Friday, January 25, 2013

Vishwaroopam - விஸ்வரூபம்

விஸ்வரூபம்

படவிமர்சனம்:கமலின் படம் என்றால் நிறைய எதிர் பார்ப்புக்கள் இருக்கத்தான் செய்யும். அப்படி ஒரு எதிர்பார்ப்போடுதான் இந்தப் படம் வெளிவந்திருக்கிறது. தொடக்கத்திலேயே பலவிதமான தடைகள் இந்தப் படத்திற்கு ஏற்பட்டன. படமாளிகையின் முன்னால் நின்று இந்தப் படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று ஒரு சாரார் போராட்டம் நடத்தியதால், இந்தப் படத்தைக் கட்டாயம் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் பலருக்கு ஏற்பட்டது. இதுகூட ஒரு வகையாக வியாபாரத் தந்திரம் என்றே குறிப்பிட வேண்டும். திருட்டு டீவிடியில் பார்க்க இருந்தவர்கள்கூடத் திரை அரங்குகளுக்குச் சென்று பார்க்கவைத்த படம் இது.முதல் காட்சியைத் தொடர்ந்து தற்காலிகமாக இந்தப் படம் கர்நாடகாவில் தடை செய்யப்பட்டிருக்கிறது. கேரளாவில் சுமார் 80 திரையரங்குகளில் இந்தப் படம் ஓடியது. ஆனாலும் ஒரு சாராரின் வேண்டுகோளுக்கு இணங்க தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டது.
இலங்கையிலும் தற்காலிகமாக விஸ்வரூபத்திற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.கமல்ஹாசன் எழுதி, இயக்கி, தயாரித்துள்ள படம் விஸ்வரூபம். சங்கர் எசான் லாய் என்பவர் இசையமைக்கிறார். சனுஜான் வர்கீஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பூஜா குமார் நாயகியாக அறிமுகமாகும் இந்தப் படத்தில் நாசர், ஆ‌ண்ட்‌ரியா, இஷா ஷெர்வானி ஆகியோரும் நடிக்கின்றனர்.படத்தை ராஜ்கமல் நிறுவனமும் பிவிபி சினிமாவும் இணைந்து தயாரித்துள்ளனர்.

இனங்களுக்கிடையிலான ஒற்றுமைக்குப் பாதிப்பு ஏற்படலாம் என்று கருதியே விஸ்வரூபம் இரண்டு வாரங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கின்றது.

Golden Globe Awards - 2013 - கோல்டன் குளோப் விருது

கோல்டன் குளோப் விருது -2013

(குரு அரவிந்தன்)

அமெரிக்க திரைப்படத்துறையின் 70வது கோல்டன் குளோப் விருதுக்கான விழா சென்றவாரம் ஹலிவூட்டில் நடைபெற்றது. இந்தவிழாவில் திரைப்பட, தொலைக்காட்சிப் படத்துறைக்கான விருதுகள் வழங்கப்பட்டன. மொத்தமாக 25 விருதுகள் கொடுக்கப்பட்டன. இந்த விழாவில் ஆர்கோ என்ற திரைப்படம் சிறந்த படமாகத் தெரிவு செய்யப்பட்டது. பென் அபிலீக்கின் நெறியாள்கையில் 2012ல் இப்படம் வெளிவந்தது. இப்படத்தின் சிறந்த நெறியாள்கைக்காகவும் பென் அபிலீக் கோல்டன் குளோபல் விருதைத் தட்டிக்கொண்டார். லிங்கன், லைவ் ஒவ் பை, சீரோ டார்க் தேர்ட்டி, டிஜெஅன்கோ அண்செயின், போன்ற சிறந்த படங்களும் இதற்காகச் சிபார்சு செய்யப்பட்டிருந்தன.இந்த விழா பற்றிய நிகழ்ச்சிகள் அமெரிக்க தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்ப்பட்டன.
இசை அல்லது நகைச்சுவைக்கான படப்பிரிவில் ‘லெஸ்மிசறபிள்’ என்ற படம் மூன்று விருதுகளையும், ஆர்கோ, டிஜேஅன்கோ அண்செயின் என்ற படமும் தலா இரண்டு விருதுகளையும் தட்டிக் கொண்டன.

தொலைக்காட்சிப் பிரிவுக்கான படங்களில் கேம் சேஞ்ச், ஹோம்லான்ட் ஆகிய படங்கள் தலா மூன்று விருதுகளையும், கேள்ஸ் என்ற படம் இரண்டு விருதுகளையும் பெற்றுக் கொண்டன.


இந்த விழாவில் சிறந்த நடிகருக்கான 70வது கோல்டன் குளோபல் விருது லிங்கன் படத்தில் நடித்த டானியல் டேக்குக் கிடைத்திருக்கிறது. 


இப்படத்தில் ஆபிரகாம் லிங்கனாக 55 வயதான இவர் மிகவும் சிறப்பாக நடித்திருந்தார். லண்டன் பிரிதானியாவைச் சேர்ந்த இவர் ஏற்கனவே 1989ம் ஆண்டு மை லெப்ட் பூட் என்ற படத்திற்கும்,  2007 ஆண்டு தெய வில்பி பிளட் என்ற படத்திற்கும் சிறந்த நடிப்பிற்காக கோல்டன் குளோபல் விருதைப் பெற்றவர். இந்த இரண்டு படங்களில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதும் இவருக்கு ஏற்கனவே கிடைத்திருந்தன. பெப்ரவரி மாதம் 24ம் திகதி நடக்கவிருக்கும் ஆஸ்கார் விருதுக்காகவும் இவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.


நடிகை ஜெசிகா சஸ்ரெயினுக்குக் சிறந்த நடிகைக்கான 70வது கோல்டன் குளோபல் விருது கிடைத்திருக்கிறது.  சீரோ டாக் தேட்டி படத்தில் இவரது சிறந்த நடிப்புக்காக சிறந்த நடிகையாக தெரிவு செய்யப்பட்டார். 35 வயதான இவர் கலிபோனியாவைச் சேர்ந்தவர். சென்ற வருடம் த ஹெல்ப் என்ற படத்தில் துணை நடிகைப்பாத்திரம் ஏற்று நடித்தற்காக ஆஸ்கார் விருதுக்கும் கோல்டன் குளோபல் விருதுக்கும் சிபார்சு செய்யப்பட்டிருந்தார். புகழ்பெற்ற ரைம் சஞ்சிகை செல்வாக்குள்ள 100 மனிதரில் ஒருவராக இவரைத் தெரிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சிறந்த இயக்குனராக ஆர்கோ படத்தின் இயக்குனர் பென் அபிலீக் தெரிவு செய்யப்பட்டார்


சிறந்த திரைக்கதை வசனத்திற்காக விருதை கியூன்ரின் ரறான்ரினோ பெற்றுக் கொண்டார்.
இசை அல்லது நகைச்சுவைக்கான படமாக லெஸ் மிசறபிள் என்ற படம் சிறந்த படமாகத் தெரிவானது.
இசை அல்லது நகைச்சுவைக்காக கியூ ஜாக்மென் சிறந்த நடிகராகத் தெரிவு செய்யப்பட்டார்.
இசை அல்லது நகைச்சுவைக்காக ஜெனிபர் ஜோன்சன் சிறந்த நடிகையாகத் தெரிவு செய்யப்பட்டார்.


சிறந்த துணை நடிகராக கிறிஸ்ரோப் வால்ட் தெரிவு செய்யப்பட்டார்
சிறந்த துணை நடிகையாக அனி ஹத்வே தெரிவு செய்யப்பட்டார்.
செயற்கை உயிரூட்டும் படங்களுக்கான விருது பிறேவ் என்ற படத்திற்குக் கிடைத்திருக்கிறது.


சிறந்த பிறமொழிப்படங்களுக்கான விருது ஆமர் என்ற படத்திற்குக் கிடைத்திருக்கிறது.
சிறந்த பாடலுக்கான விருது ஸ்கைபோல் என்ற படத்திற்குக் கிடைத்திருக்கிறது.


சிறந்த தொலைக்காட்சிப் படமாக ஹோம்லான்ட் தெரிவு செய்யப்பட்டிருக்கிறது.
சிறந்த தொலைக்காட்சி நடிகையாக கிளெயர் டெனிஸ் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.
சிறந்த தொலைக்காட்சி நடிகராக டாமின் லூவிஸ் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.
சிறந்த தொலைக்காட்சி நகைச்சுவை படமாக கேள்ஸ் தெரிவு செய்யப்பட்டிருக்கிறது.
சிறந்த தொலைக்காட்சி நகைச்சுவை நடிகையாக லீனா டன்ஹம் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.
சிறந்த தொலைக்காட்சி நகைச்சுவை நடிகராக டொன் சியோடல் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.
சிறந்த தொலைக்காட்சிக் குறுந்தொடராக கேம் சேஞ்ச் தெரிவு செய்யப்பட்டிருக்கிறது.

