Monday, May 27, 2013

Ontario Tamils Teachers - ஒன்ராரியோ தமிழ் ஆசிரியர்

ஒன்ராரியோ தமிழ் ஆசிரியர் சங்கம்

ஒன்ராரியோ தமிழ் ஆசிரியர் சங்கப் பரிசளிப்பு விழா - 2013
கனடாவில் இயங்கிவரும் ஒன்ராறியோ தமிழ் ஆசியர் சங்கத்தின் பரிசளிப்பு விழா – 2013 சென்ற சனிக்கிழமை 25-05-2013 கனடா கந்தசுவாமி கோயில் கலையரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. ஒன்ராறியோ கல்விச்சபைகளில் கல்விகற்கும் சுமார் 2000 தமிழ் மாணவர்கள் பங்குபற்றிய தமிழ் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்குகான பரிசளிப்பு விழாவாகவும், கலாச்சார நிகழ்வாகவும் இது அமைந்திருந்தது.மங்கல விளக்கேற்றல், கனடாப்பண், தமிழ்த்தாய்வாழ்த்து, அமைதி வணக்கத்தைத் தொடர்ந்து ஆசிரியை திருமதி. ரஞ்சனா சிவகுமாரனின் வரவேற்புரையும் அதைத் தொடர்ந்து ஆசிரியை குமுதினி ஸ்ரீஸ்கந்தராஜாவின் மாணவிகளின் வரவேற்பு நடனமும் இடம் பெற்றது.
சர்வதேச மொழித்திட்டத்தின் கீழ் ஒன்ராரியோவில் கல்விபயிலும், பாலர் நிலையில் இருந்து எட்டாம் தரத்திற்கான பரிசு பெற்ற மாணவர்களுக்கு விசேட விருந்தினர் பரிசுகளை வழங்கிக் கௌரவித்தனர்.
தொடர்ந்து ஆசிரியை வசந்தா தர்மசீலனின் தலைமையுரையும், ஆசிரியை ஜெயந்தி இரட்னகுமாரின் மாணவிகளின் வீணை இசையும் இடம் பெற்றன. அடுத்து செந்தில்நாதன், கந்தசாமி கங்காதரன், கமல்பாரதி ஆகியோரின் நகைச்சுவை நாடகம் இடம் பெற்றது. தொடர்ந்து நடன ஆசிரியை செந்தில்செல்வி சுரேஷ்குமாரின் மாணவிகளின் நடனங்கள் இடம் பெற்றன.மன்றத்தின் காப்பாளர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், ரொறன்ரோ கல்விச்சபை அதிகாரிகள் பலரும் இந்தப் பரிசளிப்பு விழாவில் பங்குபற்றி விழாவைச் சிறப்பித்தனர். புலம் பெயர்ந்த பல்கலாச்சார மண்ணில் தமிழ் மொழி, பண்பாடு, கலாச்சாரம் போன்றவற்றைப் பேணிக்காப்பதில் ஒன்ராரியோ தமிழ் ஆசிரியர் சங்கம் முன்னின்று உழைப்து பெருமைக்குரியது.

Wednesday, May 15, 2013

எமது நிலம் எமக்காக வேண்டும்

எமது நிலம் எமக்காக வேண்டும்

குரு அரவிந்தன்

எமது நிலம் எமக்கு வேண்டும் என்ற கோஷத்தோடு பிரித்தானிய இளைஞர்களும் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டு தங்கள் வாய்களைக் கறுப்புத் துணிகளாhல் கட்டிக் கொண்டு வீதிவழியே பவனி வந்தபோது பலரின் கவனத்தையும் திருப்பியிருந்தனர். தமிழர் வாழும் இடங்களில் எல்லாம் இப்படியான தொடர் ஊர்வலங்கள் சமீபகாலமாக நடைபெறுகின்றன. தமிழரின் பாரம்பரிய நிலங்கள் பறிபோவதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. நாம் தமிழராய் ஒன்றிணைவோம், நமக்கான மண்ணை நாமே காப்பாற்றுவோம் என்ற தார்மீகக்கடமையோடு நடந்த அமைதியான ஊர்வலங்களாக இருந்தாலும் பலரையும் சிந்திக்க வைத்த நிகழ்வாகவும் இவை அமைந்திருந்தன. யாருடைய நிலத்தையும் அத்துமீறிப் பறிக்கவில்லை, எமது நிலத்தை எம்மிடம் திருப்பித்தாருங்கள் என்பதே அவர்களின் கோரிக்கைகளாக இருந்தன. ஏன் இப்படியான பவனி ஊர்வலங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன என்று சற்றுப் பின்நோக்கிப் பார்ப்போம். 

இலங்கைத்தீவின் வடக்குக் கிழக்கு மாகாணங்கள் தமிழ் மக்கள் வாழ்கின்ற பாரம்பரிய பிரதேசங்கள் என்பது யாவரும் அறிந்ததே. இதற்கான சரித்திரச்சான்றுகளும் நிறையவே இருக்கின்றன. இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்த ஆவணங்களும் சரி, அதன்பின் உள்ள ஆவணங்களும் சரி இதை ஆதாரபூர்வமாக நிரூபிக்கின்றன. வடக்குக் கிழக்கு மாகாணத்தில் உள்ள கிராமங்கள், ஆறுகள் மலைகள் எல்லாம் தமிழ் பெயரையே கொண்டிருந்தன என்பதும் கவனத்தில் எடுக்க வேண்டிய விடையமாகும். தேவாரப் பதிகங்களில் இடம்பெற்ற (7ம் நூற்றாண்டு) ஈஸ்வரங்கள் இலங்கையில் இருந்ததற்கான குறிப்புக்கள் காணப்படுகின்றன. சம்பந்தர், மாணிக்கவாசகர், அருணகிரிநாதர் போன்றவர்களின் பாடல்களில் இவை தெளிவாக்க குறிப்பிடப்பட்டிருக்கின்றன. புராதன இலக்கியங்களில் குறிப்பிடப்பட்ட தென்குமரி என்ற மலை இலங்கையில்தான் இருக்கின்றது. ஏனென்றால்; இலக்கியத்தில் குறிப்பிட்டது போல அப்படி ஒரு மலையும் தமிழ் நாட்டில இருப்பதாகத் தெரியவில்லை.. பூகோள ரீதியாக ஏற்பட்ட அனர்த்தத்தில் இந்தியக் கண்டத்தில் இருந்து இலங்காபுரி என்ற இடம் தனியாகப் பிரிந்து காலப்போக்கில் ஒரு தீவாக மாறிவிட்டது. எனவே புராதன காலத்தில் குறிப்பிட்ட தமிழரின்; பாரம்பரிய பிரதேசமான தென்குமரி பிரிந்து சென்ற இலங்கைத் தீவில்தான் இப்போதும் இருக்கின்றது.

