Wednesday, February 13, 2013

Valentine - Bharathi Kavithai - பாரதியின் குயில்

காதலர் தினத்திற்காக:


பாரதியின் குயில் பாட்டிலிருந்து கவிதைக் கனிபிழிந்த சாற்றினிலே வசன நடையைக் கலந்து காதலர் தினத்திற்காகத் தருபவர் :

குரு அரவிந்தன். 

சோலைக் குயில் சொன்ன காதல் கதை!

கண்டதும் காதல் என்பார்களே அதுபோலவே,
குயிலியைக் கண்டதும் அவன் அவள்மீது காதல் மயக்கம்

கொண்டான். குயிலியின் கண்கள் சொன்ன காதற் கவிதைகளைச்
சொல்வதற்கோ அவனிடம் வார்த்தைகள் இருக்கவில்லை,
அதனால் கவிதையில் வடித்தான் அந்தக் கவிஞன்!தோழியரு நீயுந் தொகுத்துநின்றே யாடுவதை
வாழியவன் கண்டுவிட்டான் மையல் கரைகடந்து
நின்னைத் தனதாக்க நிச்சயித்தான் மாது நீ
மன்னவனைக் கண்டவுடன் மாமோகங் கொண்டுவிட்டாய்
நின்னையவன் நோக்கினான் நீயவனை நோக்கி நின்றாய்.
அன்னதொரு நோக்கினிலே ஆவி கலந்துவிட்டீர்.
அன்றிற் சிறுபறவை ஆண் பிரிய வாழாது
ஞாயிறுதான் வெம்மைசெயில் நாண்மலர்க்கு வாழ்வுளதோ?நிமிர்ந்த நடையைக் கவிஞன் விரும்பினாலும்,
அவள் மெல்லத் தலை குனிந்தபோதுதான் அந்த
அழகை அவனால் இரசிக்க முடிந்தது.

சற்றே தலை குனிந்தாள் சாமீ இவளழகை
எற்றே தமிழி லிசைத்திடுவேன். கண்ணிரண்டும்
ஆளை விழுங்கும் அதிசயத்தைக் கூறுவனோ
மீள விழியில் மிதந்த கவிதையெலாம்
சொல்லிலகப்படுமோ..?


அவனைக் கண்டதும் குயிலிக்கும் அவன் மீது ஒருவித ஈர்ப்பு வந்தது. அதை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் தவித்தாள். எனவே கவிதையில் வடித்தாள்:

காதலுற்று வாடுகின்றேன் காதலுற்ற செய்தியினை
மாத ருரைத்தல் வழக்கமில்லை யென்றறிவேன்
ஆனாலு மென்போ லபூர்வமாங் காதல் கொண்டால்
தானா வுரைத்தலின்றிச் சாரும் வழியுளதோ?

 தன்மீது அதீத காதல் கொண்ட காதலன் காதல் நோயால் வருந்துவதைச் சகிக்க முடியாத குயிலி அவன்மீது இரக்கம் கொண்டு, அவனை ஏற்றுக் கொள்ள முன்வருகின்றாள்.

காமன் கணைக்கிரையாய் நின்னழகைக் கண்டுருகி
நின்னை மணக்க நெடுநாள் விரும்பி, யவன்
நினைவெல்லாம் நீயாகச் சித்தம் வருந்துகையில்
தேமொழியே நீயவனை மாலையிட வாக்களித்தாய்
மையலினாலில்லை அவன் சால வருந்தல்
சகிக்காமல் சொல்லி விட்டாய்..!


காதற் கதையுரைத்து நெஞ்சங் கரைத்ததையும்
பேதைநா னங்கு பெரியமயல் கொண்டதையும்
யான் வேட்கை தீராமல் பித்தம் பிடித்ததையும்
எண்ணி எண்ணிப் பார்த்தேன் எதுவும் விளங்கவில்லை.


காதல் உள்ளம் சம்பந்தப்பட்டது, கவர்ச்சி உடல் சம்பந்தப்பட்டது.
இதையெல்லாம் கடந்த நிலையில், இரண்டும் ஒன்று சேர்ந்தால்..!

ஆவி யுருகுதடி, ஆசைக் குயிலே,
பேசமுடியாப் பெருங்காதல் கொண்டு விட்டேன்
காதலில்லையானாற் கணத்திலே சாதலென்றாய்
காதலினாற் சாகுங் கதியினிலே என்னை வைத்தாய்
எப்பொழுது நின்னை இனிப்பிரிவ தாற்றகிலேன்
இப்பொழுதே நின்னை முத்தமிட்டுக் களியுறுவேன்.

 நண்ணித் தழுவி நறுங்கள் ளிதழினையே
முத்மிட்டு முத்தமிட்டு மோகப் பெருமயக்கில்
சித்த மயங்கிச் சிலபோழ் திருந்தபின்னே
கவிதைக் கனி பிழிந்த சாற்றினிலே
காயவைத்த கட்டியினால்
மாதவளின் மேனி வகுத்தான் பிரமனென்பேன்.

 நெஞ்சங் கலக்கமெய்தி நிற்கையிலே
பக்கத்தில் வந்து பளிச்சென் றுனதுகன்னஞ்
செக்கச் சிவக்கமுத்த மிட்டான் சினங்காட்டி
நீவிலகிச் சென்றாய்.

என்னை நீ ஐயுறுதல் ஏதுக்காம் இப்பொழுதே
நின் மனைக்குச் சென்றிடுவோம் நின் வீட்டில்
என் மனதைச் சொல்வேன் எனது நிலையுரைப்பேன்
வேதநெறியில் விவாகமுனைச் செய்து கொள்வேன்
மாதரசே என்று வலக்கைதட்டி வாக்களித்தான்.

சோலை குயில், காதல் சொன்ன கதை யத்தனையும்
மாலையழகின் மயக்கத்தால் உள்ளத்தே
தோன்றியதோர் கற்பனையே!

No comments:

Post a Comment