சிறந்த வாழ்நாள் சாதனையாளருக்கான 70வது கோல்டன் குளோபல் விருது ஜோடி பொஸ்ரருக்குக் கிடைத்திருக்கிறது. வாழ்நாள் சாதனையாளருக்கான கோல்டன் குளோல் சிசில் பி டிமிலி விருதை (2013) இம்முறை லொஸ்சேஞ்சலில் பிறந்த 50 வயதான (19-11-1962) சிறந்த இயக்குனரும் தயாரிப்பாளருமான ஜோடி பொஸ்ரர் பெற்றிருக்கின்றார்.

சிறந்த மதிப்பெண்களைப் பெற்ற இசைக்காக மைகேல்டானாவிற்கு லைவ் ஒவ் பை என்ற படத்திற்குக் கிடைத்திருக்கிறது. இந்தப் படத்தில்தான் பம்பே ஜெயஸ்ரீ பாடிய கண்ணே கண்மணியே என்ற தமிழ் தாலாட்டுப் பாடல் இடம்பெற்றிருந்தது. இந்தப் படத்தின் கதை இந்தியாவில் உள்ள பிரஞ்சுக் காலனியாக இருந்த பாண்டிச்சேரியில் நடக்கும் ஒரு சம்பவத்தைக் கருப்பொருளாகக் கொண்டது. இப்படத்தில் இடையிடையே தமிழ் வார்த்தைகள் இடம் பெறுகின்றன. ஆஸ்கார் விருதுக்காகவும் இப்படம் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. பம்பே ஜெயஸ்ரீயின் இப்படலுக்கு விருது கிடைத்தால் ஆஸ்கார் விருது கிடைத்த முதலாவது தமிழ்ப்பாடல் என்ற பெருமையை இப்பாடல் தட்டிக் கொள்ளும். இந்தப் பாடலுக்கு மைக்கேல் டானா என்ற கனடியர் இசை அமைத்திருக்கின்றார். ஏற்கனவே ஏ.ஆர். ரகுமானுகக்கு 81வது ஆண்டு விழாவில் ஸிலம்டோக் மில்லியனார் என்ற படத்திற்கு சிறந்த இசைக்கான ஆஸ்கார் விருது கிடைத்தபோது அவருடன் இணைந்து ஆங்கிலத்தில் பாடிய ஈழத்தமிழ்ப் பாடகியான மயாவிற்கும் அந்த ஆங்கிலப் பாடல் பெருமை சேர்த்தது என்பது சினிமா ரசிகர்களுக்கு ஞாபகம் இருக்கலாம்.


2013 பெப்ரவரி மாதம் 24ம் திகதி நடக்கவிருக்கும் ஆஸ்கார் அகடமி விருதுக்காகப் கோல்டன் குளோபல் விருதுபெற்ற பல படங்களும் பல நடிகர் நடிகைகளின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறன. யார்யாருக்கு அதிஸ்டம் கிடைக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Thursday, January 24, 2013

Lincoln - லிங்கன்

லிங்கன் - Lincoln

படவிமர்சனம்:

Movie Review:

 

(Kuru Aravinthan)

OSCAR nominated Film.
இப்படத்திற்கு இம்முறை சிறந்த நடிகருக்கான கோல்டன் குளோபல் விருது கிடைத்திருக்கிறது.

Daniel Day-Lewis (Abraham Lincoln)


டானியல் டே லூவிஸ் லிங்கன் படத்தில் நடிப்புக்காக சிறந்த நடிகராகத் தெரிவு செய்யப்பட்டார். இப்படத்தில் ஆபிரகாம் லிங்கனாக 55 வயதான (29-04-1957) இவர் மிகவும் சிறப்பாக நடித்திருந்தார். லண்டன் பிரிதானியாவைச் சேர்ந்த இவர் ஏற்கனவே 1989ம் ஆண்டு மை லெப்ட் பூட் என்ற படத்திற்கும்,  2007 ஆண்டு தெய வில்பி பிளட் என்ற படத்திற்கும் சிறந்த நடிப்பிற்காக கோல்டன் குளோபல் விருதைப் பெற்றவர். இந்த இரண்டு படங்களில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதும் இவருக்குக் கிடைத்திருந்தன.

Tommy Lee Jones (Thaddeus Stevens)

இப் படத்தில் நடித்த ரொமி லீ ஜோன்சின் நடிப்பும் பாராட்டக் கூடியதாக இருந்தது. சிறந்த முறையில் கமரா கையாளப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.


சினிமா ரசிகர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு படம். ஆப்ரகாம் லிங்கனை நாங்கள் நேரே பார்க்காவிட்டாலும் இந்தப் பாத்திரத்தின் மூலம் அவரைப்பற்றிய கற்பனையை வளர்த்துக் கொள்ள முடிகின்றது. இரண்டரை மணி நேரம் நகர்ந்ததே தெரியாமல் படத்தை ரசிக்க முடிகின்றது.

 இதோ லிங்கனைப் பறிறிய ஒரு கதை

அமெரிக்காவில், ஒரு தேவாலயத்தில், பாதிரியார் ஒருவர் அனைவரும் சொர்க்கம் செல்வதற்காக தினமும் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கி, நீண்ட உரையாற்றினார். அந்த உரை முடிந்தவுடன், “யாரெல்லாம் சொர்க்கம் செல்ல விரும்புகிறீர்கள்?” என்று கேட்டார். அனைவரும் கையை உயர்த்தினர். ஆனால் ஒரு சிறுவன் மட்டும் உயர்த்தவில்லை.
உடனே அந்தப் பாதிரியார், அந்தச் சிறுவனிடம், “நீ சொர்க்கம் செல்ல விரும்பவில்லையா? உனக்கு நரகம் செல்லத் தான் விருப்பமா?” என்று கேட்டார்.
அதற்கு அந்த சிறுவன், “நான் சொர்க்கத்தையும் விரும்பவில்லை, நரகத்தையும் விரும்பவில்லை. அமெரிக்க ஜனாதிபதியாக விரும்புகிறேன்” என்றான்.
உடனே அந்தப் பாதிரியார், அந்தச் சிறுவனைப் பார்த்து, “இந்த சிறிய வயதில் உன் மனம் கடவுளைவிட பதவியைத்தான் விரும்புகிறதா?” என்று கேட்டார்.
அதற்கு அந்தச் சிறுவன், “இங்கே கருப்பு இன மக்களை நாயை விட கொடுமையாக நடத்துகின்றனர். அவர்களை விடுதலை செய்ய அமெரிக்க ஜனாதிபதியானால் தான் முடியும்“ என்று அமைதியாக கூறினான்.
அந்தச் சிறுவன் தான், பிற்காலத்தில் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்த ஆப்ரகாம் லிங்கன்.
சாதாரண செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகனாக பிறந்து அமெரிக்க ஜனாதிபதியான ஆப்ரகாம் லிங்கன் அவர்களைப் போன்று, நீங்கள் மன உறுதியுடன், ஒரு குறிக்கோளுடன் செயல்பட்டால் உங்கள் வாழ்வில் வெற்றி நிச்சயம்.

Friday, January 11, 2013

T.T.Jeyaratnam - தெ.து. ஜெயரத்தினம்

அவர் ஒரு தீர்க்கதரிசி

மாண்புமிகு மனிதரை மறக்குமா நெஞ்சம்   

மகாஜனா சிற்பி அதிபர் தெ.து. ஜெயரத்தினம் அவர்களின் 100வது பிறந்த தினத்தை முன்னிட்டு மகாஜனா கனடா பழையமாணவர்கள் வெளியிட்ட நினைவுமலரில் வெளிவந்த எழுத்தாளர் குரு அரவிந்தனின் பதிவுகள்.

குரு அரவிந்தன்


மகாஜனாக் கல்லூரியில் எனக்கு அனுமதி கிடைத்து சில நாட்களாகியிருக்கும். வழமைபோல காலையில் எழுந்து மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் மேற்கு வீதியில் இருந்த மகிழமரத்தில் சில பூக்களைப் பறித்துப் பையில் போட்டுக்கொண்டு, சைக்கிள் ஓடியபடியே கோபுரத்தைக் கடக்கும்போது ஒற்றைக்கையை நெஞ்சில் வைத்து மாவைக்கந்தனை மனதில் கும்பிட்டுக் கொண்டு காங்கேசந்துறை வீதிவழியே அவசரமாக கல்லூரி நோக்கிச் சென்று கொண்டிருந்தேன். அந்த நேரம் பார்த்து காங்கேசன்துறைவீதி வழியாக கனகசபாபதி மாஸ்டர், ஆறுமுகராஜா மாஸ்டர், தியாகராஜா மாஸ்டர், சண்முகசுந்தரம் மாஸ்டர், சுந்தரமூர்த்தி மாஸ்டர் என்று ஒரே ஆசிரியர் கூட்டமாய் கல்லூரி நோக்கி சயிக்கிளில் உலா வந்து கொண்டிருந்தார்கள். நேரத்திற்குப் போகவேண்டும் என்றால், மரியாதைக்காக மறுபக்கம் பார்த்துக் கொண்டு இவர்களை எல்லாம்; முந்திக் கொண்டு வேகமாகச் சயிக்கிள் ஓடவேண்டும். புதிய நண்பர்களான பாலகோபால்ராஜாவும் சூரியகுமாரும் தெல்லிப்பழை சந்தியில் கதைத்துக் கொண்டு நின்றார்கள். ‘மச்சான் நானும் வாறேன்’ என்றபடி ஓடி வந்த பாலகோபாலின் குரல் கேட்டு சயிக்கிளை நிறுத்தினேன். ஓடி அருகே வந்தவன் நேரத்தைப் பார்த்துவிட்டு ‘கொஞ்சம் பொறுத்துப் போகலாம் நின்றுகொள்’ என்றான். ‘கொஞ்சம் பொறுப்பதா? ஏற்கனவே நேரம் போச்சு, நான் போறேன்’ என்று சொல்லிவிட்டு விரைவாக நான் கல்லூரி நோக்கிச் சென்றேன்.