1948ம் ஆண்டு பிரித்தானியர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்றதைத் தொடர்ந்து, இந்த இலங்கைத்தீவு ஒரு ஜனநாயக நாடாகப் பிரகடனப்படுத்தப் பட்டிருக்கிறது. ஜனநாயக நாடு என்பது ஜனநாயக முறைப்படி தெரிவு செய்யப்படும் மக்களால் ஆளப்படும் நாடாகும். ஒரு நாடு ஜனநாயக நாடாக இருந்தாலும் சிறுபான்மை இனத்தவர்களுக்கு சட்டத்தின் மூலம் பாதுகாப்புக் கிடைக்காவிட்டால், அவர்கள் இரண்டாம் தரநிலைக்குத் தள்ளப்பட்டுவிடுவார்கள். சிறுபான்மையினர் என்றால் இனரீதியாகவோ அல்லது மதரீதியாகவோ அல்லது வேறு சில கரணிகளுக்காகவோ பெரும்பான்மையினரால் ஒதுக்கப்படுவதற்குச் சந்தர்ப்பங்கள் அதிகமாகவே இருக்கின்றன. எனவே அது ஒரு ஜனநாயக நாடுதானே அங்கே எல்லோரும் சரிசமனாகத்தானே பாவிக்கப்படு கின்றார்கள் என்று நினைப்பது மிகவும் தவறானதாகும். அனேகமான நாடுகளில் சிறுபான்மையினரைப் பொறுத்த வரையில் இந்த ஜனநாயகமுறை என்பது அவர்களுக்குப் பாதுகாப்பாக அமையவில்லை. தொடக்கத்தில் அது சிறப்பாக அமைந்திருந்தாலும் காலப்போக்கில் நடைமுறைச் சாத்தியம் அற்றதாக மாறிவிடுகின்றன. காரணம் பெரும்பான்மை இனத்தவர்கள் மூன்றில் இரண்டு அதிகப்படியான வாக்குகளைக் கொண்டு தங்கள் நலன் கருதி சிறுபான்மையினருக்கு எதிரான சட்டங்களையே நடைமுறைப்படுத்துகின்றார்கள். இலங்கைத் தீவைப் பொறுத்தவரையில் இந்த நிலைதான் அங்கு நீடித்திருக்கின்றது.
பிரித்தானியர் ஆட்சி முடிவிற்கு வந்தபோது அவர்கள் செய்த மாபெரும் தவறு என்னவென்றால் இலங்கைக்குச் சுதந்திரம் கொடுத்தபோது சிறுபான்மையினரின் நலன்களைக் கவனத்தில் எடுக்காமல் விட்டு விட்டார்கள். இலங்கை ஜனநாயக சுதந்திரதீவு என்பதால் யாரும் எங்கேயும் குடியேறலாம் என்ற கொள்கையை மிகவும் அதிகமாகவே பெரும்பான்மையினர் கடைப்பிடிக்ககின்றார்கள். தொடக்கத்தில் தமிழர்கள் வாழ்ந்த சில கரையோரப் பகுதிகளைப் பெரும்பான்மையினர் ‘கரைவலை’ என்ற பெயரில் ஆக்கிரமித்தனர். மீன்பிடித் தொழில் காரணமாக இந்த இடங்களில் அவர்கள் வந்து தங்கியிருந்து மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டனர். மெல்ல மெல்ல அந்த நிலங்களைச் சொந்தமாக்கிக் கொண்டனர். இதைவிட குடியேற்றத்திட்டங்கள் என்ற வகையிலும் அரசின் உதவியோடு இப் பெரும்பான்மையினரின் குடியேற்றங்கள் திட்டமிட்ட முறையில் நடைபெறுகின்றன.


இப்படியான தமிழரின் பாரம்பரிய நிலத்தில் நடைபெற்ற குடியேற்றத்திட்டங்களில் கல்லோயா கந்தளாய் திட்டங்களை முக்கியமாகக் குறிப்பிடலாம். சரித்திரங்கள் அடிக்கடி மறைக்கப்படுவதால் இதை ஆவணப்படுத்த வேண்டிய அவசியம் எமக்கு ஏற்பட்டிருக்கின்றது. குறிப்பாக அடுத்த தலைமுறையினர் இதை அறிந்து வைத்திருக்க வேண்டும். சுமார் 50 வருடங்களுக்குள் இவை எல்லாம் திட்டமிட்ட முறையில் மூடிமறைக்கப்பட்டுவிட்டன. பெரும்பான்மை இனத்தைக் கொண்ட இலங்கை சுதந்திகை; கட்சியினர் 1956ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றி சிங்கள் மொழியை அரசமொழியாக்க உறுதி பூண்டனர். அப்போது அறவழிப்போராட்டத்தின் மூலம் தமிழ் மக்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். கிழக்கு மாகாணத்தில் ஓடிய கல்லோயா ஆறு அணைகட்டப்பட்டு விவசாயத்திற்காக திறந்து விடப்பட்டது. தமிழர்களின் பூர்வீக நிலத்தில் 50 விகிதத்திற்கும் மேற்பட்ட பெரும்பான்மை இனத்தவர்கள் குடியேற்றப்பட்டனர். அதைத் தொடந்ந்து பூர்வீக தமிழ் மக்களுக்கும் குடியேற்றப்பட்ட பெரும்பான்மை மக்களுக்கும் இடையே அவ்வப்போது கரவரங்கள் ஏற்ப்பட்டன. 1956ம் ஆண்டு ஜன் 11ம் திகதி இப்பகுதியில் கலவரம் ஆரம்பமாகி பல தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

