Wednesday, February 6, 2013

Valentine - திக்குத் தெரியாத காட்டில்..

திக்குத் தெரியாத காட்டில்..

குரு அரவிந்தன்


காதலர் தினத்தை எதிர்பார்த்து எனது தோழிகள் பலர் காத்திருந்தார்கள். இந்த நாட்டில் அதற்காகக் காத்திருக்க வேண்டும் என்கிற அவசியமேயில்லை. சிலருக்கு எல்லா நாளுமே காதலர் தினம்தான். அவரவர் தங்கள் வசதிக்கு ஏற்ப ஒன்றாய் வாழத் தொடங்கி விடுவார்கள். ஆனாலும் காதலர் தினத்திற்கென்று ஒரு தனித்துவம் உண்டு. அன்பைத் தெரிவிக்கும் நாளாகமட்டுமல்ல, காதலர்கள் திருமணம் செய்யத் தமது விருப்பத்தைத் தெரிவிக்கும் நாளாகவும் இது அமைவதுண்டு. அதை நினைக்க எனக்கோ பயமாக இருந்தது.


கடந்த மூன்று வருடங்களாக அவனை எனக்குத் தெரியும். அவன் என்னுடைய நிறத்தவனும் அல்ல, என்னுடைய மதத்தவனும் இல்லை, என்னுடைய மொழி பேசுபவனும் இல்லை. எல்லாவற்றிலும் அவன் வேறுபட்டிருந்தான். அவனது தாத்தா காலத்தில்தான் அவனது தாத்தா வேறு நாட்டில் இருந்து வந்து இங்கே குடியேறியிருந்தார். அவனோ மூன்றாவது தலை முறையைச் சேர்ந்தவன். ஆனால் அவன் மனிதன், மனிதநேயம் கொண்ட என்னுடைய நல்லதொரு கல்லூரித் தோழன். அவனுடனான உறவு அவ்வளவுதான் என்று இதுவரையும் நான் நினைத்திருந்தேன். என்னை நோக்கிய அவனது பார்வை சில மாதங்களாக எனக்குள் எதையோ உணர்த்துவதாக உணரத் தொடங்கினேன். எனக்குள் ஏற்பட்ட பருவமாற்றங்கள் மட்டும்தான் இதற்குக் காரணமா, இல்லை நான் வளர்க்கப்பட்ட சூழ்நிலையும் இதற்குக் காரணமா என்று எனக்குத் தெரியவில்லை. சில மாதங்களாக ஏற்பட்ட குழப்ப நிலையில் ஒன்றுமே எனக்குப் புரிவதாயில்லை. எனக்குள் ஏற்பட்டிருக்கும் தவிப்பை யாரிடம் பகிர்ந்து கொள்வது என்பது எனக்கான கேள்வியாய் இருந்தது. இதுபற்றித் தோழிகளிடம் சொன்னால் ‘தொடர்ந்து செல்’ என்று நிச்சயம் பச்சைக் கொடிதான் காட்டுவார்கள். ஏனென்றால் அவர்கள் இங்கே பிறந்து இங்கே வளர்ந்தவர்கள். இந்த நாட்டு சூழ்நிலையோடு ஒன்றிப் போனவர்கள். காதல் பற்றி அவர்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை. எனது பெற்றோருக்கோ இது புதிய இடம். இது அவர்கள் புகுந்த இடம். இதுபற்றி எங்க வீட்டிலே மூச்சுக்கூட விடமுடியாது, தெரிந்தால் நிச்சயம் ஒரு பிரளயமே நடந்து முடியலாம்.


எனது குடும்பம் கனடாவிற்கு வந்தபோது எனக்குப் பத்து வயது இருக்கும். எல்லாமே மாறுபட்ட, ஒருவித சூழ்நிலைக்குள் என்னையறியாமலே திடீரென நான் தள்ளப்பட்டேன். பல்கலாச்சார நாடு என்பதால் பல மதங்கள் பல மொழிகள் பல இனங்கள் என்று இப்படியாக எல்லாமே என்னைக் குழப்பத்தில் ஆழ்த்தின. அடைக்கலம் தந்த புகுந்த நாட்டில் என்ன நடக்கிறது என்பதை ஓரளவு புரிந்து கொள்ளவே எனக்கு இரண்டு மூன்று வருடங்கள் எடுத்தன. என்ன செய்வது என்று தெரியாமல் எதிர் நீச்சலடித்து ஒருவிதமாக இந்தச் சிக்கலில் இருந்து வெளியேவர முயற்சி செய்த போதுதான் அந்தச் சம்பவம் நடந்தது.