அன்று வாசல் கடமையில் ஈடுபட்டிருந்த மாணவர் தலைவராக இருந்த சுபாஸ் காலையில் தாமதமாக வந்த எல்லா மாணவர்களையும் அதிபர் ஜெயரத்தினத்தின் அறையின் முன்னால் நிரையாக நிற்கவைத்தார். நானும் அவர்களில் ஒருவனாக நின்றேன். காலை வழிபாடு முடிந்ததும் அதிபர் ஜெயரத்தினம் பிரம்புடன் வந்தார் ஒவ்வொருவராகக் காரணம் கேட்டார். சிலருக்குக் கையை நீட்டச் சொல்லி பிரம்பால் அடி விழுந்தது. சிலர் அவர் கேட்காமலே கையை நீட்டினார்கள். அச்சுவேலி பேருந்து சில சமயங்களில் தாமதமாக வருவதுண்டு. அந்த வண்டியில் வந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று கேட்டு அவர்களை மட்டும் வகுப்பிற்குப் போகச் சொன்னார். எனக்குக் கிட்ட வந்தபோது கையை நீட்டினேன். நிமிர்ந்து பார்த்தார், ‘முதற்தரம் லேட்டாய் வந்திருக்கிறாய், இனிமேல் லேட்டாய் வரக்கூடாது’ என்று சொல்லி அடி போடாமலே என்னை அனுப்பிவிட்டார். தலை குனிந்தபடி வகுப்பை நோக்கிச் சென்றபோது வாசலில் பாலகோபால் சிரித்தபடி நின்றான். ‘சொன்னால் கேட்கமாட்டேன் என்றாய் இப்ப பார்த்தியா?’ என்று ஒரு சிரிப்புச் சிரித்தான். அவன் எப்படித் தண்டனை பெறாமல் உள்ளே வந்தான் என்பது அப்போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.


‘ஏன் எனக்கு அதிபர் தண்டனை தரவில்லை, முதற்தரம் என்று எப்படி நினைவில் வைத்திருந்தார்’ என்று நான் அடிக்கடி நினைத்துப் பார்த்து அவரது ஞாபகசக்தியை வியப்பதுண்டு. அன்று தொடக்கம் அவர் என் மீது வைத்திருந்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும், நேரத்தின் முக்கியத்துவத்தை அவர் எனக்கு உணர்த்தியிருந்ததால் இனிமேல் கல்லூரிக்குத் தாமதமாக வரக்கூடாது என்ற எண்ணம் எனக்குள் எழுந்தது. அன்று அவர் தண்டனை தந்திருந்தால், ‘என்ன இது ஒரு பிரம்படிதானே சமாளிக்கலாம்’ என்று மேலும் மேலும் தாமதமாக வருவதற்கு வழி வகுத்திருக்கும். ஆனால் அன்று அவர் வாழ்நாளில் மறக்கமுடியாதபடி நேரத்தின் முக்கியத்துவத்தை ((Pரnஉவரயடவைல) எனக்கு உணர்த்தியிருந்தார். கனடாவில் இருக்கும் அடுத்த தலைமுறையினருக்கு ஆசிரியர் மாணவர்களைப் பிரம்பால் அடிப்பது என்பது புதுமையான விடையமாக இருக்கும், ஆனால் இலங்கையில் பிறந்த எங்கள் தலைமுறைக்கு இது பழகிப் போனதொன்றாகும். ஏன், உங்கள் அப்பா அம்மாகூடப் படிக்கிற காலத்தில் தங்கள் ஆசிரியரிடம் அடி வாங்கியிருக்கலாம், கேட்டுப் பாருங்கள்.


மகாஜனன்களின் விழா என்றால் அது சொன்ன நேரத்திற்குத் தொடங்கும் எனவே நேரத்திற்குப் போகவேண்டும் என்ற நினைவை எல்லோர் மனதிலும் பரந்த அளவில் விதைக்க அதிபர் ஜெயரத்தினத்தின் இந்த உத்திதான் உதவியாக இருந்தது. இன்று எங்கள் மத்தியில் அவர் இல்லை என்றாலும்  எங்கள் கல்லூரிக் கலைவிழாக்கள் எங்கே நடந்தாலும் சொன்ன நேரத்திற்கு தொடங்கும் போதெல்லாம், கல்லூரிக் கீதம் பாடும் போதெல்லாம் அவர்தான் எல்லா மாணவர்களின் நினைவிலும் நிற்கின்றார். எனது தமிழ் ஆசிரியரான வித்துவான் நா. சிவபாதசுந்தரனார் அவர்கள்தான் அதிபர் தெ.து. ஜெயரத்தினத்தின் வேண்டு கோளுக்கு இணங்க மகாஜனாக் கல்லூரிக் கீதத்தை இயற்றியிருந்தார். பின்நாளில் தன் வாழ்க்கையைக் கல்லூரிக்கு அர்ப்பணித்த மகாஜன சிற்பி அதிபர் தெ.து.ஜெயரத்தினத்தின் பெயரும் கல்லூரிக் கீதத்தில் இணைக்கப்பட்டது.
1945ம் ஆண்டு அதிபராகப் பதவிஏற்ற தெ.து.ஜெயரத்தினம் அவர்கள் தெல்லிப்பழை மகாஜனாவைக் கிராமத்துப் பள்ளிக்கூடம் என்று மற்றவர்கள் கேலி செய்த போதெல்லாம் கொஞ்சங்கூட மனம் தளர்ந்து போகவில்லை. படிப்பிலும், விளையாட்டிலும் மட்டுமல்ல ஒழுக்கத்திலும் உயர்ந்து நின்றால் உலகமே திரும்பிப் பார்க்கும் என்ற நம்பிக்கையோடு கடினமாக உழைத்தார். இதனால் 1947ல் இரண்டாம்தரப் பாடசாலையாகவும், 1949ல் முதலாம்தர பாடசாலையாகவும் தரம் உயர்த்தப்பட்டது. அவரது காலத்திலேயே 1960ல் கல்லூரி பொன்விழாவைக் கொண்டாடியது. அவரது நம்பிக்கையும் உழைப்பும் வீண்போகாது என்பதை அதிக மாணவர்கள் மகாஜனாவில் இருந்து பல்கலைக் கழகம் புகுந்தபோதும் சரி, நாடகத் துறையிலும்சரி, அடுத்தடுத்து விளையாட்டுத் துறையில் குறிப்பாக ஹொக்கி, உதைபந்தாட்டத்தில் சாம்பியன்களாக வந்தபோதும் சரி மாணவர்களைக் கொண்டே சாதித்துக் காட்டினார். அகில இலங்கையையே மகாஜனாவின் பக்கம் திரும்பிப் பார்க்கவைத்த அதிபர் தெ.து. ஜெயரத்தினம் அடைந்த இந்த வெற்றிக்கு அவரது தந்தையான கல்லூரி ஸ்தாபகர் பாவலர் துரையப்பாபிள்ளையும் அவரைத் தொடர்ந்து அதிபராக வந்த அதிபர் கா.சின்னப்பாவும் முக்கிய பங்கு வகித்திருந்தார்கள் என்பதையும் மாணவர்களான நாங்கள் மறக்க முடியாது. இவரது கால கட்டத்தில் விடுதி வசதிகளோடு கூடிய கல்லூரியாக மகாஜனா மாற்றப்பட்டதால் கல்லூரி மாணவர் தொகை 1800 ஐயும் தாண்டியிருந்தது. 1978ல் அதையும் கடந்து சுமார் 2350 மாணவர்கள்வரை பதிவாகியிருந்தனர். அதிபர் தெ.து. ஜெயரத்தினத்திற்குப் பின் அதிபர்களாக பொறுப்பேற்றவர்களும் கஷ்டமான காலக்கட்டத்திலும் தளர்ந்துபோகாது மகாஜனாவைப் பேரும் புகழுடனும் கொண்டு நடத்தினர்.