மீளக் குடியமர்தல் என்ற போர்வையில் மீண்டும் பெரும்பான்மை இனத்தவரின் குடியேற்றங்கள் விரைவாக நடைபெறுகின்றன. 1983ம் ஆண்டுக்குப்பின் மகாவலி திட்டத்தின் கீழ் பல இடங்களில் பெரும்பான்மை இனத்தவர்கள் குடியேற்றப்பட்டனர். அரியகுண்டான், நெடுங்கேணி, கொக்கைச்சாண்குளம் போன்றவை இதற்குச் சிறந்த உதாரணமாகும். இதைவிட நெல்லுக்குளம், கொக்குளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி போன்ற இடங்களிலும் மீன்பிடித் தொழிலைக் காரணம் காட்டிக் குடியேற்றங்கள் நடைபெறுகின்றன.
நீர்கொழும்பு, சிலாபம், புத்தளப் பகுதிகளில் தமிழர் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் விரைவாகவே அழிக்கப்பட்டுக் கொண்டு வருகின்றன. சில வருடங்களுக்குமுன் நீர்கொழும்பு தமிழ் கலவன் பாடசாலை என்ற பெயர்ப்பலகை கறுப்பு வர்ணம் பூசப்பட்டு சிங்கள மகாவித்தியாலயம் என்ற பெயர் மாற்றப்பட்டிருந்ததை நேரடியாகவே என்னால் அவதானிக்க முடிந்தது. அப்போது நீர்கொழும்பில் தபாலதிபராக இருந்த சின்னத்துரை என்பவர் என்னை அழைத்துச் சென்று இந்த மாற்றத்தைக் கட்டாயம் ஆவணப்படுத்த வேண்டும் என்று சுட்டிக்காட்டியிருந்தார். இது போன்று இப்போது எந்த ஒரு தடையுமின்றி மாற்றங்கள் விரைவாகவே தமிழர் வாழ்ந்த பிரதேசங்களில் நடைபெறுகின்றன.


 இதைவிட வடக்குக் கிழக்குப் பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலையம் என்ற பெயரில் தமிழர்களின் பாரம்பரிய நிலங்கள், குறிப்பாக மீன் வளம் நிறைந்த கரையோரப்பகுதிகள் அபகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு பிரதேசத்திலும் திட்டமிட்ட முறைப்படி தமிழரின் விகிதாசாரத்தைக் குறைப்பதில் அரசு அதிக கவனம் செலுத்துகின்றது.  இதன் மூலம் தமிழரின் பாரம்பரிய பிரதேசங்களில் இருந்து தெரிவாகும் பிரதிநிதிகள் இனிமேல் பெரும்பான்மை இனத்தவராக இருக்க வேண்டும் என்ற கணிப்பே நடைமுறைப்படுத்தப் படுகின்றது. கிழக்கு மாகாணத்தில் சொற்ப காலத்திற்குள் ஏற்பட்ட இந்த மாற்றத்தை அவதானித்தால் நன்கு புரிந்து கொள்ளலாம். பெரும்பான்மையினரின் குடியேற்றங்களால் எத்தனையோ தமிழ்ப் பிரதிதித்துவத்தை இழந்தோம், இழந்து கொண்டிருக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.


மயிலே மயிலே இறகுபோடு என்றால் இலங்கை சுதந்திரம் அடைந்தபோதே அந்த மயில் இறகைப் போட்டிருக்கும். தூங்குபவனைத் தான் தூக்கத்தால் எழுப்பலாம் ஆனால் தூங்குவது போல நடிப்பவனை ஒருபோதும் தூக்கத்தால் எழுப்ப முடியாது என்பதால் இனி எடுக்கப்போகும் அமைதியான நகர்வுகளை முள்ளை முள்ளால் எடுப்பதுபோல கவனமாக எடுத்துக் கொள்ளவேண்டும். எனவே நாம் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதை நினைவிற் கொண்டு செயற்படுவோம்.

புதிய நட்சத்திரக்கூட்டம் - HFLS - 3

புதிய நட்சத்திரக்கூட்டம் -  HFLS - 3

குரு அரவிந்தன்


வானமே எல்லை என்று ஒரு காலத்தில் எம் முன்னோர்கள் நினைத்திருந்தார்கள். ஆனால் இன்று எல்லையில்லா வானம் என்று அதையே நாம் மாற்றிக் கொண்டோம். நவீன தொழில நுட்ப வசதிகளுடன் பல புதிய விடையங்களை அறிய முடிந்ததே இதற்குக் காரணமாகும். இதன் காரணமாக நண்டு கொழுத்தால் வளையில் இருக்காது என்பதுபோல, வானியல் பற்றிய எங்கள் தாகம் அதிகரிக்கவே வானத்தை நோக்கிய எமது நகர்வுகள் துரிதப்படுத்தப்பட்டன. அதனால் வானத்தில் இருந்தே பல விடையங்களை அவதானிக்கவும், கணிக்கவும் முடிந்தது. ஆனால் வசதிகள் அற்ற அந்த நாட்களில், கிரகங்களை வைத்தே எங்கள் முன்னோர்கள் ஜோதிடம் கணித்தார்கள். கிரகங்களை மதித்து, அவற்றை கோயில்களில் வைத்தே வணங்கினார்கள், நாட்களுக்கும் அவற்றின் பெயர்களைத் தமிழில் சூட்டினார்கள். எனவே முற்காலத்திலும் வானியலுடன் எம்மவர்களின் தொடர்பு அதிகமாகவே இருந்திருக்கிறது என்பது இதிலிருந்து தெரியவருகின்றது. ஆனால் தாம் அறிந்த எல்லாவற்றையும் ஆவணப்படுத்த அவர்கள் நினைக்வில்லை. அதற்குரிய வசதிகளும் அப்போது அவர்களிடம் இருக்கவில்லை. பழைய குகைகளில் உள்ள கற்சிற்பங்களில், ஓவியங்களில் வானத்தோடு தொடர்புடைய சிற்பங்களையும், ஓவியங்களையும் இன்றும் காணமுடிகின்றது.

