Tuesday, February 5, 2013

Kiss Night Club - கிஸ் இரவு விடுதி

இரவு விடுதியின் மரணப் பொறி

குரு அரவிந்தன்பிறேசிலில் உள்ள சான்டாமரியாவில் உள்ள கிஸ் இரவு விடுதியில ஜனவரி மாதம் 27ம் திகதி அதிகாலை 2:15 மணியளவில் இரவின் நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டு அவலக் குரல்கள் எழுந்தன. அதிகாலையில் ஏன் இந்த அவலக் குரல் என்று ஊரே திரண்டு வந்து பார்த்தபோது இரவு விடுதி தீப்பிடித்திருந்தது. திடீரென கிஸ் இரவு விடுதியில் தீப்பிடித்துக் கொண்டதால், எங்கும் கரும்புகை மண்டலமாகக் காட்சியளித்தது. அந்த மரணப் பொறியில்  அகப்பட்டு மண்டபத்தில் இருந்த 235 பேர் மூச்சுத்திணறி மரணமடைந்து விட்டார்கள். இதைவிட சுமார் 170 பேர் காயமடைந்திருக்கிறார்கள். இவர்களில் 83 பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன. பிள்ளைகள் உள்ளே இருந்ததால் பெற்றோர்கள் பதட்டத்தோடு அவஸ்தைப் பட்டார்கள்.
பிறேசிலில் உள்ள நகரமான சான்டாமரியாவில் உள்ள ஆறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஒன்று சேர்ந்து தங்கள் ஒன்றுகூடலுக்காக இந்த இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். இசை நிகழ்ச்சி செய்த பான்ட் குழுவினர் தங்கள் இசை நிகழ்ச்சியின் போது உள்மண்டபத்தில்  வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் செய்வது வழக்கம். அன்று நடந்த இந்த அவல மரணத்திற்குப் பல காரணங்கள் இருந்ததாகப் பொலீசாரின் விசாரணையின்போது தெரியவந்தன. சட்டப்படி பொருத்தப்பட வேண்டிய பாதுகாப்புச் சாதனங்கள் அந்த மண்டபத்தில் முறையாகப் பொருத்தப் பட்டிருக்கவில்லை. குறிப்பாக மண்டபத்தில் புகை ஏற்படும்போது ஓசை எழுப்பும் புகை அலாரம் போதிய அளவு அந்தக் களியாட்ட மண்டபத்தில் பொருத்தப்பட்டு இருக்கவில்லை. அங்கிருந்த தீயணைக்கும் கருவிகள் கூடப் பாவனைக்குகந்தாக இருக்கவில்லை என்பது அப்போதுதான் தெரியவந்திருக்கிறது. ஆபத்து நேரத்தில் வெளியேறுவதற்கு ஒரேயொரு வெளியேறும் வழியைத் தவிர, வேறு வழிகள் எதுவும் இருக்கவில்லை. அப்படி இருந்த வழிகளையும் பாதுகாப்பு அதிகாரிகள்  ஒருவரும் வெளியேறாதபடி பூட்டியே வைத்திருந்தனர். கூரையில் தீப்பிடித்துக் கொண்டபோது வெளியேற முயற்சித்தவர்கள் பாதுகாப்பு அதிகாரிகளிடம் அதைப்பற்றிக் குறிப்பிட்போது அவர்கள் அதை நம்பவில்லை. அவர்கள் செலுத்த வேண்டிய உரிய பணத்தைக் கட்டாமல் அவர்கள் வெளியேறமுடியாது என்று தடுத்து விட்டார்கள்.


சுமார் 1200 பேர்வரை கொள்ளக்கூடிய கிஸ் இரவு விடுதி மண்டபத்தில் அந்த நிகழ்ச்சியின்போது 1500 பேர்வரை இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. மின்சார விளக்குகள் அணைக்கப்பட்ட நிலையில், கரும்புகை மண்டலத்திற்குள் அவதிப்பட்ட ஐம்பதிற்கும் மேற்பட்ட இசைரசிகர்கள் கழிவறைக்குள் இருந்து வெளிச்சம் வந்ததால், வெளியே செல்லும் கதவு என்று நினைத்து கழிவறைக்குள் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள். அதுவே அவர்களுக்கு மரணக்குழியாப் போய்விட்டது. குறுகிய பாதை வழியாக வெளியேற முற்பட்ட சிலர் தரையில் விழுந்தும், மூச்சுத் திணறியும் இறந்திருக்கிறார்கள்.


இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சென்ற வாரம் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வீதியில் ஊர்வலமாகச் சென்று இதற்காக நீதி கேட்டிருக்கிறார்கள். இதற்குப் பொறுப்பானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று குரல் கொடுத்திருக்கிறார்கள். யாராக இருந்தாலும் பாதிக்கப்பட்டவர்களின் வலியைப் புரிந்து கொண்டு இதற்குக் காரணமானவர்களைத் தண்டிக்க வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கையாக இருந்தது.; இப்படியான மரணங்களுக்குக் காரணமாக இருந்தவர்கள் காரணம் சொல்லாமல் தப்பிக்கொள்ள நினைப்பதற்கு வழி வகுத்துவிடலாம் என்பது அவர்களின் ஒருமித்த குரலாக இருந்தது. இவர்களின் வேண்டுகோளைத் தொடர்ந்து பிறேசிலில் உள்ள எல்லா இரவு விடுதிகளிலும் அவை பாதுகாப்பாக இருக்கின்றனவா என்று சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பாதுகாப்புக் கருவிகளும், வெளியேறும் வழிகளும் இல்லாத இரவுவிடுதிகள் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கின்றன. அடுத்தவருடம் உலகக் கிண்ணத்திற்கான உதைபந்தாட்டப் போட்டியும், 2016ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியும் பிறேசிலில் நடத்த உத்தேசித்திருப்பதால் இப்படியான பாதுகாப்பு விடையங்களில் அதிக கவனம் செலுத்த பிறேசில் அரசாங்கம் முன்வந்திருக்கிறது. நேற்று பிறேசிலில் உள்ள றியோடியன்றோவில் உள்ள உதைபந்தாட்ட மைதானத்தில் வேலி சரிந்து விழுந்ததில் ஒருவரும் மரணமடையாவிட்டாலும், பலர் காயமடைந்திருந்தனர்.


இதுபோன்ற கவலையீனம் காரணமாக இரவு விடுதிகளில் ஏற்பட்ட தீவிபத்தால் பல மரணங்கள் அவ்வப்போது பல நாடுகளிலும் நடந்திருக்கின்றன. ரஸ்யாவில் உள்ள லேம்கோஸ் இரவு விடுதியில் 2009ம் ஆண்டு நடந்த தீவிபத்தின்போது 152 போர் மரணமடைந்திருக்கிறார்கள். ஆஜன்ரைனாவில் உள்ள புவனஸ்ஐரஸ் என்ற இடத்தில் உள்ள இரவுவிடுதியில் டிசெம்பர் 2004ம் ஆண்டு நடந்த தீவிபத்தின்போது 194பேர் மரணமடைந்தார்கள். 2003ம் ஆண்டு றோட்ஐலண்டில் உள்ள இரவுவிடுதியில் நடந்த விபத்தின்போது 100 பேரும், டிசெம்பர் 2000ம் ஆண்டு சீனாவில் நடந்த தீவிபத்தின்போது 309 பேரும் மரணமடைந்திருக்கிறார்கள். இதுபோலவே பிறேசிலில் 1961ம் ஆண்டு சர்கஸ் கம்பெனி ஒன்றில் நடந்த விபத்தின்போது சுமார் 500 பேர்வரை மரணமடைந்திருந்தார்கள். அதன் பின் நடந்த பெரிய விபத்தாக கிஸ் இரவு விடுதியின் விபத்துக் கருதப்படுகின்றது.


இத்தகைய விபத்துக்கள் அவர்களுக்கு மட்டுமல்ல எங்கள் நாட்டிற்கும் பொருந்தும். எங்கள் சமூகத்தில் நிகழ்வு ஒன்று நடக்கும் போது, சுற்றிவர என்ன ஆபத்து காத்திருக்கிறது என்பது தெரியாமல் நாங்களும் ஒன்று கூடுகின்றோம். குறிப்பாக சமய நிகழ்ச்சிகள் நடக்கும்போது மங்கள விளக்குக் ஏற்றுவது, மெழுகுதிரி கொளுத்துவது, நெருப்பு எரிப்பது, ஊதுபத்தி எரிப்பது போன்ற தீயோடு சம்பந்தப்பட்ட பல சடங்குகள் எங்கள் மத்தியில் நடைபெறுவதுண்டு. திடீரென தீப்பிடித்துக் கொண்டால் அதை அணைப்தற்கு ஏற்ற வசதிகள் அங்கே இருக்கின்றனவா என்பதைக்கூட நாங்கள் அவதானிப்பதில்லை. நிலவறையில் இப்படியான நிகழ்ச்சிகள் நடக்கும்போது மிகவும் அவதானம் தேவை. ஏனெனில் அனேகமான நிலவறைகளில் தப்பிப்பதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. எரியூட்டக்கூடிய பெருட்கள் இருக்குமேயானால் தீ வெகுவிரவில் எங்கும் பரவிவிடும். சமீபத்தில் நிலவறையில் நடந்த ஒரு நிகழ்ச்சியின்போது மங்கள விளக்கேற்றிய ஒரு பெண்மணியின் சேலைத்தலைப்பில் தீ பற்றிக் கொண்டது. நல்ல காலமாக அருகே நின்றவர் அதை உடனே அணைத்ததால் பல மனித உயிர்கள் அங்கே காப்பாற்றப்பட்டன.


நிகழ்ச்சியை நடத்தியவர்கள் புகை வரும்போது எச்சரிக்கும் அலாரத்தைக் கூடத் தங்கள் வசதிக்காக நிறுத்தி வைத்திருந்திருக்கலாம்.
எனவே இப்படியான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது அவதானமாக இருங்கள். குறிப்பாக பொதுமக்கள்கூடும் விழாக்கள், திரைஅரங்குகள், வைத்தியசாலைகள், பாடசாலைகள், அங்காடிகள்,; போன்ற இடங்களில் அவதானமாக இருக்க வேண்டும். பொதுமக்கள் கலந்து கொள்ளும் விழாக்களில், ஆபத்தான நேரத்தில் வெளியேறும் வசதிகள் இருக்கின்றனவா என்பதை முன்கூட்டியே கவனத்தில் கொள்வது நல்லது.

No comments:

Post a Comment