Wednesday, May 15, 2013

எமது நிலம் எமக்காக வேண்டும்

எமது நிலம் எமக்காக வேண்டும்

குரு அரவிந்தன்

எமது நிலம் எமக்கு வேண்டும் என்ற கோஷத்தோடு பிரித்தானிய இளைஞர்களும் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டு தங்கள் வாய்களைக் கறுப்புத் துணிகளாhல் கட்டிக் கொண்டு வீதிவழியே பவனி வந்தபோது பலரின் கவனத்தையும் திருப்பியிருந்தனர். தமிழர் வாழும் இடங்களில் எல்லாம் இப்படியான தொடர் ஊர்வலங்கள் சமீபகாலமாக நடைபெறுகின்றன. தமிழரின் பாரம்பரிய நிலங்கள் பறிபோவதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. நாம் தமிழராய் ஒன்றிணைவோம், நமக்கான மண்ணை நாமே காப்பாற்றுவோம் என்ற தார்மீகக்கடமையோடு நடந்த அமைதியான ஊர்வலங்களாக இருந்தாலும் பலரையும் சிந்திக்க வைத்த நிகழ்வாகவும் இவை அமைந்திருந்தன. யாருடைய நிலத்தையும் அத்துமீறிப் பறிக்கவில்லை, எமது நிலத்தை எம்மிடம் திருப்பித்தாருங்கள் என்பதே அவர்களின் கோரிக்கைகளாக இருந்தன. ஏன் இப்படியான பவனி ஊர்வலங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன என்று சற்றுப் பின்நோக்கிப் பார்ப்போம். 

இலங்கைத்தீவின் வடக்குக் கிழக்கு மாகாணங்கள் தமிழ் மக்கள் வாழ்கின்ற பாரம்பரிய பிரதேசங்கள் என்பது யாவரும் அறிந்ததே. இதற்கான சரித்திரச்சான்றுகளும் நிறையவே இருக்கின்றன. இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்த ஆவணங்களும் சரி, அதன்பின் உள்ள ஆவணங்களும் சரி இதை ஆதாரபூர்வமாக நிரூபிக்கின்றன. வடக்குக் கிழக்கு மாகாணத்தில் உள்ள கிராமங்கள், ஆறுகள் மலைகள் எல்லாம் தமிழ் பெயரையே கொண்டிருந்தன என்பதும் கவனத்தில் எடுக்க வேண்டிய விடையமாகும். தேவாரப் பதிகங்களில் இடம்பெற்ற (7ம் நூற்றாண்டு) ஈஸ்வரங்கள் இலங்கையில் இருந்ததற்கான குறிப்புக்கள் காணப்படுகின்றன. சம்பந்தர், மாணிக்கவாசகர், அருணகிரிநாதர் போன்றவர்களின் பாடல்களில் இவை தெளிவாக்க குறிப்பிடப்பட்டிருக்கின்றன. புராதன இலக்கியங்களில் குறிப்பிடப்பட்ட தென்குமரி என்ற மலை இலங்கையில்தான் இருக்கின்றது. ஏனென்றால்; இலக்கியத்தில் குறிப்பிட்டது போல அப்படி ஒரு மலையும் தமிழ் நாட்டில இருப்பதாகத் தெரியவில்லை.. பூகோள ரீதியாக ஏற்பட்ட அனர்த்தத்தில் இந்தியக் கண்டத்தில் இருந்து இலங்காபுரி என்ற இடம் தனியாகப் பிரிந்து காலப்போக்கில் ஒரு தீவாக மாறிவிட்டது. எனவே புராதன காலத்தில் குறிப்பிட்ட தமிழரின்; பாரம்பரிய பிரதேசமான தென்குமரி பிரிந்து சென்ற இலங்கைத் தீவில்தான் இப்போதும் இருக்கின்றது.