அன்று எம்மவர்கள் கிரகங்களுக்கு செவ்வாய், புதன், வியாழன், வெள்;ளி, சனி என்று பெயர் சூட்டியதுபோல, கலெக்ஸி என்று சொல்லப்படுகின்ற நச்சத்திரக்கூட்டங்கள் பலவற்றை புதிதாகக் கண்டுபிடித்ததால் அவற்றுக்குப் பெயரிடத் தொடங்கியுள்ளனர்கள். அப்படிச் சமீபத்தில் கண்டு பிடிக்கப்பட்ட ஒரு புதிய நட்சத்திரக் கூட்டங்களுக்கு எச் எவ் எல் எஸ் - 3 (HFLS3) என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். கலெக்ஸி என்பது சூ+ரியனைப் போல, சில இடங்களில் அதை விடச் சிறிதாகவும் அல்லது பெரிதாகவும் எண்ணிலடங்கா நட்சத்திரங்களையும் அவற்றைச் சுற்றியுளள்ள கோள்களையும் கொண்ட நட்சத்திரத் தொகுதிகள் ஆகும். வாயுக்களாலும், தூசுகளாலும் சூழப்பட்ட இந்த நட்சத்திரக் கூட்டம் பல கோடிக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருக்கின்றன. இதைப் பால் வெளி அண்டம் என்றும் சொல்வார்கள். இது பூமியில் இருந்து சுமர் 12.8 பில்லியன் ஒளியாண்டுகள் தூரத்தில் நமது பால்வெளி அண்டத்தை விட 2000 மடங்கு செழிப்பான ஒரு நட்சத்திரத் தொகுதியாக இருக்கலாமென வானியலாளர்கள் கருதுகின்றனர். இந்தக் கலெக்ஸி என்ற சொல் கிறீக் மொழியில் இருந்து பெறப்பட்டது.


எச் எவ் எல் எஸ் - 3 என்ற இந்த கலெக்ஸி செழிப்புள்ளதாகக் காணப்படுவதால் இதில் அமைந்துள்ள கிரகங்களில் உயிர்கள் ஏதாவது வாழலாம் என்பதற்கான சாத்தியம் மிக அதிகம் இருப்பதாகவும் கருதப்படுகின்றது. ஆனால் இந்தச் சந்தர்ப்பத்தில், மேற்கொண்டு தகவல்களைப் பெற்றுக் கொள்ளாமல்  அதை நிரூபிப்பது கடினம் எனவும் வானியலாளர்கள் கூறுகின்றனர். இந்தக் கலெக்ஸியில் அமைந்துள்ள நட்சத்திரங்களில் சூரியனை விடவும் சுமார் 40 பில்லியன் மடங்கு அதிக திணிவு உள்ளதாக அறியப்படுகிறது. இதைவிட இந்த கலெக்ஸியில் அதிகளவு கார்பன் மொனொக்ஸைட்டு காணப்படுவதாகவும் வாயுக்கள் மற்றும் தூசுககளுடன் சேர்த்து சூரியனை விட 100 பில்லியன் மடங்கு திணிவு அவற்றில் அமைந்திருக்கலாம் எனவும் நம்பப்படுகின்றது. இதைவிட இவற்றைச் சுற்றி வானியலாளர்களை மர்மத்தில் ஆழ்த்தி வரும் கரும் பொருள் (Dark matter) மிகச் செறிந்திருப்பதாகவும் கூறப்படுகின்றது. தற்போது 2011ம் ஆண்டிலிருந்து இயங்கும், வடசிலியில் அற்ரகாமா பாலைவனத்தில் அமைந்துள்ள ALMA எனப்படும் அதிவலுவுள்ள தொலைக்காட்டிகளைப் பயன்படுத்தி இந்தப் பால்வெளி அண்டம் குறித்த மேலதிகத் தகவல்களைப் பெறுவதற்கு வானியலாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இங்கே அறுபத்தியாறு மிகவலுவுள்ள அன்டனாக்களைக் கொண்ட கருவிகள் வானத்தை நோக்கிப் பொருத்தப்பட்டுள்ளன. தேவைகருதி இவற்றைச் சுமார் 16 கி.மீற்றர் சுற்றுவட்டத்திற்கு நகர்த்திச் செல்ல முடியும்.


சிறிதும் பெரிதுமாக சுமார் 170 பில்லியன் கலெக்ஸி என்று சொல்லப்படுகின்ற நட்சத்திரக் கூட்டங்களைக் கொண்ட பால்வெளி அண்டங்கள் வானத்தில் தெரியக்கூடியதாக இருப்பதாக வானியலாளர் தெரிவிக்கின்றனர். இவற்றின் வடிவத்தைக் கொண்டு மூன்று வகையாக பால்வெளி நட்சத்திரக் கூட்டங்களைப் பாகுபடுத்துகின்றார்கள். நீண்ட வட்டவடிவமான அமைப்பைக் கொண்ட நட்சத்திரக்கூட்டம், சுருள் வடிவ அமைப்பைக் கொண்ட நட்சத்திரக்கூட்டம், மற்றையது ஒழுங்கற்ற அமைப்பைக் கொண்ட நட்சத்திரக் கூட்டங்களாகும். இதைவிட ஒழுங்கற்ற பால்வெளி அண்டத்தில் மோதிரவடிவான, குள்ள வடிவான, ஒன்றிணைந்த, தெறித்துச்சிதறிய அமைப்புகளைக் கொண்ட நட்சத்திரக் கூட்டங்களுமுண்டு. சுமார் 13.8 பில்லியன் வருடங்களுக்கு முன் நடந்த பிக்பாங் (BIG BANG) என்று சொல்லப்படுகின்ற பெரியமோதல் காரணமாக உடைந்து சிதறிப்போன நட்சத்திரக் கூட்டங்களே இந்தப் பால்வெளி அண்டத்தில் பூமியிலிருந்து அதிதூரத்தில் இருப்பதாக அறியமுடிகிறது.


2012 டிசெம்பர் மாதம் 12ம் திகதி வானிலை ஆராய்சிசியில் ஈடுபட்டிருக்கும் ஹபிள் வான தொலைநோக்கி மூலம் தரைக்குக் கிடைத்த தரவின்படி இதுவரை அதிதூரத்தில் இருப்பதகக் கருதப்பட்ட UDFJ – 39546284 என்ற நட்சத்திரக்கூட்டம், முன்பு கணித்ததைவிட இன்னும் அதிதூரத்தில் இருப்பதாத் தெரிய வருகின்றது.  இவை 380 மில்லியன் வருடங்களுக்கு முன் தோன்றியிருக்கலாம் எனவும், சுமார் 13.42 பில்லியன் வெளிச்சவருடங்களுக்கு அப்பால் இருப்பதாகவும் அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.


