Friday, January 11, 2013

Mahajana College - அதிபர் தா.து.ஜெயரத்தினம்

மகாஜன சிற்பி தா.து.ஜெயரத்தினத்தின் 100வது பிறந்தநாள்.

(குரு அரவிந்தன்)

மகாஜனா சிற்பி பற்றி தாய் வீடு (Jan 2013) கனடா பத்திரிகையில் வெளிவந்த கட்டுரை.

கல்வியையே முக்கிய மூலதனமாகக் கொண்டது ஈழத்தமிழ் சமூகம் என்பதால், அந்நிய ஆதிக்கத்தில் இருந்து கல்வியையும், சைவமரபுகளையும் காப்பாற்றும் நோக்கத்தை இலட்சியமாகக் கொண்டு தமிழர் வாழ்ந்த பிரதேசங்களில் ஆரம்பிக்கப்பட்டதுதான் சுதேசக்கல்வி நிறுவனங்கள். அந்தவகையிலே தமிழர் வாழ்ந்த பிரதேசங்களில் பல சுதேசக்கல்வி நிறுவனங்கள் ஆரம்பிக்கப் பட்டாலும், அம்பனை என்ற இடத்தில் மகாஜன சிற்பி தா. து. ஜெயரத்தினத்தின் தந்தையான பாவலர் துரையப்பாபிள்ளையால் 1910ம் ஆண்டு அவரது வீட்டுத் திண்ணையில் ஆரம்பிக்கப்பட்டதுதான் இன்று கல்வித்துறையில் மட்டுமல்ல, விளையாட்டுத்துறை நுண்கலைத்துறை போன்றவற்றிலும் பெயரும் புகழும் பெற்று விளங்கும் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியாகும்.


தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கியவர் அதன் அதிபராக இருந்த தா.து. ஜெயரத்தினம் அவர்களே. ‘உன்னை நீ அறிவாய்’ என்ற தாரக மந்திரத்தை ஒவ்வொரு மகாஜனன்களுக்கும் ஊட்டிவிட்ட பெருமை அவருக்கு உண்டு. அவரின் வெற்றிக்குக் காரணம் அவரது பண்பான குணங்களே. புன்முறுவல் தவளும் பொலிவான மலர்ந்த முகம்,எல்லோரையும் கவரும் இன்சொல், கம்பீரமான அடக்கம், சான்றோர்முன் பணிவு, எவரையும் தன் வசப்படுத்தும் சக்தி, அசையாத கடவுள் நம்பிக்கை போன்றவையே இவரின் உயர்வுக்குக் காரணமாகின்றன என்று முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் வித்தியானந்தன் தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருப்பதாக ‘எம்மை வாழவைத்தவர்கள்’ என்ற தனது நூலில் முன்னாள் மகாஜனா கல்லூரி அதிபர் திரு. பொ. கனகசபாபதி அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றார்.


அதிபர் ஜெயரத்தினம் அவர்கள் காலத்தில் ஆண்டு தோறும் பல புதுமைகள் புகுத்தப்பட்டன. இவர் மகாஜனாக் கல்லூரியில் சாரணர் இயக்கத்தைத் தெடக்கி அதன் பொறுப்பாசிரியராகக் கடமையாற்றினார். தொடர்ந்து விளையாட்டுத் துறையில் அவருக்கு இருந்த ஈடுபாடு காரணமாக அதன் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார். அக்காலத்தில் தலைசிறந்த ஆங்கில ஆசிரியர்களில் ஒருவராக இவர் கணிக்கப் பெற்றார். அதனால் கல்லூரி பங்குபற்றும் ஆங்கிலப் பேச்சுப்போட்டிகளுக்குப் பொறுப்பாக இருந்தார். 1935ம் ஆண்டு மகாஜனா வெள்ளிவிழக் கொண்டாட்டத்தின்போது மகாஜனன் என்ற வெள்ளிவிழா மலரை முதன் முதலாக வெளியிட்டார். 1960ல் தனது காலத்தில் நடந்த பொன்விழாவை மிகவும் சிறப்பாகக் கொண்டாடினார். 1946ம் ஆண்டு வடமாகாண ஆசிரியர் சங்கத்தின் செயலாளராகப் பொறுப்பேற்றார்.