1948ம் ஆண்டு பிரித்தானியர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்றதைத் தொடர்ந்து, இந்த இலங்கைத்தீவு ஒரு ஜனநாயக நாடாகப் பிரகடனப்படுத்தப் பட்டிருக்கிறது. ஜனநாயக நாடு என்பது ஜனநாயக முறைப்படி தெரிவு செய்யப்படும் மக்களால் ஆளப்படும் நாடாகும். ஒரு நாடு ஜனநாயக நாடாக இருந்தாலும் சிறுபான்மை இனத்தவர்களுக்கு சட்டத்தின் மூலம் பாதுகாப்புக் கிடைக்காவிட்டால், அவர்கள் இரண்டாம் தரநிலைக்குத் தள்ளப்பட்டுவிடுவார்கள். சிறுபான்மையினர் என்றால் இனரீதியாகவோ அல்லது மதரீதியாகவோ அல்லது வேறு சில கரணிகளுக்காகவோ பெரும்பான்மையினரால் ஒதுக்கப்படுவதற்குச் சந்தர்ப்பங்கள் அதிகமாகவே இருக்கின்றன. எனவே அது ஒரு ஜனநாயக நாடுதானே அங்கே எல்லோரும் சரிசமனாகத்தானே பாவிக்கப்படு கின்றார்கள் என்று நினைப்பது மிகவும் தவறானதாகும். அனேகமான நாடுகளில் சிறுபான்மையினரைப் பொறுத்த வரையில் இந்த ஜனநாயகமுறை என்பது அவர்களுக்குப் பாதுகாப்பாக அமையவில்லை. தொடக்கத்தில் அது சிறப்பாக அமைந்திருந்தாலும் காலப்போக்கில் நடைமுறைச் சாத்தியம் அற்றதாக மாறிவிடுகின்றன. காரணம் பெரும்பான்மை இனத்தவர்கள் மூன்றில் இரண்டு அதிகப்படியான வாக்குகளைக் கொண்டு தங்கள் நலன் கருதி சிறுபான்மையினருக்கு எதிரான சட்டங்களையே நடைமுறைப்படுத்துகின்றார்கள். இலங்கைத் தீவைப் பொறுத்தவரையில் இந்த நிலைதான் அங்கு நீடித்திருக்கின்றது.
பிரித்தானியர் ஆட்சி முடிவிற்கு வந்தபோது அவர்கள் செய்த மாபெரும் தவறு என்னவென்றால் இலங்கைக்குச் சுதந்திரம் கொடுத்தபோது சிறுபான்மையினரின் நலன்களைக் கவனத்தில் எடுக்காமல் விட்டு விட்டார்கள். இலங்கை ஜனநாயக சுதந்திரதீவு என்பதால் யாரும் எங்கேயும் குடியேறலாம் என்ற கொள்கையை மிகவும் அதிகமாகவே பெரும்பான்மையினர் கடைப்பிடிக்ககின்றார்கள். தொடக்கத்தில் தமிழர்கள் வாழ்ந்த சில கரையோரப் பகுதிகளைப் பெரும்பான்மையினர் ‘கரைவலை’ என்ற பெயரில் ஆக்கிரமித்தனர். மீன்பிடித் தொழில் காரணமாக இந்த இடங்களில் அவர்கள் வந்து தங்கியிருந்து மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டனர். மெல்ல மெல்ல அந்த நிலங்களைச் சொந்தமாக்கிக் கொண்டனர். இதைவிட குடியேற்றத்திட்டங்கள் என்ற வகையிலும் அரசின் உதவியோடு இப் பெரும்பான்மையினரின் குடியேற்றங்கள் திட்டமிட்ட முறையில் நடைபெறுகின்றன.


இப்படியான தமிழரின் பாரம்பரிய நிலத்தில் நடைபெற்ற குடியேற்றத்திட்டங்களில் கல்லோயா கந்தளாய் திட்டங்களை முக்கியமாகக் குறிப்பிடலாம். சரித்திரங்கள் அடிக்கடி மறைக்கப்படுவதால் இதை ஆவணப்படுத்த வேண்டிய அவசியம் எமக்கு ஏற்பட்டிருக்கின்றது. குறிப்பாக அடுத்த தலைமுறையினர் இதை அறிந்து வைத்திருக்க வேண்டும். சுமார் 50 வருடங்களுக்குள் இவை எல்லாம் திட்டமிட்ட முறையில் மூடிமறைக்கப்பட்டுவிட்டன. பெரும்பான்மை இனத்தைக் கொண்ட இலங்கை சுதந்திகை; கட்சியினர் 1956ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றி சிங்கள் மொழியை அரசமொழியாக்க உறுதி பூண்டனர். அப்போது அறவழிப்போராட்டத்தின் மூலம் தமிழ் மக்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். கிழக்கு மாகாணத்தில் ஓடிய கல்லோயா ஆறு அணைகட்டப்பட்டு விவசாயத்திற்காக திறந்து விடப்பட்டது. தமிழர்களின் பூர்வீக நிலத்தில் 50 விகிதத்திற்கும் மேற்பட்ட பெரும்பான்மை இனத்தவர்கள் குடியேற்றப்பட்டனர். அதைத் தொடந்ந்து பூர்வீக தமிழ் மக்களுக்கும் குடியேற்றப்பட்ட பெரும்பான்மை மக்களுக்கும் இடையே அவ்வப்போது கரவரங்கள் ஏற்ப்பட்டன. 1956ம் ஆண்டு ஜன் 11ம் திகதி இப்பகுதியில் கலவரம் ஆரம்பமாகி பல தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

