Wednesday, May 15, 2013

புதிய நட்சத்திரக்கூட்டம் - HFLS - 3

புதிய நட்சத்திரக்கூட்டம் -  HFLS - 3

குரு அரவிந்தன்


வானமே எல்லை என்று ஒரு காலத்தில் எம் முன்னோர்கள் நினைத்திருந்தார்கள். ஆனால் இன்று எல்லையில்லா வானம் என்று அதையே நாம் மாற்றிக் கொண்டோம். நவீன தொழில நுட்ப வசதிகளுடன் பல புதிய விடையங்களை அறிய முடிந்ததே இதற்குக் காரணமாகும். இதன் காரணமாக நண்டு கொழுத்தால் வளையில் இருக்காது என்பதுபோல, வானியல் பற்றிய எங்கள் தாகம் அதிகரிக்கவே வானத்தை நோக்கிய எமது நகர்வுகள் துரிதப்படுத்தப்பட்டன. அதனால் வானத்தில் இருந்தே பல விடையங்களை அவதானிக்கவும், கணிக்கவும் முடிந்தது. ஆனால் வசதிகள் அற்ற அந்த நாட்களில், கிரகங்களை வைத்தே எங்கள் முன்னோர்கள் ஜோதிடம் கணித்தார்கள். கிரகங்களை மதித்து, அவற்றை கோயில்களில் வைத்தே வணங்கினார்கள், நாட்களுக்கும் அவற்றின் பெயர்களைத் தமிழில் சூட்டினார்கள். எனவே முற்காலத்திலும் வானியலுடன் எம்மவர்களின் தொடர்பு அதிகமாகவே இருந்திருக்கிறது என்பது இதிலிருந்து தெரியவருகின்றது. ஆனால் தாம் அறிந்த எல்லாவற்றையும் ஆவணப்படுத்த அவர்கள் நினைக்வில்லை. அதற்குரிய வசதிகளும் அப்போது அவர்களிடம் இருக்கவில்லை. பழைய குகைகளில் உள்ள கற்சிற்பங்களில், ஓவியங்களில் வானத்தோடு தொடர்புடைய சிற்பங்களையும், ஓவியங்களையும் இன்றும் காணமுடிகின்றது.

அன்று எம்மவர்கள் கிரகங்களுக்கு செவ்வாய், புதன், வியாழன், வெள்;ளி, சனி என்று பெயர் சூட்டியதுபோல, கலெக்ஸி என்று சொல்லப்படுகின்ற நச்சத்திரக்கூட்டங்கள் பலவற்றை புதிதாகக் கண்டுபிடித்ததால் அவற்றுக்குப் பெயரிடத் தொடங்கியுள்ளனர்கள். அப்படிச் சமீபத்தில் கண்டு பிடிக்கப்பட்ட ஒரு புதிய நட்சத்திரக் கூட்டங்களுக்கு எச் எவ் எல் எஸ் - 3 (HFLS3) என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். கலெக்ஸி என்பது சூ+ரியனைப் போல, சில இடங்களில் அதை விடச் சிறிதாகவும் அல்லது பெரிதாகவும் எண்ணிலடங்கா நட்சத்திரங்களையும் அவற்றைச் சுற்றியுளள்ள கோள்களையும் கொண்ட நட்சத்திரத் தொகுதிகள் ஆகும். வாயுக்களாலும், தூசுகளாலும் சூழப்பட்ட இந்த நட்சத்திரக் கூட்டம் பல கோடிக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருக்கின்றன. இதைப் பால் வெளி அண்டம் என்றும் சொல்வார்கள். இது பூமியில் இருந்து சுமர் 12.8 பில்லியன் ஒளியாண்டுகள் தூரத்தில் நமது பால்வெளி அண்டத்தை விட 2000 மடங்கு செழிப்பான ஒரு நட்சத்திரத் தொகுதியாக இருக்கலாமென வானியலாளர்கள் கருதுகின்றனர். இந்தக் கலெக்ஸி என்ற சொல் கிறீக் மொழியில் இருந்து பெறப்பட்டது.