ஆங்கிலம் கட்டாயம் படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தை எனக்குள் தூண்டிவிட்டவர் அதிபர் ஜெயரத்தினம்தான். எங்களுக்கு உயர்தர வகுப்பிற்கு ஆங்கிலம் ஒரு பாடமாக எடுத்தார். ஆங்கிலத்தை பிழையின்றி ஓரளவு எழுதப் பழகி வைத்திருந்தோமே தவிர சரியான உச்சரிப்போடு பேசிப்பழகவில்லை. ஊரிலே ஆங்கிலம் பேசிப்பழகுவதற்குரிய சந்தர்ப்பமும் பொதுவாகப் பல மாணவர்களுக்குக் கிடைக்கவில்லை. பிற்காலத்தில் பட்டயக்கணக்காளர் நிறுவனத்தில் மாணவனாகச் சேர்ந்தபோதும், மகாராஜா நிறுவனத்தில் கணக்காளராக இணைந்தபோதும், ஆங்கிலம் ஏன் அவசியம் என்பதை அதிபர் ஒரு தீர்க்கதரிசிபோல அன்று ஏன் அறிவுறுத்தினார் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளமுடிந்தது. அன்று அவர் கற்றுத்தந்த ஆங்கிலம் பிற்காலத்தில் புலம்பெயர்ந்த மண்ணிலும் பல மாணவர்களுக்குப் பெரிதும் உதவியாக இருந்தது. இன்றும் மகாஜனன் என்று பெருமையாகச் சொல்வதற்கு ஒரு மாணவனாய் அவரிடம் நான் கற்றுக் கொண்ட முக்கிய பாடம் நேரத்தின் முக்கியம் பற்றியதாகும். இதைவிட ஒழுக்கம், கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோடு எப்படி வாழ்க்கையை சீராக அமைக்க முடியும் என்பது போன்ற புறம்சார்ந்த பாடங்களையும் அவரிடம் கற்றுக் கொண்டவர்கள் பலர்.


உயர்தர வகுப்பில் கற்கும்போது தமிழ் மன்றத்தின் செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டபோது தமிழருவி த. சண்முகசுந்தரம் ஆசிரியர் அவர்கள் என்னை அழைத்துச் சென்று அதிபர் ஜெயரத்தினத்திடம் புதிய பதவி பற்றி அறிமுகம் செய்தார். ஏற்கனவே ஆங்கில வகுப்பில் பரிட்சயமாய் இருந்ததால், என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு அவருடைய புன்னகையுடனான மெல்லிய தலையசைவே சம்மதம் என்று புரியவைத்தது. ‘பதவி முக்கியமல்ல, பதவியில் இருக்கும்போது என்ன செய்கிறோம் என்பதுதான் முக்கியம்’ என்று சொல்லி அவர் என்னை வாழ்த்தியது இப்பொழுதும் மனதில் நிற்கிறது. தமிழ் மன்றத்தின் சார்பில் பல அறிஞர்களை இலங்கையிலும் இந்தியாவிலும் இருந்து அழைத்து வந்து மாணவர்களுக்குப் பயனுள்ள சொற்பொழிவுகளை ஆற்ற வைப்பதற்கு அதிபர் தெ.து. ஜெயரத்தினம் அவர்கள் ஆலோசனையும், மிகுந்த ஒத்துழைப்பும் நல்கினார். அதன் மூலம் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என்ற தன்நம்பிக்கையை எனக்குள் ஏற்றி வைத்தவர். அதேபோல 1970ல் வைரவிழாவை முன்னிட்டு கல்லூரியில் இரண்டு வாரங்களாக நடந்த கண்காட்சி விழாவும் சிறப்பாக நடைபெற முன்னின்று பாடுபட்டார். சிறந்த ஆசிரியராய், அதிபராய், சிறந்த நிர்வாகியாய், இருந்த இவர் இயல் இசை நாடகம், சமயம், விளையர்டுத்துறை போன்ற துறைகளையும் தனது காலத்தில் ஊக்குவித்தார். 1970ம் ஆண்டு இறுதியில் ஆசிரியர், மாணவர், பெற்றோரால் விரும்பப்பட்ட அவர் மகாஜனாக் கல்லூரின் அதிபர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றபோது பிரிவுத் துயரால் கண்கலங்கிய மாணவ, மாணவிகளும் உண்டு.


இன்று மகாஜனாக் கல்லூரி பழைய மாணவர் சங்கங்கள் பல நாடுகளிலும் அமைக்கப்பட்டு சிறப்பாக இயங்கி, சைவத் தமிழ் பண்பாட்டைக் கருவூலமாகக் கொண்ட கல்லூரிக்கு ஆதரவு கொடுத்து வருவதற்குக் காரணம் அதிபர் தெ.து. ஜெயரத்தினத்திடம் படித்த மாணவர்களும் அவர்மீது மதிப்பு வைத்திருந்த மாணவர்களும் அதன் அங்கத்தவர்களாக இருப்பதும் ஒரு காரணமாகும். அவருடைய நினைவுகள் மறக்கமுடியாதவையாகையால், வருடாவருடம் ஒக்டோபர் மாதம் 29ம் திகதி அதிபர் ஜெயரத்தினம் நினைவுதினம் மகாஜனாக்கல்லூரியில் நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகின்றது. அவரது நூறாவது பிறந்த தினத்தைக் கொண்டாடும்போது அவர் எங்கள் மத்தியில் இல்லாவிட்டாலும் அவர் விட்டுச் சென்ற இலட்சியங்களைக் காப்பாற்றுவதில் புலம்பெயர்ந்த மகாஜனன்கள் முன்னிற்பதையிட்டு எமக்கு மிகவும் பெருமையாக இருக்கின்றது. வாழ்க மகாஜனா!

Mahajana College - அதிபர் தா.து.ஜெயரத்தினம்

மகாஜன சிற்பி தா.து.ஜெயரத்தினத்தின் 100வது பிறந்தநாள்.

(குரு அரவிந்தன்)

மகாஜனா சிற்பி பற்றி தாய் வீடு (Jan 2013) கனடா பத்திரிகையில் வெளிவந்த கட்டுரை.

கல்வியையே முக்கிய மூலதனமாகக் கொண்டது ஈழத்தமிழ் சமூகம் என்பதால், அந்நிய ஆதிக்கத்தில் இருந்து கல்வியையும், சைவமரபுகளையும் காப்பாற்றும் நோக்கத்தை இலட்சியமாகக் கொண்டு தமிழர் வாழ்ந்த பிரதேசங்களில் ஆரம்பிக்கப்பட்டதுதான் சுதேசக்கல்வி நிறுவனங்கள். அந்தவகையிலே தமிழர் வாழ்ந்த பிரதேசங்களில் பல சுதேசக்கல்வி நிறுவனங்கள் ஆரம்பிக்கப் பட்டாலும், அம்பனை என்ற இடத்தில் மகாஜன சிற்பி தா. து. ஜெயரத்தினத்தின் தந்தையான பாவலர் துரையப்பாபிள்ளையால் 1910ம் ஆண்டு அவரது வீட்டுத் திண்ணையில் ஆரம்பிக்கப்பட்டதுதான் இன்று கல்வித்துறையில் மட்டுமல்ல, விளையாட்டுத்துறை நுண்கலைத்துறை போன்றவற்றிலும் பெயரும் புகழும் பெற்று விளங்கும் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியாகும்.


தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கியவர் அதன் அதிபராக இருந்த தா.து. ஜெயரத்தினம் அவர்களே. ‘உன்னை நீ அறிவாய்’ என்ற தாரக மந்திரத்தை ஒவ்வொரு மகாஜனன்களுக்கும் ஊட்டிவிட்ட பெருமை அவருக்கு உண்டு. அவரின் வெற்றிக்குக் காரணம் அவரது பண்பான குணங்களே. புன்முறுவல் தவளும் பொலிவான மலர்ந்த முகம்,எல்லோரையும் கவரும் இன்சொல், கம்பீரமான அடக்கம், சான்றோர்முன் பணிவு, எவரையும் தன் வசப்படுத்தும் சக்தி, அசையாத கடவுள் நம்பிக்கை போன்றவையே இவரின் உயர்வுக்குக் காரணமாகின்றன என்று முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் வித்தியானந்தன் தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருப்பதாக ‘எம்மை வாழவைத்தவர்கள்’ என்ற தனது நூலில் முன்னாள் மகாஜனா கல்லூரி அதிபர் திரு. பொ. கனகசபாபதி அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றார்.


அதிபர் ஜெயரத்தினம் அவர்கள் காலத்தில் ஆண்டு தோறும் பல புதுமைகள் புகுத்தப்பட்டன. இவர் மகாஜனாக் கல்லூரியில் சாரணர் இயக்கத்தைத் தெடக்கி அதன் பொறுப்பாசிரியராகக் கடமையாற்றினார். தொடர்ந்து விளையாட்டுத் துறையில் அவருக்கு இருந்த ஈடுபாடு காரணமாக அதன் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார். அக்காலத்தில் தலைசிறந்த ஆங்கில ஆசிரியர்களில் ஒருவராக இவர் கணிக்கப் பெற்றார். அதனால் கல்லூரி பங்குபற்றும் ஆங்கிலப் பேச்சுப்போட்டிகளுக்குப் பொறுப்பாக இருந்தார். 1935ம் ஆண்டு மகாஜனா வெள்ளிவிழக் கொண்டாட்டத்தின்போது மகாஜனன் என்ற வெள்ளிவிழா மலரை முதன் முதலாக வெளியிட்டார். 1960ல் தனது காலத்தில் நடந்த பொன்விழாவை மிகவும் சிறப்பாகக் கொண்டாடினார். 1946ம் ஆண்டு வடமாகாண ஆசிரியர் சங்கத்தின் செயலாளராகப் பொறுப்பேற்றார்.