காலையில் எழுந்து சமையல் அறைக்குச் சென்றபோது ‘என்னடி இது, திரும்பு’ என்ற அம்மாவின் குரலில் பதட்டம் தெரிந்தது. இரவு ஆடையில் இரத்தம் படிந்திருந்தது. ஆடையைப் பிடித்துப் பார்த்த அம்மாவின் கேள்விகளுக்குப் பொறுமையாகப் பதிலளித்தேன். இரவு வயிறு வலித்தாகச் சொன்னேன். அப்பாவிற்குச் செய்தி போயிற்று. முகத்திலே சோப் பூசியபடி குளியலறையில் இருந்து அவசரமாக ஓடிவந்த அப்பாவின் முகத்தில் சோகம் கலந்த ஒரு சிரிப்புத் தெரிந்தது. ‘இந்த நாட்டில உன்னை வைச்சுக்கொண்டு என்னதான்  செய்யப் போகிறேனோ?’ அம்மா புலம்பினாளா அல்லது எனக்கு எச்சரிக்கை செய்தாளா தெரியவில்லை, என்னை அணைத்தபடி குளியலறைக்குக் கொண்டு சென்றாள். அப்புறம் என்ன யார் யாரோ உறவினர் என்று சொல்லிக் கொண்டு வீட்டிற்கு வந்தார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொன்று சொல்ல, ‘இவளின்ர வளர்த்தியைப் பார்த்திட்டு கெதியாய் நடக்கும் எண்டு நினைச்சன்’ என்று முன் வீட்டு மாமி தன் பங்குக்கு ஏதோ சொல்லி வைத்தாள். பாடசாலைக்கு மட்டம் போட்டுப் பெற்றோரின் திருப்திக்காக ஏதேதோ சடங்குகள் எல்லாம் நடந்து முடிந்தன.


‘ஏன் சில நாட்களாகப் பாடசாலைக்கு வரவில்லை?’ என்ற தோழிகளின் கேள்விக்கு நான் வெட்கப்பட்டுப் பதில் சொன்னேன். அவர்கள் ஆச்சரியப்பட்டு என்னை மேலும் கீழும் பார்த்தார்கள். ‘இது கொஞ்சம் அதிகமடி, எல்லாப் பெண்களுக்கும் வருவதுதானே, எங்களுக்கெல்லாம் இப்படி நடந்தபோது மறுநாளே பாடசாலைக்கு வந்திட்டோம்’ என்று என்னைக் கேலி செய்தார்கள். பட்டிக்காடுகள் என்று சொன்னாலும் சொல்வார்கள் என்ற பயத்தில் எங்களுடைய சடங்கு முறைகள் பற்றி நான் எதுவும் சொல்லவில்லை. நாட்கள் செல்லச்செல்ல வீட்டிலே எனக்கான சில மாற்றங்களை அவதானித்தேன். இனத்தவர்களின் வீடுகளுக்குப் போகும் போது என்னைத் தவிர்த்தார்கள். எம்மின இளைஞர்களுடன் பழகுவதைத் தடுத்தார்கள். என்னோடு பழகிய எம்மினத்தைச் சேர்ந்த சினேகிதர்களைக்கூடச் சந்தேகக் கண் கொண்டு பார்த்தார்கள். என்னதான் சொல்லிப் பார்த்தாலும் வீட்டிலே புரிந்து கொள்ள மறுத்தார்கள்.


