Friday, January 11, 2013

T.T.Jeyaratnam - தெ.து. ஜெயரத்தினம்

அவர் ஒரு தீர்க்கதரிசி

மாண்புமிகு மனிதரை மறக்குமா நெஞ்சம்   

மகாஜனா சிற்பி அதிபர் தெ.து. ஜெயரத்தினம் அவர்களின் 100வது பிறந்த தினத்தை முன்னிட்டு மகாஜனா கனடா பழையமாணவர்கள் வெளியிட்ட நினைவுமலரில் வெளிவந்த எழுத்தாளர் குரு அரவிந்தனின் பதிவுகள்.

குரு அரவிந்தன்


மகாஜனாக் கல்லூரியில் எனக்கு அனுமதி கிடைத்து சில நாட்களாகியிருக்கும். வழமைபோல காலையில் எழுந்து மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் மேற்கு வீதியில் இருந்த மகிழமரத்தில் சில பூக்களைப் பறித்துப் பையில் போட்டுக்கொண்டு, சைக்கிள் ஓடியபடியே கோபுரத்தைக் கடக்கும்போது ஒற்றைக்கையை நெஞ்சில் வைத்து மாவைக்கந்தனை மனதில் கும்பிட்டுக் கொண்டு காங்கேசந்துறை வீதிவழியே அவசரமாக கல்லூரி நோக்கிச் சென்று கொண்டிருந்தேன். அந்த நேரம் பார்த்து காங்கேசன்துறைவீதி வழியாக கனகசபாபதி மாஸ்டர், ஆறுமுகராஜா மாஸ்டர், தியாகராஜா மாஸ்டர், சண்முகசுந்தரம் மாஸ்டர், சுந்தரமூர்த்தி மாஸ்டர் என்று ஒரே ஆசிரியர் கூட்டமாய் கல்லூரி நோக்கி சயிக்கிளில் உலா வந்து கொண்டிருந்தார்கள். நேரத்திற்குப் போகவேண்டும் என்றால், மரியாதைக்காக மறுபக்கம் பார்த்துக் கொண்டு இவர்களை எல்லாம்; முந்திக் கொண்டு வேகமாகச் சயிக்கிள் ஓடவேண்டும். புதிய நண்பர்களான பாலகோபால்ராஜாவும் சூரியகுமாரும் தெல்லிப்பழை சந்தியில் கதைத்துக் கொண்டு நின்றார்கள். ‘மச்சான் நானும் வாறேன்’ என்றபடி ஓடி வந்த பாலகோபாலின் குரல் கேட்டு சயிக்கிளை நிறுத்தினேன். ஓடி அருகே வந்தவன் நேரத்தைப் பார்த்துவிட்டு ‘கொஞ்சம் பொறுத்துப் போகலாம் நின்றுகொள்’ என்றான். ‘கொஞ்சம் பொறுப்பதா? ஏற்கனவே நேரம் போச்சு, நான் போறேன்’ என்று சொல்லிவிட்டு விரைவாக நான் கல்லூரி நோக்கிச் சென்றேன்.


அன்று வாசல் கடமையில் ஈடுபட்டிருந்த மாணவர் தலைவராக இருந்த சுபாஸ் காலையில் தாமதமாக வந்த எல்லா மாணவர்களையும் அதிபர் ஜெயரத்தினத்தின் அறையின் முன்னால் நிரையாக நிற்கவைத்தார். நானும் அவர்களில் ஒருவனாக நின்றேன். காலை வழிபாடு முடிந்ததும் அதிபர் ஜெயரத்தினம் பிரம்புடன் வந்தார் ஒவ்வொருவராகக் காரணம் கேட்டார். சிலருக்குக் கையை நீட்டச் சொல்லி பிரம்பால் அடி விழுந்தது. சிலர் அவர் கேட்காமலே கையை நீட்டினார்கள். அச்சுவேலி பேருந்து சில சமயங்களில் தாமதமாக வருவதுண்டு. அந்த வண்டியில் வந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று கேட்டு அவர்களை மட்டும் வகுப்பிற்குப் போகச் சொன்னார். எனக்குக் கிட்ட வந்தபோது கையை நீட்டினேன். நிமிர்ந்து பார்த்தார், ‘முதற்தரம் லேட்டாய் வந்திருக்கிறாய், இனிமேல் லேட்டாய் வரக்கூடாது’ என்று சொல்லி அடி போடாமலே என்னை அனுப்பிவிட்டார். தலை குனிந்தபடி வகுப்பை நோக்கிச் சென்றபோது வாசலில் பாலகோபால் சிரித்தபடி நின்றான். ‘சொன்னால் கேட்கமாட்டேன் என்றாய் இப்ப பார்த்தியா?’ என்று ஒரு சிரிப்புச் சிரித்தான். அவன் எப்படித் தண்டனை பெறாமல் உள்ளே வந்தான் என்பது அப்போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.