மீளக் குடியமர்தல் என்ற போர்வையில் மீண்டும் பெரும்பான்மை இனத்தவரின் குடியேற்றங்கள் விரைவாக நடைபெறுகின்றன. 1983ம் ஆண்டுக்குப்பின் மகாவலி திட்டத்தின் கீழ் பல இடங்களில் பெரும்பான்மை இனத்தவர்கள் குடியேற்றப்பட்டனர். அரியகுண்டான், நெடுங்கேணி, கொக்கைச்சாண்குளம் போன்றவை இதற்குச் சிறந்த உதாரணமாகும். இதைவிட நெல்லுக்குளம், கொக்குளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி போன்ற இடங்களிலும் மீன்பிடித் தொழிலைக் காரணம் காட்டிக் குடியேற்றங்கள் நடைபெறுகின்றன.
நீர்கொழும்பு, சிலாபம், புத்தளப் பகுதிகளில் தமிழர் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் விரைவாகவே அழிக்கப்பட்டுக் கொண்டு வருகின்றன. சில வருடங்களுக்குமுன் நீர்கொழும்பு தமிழ் கலவன் பாடசாலை என்ற பெயர்ப்பலகை கறுப்பு வர்ணம் பூசப்பட்டு சிங்கள மகாவித்தியாலயம் என்ற பெயர் மாற்றப்பட்டிருந்ததை நேரடியாகவே என்னால் அவதானிக்க முடிந்தது. அப்போது நீர்கொழும்பில் தபாலதிபராக இருந்த சின்னத்துரை என்பவர் என்னை அழைத்துச் சென்று இந்த மாற்றத்தைக் கட்டாயம் ஆவணப்படுத்த வேண்டும் என்று சுட்டிக்காட்டியிருந்தார். இது போன்று இப்போது எந்த ஒரு தடையுமின்றி மாற்றங்கள் விரைவாகவே தமிழர் வாழ்ந்த பிரதேசங்களில் நடைபெறுகின்றன.


 இதைவிட வடக்குக் கிழக்குப் பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலையம் என்ற பெயரில் தமிழர்களின் பாரம்பரிய நிலங்கள், குறிப்பாக மீன் வளம் நிறைந்த கரையோரப்பகுதிகள் அபகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு பிரதேசத்திலும் திட்டமிட்ட முறைப்படி தமிழரின் விகிதாசாரத்தைக் குறைப்பதில் அரசு அதிக கவனம் செலுத்துகின்றது.  இதன் மூலம் தமிழரின் பாரம்பரிய பிரதேசங்களில் இருந்து தெரிவாகும் பிரதிநிதிகள் இனிமேல் பெரும்பான்மை இனத்தவராக இருக்க வேண்டும் என்ற கணிப்பே நடைமுறைப்படுத்தப் படுகின்றது. கிழக்கு மாகாணத்தில் சொற்ப காலத்திற்குள் ஏற்பட்ட இந்த மாற்றத்தை அவதானித்தால் நன்கு புரிந்து கொள்ளலாம். பெரும்பான்மையினரின் குடியேற்றங்களால் எத்தனையோ தமிழ்ப் பிரதிதித்துவத்தை இழந்தோம், இழந்து கொண்டிருக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.


மயிலே மயிலே இறகுபோடு என்றால் இலங்கை சுதந்திரம் அடைந்தபோதே அந்த மயில் இறகைப் போட்டிருக்கும். தூங்குபவனைத் தான் தூக்கத்தால் எழுப்பலாம் ஆனால் தூங்குவது போல நடிப்பவனை ஒருபோதும் தூக்கத்தால் எழுப்ப முடியாது என்பதால் இனி எடுக்கப்போகும் அமைதியான நகர்வுகளை முள்ளை முள்ளால் எடுப்பதுபோல கவனமாக எடுத்துக் கொள்ளவேண்டும். எனவே நாம் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதை நினைவிற் கொண்டு செயற்படுவோம்.

No comments:

Post a Comment