பிற்காலத்தில் உயர்வகுப்பில் கல்வி கற்கும்போது அவரிடம் ஆங்கிலம் கற்கும் பாக்கியம் எனக்கும் கிடைத்ததையிட்டு நானும் பெருமைப் படுகின்றேன். ஆங்கிலம் கட்டாயம் கற்றவேண்டும் என்ற ஆர்வத்ததைத் தூண்டிவிட்டவர் அவர்தான். அதுமட்டுமல்ல சைவசமயத்தை வளர்ப்திலும் முன்னின்று பாடுபட்டார். கடமை கண்ணியம் கட்டுப்பாடு மட்டுமல்ல நேரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து குறிப்பிட்ட நேரத்திற்கு ஒன்றைச் செய்ய வேண்டும் என்பதில் ஏனைய ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் முன்னோடியாக நின்றார்.


திரு. தா. து. ஜெயரத்தினம் அவர்கள் 1932ம் ஆண்டு உதவி ஆசிரியராக மகாஜனாக் கல்லூரியில் சேர்ந்தார். அதிபராக இருந்த சின்னப்பாபிள்ளையின் மரணத்தைத் தொடர்ந்து 1945ம் ஆண்டு மகாஜனாக் கல்லூரியின் அதிபராகக் கடமை ஏற்றார். மாணவர்களின் கல்வியில் அதிக அக்கறை கொண்ட இவரது விடா முயற்சியால் 1947ம் ஆண்டு மகாஜனா இரண்டாம்தரப் பாடசாலையாகத் தரமுயர்த்தப்பட்டது. பட்டதாரி ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக இந்தியாவில் இருந்து மகாஜனாக் கல்லூரிக்கு மேலதிக ஆசிரியர்கள் வரவழைக்கப் பட்டனர். தொடர்ந்து 1949ம் ஆண்டு மகாஜனாக் கல்லூரி முதலாம்தர பாடசாலையாக மாறியது. அந்த வருடம் வடமாகாண ஆசிரியர் சங்கத்தின் தலைவராக இவர்  தெரிவு செய்யப்பட்டார். 1954ம் ஆண்டு கல்லூரிக் கட்டிட நிதிக்காக் களியாட்ட விழா ஒன்றை நடத்தி நிதி சேகரித்தார். இதற்காக இந்தியாவில் இருந்து சினிமா நடிகர்களை வரவழைத்தார். அதே ஆண்டு மாணவர்கள் தங்கிப் படிப்பதற்கான விடுதி வசதிகளைச் செய்து கொடுத்தார். 1955ம் ஆண்டு கல்லூரியில் சுயதொழில் கற்பதற்கான திட்டங்களைச் செயல்முறைப்படுத்தினார். மரவேலை, நெசவு, மனையியல் போன்ற புதிய துறைகளை அறிமுகப்படுத்தினார். 1957ம் ஆண்டு அவரது ஆசிரியப் பணியின் வெள்ளிவிழாவை கல்லூரி ஆசிரியர்களும் மாணவர்களும் சேர்ந்து கொண்டாடினர். இதே ஆண்டு மகாஜனாக் கல்லூரியின் சார்பில் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலிலும், திருக்கேதீஸ்வரம் கோயிலிலும் திருவிழாக்கள் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து இப்பொழுதும் மகாஜனாவின் சார்பில் வருடாவருடம் திருவிழாக்கள் செய்யப்படுகின்றன. 1958ம் ஆண்டு நடனம், சங்கீதம் போன்ற கலைத்துறைகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. 1960ம் ஆண்டு கல்லூரி தனது பொன் விழாவைக் கொண்டாடியது. இதே ஆண்டு கல்லூரியை அரசு பொறுப்பேற்றது. பாடசாலையின் தேவை கருதி இவரது முயற்சியால் கல்லூரிக் காணியில் ஆலயம் அமைக்கப்பட்டது. இவரது காலத்தில் மகாஜனா கல்வியில் சிறந்து நின்றதால் பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை 1800 ஆக உயர்ந்தது. 1961ல் அதிஉயர் தரத்திற்குக் கல்லூரியின் தரம் உயர்த்தப்பட்டது.