பிற்காலத்தில் உயர்வகுப்பில் கல்வி கற்கும்போது அவரிடம் ஆங்கிலம் கற்கும் பாக்கியம் எனக்கும் கிடைத்ததையிட்டு நானும் பெருமைப் படுகின்றேன். ஆங்கிலம் கட்டாயம் கற்றவேண்டும் என்ற ஆர்வத்ததைத் தூண்டிவிட்டவர் அவர்தான். அதுமட்டுமல்ல சைவசமயத்தை வளர்ப்திலும் முன்னின்று பாடுபட்டார். கடமை கண்ணியம் கட்டுப்பாடு மட்டுமல்ல நேரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து குறிப்பிட்ட நேரத்திற்கு ஒன்றைச் செய்ய வேண்டும் என்பதில் ஏனைய ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் முன்னோடியாக நின்றார்.


திரு. தா. து. ஜெயரத்தினம் அவர்கள் 1932ம் ஆண்டு உதவி ஆசிரியராக மகாஜனாக் கல்லூரியில் சேர்ந்தார். அதிபராக இருந்த சின்னப்பாபிள்ளையின் மரணத்தைத் தொடர்ந்து 1945ம் ஆண்டு மகாஜனாக் கல்லூரியின் அதிபராகக் கடமை ஏற்றார். மாணவர்களின் கல்வியில் அதிக அக்கறை கொண்ட இவரது விடா முயற்சியால் 1947ம் ஆண்டு மகாஜனா இரண்டாம்தரப் பாடசாலையாகத் தரமுயர்த்தப்பட்டது. பட்டதாரி ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக இந்தியாவில் இருந்து மகாஜனாக் கல்லூரிக்கு மேலதிக ஆசிரியர்கள் வரவழைக்கப் பட்டனர். தொடர்ந்து 1949ம் ஆண்டு மகாஜனாக் கல்லூரி முதலாம்தர பாடசாலையாக மாறியது. அந்த வருடம் வடமாகாண ஆசிரியர் சங்கத்தின் தலைவராக இவர்  தெரிவு செய்யப்பட்டார். 1954ம் ஆண்டு கல்லூரிக் கட்டிட நிதிக்காக் களியாட்ட விழா ஒன்றை நடத்தி நிதி சேகரித்தார். இதற்காக இந்தியாவில் இருந்து சினிமா நடிகர்களை வரவழைத்தார். அதே ஆண்டு மாணவர்கள் தங்கிப் படிப்பதற்கான விடுதி வசதிகளைச் செய்து கொடுத்தார். 1955ம் ஆண்டு கல்லூரியில் சுயதொழில் கற்பதற்கான திட்டங்களைச் செயல்முறைப்படுத்தினார். மரவேலை, நெசவு, மனையியல் போன்ற புதிய துறைகளை அறிமுகப்படுத்தினார். 1957ம் ஆண்டு அவரது ஆசிரியப் பணியின் வெள்ளிவிழாவை கல்லூரி ஆசிரியர்களும் மாணவர்களும் சேர்ந்து கொண்டாடினர். இதே ஆண்டு மகாஜனாக் கல்லூரியின் சார்பில் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலிலும், திருக்கேதீஸ்வரம் கோயிலிலும் திருவிழாக்கள் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து இப்பொழுதும் மகாஜனாவின் சார்பில் வருடாவருடம் திருவிழாக்கள் செய்யப்படுகின்றன. 1958ம் ஆண்டு நடனம், சங்கீதம் போன்ற கலைத்துறைகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. 1960ம் ஆண்டு கல்லூரி தனது பொன் விழாவைக் கொண்டாடியது. இதே ஆண்டு கல்லூரியை அரசு பொறுப்பேற்றது. பாடசாலையின் தேவை கருதி இவரது முயற்சியால் கல்லூரிக் காணியில் ஆலயம் அமைக்கப்பட்டது. இவரது காலத்தில் மகாஜனா கல்வியில் சிறந்து நின்றதால் பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை 1800 ஆக உயர்ந்தது. 1961ல் அதிஉயர் தரத்திற்குக் கல்லூரியின் தரம் உயர்த்தப்பட்டது.


இவரது காலத்தில் உதைபந்தாட்டத்தில் சாம்பியன்களாக வந்து கல்லூரி சாதனை படைத்தது. 1962ல் யப்பானில் நடந்த ஆசிய சாரணியர் விழாவில் மகாஜனா சாரணியர்களும் கலந்து கொண்டு பெருமை தேடித்தந்தனர். அதிபர் ஜெயரத்தினம் அவர்கள் யாழ் பாடசாலை விளையாட்டுச் சங்கத்தின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். இதே வருடம் யாழ்ப்பாணத்திலேயே மிக அதிகமான மாணவர்கள் மகாஜனாக் கல்லூரியில் இருந்து பல்கலைக் கழகத்திற்கு அனுமதி பெற்றிருந்தனர். உதைபந்தாட்டத்தில் தொடர்ந்தும் மகாஜனா சாதனை படைத்தது. 1965ல் மகாஜனா ஹொக்கி விளையாட்டில் சாம்பியனாக வந்தது. இதே ஆண்டு நாடகத் துறையிலும் முதலிடத்தைப் பெற்றது. 1961ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து பல வருடங்கள் உதைபந்தாட்டத்திலும், ஹெக்கியிலும் மகாஜனா சாதனை படைத்து வந்தது. அதேபோல துடுப்பாட்டத்திலும், மெய்வல்லுனர் போட்டிகளிலும் அரிய சாதனைகளைப் படைத்தது. 1970ம் ஆண்டு வைரவிழாவை மகாஜனா கொண்டாடியபோது அதிபர் ஜெயரத்தினம் முன்னின்று வழிநடத்தினார். இரண்டு வாரங்கள் நடைபெற்ற இந்த விழாவைத் தொடர்ந்து வருட முடிவில் அதிபர் ஜெயரத்தினம் அவர்கள் தனது பதவியில் இருந்து ஓய்வு பெற்றுக் கொண்டார்.
1972ம் ஆண்டு இவரது தந்தையான பாவலர் துரையப்பாபிள்ளையின் நூறாவது பிறந்தநாள் கல்லூரியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டபோது பாவலரின் நினைவாக நூலும் வெளியிடப்பட்டது. மகாஜன சிற்பியான இவரது விடாமுயற்சியாலும், கடின உழைப்பாலும், இவர் ஓய்வு பெற்றிருந்தாலும் 1978ம் ஆண்டு மகாஜனாவின் மாணவர் தொகை 2350க்கும் மேலாகியிருந்தது. இவரது காலத்தில் பல கட்டடங்கள், ஆய்வுகூடங்கள், விளையாட்டு மைதானங்கள், அரங்கங்கள் எல்லாம் புதிதாகக் கல்லூரிக்கு அணிசேர்த்திருந்தன. புத்தகசாலை, தேனீர்ச்சாலை போன்றனவும் மாணவர்களின் தேவைகருதி இடம் பெற்றன. 1970ம் ஆண்டு இவர் ஓய்வு பெற்று வீட்டிலே தங்கியிருந்தாலும் இவரது நினைவெல்லாம் கல்லூரியிலேயே இருந்தது. அந்த நல்ல நினைவோடு 1975ம் ஆண்டு இவர் அமரரானார். அந்த சோக செய்தியைக் கேட்டுக் கண்கலங்கியோர் பலர்.


மகாஜனா சிற்பி தா.து. ஜெயரத்தினத்தைக் கௌரவிக்கும் முகமாக அவரது பெயரும் மகாஜனா கல்லூரிக் கீதத்தில் இடம் பெறச் செய்யப்பட்டது. அதிபர் தா.து. ஜெயரத்தினத்தின் காலத்தை மகாஜனாவின் பொற்காலம் என்றும், போர் சூழ்நிலை காரணமாக இடம் பெயர்ந்த காலத்தை மகாஜனாவின் இருண்ட காலமாகவும் சிலர் குறிப்பிடுவர். பல வருடங்களாக இடம் பெயர்து அலைந்த மகாஜனாக் கல்லூரி 1999ம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 15ம் திகதி; மீண்டும் தனது பழைய இருப்பிடத்திற்கு நிரந்தரமாக வந்தது. 2010ம் ஆண்டு மகாஜனாக்கல்லூரி நூற்றாண்டு கண்டபோது, கல்லூரியிலும் புலம்பெயர்ந்த மண்ணில் இயங்கும் பழைய மாணவர் சங்கங்களிலும் அதிபர் ஜெயரத்தினத்தின் பெயரும், அவர் கல்லூரிக்காற்றிய தொண்டும் நினைவு கூரப்பட்டது. மகாஜனாவின் இலக்கிய மைந்தர்களால் பல நூல்கள் சமர்ப்பணம் செய்யப்பட்டன. இன்று அவர் எங்கள் மத்தியில் இல்லாவிட்டாலும், மகாஜனன்கள் இருக்கும்வரை அவர் எல்லோர் மனதிலும் நிலைத்து நிற்பார். மாண்புற மகனாம் மகாஜன சிற்பி ஜெயரத் தினம்பணி நினைவோம்.