அண்டவெளி பற்றிய பதிவுகள் கிரேக்க நாட்டில் கிறீஸ்துவுக்கு முன் 450 – 370 ல் இருந்திருக்கின்றன. கிரேக்க தத்துவஞானி டெமோகிறிஸ்டஸ் (DEMOCRITUS) அரிஸ்டோடில் (ARISTOTLE –BC 384-322) போன்றோர் அண்டவெளி பற்றிக் குறிப்பிட்டிருக்கின்றனர். இத்தாலிய வானிலை ஆராய்ச்சியாளரான கலிலியோ கலிலீ எப்பவர்தான் 1610ம் ஆண்டு தனது தொலை நோக்கி மூலம் அவதானித்து இந்தப் பால்வெளி அண்டம் என்பது பல்லாயிரக் கணக்கான நட்சத்திரக்கூட்டங்களைக் கொண்டது என்பதைக் கண்டறிந்தார். 1750ம் ஆண்டு ஆங்கிலேய வானிலை ஆராய்ச்சியாளரான தோமஸ்றைட் என்பவர் பால்வெளி என்பது பல்லாயிரக்கணக்கான அசையும் நட்சத்திரக் கூட்டங்களைக் கொண்டது என்பதை உறுதிப்படுத்தினார்.


என்னதான் அண்டவெளி பற்றிய ஆராய்ச்சிகள் விரைவாக நடைபெற்றாலும் இதுவரைக்கும் வேறு எந்தக் கிரகத்திலும் உயிரினங்கள் இருப்பதற்கான அறிகுறிகள் கண்டறியப்படவில்லை. காலப்போக்கில் இவை கண்டறியப்படலாம். இப்போதிருக்கும் விண்கலங்களின் வேகத்தைக் கொண்டு சூரிய பால் வெளி அண்டத்தைக் கடந்து செல்வதென்பது முடியாத காரியமாகும். ஆனாலும் போக்குவரத்து வசதிகளே அற்ற காலத்தில் இருந்து இன்றைய கால கட்டத்திற்கு நாங்கள் விரைவாக முன்னேறியிருக்கின்றோம். நம்பிக்கையில்தான் நாங்கள் வாழ்கிறோம் என்பதால், நடைமுறைச் சாத்தியப் படுமானால் தற்போதுள்ள விமானப்பயணங்கள்போல, எதிர்வரும் காலங்களில் விண்வெளிப் பயணங்களும் உயிரினங்கள் இருக்குமானால், ஒவ்வெரு கிரகத்திற்கும், அதைத் தொடர்ந்து பால்வெளி அண்டங்களுக்கும் நடைபெறலாம் என நம்பிக்கை கொள்வோம்.

செயற்கை மனிதன் றெக்ஸ் - Robo Rex

அறிவியல் கட்டுரை.

முதலாவது செயற்கை மனிதன் றெக்ஸ்
குரு அரவிந்தன்

நீங்கள் அனேகமாக சுப்பஸ்டார் ரஜனியின் ரோபோ படம் பார்த்திருப்புPர்கள். அதிலே கதாநாயகன் ரஜனியால் உருவாக்கப்பட்ட ரஜனியைப் போலவே உருவம் கொண்ட, ரோபோரஜனியின் செய்கைகளைப் பார்த்து அனேகமானவர்கள் வியந்திருப்பீர்கள். கணனியின் தொழில் நுட்ப உதவியோடு அதில் வரும் பல காட்சிகள் சினிமாவிற்காக உருவாக்கப்பட்டன என்பதே உண்மையாகும். உதடுகளின் அசைவுக்கேற்ப ஓலியமைப்பும் சிறப்பாக இருந்ததால் செயற்கை மனிதன் அப்படித்தான் இருப்பான் என்று நாங்கள் எமக்குள் கற்பனை செய்து பார்த்து மகிழ்ந்தோம்.. ஆனால் அப்படி ஒரு கற்பனையை நிஜமாக்கும் வகையில் இன்று பிரித்தானியாவில் அது போன்ற ஒரு செயற்கை மனிதனை உருவாக்கியிருக்கிறார்கள். லண்டனில் உள்ள அறிவியல் அருங்காட்சியகத்தில் இருக்கும் இந்த இரண்டு மீற்றர் உயரமான செயற்கை மனிதனை நீங்கள் நேரில் பார்க்க விரும்பினால், 2013மார்ச்மாதம் 11ம் திகதிவரை உங்களால் அங்கே சென்று நேரில் பார்க்க முடியும். றெக்ஸ் என்ற பெயரைக் கொண்ட இந்த செயற்கை மனிதன் அடுத்தாக அமெரிக்காவிற்கு வருகைதர இருப்பதாகத் தெரியவருகின்றது.
டாக்டர் பேல்ட் மயர் (டீநசவழடவ ஆநலநச) தான் றெக்ஸ் என்ற பெயரைக் கொண்ட இந்த செயற்கை மனிதனை பலரின் உதவியோடு உருவாக்க முழுமூச்சாக நின்றவர். அதன் பின்னணியில் அதற்கான காரணமொன்றுமிருந்தது. அதாவது அவரும் ஒருவகையில் உடல் ஊனமுற்றவராக இருந்ததும் ஒரு காரணமாகும். இடது கையை இழந்த அவர் செயற்கைக் கையை; அணிந்திருந்தாலும் அதனால் எந்தப் பயன்பாடும் இல்லாமற் போனதால் அதைப் பற்றிச் சிந்திக்கலானார். அதனால்தான் தனது கையையே மாற்றி அமைக்க முற்பட்டார். அதைப்பற்றிக் குறிப்பிடும் போது இந்தக் கையில்லாவிட்டால் ஏதோ ஒன்றை இழந்துவிட்ட உணர்வு ஏற்படுகின்றது என்று குறைப்பட்டுக் கொண்டார்.