‘ஏன் எனக்கு அதிபர் தண்டனை தரவில்லை, முதற்தரம் என்று எப்படி நினைவில் வைத்திருந்தார்’ என்று நான் அடிக்கடி நினைத்துப் பார்த்து அவரது ஞாபகசக்தியை வியப்பதுண்டு. அன்று தொடக்கம் அவர் என் மீது வைத்திருந்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும், நேரத்தின் முக்கியத்துவத்தை அவர் எனக்கு உணர்த்தியிருந்ததால் இனிமேல் கல்லூரிக்குத் தாமதமாக வரக்கூடாது என்ற எண்ணம் எனக்குள் எழுந்தது. அன்று அவர் தண்டனை தந்திருந்தால், ‘என்ன இது ஒரு பிரம்படிதானே சமாளிக்கலாம்’ என்று மேலும் மேலும் தாமதமாக வருவதற்கு வழி வகுத்திருக்கும். ஆனால் அன்று அவர் வாழ்நாளில் மறக்கமுடியாதபடி நேரத்தின் முக்கியத்துவத்தை ((Pரnஉவரயடவைல) எனக்கு உணர்த்தியிருந்தார். கனடாவில் இருக்கும் அடுத்த தலைமுறையினருக்கு ஆசிரியர் மாணவர்களைப் பிரம்பால் அடிப்பது என்பது புதுமையான விடையமாக இருக்கும், ஆனால் இலங்கையில் பிறந்த எங்கள் தலைமுறைக்கு இது பழகிப் போனதொன்றாகும். ஏன், உங்கள் அப்பா அம்மாகூடப் படிக்கிற காலத்தில் தங்கள் ஆசிரியரிடம் அடி வாங்கியிருக்கலாம், கேட்டுப் பாருங்கள்.