Monday, January 7, 2013

SOPCA Tamil community celebrates New Year

பீல் குடிமக்கள் ஒன்றியத்தின் பல்கலாச்சார நிகழ்வு - 2013

SOPCA cultural celebration - Tamil Community:

Diwali, Christmas, New year, and Pongal Celebration.

Members of Peel Tamil Community (SOPCA) held a cultural celebration last Saturday night 05-01-2013 at the Square One Older Adult centre, Mississauga. Canada.

                  Committee Members with Chief Guest Dr. Mrs Logan Kanapathy


சென்ற சனிக்கிழமை பீல்குடிமக்கள் ஒன்றியம் தமது வருடாந்த பல்கலாசச்சார நிகழ்வை மிசசாகாவில் உள்ள ஸ்குய வண்ணில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடினார்கள். நிகழ்வில் எடுக்கப்பட்ட சில் புகைப்படங்களை இங்கே தருகின்றோம்.


                              கரோல் கீதமிசைக்கும் சொப்கா குழுவினர்


                               Sopca members with Cooksville MPP Dipika Damerela


                                சொப்கா மாணவ மாணவிகளின் நடன நிகழ்ச்சி

                              Sopca Members Award: Mr. C.Balasubramaniam and Mr.S.Mahenthiran


                                           Sopca Dance Group


National Antham - Thamil Thai Vhalththu - Sopca Geetham

Thai Pongal -  Dance by Sopca Kids

                                        Drama - Siripaananda

பீல் குடிமக்கள் ஒன்றியத்தின் பல்கலாச்சார நிகழ்வு

பீல் குடிமக்கள் ஒன்றியத்தின் பல்கலாச்சார நிகழ்வு - 2013  சென்ற சனிக்கிழமை 05-01-2013 மிசசாகாவில் உள்ள ஸ்குய வண்ணில் அமைந்துள்ள மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பல்கலாச்சார நிகழ்வில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை இங்கே தருகின்றோம்.

Tamil community SOPCA celebrates New Year

Tamil community celebrates New Year
Staff photo by Jason Spencer


Members of Peel's Tamil community (SOPCA) held a cross-cultural holiday party last night at the Square One Older Adult Centre.

Some 250 people gathered in the City Centre mall for the Diwali, Christmas, New Year and Thai Pongal celebration. The latter of which is the Tamil New Year, celebrated on Jan. 14.


Kuru Aravinthan, vice president of the Screen Community of Peel (SOPCA) — a Tamil cultural group, which hosted the event — said the purpose of the party was to encourage people of all ages and ethnic backgrounds to celebrate together and to help the Tamil community, which he estimates to be 350,000 strong in Canada, to retain their culture.

"The whole community is enjoying the celebration," he said. "We want to encourage our community to get involved in these cultural events because we want to keep our culture in Canada and our language."

Mississauga East-Cooksville MPP Dipika Damerla and Ward 10 Councillor Sue McFadden were in attendance to take in the dancing, music — both traditional Tamil songs and Christmas carols — dramatic performances and a dinner, which included many multicultural dishes.

"You do such a great job keeping the culture alive," Damerla told the audience. "It's so important that young Tamils are proud of their culture."

SOPCA also presented volunteer awards to two of its senior members, Chinnathurai Balasubramaniam and Suppiramaniam Makenthiran, for their exceptional contribution to the Tamil community.

Tuesday, January 1, 2013

Thai Pongal - தைப்பொங்கல்

                                                                 தைப்பொங்கல்


குரு அரவிந்தன்

மிழர் திருநாளாம் தைப்பொங்கல் தைமாதம் 14ம் திகதி கொண்டாடப்படும். சில சமயங்களில் 13ம் அல்லது 15ம் திகதிகளிலும் வரலாம். தைபிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கையோடு வாழ்ந்தவர்கள்தான் உழவர்கள். கதிரவனையும், மாடுகளையும் நம்பித்தான் ஆதிகாலத்தில் விவசாயம் நடைபெற்றது.

அதனால்தான் கதிரவனுக்கும், தமக்கு உதவி செய்த மாடுகளுக்கும் நன்றி தெரிவிக்கும் நாளாகத் தைப்பொங்கலையும், மறுநாள் மாட்டுப்பொங்கலையும் தமிழர் கொண்டாடுவர். இயந்திர வசதிகள் இல்லாத அந்த நாட்களில் நிலத்தை உழுதல், தண்ணீர் இறைத்தல், வண்டி இழுத்தல், பசளை கொடுத்தல் போன்றவற்றுக்கு மாடுகளே உழவர்களுக்கு அதிகம் உதவி செய்தன. மாடுகளுக்கு நன்றி சொல்லும் நாளான மாட்டுப் பொங்கலைப் பட்டிப்பொங்கல் என்றும் அழைப்பர்.

பொங்கலன்று அதிகாலையில் எழுந்து நீராடி, வயலிலே அறுவடை செய்த புதிய அரிசியைப் பாலுடன் கலந்து பொங்கல் செய்து சூரியனுக்குப் படைப்பர். பொங்கலுடன் பழங்கள், தேங்காய், இளநீர், கரும்பு, போன்றவற்றையும் சேர்த்து வாழையிலையில் படைத்து சூரியனை வணங்குவர். பயிர் வளர்வதற்குத் தேவையான தண்ணீர், வெளிச்சம் போன்றவை கிடைக்கக் கதிரவன் உதவி செய்வது யாவரும் அறிந்ததே.

பொங்கலன்று புத்தாடை உடுத்து, குடும்பத்தோடு கோயிலுக்குச் சென்று வழிபடுவர். பொங்கிப்படைத்த உணவைக் குடும்பத்தினர் உற்றார் உறவினர் நண்பர்களோடு கலந்து உண்டு மகிழ்வர். சிறுவர் பட்டாசு கொளுத்தி மகிழ்வர். சில இடங்களில் விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறுவதுண்டு. தைபிறந்தால் வழிபிறக்கும் என்பது நம் பெரியோர் வாக்கு.

புலம்பெயர்ந்த மண்ணில் எமது மொழியை மட்டுமல்ல, எமது பண்பாடு, கலாச்சாரத்தையும் பேணிப்பாதுகாக்க வேண்டும். மொழி அழிந்தால் நம் இனம் அழிந்துவிடும் என்பதை எப்படி நாம் நினைவில் வைத்திருக்கிறோமோ, அதேபோல எமது பண்பாடு கலாச்சாரத்தையும் அழியாமல் பாதுகாக்க வேண்டும். அவை அழிந்தால் நாம் அடையாளம் அற்றவர்களாகப் போய்விடுவோம். எனவே அடுத்த தலைமுறையினருக்கு இவற்றைச் சொல்லிக் கொடுங்கள். போதிய வசதிகள் இல்லாவிட்டாலும், முடிந்த அளவு பின்பற்றச் சொல்லுங்கள். முடியும் என்ற நம்பிக்கையோடு அடுத்த தலைமுறையினரிடம் பொறுப்பைக் கொடுங்கள். நம்பிக்கையோடு செயற்பட்டால் நாளை நமதே!

Kids Drama Thai Pongal - தைப்பொங்கல் சிறுவர் நாடகம்

Kids Drama -சிறுவர் நாடகம்

Kuru Aravinthan's Thai Pongal Drama.

(பிரதியாக்கம், இயக்கம் : குரு அரவிந்தன்)

பொங்கலோ பொங்கல்..!


காட்சி – 1   (பாத்திரங்கள்: அப்பா, அம்மா, மகள், மகன்)


(வீட்டின் படுக்கை அறை. அண்ணன் கட்டிலில் படுத்து நித்திரை கொள்ளும் காட்சி. வாசலில் நின்று தங்கை அண்ணாவை நித்திரையால் எழுப்பவேண்டும். வெளிச்சம் வட்டமாக கட்டிலில் விழவேண்டும். சுப்ரபாதம் பாடல் மெதுவாகக் கேட்கவேண்டும்)


தங்கை: அண்ணா எழும்புங்கோ. இண்டைக்குத் தைப்பொங்கல் எல்லே.. எழும்புங்கோ   அண்ணா…

அண்ணா: (குறட்டை ஒலி கிர்… கிர்…. என்று கேட்கவேண்டும்)

தங்கை: அண்ணா எழும்புங்கோ…!

அண்ணா: (மீண்டும் குறட்டை ஒலி)

தங்கை: அம்மா..! அண்ணா எழுபுறாரில்லை..!
                          
(அம்மா உள்ளே வருதல்)

அம்மா : மகன் எழும்புங்கோ, இண்டைக்கு தைப்பொங்கல்எல்லே, எழும்பி  குளிச்சிட்டு     வாங்கோ      

 (மகன் எழும்பாது பிரண்டு படுத்தல்)

தகப்பன்:  விடியமுந்தி அவனை ஏன் எழுப்பிறியள். இரவிரவாய் படிச்சிட்டுப் படுத்த    பிள்ளையெல்லே, விடுங்கோ கொஞ்சம் பொறுத்து எழுப்பலாம்.