தனது கனவுகளை நிஜமாக்க நினைத்த அவர், மசெச்சுசெஸ்ற் இன்சிற்ரியூட் ஒவ் ரெக்னோலஜியைச் சேர்ந்த பெறியியலாளரும் பேராசிரியருமான ஹியூ ஹே என்பவரைச் சந்தித்து அவரிடம் தனது குறைகளைக் குறிப்பிட்டார். அவரின் உதவியோடு காலில்லாதவர்கள் எப்படிக் கணணியின் கட்டுப்பாட்டோடு  செயற்கைக் கால்களைப் பயன்படுத்துகிறார்கள் என்பதைச் செய்கை மூலம் அவரிடம் கற்றுக் கொண்டார். பென்சில்பேனியாவைச் சேர்ந்த ஹியூ கடினமான மலைகள் ஏறுவதில் கெட்டிக்காரர். ஏட்டு வயதில் றொக்கிமலையின் கடினமா பகுதியில் 11.627 அடி உயரம் ஏறிச் சாதனை படைத்தவர். செயற்கை உறுப்புகளைச் செய்வதில் வல்லுணர். ஓலிம்பிக் வீரர் ஒஸ்கார் பிஸ்ரோறிஸ்சின் செயற்கைக் கால்களை வடிவமைப்பதில் இவர் தான் முன்னின்று உழைத்தவர். இவரைவிட செயற்கை மனிதனை உருவாக்க டாக்டர் பேல்ட் மயருக்கு இத்துறையில் நிபுணர்களான றிச்சாட் வாக்கர், மத்யூ கோல்டன் போன்றோரும் உருதுணையாக நிற்கின்றனர்.
ரோபோவிற்கு உடலுறுப்புக்க்ள் கொடுக்கும்போது முகம் எப்படி இருக்கவேண்டும் என்று தீர்மானித்தபோது பலரும்  பேல்ட் மயரின் முகம் மாதிரியே வேண்டும் என்று தமது விருப்பத்தைத் தெரிவித்தனர். அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மயரின் முகம் போலவே ரோபோவிற்கு செயற்கை முகம் வடிவமைக்கப்பட்டது. செயற்கை குருதிச் சுற்றோட்டம், குருதி, சிறுநீரகம், கணையம், மண்ணீரல், மூச்சுக்குழல், கண்கள், கைகள், கால்கள், காதுகள், வாய் போன்ற செயற்கை உறுப்புக்களைக் கொண்டே இந்த ரோபோ செயற்படுகின்றது. இதயம், நுரையீரல் போன்ற உறுப்புக்கள் கணணியின் தொழில் நுட்ப உதவியுடன் செயற்படுகின்றது. இதுவரை தனித்தனியாக இப்படியான உறுப்புக்களைச் செயற்பட வைத்த முயற்சியில் இருந்து ஒரு படி முன்னேறிச் செயற்கை உறுப்புக்கள் எல்லாமே ஒன்றாய் இயங்கக்கூடிய செயற்கை மனிதன் உருவாக்கப்பட்டது.


கறுப்புக் கண்ணாடியில் பொருத்தப்பட்ட சிறியகமெரா மூலம் செயற்கை மனிதனின் கண்கள் இயங்குகின்றன. இந்தக் கண்களைக் கலிபோணியா பல்கலைக்கழக்த்தினரும், காதுகளை சிட்னி மக்குயர் பல்கலைக்கழகத்தினரும் கொடுத்து உதவியிருந்தனர். இதயத்தை அரிஸோனா சிங்காடியா பல்கலைக்கழகத்தினரும், கணையத்தை லெயிஸ்ரர் டி மொன்போட் பல்கலைக்கழகமும் கொடுத்து உதவியிருந்தனர். சிறுநீரகத்தை கலிபோணியா பல்கலைக்கழகமும், நியூசிலாந்தைச் சேர்ந்த ரெக்ஸ்பயோனிக்கஸ் கால்களையும், மசெச்சுசெஸ்ற் எம்ஐரி நிறுவனத்தினர் பாதங்களையும் கொடுத்து உதவியிருந்தனர்.


இந்த செயற்கை மனிதனை உருவாக்க சுமார் ஒரு கோடி டொலர்கள்வரை செலவிடப்பட்டது. ஆக்ஸ் போர்ட் பல்கலைக்கழகமும்,  ஸ்வாசீன் பல்கலைக் கழகமும் செயற்கை மனிதனை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றியிருக்கின்றன. செயற்கை மனிதனுக்குத் தேவையான கணையம், கல்லீரல், சிறுநீரகம் போன்றவற்றை உருவாக்க ஆக்ஸ்போட் பல்கலைக்கழக நிபுணர்களும், செயற்கை நுரையீரலை ஸ்வாசீன் பல்கலைக்கழக நிர்ணர்களும் உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்கள். பிரித்தானிய தொலைக்காட்சி நிறுவனமான சனல் 4 இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது.


சில மாதங்களுக்கு முன் ரஸ்யா நாட்டைச் சேர்ந்த டிமிற்ரி ஸ்கோவ் என்பவர் அலிஸா என்ற செயற்கைப் பெண்ணின் தலையை உருவாக்கியிருந்தது நினைவிருக்கலாம். முகத்தில் உள்ள முக்கிய உறுப்புக்களான கண்களும், உதடுகளும் அசையக் கூடியதாக இதை உருவாக்கியிருந்தார். சிலிக்கோனினால் உருவாக்கப்பட்ட முகமாகையால் பார்ப்பதற்கு நிஜமான பெண் போலவே முகம் காட்சியளிக்கின்றது. ஒற்றைக் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும்போது அலிஸாவின் கண்களும் உதடுகளும் நிஜப்பெண்ணின் உறுப்புகள் போலவே அசைகின்றன. சுமார் முப்பது அசைவுகள் வரை உள்ள செயற்கைத் தலைகள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டாலும், அலிஸாவின் தலையில் எட்டு அசைவுகளே இடம் பெற்றிருக்கின்றன. ஆனால் இந்த அசைவுகள் சிறப்பாகச் செய்யப்பட்டிருக்கின்றன என்பது கவனத்தில் கொள்ளக்கூடியது. இந்தத் திட்டம் சரிவர நடைமுறைப் படுத்தப் பட்டால், 2045ம் ஆண்டளவில் செயற்கை மனிதர்களை முழுமையாக உருவாக்க முடியம் என்று ரஸ்ஸியர்கள் நம்புகின்றார். இதே போன்ற முயற்சிகளில் ஜப்பான் தேசமும் அதிக அளவில் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ரோபோக்கள் என்று சொல்லப்படுகின்ற செயற்கை மனிதர்கள் மட்டும் பயனடையும் இந்த அரிய முயற்சியால் ஒருநாள் நிஜமான மனிதர்களின் உயிரைக் காக்கக்கூடிய முறையில் பயனடைய முடியும் என்றே நம்பவேண்டும். தொடக்கத்தில் இது வெறும் வேடிக்கைபோலத் தோன்றனாலும் காலப்போக்கில் இதன் அவசியத்தை மக்கள் புரிந்து கொள்வர். இது ஆரம்பம்தான், ஆனால் மனிதரும் பயனடையக் கூடியதான மாற்றங்கள் வெகுவிரைவில் வந்தடையும் என்றே எதிர்பார்க்கலாம். எல்லாம் நன்மைகே என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Asteroid 2012 DA14 - விண்கல் 2012 டிஏ14