மகாஜனன்களின் விழா என்றால் அது சொன்ன நேரத்திற்குத் தொடங்கும் எனவே நேரத்திற்குப் போகவேண்டும் என்ற நினைவை எல்லோர் மனதிலும் பரந்த அளவில் விதைக்க அதிபர் ஜெயரத்தினத்தின் இந்த உத்திதான் உதவியாக இருந்தது. இன்று எங்கள் மத்தியில் அவர் இல்லை என்றாலும்  எங்கள் கல்லூரிக் கலைவிழாக்கள் எங்கே நடந்தாலும் சொன்ன நேரத்திற்கு தொடங்கும் போதெல்லாம், கல்லூரிக் கீதம் பாடும் போதெல்லாம் அவர்தான் எல்லா மாணவர்களின் நினைவிலும் நிற்கின்றார். எனது தமிழ் ஆசிரியரான வித்துவான் நா. சிவபாதசுந்தரனார் அவர்கள்தான் அதிபர் தெ.து. ஜெயரத்தினத்தின் வேண்டு கோளுக்கு இணங்க மகாஜனாக் கல்லூரிக் கீதத்தை இயற்றியிருந்தார். பின்நாளில் தன் வாழ்க்கையைக் கல்லூரிக்கு அர்ப்பணித்த மகாஜன சிற்பி அதிபர் தெ.து.ஜெயரத்தினத்தின் பெயரும் கல்லூரிக் கீதத்தில் இணைக்கப்பட்டது.
1945ம் ஆண்டு அதிபராகப் பதவிஏற்ற தெ.து.ஜெயரத்தினம் அவர்கள் தெல்லிப்பழை மகாஜனாவைக் கிராமத்துப் பள்ளிக்கூடம் என்று மற்றவர்கள் கேலி செய்த போதெல்லாம் கொஞ்சங்கூட மனம் தளர்ந்து போகவில்லை. படிப்பிலும், விளையாட்டிலும் மட்டுமல்ல ஒழுக்கத்திலும் உயர்ந்து நின்றால் உலகமே திரும்பிப் பார்க்கும் என்ற நம்பிக்கையோடு கடினமாக உழைத்தார். இதனால் 1947ல் இரண்டாம்தரப் பாடசாலையாகவும், 1949ல் முதலாம்தர பாடசாலையாகவும் தரம் உயர்த்தப்பட்டது. அவரது காலத்திலேயே 1960ல் கல்லூரி பொன்விழாவைக் கொண்டாடியது. அவரது நம்பிக்கையும் உழைப்பும் வீண்போகாது என்பதை அதிக மாணவர்கள் மகாஜனாவில் இருந்து பல்கலைக் கழகம் புகுந்தபோதும் சரி, நாடகத் துறையிலும்சரி, அடுத்தடுத்து விளையாட்டுத் துறையில் குறிப்பாக ஹொக்கி, உதைபந்தாட்டத்தில் சாம்பியன்களாக வந்தபோதும் சரி மாணவர்களைக் கொண்டே சாதித்துக் காட்டினார். அகில இலங்கையையே மகாஜனாவின் பக்கம் திரும்பிப் பார்க்கவைத்த அதிபர் தெ.து. ஜெயரத்தினம் அடைந்த இந்த வெற்றிக்கு அவரது தந்தையான கல்லூரி ஸ்தாபகர் பாவலர் துரையப்பாபிள்ளையும் அவரைத் தொடர்ந்து அதிபராக வந்த அதிபர் கா.சின்னப்பாவும் முக்கிய பங்கு வகித்திருந்தார்கள் என்பதையும் மாணவர்களான நாங்கள் மறக்க முடியாது. இவரது கால கட்டத்தில் விடுதி வசதிகளோடு கூடிய கல்லூரியாக மகாஜனா மாற்றப்பட்டதால் கல்லூரி மாணவர் தொகை 1800 ஐயும் தாண்டியிருந்தது. 1978ல் அதையும் கடந்து சுமார் 2350 மாணவர்கள்வரை பதிவாகியிருந்தனர். அதிபர் தெ.து. ஜெயரத்தினத்திற்குப் பின் அதிபர்களாக பொறுப்பேற்றவர்களும் கஷ்டமான காலக்கட்டத்திலும் தளர்ந்துபோகாது மகாஜனாவைப் பேரும் புகழுடனும் கொண்டு நடத்தினர்.


ஆங்கிலம் கட்டாயம் படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தை எனக்குள் தூண்டிவிட்டவர் அதிபர் ஜெயரத்தினம்தான். எங்களுக்கு உயர்தர வகுப்பிற்கு ஆங்கிலம் ஒரு பாடமாக எடுத்தார். ஆங்கிலத்தை பிழையின்றி ஓரளவு எழுதப் பழகி வைத்திருந்தோமே தவிர சரியான உச்சரிப்போடு பேசிப்பழகவில்லை. ஊரிலே ஆங்கிலம் பேசிப்பழகுவதற்குரிய சந்தர்ப்பமும் பொதுவாகப் பல மாணவர்களுக்குக் கிடைக்கவில்லை. பிற்காலத்தில் பட்டயக்கணக்காளர் நிறுவனத்தில் மாணவனாகச் சேர்ந்தபோதும், மகாராஜா நிறுவனத்தில் கணக்காளராக இணைந்தபோதும், ஆங்கிலம் ஏன் அவசியம் என்பதை அதிபர் ஒரு தீர்க்கதரிசிபோல அன்று ஏன் அறிவுறுத்தினார் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளமுடிந்தது. அன்று அவர் கற்றுத்தந்த ஆங்கிலம் பிற்காலத்தில் புலம்பெயர்ந்த மண்ணிலும் பல மாணவர்களுக்குப் பெரிதும் உதவியாக இருந்தது. இன்றும் மகாஜனன் என்று பெருமையாகச் சொல்வதற்கு ஒரு மாணவனாய் அவரிடம் நான் கற்றுக் கொண்ட முக்கிய பாடம் நேரத்தின் முக்கியம் பற்றியதாகும். இதைவிட ஒழுக்கம், கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோடு எப்படி வாழ்க்கையை சீராக அமைக்க முடியும் என்பது போன்ற புறம்சார்ந்த பாடங்களையும் அவரிடம் கற்றுக் கொண்டவர்கள் பலர்.