‘அவங்க எல்லாம் காவாலிக் கூட்டங்கள், அவங்களோட பழகவேண்டாம்’ அம்மா அடிக்கடி சொல்லும் வார்த்தைகள் என் அடிமனதில் ஆழமாய்ப் பதிந்திருந்தது. அதைத்தான் அடிக்கடி வீட்டிலே சொன்னார்கள் அதைத்தான என்மனதில் அவர்கள் பதித்தார்கள். ஏன்தான் அவர்களுக்கு இப்படி ஒரு வெறுப்போ தெரியவில்லை. எங்கள் இனத்தைச் சேர்ந்த தமிழ் பையன் ஒருவன் பாடசாலையில் என்னைப் பார்க்கும் போதெல்லாம் ‘ஹாய்’ சொல்வான். பெற்றோருக்குத் தெரிந்தால் அதுவே வம்பாய்ப் போய்விடும். ஏனிந்த வம்பு என்று நான் அதைத் தவிர்க்கப் பார்ப்பேன். அரும்பு மீசையோடு எந்த ஒரு தமிழ்ப் பையனைப் பார்த்தாலும் சட்டென்று அம்மா சொன்ன வார்த்தைகளே  எனக்கு நினைவில் வருவதுண்டு.

யாரோ ஒருசிலர் செய்த தவறுக்காக எல்லோரையும் எப்படிச் சந்தேகக்கண் கொண்டு பார்க்கலாம்? பாடசாலை தவிர்ந்த வேறு எங்கே சென்றாலும் அம்மா அல்லது அப்பா எனக்குப் பாதுகாப்பாய் வருவார்கள். எங்களைப் போகவிட்டு, எனக்குப் பின்னால் ‘கார்ட் டோக்ஸ்’ அதாவது காவல் நாய்கள் என்று சகமாணவர்கள் எனது பெற்றோர்களைக் கேலி செய்வது என் செவிகளிலும் அடிக்கடி வந்து விழும். என்ன செய்வது, அப்படியே இருந்து விட்டுப் போகட்டும்.  எந்த நிலையிலும் அப்பா அம்மாவை விட்டுக் கொடுக்க நான் தயாராக இல்லை. அவர்கள் எதைச் செய்தாலும், எனக்கு எப்பவுமே நல்லதைத்தான் செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்குள் உறுதியாக இருந்தது.


ஊரிலே அவர்கள் வளர்ந்த சூழ்நிலை அப்படி. பெண்கள் திருமணம் செய்யும்வரை பெற்றோரின் பாதுகாப்பு மட்டுமல்ல, சுற்றம் சூழலும் அவர்களுக்குப் பாதுகாப்பாய் இருக்கும். இங்கே அப்படி இல்லை. அடுத்த வீட்டில யார் இருக்கிறார்கள் என்பதுகூடப் பலருக்குத் தெரியாது. வீடுகளைச் சுற்றி வேலி இல்லாவிட்டாலும், ஓவ்வொருவரும் தங்களைச் சுற்றி ஒரு வேலி போட்டுக் கொள்வார்கள். எக்காரணம் கொண்டும் அதைவிட்டு வெளியே வரமாட்டார்கள். இலவச ஆலோசனை சொல்லவதற்கென்றே பலர் காத்திருப்பார்கள். அதை எல்லாம் கேட்டு நடக்கும் நிலையில் யாருமே இருக்க மாட்டார்கள். புகுந்த மண்ணில் சென்ற தலைமுறையின் சிந்தனை வேறாகவும், எங்கள் சிந்தனை வேறாகவும் இருந்தது. ஊரிலேயிருந்து கொண்டு வந்த பண்பாடு கலாச்சாரத்தைப் பாதுகாக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு ஒரு பகுதியினர் அதை அப்படியே நடைமுறைப் படுத்தப் பார்க்கிறார்கள். வேறு சிலரோ பண்பாடாவது கலாச்சாரமாவது என்று எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு இந்த மண்ணுக்கு வந்துவிட்டோம், அதற்கேற்ற மாதிரி மாறிக் கொள்வோம் என்கிறார்கள். அதுமட்டுமல்ல, ரோமாபுரியில் இருக்கும்போது நீயும் ஒரு ரோமனாக இருக்க வேண்டும் என்ற தத்துவத்தைப் போதிக்கிறார்கள். எதுசரி எது பிழை என்று புரிவதில்லை. இதனால் இரண்டும் கெட்டான் நிலையில், என்ன செய்வது என்று தெரியாமல் என்னனைப் போன்ற இளைய தலைமுறையினர் ரொம்பவே குழம்பிப் போயிருக்கிறோம்.