இவரது காலத்தில் உதைபந்தாட்டத்தில் சாம்பியன்களாக வந்து கல்லூரி சாதனை படைத்தது. 1962ல் யப்பானில் நடந்த ஆசிய சாரணியர் விழாவில் மகாஜனா சாரணியர்களும் கலந்து கொண்டு பெருமை தேடித்தந்தனர். அதிபர் ஜெயரத்தினம் அவர்கள் யாழ் பாடசாலை விளையாட்டுச் சங்கத்தின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். இதே வருடம் யாழ்ப்பாணத்திலேயே மிக அதிகமான மாணவர்கள் மகாஜனாக் கல்லூரியில் இருந்து பல்கலைக் கழகத்திற்கு அனுமதி பெற்றிருந்தனர். உதைபந்தாட்டத்தில் தொடர்ந்தும் மகாஜனா சாதனை படைத்தது. 1965ல் மகாஜனா ஹொக்கி விளையாட்டில் சாம்பியனாக வந்தது. இதே ஆண்டு நாடகத் துறையிலும் முதலிடத்தைப் பெற்றது. 1961ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து பல வருடங்கள் உதைபந்தாட்டத்திலும், ஹெக்கியிலும் மகாஜனா சாதனை படைத்து வந்தது. அதேபோல துடுப்பாட்டத்திலும், மெய்வல்லுனர் போட்டிகளிலும் அரிய சாதனைகளைப் படைத்தது. 1970ம் ஆண்டு வைரவிழாவை மகாஜனா கொண்டாடியபோது அதிபர் ஜெயரத்தினம் முன்னின்று வழிநடத்தினார். இரண்டு வாரங்கள் நடைபெற்ற இந்த விழாவைத் தொடர்ந்து வருட முடிவில் அதிபர் ஜெயரத்தினம் அவர்கள் தனது பதவியில் இருந்து ஓய்வு பெற்றுக் கொண்டார்.
1972ம் ஆண்டு இவரது தந்தையான பாவலர் துரையப்பாபிள்ளையின் நூறாவது பிறந்தநாள் கல்லூரியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டபோது பாவலரின் நினைவாக நூலும் வெளியிடப்பட்டது. மகாஜன சிற்பியான இவரது விடாமுயற்சியாலும், கடின உழைப்பாலும், இவர் ஓய்வு பெற்றிருந்தாலும் 1978ம் ஆண்டு மகாஜனாவின் மாணவர் தொகை 2350க்கும் மேலாகியிருந்தது. இவரது காலத்தில் பல கட்டடங்கள், ஆய்வுகூடங்கள், விளையாட்டு மைதானங்கள், அரங்கங்கள் எல்லாம் புதிதாகக் கல்லூரிக்கு அணிசேர்த்திருந்தன. புத்தகசாலை, தேனீர்ச்சாலை போன்றனவும் மாணவர்களின் தேவைகருதி இடம் பெற்றன. 1970ம் ஆண்டு இவர் ஓய்வு பெற்று வீட்டிலே தங்கியிருந்தாலும் இவரது நினைவெல்லாம் கல்லூரியிலேயே இருந்தது. அந்த நல்ல நினைவோடு 1975ம் ஆண்டு இவர் அமரரானார். அந்த சோக செய்தியைக் கேட்டுக் கண்கலங்கியோர் பலர்.


மகாஜனா சிற்பி தா.து. ஜெயரத்தினத்தைக் கௌரவிக்கும் முகமாக அவரது பெயரும் மகாஜனா கல்லூரிக் கீதத்தில் இடம் பெறச் செய்யப்பட்டது. அதிபர் தா.து. ஜெயரத்தினத்தின் காலத்தை மகாஜனாவின் பொற்காலம் என்றும், போர் சூழ்நிலை காரணமாக இடம் பெயர்ந்த காலத்தை மகாஜனாவின் இருண்ட காலமாகவும் சிலர் குறிப்பிடுவர். பல வருடங்களாக இடம் பெயர்து அலைந்த மகாஜனாக் கல்லூரி 1999ம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 15ம் திகதி; மீண்டும் தனது பழைய இருப்பிடத்திற்கு நிரந்தரமாக வந்தது. 2010ம் ஆண்டு மகாஜனாக்கல்லூரி நூற்றாண்டு கண்டபோது, கல்லூரியிலும் புலம்பெயர்ந்த மண்ணில் இயங்கும் பழைய மாணவர் சங்கங்களிலும் அதிபர் ஜெயரத்தினத்தின் பெயரும், அவர் கல்லூரிக்காற்றிய தொண்டும் நினைவு கூரப்பட்டது. மகாஜனாவின் இலக்கிய மைந்தர்களால் பல நூல்கள் சமர்ப்பணம் செய்யப்பட்டன. இன்று அவர் எங்கள் மத்தியில் இல்லாவிட்டாலும், மகாஜனன்கள் இருக்கும்வரை அவர் எல்லோர் மனதிலும் நிலைத்து நிற்பார். மாண்புற மகனாம் மகாஜன சிற்பி ஜெயரத் தினம்பணி நினைவோம்.

No comments:

Post a Comment