உயர்தர வகுப்பில் கற்கும்போது தமிழ் மன்றத்தின் செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டபோது தமிழருவி த. சண்முகசுந்தரம் ஆசிரியர் அவர்கள் என்னை அழைத்துச் சென்று அதிபர் ஜெயரத்தினத்திடம் புதிய பதவி பற்றி அறிமுகம் செய்தார். ஏற்கனவே ஆங்கில வகுப்பில் பரிட்சயமாய் இருந்ததால், என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு அவருடைய புன்னகையுடனான மெல்லிய தலையசைவே சம்மதம் என்று புரியவைத்தது. ‘பதவி முக்கியமல்ல, பதவியில் இருக்கும்போது என்ன செய்கிறோம் என்பதுதான் முக்கியம்’ என்று சொல்லி அவர் என்னை வாழ்த்தியது இப்பொழுதும் மனதில் நிற்கிறது. தமிழ் மன்றத்தின் சார்பில் பல அறிஞர்களை இலங்கையிலும் இந்தியாவிலும் இருந்து அழைத்து வந்து மாணவர்களுக்குப் பயனுள்ள சொற்பொழிவுகளை ஆற்ற வைப்பதற்கு அதிபர் தெ.து. ஜெயரத்தினம் அவர்கள் ஆலோசனையும், மிகுந்த ஒத்துழைப்பும் நல்கினார். அதன் மூலம் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என்ற தன்நம்பிக்கையை எனக்குள் ஏற்றி வைத்தவர். அதேபோல 1970ல் வைரவிழாவை முன்னிட்டு கல்லூரியில் இரண்டு வாரங்களாக நடந்த கண்காட்சி விழாவும் சிறப்பாக நடைபெற முன்னின்று பாடுபட்டார். சிறந்த ஆசிரியராய், அதிபராய், சிறந்த நிர்வாகியாய், இருந்த இவர் இயல் இசை நாடகம், சமயம், விளையர்டுத்துறை போன்ற துறைகளையும் தனது காலத்தில் ஊக்குவித்தார். 1970ம் ஆண்டு இறுதியில் ஆசிரியர், மாணவர், பெற்றோரால் விரும்பப்பட்ட அவர் மகாஜனாக் கல்லூரின் அதிபர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றபோது பிரிவுத் துயரால் கண்கலங்கிய மாணவ, மாணவிகளும் உண்டு.


இன்று மகாஜனாக் கல்லூரி பழைய மாணவர் சங்கங்கள் பல நாடுகளிலும் அமைக்கப்பட்டு சிறப்பாக இயங்கி, சைவத் தமிழ் பண்பாட்டைக் கருவூலமாகக் கொண்ட கல்லூரிக்கு ஆதரவு கொடுத்து வருவதற்குக் காரணம் அதிபர் தெ.து. ஜெயரத்தினத்திடம் படித்த மாணவர்களும் அவர்மீது மதிப்பு வைத்திருந்த மாணவர்களும் அதன் அங்கத்தவர்களாக இருப்பதும் ஒரு காரணமாகும். அவருடைய நினைவுகள் மறக்கமுடியாதவையாகையால், வருடாவருடம் ஒக்டோபர் மாதம் 29ம் திகதி அதிபர் ஜெயரத்தினம் நினைவுதினம் மகாஜனாக்கல்லூரியில் நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகின்றது. அவரது நூறாவது பிறந்த தினத்தைக் கொண்டாடும்போது அவர் எங்கள் மத்தியில் இல்லாவிட்டாலும் அவர் விட்டுச் சென்ற இலட்சியங்களைக் காப்பாற்றுவதில் புலம்பெயர்ந்த மகாஜனன்கள் முன்னிற்பதையிட்டு எமக்கு மிகவும் பெருமையாக இருக்கின்றது. வாழ்க மகாஜனா!

No comments:

Post a Comment