எச் எவ் எல் எஸ் - 3 என்ற இந்த கலெக்ஸி செழிப்புள்ளதாகக் காணப்படுவதால் இதில் அமைந்துள்ள கிரகங்களில் உயிர்கள் ஏதாவது வாழலாம் என்பதற்கான சாத்தியம் மிக அதிகம் இருப்பதாகவும் கருதப்படுகின்றது. ஆனால் இந்தச் சந்தர்ப்பத்தில், மேற்கொண்டு தகவல்களைப் பெற்றுக் கொள்ளாமல்  அதை நிரூபிப்பது கடினம் எனவும் வானியலாளர்கள் கூறுகின்றனர். இந்தக் கலெக்ஸியில் அமைந்துள்ள நட்சத்திரங்களில் சூரியனை விடவும் சுமார் 40 பில்லியன் மடங்கு அதிக திணிவு உள்ளதாக அறியப்படுகிறது. இதைவிட இந்த கலெக்ஸியில் அதிகளவு கார்பன் மொனொக்ஸைட்டு காணப்படுவதாகவும் வாயுக்கள் மற்றும் தூசுககளுடன் சேர்த்து சூரியனை விட 100 பில்லியன் மடங்கு திணிவு அவற்றில் அமைந்திருக்கலாம் எனவும் நம்பப்படுகின்றது. இதைவிட இவற்றைச் சுற்றி வானியலாளர்களை மர்மத்தில் ஆழ்த்தி வரும் கரும் பொருள் (Dark matter) மிகச் செறிந்திருப்பதாகவும் கூறப்படுகின்றது. தற்போது 2011ம் ஆண்டிலிருந்து இயங்கும், வடசிலியில் அற்ரகாமா பாலைவனத்தில் அமைந்துள்ள ALMA எனப்படும் அதிவலுவுள்ள தொலைக்காட்டிகளைப் பயன்படுத்தி இந்தப் பால்வெளி அண்டம் குறித்த மேலதிகத் தகவல்களைப் பெறுவதற்கு வானியலாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இங்கே அறுபத்தியாறு மிகவலுவுள்ள அன்டனாக்களைக் கொண்ட கருவிகள் வானத்தை நோக்கிப் பொருத்தப்பட்டுள்ளன. தேவைகருதி இவற்றைச் சுமார் 16 கி.மீற்றர் சுற்றுவட்டத்திற்கு நகர்த்திச் செல்ல முடியும்.


சிறிதும் பெரிதுமாக சுமார் 170 பில்லியன் கலெக்ஸி என்று சொல்லப்படுகின்ற நட்சத்திரக் கூட்டங்களைக் கொண்ட பால்வெளி அண்டங்கள் வானத்தில் தெரியக்கூடியதாக இருப்பதாக வானியலாளர் தெரிவிக்கின்றனர். இவற்றின் வடிவத்தைக் கொண்டு மூன்று வகையாக பால்வெளி நட்சத்திரக் கூட்டங்களைப் பாகுபடுத்துகின்றார்கள். நீண்ட வட்டவடிவமான அமைப்பைக் கொண்ட நட்சத்திரக்கூட்டம், சுருள் வடிவ அமைப்பைக் கொண்ட நட்சத்திரக்கூட்டம், மற்றையது ஒழுங்கற்ற அமைப்பைக் கொண்ட நட்சத்திரக் கூட்டங்களாகும். இதைவிட ஒழுங்கற்ற பால்வெளி அண்டத்தில் மோதிரவடிவான, குள்ள வடிவான, ஒன்றிணைந்த, தெறித்துச்சிதறிய அமைப்புகளைக் கொண்ட நட்சத்திரக் கூட்டங்களுமுண்டு. சுமார் 13.8 பில்லியன் வருடங்களுக்கு முன் நடந்த பிக்பாங் (BIG BANG) என்று சொல்லப்படுகின்ற பெரியமோதல் காரணமாக உடைந்து சிதறிப்போன நட்சத்திரக் கூட்டங்களே இந்தப் பால்வெளி அண்டத்தில் பூமியிலிருந்து அதிதூரத்தில் இருப்பதாக அறியமுடிகிறது.