அறிவியல் கட்டுரை

ரஸ்யாவை அதிரவைத்த விண்கல் 2012 டிஏ14

குரு அரவிந்தன்

ஒரு எரிகல் வானத்தில் பூமிக்கு மிக அருகாமையில் கடந்து செல்கிறது என்பதே எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது. அதைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வமும் இருந்தது. ஆனால் யாரும் எதிர் பார்க்காமலே சென்ற 15ம் திகதி (15-02-2013) அன்று இரண்டு எரிகற்கள் வானத்தில் தோன்றி எல்லோரையும் பயமுறுத்தின. பூமிக்கு அருகாமையில் பயணித்த 30 மீற்ரர் சுற்றளவும், 40,000 தொன் பாரமும் கொண்ட விண்கல் டிஏ14 (Asteroid 2012 DA14) எந்த ஒரு சேதமும் ஏற்படுத்தாது பூமியைக் கடந்து சென்றதாகத் தெரிகிறது. சிறியதொரு புள்ளி போல வானத்தில் நகர்ந்து சென்றதைச் சில நாடுகளில் பலரும் அவதானித்தார்கள். ஆனால் வானிலை ஆராய்ச்சியாளர்கள் சற்றும் எதிர்பார்க்காத நிலையில் சிறிய விண்கல் ஒன்று பூமியைத் தாண்டும்போது சிதறி வெடித்தபோது அதன் பல துண்டுகள் ரஸ்யாவைத் தாக்கியிருக்கின்றன. இவை டிஏ14 இன் சிதறல்களா என்பது இன்னமும் சரியாக அறியப்படவில்லை.


பூமியைத் தாண்டிச் சென்ற இந்த டிஏ14 என்ற விண்கல்லை முதன் முதலாக ஸ்பெயினில் உள்;ள வானிலைக் கண்காணிப்பகம்தான் கவனித்தது. சென்ற வருடம் பெப்ரவரி மாதம் 23ம் திகதி அது பூமியை நோக்கி நகர்வதை அவதானித்தனர். அவர்கள் அவதானித்தபோது 4.3 மில்லியன் கிலோ மீட்டர் தூரத்தில் அந்த விண்கல் காணப்பட்டது. இதைத் தொடர்ந்து அவதானிக்க வேண்டியிருந்ததால், இதற்கு ஆஸ்டிராய்ட் டிஏ14 என்று பெயர் சூட்டினர். ஓவ்வொரு 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை இப்படியான எரிகல் பூமிக்கு அருகே வருவதாகவும், 1200 வருடங்களுக்கு ஒருமுறை இப்படிப் பூமிக்கு அருகில் வரும் எரிகற்கள் பூமியில் சேதம் விளைவிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. நேரே பூமியை நோக்கி நகராமல் சரிவுப்பாதையில் அந்த எரிகல் சென்றதால் இதன் தாக்கம் பூமியில் குறைவாகவே இருந்தது. 2046ம் ஆண்டு பெப்ரவரி மாதம் மீண்டும் பூமிக்கு அருகே வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனாலும் 2123ல் பூமிக்கு மிக அருகில் வரலாம் என எதிர்வு கூறப்படுகின்றது.
எரிகல்லைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் காரணமாகவோ, அல்லது திடீரென அதி பிரகாசத்துடன் வெளிச்சம் தெரிந்ததாலோ ரஸ்யாவைச் சேர்ந்த பலர் வீட்டிற்கு வெளியே வந்து வானத்தைப் பார்த்தனர். அப்படி வெளியே வந்து பார்த்தபோது பூமியை நோக்கி வந்த சிறிய எரிகல் பூமிக்கு மிக அருகே சிதறி வெடித்ததால் சுமார் 1000 பேர்வரை வீட்டுக் கூரைகளும், கண்ணாடி யன்னல்களும் சிதறியதால், அதன் சிறிய துண்டுகள் தாக்கியதில் காயமடைந்தனர். ரஸ்யாவின் யூரல் மலைத்தொடர் பகுதியில் பெரும் தீச்சுவாலையுடன் சிறிய எரிகல் ஒன்று விழுந்ததை பாதுகாப்புக் கமெராக்கள் படம் பிடித்திருந்தன. பெரும் இரைச்சல் சத்தத்துடன் பூமியை நோக்கி வந்த எரிகல்லின் சில துண்டுகள் பனி மூடிக்கிடந்த பகுதியில்; விழுந்ததால் அதிக சேதத்தை ஏற்படுத்தவில்லை. ஆனாலும் ரஸ்யாவின் சுமார் ஆறு நகரங்களில் இதனால் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. அந்த நேரத்தில் சுற்றுவட்டத்தில் உள்ள செல்பேசிகளும் செயலிழந்ததாகத் தெரியவருகின்றது. யப்பான் நாட்டில் உள்ள நாகசாகியில் இரண்டாம் உலக யுத்தத்தின்போது வீசப்பட்ட அணுக்குண்டைவிட இதன் வலிமை அதிகமாக இருந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.


பூமிக்கு அருகே இது போன்ற கோடிக்கணக்கான கற்கள் இருப்பதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். பூமியை நோக்கி இவை நகரும்போது செயற்கைக் கோள்களைத் தாக்கலாம் என்ற பயமும் இருக்கின்றது. ஆனால் சமீபத்தில் நகர்ந்த எரிகற்கள் செயற்கைக் கோள்கள் உள்ள பாதையில் நகராமல், வேறுபாதையில் நகர்ந்ததால் செயற்கைக் கோள்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. 1908ம் ஆண்டு சைபீரியாவில் இது போன்ற எரிகல் விழுந்தபோது பாரிய தாக்கம் ஏற்பட்டது. சுமார் 2200 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள காடுகள் இதனால் அழிந்து போயின.