தாய்:  இப்படியே சொல்லிச் சொல்லி அவனைப் பழுதாக்குங்கோ. நல்ல நாளில    எண்டாலும் நேரத்தோட எழும்பினால் என்ன.. எழும்பு ராசா..

தகப்பன்:  இப்ப அவன் எழும்பி என்ன செய்யப்போறான். நாங்கள்      உள்ளுக்குச் சமையலறையிலதானே பொங்கப்போறம். பொங்கினாப்பிறகு    எழுப்புவம்.

தாய்:  ஒவ்வொரு வருஷமும் இப்படி ஏதாவது சாட்டுச் சொல்லி பிள்ளைகளுக்கு  எங்கட  கலாச்சாரம் பண்பாடு எதுவுமே தெரியாமல் வளர்க்கப்போறீங்கள்.

தகப்பன்:  இப்ப என்னை என்ன சொல்லச் சொல்லுறாய்..?

தாய்:  நாளைக்கு எங்கட பிள்ளைகள் ஒண்டும் சொல்லித்தராமல் தங்களை  வளர்த்திட்டம்  எண்டு எங்களைக் குறை சொல்லக்கூடாது.

தகப்பன்: சரி சரி நல்ல நாளும் அதுவுமாய் ஏன் கத்திறாய், அவனை எழும்பிக் குளிக்கச்  சொல்லு..

தாய்:  எழும்புராசா, விடிஞ்சு போச்சு.. எழும்பிக் குளிச்சிட்டுவா..
  
(மகன் எழுந்து கட்டிலில் இருந்தபடி கண்ணைக் கசக்கிக் கொட்டாவி விட்டு  உடம்பை முறிக்க வேண்டும். நித்திரைத் துக்கத்தில்…)

மகன்: என்னம்மா, விடிஞ்சு போச்சோ..? எங்களுக்குத்தான் இன்னும் விடிவு வரயில்லை  எண்டு ஒவ்வொரு நாளும் கதை சொல்லுவிகளே..?

தாய்:  அந்த விடிவு வேற மகன், அது எங்கட இனத்தின்ர விடிவு. இண்டைக்குத்  தைப்பொங்கல். இது தமிழருடைய திருநாள். கெதியாய் குளிச்சிட்டு வா..  பொங்கிச் சூரிய நமஸ்காரம் செய்யவேணும்..

மகன்:  சூரிய நமஸ்காரமோ..? என்னம்மா சொல்லுறிங்கள்..? இது கனடாவில  தைமாதமெல்லே..? வெளியில பனி கொட்டுது. என்னண்டு சூரியனைப் பாக்கிறது..?

தாய்:  சூரிய பகவானைத் தெரிஞ்சால்தான் கும்பிட வேணுமே?  பாக்காமல் கும்பிட  ஏலாதே..? தாய் மண்ணைவிட்டு நாங்கள் இங்கே வந்தாலும் எங்கடை பண்பாடு,  கலாச்சாரத்தை மறக்கக்கூடாதெல்லே..

மகன்: நீங்கள் சொல்லுறதும் சரிதான்.. எங்கட பண்பாடு கலாச்சாரத்தை நாங்கள்தானே  காப்பாற்ற வேண்டும்..

மகள்:  ஏனம்மா தைப்பொங்கல் எண்டு சொல்லுறது..?

தாய்:  தைமாதத்தில் வாறபடியால் தைப்பொங்கல் எண்டு சொல்லுவினம்.

மகள்:  ஏனப்பா நாங்கள் தைப்பொங்கலைக் கொண்டாடுகிறனாங்கள்

தகப்பன்: விவசாயத்திற்கு உதவி செய்த சூரியனுக்கு நன்றி சொல்லுற நாள்தான்   தைப்பொங்கல். அதாவது தாங்ஸ்கிவ்விங்டே, மறுநாள் மாடுகளுக்கு   நன்றி  சொல்லுற நாள்.

மகள்: சூரியனுக்கு ஏனப்பா நன்றி சொல்லவேணும்?

தகப்பன்: எங்களுக்கு வெளிச்சம் தருவது சூரியன்தானே. பயிர் வளர வெளிச்சம் தேவைதானே, அதேபோல மழை இல்லாவிட்டாலும் பயிர் வளராது.

மகன்:  அடுத்த நாள் மாடுகளுக்கா, ஏனப்பா மாடுகளுக்கு..?

தகப்பன்: அந்த நாட்களில் விவசாய இயந்திரங்கள் இருக்கவில்லை. மாடுகள்தான்     மனிதருக்கு விவசாயத்தில் உதவியாக இருந்தன. அதனால்தான்      மாடுகளுக்கு மறுநாள் நன்றி சொல்வார்கள். அதைவிட பாலும், பசளையும் தருவது மாடுகள் தானே

மகன்: அதை என்னண்டு சொல்லுறது?

தகப்பன்: அதை மாட்டுப்பொங்கல் அல்லது பட்டிப்பொங்கல் எண்டு சொல்லுவினம்.

மகள்: அப்ப இண்டைக்குத் தைப்பொங்கல், நாளைக்கு மாட்டுப் பொங்கல் அப்படித்தானே,  வாங்கம்மா, நாங்கள் பொங்குவம்.

தாய்: சரி, நாங்க பொங்கலுக்கு ஆயத்தப்படுத்துவம், குளிச்சிட்டு ஓடிவா ராசா..

மகன்: சரியம்மா, நான் குளிச்சிட்டு வாறன்.. இவள் என்ன பட்டுப் பாவாடை சட்டை எல்லாம் போட்டுக் கலக்கிறாள்.

தாய்: அதுதான் எங்கட பாரம்பரிய உடை. உனக்கும் வேட்டி எடுத்து வைச்சிருக்கிறேன். குளிச்சிட்டு அதைத்தான் உடுத்துக் கொண்டு வரவேணும்.

மகன்: எனக்கு வேட்டி உடுக்கத் தெரியாதம்மா, எல்லாம் மறந்துபோச்சு!

தாய்: அப்பாவிட்ட கேட்டால் அவர் உடுக்கக் காட்டித்தருவார், சரியா?
மகன்: சரியம்மா.

(தாய் சமையலறை நோக்கிச் செல்ல, மகன் துவாயை எடுத்துக் கொண்டு  மறுபக்கம் செல்ல வேண்டும்) காட்சி – 2

(தாய், தகப்பன், மகன், மகள் சமையலறையில் பொங்கும் காட்சி. சேலை, வேட்டி, பட்டுப் பாவாடை அணிந்தபடி பொங்கவேண்டும்.)

(மறுபக்கத்தில் சுவாமி அறையில் பழத்தட்டு, குத்துவிளக்கு, சிற்றுண்டிகள், கரும்பு போன்ற பொங்கல் பொருட்கள் இருக்க வேண்டும். பொங்கலைப் படைக்கும் காட்சி)

மகன்: அம்மா, ஊரிலை எண்டால் பொங்கேக்கை வெடிஎல்லாம் கொழுத்துவமெல்லே

தகப்பன்: அது ஊரிலை ராசா, இங்கை வீடுகளில வெடி கொளுத்த விடமாட்டினம்.     அப்படி கொழுத்துவதெண்டால் அனுமதி எடுக்க வேணும்.

மகள்: அண்ணா வெடி கொழுத்தேக்க உங்களுக்குப் பயமில்லையே..?

மகன்: பயமோ.. எனக்கென்ன பயம், இப்படி சின்ன வயசில் பயமில்லாமல் வெடி  கொழுத்திப் பழகினபடியால்தானே எங்கடை அண்ணா, அக்காமாரெல்லாம் பெரிசா  வளர்ந்தபிறகும் ஊரில எந்த வெடிச்சத்தத்திற்கும் பயப்பிடாமல் திரிஞ்சவை..!

மகள்: இங்கை எங்கடை ஆக்கள் எல்லாரும் பொங்குவினமே அம்மா?

தாய்: ஓம், அனேகமாய் எல்லாரும் பொங்குவினம்..

மகன்: அம்மா அங்கை ஊரிலை எண்டால் பொங்கலண்டு அயலவை எல்லாம்    வீட்டை  வருவினமெல்லே..

தகப்பன்: இஞ்சையும் சொந்தக்காரர், நண்பர்கள் எண்டு வருவினம்தானே..
           
 (வாசல் அழைப்பு மணி அடித்துக் கேட்கிறது.)

அம்மா: யாரோ பெல் அடிக்கினம் யாரெண்டு பாருங்கோம்மா.
              
(மகள் சென்று வாசல் கதவைத் திறக்கிறாள்.)

மகள்: அம்மா இங்கை பாருங்கோ, எங்கடை சினேகிதர் எல்லாம் வந்திருக்கினம்.

சினேகிதர் 1: பொங்கல் வாழ்த்துக்கள்.

மகள்: பொங்கல் வாழ்த்துக்கள்

மகன்: பொங்கல் வாழ்த்துக்கள்.

சினேகிதர் 4: பெண்கள் வாழ்த்துக்கள்.

மகன்: என்னது..?

சினேகிதர் 4 : பெண்கள் வாழ்த்துக்கள்.

மகன்:  கடவுளே.. அது பெண்கள் வாழ்த்துக்கள் இல்லை, பொங்கல்  வாழ்த்துக்கள்,   தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.

