கைமான் சண்முகசுந்தரம்,  சண்முகவடிவேலு, வேணுகோபால், திருவிடை மருதூர் மாலி, வளையாப்பட்டி சுப்ரமணியம், ஏ.கே. பழனிவேல், திருவாளப்புத்தூர் கலியமூர்த்தி, சேங்காலிபுரம் பக்கிரிசாமி போன்றோரைக் குறிப்பிடலாம். பெண்களும் நாதஸ்வரம் வாசிப்பதில் குறைந்தவர்கள் அல்ல என்பதற்குச் சிறந்த எடுத்துக் காட்டாக மதுரை பொன்னுத்தாயம்மாள், சுபாணி போன்றவர்கள் திகழ்கிறார்கள். தோடி ராகத்தில் புகழ்பெற்ற நாதஸ்வரக் கலைஞரான ரி.என். ராஜரட்ணம் பிள்ளைக்குத் தபால்தலை வெளியிட்டு அவரைக் கௌரவித்திருக்கின்றார்கள் ரசிகர்கள் என்பது பெருமைக்குரியதே.


தற்சமயம் பாவனையில் இருக்கும் நாதஸ்வரம் திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளை அவர்களால் இரண்டு கட்டை, இரண்டரைக்கட்டை சுதியில் புதிய வடிவத்தோடு அமைக்கப்பட்டது. இதற்கான மரத்தை ஆச்சா என்று சொல்லப்படுகின்ற மரத்தில் இருந்து எடுக்கிறார்கள். இடிந்துபோன மிகப் பழைய வீடுகளில் உள்ள அனேகமான தூண்கள் இந்த மரத்தால் செய்யப்பட்டிருப்பதால், அவற்றைத் தேடி எடுத்து நீண்ட மரத்துண்டுகளாக வெட்டுகின்றார்கள். பின் உளியால் உருண்டை வடிவமாக்குகிறார்கள். அதன்பின் பிரமாஸ்திரம் என்று சொல்லப்படுகின்ற துளையிடும் கருவி மூலம் துளையிடுகின்றனர். அதன்பின் ஒவ்வொரு அங்குல இடைவெளி விட்டு ஏழு துவாரங்கள் போடுகின்றார்கள். வாயை வைத்து ஊதும்போது இந்தத் துவாரங்கள் வழியாகத்தான் சரிகமபதநி என்ற சப்தஸ்வரங்கள் பிறக்கின்றன. நாதஸ்வரத்தின் நீளமான பகுதியை உளவு என்றும் விரிந்து இருக்கும் கீழ்ப்பகுதியை அணசு என்றும் அழைப்பர். வாயிலே வைத்து ஊதும் சாதனத்தை சீவாளி என்றழைப்பர். ஆற்றங்கரையில் இருக்கும் நாணல் புற்களில் இருந்து இதைத் தயாரிக்கின்றார்கள். இதை நறுக்கு அல்லது நறுக்குத்தட்டை என்றும் சொல்வர். செப்புத்தகட்டைச் சிறிதாக வெட்டி உருளையாக்கி அதில் நறுக்குத்தட்டைச் செருகி நூலினால் கொண்டை கட்டுவார்கள். அதன் பின்தான் நாதஸ்வரம் என்ற கருவி முழுமைபெறும். கும்பகோணத்திற்கு அருகே உள்ள நரசிங்கம்பேட்டையில்தான் அதிகமான நாதஸ்வரம் தயாரிக்கப்படுகின்றது. தமிழ் நாட்டில் இருந்து எமது கலை பண்பாட்டுச் சின்னங்களைக் கொண்டு வருவது தடைப்பட்டபோது, பாரி நாதஸ்வரத்தை வன்னியிலே கிடைத்த வளங்களைக் கொண்டு புதுவை ரட்ணதுரையின் மேற்பார்வையில் உருவாக்கியதும் இங்கே குறிப்பிடத் தக்கது.


ஊரிலே ஊரடங்குச் சட்டம், உள்நாட்டு நிலைமை காரணமாகக் கோயில்கள் எல்லாம் கவனிப்பாரற்றுத் திருவிழாக்கள் நிறுத்தப்பட்டதாலும், மேளதாளத்தோடு பகிரங்கமாக எந்த ஒரு நிகழ்ச்சியும் நடத்த முடியாததாலும் நாதஸ்வர இசைக்கலையில் ஒருவித தேக்கம் ஏற்பட்டிருக்கின்றது. இதைவிட தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக நாதஸ்வர இசை பதிவு செய்யப்பட்டதால் பல நிகழ்ச்சிகளில் பதிவு செய்யப்பட்ட நாதஸ்வர இசைத் தட்டுக்களே மங்கல இசைக்காகப் பாவிக்கப்படுகின்றன. இதனால் நாதஸ்வரக்; கலைஞர்களுக்குப் போதிய வருமானம் கடந்த காலங்களில் கிடைக்கவில்லை. இதன் காரணமாக ஆர்வமுள்ள அடுத்த தலைமுறையினர் கூட வேறு வழியின்றி வேறு தொழில் தேடிச் செல்லவேண்டிய நிர்ப்பந்தம் இன்று இலங்கையில் ஏற்பட்டிருக்கின்றது. எனவே தமிழர்களாகிய நாங்கள் மங்கலம் ஒலிக்கும் நாதஸ்வரக்கலை தொடரவேண்டுமானால், ஆர்வமுள்ள நாதஸ்வரக் கலைஞர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்கவேண்டும் என்பதே என்போன்ற இசை ஆர்வலர்களின் விருப்பமாகும்.

No comments:

Post a Comment