1801ம் ஆண்டிலிருந்து இப்படியான விண்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டபோது அவற்றுக்கு அடையாளங்கள் இடத் தொடங்கினர். முதன் முதலாக 1801ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்ட விண்கல்லின் பெயர் சிறெஸ் என்பதாகும். அதைத் தொடர்ந்து பலாஸ், யூனோ ஆகிய விண்கற்கள் கண்டு பிடிக்கப்பட்டுப் பதிவு செய்யப்பட்டன. 1807ல் விஸ்ரா விண்கல் கண்டு பிடிக்கப்பட்டது. வேறு விண்கற்கள் அதன்பின் இவர்களின் கண்ணில் படாததால் இவர்கள் தேடுதலை நிறுத்திக் கொண்டனர். 1830ல் மீண்டும் தேடுதல் நடத்தியபோது மேலும் சில புதிய விண்கற்களை இவர்களால் காணமுடிந்தது. 1855ம் ஆண்டுவரை சுமார் 37 பெரிய விண்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டு குறி அடையாளங்கள் இடப்பட்டன. ஆனால் 1855ல் தொடர்ந்தும் பல விண் கற்கள் கண்டு பிடிக்கப்பட்டதால், குறியடையாளங்கள் இடுவது கடினம் என்பதால் இப்பொழுது அவற்றுக்குப் பெயரிடத் தொடங்கியுள்ளனர். 1891ம் ஆண்டிலிருந்து நீண்ட தூரப் புகைப்படக் கருவிகள் மூலம் இத்தகைய விண்கற்களைப் புகைப்படங்கள் எடுக்கக் கூடிய வசதிகள் ஏற்பட்டதால் அவற்றை இலகுவில் ஆவணப்படுத்த முடிந்தது. முதலில் வானத்தில் எந்தத் திசையில் விண்கல் இருக்கிறது என்பதையும், தொடர்ந்து அது அசைகிறதா என்பதையும், அதன்பின் அதன் தூரத்தையும் அவதானிக்கின்றார்கள். அதன்பின்தான் இவை சிறிய கோள்களைப் பதிவு செய்யும் நிலையத்தில் கணணி மூலம் பதிவு செய்யப்பட்டுப் பெயரிடப்படுகின்றன. 1998ம் ஆண்டுவரை இத்தகைய பழைய முறைகளே தொடர்ந்தும் பாவனையில் இருந்து வந்தது. 2010ம் ஆண்டு மே மாதப் பதிவின்படி அடையாளப் படுத்தப்பட்ட சுமார் 7075 விண்கற்கள் பூமிக்கு அருகாமையில் இருக்கின்றன. இவற்றில் ஒரு கிலோ மீட்டர் குறுக்களவு கொண்ட பெரிய விண்கற்கள் சுமார் 500-1000 வரை இருக்கலாம் என்று கணிப்பிடப் பட்டுள்ளது.


இந்தியாவின் உதவியோடு இந்தியாவின் ஸ்ரீகரிகோட்டாவில் இருந்து ஒரு பயணப்பெட்டியின் அளவுள்ள கனடாவின் செயற்கைக்கோள் ஒன்று 2013ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 25ம்திகதி திங்கட்கிழமை வான்வெளிக்கு வெற்றிகரமாக அனுப்பப்பட்டிருக்கின்றது. பூமியைச் சுற்றி இருக்கும் பெரிய விண்கற்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணியில் இந்தச் செயற்கைக் கோளில் பொருத்தப்பட்ட தொலைநோக்கி ஈடுபட்டிருக்கும். இந்தச் செயற்கைக்கோள் பூமியில் இருந்து சுமார் 50 மில்லியன் கிலோ மீற்றர் தூரம்வரை உள்ள பெரிய விண்கற்களைக் கண்டுபிடிக்கும் சக்தியைக் கொண்டதாகும். கனடாவின் விண்வெளித் திட்டக் குழுவினர் (NEOSSat) இதைத் தொடர்ந்தும்; கண்காணிப்பார்கள். இதைவிட, எட்டு அங்குல நீளமும், ஏழு கிலோகிராம் பாரமும் கொண்ட இரண்டு சிறிய தொலைநோக்கிகளும் விண்வெளியில் உள்ள நட்சத்திரங்களையும், அவ்வப்போது அவற்றின் ஒளியில் ஏற்படும் மாற்றங்களையும் அவதானிப்தற்காகக் கனடாவால் இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்டிருக்கின்றன.


ஆதிகாலம் தொடக்கம், அறிவியலில் முன்னேறாத காலத்திலும் தமிழர்களிடம் வானிலை பற்றிய குறிப்புக்கள் நிறையவே இருந்திருக்கின்றன. இப்பொழுதும் சோதிடம் பார்ப்பவர்கள் கோள்களின் அசைவை வைத்தே சோதிடம் சொல்கிறார்கள். தமிழர்களின் நாட்காட்டிகளும், பஞ்சாங்கமும் இதன் அடிப்படையில்தான் உருவாகின. சூரியனுக்கு ஞாயிறு என்றும், சந்திரனுக்கு திங்கள் என்றும், கோள்களுக்கு செவ்வாய், புதன் வியாளன், வெள்ளி, சனி என்று பெயர்கள் சூட்டி ஏழு நாட்களை ஒரு வாரம் என்று கணித்தனர். சூரியனுக்கு நன்றி சொல்லத் தைப்பொங்கலை ஒரு விழாவாகக் கொண்டாடினர். இந்துக் கோயில்களில் நவக்கிரகங்கள் என்று சொல்லி ஒன்பது கிரகங்களை வழிபட்டும் வந்தனர். அந்த நாட்களில் தமிழர்கள் புகழ்பெற்ற கடலோடிகளாக இருந்ததால், கடலோடிகள் வானத்து வெள்ளிகளைப் பார்த்தே திசை அறிந்தனர். அவற்றின் அசைவுகளைத் துல்லியமாகக் கணித்து வைத்திருந்தனர். வால்வெள்ளி தோன்றினால் அதனால் அழிவு ஏற்படலாம் என்று முன்னெச்சரிக்கை செய்து வைத்திருந்தனர். சங்க இலக்கியங்களில் இது பற்றிய குறிப்புக்கள் நிறையவே இருக்கின்றன. ஆனால் இவற்றை எல்லாம் தகுந்த முறையில் ஆவணப்படுத்தாமல் விட்டதால் பல அரிய கண்டுபிடிப்புகள் இன்று எம்மிடம் இருந்து மறைந்து விட்டதால், எமக்குச் சொந்தம் இல்லாமல் போய்விட்டன.

Sunday, May 12, 2013

Mother's Day - அன்னையர் தினம்

 அன்னையர் தினவாழ்த்துக்கள்.

Happy Mothers Day

எனக்குப் பிடித்த அம்மா பற்றிய
கவிதை வரிகள்

'மழையில் நனைந்த என்னை
மற்றவர்கள் திட்டிய போது
தலையைத் துவட்டிவிட்டு
மழையைத் திட்டியவள் அம்மா.'


For being the ever

giving and never

asking Mom.

kuru Aravinthan