சினேகிதர் 4 : (திருத்திச் சொல்லுதல்) பொங்கல் வாழ்த்துக்கள்.

தாய்: வாங்கோ பிள்ளைகள், இருங்கோ..

(சினேகிதர்களை இருக்கச் சொல்லி பலகாரம், சிற்றுண்டி பரிமாறவேண்டும்.)


காட்சி – 3 

(பலகாரம் சாப்பிட்டு முடிந்ததும்)

சினேகிதி 1: நாங்கள் இப்ப என்ன செய்வம்..?

சினேகிதி 2: ஏதாவது கேம் விளையாடுவமா?

சினேகிதி 1: வேண்டாம் நாங்கள் ஒரு பாட்டுப் பாடிக்காட்டுவமே..

சினேகிதி 2: பாட்டுப்படுறதா..?

சினேகிதி 1:  ஏன் உனக்குப் பிடிக்காதா?

சினேகிதி 2 :  பாடிக்காட்டுறது என்ன நாங்கள் ஆடியே காட்டுவம்..

தகப்பன்:   என்ன பாட்டு, எந்திரனில ஐஸ் ஆடுற குத்துப்பாட்டே?

சினேகிதி 4:  இல்லை அங்கிள், இது தமிழ்ப்பாட்டு..!

தகப்பன்:  அப்ப எங்கட பொங்கலைப்பற்றின பாட்டே..?

சினேகிதி 1:  ஓம் அங்கிள், எங்களுக்குத் தமிழ் வகுப்பில பொங்கலைப் பற்றின பாட்டு       படிப்பிச்சவை, எங்கட ரீச்சர் அந்தப் பாட்டிற்கு நடனமும் சொல்லித் தந்தவா..

தகப்பன்:  டான்ஸோ..?சினேகிதன்:  ஓம், நாங்கள் இப்ப பாடி, ஆடிக்காட்டப் போறம் பாருங்கோ..

தகப்பன்:  என்ன திரையிசை நடனம் மாதிரியே..?

சினேகிதி 2:  இல்லை, இங்கை பாருங்கோ நிறையப்பேர் வந்திருக்கினம்.

நாங்கள்     ஆடுறதை இவையும் பார்த்து ரசிக்கட்டுமன்..

(பாடல் ஒலிக்கிறது – பிள்ளைகள் எல்லோரும் பாடி ஆடுகிறார்கள்.)


தைபிறந்தால் வழிபிறக்கும்
பொங்கலோ பொங்கல்
தமிழர்களின் திருநாளாம்
பொங்கலோ பொங்கல்..     (Re - தைபிறந்தால்..)


கதிரறுத்துப் பொங்கிடுவோம்
பொங்கலோ பொங்கல்
கதிரவனை வணங்கிடுவோம்
பொங்கலோ பொங்கல்..     (Re - தைபிறந்தால்..)


உழைப்பாலே உயர்ந்திடுவோம்
பொங்கலோ பொங்கல்
ஒன்றுபட்டு வாழ்ந்திடுவோம்
பொங்கலோ பொங்கல்..     (Re - தைபிறந்தால்..)

தைபிறந்தால் வழிபிறக்கும்
பொங்கலோ பொங்கல்
தமிழர்களின் திருநாளாம்
பொங்கலோ பொங்கல்..    

பாடல் ஒலிக்கப் பிள்ளைகள் ஆடிக் காட்டவேண்டும்.

பாடல் முடிவில் எல்லோரும் ஒன்றாக வந்து பார்வையாளர்களைப் பார்த்து  வணங்கவேண்டும்.

பார்வையாளர்களில் இருந்து முதியவர் ஒருவர் மேடையில் வந்து,

‘பிள்ளைகளே புலம் பெயர்ந்த மண்ணிலும் எங்கள் மொழி பண்பாடு கலாச்சாரம் அழிந்து போகாமல் காப்பாற்றும் அடுத்த தலைமுறையினரான உங்களுக்கு எங்கள் இனிய வணக்கங்கள். உங்களை நினைத்து நாங்கள் பெருமைப்படுகின்றோம். நீங்கள் நீடூழி வாழவேண்டும்!’

பெரியவர் மேடையில் நிற்பவர்களை வாழ்த்தி விடைபெறவேண்டும்.

(திரை மூடுதல்.)

Thai Pongal Kids Song - தைப்பொங்கல்

பொங்கலோ பொங்கல்

தைபிறந்தால் வழிபிறக்கும்
பொங்கலோ பொங்கல்
தமிழர்களின் திருநாளாம்
பொங்கலோ பொங்கல்..     (RE - தைபிறந்தால்..)


கதிரறுத்துப் பொங்கிடுவோம்
பொங்கலோ பொங்கல்
கதிரவனை வணங்கிடுவோம்
பொங்கலோ பொங்கல்..     (RE - தைபிறந்தால்..)


உழைப்பாலே உயர்ந்திடுவோம்
பொங்கலோ பொங்கல்
ஒன்றுபட்டு வாழ்ந்திடுவோம்
பொங்கலோ பொங்கல்..     (RE - தைபிறந்தால்..)


தைபிறந்தால் வழிபிறக்கும்
பொங்கலோ பொங்கல்
தமிழர்களின் திருநாளாம்
பொங்கலோ பொங்கல்..    


-குரு அரவிந்தன்-Pongalo Pongal DanceNadeswara College OBA - காங்கேசந்துறை நடேஸ்வராக் கல்லூரி கனடா

சென்ற ஞாயிற்றுக்கிழமை 23-12-2012 காங்கேசந்துறை நடேஸ்வராக் கல்லூரி கனடா பழைய மாணவர்களின் குளிர்கால ஒன்றுகூடல் ஸ்காபரோ, சீவெல் வீதியில் உள்ள தேவாலய மண்டபத்தில் மாலை 6:00 மணியளவில் நடைபெற்றது. முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து, கனடிய தேசிய கீதம், கல்லூரிக் கீதம் ஆகியன இடம் பெற்றன. அவற்றைத் தொடர்ந்து எம்மினத்தின் விடுதலைக்காகத் தம்முயிர் தந்தவர்களுக்காக ஒருநிமிட மௌன அஞ்சலி இடம் பெற்றது.

நடேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர்களின் குளிர்கால ஒன்றுகூடல்.

அடுத்து சிறுவர் முதல் பெரியோர் வரை பங்குபற்றிய பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. முன்னாள் நடேஸ்வராக் கல்லூரி ஆசிரியை எழுத்தாளர் திருமதி வள்ளிநாயகி இராமலிங்கம், கல்லூரி ஆரம்பமான காலத்து வரலாற்றை இன்றைய தலைமுறைக்கு விரிவாக எடுத்துச் சொன்னார்.


நடேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர்களின் குளிர்கால ஒன்றுகூடல்.


அடுத்து பழைய மாணவர் எழுத்தாளர் குரு அரவிந்தன், உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் நடேஸ்வராக்கல்லூரி அகப்பட்டிருப்பதால் கல்லூரியின் வரலாற்றைக் கட்டாயம் ஆவணப்படுத்த வேண்டும், அதற்காக கல்லூரி ஆண்டுமலர் ஒன்றை வெளியிட வேண்டும் என்ற தனது விருப்பத்தை முன் வைத்தார். அடுத்த தலைமுறையினர் கல்லூரி வரலாற்றை அறிந்து கொள்ள இது மிகவும் உதவியாக இருக்கும் என்பதால் அதற்காகத் தனது முழுமையான ஒத்துழைப்பை தருவதாகவும் தெரிவித்தார்.


நடேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர்களின் குளிர்கால ஒன்றுகூடல்.


அடுத்து முன்னாள் பழைய மாணவரும் பட்டினசபை தலைவருமான திரு. கார்த்திகேசு அவர்கள், நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக சாதனையாளரான அமரர் பிருந்தனைக் கௌரவித்து பாராட்டினார். அடுத்து அமரர் பிருந்தனின் சாதனைக்காக மன்றத்தலைவரால் அவரது குடும்பத்தினருக்குப் பாராட்டுப் பத்திரம் வழங்கப்பட்டது. பழைய மாணவர் அரசியல் ஆய்வாளர் நடராஜா முரளிதரன், பழைய மாணவியான ஆசிரியர் கோதை அமுதன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.


நடேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர்களின் குளிர்கால ஒன்றுகூடல்.


ஒன்றுகூடலில் கலந்து கொண்ட சிறுவர்களின் தமிழ்மொழி பற்றிய உரை, பாடல்கள், வீணை, வயலின் இசை, நடனம், திரையிசை நடனம், எழுச்சி நடனம் போன்ற கலை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து இரவு விருந்து இடம் பெற்றது. தொடர்ந்து சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கமான போட்டிகள் இடம் பெற்று வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மிகவும் கவனம் எடுத்து நிகழ்ச்சிகளைத் தயாரித்திருந்ததால் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது.

மேலும் சில நிகழ்வுக் காட்சிகள் ...

நடேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர்களின் குளிர்கால ஒன்றுகூடல்.
நடேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர்களின் குளிர்கால ஒன்றுகூடல்.