வீட்டிலே ஒரு வேஷமும் வெளியிலே ஒரு வேஷமும் போடப் பழகிக் கொண்டோம். பெற்றோரின் விருப்பப்படியே பண்பாடு கலாச்சாரத்தைப் பேணும் வகையில் வீட்டிலும், வெளியே நண்பர்களுடன் பழகும்போது அவர்களுக்கு ஏற்றமாதிரி நடக்கவும் பழகிக் கொண்டோம். மானிடராகப் பிறந்தாலும் நிறம் மாற்றும் பச்சோந்திகளை விடக் கேவலமாய்ப் போய்விட்டோமே என்று நினைக்க வேதனையாக இருந்தாலும், வேறுவழியில்லை இந்தத் தலை முறையில் நாங்கள் இப்படித்தான் வாழவேண்டும் என்றாகி விட்டது. கூட்டை உடைத்தெறியும் தைரியம் எங்களுக்கு இல்லை. நாங்கள் எதிர்கொள்ளும் இந்தப் பிரச்சனை அடுத்த தலைமுறைக்கு இருக்கப்போவதில்லை. ஏனென்றால் எங்களின் அடுத்த தலை முறையை நாங்கள் புரிந்து கொண்டவர்களாக இருப்போம். எல்லாம் உன்னுடைய நன்மைக்குத்தான் என்று பெற்றோர்களும், உன்னுடைய எதிர்காலத்தை அவர்கள் எப்படித் தீர்மானிக்கலாம் என்று நண்பர்களும் அறிவுரை கூறும்போது என்ன செய்வதென்றே எனக்குப் புரியவில்லை. நான் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் அது சரியான பாதை நோக்கிப் போகிறதா இல்லையா என்பதில் எப்பொழுதும் எனக்குள் சந்தேகம் உண்டு.


வலன்ரைன் தினத்திலன்று அவன் எந்த நேரமும் தனது காதலைச் சொல்ல முயற்சிக்கலாம். இந்தக் காதலர் தினத்தை அதற்காக அவன் தெரிந்தெடுத்திருக்கலாம். அப்படி அவன் கேட்கும் பட்சத்தில் நான் என்ன சொல்வது? அவனது குடும்பப் பின்னணி என்னவென்றே சரியாக எனக்குத் தெரியாது. பார்த்தால் நல்லவனாய்த் தெரிகிறான். அவன்மீது எனக்கும் ஒருவித ஈர்ப்பு இருப்பதை என்னால் உணரமுடிகின்றது. இது எனக்கான வாழ்க்கை என்றாலும், என்னால் எந்தவொரு முடிவும் எடுக்க முடியாமல் இருக்கின்றது. . அவன் தனது விருப்பத்தைத் தெரிவித்தால், ஆம் என்பதா இல்லை என்பதா? எனக்குள் ஒரு தயக்கம். எனக்கோ எனது குடும்ப சூழ்நிலையை நினைத்துப் பார்க்கப் பயமாக இருக்கின்றது. என் மனதில் இருப்பதை, என் விருப்பத்தை இவர்களிடம் எடுத்துச் சொன்னால் இவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? சமுதாயத்தைக் காரணம் சொல்லி மறுத்து விடுவார்களா? குடும்பமானம் போச்சே என்று துள்ளிக் குதிப்பார்களா? ஊரிலே செய்வதுபோல அப்படி ஏதாவது நடந்தால் தங்களை உயிரோடு பார்க்கமாட்டாய் என்று மிரட்டுவார்களா? இது எங்கே போய் முடியும் என்று எனக்கே தெரியவில்லை. காதலுக்காக முடி துறந்த அரசனைப் பற்றிப் படித்திருக்கிறேன், இனத்திற்காக, சமூகத்திற்காக காதலைத் துறந்து தவித்தவர்களைப் பற்றியும் படித்திருக்கிறேன்.

இப்போ நிஜமாகவே எனக்கு அந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது. நான் எந்த வகையில் சேர்வது என்று தெரியாமல் தவிக்கிறேன். நீங்களும் எங்க சமூகத்தில் ஒருவர்தானே, நீங்களே சொல்லுங்கள், இப்போ நான் என்ன செய்ய? ஆம் என்பதா, இல்லை என்பதா?

No comments:

Post a Comment