2012 டிசெம்பர் மாதம் 12ம் திகதி வானிலை ஆராய்சிசியில் ஈடுபட்டிருக்கும் ஹபிள் வான தொலைநோக்கி மூலம் தரைக்குக் கிடைத்த தரவின்படி இதுவரை அதிதூரத்தில் இருப்பதகக் கருதப்பட்ட UDFJ – 39546284 என்ற நட்சத்திரக்கூட்டம், முன்பு கணித்ததைவிட இன்னும் அதிதூரத்தில் இருப்பதாத் தெரிய வருகின்றது.  இவை 380 மில்லியன் வருடங்களுக்கு முன் தோன்றியிருக்கலாம் எனவும், சுமார் 13.42 பில்லியன் வெளிச்சவருடங்களுக்கு அப்பால் இருப்பதாகவும் அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.


அண்டவெளி பற்றிய பதிவுகள் கிரேக்க நாட்டில் கிறீஸ்துவுக்கு முன் 450 – 370 ல் இருந்திருக்கின்றன. கிரேக்க தத்துவஞானி டெமோகிறிஸ்டஸ் (DEMOCRITUS) அரிஸ்டோடில் (ARISTOTLE –BC 384-322) போன்றோர் அண்டவெளி பற்றிக் குறிப்பிட்டிருக்கின்றனர். இத்தாலிய வானிலை ஆராய்ச்சியாளரான கலிலியோ கலிலீ எப்பவர்தான் 1610ம் ஆண்டு தனது தொலை நோக்கி மூலம் அவதானித்து இந்தப் பால்வெளி அண்டம் என்பது பல்லாயிரக் கணக்கான நட்சத்திரக்கூட்டங்களைக் கொண்டது என்பதைக் கண்டறிந்தார். 1750ம் ஆண்டு ஆங்கிலேய வானிலை ஆராய்ச்சியாளரான தோமஸ்றைட் என்பவர் பால்வெளி என்பது பல்லாயிரக்கணக்கான அசையும் நட்சத்திரக் கூட்டங்களைக் கொண்டது என்பதை உறுதிப்படுத்தினார்.


என்னதான் அண்டவெளி பற்றிய ஆராய்ச்சிகள் விரைவாக நடைபெற்றாலும் இதுவரைக்கும் வேறு எந்தக் கிரகத்திலும் உயிரினங்கள் இருப்பதற்கான அறிகுறிகள் கண்டறியப்படவில்லை. காலப்போக்கில் இவை கண்டறியப்படலாம். இப்போதிருக்கும் விண்கலங்களின் வேகத்தைக் கொண்டு சூரிய பால் வெளி அண்டத்தைக் கடந்து செல்வதென்பது முடியாத காரியமாகும். ஆனாலும் போக்குவரத்து வசதிகளே அற்ற காலத்தில் இருந்து இன்றைய கால கட்டத்திற்கு நாங்கள் விரைவாக முன்னேறியிருக்கின்றோம். நம்பிக்கையில்தான் நாங்கள் வாழ்கிறோம் என்பதால், நடைமுறைச் சாத்தியப் படுமானால் தற்போதுள்ள விமானப்பயணங்கள்போல, எதிர்வரும் காலங்களில் விண்வெளிப் பயணங்களும் உயிரினங்கள் இருக்குமானால், ஒவ்வெரு கிரகத்திற்கும், அதைத் தொடர்ந்து பால்வெளி அண்டங்களுக்கும் நடைபெறலாம் என நம்பிக்கை கொள்வோம்.

No comments:

Post a Comment